ரெட்டைத் தெரு தான் உலகம். ராஜா ஹைஸ்கூல் தான் பிரபஞ்சம். அறிஞர் அண்ணா ஒரே வருடத்தில் காலமாகி, தலை நிறைய சுருள் முடியும் கருப்பு மீசையுமாகக் கலைஞர்தான் தமிழ்நாடு முதல்வர். இறந்து போகும் பிரதமர்களுக்கு இடைப்பட்டு, குல்சாரிலால் நந்தா தான் பத்து பதினைந்து நாள் வரும் டெம்பரவரி தேசியத் தலைவர். டூரிங் தியேட்டரில் ‘இந்தா இந்தா எடுத்துக்கோ’ என்று விஜயலலிதாவோ, ஜோதிலட்சுமியோ பாடியபடி உடம்பைக் குலுக்க, திரையில் ஒரு கண்ணும், தரையில் மற்றதுமாக விட்டலாச்சாரியா படம் பார்க்கிறதுதான் தலை சிறந்த பொழுதுபோக்கு. இப்படி ஆரம்பித்தன என் எழுபதுகள்.
அதாவது 1970 காலகட்டம். பதினேழு வயதுப் பையன். மீசை அரும்புகிறதை விட மூஞ்சியில் பரு அரும்புவது தான் அதிகம். முகத்தில் வடிகிற எண்ணெயைத் தவிர்க்க லைப்பாய் சோப்பு போட்டு முகம் கழுவிக் கழுவி, நிரந்தரமாக நாசியில் இன்னும் இருக்கிறது கார்பாலிக் வாடை. என் போட்டோவில் கூட லேசாக வரும்.
பாதி நாள் ஸ்டிரைக்கும் பாதி நாள் படிப்புமாக பள்ளிக்கூடம் முடிந்து போனபோது நிறைய நண்பர்களை தவறவிட வேண்டி வந்தது. முகம்மது ஜகாங்கீர், நேரு பஜாரில் அவங்க அத்தாவின் மளிகைக் கடையைப் பார்த்துக் கொள்ள ஒதுங்கி விட்டான். அவன் பேச்சில் அடிக்கடி ‘நயம்’ என்ற வார்த்தை தென்பட ஆரம்பித்திருந்தது. ‘நயம் மிளகாய் வத்தல்’, ‘நயம் தனியா’, ‘நயம் சீயக்காய் தூள்’, ‘நயம் சினிமா’. கடைசி நயம் சிவாஜி கணேசன் படத்துக்கு மட்டும்தான். அதுவும் கடை எடுத்து வைத்துவிட்டு ரெண்டாம் ஷோவாக எதிரொலி, எங்கிருந்தோ வந்தாள், எங்க மாமா இப்படி எ படங்கள்.
அவன் கடையை நிர்வகிக்கிற சந்தோஷத்தில் அவங்க அத்தா இன்னும் ஒரு சுற்று வெயிட் போட்டார். காங்கிரஸ் மேடையில் வேட்டியை இறுக்கியபடி ‘உன்னைப் போல் ஒருவர் உண்டோ உழைப்பாலே உயர்ந்தவரே’ என்று டேப் ராஜமாணிக்கம் குரலில் ஆனால் சுத்தமான அபசுரமாக காமராஜ் புகழ் பாடி, தமிழகத்தில் காங்கிரஸ் இன்னும் எழுந்து வராதபடி குழி பறிப்பதில் தன் பங்கையும் வெற்றிகரமாக நிறைவேற்றினார்.
குண்டு ராஜு காரைக்குடிக்கு பஸ் டிரைவர் டிரெயினிங்குக்குப் போய்விட்டான். அசப்பில் மா சேதுங் ஜாடையில் இருக்கும் குண்டுராஜு அப்பா தன் முன்சீப் கோர்ட் அமீனா உத்தியோகத்தை அவனும் பார்த்து சீரழிய வேண்டாம் என்று அனுப்பி வைத்தாராம். அது என்ன அமீனா உத்தியோகம் என்று விசாரித்தால் ஜப்தி என்றார்கள். தமிழ்ப் படத்தில் ஜப்தி சீன் வந்தால் பின்னணியில் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் அசரீரி பாட்டு ஒலிக்கும். குண்டுராஜு அப்பா ஜப்திக்குப் போனபோது கோவிந்தராஜன் கூடப் போயிருக்க வாய்ப்பில்லை.
குண்டுராஜுவுக்கு என் வீட்டில் இருபத்துநாலு மணி நேரமும் அனுமதி இருந்தாலும் பாட்டியம்மா அவனுடைய அமீனா அப்பாவை வாசலிலேயே நிறுத்திவைத்துப் பேசி அனுப்பிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அமீனா மற்றும் ஆமைகளைப் பற்றி அவள் கடைசி மூச்சுவரை பயந்துதான் இருந்தாள்.
குண்டுராஜு தெருவில் அத்தனை பேரிடமும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு முப்பத்தைந்து கிலோமீட்டர் தூரம் கடந்து முக்கால் மணி நேர நெடும் பயணத்துக்கு அப்புறம் காரைக்குடி நகரவாசி ஆனான். ராத்திரி சாப்பிட ரெட்டைத் தெருவில் வீட்டுக்கு தினசரி வந்தாலும் அவன் வேற்றூரான் தான் என்று ஒதுக்கி வைத்து விட்டோம். விட்டலாசார்யா படம் பார்க்க வராதவன் ஆச்சே.
ஆக, எஸ்.எஸ்.எல்.சி லீவ் ஊர்ந்து கொண்டிருந்தது. அதில் கால்வாசி நேரம் கிரி நூலகத்தில். மறுகால்வாசி நேரம் அரட்டை. மூணாம் கால் ஊஞ்சலில் தூக்கம், ராயர்கடை பஜ்ஜி. சொச்சத்தை விட்டலாச்சார்யா கவனித்துக் கொண்டார்.
‘பி.யூ.சி படிக்க காலேஜ்லே அப்ளிகேஷன் கொடுக்கறாங்க. போய் வாங்கிட்டு வா’.
ஒரு பகல் பொழுதில் யவன ராணி பாகம் ஒண்ணு படித்துக் கொண்டிருந்தபோது கிரி சொன்னான். தப்பு. அது கடல் புறா பாகம் ஒண்ணு. சாண்டில்யனின் எல்லாக் கதையிலும் வரும் இன்ப ஊகங்களுக்கு இடம் அளிக்கும் ஒரு அசத்தலான வர்ணனையில் முழுகியிருந்தேன். தேட வேண்டிய அவசியமே இல்லாமல் ரெண்டு அத்தியாயத்துக்கு ஒரு முறை இன்ப ஊகங்கள் வந்து விழுந்து கொண்டிருந்தன.
கல்கியில் புத்தம்புதிய காப்பியாக ஓட்டுகிற பொன்னியின் செல்வன் படிக்கிற சந்தோஷம் ஒரு மாதிரி என்றால் கடல்புறா வேறே தினுசு. வினு வரைந்த குந்தவை போல ஒரு பெண் சிநேகிதியாகக் கிடைத்தால் வணக்கம் சொல்லலாம். நாலு அடி தள்ளி நின்று சாப்பிட்டாச்சா, கோவிலுக்குப் போயாச்சா, பழையாறைக்கு எப்போ பஸ் என்று கௌரவமாகப் பேசலாம். ஆனால், குமுதத்தில் லதா வரைந்த கடல்புறா கதாநாயகி போல சிநேகிதி கிடைத்தால்? இளைய பல்லவனே ஆகலாம். அதென்ன இன்ப ஊகம் என்று ஊர்ஜிதமாகத் தெரிந்து கொள்ளலாம். தப்பு இல்லையா? சாண்டில்யன் தப்பாக எல்லாம் எழுதமாட்டார். ரகுவம்சத்தில் பிறந்த சுதீஷ்ணையின் மாருக்கு நடுவில் ஈர்க்குச்சி நுழையாத அதிசயத்தை காளிதாசன் வடமொழியில் வர்ணிப்பதை அவர் தமிழில் எடுத்து எழுதினார். அவ்வளவே. சுதீஷ்ணையிடம் ஈர்க்குச்சியோடு போய் நின்ற பிரகஸ்பதி யாரோ, அது தெரியாது.
‘உன்னைத் தாண்டா. அப்ளிகேஷன் தீர்ந்துடப் போறது. வாங்கிட்டு வந்துட்டு அப்புறம் கடல்புறா படி. ஏற்கனவே பத்து பைசா தரணும்’.
கிரி புத்தகத்தைப் பிடுங்கிக் கொண்டு போய்விட்டான். அவன் குமுதத்தில் கிழித்தெடுத்து பைண்ட் செய்து, கிரி நூலகம் என்று மேலே வெள்ளை பேப்பர் எழுதி அடுக்கி மர அலமாரியில் சேர்த்து வைத்த புத்தகத்தில் இதுவும் ஒண்ணு.
