அச்சுதம் கேசவம் – அத்தியாயம் 1

அச்சுதம் கேசவம் 1

மழை குளிரக் குளிரப் பெய்து கொண்டிருந்தது. நேற்று விடிகாலையில் அது தயக்கத்துடன் ஆரம்பித்தது. தலையில் துணி வைத்து உட்கார்த்திய பலாப் பழமும், தோளில் தொங்கும் துணி முடிச்சில் பழுத்துக் கொண்டிருக்கும் மாம்பழங்களும், கையில் பிடித்த பூவன் பழக் குலையுமாக வீட்டு வாசலில் நின்று கதவைத் தட்டுகிற வயசன் அம்மாவன் போல மழை. தவறான வீட்டுக்கு முன் நின்று ஒச்சையிட்டுக் கதவு தட்டுகிறதாகத் தோன்ற பம்மிப் பதுங்கி நிற்கிற கிழவன்.

வரணும் வரணும்.

ஸ்ரீகிருஷ்ணன் அம்பலத்தில் உச்சத்தில் ஒலிக்கிற மணிச் சத்தம் அழைக்கிறது. வாக்கப்பட்ட பெண் போல கூடவே மாராரின் எடக்க வாத்தியம் இழைந்து வரவேற்கிறது. மாரார் குரல் வீட்டு மூத்தவனாக சோபான சங்கீதம் எடுத்துப் பாடி ‘வாடா எதுக்கு வெளியே நிற்கறே..’ என்று வாத்சல்யத்தோடு காற்றில் கலக்க, வந்தேன் வந்தேன் என்று ஆடி வந்த கர்க்கடக கால அடைமழை.

ஒரு அவசரமும் இல்லை. நின்று, இருந்து, படுத்து ஓய்வெடுத்து விட்டு சாவகாசமாகத் திரும்பலாம் என்று முடிவு செய்த மேகங்கள் அடர்ந்து சூழ்ந்து கவிய சீராக நிலம் நனைத்து மண் நிறம் கலந்து வெள்ளமாகப் பெருகி தெரு எல்லை மறைத்த மழை.

மேல்சாந்தி சாய்வு நாற்காலியில் இருந்து எழுந்தார். கையில் பிடித்திருந்த புத்தகம் தரையில் வழுக்கி விழ, சற்றே சிரமத்தோடு அதைக் குனிந்து எடுத்து நாற்காலியின் கைத்தண்டையில் வைத்தார். சிரமம் தான். தானே இழுத்து வாரிப் போட்டுக் கொண்டதாச்சே அது. உச்சைக்கு ஊண் கழித்து உறக்கம். அந்தியுறக்கம் ராத்திரி ஒன்பது மணிக்கே ஆரம்பிக்கிற பரிபாடியும் எந்த இடர்பாடும் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. பாலும், பால் பொருளான தயிரும், வெண்ணெயும், நெய்யும், வெண்ணெய் காய்ச்சி நெய் வடிகட்டி உருளியில் மீந்த கசண்டில் முருங்கை இலையையும் அரிசி மாவு, வெல்லச் சர்க்கரையையும், தேங்காய்ப் பூவையும் ரசனையோடு போட்டுக் கலந்து அடுப்பில் மிச்சம் இருந்த இளம் சூட்டில் துழாவித் துழாவி வதக்கி வாரிக் கொட்டி, பிடிப் பிடியாகத் தின்று தீர்க்கிற இனிப்பும் எங்கே எங்கே என்று கொண்டு வந்து வயிற்றுக்குக் கீழே உருட்டிப் பிடித்து நிறுத்திய குட வயிறு. என்றால் பாண்டிச் சொல்லில் தொந்தி. கோயில் பால் பாயசம் வேறே தினமும் ஒரு இலை மடக்காவது, சமைத்த நேர்த்தியைப் பற்றி அபிப்பிராயம் சொல்லவோ, பூஜைக்கு அப்புறம் பிரசாதமாக வழிபட வந்தவர்களுக்குக் கொடுக்கும் முன்னால் சற்றே ருசி பார்த்துத் தரம் தீர்மானிக்க குடித்து வைக்க வேண்டிய கட்டாயம்.

ஒரு கட்டாயமும் இல்லை. அம்பலத்திலே மேல்சாந்தி அடுக்களைப் பதார்த்தத்துக்குமா பொறுப்பு? அச்சன் நாக்கைக் கட்டினால் போதும். அந்த ஸ்ரீகிருஷ்ணனே வந்து சாப்பிடுடா சாப்பிடுடா என்று தாடையைப் பிடித்துக் கெஞ்சினாலும், ஐயோ வேணாம், சர்க்கரை வியாதி மாத்திரை போட்டு மாளாது என்று நைச்சியமாகக் கழண்டு கொள்ள சாமர்த்தியம் வேணும்.

மேல்சாந்தி சிரித்துக் கொண்டார். இது பதிவாக அவர் மகன் சங்கரன் எம்பிராந்திரி சொல்வது. அவன் இங்கே ஆலப்புழை காலேஜில் சரித்திர புரபசராக இருந்த வரைக்கும் தினமும் ஸ்கூட்டர் சவாரி செய்து காலேஜ் போவான். மேல்சாந்தியிடம் இனிப்பு சாப்பிட வேண்டாம் என்று எச்சரித்தபடி வண்டியைக் கிளப்பினால் தான் அது மேற்கொண்டு ஓடும்.

சங்கரன் இப்போது இங்கிலாந்து யூனிவர்சிட்டியில் சரித்திரம் சொல்லிக் கொடுக்கிறான். கிளாஸ்கோ என்று ஊர்ப் பெயர் சொன்னான். சிசுக்கள் ஆரோக்கியமாக இருக்க வென்னீரில் கரைத்துப் புகட்டுகிற பால் மாவுப் பெயர் போல இருக்கே என்று மேல்சாந்தி கேட்க அது கிளாஸ்கோ என்றான் மகன். எதோ ஒண்ணு. காதில் விழுகிற சமாச்சாரமாகவே இதெல்லாம் இருந்து விட்டுப் போகட்டும்.

மேல்சாந்தி ஆளோடியில் நின்று வெளியே பார்த்தார். மழை எப்போது விடும் என்று மனதில் கணக்குப் போட என்னமோ விருப்பமில்லை. இன்னும் தொடர்ந்து அது அடித்துப் பெய்தால் அம்பலத்துக்குப் போவது பற்றி யோசிக்க வேண்டி வரும்.

எதாவது சாக்கு போக்கு சொல்லி வேலைக்குப் போகாமல் தப்பித்துக் கொண்டதாக கோவில் உத்தியோகஸ்தன் ஒருத்தனை நேற்று தான் மேல் சாந்தி சத்தம் போட்டார். பூ மாலை கட்டுகிற வயசன் அவன். உள்ளபடிக்கே மழைக்காலம் ஒத்துக் கொள்ளாமல் காய்ச்சல் தீவிரமாகி வீட்டில் முடக்கிய பாவம் மனுஷன். ஆனாலும் என்ன, மேல்சாந்தி கூப்பிட்ட குரலுக்குச் சாடி எழுந்து உந்திப் பறந்து வந்து திருமுகம் கண்டபடிக் கை கூப்பி நிற்காமல் போனால், பூமாலை தொடுக்கிறது போல காரியம் செய்கிற வாரியக்காரர்கள் பிழைப்பு அந்தரத்தில் நிற்கக் கூடும்.

வேணாம். குளித்துத் தொழுது அத்தாழ பூஜையையும் முடித்து வந்து விடலாம். அர்ச்சனை முடக்குவதால் குறைந்தது அரைப்படியாவது பால் பாயசம் சுண்டக் காய்ச்சி விற்க ஆள் வரக் காத்திருக்கும் சமையல் சுயம்பாகி மற்றும் கோயில் உத்தியோகஸ்தர்கள் மட்டுமில்லை, கோயிலுக்குத் தொலை தூரத்தில் இருந்து வரக்கூடிய யாத்திரீகர்கள் கூட பாதிக்கப் படலாம். தரங்கெட்ட சோம்பலால் அந்தப் பாவம் எழுந்து மேலே சூழ்வதை மேல் சாந்தி அனுமதிக்கப் போவதில்லை.

மகாகவி குமாரன் ஆசானின் வீண பூ காவிய தர்சனம்.

உள்ளறையில் இருந்து உரக்கக் கேட்டது. தொடர்ந்து ரேடியோ கர்ரென்று கர்ஜிக்கத் தொடங்கியது. மேல்சாந்தி இடுப்பு வேட்டி அவிழ்ந்ததைக் கையால் பற்றித் தாங்கிக் கொண்டு உள்ளே போனார்.

நாராயணி அம்மாள் தரையில் நித்திரை போயிருந்தாள். அவள் கண் விழித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் உதட்டில் நிரந்தரமாக ஒட்டிக் கொண்ட புன்னகை முடிவதே இல்லை.

புஞ்சிரி பொழிஞ்சு கொஞ்சி நடக்குன்ன வஞ்சிக் களப் பெண்ணே. மேல்சாந்தி பழைய சினிமா கானம் ஒன்றை வாய்க்குள் பாட யத்தனித்தார்.  நாராயணி அம்மாளைக் கல்யாணம் கழித்து வந்த மழைக்காலத்தில் வீட்டில் மழைச் சத்தத்தோடு நிறைந்து நின்ற பாட்டு அது. முப்பது வருடம் முன் மழைச் சத்தம் இன்னும் வலுவாக இருந்தது. நாராயணி அம்மாளும், நாராயணிக் குட்டியாக வலம் வந்து கொண்டிருந்த போது அம்பலத்தில் மேல்சாந்திக்கு அடுத்த தந்திரி அவர்.

பகல்லே அப்படி என்ன பயங்கர உறக்கம் பொண்ணே. அடி நாணி. எழுந்துக்கோ.

மகாகவி ஆசான் வீண பூவினெ ஆஸ்பதமாக்கி.

பகல் நேரத்தில் அதுவும் மழை ஒளித்து மறைத்து வஞ்சனை செய்யாது வானத்தைப் பொத்துக் கொண்டு கொட்டிய பொழுதில் யாருக்காக வீண பூ பற்றி ரேடியோ பேசுகிறது? யார் பேசுகிறார்கள்?

மேல் சாந்திக்குப் புரியாவிட்டாலும் ரேடியோவை மரியாதையும் பணிவுமாக அமர்த்தினார். ஆசான் கவிதை அவருக்கும் பிடித்திருந்தது. அது நாராயணி வீட்டுக்கு வந்த பொழுது. மகன் பிறந்து அடுத்த இருபது வருடத்தில் ஆசானும், வள்ளத்தோலும் உள்ளூர் கவிதையும் அவனுக்குக் கைமாற, மேல் சாந்திக்குக் குட வயிறே மிச்சம்.

நாராயணி அம்மாள் எழுந்து உட்கார்ந்தாள். ரேடியோவைப் பார்த்து ‘நிற்த்திக்கோ’ என்றாள். அது சுபாவமாக நின்றது.

அதுவும் சரிதான். இல்லாது போனால் இன்னொரு முறை வயிறு வலித்து நோக மேல் சாந்தி ரேடியோவோடு போராட வேண்டி இருக்கும். அவருக்கும் கரண்ட் பாய்ந்து வேலை பார்க்கும் யந்திர தந்திரங்களுக்கும் அவ்வளவு நல்ல சிநேகிதம் கிடையாது.

ராத்திரியில் தூக்கம் கலைந்து தோட்டத்துக்கு மூத்திரம் ஒழிக்க வரும்போது சுவிட்சைப் போட்டால் விளக்கு எரிய மாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணும். இருட்டில் தட்டுத் தடுமாறிப் போய்த் திரும்பி வந்து கட்டிலில் சரீரத்தைக் கிடத்திய வினாடியே ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட மாதிரி அந்த விளக்கு மட்டும் இல்லாமல் வீடு முழுக்க, படுக்கை அறை தவிர்த்து மீதி இடமெல்லாம் ஜகஜ்ஜோதியாக விளக்கு எரியும்.

பக்கத்து மனை தந்திரி கோபிகிருஷ்ணன் கூட காலையில் விசாரிப்பான் – மூப்பு தான், சந்தேகமே இல்லை திருமேனி. விளக்கை அணைக்கக் கூட மறந்து போகிறது போல் ஒரு ஷீணம்..

போடா பட்டி.

மேல் சாந்தி தன் கீழ்ப்படிதல் உள்ள உத்தியோகஸ்தனான தந்த்ரி கோபிகிருஷ்ணனை இடது காலால் சவட்டினார். ரேடியோ வைத்திருந்த உயர மேசையில் கால் பட ரேடியோ அதிர்ந்தது. இன்னும் பலமாக இடித்திருந்தால் வீண பூ திரும்ப விடர்ந்து வந்திருக்கும்.

ஆசானே, உம் கவிதைக்கு இன்று ராத்திரி அத்தாழம் கழித்த பின்னே, வெற்றிலை பாக்கு மெல்லும் பொழுது நேரம் ஒதுக்கட்டுமா?

போடா பட்டி. நான் அஷ்டமுடிக் காயலிலேயே படகு கவிழ்ந்து ஜல சமாதி ஆகிறேன்.

ஆசான் கரகரப்பான ரேடியோ சத்தமாகக் குரல் எழுப்பி விட்டுப் போனார். அடுத்து நாராயணி அம்மாள் மெல்லச் சுவரைப் பிடித்தபடி நடந்து பின்கட்டுக்குப்  போனாள். இனிக் குளியும், தலை துவட்டுதலும், அம்பலத்துக்கு கொழும்புக் குடையோடு புறப்படுவதுமாக இருக்கும். ஒரு டம்ளர் காப்பியோ டீயோ உண்டாக்கிக் கொடுத்து விட்டுப் போவாளா?

மகன் பத்மன் வேளி கழித்து அம்புஜாட்சி அந்தர்ஜனத்தை வீட்டுக்கு அழைத்து வந்தபோது நாராயணி பெருமையாக முழங்கியது மேல் சாந்திக்கு நினைவு வந்தது.

‘உங்களுக்கு இனிமேல் கொண்டு தலைவலி, கால்வலின்னு ஏது வந்தாலும், எதுக்கு வரணும்.. வந்தா நான் இல்லாம போனாலும் மருமகள் அகத்து உண்டு. கஷாயமும் சுக்கும் இஞ்சியுமாக சிஷ்ருஷை கிட்டுமாக்கும்’.

அம்புஜாட்சியின் அச்சன் நீலாம்பரன் நம்பூதிரி கொல்லத்தில் பெயர் வாங்கிய வைத்தியன். முக்கியமாக சிசு வைத்தியத்தில். வயிற்றில் மாந்தம் கண்டு வலி அதிகப்பட்டு நாட்பட்ட வாதனை சூழ்ந்த சிசுக்களும் அவர் வயிற்றில் மெல்ல ஆள்காட்டி விரலால் நீவி விட்ட  மாத்திரத்தில் குணம் அனுபவப்பட்டும் கரைச்சலை நிறுத்தும் என்று மலையாள பூமி முழுக்கப் பிரசித்தம்.

ஆனாலும் அம்புஜாட்சிக்கும் இந்த சிசு வைத்தியத்துக்கும் ஏகத்துக்கு தொலைவு. அடிக்கடி தலைக்குக் குடைச்சல் என்று குழைந்து உட்கார்ந்து, வீட்டுக்காரன் பத்மன் கோடாபிரின் குளிகை இங்கிலீஷ் மருந்துக் கடையில் வாங்கி வந்து கொடுத்துத்தான் இங்கே இருந்த வரை காலம் தள்ளிக் கொண்டிருந்தான். இப்போது அவளுக்குக் கொடுக்க லண்டனிலோ வேறே லார்ட்ஷிப் பட்டணங்களிலோ கோடாப்ரின் கிடைக்கிறதா என்று மேல் சாந்திக்குத் தெரியவில்லை.

‘மருமகள் ராசிக்கு ஒரு குறைவுமில்லை. அவள் இங்கே வந்த பிற்பாடு உங்களுக்கு தலை, நாசி, கண்ணு, தொண்டை என்று ஏதாவது பெரிதாக நோய் கண்டிருக்கோ.. உங்க வயதுக்கு அதுவும் இப்படி முறுக்கான் முறுக்கான் என்கிறபடி கண்ணு விழித்த நேரம் முழுக்க, அம்பலத்தில் பகவான் சந்நிதியில் சேவைக்காக நிற்கிற நேரம் போக சதா வெற்றிலைக் காட்டை மேய்ந்தாகிறதே இந்த சீலத்துக்காகவே வாதனை எல்லாம் வந்து கேருமே’.

நாராயணி அம்மாள் சரியாகத் தான் கணித்தாள். மேல் சாந்தியின் குடவண்டி வயிறு அடிக்கடி வலி காணுவதும், நாராயணி அம்மாளின் முகத்தில் தசை இழுத்து சதா சந்தோஷமாக இருக்கிறதைத் தெள்ளத் தெளிவாகப் படம் வரைந்து காட்டியது போல சிரிப்பாக எழுதி வைத்ததும் பத்மனும் அம்புஜாட்சி அந்தர்ஜனமும் நாடு விட்டுப் போன பிற்பாடுதான் என்பதும் மேல் சாந்திக்கு நினைவு வந்தது.

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அம்பலக் குளத்தில் குளி கழித்து சாயந்திர பூஜையும் அத்தாழ பூஜையும் முடித்து வந்தால் இன்றைய பொழுதுக்கு விதித்த கர்மங்கள் எல்லாம் முடிந்து விடும். அப்புறம் நேரே அத்தாழமாகச் சம்பாரம் விரகிய சோறும் உண்ணி மாங்காயும். விஸ்தரித்து முறுக்கான் ஒரு பாட்டம். நித்திரை. நாளை இன்னொரு மழை நாளாக இருந்தாலும் இல்லாமல் போனாலும் கோயில் துரை கவனித்துக் கொள்வான்.

வாசலில் மழைத் தாரைகளுக்கு இடையே சற்றுச் சிரமப்பட்டு பாதையை நோக்கினார். ஓரத்தில், கால் பட்ட ரேடியோ மேசை மாதிரி ஆடிக் கொண்டு அம்பலக் குளமும், முரசு வைத்த மிழா மண்டபமும் நீர்க் கம்பிகளுக்கு இடையே ஆடி அலைந்து அடங்கின. பார்த்துக் கொண்டிருந்த போதே மீண்டும் ஆட ஆரம்பித்தன அவை.

கோயிலுக்கு அந்த மழைக்கு நடுவே குடை பிடித்து, முண்டு மடக்கிக் குத்திப் போய்க் கொண்டிருக்கிறது யார்? வக்கீல் குமஸ்தனாக இருந்து, வெடிவழிபாடு குத்தகைக்காரனாக மாறி வந்த வயசன் நடேசனா? இந்த மழையில் எந்த வெடி வெடித்து வழிபாடு செய்ய?

அம்பல வெடிவழிபாடு எதோ ஒரு காலத்தில் நக்னனான ஒரு வயசன் கொடிமரத்தைச் சுற்றிப் பறந்து அங்கிருந்து எவ்வி விழுந்து நிறுத்திப் போட்ட கதையெல்லாம் உள்ள இடமாச்சே இது.

அவரவர் அவரவர் ஜீவிதம், தொழில், ஆகாரம், ஓய்வு எல்லாம் பார்த்துக் கொள்ள எழுதியிருக்கேன். நீ என்னதுக்கு கவலைப்படறே. பட்டுத்தான் ஆகணும் என்றால் நாராயணி கோப்பி எடுத்து வரலியே இன்னும் – அதுக்காக ஒரு நிமிஷம் முட்டுக்குத்திக் கவலைப்படு.

ஸ்ரீகிருஷ்ணன் ரேடியோ குரலில் கேட்டான்.

வாசலில் யாரோ வந்து நின்றார்கள் என்று மேல் சாந்திக்குப் பட்டது.

தடி தடியாக மூட்டை முடிச்சுக்களோடு  பத்மனா? இந்தப் பொக்கம், ஆற்ரை அடி உயரம் எப்படி  உடனே சித்திக்கும்? பத்மனாக இருந்தால் பெண்டாட்டி அம்புஜாட்சி அந்தர்ஜனம் கூட வரணுமே?

ஆரா அது?

வந்தவன் தொப்பியிலிருந்து வழியும் தண்ணீரைத் தள்ளியபடி ஏதோ பெயர் சொன்னான். ஆப்பிரிக்க தேசத்திலிருந்து வருகிறவனாம். மழையோடு சேர்ந்து கொண்டு ஸ்ருதி பிசகாமல் ஒலித்த அவன் ஆங்கிலம் கம்பீரமாக இருந்தது. நல்லவனாக இருப்பான் என்பது தவிர மேல் சாந்திக்கு எதுவும் தோன்றவில்லை.

உள்ளே வரச் சொல்லி சைகை காட்டினார் அவர்.

அகத்துக் கேரி வரு.

ஷூவை எங்கே விடணும் நம்பூதிரி?

கம்பீரமான ஆங்கிலத்தில் சொன்னவன் கருத்த துரை என்பதை மேல் சாந்தி கவனித்தார்.

பத்மன் இங்கிலாந்திலிருந்து ஏதாவது கொடுத்து விட்டிருக்கிறானோ? அல்லது அம்புஜாட்சிக்காக மருந்து வாங்கித் தரச் சொல்லி அனுப்பியிருப்பானோ?

உலகத்தில் நம்மவர்கள் தவிர்த்தும் அனந்தகோடி பெர் உண்டே.

கிருஷ்ணனோடு நித்தியச் சிரிப்பில் ஆழ்ந்து நாராயணி அம்மாளும் சாயாவோடு வந்தாள்.

இன்னொரு சாயா எடுக்கு நாணிக்குட்டி.

மேல்சாந்திக்கு மனசில் மழைக்கு இதமாக வாத்சல்யம் வழிந்தோடியது

நான் வைத்தாஸ். வைத்தியநாதன். மொரிசியஷில் இருந்து வரேன்.

வந்தவன் நிறுத்தி நிதானமாகச் சொன்னது தமிழில் தான். என்றாலும் மேல்சாந்திக்கு அர்த்தமாகியது.

அம்பலத்துக்குப் போகலியா?

கிருஷ்ணன், அப்பு மாரார் செண்டையில் ஏறிக் கூப்பிட ஆரம்பித்ததும், மழை சற்றே நின்றதும் அப்போது தான்

தொடரும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன