ஐயப்பனின் கடைசிக் கவிதை

 

இன்னொரு மலையாளக் கவிஞர் இறந்தார்.

‘அய்யப்பன் விடபறஞ்ஞு ஆரோருமறியாதெ’ என்று மாத்ருபூமி முதல் பக்கத்தில் துக்கம் பங்கு வைத்ததில் என்னை பாதித்தது இந்த ‘யாருக்கும் தெரியாமல்’ தான்.

அனாதையான அறுபத்தொன்று வயதுக்காரனாக திருவனந்தபுரம் தம்பானூர் ஸ்ரீகுமார் தியேட்டர் பக்கம் விழுந்து கிடந்திருந்த ஐயப்பனை போலீஸ்காரர்கள் ஜெனரல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும் போதே அவர் அஃறிணை ஆகியிருந்தார். அது வியாழன் (21-10-2010) மாலை. ‘அனாதைப் பிணம்’ என்று முத்திரை குத்தி சவக்கிடங்கில் கிடத்தியிருக்கிறார்கள். அங்கே தலைமை நர்சம்மாவும், தோட்டத்தில் புல் வெட்டும் தொழிலாளியும் இலக்கியப் பரிச்சயம் உள்ளவர்கள் (மலையாள பூமியில் இதெல்லாம் மாந்திரீக யதார்த்தமாக நடந்தேறும்). அவர்கள் சம்சயப்பட்டு மார்ச்சுவரி பொறுப்பாளரிடம் ‘இவர் கவிஞர் ஐயப்பன்’ என்று சடலத்தை அடையாளம் காட்டியிருக்கிறார்கள்.

சில ஆண்டுகள் முன் இதேபோல் தெருவில் விழுந்து கிடந்து அதே ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிக் கொஞ்ச நாள் சிகிச்சை பெற்றிருக்கிறார் ஐயப்பன். அப்போது அவர் கவிதை சொல்லி நட்பாக்கிக் கொண்ட இலக்கிய ரசிகர்கள் இந்த மருத்துவமனை ஊழியர்கள்.

ஐயப்பனின் முழுக்கை சட்டையில் இடது புறம் சுருட்டி விட்டிருந்த கைமடிப்பில் 355 ரூபாயும் கவிதை கிறுக்கி வைத்த துண்டுக் காகிதமும் கிடைத்தது. அவருடைய கடைசிக் கவிதை.

பல்லு
—–
அம்பு ஏது நிமிஷத்திலும்
முதுகில் தறய்க்காம்
ப்ராணனும் கொண்டு ஓடுகயாணு
வேடன்றெ கூர கழிஞ்ஞு
ராந்தல் விளக்கினு சுற்றும்
என்றே ருசியோர்த்து
அஞ்செட்டுப் பேர் கொதியோடெ
ஒரு மரவும் மற தன்னில்ல
ஒரு பாறயுடெ வாதில் துறன்னு
ஒரு கர்ஜனம் ஸ்வீகரிச்சு
அவன்றெ வழியில் ஞான்
இரயாயி
நீயென்னெப்போலெ
என்னெ விட்டியாயிக்காணு (தெளிவில்லாத எழுத்துகள் இங்கே)
முற்றத்தெ வெயிலின் (தெளிவில்லாத எழுத்துகள் இங்கே)
நீயும் புதப்பு.

அம்பு எந்த நிமிடத்திலும்
முதுகில் தைக்கலாம்
உயிரைக் கையில் பிடித்தபடி ஓடுகிறேன்
வேடனின் கூரையைக் கடந்து
ராந்தல் விளக்கைச் சுற்றி
என் உடம்பின் சுவையை நினைத்து
ஏழெட்டுப்பேர் ஆசையோடு காத்திருக்கிறார்கள்
ஒரு மரமும் மறைவிடம் தரவில்லை
ஒரு பாறை வாசல் திறந்தது
ஒரு கர்ஜனை வரவேற்றது
அந்த மிருகத்தின் வழியில் நான்
இரையானேன்
நீ என்னைப்போல்
என்னை முட்டாளாகப் பார்
முற்றத்து வெய்யிலில்
நீயும் போர்வை

கவிதை கிறுக்கிய துண்டுசீட்டு கண்டோன்மெண்ட் போலீஸ் பாதுகாப்பில்.

ஐயப்பனின் உடல் இன்னும் திருவனந்தை சவக்கிடங்கில் தான்.

திங்கள் சகல மரியாதைகளோடும், அமைச்சர் பேபி சார்த்தும் மலர் வளையத்தோடும் தகனம் செய்யப்படும்.

அவர் உயிரோடு இருந்தால் இன்று சென்னையில் இருப்பார். இந்த ஆண்டு ஆசான் நினைவு கவிதைப் பரிசு வாங்குவதற்காக மருமகனோடு சென்னை வரவேண்டியவர் இப்படி அனாதையாக இறந்து கிடக்க வைத்த விதியை நொந்து கொள்ள வேண்டியதுதான்.

இரண்டு வருடம் முன் என் மதிப்புக்குரிய மலையாள எழுத்தாளர் டி.ஆர் அனாதையாக மரித்தபோதும் இதே போல் தான் துக்கம் ஏற்பட்டது. அதென்னமோ, ஒரு பகுதி மலையாளப் படைப்பாளிகளை இந்த death wish ஆட்டிப் படைக்கிறது. நல்ல படைப்பாளி, உடலை, சொந்த வாழ்க்கையை, சுற்றத்தினரின் வாழ்க்கையை வெகுவாகப் பாதித்து நரகமாக்கி யாருமறியாமல் இறந்து போதல், கொண்டாடப்படுதல் என்பது இவர்களுக்கு விரும்பி ஏற்ற மார்க்கமாகப் போய்விடுகிறது.

இன்னொரு பக்கம் பொருளாதார ரீதியாக பாதுகாப்பான நிலையில் இருந்து இலக்கிய விசாரத்தில் ஈடுபடுகிறவர்கள் – வங்கித் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற சேது, பேராசிரியர் பால் சக்கரியா, ஐ.ஏ.எஸ் அதிகாரி என்.எஸ்.மாதவன், மனையின் சொத்தும் சோதிடப் புலமையும் கொண்ட விஷ்ணு நாராயணன் நம்பூதிரி இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு முதல் கட்சியில் இருந்து அடுத்ததற்கு மாறியவர். ஓர் ஓண தினத்தில் பசியோடு சிநேகிதியின் வீடு என்றே தெரியாது உணவை யாசித்து பிச்சை கேட்ட வேதனையான அனுபவம் அவருக்கும், அவரை விட, அவர் கவிதை மேல் அபிமானம் வைத்த சிநேகிதிக்கும் உண்டு. அரவிந்தனின் ‘போக்குவெய்யில்’ மூலம் ஏற்பட்ட சினிமா பிரவேசம அவரை மாற்றிவிட்டது. கவிதையும் மதிக்கப்படுகிறது. ஜெயராமுக்கு அண்ணனாக கமர்சியல் சினிமா நடிகராகவும் இருக்கிறார்.

ஐயப்பனுக்கு போக்குவெய்யில் கிட்டவில்லை. அவரையும் சேர்த்துப் பொசுக்கிய வெய்யிலாகி விட்டது தம்பானூரில் ஒரு அக்டோபர் பகல் காலம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன