அச்சுதம் கேசவம் – புதுடெல்லி அத்தியாயம் 5

அச்சுதம் கேசவம் – புதுடெல்லி அத்தியாயம் 5
இரா.முருகன்

ஜனவரி 12, 1964 ஞாயிற்றுக்கிழமை

பகல் நேரம் ஒரு பத்து நிமிடம் சர்வ வியாபகமான தூற்றலோடு வந்தது. தூறல் நின்றபோது பஞ்சுப் பொதியை அப்பினாற்போல் மூடுபனி கவிய ஆரம்பித்தது.

சின்னச் சங்கரன் இரண்டு நூதன் ஸ்டவ், ஒரு மோடா, முக்காலி, ராஜகுமாரிக்கு உறக்கம் வர குந்தன்லால் சைகால் பாடிய பழைய கிராமபோன் ரெக்கார்ட், தாராசிங்க் உடுத்திக் கொண்டாலும் இன்னும் தாராளமாக இடம் இருக்கும் கதர் பைஜாமா, அதே படிக்கான கதர் ஜிப்பா என்று வீட்டுக் கூடத்தில் களேபரமாக இரைந்து கிடந்ததற்கு நடுவே நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தான். காதுக்குப் பக்கம் வைத்திருந்த டிரான்சிஸ்டர் ரேடியோவின் குமிழ்களை அவன் திருக, இடைவெளி விட்டு விட்டு ஷெனாய் சங்கீதம் நிரம்பிக் கொண்டிருந்தது. சவலைக் குழந்தை நினைத்து நினைத்துக் கேவி அழுகிற துக்கம் அது. சங்கரனுக்கு அப்படித்தான் அர்த்தமாகிறது.

ஷெனாய் இல்லாவிட்டாலும், தில்லியின் மூடுபனி நேரங்கள் இனம் புரியாத சோகத்தை ஏற்படுத்துகிறவை. அதுவும் விடுமுறை நாளில் அடரும் குளிர்.

கிரிக்கெட் கமெண்டரியை போடுவேனாங்கறான் கடன்காரன்.

சின்னச் சங்கரன் முணுமுணுத்தபடி டிரான்சிஸ்டரை நிறுத்தி, கையில் இருந்து இறக்கிப் பக்கத்து முக்காலியில் வைத்தான்.

மதராஸ் பட்டணத்தில் இங்கிலாந்தும் பாரத தேசமும் மோதுகிற உன்னதமான கிரிக்கெட் பந்தயம். மூன்றாம் திருநாளில் பாரிங்க்டன் துரை மட்டை பிடித்து எழுந்தருளியிருக்கிறார். அவர் கைவண்ணம் கமெண்டரியாக வந்தது யார் சாபமோ, எப்போதைக்கெப்போதுமாகத் தடைப்பட்டு நின்றே விட்டது.

கிரிக்கெட் வர்ணனை இல்லாததற்கு வருந்த முடியாது. குளிர் தரும் துக்கமே போதும் சின்னச் சங்கரனுக்கு.

பனி எங்கேயும் துக்கத்தையும் வலியையும் தான் சுமந்து வருகிறது. அது வேண்டி இருக்கிறது. இஞ்சி தட்டிப் போட்டு சாயா குடித்தபடி துக்க நினைவுகளில் மூழ்கும்போது உறக்கம் வருகிறது. உட்கார்ந்த படிக்கே உறங்க உடனே எழுப்பி நேரத்தை முழுக்க வீணாக்கி விட்டதாகக் குளிரானது குற்ற போதத்தைத் தருகிறது. இப்படியே மிச்ச ஆயுசை உட்கார்ந்து உறங்கியோ இல்லை மூச்சை நிறுத்தியோ முடித்துக் கொண்டு விடலாம் என்று உச்ச கட்ட துயரத்தில் தோன்றுகிறது. எதற்கு வருத்தப்பட்டோம் என்பது உடனே மறந்து போகிறது.

பனியும் குளிரும் இப்படி எல்லாம் சுபாவத்துக்கு அந்நியமாக நினைத்து மனம் கனக்க வைக்கிற ஆச்சரியத்தோடும் கையில் பிடித்த காலி கோப்பையோடும் சின்னச் சங்கரன் வீட்டு முன் முற்றத்தைப் பார்த்தான்.

முற்றத்தில் ஒரு மயில் ஆடிக் கொண்டிருந்தது.

என்ன அபத்தம். பனியும், இஞ்சி தட்டிப் போட்ட சாயாவும் இதையெல்லாம் கண்ணில் கொண்டு வந்து கற்பனையாக நிறைக்கிற ஆச்சரியத்தை வசந்தியிடம் சொல்ல வேண்டும்.

வசந்தி வசந்தி.

வசந்தி சமையல் கட்டில் இருந்து எட்டிப் பார்த்தாள்.

அய்யோ, எத்தனை அழகு பாருங்கோ சத்தம் போட வேணாம். அது பறந்துடும்.

ஆக மூடுபனி போல, மயிலும் அசல் தான்.

காலி கோப்பையை ஒரு வினாடி அன்போடு பார்த்து விட்டு கடைசி சில துளி சாயாவையும் வாயில் கவிழ்த்தபடி மயிலைப் பார்க்க ஆரம்பித்தான் சங்கரன்.

தில்லி அப்பர் டிவிஷன் குமாஸ்தாக்கள், கொஞ்சம் போல் மேம்பட்ட செக்‌ஷன் ஆபீசர் வகையறா சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்காகக் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேராக வந்திறங்கி ஆடும் மயில்.

வஞ்சனையில்லாமல் தாராளமாக இடம் ஒதுக்கி சிட் அவுட், இரண்டு பெரிய அறைகள், படுக்கை அறை, விசாலமான சமையல் அறை என்று ஒரு குடும்பத்துக்கு சௌகரியமான வாழ்க்கையை தத்தம் செய்யும் அமைப்பு இந்தக் குடியிருப்பு எல்லாம். குழாயைத் திறந்தால் யமுனை நதி பிரவாகமாக கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. குழாயில் அல்பமான வாஷர் போனால் கூட நாலு மாடிக் குடியிருப்பும் வெள்ளத்தில் மூழ்கி விடும் அபாயம்.

சீட்டு குலுக்கிப் போட்டு இடம் ஒதுக்கியதில், தகவல் ஒலிபரப்பு மந்திரி காரியாலயத்தில் பதினைந்து வருடம் முன்பு கடைநிலை குமாஸ்தாவாகச் சேர்ந்த சின்னச் சங்கரனுக்கு, அவன் வேலைக்குச் சேர்ந்த அடுத்த வருடம், லோதி ரோடு குடியிருப்பில், கீழ்த் தளத்திலேயே வீடு ஒதுக்கப்பட்டது. அவன் கல்யாணத்துக்கு அதுவும் ஒரு அடிஷனல் குவாலிபிகேஷனாக அமைந்து போனது.

அரன்மணை மாதிரி வீடு. மேலே மூணு மாடியிலே தலப்பா கட்டின சிங்கும், மூணு வேளையும் மீன் திங்கற வங்காளியும் இருந்தாலும், கீழே காம்பவுண்ட் சுவர் வரை நம்ம ராஜ்ஜியம் தான். வசந்தி அழகா வாசல் தெளிச்சு கோலம் போட்டு வைக்கலாம்.

வசந்தி வீட்டில் சந்தோஷப்பட்டது அவன் வீட்டுக்காகவும் அப்புறம் போனால் போகிறது என்று அவன் மாப்பிள்ளையாகக் கிடைத்ததற்கும் என்றானது.

வீட்டு முன் முற்றத்தில் வசந்தி காலையில் போட்ட அந்த நீள் சதுரக் கோலத்தின் சரியான மத்தியில் நின்றுதான் மயில் ஆடிக் கொண்டிருக்கிறது. மூணு வேளை இல்லாவிட்டாலும் ரெண்டு வேளையாவது அவள் ரொட்டி தான் செய்கிறாள். மேல் மாடி பஞ்சாபிப் பெண் அவளிடம் இருந்து இட்லி செய்வதைக் கற்றுக் கொண்டு வாரக் கடைசியில் இட்லி தோசை என்று அமர்க்களப் படுத்துகிறாள். வசந்திக்கும் கொண்டு வந்து கொடுத்து தரத்தைப் பரிசோதிக்கச் சொல்லிக் காத்திருக்கிறாள்.

வர்ணம் பளிச்சிடும் தோகையைப் பார்த்த சங்கரனின் பார்வை மயிலின் முகத்தில் நிலைத்தது. ஐயோ. எவ்வளவு பயங்கரம். இவ்வளவு பெரிய அலகு எதை, யாரை குத்திக் கிழித்துக் கொல்ல? ஆட்டத்தின் அழகு எல்லாம் நாசத்தில் முடியவா?

மயில் ஆட்டத்தை நிறுத்தியது. சங்கரனைப் பார்த்து இன்னிக்கு அம்புட்டுத்தான் என்று சொல்கிறது போல் பின்னால் திரும்பி நின்றது. அப்புறம் ஜிவ்வென்று சற்றே பறந்து காம்பவுண்ட் சுவர் மேல் உட்கார, சங்கரனுக்கு பிராணன் போய் வந்தது. பறக்கும் போது காலின் நகங்களின் கூர்மை ஏற்படுத்திய பிராண பயம் அது.

பறக்கிற எதைப் பார்த்தாலும் பயமாக இருக்கிறது. பாத்ரூமில் கரப்பான் பூச்சியில் இருந்து நடு வானத்தில் கம்பீரமாகப் போகிற கருடன் வரை. கருடன் வரும்போது நகத்தைச் சொறிந்து சங்கு சின்னம் வந்துடுத்தா என்று சின்ன வயதிலே பார்த்தது கூட இப்போது முடியாத காரியம். இத்தனைக்கும் எந்தப் பறவையும் அவனை ஏதும் செய்ததில்லை. கனவிலும் கழுகுகள் வந்து கண் பக்கம் அலகை அசைக்க, அலறி அடித்து எழுந்திருக்க வைக்கும் ராத்திரிகள் அவனுக்கு அனுபவமானவை.

ஒரு முறை மயில் நீட்டி முழக்கி அகவியது. அந்தக் குரல் சாவின் எதிரொலி போல மூடுபனியைக் கிழித்துக் கொண்டு குடியிருப்பு முழுக்க சில வினாடிகள் ஒலித்து நீண்டது.

மேலே இருந்து பைஜாமாவும் சிவப்பு ஸ்வெட்டருமாக வந்த சர்தார் குர்னாம் சிங் சங்கரனின் தாடையைத் தொட்டான்.

அரே ஷங்கர், மயிலுக்கு இட்லி தோசை எதுவும் கொடுத்து பழக்கப் படுத்திடாதே. அப்புறம் அது இங்கேயே நாள் பூரா குட்ஸ் ரெயில் போல விசில் ஊதிட்டு நிக்கும்.

சங்கரன் சிரித்தபடி தாடையை ஸ்வெட்டர் தூங்கிய தோள்பட்டையில் துடைத்துக்கொண்டான்.

கிரிக்கெட் என்ன ஆச்சு தோஸ்த்?

குர்னாமுக்கும் தெரிய வேண்டிய தகவல். உலகத்துக்கே தெரியணும். பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவுக்கு மட்டும் புலப்படாத ஒன்று. அதன் முக்கியத்துவம் தெரிந்தால் சங்கரன் உத்தியோகம் பார்க்கும் தகவல் ஒலிபரப்பு மினிஸ்டரிக்குச் சொத்தை சொள்ளை என்று இல்லாமல், தகுந்த மந்திரியை நியமித்திருப்பார்.

சங்கரன் கிரிக்கெட் வரலை என்றதும் துக்கம் பகிர்ந்த குர்னாம் உள்ளே எட்டிப் பார்த்தான்.

என்னய்யா, வீடு காலி பண்றியா?

ஆர்வத்தோடு குர்னாம் விசாரித்த போது மயில் அவன் தலைப்பாகைக்கு மேலே தோகை விசிறியடித்தபடி எவ்விப் பறந்து போனது. ஒரு வினாடி அரண்டு, நிஜாருக்குள் அசுத்தம் பண்ணிக் கொண்ட குழந்தை போல சிரித்தான் குர்னாம்.

ஊருக்குப் போக வேண்டியிருக்குப்பா.

குர்னாமிடம் ஊரில் அப்பா இறந்து போய் முதல் வருஷ திவசம், அது முடிந்து, எப்போதோ வேண்டிக் கொண்டபடி குன்னக்குடியில் பால்குடம் எடுப்பு, சருகணி மாதா கோவில் பிரார்த்தனை, பூர்வீக வீட்டில் கொத்துப் பணி, தச்சுப் பணி, முத்துப்பட்டியில் வெள்ளரித் தோட்ட விளைச்சலிலும் விற்ற பணத்திலும் குத்தகைக்காரனிடம் அரையே அரைக்கால் பங்கு கோருதல், சிவன் கோவில் பிரதோஷ பூஜை, சாமி புறப்பாடு கைங்கரியம், பள்ளிக்கூடத்தில் அப்பா பெயரில் எண்டோமெண்டாக ஆயிரம் ரூபாய் கொடுத்தல் இதெல்லாம் நிகழ்ச்சி நிரலில் உண்டு என்று சொல்லத் தோன்றவில்லை.

ஒரு மாசம் வீட்டைப் பூட்டி வைப்பேன்னு சொல்லு.

குர்னாம் பதிலை எதிர்பார்க்காமல், உள்ளே பார்த்து இரைந்தான்.

பாபிஜி, குளிருக்கு இதமா ஏதாவது காரசாரமா?

வசந்தி சமையல்கட்டில் இருந்தபடிக்கே தடுப்புச் சுவர் மாடத்தின் வழியே முதல் ஈடு வாழைக்காய் பஜ்ஜியை நீட்டினாள்.

சட்னி இல்லே. பர்வா நஹி தானே அண்ணா?

வசந்தி தீர்மானத்தோடு கேட்க, குர்னாம் பஜ்ஜித் தட்டைப் பார்த்தபடியே பரம சுகமாகத் தலையாட்டினான். முதல் ஈடு எப்பவும் சங்கரனுக்குத்தான் என்று எழுதாத விதியைத் தலப்பா வந்து தட்டிப் பறித்து விட்டான்.

ஊருக்குப் போற அவசரத்திலே இது எதுக்கு, அண்ணி?

குர்னாம் மரியாதைக்கு விசாரித்தான்.

நான் போகலே. அவர் மட்டும் தான் டுர்யோன்னு பின்னாலே தட்டிண்டு கிளம்பியாறது. கேட்டுக்கோ, அவருக்குப் பொங்கல் பண்டிகை பிறந்தகத்திலே.

அவள் கண்ணால் சிரிக்க, சங்கரனுக்கு மனசில் பட்டது, குர்னாம் சிங்கைத் துரத்தி விட்டு அவளை. அவள் இருக்கட்டுமடா மூடா, நீ பிரயாணத்துக்கு எடுத்து வைக்காவிட்டால் ரயில் போயிடும் என்றது வாசலில் அகவிய மயில்.

பிக்கல் பிடுங்கல் இல்லாம, நான் ரெண்டு வாரம் இங்கே தான் அண்ணா. உங்க பொண்டாட்டி கிட்டே சொல்லிட்டேன். தினம் ரொட்டி சப்ஜி மத்யானம் அவ கொண்டு வந்துடுவா. சாயந்திரம் உங்களுக்கு நொறுக்குத் தீனி, டிபன் நானாச்சு. பொங்கலுக்கு காலம்பற ஸ்பெஷல் சக்கரைப் பொங்கலும்.

குர்னாம் வாஹே குரு சொன்னபடி முன்னால் போக, சங்கரன் அவன் செருப்புக் காலையே பார்த்தான். இவன் தாடிக்காரர்களின் சொர்க்கத்துக்கு போனாலும் வார் அறுந்த தேசல் ஹவாய் செருப்போடு தான் போய் நிற்கப் போகிறான்.

குர்னாம் சுவாதீனமாக செருப்புக் காலோடு சமையல் கட்டுக்குள் நுழைந்து ஊறுகாய்ப் பரணியைக் கட்டிய துணியைத் திறந்து, நாலு மாவடுவையும் உப்புச் சாறையும் தட்டில் கவிழ்த்துக் கொண்டான்.

சர்தார் குர்னாம் சிங் மகராஜ் வெறும் மாங்காய் ஊறுகாயிலும் கடலை மாவு தின்பண்டத்திலும் திருப்தி அடைந்து என் வீடு முழுக்க பொற்பாதுகைகள் தரித்து நடந்து அருள் புரிய நாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ.

மெய்க்கீர்த்தி சொல்லி வசந்தி ஜாரிணிக் கரண்டி பிடித்த கையோடு வணங்க சர்தார் சொன்னது- வசந்தி அண்ணி, உங்க இந்தி அவ்த் நவாப் பேசற கம்பீரம்.

குர்னாம் எத்தனையாவது தடவையாகவோ வாசந்தியின் இந்தியை சிலாகிக்கிறான். லக்னௌவில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண். இங்கத்திய பஞ்சாபிகளின் மூக்கு முனை இந்தி இல்லை அவளுடையது. நவாபி இந்தி.

நவாப் எதுக்கு இந்தி பேசினான்? உர்து இல்லையோ பெரும் பாகமும்?

லா பாயிண்ட் கிடைத்த வக்கீலாக நூதன் ஸ்டவ் அடைத்த அட்டைப் பெட்டியில் கயிறு கட்டி இறுக்கிக் கொண்டு சின்னச் சங்கரன் விசாரித்தான். குர்னாமுக்கு சிறிய தோதிலாவது மூக்குடைப்பு தர வேண்டும். சங்கரனின் இந்தி ஜாக்கிரதையான தென்னிந்திய இந்தி. நாலு க-வும், நாலு த-வும் குழம்பி வழியத்தான் செய்யும். ஆனால் அவனுடைய இங்கிலீஷ், துரைகளும் பிரமிக்கிறதாச்சே. ஒரு வார்த்தை இந்தத் தலைப்பா அதைப் பற்றி சிலாகிக்கிறானா?

குர்னாம் கடலைமாவுப் பண்டம் சாப்பிடுகிற மும்முரத்தில் அவனைச் சட்டை செய்யவில்லை.

சின்னச் சங்கரன் அலமாரியில் இருந்து ‘குமாவுன் புலிகள்’ புத்தகத்தை எடுத்துக் கித்தான் பையில் வைத்தான். காப்பி மேஜை புத்தகம். சின்னச் சங்கரன் வீட்டில் காப்பி மட்டும் உண்டு. அது குடிக்க சுற்றி உட்கார மேசை போட மினிஸ்டரி க்வாட்டர்ஸில் இடம் இருந்தாலும் மேஜை நாற்காலி என்று வாங்கிப் போட சம்பளம் இடம் கொடுக்கவில்லை. அப்பர் டிவிஷன் கிளார்க் வீட்டுக்கு என்று எதிர்பார்க்கப் படுகிறவை முன்னறையில் செயற்கை கம்பளம், ஷோ கேசில் நடராஜர் டம்மி வெங்கல விக்கிரகம், கோணல் மாணலாக வளைந்து கையடக்க சைஸில் நாலைந்து பளிங்கு சிற்பங்கLள், மிஞ்சிய இடத்தில் பாம்பு பஞ்சாங்கம் அல்லது வாக்கியப் பஞ்சாங்கம், சௌந்தர்ய லஹரி தமிழ் எழுத்தில். அப்புறம் மர்ஃபி டிரான்சிஸ்டர் ரேடியோ. பாம்பு பஞ்சாங்கம் தவிர மற்றவை சின்னச் சங்கரன் வீட்டில் உண்டு. பஞ்சாங்கத்தை அடுத்த குடித்தனத்தில் முதல் மாடிப் போர்ஷனுக்கு வந்த விருந்தாளி ஒருத்தர் வாங்கிப் போனது இன்னும் திரும்ப வந்து சேரவில்லை.

அடுக்குமாடிக் குடித்தன வாழ்க்கையில் இது பிரச்சனையே. மேலே, கீழே, அடுத்த குடியிருப்பில் இருக்கப் பட்டவர்கள் சர்வ சுதந்திரமாக எந்த நேரத்திலும் நுழையக் கூடும். மாவுப் பண்டங்களையும், பில்டர் காப்பியையும் அவர்களுக்கு உடனே தந்து உபசரிக்க வேண்டும். ரிடையர் ஆனவர்கள் பேச்சுத் துணை தேடி வரலாம். அப்போதெல்லாம் வீட்டுக்காரன் மோடாவை இழுத்துப் போட்டு விட்டுப் பேச வேண்டும் என்று பொதுவாக எதிர்பார்ப்பு தென்படுகிறது. வந்தவர் நானாவித திசைகளில் தல யாத்திரை போனது அல்லது நாலு தெரு தள்ளி தள்ளு வண்டியில் வறுகடலை சிட்டிகை உப்போடு விற்றுக் கொண்டிருந்ததைப் போய் வாங்கி வந்த வைபவம் என்று விவரமாகச் சொல்லும் போது, பொறுமையோடும் இம்மாதிரி அருஞ் செயல்களுக்குத் தகுந்த மன ஈர்ப்போடும், ஆர்வத்தோடும் அதைக் கேட்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பாம்பு பஞ்சாங்கம் வாங்க வந்தவர் தனுஷ்கோடிக்குப் போய் வந்ததையும், அங்கே சாப்பாட்டு ஓட்டலில் கிடைக்கும் ருஜியான எண்ணெய்ப் பலகாரம் பற்றியும் சொன்னபோது நாவில் எச்சில் ஊறக் கேட்டுக் கொண்டிருந்தால், பஞ்சாங்கம் உடனே திரும்ப வந்திருக்கலாம்.

சாயந்திரம் என்னை ஸ்டேஷனில் கொண்டு போய் விடுவியா?

குர்னாம் வெற்றுத் தட்டில் ஒரு முறை கட்டை விரலால் வழித்து நாக்கில் சுழற்றிக் கொண்டிருக்க, சங்கரன் மெல்ல விசாரித்தான்:

சங்கரன் தயங்கித் தயங்கிக் கேட்டு முடிக்கும் முன்னால் சட்டென்று சரி என்று சொல்லி விட்டான் குர்னாம். உரிமையோடு எடுத்துக் கொள்வது மட்டுமில்லை, அதே படிக்குக் கொடுப்பதும் இந்தத் தலைப்பாக் காரர்களுக்கு உடம்போடு பிறந்தது. சங்கரனுக்குத் தெரிந்ததுதான்.

மூணு மணிக்கு பட்பட்டி கிடைச்சா அப்படியே திருப்பிட்டு வந்துடறேன். இல்லேன்னா ஆளுக்கு ரெண்டு மூட்டையாத் தூக்கிட்டு பஸ் தான். அந்த மோடாவைப் பார்த்து கண்டக்டர் சத்தம் போடுவான். பொறுத்துக்கோ.

குர்னாம் மிளகாய் பஜ்ஜி காரத்தை இன்னும் அனுபவித்தபடி ஹ ஹ என்று நாக்கு புகைந்த சூட்டோடு உபதேச வார்த்தை சொல்லி வெளியில் போனான்.

நல்லாச் சொல்லுங்க அண்ணா. பாதி டில்லியையே வளைச்சு எடுத்துப் போயாறது. இவருக்கு மட்டும் ஒரு ரயில் விட்டாக்கூட இன்னும் ரெண்டு கம்பார்ட்மெண்ட் பூட்டுங்கோன்னு ஆனை, பூனை, கம்பளம், கல் உப்புன்னு சகலத்தையும் மூட்டை கட்டிண்டு போவார்.

குர்னாம் முதுகைப் பார்த்து வசந்தி இரைந்தாள்.

சங்கரன் வசந்தி முகத்தைப் பார்த்தான். நிறைய சந்தோஷமும் திருப்தியும், துளி கிள்ளிப் போட்ட வேப்பிலையாகக் கசப்பும் ஒரு வினாடி தெரிந்தது. உன் சந்தோஷமும் அதுதான், சங்கடமும் அதுதாண்டா சங்கரா என்று பறந்து போன மயில் காதில் சொன்னது.

எல்லாவற்றையும் அடித்துத் துடைத்து அப்பால் தள்ளிக் கும்மாளியிட்டு வரும் குமிழ் சிரிப்பு முகம் முழுக்க பூசியிருந்தது. மயில் ஆடுகிற மாதிரி வாத்சல்யமான புன்சிரிப்பு. அதைக் கண்டு தான் சின்னச் சங்கரன் முதல் பார்வையில் மோக வயப்பட்டான்.

லக்னௌவில் இருந்து இங்கே தெற்கத்தியவர்களுக்காக, முக்கியமாக தமிழ் பேசுகிற சைவர்களுக்காகாக வைதீகக் காரியங்கள் நடத்தி வைக்க உத்தேசித்து இருபத்தைந்து வருஷம் முன் வந்தவர் வசந்தியின் அப்பா சுந்தர வாத்தியார். வைதீகம் ஆவணி அவிட்ட அதிக மகசூலும், அமாவாசை தர்ப்பண புஞ்சைப் புளியம்பட்டி விளைச்சலுமாக தாக்குப் பிடிக்காமல் தவித்த போது, இங்கே ஹாஸ்காஸில் மெஸ் நடத்த ஆரம்பித்தார். அப்புறம் அவருக்கு அமாவாசை தர்ப்பணத்துக்காக மட்கார்டில் பேய்நசுங்கல் விழுந்த சைக்கிள் மிதித்து வெயிலிலும் குளிரிலும் அலையத் தேவை இருக்கவில்லை.

சங்கரனுக்கு தில்லி வந்த புதுசில், அது பதினாலு வருஷம் முன்பு, அவனுடைய மூணு வேளைச் சாப்பாடும் ஹௌஸ்காஸ் மெஸ்ஸிலே. சுந்தர வாத்தியார் வீட்டு சிட் அவுட்டில் தட்டி கட்டி மறைத்து ஆரம்பித்திருந்த சாப்பாட்டு ஏற்பாடு. வாத்தியார், அது கடை என்று யாரும் தப்பித் தவறிக்கூடச் சொல்லாமல் பார்த்துக் கொண்டார். அவர் சோறு விற்க வந்தவர் இல்லையாம். மடத்தில் ஆக்ஞை ஆனபடி ஒரு செர்வீஸாம். வெங்காய சாம்பாருக்கு அந்த ஆக்ஞை பொருந்துமா தெரியாவிட்டாலும் சுந்தர வாத்தியாரின் மூத்த மகள் வசந்தி அழகான பெண் என்று சங்கரனுக்குத் தீர்மானமாகத் தெரிந்தது.

நீ ரொம்ப அழகா இருக்கேடி கண்ணம்மா.

நூதன் ஸ்டவ்வில் எண்ணெய்ச் சட்டி ஏற்றி நீள நீளமாக அரிந்த வாழைக்காய் பஜ்ஜி பொறித்துக் கொண்டிருந்தவள் காதில் அவன் சொல்ல உத்தேசித்தபோது மயில் திரும்ப வாசலுக்கு வந்து மகா அபத்தம் என்று அகவியது.

இதென்ன இன்னிக்கு முழுக்க இங்கே டான்ஸ் பரிபாடி நடத்த உத்தேசமா வந்திருக்கு இந்தப் பொண்ணு.

வசந்தி ஆச்சரியப்பட, அடி மடைச்சி, அது ஆண் மயிலாக்கும் என்றான் சங்கரன்.

ஆமா நீங்க கீழே பார்த்தேளாக்கும்.

நான் பாக்காட்ட என்ன, விஞ்ஞானம் சொல்றது.

விஞ்ஞானம் மோடாவை எல்லாம் கட்டித் தூக்கிண்டு போய் அவதிப்படாம, விட்டுட்டுப் போகச் சொல்றது.

அங்கே அரசூர் ஜனங்கள் எதிர்பார்த்துண்டிருக்காளே. நீ ஏன் வரலேன்னு வேறே ஆளாளுக்கு விசாரிப்பா.

ரயில்லே தீவட்டிக் கொள்ளைக்காரன் வந்து மோடாவையும் அப்புறம் திரும்ப வந்து என்னையும் தூக்கிண்டு போய்ட்டதாச் சொல்லிடலாம்.

வசந்தி அடுபபை அணைத்து விட்டு, சமையல் கட்டு அலமாரியில் எக்கி எடுத்த பல்பொடி பரணியில் இருந்து பழைய காலண்டர் பேப்பரில் கொட்ட ஆரம்பித்தாள்.

பயோரியா பல்பொடி வேணாம் கேட்டியா.

அது பயோரியா இல்லே. நம்பூத்ரி தந்த சுத்தி சூரணம். அப்பா கோட்டயத்திலே சொல்லி வச்சு வாங்கறது.

நம்பூத்ரிக்கு யானைத் தந்தம் மாதிரி வாச்சி வாச்சியாப் பல்லு வாச்சிருக்கும். அதைச் சுத்தி பண்ண வேணுமானா இந்த சூரணமும் லேகியமும் வேண்டி வரும். எனக்கெதுக்கு?

சுந்தர வாத்தியாரும் வருஷம் நாலு தடவை மலையாளப் பல்பொடியும், நேந்திரங்காய் வறுவலும், வெல்லம் புரட்டிய பலாச்சுளை வத்தலும், எங்கோ கோஷி பேக்கரி ரஸ்க் ரொட்டியுமாகக் கொண்டு வந்து சமையல் கட்டை நிறைத்து விடுகிறார். மற்ற எல்லாம் ஷணத்தில் காலியாக, தந்தாவக்ரர்களுக்கான பல்பொடி மிஞ்சித்தான் போகிறது.

ஊருக்கு எடுத்துப் போனால் என்ன? தில்லியில் இருந்து எதைக் கொண்டு வந்தாலும் வேணாம் என்று சொல்ல மாட்டார்கள்.

வசந்தி, பல்பொடி டப்பாவோட கொடு.

திவசத்துக்கு அது எதுக்கு?

வசந்தி கேட்டபோது வாசலில் மோதி விழுந்தது மயில். ஒரு வினாடி கிடந்தபின் எழுந்து கோணலாக, தாங்கித் தாங்கி மெல்ல நடந்தது. அப்புறம் பறந்து போனது.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன