வரவிருக்கும் ‘டிஜிட்டல் கேண்டீன்’ நூலில் இருந்து

டிஜிட்டல் கேண்டீன்-5 நானோ நானா யாரோ தானா இரா.முருகன்

கடுகு சிறுத்தால் ஏன் காரம் போகாது? தொழில்நுட்பம் கைகொடுத்தால், சிறுத்த கடுகு இனிக்கவும் கூடும். நானோ டெக்னாலஜி செய்யும் ஜித்து வேலை இது.

கடுகு, கட்டித் தங்கம், கம்ப்யூட்டர், கார் இப்படி சகலமானதும் இயற்கையாகவோ அல்லது மனித முயற்சியால் உருவாக்கப்பட்டோ அமைந்த பொருட்கள். ஒரு பொருளின் வடிவத்தை அதன் சகல குணாதிசயங்களோடும், செயல்பாடுகளோடும் மிக மிகச் சிறியதாகக் குறுக்க முடிந்தால் சில அற்புத விளைவுகள் ஏற்படக்கூடும் என்கிறது நானோ டெக்னாலஜி. சிறியதாகக் குறுக்குவது என்றால் என்ன அளவு? ஒரு நானோ மீட்டர். அதாவது ஒரு மீட்டர் நீளமான பொருளை நூறு கோடி துண்டுகளாகக் கூறுபோட்டால், அதில் ஒரு துண்டின் அளவு. ஈசியாகப் புரிய வேண்டுமானால், இம்மாம் பெரிய உலகத்தை இப்படிக் கூறுபோட்டால் அதன் நானோ துண்டு ஒரு கோலிக்குண்டு சைஸ் தான் இருக்கும்! கதகளி வேஷக்காரன் மாதிரி ஷேவிங் கிரீம் அலங்காரத்தோடு கண்ணாடி முன் நின்று ரேசரை முகத்தை நோக்கி உயர்த்த ஒரு வினாடி நேரம் பிடிக்குமா? அதற்குள் முகத்தில் கூடுதலாக வளர்ந்த முடியின் நீளம் (நீங்கள் ஊகித்தது சரிதான்) ஒரு நானோ மீட்டர்.

நானோ மீட்டர் அளவில் ஒரு பொருளைக் குறுக்கும்போது, அதன் இயல்பான தன்மைகளே மாறிப்போக வாய்ப்பு உண்டு. செம்பு போன்ற உலோகங்கள் கண்ணாடி போல் ஒளியைக் கடத்த ஆரம்பித்து விடும். அலுமினியம் கந்தகம் போல பற்றி எரியத் தொடங்கும். தங்கம் சூடு படுத்தாமலேயே திரவமாக மாறும். எந்த சேதாரமும் இல்லாமல் தகவல் சேகரித்து வைக்க இப்படித் துகளான வைரம் பயன்படும். வைரம் பதித்த கம்ப்யூட்டர் இன்றைய சூப்பர் கம்ப்யூட்டரை விட பல மடங்கு அதிகம் திறனோடு செயல்படலாம். அதுவும் நானோ கம்ப்யூட்டர் தான்.

தங்க முலாம் பூசிய நானோ துணுக்குகளை நோயாளியின் உடலில் செலுத்தினால் அவை கேன்சர் திசுக்களை ஆரத் தழுவிக் கலக்கும். அப்புறம் இந்தத் திசுக்களை சுலபமாக இனம் கண்டு விடலாம். லேசர் கதிர் மூலம் இவற்றை அழிக்கும்போது புற்றுநோயும் ஒழிந்து போகும். மருத்துவம் சந்திக்கவிருக்கும் திருப்புமுனை இது.

அதி சீக்கிரம் இல்லாவிட்டாலும் ரொம்பவே தாமதமாகாமல் வர வாய்ப்பு இருக்கும் இன்னொரு சமாசாரம் நானோ ரோபோ. இந்த இத்துணூண்டு ரோபோக்களை ஊசி மூலம் உடம்பில் செலுத்தினால் ரத்தக் குழாய் வழியாக அவை இதயம், மூளை, சிறுநீரகம் என்று தேவையான இலக்கை அடைந்து விடும். பிறகு, வெளியிலிருந்து டாக்டர் இயக்க, ரோபோ உடம்புக்குள் இருந்தபடியே அறுவை சிகிச்சையை முடித்து, ‘ஆப்பரேஷன் சக்சஸ்’ என்று அறிவித்து விடும். உடலில் பழுதடைந்த திசுக்களை ஊடுருவி அவற்றைப் பழுது பார்க்கவும், அப்படித் திருத்தப்பட்ட நலமான திசுக்கள் பெருகவும் இந்த நானோ யந்திரங்கள் வழி செய்யும்.

நானோ தொழில்நுட்பத்தை வாவா என முதலில் வரவேற்றது வர்த்தகத் துறைதான். அதுவும் அழகு சாதன உற்பத்தி என்ற காஸ்மெடிக்ஸ் துறை. ஒன்றோடு ஒன்று கலக்காத இரண்டு திரவங்களை ஒரே குப்பியில் சேர்ந்து இருக்கச் செய்ய நானோ துணை செய்தது. விலை அதிகம் தான். வாங்கி மேலே பூசிக் கொண்டால் சருமம் மினுமினுப்பாக இருக்கும் என்று ஆசை காட்டுகிறார்கள்.

எந்தப் பொருளையும் குறுக்கி அதன் ஒரு துகளை அணுத் திரளாக வடிக்க நானோ டெக்னாலஜி கை கொடுத்தால் அடுத்து என்ன? அப்படியான துகளைத் திருத்தி அமைத்து ஒன்றிலிருந்து பலவாக அணுத் திரள்களைப் பெருக்கி (சூப்பர் மாலிக்யூல்) அதே பொருளின் சீரான வடிவத்தை அமைத்து விடலாம். வேளாண்மைத் துறை வளர்ச்சிக்கு இது காரணமாகலாம். நீர்ப் பாசனம் குறைவாக இருந்தாலும் அதிக மகசூல் தரும் நெல்லை நானோ டெக்னாலஜி மூலம் கண்டு பிடித்தால் விவசாயப் பெருங்குடி மக்கள் விஞ்ஞானத்தை மனமாற வாழ்த்துவார்கள்.

நானோவில் அபாயமும் உண்டு. இருட்டிலும் தெளிவாகப் பார்க்கும் கண், மின்னலைகளை ஒலியலைகளாக மாற்ற முடிந்த காதுகள் இவையெல்லாம் நானோ தொழில்நுட்பம் மூலம் சாத்தியமாகலாம். அப்புறம் எப்.எம் ரேடியோ இல்லாமலேயே பண்பலையில் ஒலிபரப்பாகும் ‘விஸ்வரூபம் 2’ பாட்டு கேட்க முடியும்தான். ஆனாலும், ராணுவத்தில் இதன் பயன் அதிகம். தலையில் ராடார் காது முளைத்து முதுகில் எக்ஸ்ட்ரா கண் உள்ள வீரர்கள் குண்டு துளைக்க முடியாத மார்போடு போர்முனையில் பாய்ந்து வருவதை நினைத்துப் பாருங்கள். கொஞ்சம் பயமாக இல்லையா?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன