எஸ்.பொ அளவுக்கு விமர்சனத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலைமை ஒரு படைப்பாளிக்கு வந்தால் கூறாமல் எழுத்து சந்நியாசம் போயிருப்பான். போயிருப்பாள். தமிழ் என்றில்லை, எந்த மொழி என்றாலும் இதே படிக்குத்தான். இவ்வளவு நீண்ட காலம், அதாவது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு இப்படி யாரையும் துரத்தித் துரத்தி அடிக்க விமர்சகர்களும் சக எழுத்தாளர்களும் எங்கேயும் முனைந்ததாகத் தெரியவில்லை. சளைக்காமல், புறமுதுகு காட்டாமால் இந்த மாட்டடி, காட்டடியை எல்லாம் சமாளித்து நிற்கவே ஏகப்பட்ட பிரயத்தனம் தேவை. இதோடு கூடவே புதிதாகப் படைக்கும் பணியையும் செவ்வனே செய்ய வேண்டும். சொந்த வாழ்வின் சோகங்கள், பிறந்த மண்ணைப் பிரிய நேர்ந்த அவலம், இடைவிடாத போர், இழப்புகள் என்று இந்தச் சுமையை இன்னும் நெஞ்சில் அழுத்தி வைக்க மற்ற காரண காரியங்களும் ‘முஸ்பாத்தியாக’ செயல்படும். சொன்னேனே, இத்தனையும் சுற்றிச் சூழ்ந்து வாதனை செய்தால் எழுத்தும் வேணாம், முடியும் வேணாம் என்று லேப் டாப் கம்ப்யூட்டரை ஷட் டௌண் செய்து விட்டு வேட்டியை மடக்கிக் கட்டி கொண்டு நான் நடேசன் பூங்காவில் நடக்கப் போயிருப்பேன். எஸ்.பொ எழுதிக் கொண்டிருக்கிறார்.
அவருடைய அபிப்பிராயங்கள், அவருடைய விமர்சகர்கள் அவர் பற்றித் தெரிவித்ததை விடக் கூர்மையானவை. அந்த விமர்சனங்கள் இல்லாவிட்டால் எஸ்.பொவுக்கு அவருடைய படைப்பு இலக்கியம் தவிர மற்ற முகம் இல்லாமல் போயிருக்கலாம். அவர் படைப்புகளே போதும்தான் அவருடைய கலகத் தன்மையை, குழு மனப்பான்மையை வெறுத்து சுதந்திரனாக நடைபோடும் தலை நிமிர்வை எடுத்துக் காட்ட. ஆனாலும் விமர்சகரை விமர்சிக்கும் எஸ்.பொவின் எழுத்து தரும் பரிமாணம் அலாதியானது.’வடிவான நளினப் பகிடிகளும்’ கூட இவை. சுதியாத்தான் இருக்கு.
காளமேகப் புலவரிடம் ‘பாடல் பெற்ற’ இரண்டு தலைமுறை முந்திய கவிராயர்களின் இலக்கிய வாரிசுகள் எஸ்.பொவிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளவென்றே ‘இந்திரிய எழுத்தாளர்’, ‘விளங்குதில்லை எழுத்தாளர்’ ரக விமர்சனக் காகித அம்புகளை எறிந்து விட்டு முறை வைத்துக் கொண்டு காத்திருப்பார்கள் போல. அவரும் வஞ்சனை இல்லாமல் ஸ்பின் போட்டுத் தாக்குகிறார். தருமு சிவராமு க்ளீன் போல்ட் ஆக இதோ ஒரு கூக்ளி – ‘சுய குள்ளச் சந்தோஷத்துக்காக (தீ நாவலை) எதிர்த்துச் சந்நதமாடி .. ஓவியம் கதை கவிதை நாடகம் விமர்சனம் என்ற இவற்றுள் எது தனக்கு வசப்படும் ஊடகம் என்பதையறியாது பிறர் தயாளங்களிலே குருவிச்சையாக வாழும் இவருக்கு, இன்றளவும் ஒரு புனைப்பெயரை நிரந்தரமாக்க முடியவில்லை’.
எதிர்ப்பு, ‘திருக்குடந்தை நாயே, கோட்டானே, உனையொருத்தி போட்டாளே வேலையற்றுப் போய்’ என்று திரும்பத் திரும்ப நாலு வரி வெண்பாவில் திட்ட வைத்துக் காளமேகத்தை spent force ஆக்கியது. அதுவே ‘சுள்ளி உடம்பு’ எஸ்.பொ எழுத்தை பாசிட்டிவ் ஆகப் பாதித்துத் ‘துணிச்சலும், ஓர்மமுமாக’ உயிரூட்டிக் கொண்டிருக்கிறதோ என்னவோ தெரியலை. திட்டத் திட்டத் திண்டுக்கல்.வைய்ய வைய்ய வைரக்கல். A rolling stone which gathers momentum and no moss.
அரு.ராமநாதனின் ‘காதல்’ பத்திரிகையில் 1949-ல் சிறுகதை எழுதி இலக்கியப் படைப்புக்கு வந்த எஸ்.பொ ஐம்பது வருட காலமாக முடங்காமல், எந்த writer’s mental block-லும் சிக்காது எழுதிக் கொண்டே தான் போகிறார். கவிதை எனக்கு கொஞ்சம் வீக் என்கிற எஸ்.பொ அதையும் விட்டுவைக்கவில்லை. சிறுகதை, நாவல், கட்டுரைத் தொகுப்பு என்று அவருடைய படைப்புகள் முதலாவதாக ஈழத்திலும் தொடர்ந்து தமிழகத்திலும் நூல் வடிவம் பெற்ற, பெறும் போதெல்லாம அவர் அதற்கு காத்திரமான ஒரு முன்னுரை சேர்க்கத் தவறவில்லை. இது தவிர ஏனைய படைப்பாளிகளின் பல தொகுப்புகளை வெளியிடும்போதும் அவருடைய முன்னுரை தான் கட்டியம் கூறி முன்னால் வந்து படிக்கச் சொல்கிறது. அப்புறம், அவரிடம் முன்னுரை கேட்டு வந்த யாரையும் அவர் நிராசையோடு திரும்ப வைத்ததாகத் தலவரலாறு இல்லை. ஆக, இந்த அரை நூற்றாண்டில் எஸ்.பொ எழுதிய முன்னுரைகளைத் தொகுத்தபோது நானூறு பக்கத்தைக் கடந்து முன்னேறிப் போய்க் கொண்டிருக்கிறது அந்தத் தொகுப்பு.
தொகுதியை ஒட்டு மொத்தமாகப் படிக்கும் போது பலரையும் அறிமுகம் செய்து கொள்கிறோம். அவர்கள் எழுதியதைப் படிக்காமல் எஸ்.பொ மூலமாகப் பெறும் அறிமுகம் மட்டும் போதுமா என்ற குற்ற போதத்தில் அவர்களோடு யந்திர கதியில் கை குலுக்கி விட்டு எஸ்.பொவோடு இவரையும் கடந்து நடக்கிறோம். அப்போது, எஸ்.பொ பரிந்துரைக்கும் இந்தப் புத்தகத்தை என்றைக்காவது படிக்க வேண்டும் என்று மனதில் குறித்துக் கொள்ளக் கூட நேரம் இல்லாமல் அடுத்த முன்னுரை, அடுத்த அறிமுகம். சட்டென்று குற்ற உணர்வு எல்லாம் தீயினில் தூசாக நீங்க, முன்னுரை படித்தபடி எஸ்.பொ கூட முன்னே நடப்பதே செய்யத் தகுந்த செயல் என்று படுகிறது. முன்னுரைகளின் உலகத்தில் எதற்குக் குற்ற போதம்? அறிமுகப் படுத்திக் கொள்ளத்தான் இங்கே வந்திருக்கிறோம். கிரணத்தைப் பற்றிப் பிடித்து சூரியனை அடைவது அவரவர் முயற்சியைப் பொறுத்தது.
எஸ்.பொவின் one-up-manship இன்னொரு சுவாரசியம். தீ நாவல் (குறுநாவல்?) 1961-ல் வந்த கதை என்பதை நம்ப முடியவில்லை. இன்றைக்கும் அதை எழுத அசாத்திய துணிச்சல் தேவை. அதற்காகவே அவருக்குக் கோடம்பாக்கம் மேம்பாலத்துக்குக் கீழே ஒரு சிலை வைக்கலாம். ஆனாலும் பிரமீள் மட்டுமில்லை, ‘முற்போக்கு இலக்கியத்துக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருந்த ஜாம்பவான்களும்’ தீ பற்றி நொட்டைச் சொல் சொன்னார்கள். அவர்களுக்குப் பதிலடி கொடுத்து விட்டு நாவல் வடிவத்தில் ஒரு மாற்று குறைத்துத் தோன்ற வைக்கும் என்று அவருக்கே பட்ட சில அம்சங்களைக் குறித்து எஸ்.பொ கதைக்கிறது இந்தப்படிக்கு – ‘இந்த நவீனம் சிறியது. ஆனால் பாத்திரங்களோ அதிகம். (அவற்றை) முழுவடிவில் வடித்தெடுக்க முடியவில்லை .. ஆதார செய்திகள் மட்டும் எலும்புக் கூட்டு உருவத்தில் தரப்படுகின்றன. பாத்திரங்களின் இயல்பான பேச்சு மொழியைப் பல வசதிகள் கருதிச் சில இடங்களில் தவிர்த்துள்ளேன். வேறு சில இடங்களில் உபயோகித்துமிருக்கிறேன். இது consistency-க்கு மாறுபடினும் இந்த உத்தி கதைக்கு வலுக் கூட்டுகிறது என்பது என் துணிபு’. இதுக்கு மேலேயும் புதிதாகக் கண்டுபிடித்து யாழ்ப்பாணத்து டபிள் டாக்டரேட் உயர்சாதிக் கலாநிதிகள் தாக்க வந்தால் எஸ்.பொ திறீறோஸ் சிகரெட்டை வலித்தபடி வரவேற்கக் காத்திருக்கிறார். நட்பாகத்தான்.
யாழ்ப்பாணத்தோடு எஸ்.பொவுக்கு இருக்கும் love – hate ரிலேஷன் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். யாழ்ப்பாண வீட்டு கிடுகு வேலிகள் அவருக்கு வலிமையான மெடஃபர். உணர்ச்சிகளின் சொரூபங்களையும், எண்ணங்களின் முகங்களையும் வெளிக்காட்டாது திரையிடும் மனோபாவமும் செயலும் கலந்து பிடிக்கிற உருவகம் இந்தத் தென்னோலை வேலி (cadjan curtain). ‘ஆமைக்கு ஓடு எப்படியோ அப்படித்தான் யாழ்ப்பாணத்துக்குத் தென்னோலை வேலி’ என்பார் எஸ்.பொ. இலங்கைத் தமிழ் இலக்கியங்களின் தலைமைப் பீடம் சாதி மேன்மை காரணமாக யாழ்ப்பாணமாகி ‘யாழ்ப்பாணத்து வெளிவேட கலாசாரத்தைப் பேண விழைந்தபோது மற்றவர்கள் அப்போக்கிற்கு இசைவாக எழுதினார்கள்’. பண்பாடு, சமூக அமைப்பு போன்றவற்றின் தாக்கத்திலிருந்து விடுபட முடியாமல் அரசு உத்தியோகம் ஏற்படுத்திக் கொடுத்த பொய்யான உயர்ச்சி என்ற தளத்தில் பட்ட ‘யாழ்ப்பாண நடுத்தர வகுப்பு ஒரு வௌவால் இனம்’. ‘எதையும் ரூபா சதங்களிலே மதிப்பிடுவது யாழ்ப்பாணத் தமிழரின் மகத்தான பண்பு என்ற உண்மையை ஒப்புக் கொள்வதற்கு நாம் கூச்சப்படலாகாது’. இதெல்லாம் யாழ்ப்பாணத் தமிழ்க் கலாசாரம் குறித்து எஸ்.பொ வைக்கும் விமர்சனம்.
அதே நேரத்தில் அவர் யாழ்ப்பாணத் தமிழ்க் கலாசாரத்தின் சிறப்பான அம்சங்களில் முழுக்கத் தோய்ந்து துய்த்த அச்சு அசல் தமிழனும் கூட. ‘மார்கழி திருவெம்பாவைக் காலத்தில், குளிரும் வைகறை இருளில், யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கும் ஊதப்படும் ஓசை செவிகளில் விழுந்ததும்’ சிலிர்க்கும் மெய் அவருடையது.
இன்னார் எழுதும் தொடர்கதை படித்ததும் கண்கள் குளமாயின என்று தமிழ்ப் பத்திரிகைகளுக்கு வரும், வந்ததாகப் பிரசுரமாகும் கடிதங்களின் தொனி போலியாக இருக்கலாம். எஸ்.பொ அவரைப் பாதித்த யாழ்ப்பாணத்தைச் சித்தரிப்பதைப் படித்துக் குளமாகாத கண் இருந்து என்ன பிரயோஜனம்? அவர் மகன் மரித்த துயரத்தைச் சொல்கிறார் – எஸ்.பொ மீசையையும் இழந்து, நான்கு முழக் காரிக்கன் மட்டுமே சங்கையை மறைக்க நான் நடுத்தெருவில் ஊருகின்றேன். தோளிலே கொள்ளிக் குடம். யாழ்ப்பாணக் கலாசாரத்தினை விமர்சனம் செய்தல் கலையே. அந்தக் கலை வித்தாரத்திலும் என் எழுத்து வித்துவம் ஈடுபட்டிருக்கிறது. நான் நிராகரித்த சட்ங்குகளுக்கு நானே மண்டியிடும் நிலையோ. தோல்வி வித்தும் சோகம் கும்மிருட்டிலே என்னைப் பிசைந்தெடுக்கிறது. குஞ்சுக் குழந்தையாக, பச்சை மண்ணாக நான் தேம்பித் தேம்பி அழுகிறேன். பரந்த உலகத்திலே யாருக்குமே நாதி இல்லாத அனாதையாக்கப்பட்டேனோ?’.
யாழ்ப்பாணம் குறித்து தன் மூளை நியூரான்களில் அழிக்க முடியாதபடி செதுக்கிய பழைய நினைவுகளூடே பயணம் போய், நிகரற்ற ‘நனவிடை தோய்தல்’ படைப்பைத் தமிழுக்குக் கொடையாக்கியதும் அதே எஸ்.பொ தான். அந்த அற்புதமான நூலுக்கு அவர் எழுதியது ரெண்டே ரெண்டு பக்க முன்னுரை கிடுகுவேலி இல்லைதான்.
எஸ்.பொவின் முன்னுரைகளில் ‘டாப் டென்’ கவுண்ட் டவுண் பட்டியல் தயாரிக்கிற அபத்தக் காரியம் எதையும் இங்கே செய்ய உத்தேசம் எனக்கில்லை. ஆனாலும் மனதைக் கவர்ந்த சில முன்னுரைகளை, எந்த வித தர்க்கத்துக்கும் உட்படாத வரிசையில் சிலாகிக்கப் போகிறேன். ஆம், சிலாகிக்கத்தான். எஸ்.பொவை விமர்சிக்க இந்தப் ‘பெடியன்’ யார்? எதற்கு விமர்சிக்க வேணும்?
ஈழத்து மஹாகவியின் குறும்பா புத்தகம் மூலம் எனக்கு அறிமுகமானவர் எஸ்.பொ. என் ஆசான்களில் முக்கியமானவர்களான கவிஞர் மீராவோ வைணவ ஆய்வறிஞர் டாக்டர் ம.பெ.சீனிவாசனோ கொடுத்த சிரித்திரன் தொகுப்பு நூல் அது. அந்தப் புத்தகத்துக்கான எஸ்.பொவின் முன்னுரையை திரும்பத் திரும்பப் படித்தபோது நான் கல்லூரியில் நுழைந்திருந்தேன். இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதும் திரும்ப அந்த வயதுக்குச் சுகமாகப் போய் நிற்கிற பிரமை.
கவிதை வீக் என்று சுய விமர்சனம் செய்து கொண்டாலும் பா, குறும்பா பற்றிய எஸ்.பொவின் கருத்துகள் கூர்மையானவை. முதலில் மொழிபெயர்ப்புக் கவிதை பற்றி. ‘ கவிதையின் உயிர் மொழிபெயர்ப்பின் போது வடிசீலையிலேயே தங்கி விடுதல் சாத்தியம்’. ஆங்கில லிமரிக்கின் மொழிபெயர்ப்பு குறும்பா இல்லை என்று நிறுவ முயலும் எஸ்.பொ லிமரிக்கின் அருட்டுணர்வை (inspiration) மறுக்காதவர். ரத்தினச் சுருக்கமாக குறும்பாவுக்கு அவர் சொல்லும் விளக்கம் ‘ஈரடியில் நிறைவுறுவது குறள். குறுமை சான்ற மூன்று அடிகளில் முடிவடையும் புதிய தனிப்பாடல் அமைப்பு குறும்பா’. காய்-காய்-தேமா, காய்-காய்-தேமா, காய்-காய்-தேமா-காய்-காய்-காய்-காய்-காய், காய்-காய்-தேமா என்று அதன் யாப்பைத் தன் முன்னுரையில் அடுத்து நிறுவி மஹாகவி குறும்பாக்களுக்கு இலக்கணம் சொல்லி, ‘முதலாம் அடி அடிகோலுவதாகவும், மூன்று மடிப்பான இரண்டாம் அடி கட்டி எழுப்புவதாகவும், இறுதி அடி முத்தாய்ப்பிடுவதாகவும் குறும்பா அமைவதே சிறப்புடைத்து’ என்று விளக்கி விட்டுத்தான் குறும்பாவின் இலக்கியச் சுவைக்குக் கடக்கிறார் எஸ்.பொ.
பெஞ்சனிலே வந்தழகக் கோனார்
பெருங்கதிரை மீதமர லானார்.
அஞ்சாறு நாள் இருந்தார்
அடுத்த திங்கள் பின்னேரம்
பஞ்சியினாலே இறந்து போனார்.
மஹாகவியோடு, எஸ்.பொவோடு நாமும் பென்ஷன் வாங்கிச் சாய்வு நாற்காலியில் சாய்ந்து வேலை இல்லாத வெறுமையில் கரைந்து போன கோனாரை ஒரு குறும்பா மின்னலில் மனதில் உறைய வைக்கிறோம். பஞ்சி தான் ‘ennui’யா என்று எஸ்.பொவைக் கேட்க வேணும். குறும்பா நூலையும் மறுபடி தேடிப் படிக்க வேண்டும்.
ஆனாலும் மஹாகவியின் இசைப்பாடல்களைப் பற்றிச் சொல்லும்போது, அவற்றை வாசித்து மகிழ விழையும் சுவைஞர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார். ‘ கவிதை என்ற கலைப்பீடத்தில் நின்று இசைப் பாடல்களை நோக்குதல் ஆகாது. இசைக்காகப் பாடல்கள் எழுதப்படும்போது அவற்றில் கவிதைக்குரிய நிறைவுகள் பல கைவிடப்பட்டு, அவற்றிற்கு ஈடாக இசைக்குரிய நிறைவுகள் இடம் பெறலாம். எனவே இவற்றை மஹாகவியின் பிற கவிதைகளோடு வைத்துக் கவிதையாகக் கொண்டு தரம் நிர்ணயிக்க முயலுதல் பழுது’. இழுக்குடைய பாட்டுக்கு இசை நன்று என்று எஸ்.பொ இன்னும் நினைக்கிறாரா தெரியவில்லை. குற்றாலக் குறவஞ்சியும், நந்தன் சரித்திரக் கீர்த்தனையும் பாட்டு மட்டும்தானா? கவிதையில்லையா?
ஏ.ஜெ.கனகரத்தினாவின் ‘மத்து’ நூலை வெளியிட்டது மட்டுமின்றி அதற்கான ஒரு அறிவுசார் முன்னுரையும் அளித்திருக்கிறார் எஸ்.பொ. லண்டன் பத்மநாப ஐயர் மூலம் நான் பரிச்சயம் செய்து கொண்ட இரண்டு மகா மேதைகள் ஏ.ஜெயும், ரெஜி ஸ்றீவர்த்தனேயும். ஏ.ஜெயின் குரு ஸ்றீவர்த்த்னே. ஏ.ஜெயிடம் இலக்கிய ஞான தீட்சை வாங்கிய ஈழ எழுத்தாளர்கள், விமர்சகர்கள் அநேகம். தமிழகத்தில் பார்க்கக் கிடைக்காத குரு சிஷ்ய பரம்பரை இது. இந்த ஒரு விடயத்திலாவது ஈழத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே தோன்றுகிறது.
ஏ.ஜெயின் நல்ல நண்பரான எஸ்.பொ, அவருடைய பலதுறை சார்ந்த அறிவின், அதன் தெள்ளிய வெளிப்பாட்டின் சிறப்பை ஏ.ஜெயைத் தெரியாதவர்களுக்குச் செய்து வைக்கும் அறிமுகம் முக்கியமானது. ‘மத்து’வில் ஏ.ஜெ எழுதிய பதினோரு கட்டுரைகளில் இலக்கியத்தை அறிமுகம் செய்கிறது ஒன்றே ஒன்று தான். மற்ற பத்தும், பொருளியல், சூழலியல், உளவியல், மொழி வரலாற்றியல், ஆட்சியியல், ஆட்சியியல், அரசியலைப்பு ஆராய்ச்சி, மருத்துவம், திரைப்படக் கலை, தொன்மவியல், மானிடவியல் ஆகியவை பற்றிய நூல்களை அறிமுகம் செய்து வைப்பவை. ஆந்திராவின் தடா பகுதி எல்லை கடந்து வடவேங்கடம், தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலக டமில் எழுத்தாளர்களான நாம் இப்படி எத்தனை மத்துக்களை உருவாக்கியிருப்போம்? சுண்டு விரலைக் கூட மடக்க முடியாது.
எஸ்.பொவின் ஒரு புத்தகத் தலைப்பு ‘?’ புத்தகத்தின் தலைப்பு மட்டுமில்லை, முன்னுரையிலும் அசாதாரணம் தெரிகிறது. எனக்குத் தெரிந்து compression of time பற்றிய ‘டி ஒன் இஸ் ஈக்வல் டூ டி ஸ்கொயர் ரூட் ஓ•ப் ஒன் மைனஸ் வி டூ பை டி டூ’ என்ற அறிவியல் சமன்பாடு வந்த ஒரே தமிழ்ப் புத்திலக்கிய நூல் முன்னுரை இதுதான்.
‘சௌந்தர்ய உபாசகர் அல்லாத’ ஹனீபாவின் ‘மக்கத்து சால்வை’ சிறுகதைத் தொகுதிக்கு எஸ்.பொ அளித்த முன்னுரையில் இருந்து பளிச்சென்று மனதில் புகுந்து கொள்ளும் வண்ணமயமான பகுதி இது – ‘ ஹனீபாவுக்கு மனித நேசிப்பின் இன்னொரு ஸ்திதிதான் இலக்கியம். மானுசீகத்தினை அழகு சிதையாமல், கலை பழுதுபடாமல், மப்பு வானில் கணநேரக் களிப்புக் கோலங்காட்டும் வானவில்லைப் போன்ற ஒரு கலாதி!’.
எஸ்.பொவிடம் வியத்தலும் இலமே என்று விட்டேத்தியாக இருக்க முடியாத இன்னொரு அம்சம் அவருடைய அக்கறை. ஏ.ஜெயின் மத்துக்கு ஒதுக்கிய அதே அக்கறையை நாகூர் பாவாவின் குழந்தைக் கவிதைகளை சிலாகித்து அறிமுகப்படுத்துவதிலும் காட்டுகிறார் அவர். content agnostic வாசிப்பின் சாதக பாதகங்களுக்குள் எல்லாம் போகாமல் சிரத்தையை மட்டும் முன்னிலைப் படுத்துகிறேன். அவர் வயதில் எனக்கெல்லாம் பஞ்சை வந்துவிட வாய்ப்பு இருக்கிறது.
திரும்பத் திரும்ப இந்த முன்னுரைகளில் புலப்படுவது எஸ்.பொவின் வாசிப்பு அனுபவத்தின் பரப்பு. முத்துலிங்கத்தை ஒரு நல்ல சிறுகதையாசிரியராக, கட்டுரையாளராக, ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரியாக மட்டும் அறிந்த எனக்கு எஸ்.பொ முன்னுரையில் கிடைத்த தகவல், அவர் நல்ல கணிப்பொறியாளரும் கூட. விஷுவல் பேசிக் மேக்ரோ கோடிங் பற்றி முத்துலிங்கம் எழுதிய ஆங்கிலப் புத்தகத்தையும் தேடிப் படித்து அதில் வந்த இலக்கிய மேற்கோளை எடுத்துக்காட்டத் தவறவில்லை எஸ்.பொ. அந்த ‘Getting to know Visual Basic Procedures – An Introduction to Macro Language’ புத்தகம் எங்கே கிடைக்கும் என்று அவரைத்தான் விசாரிக்க வேண்டும்.
ஈழத் தமிழர்கள் படைப்பிலக்கியத்தில் சோதனை முயற்சிகளுக்குத் தயங்கியதே இல்லை என்பதை இந்தத் தொகுப்பில் சில முன்னுரைகள் சுட்டுகின்றன. நாலு பாத்திரங்கள். அவற்றை வைத்து நாலு எழுத்தாளர்கள் எழுதிய தொனி மாறுபாடு அமைந்த நாலு கதைகள். இப்படி ஒரு நூல். நவரசங்கள். அவை பற்றி மூன்று எழுத்தாளர்கள் எழுதிய கதைகள். இது இன்னொரு தொகுப்பு. முன்னுரையோடு நிறுத்திக் கொண்ட நூல்கள். படைப்பில் பங்களிப்பும் செய்த புத்தகங்கள். பதிப்பித் நூல்கள். எஸ்.பொ எதையும் விட்டுவைக்கவில்லை. மலைக்க வைக்கிற இலக்கியத் தேடலுக்கும் ஈடுபாட்டுக்கும் இனி சுருக்கமாக எஸ்.பொவிஸம் என்று பெயரிட்டு விடலாம்.
அவருடைய அசைக்க முடியாத இலக்கிய நம்பிக்கையும் சேர்ந்ததுதான் இது. ‘இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ்க் கதைகளின் களங்கள் பனை வளராப் பனி பெய்யும் நாடுகளிலும், sub-sahara நாடுகளிலும் விரிவுபடும். அக்கதைகளிலே மானிடத்திலே அசைக்க முடியாத நம்பிக்கையும் மனித நேயமும் ஒளிரும். மொழி – கலாசாரம் – பண்பாடு – மதம் – நிறம் ஆகிய அனைத்து வேறுபாடுகளும் இற்று, எல்லோரும் கேளிர் – kin – சுற்றத்தார் என முகிழ்ந்திடும் மானிடம்’.
சில முன்னுரைகளைப் படிக்கும்போது பழைய வரலாறு புரிபடுகிறது. ஏற்கனவே விஷய ஞானம் உள்ளவர்களுக்கு நாஸ்டால்ஜியா கூட இது. உதாரணம் எழுபதுகளில் இலங்கையில் கொண்டு வந்த தமிழ்ப் பத்திரிகை இறக்குமதித் தடைவிதிப்பு. தற்போதைய அரசியல் சமன்பாடுகள் அல்லது சமன் இல்லாத சமர்கள் தொடங்குவதற்கு முந்திய மாந்திரீக யதார்த்த சூழல் அது. மாதம் மூன்று கோடி ரூபாய் இறக்குமதிச் செலவை இலங்கை செய்ய வேண்டி வந்தது அப்போது. ஐம்பத்திரெண்டு தமிழ் வார, மாதப் பத்திரிகைகளைத் தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்த வகையில் கஜானாவை விட்டுப் போன அந்நியச் செலாவணித் தொகை அது.
இது தொடர்பாக, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஈழத் தமிழரசு கட்சி மற்றும் தமிழர், சிங்கள அரசியல் பிரமுகர்கள் என்று பலரின் கருத்து நிலைபாட்டை அலசி எஸ்.பொ எழுதிய அறிக்கை இந்த முன்னுரைத் தொகுப்பின் முக்கிய ஆவணம். உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்னும் தோழர்கள் தமிழ்நாட்டுப் பத்திரிகைகளுக்குத் தடை விதிக்கப் போராடியதை lapsed communist ஆன எஸ்.பொ (மன்னிக்கணும் ஆசானே, வேறே வார்த்தை கிடைக்கவில்லை) ஒரு பிடி பிடித்து விட்டு, எந்த எந்தப் பத்திரிகையை இறக்குமதிக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தி அனுமதிக்கலாம் என்று சிபாரிசு செய்த முஹிதீன் அறிக்கைக்கு வருகிறார்.
‘ஆனந்தவிகடன், குமுதம், கலைமகள், மஞ்சரி, அம்புலிமாமா, கலைக்கதிர், தீபம், தாமரை, கல்கண்டு, அமுதசுரபி, வானொலி, திட்டம் ஆகிய பன்னிரெண்டு பத்திரிகைகள் இறக்குமதியாவதை, பிரதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதின் மூலம் ஒருவகைக் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வருதல் வேண்டும் என்பதுதான் முஹிதீன் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் சாரமாகும்’.
க.நா.சு பட்டியல், ஜெயமோகன் பட்டியல், எஸ். ராமகிருஷ்ணன் பட்டியல் மாதிரி சுவாரசியமான ஒன்று முஹிதீன் பட்டியல். லாஜிக் எல்லாம் தேடாமல் ரசிக்கலாம். தாமரை இறக்குமதி வேண்டாம் என்று ஈழத்து காம்ரேடுகள் எப்படிச் சொன்னார்கள்? முஹிதீன் நினைவு படுத்தினாலும் அவர்கள் சுய மறுப்பில் தாமரையை, முற்போக்கு இலக்கியத்தை மறுதலித்து விட்டிருந்தார்களா? அல்லது இலங்கை முற்போக்கு இலக்கியத்துக்கும் இந்திய முற்போக்குக்கும் நடுவே வங்கக் கடல் கடந்து போனதா?
வானொலி என்ற ஒரு பத்திரிகை இருந்ததும் மறைந்ததும் எல்லாம் இந்தப் பட்டியலைப் படித்துத்தான் என் நினைவுக்கு வருகிறது. சென்னை (மதறாஸ்), திருச்சி வானொலி நிலைய தினப்படி நிகழ்ச்சி விவரங்களைப் பிரசுரிக்க என்று அரசு வெளியிட்ட இந்தப் பத்திரிகையை தமிழ்நாட்டில் யாரும் வீட்டில் கிரமமாக வந்து விழ சந்தா செலுத்தி வாங்கியதில்லை என்று அடித்துச் சொல்லலாம். முழுக்க லைப்ரரி பத்திரிகை இது. கொரகொர என்று மீடியம் வேவ் இரைச்சலுக்கு நடுவே லோ பவர் டிரான்ஸ்பார்மர்கள் தயவில் ஆகாசாவாணி ஒலிபரப்பிய சீரிய நிகழ்ச்சிகளை இலங்கையர்கள் கேட்க என்னத்துக்காக க்யூ நின்று வானொலி பத்திரிகை வாங்கினார்கள்? மற்ற பத்திரிகைகள் இருக்கட்டும். திட்டம், அதான் நம் மத்திய அரசின் ‘யோஜனா’வின் தமிழ்ப் பதிப்பு. சும்மாக் கொடுத்தால் கூட யாரும் தொடத் துணியாத இந்த கவர்மெண்ட் காகிதத்தை இறக்குமதிக் கட்டுப்பாட்டில் வைத்தாவது சிரமப்பட்டு வாங்கிப் படிக்க ஈழத்தவரை முன் நடாத்தியது எது? எஸ்.பொ சொல்லவில்லை. காப்ரியல் கார்சியோ மார்க்வே, நீராவது சொல்லும் வே.
கிட்டத்தட்ட நாற்பது பக்கம் வரும் இந்த பத்திரிகை இறக்குமதிச் சட்டம் பற்றிய கட்டுரை தொகுப்பின் மிக நீண்ட படைப்பு என்றால், தமிழச்சியின் ‘எஞ்சோட்டுப் பெண்’ணுக்கு இரண்டே இரண்டு பத்தியில் எஸ்.பொ எழுதிய முன்னுரை ஆகச் சிறிய ஒன்று. இரண்டாம் பதிப்பு கண்ட இந்தக் கவிதைத் தொகுதிக்கு கூட ஒரு பத்தி எழுதிச் சேர்த்திருக்கிறார் என்பதையும் சொல்லியாக வேண்டும். அடுத்த பதிப்புக்காவது எஞ்சோட்டுப் பெண்ணுக்கு சற்று விரிவான முன்னுரையை எஸ்.பொவிடம் தமிழச்சி எதிர்பார்க்கிறாரோ என்னமோ நான் எதிர்பார்க்கிறேன்.
437 பக்கப் புத்தகத்தைப் படித்து ஒரு வாரத்தில் முன்னுரை ஒன்று எழுதித் தரும்படி எஸ்.பொ என்னைப் பணிக்க என் எந்தத் தகுதியும் காரணம் இல்லை என்று தெரியும். ஒரு எழுத்தாளனாக இல்லாவிட்டாலும், விரைந்து படித்து ரசித்து அதை சிலாகிக்கவோ குற்றம் சொல்லவோ கூடிய ரசிகனாகவே இந்தக் கடமையை ஏற்பித்தார் என்று திடம் செய்து கொண்டு பிரித்த பக்கம் மிரள வைத்தது. ஒரு சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரையாக எஸ்.பொ சொல்வது இது-
“சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரையும் சேர்த்துக் கொள்ளுதல் சம்பிரதாயமான காரியமாக நிலைத்து விட்டது. அப்படி ஒரு முன்னுரை எழுதுபவர், அந்தத் துறையிலே தமக்குள்ள புலமையை, அன்றேல் புலமை இன்மையை ஓரளவிற்கு விண்டுகாட்டி, தமது நூலின் சில பக்கங்களளைத் தமது சுயவித்துவ அளப்பலுக்கும் ஒதுக்கித் தந்துவிட்டாரே என்று மனச்சாட்சியின் முள் உறுத்த, கதாசிரியரைப் பற்றி நான்கு வரிகளும், கதைகளைப் பற்றி இரண்டு வரிகளும் எழுதும் திருக்கூத்தாகவே இக்கைங்கரியம் நிலைபெற்று வருகிறது’.
எஸ்.பொ பகிடி செய்த இந்தச் சட்டகத்துக்குள் அகப்படாமல் தப்பிக்க ஒரே வழி இங்கே இந்த முன்னுரையை முடித்துக் கொள்வதுதான். சுபம். ஜனகனமன. படுதாவை இறக்குங்கப்பா.
(யுகமாயினி பத்தி)