“சட்டை போட்டிருக்கீங்களா சார்?” நான் கேட்டேன். தொலைபேசியில் எதிர்முனையில் ஒரு வினாடி மௌனம். ‘புரியலையே’. மும்பையிலிருந்து வாரக் கடைசியில் சென்னை வந்திருக்கும் பிரபல இயக்குனர் அவர். சர்வதேச அளவில் அவருடைய கலைப்படங்கள் விருதுகளை வாரிக் குவித்தவை. ‘ஓய்வாக உட்கார்ந்து சாப்பிட்டபடியே இலக்கியம், சினிமா பற்றி எல்லாம் பேசலாம்’ என்று அவரிடம் யோசனை சொன்னது நான் தான். எங்கே உட்கார்ந்து பேசுவது?
பத்திரிகையாளரும் நேற்றைய விளையாட்டு நட்சத்திரமுமான இன்னொரு நண்பர் உதவிக்கு வந்தார். இயக்குனருக்கு அவரும் சிநேகிதர்தான். ‘எங்க கிளப்லே போய் மதிய உணவோடு எல்லாத்தையும் அலசலாமே?’ நூறு வருஷமாக நடக்கும் கிளப். பழைய அமைப்பிலே மேஜை நாற்காலி, உபசரிப்பு எல்லாமே வித்தியாசமாக இருக்கும். கண்ணாடி தடுப்புக்கு அந்தப் பக்கம் புல்தரையில் விளையாட்டு நடப்பதை ரசித்தபடி சாப்பிடலாம். கிளப்பில் விளையாட்டு வீரர்கள் தான் உறுப்பினர் ஆக முடியும். அவர்கள் விருந்தாளிகளை அழைத்து வரலாம்.
ஒரே ஒரு நிபந்தனை தான் உண்டு. கிளப்புக்கு வருகிறவர்கள் காலர் வைத்த சட்டை போட்டிருக்க வேண்டும். அதாவது ஆண்கள். டீ ஷர்ட் என்றாலும் பரவாயில்லை. கழுத்தை மறைக்கும்படியாக ஒரு காலர் அதற்கு இருந்தால்தான் உள்ளே விடுவார்கள். போன வருடம் மழைக்காலத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த இன்னொரு பிரபலத்தோடு அங்கே விருந்துக்குப் போனாராம். விருந்தாளி பனியன் மாதிரி எதையே போட்டுக் கொண்டு வந்ததால், வாசலிலேயே நிறுத்தி மழையில் நனைந்தபடி நாற்காலி போட்டு சாப்பாடு பரிமாறி அனுப்பிவிட்டார்கள். கொடுமை.
விஷயத்தைச் சொன்னதும் மும்பை இயக்குனர் உரக்கச் சிரித்தார். ‘கவலையை விடுங்க. சட்டையிலே முக்கால் பாகம் காலர் வர்ற மாதிரி பெரிசாப் பார்த்துப் போட்டுட்டு வந்துடறேன். இடுப்பிலே துணி இருக்கணுமா, அவசியமில்லையா?’
சில ஆண்டுகள் முன் ஓவியர் எம்.எப்.ஹுசைன் காலில் சாதாரண கோலாபுரி செருப்போடு ஒரு கிளப்பில் நுழைந்தபோது அவரைத் திருப்பி அனுப்பியதற்கான காரணம் இன்னும் விசித்திரம். ஷூ போடாமல் வந்துவிட்டார். கவுரவமானவர்கள் புழங்கும் இடத்தில் காலைக் காட்டிக் கொண்டு நடப்பது அவமரியாதையாம். இங்கே கழுத்து. அங்கே கால். கறுப்பனின் உடம்பைக் காண சகிக்காமல் வெள்ளைக்காரன் எற்படுத்தின நிபந்தனையாக இருக்கும் அதெல்லாம். துரை கப்பலேறிப் போய் பலகாலம் ஆனாலும் துரைத்தனம் இங்கேயே தங்கிவிட்டது.
கிளப்பில் காலர் வைத்த சட்டை போடச் சொன்னால், அண்டை மாநிலத்தில் ‘ஷேர்ட் அழிக்கணும் சார்’ என்கிறார்கள். அதாவது சட்டையைக் கழற்றிவிட்டுத் தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும். இதுவும் ஆண்களுக்கானது. பெண்கள்? அவர்கள் புடவை கட்டிக் கொண்டு வரவேண்டும். சூரிதார் தரித்து வந்தால் அனுமதிக்கலாகாது. ‘தேவ பிரச்னம் வச்சுப் பார்த்தோம். ஆண்டவனுக்கு சூரிதார் பிடிக்கலைன்னு தெரிஞ்சுது’. வழிபாட்டுத் தலங்களில் நிர்வாகம் செய்கிறவர்கள் சொல்வது இது. பகவான் உண்மையான பக்தர்கள் மனதோடு தானே பேசுகிறான்? இவர்களோடு எப்படிப் பேசினான்? சதா முந்தானையில் கண் வைக்காவிட்டால் மற்ற கண்கள் அங்கே நிலைக்க வைக்கும் புடவையை விட சூரிதார் சவுகரியமில்லையா? கேள்வி எழுகிறது. சினிமா நடிகைகள் திரைப்பட விழாவுக்கு அரைகுறையாக உடுத்தி வருவதாகப் புகார் செய்கிறவர்கள் கேட்காவிட்டாலும், வழிபடப் போகும் பக்தைகள் பதில் கிட்டும் வரை இந்தக் கேள்வி கேட்பார்கள்.
அலுவலகங்களில் டிரஸ்கோட் உண்டு. முக்கியமாக, கம்ப்யூட்டர் நிறுவனங்களில் வாரத்தில் நாலு நாள் உடுத்தி வருவதற்கான விதிமுறைகள், செய்யும் தொழிலில் கண்ணியம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் கருதி உருவாக்கப்பட்டவை. பல நாட்டு வாடிக்கையாளர்களோடு தொழில் தொடர்பான நேரடி, வீடியோ சந்திப்புகள் காரணமாக வாரத்துக்கு நாலு நாள் முழுக்கை சட்டையை பேண்டுக்குள் நுழைத்து டிரிம்மாக வரவேண்டும் என்று எதிர்பார்ப்பு உண்டு. வெள்ளிக்கிழமை விருப்பம் போல் உடுத்திவரலாம். அது அரைகுறையாக இல்லாதவரை சரிதான்.
இப்படி தொழில்முறையில் உடுத்திப் பழக்கப்பட்டு அதே வேஷத்தில் ஒரு புத்தக வெளியீட்டாளரை முந்தாநாள் சாயந்திரம் சந்திக்கப் போனேன். வாசலில் தடுத்து நிறுத்திவிட்டார்கள். ‘சார், எங்க தொழில்லே, கேஷுவலா உடுத்தி வந்து, ரிலாக்ஸ்டா மேஜை மேல் குந்தியிருந்து கவர் டிசைன் செய்து, காலை நீட்டிட்டு சுவர்லே சாய்ஞ்சு பேசினாத் தான் ஆக்க பூர்வமா, மாறுதலாக நிறைய செய்யலாம். ஆபீசில் மக்கள் அரை டிராயரோடு வேலை பார்த்துட்டு இருக்காங்க. உங்களை டூ பீஸ் சூட்டில் பார்த்தா டென்ஷன் ஆகிடுவாங்க’. நான் பேசாமல் திரும்பினேன்.
(குங்குமம் பத்தி – ரெண்டாம் ராயர் காப்பி கிளப் நூல்)