நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 1

நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 1

(காவ்யா இலக்கியக் காலாண்டிதழ் அக்டோபர் – டிசம்பர் 2014)

இரா.முருகன் குறிப்பு
——————-
பிரபலமானவர்களோடு பிரயாணம் போவதில் கொஞ்சம் கஷ்டம் உண்டு. நிச்சயம் அவர்களால் நமக்குக் கஷ்டம் கிடையாது. நாமும் அவர்களைத் துன்பப் படுத்துவதை மனதில் கூட நினைக்க மாட்டோம். ஆனாலும் ஆயிரம் ஜோடிக் கண்கள் அந்தப் பிரபலத்தின் மேல் நிலைத்திருக்க, கூட நடக்கிற, உட்கார்கிற, ரவா தோசை சாப்பிடுகிற, பேசுகிற, கேட்கிற நமக்கு சடாரென்று ஒரு பயம். இந்தாளு யாரென்று எல்லாரும் நம்மைப் பற்றி யோசித்திருப்பார்கள். அதிலே ஒருத்தராவது வாயைத் திறந்து யோவ் நீ யாருய்யான்னு கேட்டால் என்ன பதில் சொல்ல?

நான் எழுத்தாளன் – தமிழ்லே சொல்லுங்க –ரைட்டர்-சினிமா பத்திரிகை நிருபரா? ஊஹும்.

நம்ம இலக்கியத் தடம் எல்லாம் இங்கே சுவடில்லாமல் போய்விடும்.

உத்தியோகப் பெருமை பேசிவிடலாமா?

கம்ப்யூட்டர் கம்பெனியிலே அதிகாரி – சரி, இங்கே என்ன பண்றீங்க?

கதை எழுதி, பத்தி எழுதி, நாவல் எழுதி, சினிமா கதை வசனம் எழுதி எல்லாம் பிரயோஜனம் இல்லை. வேறே என்ன வழி? நாமும் கொஞ்சமாவது முகத்தைப் பார்த்து அடையாளம் காணும்படிக்கு பிரபலமாவதுதான்.

யோசித்துக் கொண்டே கமல் ஹாசன் என்ற ஒரு மகா பிரபலத்தோடு கிட்டத்தட்ட முழு நாளையும் கழிக்க அண்மையில் சந்தர்ப்பம் வாய்த்தது.

கோவளம் கடற்கரை ஐந்து நட்சத்திர ஹோட்டல் ரிசப்ஷனில் அவரைச் சந்தித்தபோது, சென்னை வீட்டில் சந்தித்தால் உட்காரச் சொல்லி பேசுகிறது போலதான் சகஜமாகப் பேசினார். அதற்குள் எத்தனையோ பேர் நின்று பார்த்துக் கடந்து போய்க் கொண்டே இருந்தார்கள். எனக்கென்னமோ அந்தப் பார்வையில் எல்லாம் பொறாமை கொழுந்து விட்டு எரிகிற மாதிரித் தெரிந்தது.

இவ்வளவு உற்சாகமா இவன் கிட்டே பேசிட்டு இருக்காரே? யாருடா புள்ளிக்காரன்? சினிமாக்காரன் மாதிரியும் தெரியலியே.

பள்ளிகொண்டபுரம் போய் அனந்தசயனனைத் தொழுது அவன் பெயர் கொண்ட எழுத்துலகச் சிற்பி நீல.பத்மநாபன் அவர்களின் வீட்டில் இறங்கி ஒரு வணக்கம் சொல்லி விட்டு கொஞ்சம் இலக்கிய உரையாடலும் செய்து வரத் தான் திட்டம்.

நெரிசல் மிகுந்த வீதிகளில் கார் ஊர்ந்து கொண்டிருந்தது. உள்ளே கமல் கம்மந்தான் கான்சாகிப் பெருமையை உயர்த்திப் பிடிக்க, செம்மண் பூமிக்காரனான நான், எங்க ஊர்க்காரரும் கான்சாவின் அம்மாவனும் அவனை மாமரத்தில் தொங்கவிட்டுத் தூக்குப் போட்டுக் கொல்லக் காரணமானவருமான தாண்டவராயன் பிள்ளையின் இன்னொரு பக்கத்தை அழுத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட காரசாரமான வாக்குவாதம். வண்டி ஓட்டிக் கொண்டிருந்த நண்பர் ஓரம் கட்டி நிறுத்தி விட்டு என்னை ஒரு கை பார்க்க பலமான சாத்தியக்கூறு. இவ்வளவு பிரபலமானவரோடு யாருடா இவன் சரிக்கு சரி கட்சி கட்டி அழிச்சாட்டியம் பண்ணுகிறான் என்று கோபம் வரலாம். வண்டி நின்றால் தெரு ஓரம் போனவர்கள் நடந்த சங்கதி கேட்டு கொதித்து என்னை சுசீந்திரம் எண்ணெய்க் கொப்பரையில் கை முக்க இழுத்துப் போகலாம்.

அதுக்கு முன்னால் சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்கள் கமலோடு மொபைல் தொலைபேசியில் அவசரமான படம் எடுத்துக் கொள்வார்கள். கிடைத்த காகிதத்தை நீட்டி ஆட்டோகிராஃப் கோரலாம்.

நல்ல வேளையாக யாருக்கும் எந்த சேதாரமும் இல்லாமல் போக வேண்டிய இடம் போய்ச் சேர்ந்தோம். அடுத்த மூன்று மணி நேரம் நகரின் ஜன சந்தடி மிகுந்த அந்தப் பகுதியில் இந்தப் பிரமுகர் இருப்பதே தெரியாமல் நகரம் வேலை நாள் மெத்தனத்தோடு இயங்கிக் கொண்டிருக்க, உள்ளே காமிரா, விளக்கு, சட்டைக் காலரில் மைக் இன்ன பிற அம்சங்களோடு பேச்சைத் தொடர்ந்தோம். பேசப் பேச பேச்சு வளர்ந்தது.

பகல் ஒரு மணிக்கு மின்சாரம் போயே போச்சு. வீட்டுக்குப் பின்னால் அவுட் ஹவுஸ் – பழைய கால பாணி மர வீட்டில் பேச்சை உற்சாகமாகத் தொடர்ந்தோம். அந்த வீட்டு வாசல் படியில் உட்கார்ந்தபடி நான் சுற்றிலும் ஓங்கி உயர்ந்து எழுந்து நின்ற அடுக்கு மாடிக் கட்டிடங்களைத் திகிலுடன் பார்த்தேன். யாராவது ஒருத்தர் பார்த்து அடையாளம் கண்டு கொண்டாலும் போதும். அப்புறம் நாங்கள் பார்க்கப் போனவர்களின் வீட்டுக்கு முன்னால் திருச்சூர் பூரம் போல ஜனசமுத்திரம் திரண்டு அலையடித்து எல்லோரையும் கடல் கொண்டு விடும்.

ஒரு ஜன்னல், ஒரு கதவு கூட அந்த ஒரு மணி நேரத்தில் பக்கத்தில் எங்கேயும் திறக்கப்படவில்லை. நகர வாழ்க்கையின் அமானுஷ்யத் தனிமையிலும் ஏக நன்மை!

வாய்க்கு ருசியான நாஞ்சில் நாட்டு சமையல். திருமதி பத்மநாபனின் அன்பான உபசரிப்பு. விருந்து முடிந்து வாசல் திண்ணையில் சகஜமாக பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மேல் வீட்டு குஜராத்தி குடும்பத்துக் குழந்தைகளோடு அரட்டை. சென்னை விமானத்தைப் பிடிக்கத்தான் நேரம் இருந்தது அதற்கு அப்புறம்.

பள்ளிகொண்டபுரம் நாவலைப் பற்றிய பரிமாற்றமே இன்னும் முடியவில்லை. நீல.பத்மநாபனின் தலைமுறைகள், உறவுகள், இலையுதிர்காலம் என்று மற்றப் படைப்புகள் பற்றிய கேள்விகள் எங்களோடு தான் இருக்கின்றன.

அவற்றோடு, விரைவில் அவரை மீண்டும் சந்திப்போம்.

(நேர்காணல் தினம் 3.2.2010)

நேர்காணல்
———-

கமல் ஹாசன்: ஐயா வணக்கம். ஒரு எழுத்தாளருடைய எழுத்து போக, அவருடைய பல பதிவுகள் தேவையாக இருக்கு. அவர் எப்படி இருப்பார், அவருடைய குரல் எப்படி இருக்கும், எப்படிப் பேசுவார் இப்படி … வாசகர்கள் போக எழுதணும்னு ஆசை இருக்கறவங்களும் எழுத்தாளரைப் பற்றிப் பல கோணங்களில் பதிவை எதிர்பார்ப்பாங்க. அதுலே ஒரு கோணம் இதுவாக இருக்கும்னு நம்பறேன். அதுக்காகத்தான் வந்திருக்கோம். இரா.முருகன் எழுதுகிறவர். நானும். ரெண்டு பேரும் சேர்ந்து சினிமாவுக்கு எழுதியிருக்கோம். எங்களுக்குப் பேச அருகதை இருக்கும்னு நம்பிக்கையில் இதைச் செய்யறோம். உங்க எழுத்துகளைப் படமாக எடுத்துட்டு இருக்காங்க. எனக்கு அந்தக் களம் தெரிஞ்ச களம். உங்க எழுத்தைப் பற்றி முதல்லே பேச ஆரம்பிக்கறேன். எப்போ எழுத ஆரம்பிச்சீங்க?

நீல.பத்மநாபன் : முதல்லே உங்க முயற்சிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிச்சுக்கறேன்.ஒரு எழுத்தாளர் வாழ்ந்த கால கட்டத்தைப் பற்றி வருங்காலத் தலைமுறையில் பல பேருக்குத் தெரியாது. வருங்காலம்னு கூட இல்லை, சமகாலத தலைமுறையிலேயே கூட அப்படித்தான். எழுதறவங்க ஏதாவது ஒரு ஊர்லே இருப்பாங்க.. நான் கூட இங்கே, திருவனந்தபுரத்தில் இருக்கேன்.. சென்னையில் இருக்கக் கூடிய, சமகாலத்திலே எழுதக் கூடிய எழுத்தாளனுக்கு, மற்றும் எங்கேயோ இருக்கக் கூடிய வாசகனுக்கு எப்படி இவர் இருந்தார், பழக்க வழக்கங்கள் என்னன்னு எல்லாம் தெரியாது. அதைப் பதிவு செய்ய நீங்க எடுத்திருக்கறது நல்ல விஷயம். சினிமா உலகத்துலே இருக்கறவங்களுக்கு இதெல்லாம் தோணாது. நீங்க வாசிப்பீங்க. படைப்பாளிகளோடு பழக்கம் இருக்கு. படைப்பாளின்னு சொன்னது ஜனரஞ்சகமாக எழுதக்கூடிய எழுத்தாளர்களை அல்ல. கநாசு அசோகமித்திரன் போன்ற ஆக்கபூர்வமான படைப்பாளிகளை. என் எழுத்துகளைக் கூட நீங்க படிச்சிருக்கீங்க..நான் பார்த்திருக்கேன். கமல் என்னைப் பத்தி சொல்லும்போது தனித்தன்மை வருது. சினிமாவுக்குன்னு ஒரு சக்தி

கமல்: அது ஊடகத்தோட பலம்னு நினைக்கறேன்

நீல: ஐயப்ப பணிக்கரோட என்னை இணைச்சு நீங்க சொல்லியிருக்கீங்கன்னு நிறைய நண்பர்கள் சொன்னாங்க..’கமலஹாசன் உங்களைப் பத்தி சொல்லியிருக்காரே.’என்று விசாரிச்சாங்க.. நான் ஐம்பது வருடமா எழுதிட்டிருந்தாலும் கூட கமல் ஹாசன் வாயிலாக வருவதிலே தனிச் சிறப்பு தான்,

கமல்: கருவியாக இருக்கறதுலே மகிழ்ச்சிங்க

நீல: நீங்க இப்படி ஒரு முயற்சியிலே ஈடுபடறதுக்கு ஒரு வாழ்த்து சொல்லிட்டு உங்க கேள்விக்கு நான் பதில் சொல்றேன்

என்னைப் பொறுத்த வரையிலே சின்ன வயசிலேயே, இலக்கியப் பாணிகள் எல்லாம் தெரியறதுக்கு முன்னாடியே எழுத்து எனக்கு பழகியது. காரணம் கேட்டால் எனக்குக் கதை கேட்கறதிலே ஒரு ஆர்வம். என் பாட்டி, அப்பா அம்மா எல்லோரும் கதைகள் சொல்வார்கள். அப்புறம், நான் இருந்த வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு நாடகக் கொட்டகை இருந்தது. ராஜமாணிக்கம் நாடகக் கம்பெனி. அவர், டி.கே ஷண்முகம் எல்லாம் வந்து நாடகம் போடுவாங்க. நாடக நடிகர், நடிகையர் எல்லாம் எங்க தெரு வழியாத்தான் போவாங்க.

இரா:முருகன் : திருவனந்தபுரத்திலா?

நீல:ஆமா சித்ரா தியெட்டர்னு சொல்வாங்க.. நான் எழுத்திலே பதிவு பண்ணியிருக்கேன் அதைப் பற்றி. எங்க வீடு இருந்த தெருவுக்கும், நாடகக் கொட்டகைக்கும் இடையிலே ஒரு மதில் தான் இருந்தது. அங்கே இருந்து தெரு வாசிகளுக்கு விடிய விடியப் பாட்டு, வசனம் எல்லாம் கேட்டுக்கிட்டே இருக்கும். அப்ப நாங்க சின்னக் குழந்தைகள் அதெல்லாம் பார்த்து நாங்களே எங்களுக்காக நடிக்க ஆரம்பிச்சோம்.. .. நடிக்கறதில் இருந்து, ரொம்ப சின்ன வயசிலேயே நான் எழுத்துக்கு வந்தேன். முதல்லே எழுதினதுன்னு சொல்லப் போனா, கவிதை. கவிதை கூட இல்லை. நாடகத்துக்குப் பாட்டு. அப்புறம் சிறு நாடகங்கள்.. இப்படித்தான் சின்ன வயசிலேயே நான் எழுத்துத் துறைக்கு வந்தேன்

(தொடரும்)

உரையாடல் எழுத்தாக்கம் : இரா.முருகன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன