புது நாவல்: அச்சுதம் கேசவம் – அத்தியாயம் 13

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பதிமூன்று


காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்த மாதிரிச் சாடி எழுந்து படித்துக் கொண்டிருக்கிறான் சின்னச் சங்கரன்.

குண்டுராயர் ஓட்டலில் இருந்து காலில் மாவுக் கட்டுப் போட்டுக்கொண்டு யாரோ ஒருத்தன், வாழை இலையில் பொட்டலம் கட்டி எடுத்து வந்த கனமான நாலு இட்லியும் வேர்க்கடலைத் துவையலும், மூக்குப் பாத்திரத்தில் வந்த இனித்து வழிந்த காப்பியும் சாப்பிடப் பத்தும் அஞ்சுமாக நிமிடங்கள் போனது. அந்த நேரத்தில் மட்டும் உட்கார்ந்திருந்த ஊஞ்சலில் ஓரமாக வைத்தது தவிர மீதி நேரம் முழுக்கப் பகவதி எழுதிய டயரியைத் தான் படித்துக் கொண்டிருக்கிறான் அவன். எண்பது வருஷம் முந்திய காலம் அப்படியே உறைந்து சங்கரனை உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. அதன் பரப்பில் அமிழும் பரவசம் அலாதியானது.

காலேஜில் பாடமாக வைத்து வகுப்பெடுத்துச் சொல்லிக் கொடுத்த, வேலைக்குப் போன பிறகு அத்தி பூத்தாற்போல் யாரோ படிக்கச் சொல்லிக் கையில் திணித்த, அதையும் விட அபூர்வமாக கன்னாட்பிளேஸ் நடைபாதைக் கடையில் பேரம் பேசி விலைக்கு வாங்கி வந்து படித்த புத்தகங்கள் உண்டு தான். அதில் எந்தப் புத்தகத்தையும் விட அற்புதமான எழுத்தாகப் பட்டது பகவதியின் பெண்ணெழுத்து.

எண்பது வருடம் முன்னால் ஏற்பட்ட பஞ்சம் பற்றிச் சொல்கிறாள் பகவதி. தாது வருஷப் பஞ்சம். அரசூரில் இருந்தும், பக்கத்து கிராமங்களில் இருந்தும் கூட்டம் கூட்டமாக ஜனங்கள் பஞ்சம் பிழைக்க மேற்கு நோக்கியும் வடக்கிலும் போனதை எல்லாம் பார்த்தபடிக்கும் கேட்டபடிக்குமாக எழுதி வைத்திருக்கிறாள்.

அவளுக்கு நாள், நட்சத்திரம், திதி, கிழமை, இங்கிலீஷ் தேதி பற்றி சதா சந்தேகம் இருந்திருக்கிறது. மலையாளத்தில் யோசித்து, சரியான தமிழ் வார்த்தைகள் கிடைக்காமல் அவஸ்தைப் பட்டிருக்கிறாள். கோவையாக வரும் வாக்கியம் எங்கே முடிந்து அடுத்தாற்போல் எப்படி எடுக்க வேண்டும் என்பது அவ்வப்போது குழம்பிப் போகிறது. ஆனால், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், அவளுடைய வீட்டுக்காரனும் சின்னச் சங்கரனுக்குப் பெயர் ஈந்தவனுமான புகையிலைக் கடை சங்கரன் தொடர்ந்து எழுதச் சொன்னபடி, விடாது எழுதி இருக்கிறாள்.

பகவதியின் டயரியில் இருந்து
————————-
அம்பலகாரர் வந்திருந்தார் இன்னிக்குக் காலையிலே. குத்தகைக்காரர். நெல்லும் வாழையும் மழை இருந்தால் விதைச்சு, பூச்சி பொட்டு வராமல் இருந்தா விளைச்சு எடுத்து வந்து, மிஞ்சினால் விற்றுக் காசாக்கி, அதைக் கொண்டு வந்திருக்கலாம்.

விடிஞ்சதும் வாசல் தெளிக்க பசுஞ்சாணத்தைக் கரைச்சு எடுத்து வாசலுக்குப் போனபோது கம்பிக் கதவுக்கு அந்தப் பக்கமா வாசல் படியிலே உட்கார்ந்திருந்தார் அவர். பக்கத்திலே ஒரு பனை ஓலைக் கடகம். தெருவைப் பார்த்து இருந்தாலும், தலையிலே வெள்ளைத் தோர்த்தை முண்டாசு கட்டி இருந்ததைப் பார்த்ததுமே அம்பலகாரர்னு போத்யமாயிடுத்து.

ஐயோ, ரொம்ப நாழிகையா இங்கே இருக்கேளான்னு பதட்டத்தோடு கேட்டேன். வயசிலே பெரியவர். நம்மையும் ஒரு பொருட்டா மதிச்சுப் பார்த்து விட்டுப் போக வந்திருக்கார். எவனோ தீத்தானும் தீட்சிதனும் எந்தக் காலத்திலேயோ எழுதி வச்ச பிரகாரம் கதவு திறக்கற வரைக்கும் வாசல்லேயே உக்காருன்னு சொல்றது மகா தப்பு ஆச்சே. இவரும் அதான் சொல்வார்.

உள்ளே வரச் சொன்னேன். வந்து தரையிலே உக்கார்ந்தார். வேணாம், குரிச்சியிலே உக்காருங்கோன்னேன். மாட்டேன்னார். என்ன தோணினதோ, உக்காந்தார். கால் வீங்கி இருக்கறதை கவனிச்சேன். பாவம், கிராமத்திலே இருந்து நடந்து வந்திருக்கார்.

ஒரு குரல் கொடுத்திருந்தா நானோ அவரோ ஓடி வந்திருப்போமேன்னேன். நான் வந்து பார்க்கறது தான் மரியாதைன்னார் சிரிப்போட. குப்புசாமி அண்ணா மாதிரி வாய்க்குள்ளேயே சிரிச்சுக் கண்ணு வழியாக அர்த்தமாகிற சிரிப்பு.

சத்துமாவு எடுத்துண்டு வந்து தரட்டான்னு விசாரிச்சேன். விடிகாலையில் அதை சாப்பிடக் கொடுக்கலாமோ தெரியலே. அதெல்லாம் வேணாம் கொழந்தே. அக்கா மவன் கடைவீதிக்கு அடுத்துத்தானே இருக்கான். நிமிசத்துலே போயிடலாம்னார்.

குளிச்சுத் தெளிச்சுத்தான் மைத்த விவகாரம் எல்லாம்னதும் எனக்கா சிரி பொத்துண்டு வந்தது. நீங்க குளிங்கோ. நான் தெளிக்கறேன், அதுக்கு முந்தி ஒரு ஆழாக்கு பசும்பால் சூடாக் கொண்டு வரேன்னேன்.

வேணாம் கொழந்தே. அஞ்சு வருஷம் முந்தி இந்தப் பயங்கரமான பஞ்சம் வந்தபோதே பால், தயிர், நெய் எல்லாம் விட்டாச்சு. ஊரும் உறவுமா சேர்ந்து இருந்தோம். ஆகாரத்துக்கு குறையே இல்லாம இருந்தது போக, அண்டை அயல்லே சோத்துக்கு இல்லாமே பஞ்சம் பிழைக்கப் போனதுகள். அதில் யாரும் இன்னும் திரும்ப வந்து சேரலே. இருக்குதோ உசிரை விட்டாச்சோ தெரியலை தாயி. குவளைப் பாலைக் குடிக்கலாம்னு எடுத்தா, ஊர்க்கோடியிலே பட்டினியிலே செத்த சின்னப் பிள்ளை முகம் தான் நினைவு வருது. நான் தான் அடக்கம் செஞ்சேன் என் கையாலே. ஊரோட ஒடிச்சுப் போட்டுது அம்மா. இன்னும் எந்திரிக்கலேன்னார்.

எல்லாம் சரியாயிட்டு இருக்கு. இனி துன்பம் இல்லே அம்பலகாரரேன்னு உள்ளே இருந்து இவர் குரல் கேட்டதும் நான் நடுவாசல்லே போய் தெளிக்க ஆரம்பிச்சேன். பாவம், இப்பத்தான் எழுந்து கொழந்தே வாசலுக்கு வருது. நான் குருட்டு ரோசனையிலே அதையும் துக்கப்படுத்தினேனேன்னு அம்பலகாரர் இவர் கிட்டே சொல்றது கேட்டுது. அவர் துக்கத்தை இல்லேன்னு ஆக்க என்னாலே என்ன செய்ய முடியும்? பாரத்தை இறக்கினதை கொஞ்சம் சுமந்தாலும் தேவலை.

ஒரு குலை நாட்டு வாழைப் பழமும், சோனியாகத்தான் இருந்தது அது. வாழையோடு கூட ஒரு பெரிய பறங்கிக்காயும், சின்னச் சின்னதா சாளூர்க் கத்திரிக்கா ஒரு குத்தும், பனை நுங்கும் அந்தக் கடகத்துலே இருந்து எடுத்து திண்ணையில் பரப்பி இருந்ததை வாசல் தெளிச்சுட்டு வந்த போது பார்த்தேன்.

ஓணக் காலத்தில் நம்பூதிரிகளுக்குக் காழ்ச்ச வைக்க குடியான்மார் குட்டநாடு பிரதேசத்திலே வர்றது ஞாபகம் வந்தது. அங்கே நம்பூதிரிக்கு சொந்தமான நிலத்தில் குடியான்மார் செய்யற க்ருஷி. தமிழ்லே என்ன? க்ருஷியை அழிச்சு துவம்சம் செய்ய மனசு கேக்கலே அப்படியே இருந்துட்டுப் போறதும்பார் இவர்.

க்ருஷிங்கறது பயிர் சாகுபடியாம். அம்பலகாரர் பயிர் சாகுபடி செய்து எங்க குடும்ப நிலத்தை முழுக்க பார்த்துண்டிருக்கார். வாரம் ஒரு தடவையாவது இவரும் கிராமத்துக்கு வண்டி கட்டிப் போய் நிலத்திலே உழைச்சாறது. நம்பூத்ரிகள் போல மேனி வாடாமல் வாசல்லே உக்கார்ந்து சதா வம்பு பேசறவர் இல்லையாக்கும்.

அது ஆச்சா. இன்னிக்கு ரதசப்தமி நினைவு இருக்கோன்னு கேட்டார் இவர் வாசல்லே இருந்தபடிக்கு. நான் குளிக்கக் கிளம்பினேனாக்கும் அப்போ.

ரதசப்தமி என்ன விசேஷம்னு இவரைக் கேட்டேன். செடி கொடிகளுக்குப் புண்ணியம் கிட்டச் செய்யற பிரார்த்தனைன்னு சொன்னார். அதுனாலே தான் உச்சந்தலையிலே எருக்கு இலையை வச்சபடி குளிக்கற வழக்கமாம். எலை பறிக்க ஆள் போயிருக்குன்னார். சரி வரட்டும்னு உக்காந்து காய் நறுக்கினேன்.

வயலும், தோட்டமுமாக மிந்தியெல்லாம் அரசூரைச் சுற்றி செழிப்பாக இருந்த காலத்தில் எருக்கெலையைத் தேடி கால் தேயப் போக வேண்டியிருந்தது. இந்த வருஷம் புகையிலைக் கடை சிப்பந்தி போய் ஷணத்துலே இலையோட வந்தாச்சு. அம்பலகாரர் சொன்னது சரிதான். பஞ்சம் ஓய்ந்து அஞ்சு வருஷம் ஆனாலும் இந்தப் பிரதேசம் இன்னும் குத்துயிரும் கொலையுயிருமாகத்தான் இருக்கு.
எருக்கு மட்டும் எதேஷ்டமா கொப்பும் கிளையுமா முளை விட்டிருக்கு.

குளிச்சுட்டு கோவிலுக்குப் போனபோது தான் பிரகாரத்தில் யாரோ யார் கிட்டேயோ உரக்கப் பேசினது கேட்டது. ஆகாசத்தில் சூரியன் திசை மாறி வடக்கு நோக்கி சஞ்சரிக்க ஆரம்பிச்சிருக்கற தினமாம் இது. வருஷம் ஒரு தடவை இப்படி வர்றது உத்தராயணமாம். ஆறு மாதம் கழிஞ்சால், தெற்கு நோக்கி இருக்குமாம் சஞ்சாரம். அது தட்சிணாயணமாம். உத்திராயணத்துக்கும் எருக்க இலைக்கும் என்ன சம்பந்தம்னு அவரும் சொல்லலை. நானும் கேட்கலை.

உத்திராயணம், தட்சிணாயணம் மாத்திச் சொல்றேனோ. இவர் கிட்டேத்தான் கேக்கணும். கோயில் பிரகாரத்துக்கா இதுக்காகப் போய் நிக்க முடியும்?

அது ஆச்சா. இன்னிக்கு தரிசனம் முடிந்து மேற்குக் கோபுர வாசல் வழியாக வரும்போது, ஒரு விநோதமான காட்சி. ஒரு பத்து பதினைந்து சாமியார்கள். ஒவ்வொருத்தரும் ஆஜானுபாகுவாக, ஏழடி உசரமும், நல்ல வண்ணம் தடி வச்ச உடம்புமாக இருக்கப் பட்டவர்கள். தடதட என்று தெரு நெடுக ஓடுகிறார்கள் ஒருத்தரோடு ஒருத்தர் போட்டி போட்டுக் கொண்டு. ஆளாளுக்குக் கையில் மர உலக்கை வேறே. அதை வீசி வீசி ஆட்டியபடி காரே பூரே என்று ஏதோ உரக்கச் சொல்லிக் கொண்டே ஓடுகிற கூட்டம் இது. பார்த்ததே இல்லையாக்கும்.

பைராகிகள். வடக்கே இருந்து கால் நடையா ராமேஸ்வரம் போகிற கோஷ்டி. இது யாருன்னு நான் கேட்கலை. ஆனாக்க, கோவில் நாகஸ்வரக்காரர் நடேசப் பிள்ளை வாத்தியம் வாசிப்பு நிறுத்தி, என் கிட்டே இந்தத் தகவலைக் கர்ம சிரத்தையாச் சொன்னார். நான் இந்தப் பக்கமாத் தானே வீட்டுக்குப் போயாக வேண்டி இருக்கு. இந்த கூட்டம் நல்ல மாதிரி மனுஷாளா, நான்பாட்டுக்கு ஒரு ஓரமா நடந்து போனா, தொந்தரவு கொடுப்பாளான்னு கேட்டேன். சத்தமும், நாள் கணக்கா குளிக்காததுனாலே ஒச்சை வாடையும் அதிகமாக இருக்குமே தவிர, பைராகிகள் எல்லாரும் சாதுக்கள், யாருக்கும் ஒரு கெடுதலும் செய்ய மாட்டாங்கன்னு தவில் கருப்பையாப் பிள்ளையும் அவர் கூடவே ஒத்து ஊதினார். இதுக்கு முன்னாலேயும் வந்திருக்கப்பட்ட மனுஷர்களாம். அப்போ எல்லாம் என் கண்ணுலே படாமல், இன்னிக்கு ரத சப்தமியன்னிக்குப் படணும்னு இருக்கு.

பைராகிகள் அந்த உலக்கையாலே தப்பித் தவறிக் கூட நம்ம தலையிலே ஒரே போடாப் போட மாட்டாங்களேன்னு கேட்டேன். உலக்கையை வச்சு அவங்க அவங்க முதுகிலே தான் ஓங்கி ஓங்கி அரைஞ்சுப்பாங்கன்னு நடேசன் சொல்றதுக்குள்ளே பகவானே அவங்க எல்லோரும் கால் பரப்பி நின்றபடிக்கு முதுகிலே அடிச்சுக்கறதைப் பார்த்து வெலவெலத்துப் போச்சு. காரே பூரேன்னு தெறிப்பாட்டு மாதிரி ஏதோ பாடியபடிக்கு இப்படி உலக்கை பூஜை நடத்திண்டது.

இவங்களுக்கு சோறும் குழம்புமாக சுடச்சுட வடிச்சு எடுத்து வந்து தரலாமான்னு கும்பிட வந்திருந்த ஒரு கிழவி கேட்டா. நீளமாக் காது வளர்த்தவள். அதுலே கல்லுக் குண்டா தங்கத்துலே பெரிய கடுக்கன் தொங்கறது. அதுக்கு ஏதோ பெயர் உண்டு. இவர் கிட்டே தான் கேட்கணும். என்ன அவசரம்? ஓடியா போகப் போறார்? மெல்லக் கேட்டுக்கலாம்.

சோறு எல்லாம் சாப்பிடறது இல்லையாம். வடக்கத்தி மனுஷர்கள் என்கிறதாலே கோதுமை ரொட்டி தானாம். அதையும் தட்டிப் போட்டா வாங்கறது கிடையாதாம். கோதுமை மாவு, பருப்பு, மிளகாய், உப்பு, எண்ணெய், நெய் வேணாம், அடுப்பெரிக்கக் கரி இப்படிக் கொடுத்தால் திருப்தியாக வாங்கிண்டு வாழ்த்திட்டுப் போவாங்களாம். அதுவும் கூப்பிட்டுக் கொடுத்தா வேணாம். அவங்களுக்காத் தோணற இடத்திலே கேட்கறது. பைராகி கேட்டு ஊர்க்காரர் கொடுக்கலேன்னா? அன்னிக்குப் பொழுதுக்கு அவ்வளவுதான். திரும்ப யார் கிட்டேயும் கை யாசிக்காதாம். கேட்டு இல்லைன்னு சொல்றது அரசூர்லே எப்ப இருந்ததுன்னு கேட்டார் நடேசப் பிள்ளை. அதுவும் சரிதான்னு இறங்கினேன்.

நான் மேலத்தெரு வழியா கையிலே பூக்குடலையோட நடக்கற போது பைராகி பாடற பாட்டு தெளிவாகக் கேட்டுது. இந்துஸ்தானியா? பாலாஜி விஸ்வநாத் பாலாஜி விஸ்வநாத் அப்படீன்னு முடியற கோஷம். விஸ்வநாத்ன்னா விஸ்வநாதரா? காசி விசுவநாதன்னு சொல்ற மூர்த்தி தானே? பாலாஜிங்கறது திருப்பதி இல்லையோ.

எதுக்கு மண்டையை ஒடச்சுக்கண்னும். இவர் கிட்டே கேட்டுடலாம். இப்படியே இவர் கிட்டே கேட்டு சந்தேக நிவர்த்தி கிடைக்க எவ்வளவு விஷயம் சேர்ந்து போச்சு. என் ஆயுசுக் காலத்துலே எல்லாத்தையும் நினைவு வச்சுக் கேட்டுப் பதில் வாங்கிடுவேனா இல்லே சந்தேகத்தோடு மேலே போயிடுவேனா? இதையும் இவர்கிட்டேயே கேட்டுடலாம். அசடேன்னு திட்டுவார், ஆனாலும் சொல்வார்.

திடீர்னு வீதி ஓரமாத் தாவி ஒரு பைராகி என் முன்னாலே வந்து நின்னான். நின்னார். பேட்டின்னு கூப்பிட்டார். என்னைத்தான். எனக்கு பயத்துலே நாக்கு மேலன்னத்திலே ஒட்டியாச்சு. பேச்சு ஒண்ணும் எழும்பலே. நாதஸ்வரக்காரரும் தவில்காரரும் சொன்னதெல்லாம் பொய் போல இருக்கே. என்னை மாதிரி சாதுப் பிராணியை இப்படி சல்யப்படுத்தறதா பைராகளோட காரியம்? பேட்டின்னா இந்துஸ்தானியிலே பொண்ணுன்னு எப்பவோ குப்புசாமி அண்ணா சொன்ன ஞாபகம். அடி பொண்ணேன்னு கூப்பிட்டு யாராவது வம்பு பண்ணுவாளா என்ன.

அவர் அந்த பைராகி உலக்கையை தரையிலே ஊணின மாதிரி நிறுத்தி, எப்படியோ விழுந்துடாமல் அது மேல் உட்கார்ந்தார். பத்மாசனம் போட்ட மாதிரியும் இருந்தது. படபடப்பில் சரியாகக் கவனிக்கலே. நம்பணும். சரியா.

என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோ. அவரோட வந்து சேர்ந்து நின்னு கும்பிடணும், வீட்டுக்குப் போய்ட்டு ரெண்டு பேருமா வரோம்னு சொன்னேன்.

நான் கைகூப்பிண்டு சொல்ல, அந்த் பைராகி என் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் பண்ணினார். வாரணாசிக்கு வா. இதைத் தமிழிலே சொல்லிட்டு எழுந்து திரும்ப தெருவுக்கு உலக்கையை ஓங்கியபடிக்கு ஒரு பாய்ச்சல். புழுதியைக் கிளப்பி அந்தக் கூட்டம் போனது. தெருவிலே ஒரு சத்தம் இல்லே.

நேரே அப்படியே வீட்டுக்கு விரசாப் போனேன். மூட்டையைக் கட்டுங்கோ. பைராகிகள் நம்மை வாரணாசிக்குக் கூப்பிடறான்னு இவர் கிட்டே சொன்னேன். பைராகியை புகையிலைக் கடையைப் பார்த்துக்கச் சொல்லு. கிளம்பிப் போய்ட்டு வந்துடலாம்கிறார் இவரானா.

அந்த உலக்கையாலே, வேணாம்பா, கோவில் பங்குனி உத்தரத்தன்னிக்கு கட்டி எடுத்து வருவாளே மணக்க மணக்க அது போல பெரிய சைஸ் பூச்செண்டாலே இவர் முதுகிலே நாலு சார்த்து சாத்தினா என்ன?
//

சின்னச் சங்கரன் உரக்கச் சிரித்தான். உலக்கையை ஓங்கி அடித்துக் கொண்டு போகிற பைராகிகளும், மேலத் தெருவில் நடக்கும் பகவதிப் பாட்டியும், தெரு முழுவதும் பறக்கிற செம்மண் தூசியும் கோயிலில் நாகஸ்வரமும் நினைப்பில் அழுத்தமாகப் பதிந்து இறங்க, இப்பவே மேலத் தெருவுக்குப் போ என்றது மனசு.

உள்ளே போய்ச் சட்டையை அவசரமாக மாட்டிக் கொண்டு கிளம்பும்போது வாசல் அருகே நிழல் தட்டியது. மருதையன். மாடிப் படி ஏறியவர் ஒரு வினாடி நின்றார்.

என்ன, மேலத் தெருவுக்குத் தானே?

ரொம்பச் சரியாக அனுமானம் செய்கிறார் ரிடயர்ட் புரபசர். முகத்தைப் பார்த்தே நினைப்பைச் சொல்கிறதும் வசப்பட்ட பெரியவர் என்று பட, சின்னச் சங்கரன் கக்கத்தில் இடுக்கிய டயரியோடு ரெண்டு கையையும்ம் உயர்த்திக் குவித்து மனப்பூர்வமாக அவருக்கு வணக்கம் செய்தான்.

பைராகிகள் பற்றி அம்மா எழுதியிருக்கறதைப் படிச்சு நானும் இப்படித்தான் அந்தத் தெருவிலே போய் ஓரமா நின்னு நாள் முழுக்கப் பார்த்துட்டு இருந்தேன். உன் அப்பன் தான் வலுக் கட்டாயமா வீட்டுக்குக் கூட்டி வந்தது. மருதையன் மாமா சொன்னபடி மெல்ல மாடிப்படி ஏறினார்.

சின்னச் சங்கரனைக் கூட்டி வர வீட்டில் யாரும் கிடையாது. மருதையன் தான் கைத்தடி ஊன்றி வர வேணும் என்றால் வேணாம். யாருக்கும் எந்தத் தொந்தரவும் வைக்காமல் சங்கரன் போனோம் வந்தோம் என்று உடனே திரும்பி விடுவான்.

சூடு இல்லாமல் ஊமை வெய்யிலாகக் காய்ந்து கொண்டிருந்தது. மழை வரும். ஒரு குடையோடு கிளம்பியிருக்கலாம். போகிறது. நனைந்தபடிக்கே வடக்கு வாடி மூலையில் தென்கிழக்குப் பார்த்து நிற்கிற தியாசபிகல் சொசைட்டிக் கிணற்றில் குளித்து விட்டு வந்து விட வேண்டியது தான். போகிற வழியில் மூக்கையாக் கோன் கடையில் ஒரு பத்தாறு வேட்டியும் துண்டும் அடுத்த ராவுத்தர் மளிகையில் நஞ்சன்கூடு பல்பொடியும், தேய்த்துக் குளிக்க சோப்பும் வாங்கினால் முடிந்தது.

சட்டென்று சூரியன் அஸ்தமனமாகிறது போல் வீதியில் வெளிச்சம் சடசடவென்று மங்கி வந்தது. மூக்கில் குத்தும் ஈர வாடை. பறவைகள் ஒரு சேர இறகு உலத்துவது போல, தனுஷ்கோடி கடல்கரையில் ஆமைகள் ஒதுங்கி மண்ணில் புரளும்போது கசிகிறது போல், உலர்ந்த மீன் நிரப்பிய கூடைகளோடு சந்தைக்கு மாட்டு வண்டி தெருவில் போகிற போது அனுபவப்படுகிற மாதிரி, வாடை நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகி வந்தது.

மேலே நகர்ந்து வந்து கவிகிற ஏதோ நிழல். சங்கரன் நிமிர்ந்து பார்த்தான்.

ஒரு கூட்டம் மயில்கள் தாழப் பறந்து இறங்கிக் கொண்டிருந்தன.

(தொடரும்)

இந்த இணையத் தளத்தின் செயல்பாடு கடந்த ஐந்து நாட்களாக இல்லாமல் இருந்தது. இணையத் தளங்களை நடத்தும் வெப்ஹோஸ்ட் சேவையாளர் நிறுவனம் செய்த தவறுதலால் பல தளங்கள் இப்படி முடங்கி இருக்கின்றன. நிலைமை தற்போது சீரடைந்து வருகிறது. முந்தைய பதிவுகள் இன்னும் ஓரிரு தினங்களில் இங்கே கிடைக்கும். பொறுத்தருள்க.

———————————————————————————————————-

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன