புதிய நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 16 : இரா.முருகன்


அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பதினாறு இரா.முருகன்

கடுதாசி வந்தாச்சு.

அமேயர் பாதிரியார் வந்தபடிக்கே, மூச்சு வாங்கிக் கொண்டு அறிவித்தார்.

போப்பரசர் உத்தரவு. குட்டி ஆடுகளைக் வழிப்படுத்தும் மேய்ப்பன் எழுத்து.

கையில் பிடித்திருந்த கடிதாசை உயர்த்திப் பிடித்து அவர் அன்போடு சிரித்தார்.

உலகெங்கும் வெள்ளமாகக் கருணை பொழிந்து இன்னும் மிச்சம் உள்ளதை வீட்டில் இருக்கப்பட்ட பீப்பாய், தண்ணீர் வாளி, பால் பாத்திரம், மேசைக் கரண்டி, மர ஸ்பூன் என்று எல்லாவற்றிலும் வழிய வழியப் பிடித்து அதுவுமெல்லாம் நிறைய, ஆளாளுக்கு கை குவித்து அள்ளி விழுங்கிக் கடைத்தேற வழி வகுத்து, ஊற்றுக்கண் வற்றாமல் இன்னும் இன்னும் பொங்கி வரும் பிரவாகம் அது.

அமேயர் அச்சா, கார். மெட்காபோட கார்.

இமல்டா குசினிக்குள்ளே ஒரு காலும் நடுவீட்டில் இன்னொரு காலுமாகக் கருணை வெள்ளக் கரையில் நின்றபடி கீச்சென்று குரலெழுப்பி அவசரப்படுத்தினாள்.

அமேயர் பாதிரியார் அவளைக் கண்ணெடுத்தும் பார்க்கவே இல்லை. அவர் கொண்டு வந்தது, எவ்வளவு முக்கியமான, கேட்டவர்கள் ஒருத்தர் விடாமல் மயிர்க்கூச்செரிந்து ஆனந்தம் மிகக் கொண்டு கண்ணில் துளித்த நீரோடு நிற்க வைக்கக் கூடிய அற்புதமான செய்தி!

இரும்பால் அடித்து நிறுத்திச் சகடம் பொருத்தி ஓட விட்ட அற்பமான காரையும் மோட்டார் சைக்கிளையும் கருத இது நேரமா என்ன?

இஸ்பானியப் பெண்ணே, உனக்கு சமாதானம் உண்டாகட்டும்.

அமேயர் பாதிரியாரின் கண்கள் இமல்டாவைக் கனிவோடு நோக்க, சமாதானம் அவளைச் சூழ்ந்தும் உள்ளிலும் பெருகுவதை உணர்ந்தாள், கொலம்பியாவிலிருந்து அகதியாக வந்த அந்தச் சிறு பெண். இவ்வளவு சமாதானம் இதுவரை அனுபவப்பட்டதில்லை என்பதால் மயக்கமடைந்து குசினித் தரையில் விழவும் செய்தாள் அவள்.

தெரிசா, கையில் பல் துலக்கும் பிரஷ்ஷும், கால் மாற்றி அணிந்த வீட்டுச் செருப்புமாக உடனே இமல்டா பக்கம் நகர்ந்தாள்.

ரெண்டு அடி முன்னால் வந்த அமேயர் பாதிரியார் அவள் தலையில் கைவைத்துச் சொன்னார் –

அவளை உறங்க விடு சிசுவே. அவளுக்கும் இந்த நற்செய்தி போய்ச் சேரும்.

இந்தக் கடிதம் அமேயர் பாதிரியார் வசம் நேற்றுப் பகலே வந்து விட்டது.

போஸ்ட் ஆபீஸில் கடிதங்களைப் பட்டுவாடா செய்ய அமர்த்தியிருக்கும் பெண் புதியவளாம்.கதவைத் தட்டிக் கையில் தராமல் என் தபால் பெட்டியில் போட்டிருக்கிறாள். காலையில் தான் பார்த்தேன்.

ஆகச் சிறந்த செய்தியோடு ஒரு நாள் தாமதமாக வந்ததற்காக மனப் பூர்வமாக வருத்தம் தெறிக்கும் குரலில் சொன்னார் அமேயர் பாதிரியார்.

தபால் பெட்டி, வந்த கடிதங்களைப் போடத்தானே என்பதாக தெரிசா அவரைப் பார்த்தாள்.

என் தபால் பெட்டியில் அண்டை அயல் குழந்தைகள் கல்லையும் மண்ணையும் நசுங்கிய ரப்பர் பந்தையும் தான் போடுகிற வாடிக்கை. ஒரு துஷ்டன் அடுத்த வீட்டுக்குக் குடி வந்து, குடித்தனக் காரர்கள் ராத்திரியில் உபயோகிக்கிற அசுத்தமான சமாசாரத்தையும் தபால் பெட்டி உள்ளேஎ போட்டிருந்தான். நல்லவேளை அது வாங்கியபடிக்கு புதுசானது என்பதால் அசுத்தம் குறைவாகவே இருந்தது.

அவர் பம்மிப் பம்மிச் சொல்ல தெரிசா குறுஞ்சிரிப்போடு தலையைக் குனிந்துகொண்டாள். வேலை மெனக்கெட்டுக் கடைக்கு நடந்து, காசு கொடுத்து காண்டோம் வாங்கி அதை ஜரூராக அமேயர் பாதிரியாரின் தபால் பெட்டியில் போட்டவன் முழு முட்டாளாக இருப்பான். ஒரு வேளை மெட்காபோ அது?

பாதிரியார் முன்னால் ராத்திரி உடுப்பில் நிற்க அவளுக்குக் வெட்கமாக இருந்தது.

கல்யாண தினத்தன்று, அந்தியில் அனுபவப்படது. மெட்காப் சுகமாக உறங்கும் சவப்பெட்டிக்கான விலையை, அதை வசூலிக்க வந்த கனவானிடம் கொடுத்தபோது உண்டானது. கலவி சுகம் கண்ட உடலைச் சுத்தப்படுத்திக் கொள்ளாமல் வந்ததற்காக அப்போது மனதில் படிந்த கூச்சம் போன்றது அது. இன்னொரு முறை அது அனுபவமானது விவரிக்க முடியாத ஏதோ விதத்தில் சந்தோஷமானதாகவும் இருந்தது.

அமேயர் பாதிரியாருக்குக் கிட்டியிருக்காது அதெல்லாம். தபால் பெட்டியில் போட்டிருந்த ஆணுறை போல விலகிப் போயிருக்கலாம். அல்லது கிடைத்திருந்தாலும், மனக் குமைச்சல் இல்லாமல் அவர் அனுபவித்திருக்க முடியாது அணிந்து கொள்ள விதிக்கப்பட்ட வெள்ளை அங்கி வருவித்த பயமே அதைத் தூர வீசச் சொல்லிக் கண்டித்திருக்கும்.

படுக்கை அறைக் கதவு திறந்தது. உள்ளே இருந்து, கோமாளி உடுப்பு மாதிரி தொளதொளத்த பைஜாமாவும், ஆரஞ்சு நிறத்தில் மேல் குப்பாயமும் அணிந்து வெளியே வந்தான் முசாபர். அவன் பார்வை தெரிசா மேல் மட்டும் நிலைத்திருந்தது.

காருக்கு என்ன ஆச்சு?

வேறு எந்தத் தகவலும், அற்புதமும், கருணையும், சமாதானமும் தனக்குத் தேவையில்லை என்ற கறாரான தொனியில் கேட்டான் முசாபர்.

கார் தெரு ஓரமாக நிற்கும். எந்தத் தெருவானாலும் சரிதான்.

கொச்சு தெரிசா நெஞ்சில் குரிசு வரைந்தபடி, பொதுவாகப் பார்த்துச் சொன்னாள்.

அமேயர் பாதிரியார் உடனடியாக ஒரு பிரார்த்தனை செய்து காரோட்டி இல்லாத அந்தக் காரை, போன வாரம் கால்டர்டேல் கல்லறையில் உறங்கப் போன மெட்காப் என்ற, குரிசுப் பள்ளிக்குள் ஒரு முறையும் கால் வைக்காத, இங்கிலீஷ் மட்டும் பேச, எழுதத் தெரிந்த நடு வயசு வெள்ளைக்காரன் வாங்கி வந்த தன் முனைப்பான அந்தப் பிசாசு யந்திரத்தை நிறுத்திப் போடட்டும்.

தெரிசாவின் பார்வை யாசித்தது.

அதெப்படி தானே நிக்கும்?

முசாபர் தேவ வேளையில் அபசுவரமாக மேற்கேள்வி கேட்டான். மீன் சாப்பிடும்போது பல் உதிர்ந்து போயிருந்த எயிற்று இடைவெளியில் முள் குத்திய அவஸ்தையைப் பார்வையில் காட்டினார் அமேயர் பாதிரியார்.

உம்மை சாவகாசமாக வந்து கவனித்துக் கொள்கிறேன் என்று முகத்தில் துச்சமான புன்னகையை ஒட்டிக் கொண்டு வாசலுக்கு விரைவாக நடந்த முசாபர், யாரோ சத்தமாக ஏதோ சொல்வது காதில் பட, வேகமாக ஓட ஆரம்பித்தான்.

அதையொண்ணும் கவனிக்காமல், அமேயர் பாதிரியார் கொச்சு தெரிசாவிடம் ஆவலாக விசாரித்தார்.

போன வாரம் இதே கிழமைக்கு, இங்கே ஆடிய பறவை நினைவு இருக்கா தெரிசாளே?

இல்லாமல் என்ன அச்சோ, நீங்க சொன்னீர்களே. அன்னப் பறவையல்லவோ அது.

தெரிசா ஆர்வத்தோடு கேட்க ஒரு புன்சிரிப்பால் அவளைத் தடுத்தாட்கொண்டார் அமேயர் பாதிரியார். அறிவின் பிரகாசமும் ஆராய்ந்து முடிவுக்கு வருவதும் தேவ ஊழியர்களுக்கும் அவ்வப்போது தடைப்படுவதும், பின்னர் தெளிகிறதும் நடப்பதுதான். கொச்சு தெரிசா போன்ற ஏதும் அறியாத ஆட்டுக் குட்டிகளை இது போன்ற சுகவீனம் இன்னும் சுளுவாகப் பீடிக்க வாய்ப்பு உண்டு. அறியாமை களைய அல்லவோ அங்கி தரித்து அலைந்து திரிகிறார் அமேயர் பாதிரியார்?

மகளே, உன் தகப்பன் ஆந்திரோஸுக்கு ரொம்பப் பிடித்த செயல் நினைவு இருக்கா?

அமேயர் பாதிரியார் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார, குசினியில் இமல்டா கருணை காரணமாகக் கவிந்த மயக்கம் தீர்ந்து எழுந்து அங்கிருந்தே அமேயர் பாதிரியாரைப் பார்த்துக் கூவினாள்.

ஆந்திரோஸ் ஐயா நான் வேலைக்கு வந்தபோது என்னைத் தரக் கேடான காரியம் செய்யச் சொல்லித் தூண்டுவாரே அதுதானே அவருக்கு ரொம்பப் பிடிச்சது?

அப்பன் அந்த்ரோஸ் பற்றி தெரிசாவுக்கு வெகு விவரமாகத் தெரியும் என்றாலும் பணிப்பெண் மூலம், அதுவும் அவள் வயசுக்கும் குறைந்த இமல்டா மூலம் இத்தனை காலையில் வெளிப்படுவது அவளுக்கு உடன்பாடாக இல்லை.

இமல்டாவின் அம்மா மீதும் இப்போது அபர்டீனில் சலவைக்கடை வைத்திருக்கும் இமல்டாவின் சாயல் கொண்ட அவளுடைய தம்பி மீதும் அந்திரோஸுக்கு ஈர்ப்பு இருந்ததை அவள் அறிவாள். அமேயர் பாதிரியாருக்கும் அதெல்லாம் தெரியும். அதைச் சொல்லிக் காட்டிக் களி கொண்டு கூவிக் கூத்தாடவா அவர் வந்திருக்கிறார்?

இமல்டா வலதுகையைப் பூமொட்டாகக் குவித்து வாயில் வைத்துக் கொண்டு சிரிக்க, அமேயர் இமல்டா மேல் சாத்தான் கவிந்ததாக அறிவித்தார்.

அவளை இன்னிக்கு முழுக்க எந்த வேலைக்கும் வரவேணாம் என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பு என்று தெரசாவிடம் சொன்னார் பாதிரியார்.

இமல்டா கட்டாயமாக வெளியேற்றப்பட, வெளியே போகும்போது அவள் தெரிசாவின் கன்னத்தைக் கிள்ளி, காதில் அந்தரங்கமாக ஏதோ கேட்க தெரிசா முகம் கூச்சத்தால் சிவந்ததையும் அவள் இமல்டாவின் தலையில் தட்டித் தணிந்த குரலில் சிரிப்பதையும் நாற்காலியில் இருந்தே அமேயர் பாதிரியார் கண்டார்.

என்ன ரகசியமோ இந்தப் பெண்பிள்ளைகள் இடையில்? அதெல்லாம் அசங்கியமானதாக இருக்கும் என்று கையில் பிடித்திருந்த போப்பரசர் கடிதம் விரைப்பாகச் சொன்னது.

அச்சோ, இதோ வந்தாச்சு.

குசினிக்குப் போய் ரெண்டு கோப்பை சாயாவோடு தெரிசா நடுவீட்டுக்கு வந்தாள். பாதிரியார் போப்பரசரின் கடிதத்தை அங்கிக்குள் வைத்து விட்டு, நிறைய நன்றி சொல்லியபடி கோப்பையை வாங்கிக் கொண்டார். விடிந்து அருந்துகிற முதல் கோப்பை தேனீர் இது தான். காலையில் எழுந்ததும் போப்பரசர் கடிதப் பரபரப்பு தொடங்கி அதோடு கூட அலைபாயவே நேரம் சரியாக உள்ளது.

அந்திரோஸுக்கு குடும்ப மரம் வரைவதில் விருப்பம் அதிகம் உண்டு தானே?

அமேயர் பாதிரியார் கேட்டபடி இடது கையால், அங்கியின் பையில் இருந்து நாலாக மடித்த ஒரு காகிதத்தை எடுத்தார். அதைப் பிரித்து தெரிசாவிடம் கொடுக்க அவள் வேண்டாம் என்று அவசரமாக மறுத்தாள்.

அப்பன் எழுதிய நீள் சதுரங்களும், கோடுகளும் நிறைந்த குறிப்பு. நடு நடுவே ஆண், பெண் பெயர்கள் திருத்தமான கையெழுத்தில் சதுரத்துக்குள் இருந்து விழித்துப் பார்க்கும். அடிப்படையான காமம் மிகுந்து ராத்திரி முழுக்க சந்தோஷம் அனுபவித்து விட்டுக் குளிக்காமல் தெரிசா கை நீட்டித் தங்களைத் தொடுவதை அந்தப் பெயர்களைக் கொண்டவர்கள் விரும்ப மாட்டார்கள்.

அமேயர் பாதிரியார் புரிந்ததாகத் தலையசைத்து அவரே அந்தக் காகிதத்தை விளக்கினார்.

தெரிசாளே, போப்பரசர் சாம்ராஜ்ஜியத்தில் இருந்து வந்த கடிதத்தை அவருடைய கார்டினல்களில் ஒருவரான ஜோசப் ஈப்ப்ன் தெக்கேபரம்பில் பாதிரியார் எழுதியிருக்கார். கர்த்தர் அவருடைய பெயரை உச்சரிக்கக் கடினமானதாக வைத்த காரணம் தகுதியில்லாதவர்கள் அதைச் சொல்லிச் சிரமப்படுத்த வேண்டாமே என்பதாக இருக்கலாம்.

தெரிசா தேநீர்க் குடித்து முடித்திருந்தாள். குளிக்க வேண்டும் என்ற நினைவு இன்னும் வலுவாகத் தாக்க ஆரம்பித்திருந்தது. அமேயர் பாதிரியார் இப்போதைக்கு இறங்கிப் போவார் என்று தோன்றவில்லை. போப்பரசரில் தொடங்கி, இமல்டாவை வெளியேற வைத்து, குடும்ப மரத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு, கூடவே, யாரோ இந்தியக்கார பாதிரியாரின் மேன்மையைப் பாராட்டுகிற லயிப்பில் இருக்கிறார். அவர் போப்பாண்டவர் கடுதாசுக்கு வருவதற்குள் இன்று மதியமாகி விடும் என்று தெரிசாவுக்குப் பட்டது.

தெரிசா சற்றே நெளிந்து அசௌகரியம் காட்டினாள். நல்ல வேளை, அமேயர் பாதிரியார் விஷயத்துக்கு வந்தார்.

தெரிசாளே இது உங்க குடும்பத்தோட வம்சாவளியைச் சொல்கிற மரம். இந்தியாவில் தெற்கில் பெயர் வாயில் நுழையாத பிரதேசத்தில் ஒரு பிராமணக் குடும்பம். மூணு சகோதரர்கள். ரெண்டாமவன் கித்தாவயான்.

மன்னிக்கணும் அச்சா. அது இந்தியப் பெயர். ஜான் கிட்டாவய்யன்னு உச்சரிப்பு.

பாதிரியார் கலகலவென்று சிரித்தார்.

நல்லதாப் போச்சு. நீயே படி தெரிசாளே. ரெண்டே நிமிஷம் தான்.

அவர் சந்தோஷப் பட்டார். தெரிசா சாயாவில் தாராளமாகக் கலந்திருந்த சர்க்கரை புத்தியில் உற்சாகத்தை ஏற்றி சின்னச் சின்ன சந்தோஷங்களைப் பெரிசாக்கிக் காட்டுகிறது.

தமிழும் மலையாளமும் பேசும் அம்பலப்புழை பிராமணர்கள் மூணு பேர். அதிலே ரெண்டாமவன் கிட்டாவய்யன். ஜான் கிட்டாவய்யனான இவருக்கு தெரிசா மூத்த மகள், வேதையன் மகள். தெரிசா இங்கிலாந்து வந்து பீட்டர் மெக்கன்ஸியைக் கல்யாணம் செய்து, சந்ததி இல்லாமல் அந்தக் கண்ணி நின்று போனது. வேதையன், பரிபூரணத்தைக் கல்யாணம் செய்து அவளுக்கு ஒரே ஒரு பெண் குழந்தையாக தீபஜோதி. தீபஜோதியின் மகன் அந்திரோஸ், அவர் மனைவி நிக்கோலா. மகள் கொச்சு தெரிசா என்ற, அசுத்தமான இந்தப் பெண்குட்டி.

அமேயர் பாதிரியார் இதுக்கும் சிரித்தார்.

கொச்சு தெரிசாளே, போப்பரசர் அந்த தெக்கேபரம்பில் பாதிரியார் மூலம் சொல்ல வந்தது, அன்றைக்கு இங்கே ஆடியது அன்னப் பறவையில்லை. கண்டம் விட்டுக் கண்டம் போகும்போது வழி தவறிய மயிலாக இருக்கக் கூடும். மயில் வருவதாலோ வேறு பறவைகள் வருவதாலோ எந்தக் கெடுதலும் இல்லை. நல்லதே நடக்கும்.

இந்த இடத்தில் நிறுத்தி, அற்புத சுகமும் பரவசமும் அளிக்கிற தகவல் இல்லையோ இது தெரிசாளே. கெடுதல் அண்டாது விலகி ஓடும். இனி எப்போதும் நல்லதே நடக்கும் என்று ஆயரின் ஆயர் அளிக்கிற ஆசியும் செய்தியும் தினந்தினம் நாம் கால்டர்டேல் சந்தையில் மீனோடும் உருளைக் கிழங்கோடும் வெங்காயத்தோடும் வாங்கி வருகிற சமாசாரமா என்ன?

அது சரிதான். ஆனால் இந்தத் தகவலால் தனக்கு என்ன உபயோகம் என்கிறது போல் கொச்சு தெரிசா அமேயர் பாதிரியாரைப் பார்த்தாள்.

விஷயமுண்டு என்கிற தொனியில் அவர் இன்னொரு முறை சிரித்தார்.

இதுவரை போப்பரசர் சொன்னபடிக்கு இருக்கப்பட்ட கடிதத்தில் கண்ட வார்த்தைகள். தெக்கேபரம்பில் பாதிரியார் எனக்கு தனிப்பட எழுதிய கடிதம் ஒன்று உண்டு. அதைக் காண்பிப்பதற்கில்லை. மயில் எப்படி மிகச் சரியாக உன் வீட்டு முகப்பில் வந்து ஆடியது என்பதற்கான சிறு தகவலாவது உன் பூர்விகம் மூலம் தெரிய வரலாம் என்கிறார் அவர். மடம் மூட நம்பிக்கைகளை ஆதரிப்பதில்லை. உனக்குத் தெரியாததில்லை தெரிசாளே.

நான் என்ன செய்யணும்?

தெரிசா எழுந்து நின்றாள். அவளுக்கு இதொண்ணும் ஒரு சுக்கும் பிரயோஜனமானதாக இருக்கும் என்று தோன்றவில்லை.

உன் தேன்நிலவுக்கு முசாபரைக் கூட்டிக் கொண்டு நீ ஏன் இந்தியா போய்வரக் கூடாது?

அமேயர் பாதிரியார் கேட்டுக் கொண்டிருக்கும்போதே வாசலில் வெகு களேபரமாக மெட்காபின் கார் நுழைந்தது. முன் சுவரில் மோதி செங்கல் உதிர்த்து அது நிற்க உள்ளே இருந்து பெரிய சாதனை செய்த தோரணையில் முசாபர் இறங்கினான்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன