நவராத்திரி முழுக்கப் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்று யாராவது சொன்னால் அப்புறம் பேச என்னிடம் வேறே எதுவும் இல்லை என்று மூஞ்சியைத் திருப்பிக்கொள்ள வேண்டி வரும். மனதில் இன்னும் பத்து வயதில் இருக்கிற ஒரு சிறுவன் நவராத்திரியை ஆசையோடு திரும்பிப் பார்த்துக் கொண்டேயிருக்கிறான்.
நவராத்திரி கொலு வைப்பதற்கென்றே தச்சு ஆசாரியார் எந்தக் காலத்திலோ செய்து கொடுத்த மரப்படிகள் சமையலறைக்கு இடம் பெயர்ந்தது நான் பிறந்ததற்கு முன்னால் நிகழ்ந்த ஒன்று. மாவடு ஊறும் கல்சட்டி, தோசைக்கு அரைத்து வைத்த பாத்திரம், இலைக்கட்டு, தேங்காய், காபி பில்டர், எண்ணெய்த் தூக்கு, பீங்கான் ஜாடியில் உப்பு என்று நித்தியப்படிக்குக் கொலு வைத்து ஊறுகாய் வாடையோடு இருக்கும் அந்தப் படிகள். நவராத்திரி கொலுவுக்கு அது தோதுப்படாது என்று பாட்டியம்மா தவிர மற்ற எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட, ராச்சாப்பாட்டுக்கு அப்புறம் கொலுப்படி அமைப்பதற்கான அவசர நடவடிக்கை தொடங்கும். இது நவராத்திரி தொடங்க சரியாக இருபத்துநாலு மணி முன்னால் வாடிக்கையாக நடப்பது.
வெங்கலப் பாத்திரம் அடைத்த சதுரமும் செவ்வகமுமான கள்ளிக்கோட்டைப் பெட்டிகள், மாடியில் அடுக்கிய தேக்குப் பலகை, வாசல் பெஞ்ச், தாத்தா காலத்து மேஜை என்று வீட்டில் அங்கங்கே இருக்கிறவை இடம் பெயர்ந்து கூடத்துக்கு வந்து, மேலே பளீரென்று சலவை செய்த எட்டு முழ வேட்டிகளைத் தழையத்தழைய விரித்ததும் அழகான ஏழு கொலுப்படிகள் ஆகிற மாயம் சொல்லிப் புரியவைக்கிற சமாசாரம் இல்லை. இது நடந்தேற ராத்திரி பதினோரு மணி ஆகிவிடும். அப்படியும் கண்ணில் தூக்கத்தின் தடமே இல்லாமல் அடுத்த வேலைக்கு ஆயத்தமாவது வழக்கம்.
நாலைந்து பேர் அவசர அவசரமாகக் கொலுப் பெட்டிகளில் இருந்து பொம்மைகளை வெளியே எடுத்துப் பரப்பி வைத்தபின் வீட்டுக் கூடத்துக்குக் கல்யாண மண்டபம் போல் ஒரு தனிக் களை வந்துவிடும். ஒவ்வொரு பொம்மையாக எடுத்து கொலுப்படியில் அடுக்குவது சுலபமான வேலை இல்லை. ராமர் பட்டாபிஷேக பொம்மை செட் ஓரமாக ஒரு போலீஸ்காரர் பாரா கொடுத்தபடி நிற்க, அனுமார் மிஸ்ஸிங். அவர், தண்டிக்கு உப்புக் காய்ச்ச விரைவாக நடக்கிற மகாத்மா காந்தி பக்கத்தில் பவ்யமாக உட்கார்ந்திருப்பார். கல்யாண செட்டிலிருந்து கோபித்துக் கொண்டு வெளியேறிய மாதிரி தவில்காரர் பாம்புப் பிடாரன் முன்னால் கொட்டி முழக்கிக்கொண்டிருப்பார். பிடாரனுக்கு முன்னால் படம் விரித்து ஆட வேண்டிய பாம்பு, தொப்பியும் குடையுமாக ஒய்யாரமாக நடக்கிற பளிங்கு வெள்ளைக்காரனின் முழங்காலை ஒட்டி சாதுவாகக் கவிழ்ந்து கிடக்கும். பொம்மை மளிகைக்கடையில் வாடிக்கையாளர்கள் காத்திருக்க, பொறி பறக்க துப்பாக்கியால் சுட்டுத்தள்ளும் நாலு பட்டாளச் சிப்பாய்களுக்கு நடுவிலே கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல் தொப்பையைத் தள்ளிக்கொண்டு மளிகைக்கடைக்காரர் ஓய்வாக அமர்ந்திருப்பார். தான் எந்த செட் என்று தெரியாமல் கிரீடம் வைத்த ராஜா ஒருத்தர் அரக்கப் பரக்க விழித்தபடி தூணோரம் நின்றிருப்பார்.
யார் யார், எது எது எந்தெந்தக் குழுவைச் சேர்ந்தது என்று கடகடவென்று பொறுக்கி எடுத்துச் சேர்த்து வைத்துவிட்டால் அடுத்த வேலைக்குக் கிளம்பி விடலாம். வீட்டுப் பெரியவர்கள் சரியான குழுக்களாகப் பிரித்து வைக்கப்பட்ட பொம்மைகளை அததற்கான கொலுப்படிகளில் அமர்த்திக் கொண்டிருக்க, கொலுப் பெட்டிக்குள்ளே விரித்திருந்த பழைய செய்தித்தாள், பொம்மை சுற்றிவைத்த பத்திரிகைக் காகிதம் ஒன்றுவிடாமல் பத்திரமாக எடுத்துப் பிரித்து அடுக்க வேண்டும். கொலு முடிந்து பொம்மைகளை மறுபடி சுற்றி அடுத்த வருடம் வரை பாதுகாப்பாக வைக்க அவை தேவைப்படும். சராசரி ஐந்திலிருந்து பத்து வருடம் முந்தைய சற்றே மக்கிப்போன காகித உலகம் அது. அமிழ அமிழ அலுப்புத் தட்டாத அந்தப் பழைய பத்திரிகை வாசிக்கிற அனுபவத்துக்காகவே நவராத்திரியை எதிர்பார்ப்பது வழக்கமாகியிருந்தது.
நன்றாக நினைவிருக்கிறது. நான் பிறந்த வருடத்துப் தினப் பத்திரிகை அது. ஜப்பானில் முதல்முதலாக டெலிவிஷன் அறிமுகமாகி, அதில் விளம்பரமும் ஒளிபரப்பான செய்தி. அதற்குப் பத்து வருடம் கழித்து வெளியான இன்னொரு பத்திரிகை. காந்தி பொம்மை சுற்றிவைத்தது. அமெரிக்கக் கறுப்பர் இனத்தின் குரலாக மார்ட்டின் லூதர் கிங் ‘எனக்கு ஒரு கனவு உண்டு’ என்று திரும்பத் திரும்ப முழங்கிய கவித்துவமான பிரசங்கம் அச்சடித்தது. போன வருடப் பத்திரிகையில் ‘சிவாஜி நடிக்கும் ஈஸ்ட்மென் கலர் சித்திரம் பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பில் கர்ணன்’ படப்பிடிப்பு விவரம். கிருஷ்ணன் என்.டி.ராமாராவும் அர்ஜுனன் முத்துராமனும் ரதத்தில் நிற்கிற ஸ்டில். படம் ரசிகர்களால் பெருவாரியாக வரவேற்கப்படும் என்று பி.ஆர் பந்துலு கூறியதாகச் செய்தி. அவர் நம்பிக்கை பாவம் பொய்த்துப் போனது. ரீ-ரிலீஸ் ஆக பின்னால் எப்போது எங்கே வெளியிடப்பட்டாலும் ஹவுஸ்புல் ஆக ஓடிய கர்ணன் முதலில் வெளியானபோது தோல்வியைத் தழுவியது மறக்க முடியாததுதான்.
இதுவும் நினைவிருக்கிறது. தினமணி சுடர் சினிமா பகுதியில் நல்ல படத்துக்கு இலக்கணமாகப் புகழ்ந்திருந்த திருமலை-மகாலிங்கத்தின் ‘ஆலயம்’ பட விமர்சனம். ஒவ்வொரு நவராத்திரிக்கும் படிக்கக் கிடைத்து மனப்பாடமானது அது. தசாவதார செட் சுற்றி வைத்திருந்த இந்த விமர்சனத்தை அப்போது வருடம் ஒருமுறை பார்க்கக் கிடைத்தாலும், ஆலயம் படத்தை இதுவரை பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.
கொஞ்சம் சிறிய பொம்மைகளைச் சுற்றி வைத்த வாரப் பத்திரிகைப் பக்கங்கள் இன்னொரு சுவாரசியம். எப்போதோ, எந்தப் பத்திரிகையிலோ வெளியான ஏதோ சிறுகதை அல்லது தொடர்கதையின் துண்டு துணுக்கான அதெல்லாம். ஒன்றுவிடாமல் நினைவிருக்கிறது. தில்லானா மோகனாம்பாள் தொடர்கதையில் ஒத்துக்கார தருமன் மூர்மார்க்கெட்டில் கறுப்புக் கண்ணாடி வாங்கிப் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பிப்பதற்குள் பக்கம் முடிந்திருக்கும். ‘அலுவலகத்திலிருந்து களைத்துத் திரும்பி வந்த சரளா, வீட்டுக்குள் முட்ட முட்டக் குடித்துவிட்டுப் படுத்திருந்த கணவனைப் பார்த்ததும் இனம் புரியாத’ என்று அரைகுறையாக முடிந்த சிறுகதையில் சரளாவுக்காக வருடாவருடம் அனுதாபப்பட நேர்ந்தது. வேறு ஏதோ மொழியிலிருந்து மொழிபெயர்ப்பாகி, பரபரப்பான தொடர்கதையாகப் படிக்கப்பட்ட ‘ரோஷன் எங்கே’ கதையில் பல்பீர் தில்லி சாந்தினி சௌக்கில் நடந்துபோகும்போது கதாநாயகியைப் பார்த்துத் திகைத்துப்போய் பின் தொடர்வது மனதில் இன்னும் அப்படியே நிற்கிறது.
கலந்து கட்டியாக இப்படிப் படித்து ரசிப்பது பிற்காலத்தில் பின் நவீனத்துவ எழுத்தை ரசிக்கப் பயிற்சி கொடுத்தாலும், ‘பரீட்சை நேரத்துலே தூங்கு. இப்போ விடிய விடியப் படி. உருப்பட்ட மாதிரிதான்’ என்று பெரிசுகள் படுக்கைக்கு விரட்டுகிற அட்டூழியம் பொறுத்துக் கொள்ள வேண்டிய நவராத்திரி நேரக் கொடுமைகளில் ஒன்றாகும்.
நவராத்திரிக் கொலு, பொம்மையை எடுத்துப் படியில் வைப்பதோடு முடிவதில்லை. கீழ்ப்படியை ஒட்டி நிறைய மணலைக் கொட்டி, பூங்கா உருவாக்க வேண்டியதும் என் வேலைதான். பூங்கா அட்டை பெஞ்சுகளில் உட்கார சின்னதாக பிளாஸ்டிக் பொம்மை கடைகடையாக ஏறி வாங்கி வந்தால், நாலு நாளில் உடைந்துபோய்விடும். சைக்கிளில் போகிற தபால்காரர், நர்ஸ், குட்டி யானை, வெள்ளைக்காரி, தவழும் குழந்தை இவர்களெல்லாம் அப்புறம் பூங்காவுக்கு இடம்பெயர்வார்கள். பூங்கா மணலில் தண்ணீர் தெளித்து தினசரி வெட்டினரி ஆஸ்பத்திரி பக்கமிருந்து புல் பறித்து வந்து நட்டுவைக்க வேண்டும். பூங்கா நடுவே பித்தளைத் தாம்பாளத்தை வைத்துச் சுற்றிச் சிமெண்டால் கட்டிய சுற்றுச் சுவரோடு லாஜிக்கே இல்லாமல் ஒரு குளம் அமைத்துத் தண்ணீர் நிரப்பும் வேலையும் கூடவே நினைவு வருகிறது. நளதமயந்தி செட்டிலிருந்து பிரித்த தமயந்திதான் எப்போதும் அந்தக் குளக்கரையில் நிற்பாள் என்பதும் மறக்கவில்லை. எதுதான் மறந்தது இப்போது புதிதாக நினைவில் வர? ஆமா, ‘ரோஷன் எங்கே’ துப்பறியும் தொடர்கதையில் பல்பீர் வில்லனா கதாநாயகனா?
*********************************************************
jottings 8th Oct 2010
விஸ்வரூபம் நாவல் முடியும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்து ‘அரசூர் வம்சம்’ நாவல் தொடரின் (trilogy) மூன்றாம் நாவலான ‘தனுஷ்கோடி’ எழுதவிருக்கிறேன். இடையில், ‘ரெட்டைத் தெரு’வின் தொடர்ச்சியாக ‘எண் 27, ரூ துய்ப்ளே’ (27, த்யூப்ளே தெரு) bio-fiction 71-75 காலகட்டம் குறித்து – தொடங்குகிறேன்