முன்பெல்லாம் மாத ஜோதிடம், பவான்ஸ் ஜெர்னல் தவிரப் பிற பத்திரிகைகள் வருடம் பிறந்தது முதல்கொண்டு நர்சரி குழந்தைகள் போல் ஏபிசி ஏபிசி என்று நொடிக்கொரு தடவை சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆடிட் பீரோ ஓஃப் சர்க்குலேஷன் என்ற இந்த ஏ.பி.சி இந்தியப் பத்திரிகைகளின் விற்பனை, வாசகர் தளத்தின் பரப்பளவு விவரங்களை மொழிவாரியாகத் தொகுத்து வருடா வருடம் வெளியிடும். நான் முந்தியா நீ முந்தியா என்ற மார்தட்டல், சவால் இன்னோரன்னவை மொழிக்கு மொழி அகில பாரத நாடகமாக அரங்கேறும் இந்த நிகழ்ச்சி தமிழில் டிவி சானல்கள் வீட்டு வரவேற்பரைகளை ஆக்கிரமித்துக் கொண்ட பின்னால் அவ்வளவு விஸ்தாரமாக நடைபெறுவது இல்லை. ஆனால் சகாக்களே முன்னோட்டே முன்னோட்டே என்று மலையாளத்தில் இன்னும் படையோட்டம் தொடர்கிறது.
இப்போது ஏ.பி.சி தன்னந்தனியாக இந்த சர்வேயில் ஈடுபடாமல், இந்தியன் நியூஸ்பேப்பர்ஸ் சொசைற்றி, அட்வற்றைசிங் ஏஜன்சீஸ் அசோஷியேஷன் என்ற அமைப்புகளோடு சேர்ந்து கணக்கெடுப்பு நடத்துகிறது. மற்ற மொழிகளில் எப்படியோ, தொடர்ந்து பல வருடங்களாகவே மலையாளத்தில் சர்க்குலேஷனில் முன்னணியில் இருப்பது மலையாள மனோரமா தினப்பத்திரிகை. தொட்டடுத்த இடத்தில் மாத்ருபூமி. போன மாதம் வெளிவந்த சர்வேயும் இதைத்தான் சொல்கிறது.
ஆனால், கணக்கெடுப்பு விவரத்தை வைத்து இந்த இரண்டு பத்திரிகைகளும் ஆங்கிலப் பத்திரிகைகளில் விளம்பரமாக அடித்துக் கொள்வது ரசமான விஷயம். ‘தொடர்ந்து இரண்டாம் ஸ்தானத்தைத் தக்க வைத்துக் கொண்ட எங்கள் எதிராளிக்கு வாழ்த்துகள் ‘ என்று மனோரமா விளம்பரம் கொடுத்தால், ‘நாங்கள் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறோம் என்று அடிக்கடி பின்னால் திரும்பிப் பார்த்துப் பார்த்துக் கழுத்துச் சுளுக்கிக் கொண்ட எதிராளிக்கு அனுதாபங்கள் ‘ என்று மாத்ருபூமி ஸ்பாண்டிலோசிஸ் கழுத்துப் பட்டையைப் பரக்கப் போட்டு விளம்பரம் தருகிறது.
இது தவிர தத்தம் பத்திரிகைகளிலும் முதல் பக்க அறிக்கையாக ‘எதிராளியுடெ தளர்ச்ச மாத்ருபூமிக்கு நேட்டமாவுன்னு ‘ என்பது போன்ற தலைக்கெட்டுகளில் அரைப் பக்க அறிக்கையாக, விகிதாசார வளர்ச்சி ஒப்பீடு, மார்தட்டல், கிண்டல் இத்யாதி. எதிராளியின் பெயரைக் குறிப்பிடாமல் சாடும் இந்த வகை அறிக்கைகள் சார்லஸ் டிக்கன்ஸின் ‘பிக்விக் பேப்பர்ஸ் ‘ நாவலில் பேட்டைப் பத்திரிகைகளான ஈட்டன்ஸ்வில் கெசெட், ஈட்டன்ஸ்வில் இண்டிபெண்டண்ட் என்பவை நீள நீள வாக்கியங்களை எழுதித் திட்டித் தீர்த்துக் கொண்டதை நினைவு படுத்தும்.
ஈழத்திலும் எழுபது வருடத்துக்கு மேற்பட்ட வரலாறு கொண்ட இரு பத்திரிகைகளான ‘வீரகேசரி ‘க்கும் ‘தினகரன் ‘ பத்திரிகைக்கும் நடுவே இப்படி ஒரு மோதல் இருந்ததை ‘தினகரன் ‘ பிரதம ஆசிரியர் இ.சிவகுருநாதன் எழுதிய ‘இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகைகளின் வளர்ச்சி ‘ புத்தகத்திலிருந்து (1993, பாரி நிலையம், சென்னை) கண்டுகொள்ளலாம்.
‘நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகம் ஆரம்பித்த வீரகேசரி பத்திரிகை .. இந்தியர்கள் இந்தியர்களைக் கொண்டு இந்தியர்களுக்காக வெளியிட்ட பத்திரிகையாகவே இது இருந்தது. திருநெல்வேலி என்றதும் உடனே தமிழ்நாடு திருநெல்வேலியை நினைத்தார்களே ஒழிய யாழ்ப்பாணத்திலும் திருநெல்வேலி இருக்கிறது என்பதை இவர்கள் எண்ணியதே இல்லை.. தினகரன் இவ்வாறு இருக்கவில்லை. இலங்கையர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறவில்லை…இந்தியர்களுக்கே தமிழ் தெரியும் என்ற கருத்து இருந்ததால் வீரகேசரிக்கு வ.ரா, செல்லையா போன்றவர்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டார்கள்…தினகரனில் முக்கியப் பொறுப்பு இலங்கையரிடமே கொடுக்கப்பட்டது. முதல் ஆசிரியராக திரு கே.மயில்வாகனமும், நிர்வாக ஆசிரியராக திரு.இராமநாதனும் கடமையாற்றினர்…. ‘
1983 இனக் கலவரத்தின் போது இரண்டு பத்திரிகைகளுமே காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளானதைக் குறிப்பிடும் நூலாசிரியர் வீரகேசரி அலுவலகம் கொளுத்தப்படாமல் தப்பியதற்கு அது ஜே.ஆர்.ஜெயவர்த்தனே சிறுவயதில் வசித்த்த கட்டிடத்தில் இருந்ததும் காரணம் என்கிறார்.
பத்திரிகை மோதல் விஷயம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஈழத்தில் தமிழ்ப் பத்திரிகை வளர்ச்சி அரசியல் மாற்றங்களோடு பின்னிப் பிணைந்து நிற்கும் ஒன்றாகும். அதை நேர்த்தியாக எழுதியிருக்கிறார் சிவகுருநாதன். இனக் கலவரத்தில் வீடிழந்து, குடும்பத்தைப் பிரிந்து, எழுதிய முதல் பிரதியும் காணாது போய் சொந்த வாழ்வில் வண்டி வண்டியாகத் துக்கங்களை அனுபவித்த அவர் அதையெல்லாம் ரத்தினச் சுருக்கமாக ஒரு விலகி நிற்கும் பார்வையோடு முன்னுரையில் கூறுகிறார். சிவகுருநாதன் அனுபவித்ததில் நூறில் ஒரு பங்கு கூட அனுபவித்திராத தமிழகப் பத்திரிகையாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.