அச்சுதம் கேசவம் – அத்தியாயம் 4

புது நாவல் அச்சுதம் கேசவம் – அத்தியாயம் 4

(வைத்தாஸ் எழுதும் நாவலில் இருந்து)

குஞ்ஞம்மிணி என்றான் வைத்தாஸ்.

ஆராக்கும்? மேல்சாந்தி கேட்டார்.

வாசலில் யாராவது பெண்பிள்ளை இவனோடு வந்து காத்திருக்கலாம். ஸ்திரி. உறவு அதில்லாத பட்சத்தில் கரிசனமான அண்டை அயலாரோ, ஆப்பீஸில் கூட வேலை பார்க்கிறவர்களோ. கோவிலுக்குப் போகிறேன் என்றபோது கூடவே வந்திருப்பார்களாக இருக்கும். மழை நேரத்துக் குட்டநாடு பற்றி, ஈரமும், சேறும், தணுத்த காற்றும், சகல இடத்திலும் கவிந்திருக்கும் வலை வாடை, செம்மீன் வாடை பற்றி எல்லாம் அறியாதவர்கள். அல்லது நிறையக் கேள்விப்பட்டு, மிக விரும்பி, எல்லாத் துன்பமும் தூசென்று ஒதுக்கி, சுகானுபவத்தை மட்டும் குறி வைத்து வந்தவர்கள். யாருமாகட்டும். வந்தவர்கள் உள்ளே வருவதே முறை. முழுக்க நனைந்து கொண்டு அவர்கள் வாசலில் காத்திருக்க, வந்தவனோடு உபசார வார்த்தை பேசுவது நற்செயலில்லை.

குஞ்ஞம்மிணி தான் அனுப்பி வைத்தாள்.

வைத்தாஸ் அர்த்த கனம் இல்லாத வெறும் தகவலாகச் சொன்னான்.

வாசல்லே இருந்தா உள்ளே வரச் சொல்லலாமே.

மேல்சாந்தி வயசு வித்தியாசம் கருதாது, வந்தவனுக்கு முழு மரியாதை வழங்கி விண்ணப்பித்தார்.

இல்லை. யாரும் இங்கே என் கூட வரவில்லை.

வைத்தாஸ் சொன்னான்.

பெயர் சொன்ன மாதிரி இருந்ததே.

ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள, மரியாதை கொஞ்சமும் விலகாமல் கேட்டார் மேல்சாந்தி.

ஆமா, குஞ்சம்மிணி. அவளை எனக்கு போன மாதம் என் தகப்பனார் பரிசயப்படுத்தி வைத்தார். குஞ்சம்மிணி உடம்பு இல்லாமல் அலைகிறாள் இன்னும்.

வைத்தாஸ் சொல்ல, அவர் சிவசிவ என்று பலமாக உச்சரித்துக் காதுகளைப் பொத்திக் கொண்டார்.

அந்தத் தகவலோடு ஆரம்பிக்கலாம் என்று பட, வைத்தாஸ் மேல்சாந்தியைப் புன்னகையோடு பார்த்தான்.

ஒரு ஐந்து நிமிடம் உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளலாமா?

அவன் கேள்விக்கு உதடுகளை இறுக மூடி, தலையை இடவலமாக அசைத்தார் மேல்சாந்தி. சொல்லு, கேட்போம் என்று உத்தரவானதாக உணர்ந்த வைத்தாஸ் எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தான். நந்தினி கூட வந்திருந்தால் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லியிருப்பாள் தான். வர மாட்டேன் என்று ஆலப்புழை படகு வீட்டிலேயே மழைக்கு இதமாகச் சுருண்டு படுத்துக் கிடக்கிறாள் அவள்.

சுருக்கமாக. அதுதான் செய்ய வேண்டியது. அப்பனோடு, அந்த வரதராஜ ரெட்டியோடு தொடங்கலாம் என்று முடிவானது.

இரண்டு வாரத்துக்கும் முந்திய காலத்துக்குக் கடந்தான் அவன்.

வைத்தாஸே இவனை உனக்குப் பரிச்சயப்படுத்தி வைக்கிறேன்.

இப்படித்தான் லண்டனில் இரண்டு மாதம் முன்பு ஒரு காலைப் பொழுதில் வரதராஜ ரெட்டி தன் மகனுக்குக் குஞ்ஞம்மிணியை அறிமுகப்படுத்தி வைத்தது.

வைத்தாஸ் ரெட்டி என்ற வெளிநாட்டு அரசு அதிகாரி ஆங்கிலேய துரைத்தனத்துக்கு வேண்டுகோள் விடுக்க வந்திருந்தான். சின்னஞ்சிறு கடல் தீவு நாடு. கரும்பு விளைச்சலும், சர்க்கரை உற்பத்தியும், கடனுமாகக் கழிகிறது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் தயவு வேண்டி இருக்கிறது. மதியம் துரைகள் தரிசனம் தரச் சம்மதித்திருக்கும் சுப தினம் அது.

லண்டன் பாதாள ரயில் போக்குவரத்து ஊழியர்கள் பணி முடக்கிய தினமும் அதுவாக அமைந்து போனது. மூடுபனி அதிகமாகவே ஜன்னல் கண்ணாடிகளிலும், பிக்கடலி வீதிக் கடைகளில் கண்ணாடி அலமாரிகள் மேலும் அப்பிய நாள் அது.

மதியத்துக்கு முன் ஓவியக் கூடத்தில் ஒன்றிரண்டு ஓவியங்களைப் பார்த்து வர உத்தேசம். புத்தகங்களில் மட்டும் தேசலான பிரதியாகக் கண்டது அது எல்லாம்.

வைத்தாஸ் இன்னும் ஆள் அரவம் மிகாத தெருவில் மெல்ல நடந்து போய்க் கொண்டிருந்தான். லண்டன் வாசிகளின் உடுப்பு அலங்காரத்தோடு, கையில் அலங்காரமாகவும், உபயோகிக்க வசதியாகவும் குடை ஒன்றையும் அவன் சுமந்து போயிருந்தான். நடக்க லகுவாகவும். சுகமாகவும், சற்றே துக்கமாகவும் உணரந்த காலை அது.

பனிக்கு நடுவே சின்ன தூறல் காற்றை முகத்திலும் தலையிலும் செல்லமாக வேண்டாம் என்று மறுத்தபடி வாங்கிக் கொண்டு அவன் க்ரீன் பார்க் ரயில் நிலையத்தை ஒட்டிய முடுக்குச் சந்தில் காலடி எடுத்து வைத்தபோது, தரையில் வைத்திருந்த பத்திரிகைப் பொதி தட்டித் தலை குப்புற வீழ்ந்தான்.

முன்னால் போய்க் கொண்டிருந்த இரண்டு மூதாட்டிகள் பதற்றமாகித் திரும்ப வந்து வைத்தாஸை நோக்கிக் குனிந்து கீழே கை நீட்டியபடி புகைப்படத்துக்கு நிற்பது போல் உறைந்தார்கள். அந்த நிமிடம் அவர்களால் வேறெதுவும் செய்திருக்க முடியாது என்பது புரிபட அனுதாபமும் குழப்பமும் கழிவிரக்கமுமாக அவர்கள் சாய்ந்து நின்ற அந்தக் கணம் வைத்தாஸை நிற்கச் சொன்னது.

இன்றைக்கு ரயில் ஓடாது என்று கிரீன்பார்க் ரயில் நிலைய மாடிப் படிக்கட்டில் நின்று திரும்பத் திரும்ப அறிவிப்பு செய்து கொண்டிருந்த தேசலான ரயில் உத்தியோகஸ்தன் வைத்தாஸை ஓட்டலை நோக்கித் திரும்பி நடக்க வைத்தான்.

வைத்தாஸ் எழுந்து, தினசரி விழுவதும் எழுவதுமே வாடிக்கையான ஒன்று என்றும் அதெல்லாம் இல்லாது நடக்க மட்டும் முடிந்த தினங்கள் உப்புச் சப்பற்று உருள்கிறவை என்றும் பிரகடனம் செய்யும் முகக் குறிப்போடு வந்த வழியிலேயே நடக்க ஆரம்பித்தான்.

முகமும் இருப்பும் தெரியாமல் சூழ்ந்து இருக்கும் யாரிடமோ மன்றாடினான் அவன்.

நான் இங்கே இந்த மாநகருக்கு அரசாங்க வேலை நிமித்தம் வந்திருக்கேன். மகாராணியையும் பிரதமரையும் தவிர கீழ் மட்டத் தெய்வங்கள், தேவதைகள், பிசாசுகள் என்று எல்லோரையும் சந்தித்து நான் பிறந்த நாட்டு சர்க்கரை ஆலைகள் அனுப்பும் டெமூரா பழுப்புச் சர்க்கரையை அட்டியின்றி வாங்கிக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்தனைகளைச் செலுத்த வேண்டிய கடமை எனக்கு உண்டு.

ஆப்பிரிக்க நாடுகளில் அழுக்கைப் பயிரிட்டு, அழுக்கைப் பிழிந்து காய்ச்சி, அழுக்கான கை கொண்டு ஆழக் கிளறி, அழுக்கான சர்க்கரையை உற்பத்தி செய்கிறார்கள். பயிரிடுவதில் தொடங்கி, டெமோரா சர்க்கரைக் கட்டிகளைக் கையால் நொறுக்கிப் பொடி செய்து பொட்டலம் கட்டி அனுப்பும் வரை சூழலில் இருக்கப்பட்ட எத்தனையோ கிருமிகள் ஆப்பிரிக்க உக்ரத்தோடு அந்த இனிப்புப் பதார்த்தத்தை அசுத்தப் படுத்துகின்றன.

பிரிட்டானிய துரைத்தனம் ஏற்க இயலாத நிலைமை இது என்று திட்டவட்டமாக அறிவித்துப் போட்டார்கள். என்றாலும் மன்றாடிப் பார்க்க எங்கள் சர்க்கார் என்னைப் பிரதிநிதியாக அனுப்பியது. இன்று மதியம் துரைத்தன அதிகாரிகளை சந்திக்க வேணும். அதற்குள் டிரபால்கர் சதுக்கத்தில் ஓவியக் கூடம் போய் மனசுக்கு இதமான சில ஓவியங்களைப் பார்க்க உத்தேசம். திருமணமா, ஈமச் சடங்கா என்று புலப்படாமல் இருக்கும் ஓவியம் ஒன்றை முக்கியமாகக் காண வேண்டும். அது நடக்குமென்று தோன்றவில்லை. அரசாங்க வேலைக்கு இன்னும் நாலு மணி நேரம் இருக்கிறது. அது வரை என்ன செய்யட்டும்?

எழுது என்றார்கள் முன்னால் நடந்தவர்கள். எழுது என்றது குளிர்ந்த காற்றும் திரும்ப ஆரம்பித்த சிறு மழையும்.

லண்டன் மூடுபனிக்கும், பாதாள ரயில் சேவை ஊழியர்கள் பணி முடக்குக்கும் நன்றி சொல்லி அவன் டைப் ரைட்டரில் தன் அடுத்த நாவலின் முதல் அத்தியாயத்தை எழுத ஆரம்பித்தபோது நேரம் காலை ஒன்பது மணி பதினேழு நிமிடம்.

குஞ்ஞம்மிணி.

அவன் விரல்களை இயக்கியபடி அப்பன் வரதராஜ ரெட்டி இரண்டு நாள் தாடியும், அழுக்கான கால் சராயும், தோளில் துணிப் பையுமாகப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். துணிப்பை பிதுங்கி வழிய வழிய உள்ளேயிருந்து மக்கிப்போன காகிதங்கள் அடைசலாக எட்டிப் பார்த்தன.

நான் போகணும் வைத்தாஸே. சேர்ப்பிக்க வேண்டிய கடுதாசி ரொம்ப இருக்கு.

வைத்தாஸ் குறுஞ் சிரிப்போடு பக்க வாட்டில் திரும்பி அப்பனைப் பார்த்தான். நல்ல உயரம். கருப்பு இல்லாமல், வெளுத்த தோலுமில்லாமல் உடல் நிறம். அமெரிக்கப் பழங்குடியினரில் சிலருக்கு இப்படியான தோல் உண்டு.

அவா இருக்கடுமடா வைத்தாஸே. செகப்புத் தோல்னு ஊர்லே சொல்வா. இதை வச்சு நான் போட்ட ஆட்டம் இருக்கே. அதெல்லாம் உனக்கு வேணாம்.

அப்பன் இறந்து போயிருந்தாலும் பழசை ஒரு துரும்பு கூட மறக்கவில்லை. திடீர் திடீரென்று, முக்கியமாக வைத்தாஸ் எழுத உட்காரும் போதெல்லாம் வந்து விடுகிறான்.

குஞ்ஞம்மிணினு போட்டியோ வைத்தாஸே. நான் போக வேண்டி இருக்கு.

அவன் பொறுமையில்லாமல் வைத்தாஸின் போர்ட்டபில் டைப்ரைட்டரைக் கொஞ்சம் அசைத்தான்.

எழுதிட்டேன். அது யாரு குஞ்ஞம்மிணி?

வைத்தாஸ் கேட்டான். இப்படியும் ஒரு பெயர் தமிழில் இருக்குமா? அவனுக்குத் தெரியவில்லை. மலையாளமாக இருக்குமோ?

மலையாளமே தான். ஆனால் தமிழ் பேசுகிற குடும்பங்களில் புழங்குற பெயர்.

அப்பன் விளக்கம் சொன்னான். அவனுக்கு எப்படி மலையாளம் பரிச்சயமானது என்று வைத்தாஸ் கேட்க நினைத்தான். வேணாம். கேட்டால் அப்பன் வேறு கிளை பிரிந்து பேச ஆரம்பித்து விடுவான்.

குஞ்ஞம்மிணி எழுபது வருஷம் முந்தி பரத கண்டத்தில் ஜீவிச்சவள். அவ தகப்பன் பெயர் மகாதேவய்யன். தாயார் பர்வதவர்த்தினி அம்மாள். கொல்லூர்ங்கற பேரிலே ஒரு தேவி ஷேத்ரம் இருக்காம் மலையாள பூமியில். அங்கே போகற நேரத்தில் குடும்பத்தோடு தொலைஞ்சு போனவள்.

இதை வச்சு நான் நாவல் எழுத முடியாது. கொல்லூர் போய் கேட்டு வந்து புராணம் வேணுமானல் எழுதலாம்.

வைத்தாஸ் முடிக்கும் முன் அப்பனின் குரலை அமர்த்திய படி சோகையான ஒரு பெண்குரல்.

இங்கேயே உக்காந்து பிருஷ்டத்தைத் தேச்சா உடுப்பு தான் நையும். கிளம்புடா கொழந்தே. ஒரு விசை அங்கெல்லாம் போய்ட்டு வா. எழுதினது எழுதின படிக்கு போகறது போகற படிக்கு நடக்கும். கிளம்பு. நான் இருக்கேன்.

துறுதுறுவென்று துள்ளிக் குதித்தபடி ஒரு சின்னப் பெண் டைப் ரைட்டர் விசைகளுக்கு நடுவே ஓடி காகிதத்தில் படுத்துச் சிரித்தாள். குழந்தை என்று கூப்பிட்டது அவள் தான்.

குஞ்ஞம்மிணி வைத்தாஸை மனதில் ஒரு நினைப்பாக, காட்சியில் ஒரு சிறு பிழையாக, ஓசை வித்தியாசமாக, பழகிய மணத்திலும் வாடையிலும் படர்ந்த மாற்றமாக வெளிப்படுத்திக் கொண்டு நடத்திப் போகிறாள்.

மழையிலும் விடாமல் சரித்திரம் தேடி நடக்கும் காலிலும் அவள் உண்டு.

வைத்தாஸ் இதுவரை சொல்லிப் போனதை நிறுத்தி மேல்சாந்தியை ஏறிட்டான். இங்கிலீஷில் சொன்னது அட்சரம் நழுவாமல் கேட்டுக் கொண்டார் அவர்.

சட்டென்று நிமிர்ந்து பார்த்துக் கேட்டார்.

குஞ்ஞம்மிணி என் கிட்டே சரித்திரம் கேட்கச் சொல்றாளா, சோழி எறிந்து பழசும் புதுசுமா மனசிலேருந்து வருத்தித் தரச் சொல்றாளா?

சரித்திரத்தையும் சோழி சொல்லாதோ என்றான் வைத்தாஸ்.

அதானே.

புதுசாக இடி ஒன்று வாசலில் சத்தமிட்டது.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன