இன்று பொழுது துக்கத்தோடு புலர்ந்தது. என் குரு மெய்யன் முகுந்தன் சார் சிவகங்கையிலிருந்து தகவல் அனுப்பியிருந்தார். எங்கள் அன்புக்குரிய தோழர் காசி நேற்று காலமானார் என்று செய்தி.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சிவகங்கையில் கட்டமைப்பது சுலபமான பணி அல்ல. அந்த ஊர் காங்கிரஸ் கோட்டை. ஆர்.வி.சுவாமிநாதன் மூன்று முறையோ அதற்கு மேலுமோ எம்.எல்.ஏ ஆகி காங்கிரஸை அசைக்க முடியாத இடத்தில் வைத்திருந்தார். 1962-ல் தி.மு.க் தொகுதி அடிப்படையிலான உடன்பாடு செய்து கொண்டு ராஜாஜியின் சுதந்திரா கட்சி வேட்பாளரான காளைலிங்கத்தை ஆதரித்தது. ஆனாலும் ஆர்.வி.எஸ் வென்றார். 1967 திமுக ஆதரவு அலையில் தான் சிவகங்கை திமுக தொகுதியாகியது. திமுகவின் தொண்டர் பலம் ஒங்கிய தருணம் அது. ஆக, இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி சிவகங்கையைத் தங்கள் உடமையாக்கிக் கொண்டபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை அங்கே வளர்ப்பது கடினமான பணியாகியது.
இரண்டு தளங்களில் இப்பணி நிறைவேற்றப்பட்டது.
அறிவுஜீவிகள் மத்தியில் கட்சி வளர சிவகங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட இரண்டு இலக்கிய ஜாம்பவான்கள் பங்காற்றினர். ஒருவர் இன்றும் தளராது பிற மொழி இலக்கிய மொழிபெயர்ப்பில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் எங்கள் பேராசிரியர் தோழர் நா.தர்மராஜன். மற்றவர் பேராசிரியர் மீ.ராசேந்திரன் என்ற கவிஞர் மீரா.
என் போன்ற அப்போதைய மாணவர்களுக்கு கம்யூனிசத்திலும் நல்ல இலக்கியத்திலும் ஈர்ப்பு உண்டாக வழி செய்து கொடுத்ததற்காக இந்த இருவருக்கும் நான் என்றுமே நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
இந்தப் பேராசிரியர்கள் ஆற்றிய பணிக்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை தோழர் காசி சாமானியர்கள் இடையே கட்சி வளர்க்கச் செய்த தொண்டு. அவர் காந்தி வீதியில் நடத்தி வந்த சிறுகடையில் வெற்றிலை பாக்கு போக பத்திரிகைகள், பத்திரிகைகள், பத்திரிகைகள். இடது சாரி சிந்தனையை வெளிப்படுத்தும் பத்திரிகைகள் மட்டுமில்லாமல் சகல தரப்பு இதழ்களும் கிடைத்த இடம் காசி கடை. நான் மெய்ன்ஸ்ட்ரீமையும், தாமரையையும், ஜனசக்தி, தீக்கதிரையும், விடுதலை, ஜெயபேரிகையையும், ஏன் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆர்கனைசரையும் அறிமுகப்படுத்திக் கொண்ட இடம் இதுதான்.
தோழர் கடையில் உட்கார்ந்து ஏதாவது பத்திரிகையைப் பிரித்துப் படித்துவிட்டு அப்படியே சணல் கயிற்றுக்கொடியில் திரும்பவும் தொங்க விட்டு விட்டு வந்ததும் உண்டு. வேலையில் சேர்ந்ததும் அதே பத்திரிகைகளை சந்தா கட்டி வாங்கியதும் உண்டு. காசி எப்போதும் புன்முறுவலோடு தான் என்னை, என் போன்ற அக்கால இளைஞர்களை எதிர்கொள்வார்.
பத்திரிகை வாங்க, படிக்க வந்தவர்கள் யாராவது விருப்பப்பட்டுப் பேச்சுக் கொடுத்தால் தோழர் அன்போடு பதில் சொல்லும்போது அவருடைய மார்க்சிச அறிவும் அனுபவமும் வெளிப்படும். அதில் அடுத்தவர் முகத்தில் வலுக்கட்டாயமாகச் சிவப்புச் சாயம் பூசும் தீவிரம் இருக்காது. இது எங்கள் வழி, இப்படியும் சிந்திக்கலாம் என்ற வழிகாட்டலே தெரியும்.
பிற்காலத்தில் – அதாவது எமெர்ஜென்சியைத் தொடர்ந்து – நானும் என் போன்ற பலரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற அமைப்புகளை விட்டு விலகி மார்க்சிஸ்ட் கட்சி, முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்ந்து செயல்பட நேர்ந்தாலும், சி.பி.ஐ காரரான தோழர் காசியின் நட்பு மட்டும் நிலையாகவே இருந்தது.
கட்சி அரசியல் கடந்து நான் நடந்து எத்தனையோ வருடமாகி விட்டது. ஆனாலும் பொதுவுடமை இயக்கமும், தோழர் காசியும் என்னுள் விதைத்த மனிதாபிமானம், இலக்கியத் தேடல் என்ற பண்புகளுக்காக ஓர் எழுத்தாளனாகவும், இந்தியக் குடிமகனாகவும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
லால் சலாம், தோழர் காசி!