கிரி லைப்ரரி கட்டண நூலகம். அவன் வீட்டு தாழ்வாரத்தில் இயங்குவது. தரையில் உட்கார்ந்துதான் படிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு பத்து பைசா கட்டணம். தாழ்வாரச் சுவரில் தலை படாமல் ஜாக்கிரதையாக இருந்து படிக்க வேண்டும். தலையில் தடவின கொழும்புத் தேங்காய் எண்ணெய் வெள்ளையடித்த சுவரில் பட்டால் கறையாக்கி, கிரி நூலகத்தில் நுழைய அனுமதி கிடைப்பது கஷ்டம். பத்து பைசா செலவில் கிட்டும் இன்ப ஊகத்துக்கு அப்புறம் வேறே எங்கே போக?
காலேஜில் போய் அப்ளிகேஷனை வாங்கி வந்துவிட வேண்டியதுதான். அதுக்காக இருபத்தைந்து ரூபாய், வாடகை சைக்கிளுக்கு ஒரு ரூபாய் வாடகை ஆக மொத்தம் இருபத்தாறு ரூபாய் ஒரு பழைய பழுப்பு கவரில் போட்டு மேலே பெயர், விலாசம், உள்ளே இருக்கிற கரன்சி நோட்டு விவரம் எல்லாம் எழுதி பெரிசுகள் எஸ்.எஸ்.எல்.சி ரிசல்ட் வந்த போதே கொடுத்து விட்டார்கள்.
‘600-க்கு 500 மார்க் வாங்கியிருக்கேன்’.
மார்க் ஷீட்டை காட்டியபோது சர்வ அலட்சியமாக அதை வாங்கிப் பார்த்துவிட்டு, ‘சரி, அப்ளிகேஷன் பணம் பத்திரமா இருக்கா பாரு. காலேஜ் அட்மிஷன் எப்பன்னு தினம் விசாரிச்சு வச்சுக்கோ. கோட்டை விட்டுடாதே’ என்று அவசர ஆணை பிறப்பித்துவிட்டு நகர்ந்து விட்டார்கள். ஐநூறு மார்க் வாங்க நான் பட்ட துன்பத்தை ஊகிக்க சாண்டில்யனால் கூட முடியாது. எங்க பெரிசுகளுக்கும் தான்.
ராஜா ஹைஸ்கூல். முடித்தால் ராஜா காலேஜ். முந்தியது ரெட்டைத் தெருவில் இருந்து கிழக்கே பதினைந்து நிமிட நடையில். பின்னது தென் மேற்கே ரெண்டு கிலோ மீட்டர் தொலைவில். ஒரே ஜமீன்தார் பரம்பரை தான் இரண்டையும் கட்டி கரஸ்பாண்டெண்ட் ஆக இருப்பது. பாளையக்கார வம்சம். இன்னும் ராஜா காலக் கனவில் இருந்து மீளாமல் புரண்டு படுப்பவர்கள். பள்ளிக்கூட ப்ரேயரில் அவர்கள் புகழையும் தினசரி பாடித் தொலைக்க வேண்டி இருக்கும். கலைஞரும் நாவலரும் நாடாளுகிற காலத்தில் இப்படி அட்ரஸ் இல்லாத ஜமீந்தாருக்கு ராஜ விசுவாசியாக இருக்கணுமா? என்ன செய்ய? இந்த ஊரில், அதுவும் ரெட்டைத் தெருவில் வசிக்கிற ஒரே சுகத்துக்காக எல்லாத்தையும் பொறுத்துக் கொள்ளலாம்.
பழுப்பு கவரை எடுத்துக் கொள்ள வீட்டுக்கு வந்தேன். பெரிசுகள் யாரையும் காணோம். அவங்க அவங்க வேலை அவங்க அவங்களுக்கு. ‘நீ காலேஜ் போய் அப்ளிகேஷன் வாங்கற வழியைப் பாரு’ சீர்காழி குரலில் அசரீரி சொன்னது.
இல்லை, அது ஸ்தூல சரீரி பாட்டியம்மா வாய்ஸ். பக்த விஜயம் புத்தகத்தை கடந்த ஐம்பது வருடமாகப் படித்து இன்னும் சோகமேளார் சரித்திரத்திலேயே இருக்கிறாள். அதென்னமோ, மெழுகுசீலை தலகாணியில் தலை வைத்து ரேழியில் படுத்தபடி அந்தப் புத்தகத்தைப் புரட்டி சோகமேளார் பக்கத்துக்குப் போகும்போது அவளுக்கு சுகமான பகல் தூக்கம் வந்துவிடும். இன்று இன்னும் சோகமேளாருக்கு அவள் வந்திருக்காத காரணத்தால் எனக்கான உத்தரவு வெளியிடப் பட்டது.
கொல்லைக் கதவை யாரோ தட்டுகிற சத்தம். இது நிச்சயம் போஸ்ட்மேன் சின்னகிருஷ்ணன் தான். வீட்டு வாசலுக்கு வந்து தபால் கொடுக்காமல், பின்னந் தெருவில் சைக்கிளை நிறுத்தி மிகச் சரியாக யார் வீடு என்று கொல்லைக் கதவை வைத்து எப்படியோ கண்டுபிடித்துத் தட்டி திருச்செந்தூர் இலைவீபுதி பிரசாத கவரைக் கொடுத்துவிட்டுப் போவது அவர் வாடிக்கை.
நான் ரெண்டு எட்டில் கொல்லைக்கு ஓடும்போது வழக்கம்போல் நிலைப்படி இடிக்காமல் குனிந்து, தாழ்வாரத்தில் துளசிச் செடி தொட்டியை இடராமல் வலம் வந்து சிமெண்ட் தொட்டியில் கை அளைந்து விட்டுக் கதவைத் திறந்தேன்.
போஸ்ட்மேன் சின்னகிருஷ்ணன் இல்லை. சாண்டில்யன் கதாநாயகி நின்று கொண்டிருந்தாள்.
நான் வந்து. பொள்ளாச்சியிலே இருந்து. நான். மேகலான்னு கூப்பிடறது. பக்தவிஜயம் புத்தகம். பாட்டி. எங்க அத்தை. வாங்கி வரச் சொல்லி. அப்புறம் வரட்டா?
ரிடையர் போஸ்ட் மாஸ்டர் எனக்குச் சொல்லிக் கொடுத்த தந்தி பாஷை போல படபடப்பில் ஏதோ பேசும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். பச்சைப் பட்டுப் பாவாடை. மஞ்சள் தாவணி. இடுப்பில் இழுத்துச் செருகி ஸ்டைல் காட்டும் உள்ளூர் அழகிகள் மாதிரி இல்லாமல் தாவணியைத் தழைய விட்டிருந்தாள். தலை கொள்ளாமல் பிச்சிப்பூ. பேசும்போதெல்லாம் வாய்க் கோடியில் தெற்றுப்பல் தெரிந்து அப்போதுதான் படம் போட ஆரம்பித்திருந்த ஜெயராஜ் படங்களை நினைவு படுத்தியது. ஆனால் இவள் முந்தானையை இழுத்து மூடியிருந்தாள்.
‘உள்ளே வாங்க. வா’.
நான் ஒரே வினாடியில் மரியாதையை கைவிட்டு ஒருமைக்கு மாறினேன். இந்தப் பெண் நேற்று ராத்திரி பஸ் ஸ்டாண்டில் வந்து இறங்கி பழநி குதிரை வண்டியில் கம்பவுண்டர் சுப்பிரமணியன் வீட்டுக்குப் போனாள். அப்போ முகம் சரியாகத் தெரியவில்லை.
‘இல்லே, போறேன்.’
‘நானும் போகணும். காலேஜ் அட்மிஷன்’.
காலேஜ் என்றதும் மிரள்வாள். ரொம்ப மரியாதையோடு பார்ப்பாள் என்று நினைத்தேன். அவள் சின்னதாக சிரித்தாள்.
‘எனக்கு அது அடுத்த வருஷம் தான்’.
ஆக என்னை விட ஒரு வயசு சின்னவள். பக்த விஜயம் படிக்கிற வயசில்லை இது.
‘உங்க வீட்டுலே நிறையப் புத்தகம் இருக்குன்னு அத்தை சொன்னா’.
கம்பவுண்டர் சுப்பிரமணியனின் சம்சாரம், அம்மாவோடு அரட்டை அடிக்க வரும்போது தாத்தாவின் சட்ட புஸ்தகம் அடுக்கி வைத்த அலமாரியை ஆசையோடு பார்க்கிற வழக்கம். தாத்தா காலம் சென்று பத்திருபது வருஷம் ஆகியும் அலமாரியைத் திறப்பதில்லை. சரஸ்வதி பூஜைக்கு அதுக்கு கிரமமாக சந்தனப் பொட்டு வைத்து கண்ணாடிக் கதவு முழுக்க பொட்டு மயம்தான்.
‘அருமையான அலமாரி. விலைக்கு கொடுக்கறதுன்னா சொல்லுங்க. எங்க வீட்டுலே அவர் மருந்து கலந்து வச்சுக்க பிரயோஜனப்படும்’.
கம்பவுண்டர் டாக்டர் இல்லாத நேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் தன் வீட்டில் டாக்டர் அவதாரம் எடுத்து பிராக்டிஸ் பண்ணி வந்ததால் தொழிலுக்கு உபயோகமாக தேக்கு அலமாரி தேவை. அதில் இருக்கிறது எல்லாம் என் புத்தகம் என்று அம்மா அவசரம் கருதிச் சொன்னதை முழுசாக நம்பி விட்டாள். பொள்ளாச்சிப் பெண்ணையும் அந்த ஸ்டாக்கை காலி செய்ய அனுப்பியிருக்கிறாள்.
‘உன் பேர் என்ன’?
பகல் வெய்யிலில் நெற்றியில் வியர்வை துளிர்க்க ஆரம்பித்த பொள்ளாச்சியைக் கேட்டேன். இந்தப் பேச்சு வார்த்தையை அவசரமாக முடிக்க வேண்டும். பெரிசுகள் பார்த்தால் என்ன வேணுமானாலும் நடக்கக் கூடும்.
அந்தப் பெண்ணுக்கும் இதே அவசரம் இருந்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஒரே மாதிரி நினைக்க இன்னொரு அழகான ஆத்மா. ஜெயராஜ் வரைந்த குந்தவை.
‘நான் மேகலா’.
‘மேகலாவுக்கு என்ன புத்தகம் படிக்கப் பிடிக்கும்? சரித்திரக் கதை? சமூகக் கதை? சங்கர்லால் துப்பறியும் மர்மக் கதை? பேய் பேய்தான்?’
அவள் மிரண்டு அதெல்லாம் வேண்டாம் என்றாள். இதில் எது பிடித்திருந்தாலும் கிரி நூலகத்தில் ஐம்பது பைசா கட்டணம் செலுத்தி வாங்கிக் கொடுத்து விடுவேன். வீட்டுக்குக் கொண்டு போய்ப் படிக்க அதிக கட்டணம் தான். ஆனால் என்ன? மேகலாவுக்காக ஐம்பது காசு செலவழிக்க முடியாதா என்ன?
‘சரித்திரப் புஸ்தகம்னா’.
அவள் வழக்கம்போல் பாதி வாக்கியத்தில் நிறுத்தினாள். சட்டென்று கடல்புறாவாகி இன்ப ஊகத்தில் பறக்கத் தொடங்கினேன்.
‘சாண்டில்யன் எழுதினது. அதானே வேணும்?’
நான் ஆர்வமாகக் கேட்டேன். பொன்னியின் செல்வன் நினைவுக்கு வரவில்லை.
‘ஊஹும். எஸ்.எஸ்.எல்.சி சரித்திரப் பாடப் புத்தகம். லீவுலே படிக்கணும்னு எங்கப்பா சொல்லியிருக்கார். அவர் ஸ்கூல் ஹெட் மாஸ்டர்’.
என் பாடப் புஸ்தகம் எல்லாம் போன இடம் தெரியவில்லை. கிரி லைப்ரரியில் சாண்டில்யன் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி சரித்திரப் புத்தகம் கிடைக்குமா?
‘சரி, அப்புறம் வரேன்’.
‘பழைய புத்தகத்தை பத்திரமா வச்சுக்கணும் பார்த்துக்கோ’. தாத்தா அசரீரியாகப் பாடினார். இல்லை அது சீர்காழியா?
மேகலா போய் விட்டாள். தரையில் சிதறிக் கிடந்த பிச்சிப் பூவில் இருந்து ஒன்றை எடுத்து முகர்ந்தபடி காலேஜ் அட்மிஷன் கட்டண பழுப்புக் கவருக்காக பழைய பேப்பர் குவியலுக்குப் பின்னால் மாடப்பிறையில் கைவிட்டேன். காலில் ஏதோ நழுவி விழுந்தது. என் எஸ்.எஸ்.எல்.சி சரித்திரப் புத்தகம்.
என்ன செய்ய? சோகத்தோடு த்யூப்ளே தெருவைத் தொடங்க வேண்டி இருக்கு.
இரா.முருகன்