வீட்டைப் பூட்டாதே.
விடியலின் பள்ளத்தாக்கில்
இளங்காற்றில் இலைபோல்
கனமில்லாமல் போ.
வெளுத்த மேனியென்றால்
சாம்பல் பூசி மறைத்துப்போ.
அதிகம் அறிவுண்டென்றால்
அரைத் தூக்கத்தில் போ.
வேகம் மிகுந்தது
வேகம் தளரும்.
மெல்லப் போ.
நிலைத்தது போல் மெல்ல.
நீர்போல் வடிவமற்று இரு.
அடங்கி இரு.
உச்சிக்கு உயர
முயலவே வேண்டாம்.
பிரதட்சிணம் செய்யவேண்டாம்.
வெறுமைக்கு இடம்வலமில்லை
முன்னும் பின்னுமில்லை.
பெயர்சொல்லி
அழைக்க வேண்டாம்.
இவன் பெயருக்குப் பெயரில்லை.
வழிபாடுகள் வேண்டாம்.
வெறுங்குடத்தோடு போ.
நிறைகுடத்தைவிட
சுமக்க எளிது.
பிரார்த்திக்கவும் வேண்டாம்.
கோரிக்கையோடு
வருகிறவர்களுக்கான
இடமில்லை இது.
பேசியே ஆகவேண்டுமானால்
மவுனமாகப் பேசு.
பாறை மரங்களோடு
பேசுவதுபோல்
மரங்கள் பூக்களோடு
பேசுவதுபோல்.
மிக இனிய ஒலி மெளனம்
மிகச் சிறந்த நிறம்
வெறுமையினது.
நீ வருவதை யாரும்
பார்க்க வேண்டாம்.
திரும்பிப் போவதையும்
பார்க்க வேண்டாம்.
குளிரில் ஆற்றைக் கடக்கிறவன் போல்
சுருண்டு குறுகிக் கோபுரம் கடந்து போ.
உருகும் பனித்துளிபோல் உனக்கு
ஒரு நொடிதான் நேரம்.
பெருமிதம் வேண்டாம்.
நீ இன்னும் உருவாகவே இல்லை.
கோபம் வேண்டாம்.
தூசித் துகள்கூட உன் அதிகாரத்துக்கு
உட்பட்டதில்லை.
துக்கம் வேண்டாம்.
அதனால் எதுவும் பயனில்லை.
புகழ் அழைத்தால் விலக்கி நட.
ஒரு கால்தடத்தையும்
விட்டுப் போகாதே.
கைகளைப் பயன்படுத்தவே வேண்டாம்
அவை எப்போதும்
துன்பம் செய்வது பற்றியே சிந்திக்கும்.
மகத்துவத்தைத் துறந்துவிடு.
மகத்துவமடைய வேறே வழியில்லை.
ஆற்று மீன் ஆற்றில் கிடக்கட்டும்.
பழம் மரத்தில் இருக்கட்டும்.
உறுதியானது ஒடியும்.
மென்மையானது நீண்டு வாழும்.
பல் நடுவே நாக்கு போல்.
ஒன்றும் செய்யாதவனுக்கே
எல்லாம் செய்ய முடியும்.
படி கடந்து போ.
உனக்காகக் காத்திருக்கிறது
இன்னும் உருவாகாத விக்கிரகம்.
(Translation of Malayalam poem ‘Thao kshetrathil pokENtathu enganE’ by Sachithanandan) Translator Era.Murukan