லண்டன் டயரி புத்தகத்தில் இருந்து
தலைவெட்டி லண்டன்
டியூடர் வம்ச முதல் அரசனான ஏழாம் ஹென்றி காலம் லண்டன் மாநகரின் அமைப்பையும் வளர்ச்சியையும் பொறுத்தவரை ஒரு பொற்காலம். ஐரோப்பியக் கலை, இலக்கிய உலகில் புதிய சிந்தனைகள் வெளிப்பட்டுப் புதுமை படைத்த மறுமலர்ச்சிக் காலம் (ரினைசான்ஸ்) இதுவே. வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலய வளாகத்தில் மறுமலர்ச்சிக் காலத்துக்கே உரிய அற்புதமான கட்டிட அமைப்போடு கூடிய, கிட்டத்தட்ட உலக அதிசயங்களில் ஒன்றான ‘ஏழாம் ஹென்றி வழிபாட்டு அரங்கு’ அமைத்தான் ஏழாம் ஹென்றி. தனக்கு முந்தைய அரசனும், ஒன்றுவிட்ட தாய்மாமனும் ஆகிய ‘பக்திமான் ஆறாம் ஹென்றி’யின் நினைவாகக் கட்டினாலும், அப்போதைய போப்பாண்டவர் அந்தப் பக்திமானுக்கு ஆசியருளிச் சொர்க்கம் புக அனுமதி வழங்க மறுத்துவிட்ட காரணத்தால், 1509-ல் ஏழாம் ஹென்றியின் சொந்த இறுதி உறக்கத்துக்கான இடமானது இது. அங்கே அடங்குவதற்குள் லண்டன் நகர எல்லைக்குள் தான் வசித்த பேனார்ட் கோட்டை, ரிச்மண்ட் அரண்மனை போன்ற இதரப் பெரிய கட்டடங்களையும் எழுப்பத் தவறவில்லை ஏழாம் ஹென்றி.
இவனுடைய மகன் எட்டாவது ஹென்றிக்கும் கட்டிடம் கட்டுவதில் அளவில்லாத ஆசை. அடுத்தடுத்து மூன்று அரசர்கள் இப்படிக் கட்டடக் கலையில் ஒரு வெறியோடு ஈடுபட்டதால், பெயரைக்கூட மாற்றச் சோம்பல்பட்டு ‘ஹென்றி’ என்ற ஒரே பெயருக்குப் பின்னால் நம்பரை மட்டும் கூட்டிக்கொண்டு கொத்தனார் சித்தாள் வகையறாக்களை மேற்பார்வை செய்துகொண்டிருந்ததாக வரலாற்றாசிரியர்கள் சொல்லவில்லை.
எட்டாம் ஹென்றி தனக்காகக் கட்டாமல், மதகுருவான யார்க் ஆர்ச்பிஷப் வசிக்க மாளிகை கட்டி, வெஸ்ட்மின்ஸ்டரை பக்கத்து சாரிங் கிராஸ் பகுதியோடு இணைத்தான். இந்த மாளிகைக்கு ஒயிட்ஹால் பேலஸ் என்று ரெடிமேட் துணிக்கடை போல் பெயர் வைத்ததும் இவன்தான். லண்டனின் நிதிநிர்வாகக் கேந்திரமான •ப்ளீட் தெருவை ஒட்டி புனித நீருக்குப் பேர்போன ஒரு புராதனமான கிணறு இருந்தது. அது தூர்ந்து போயிருந்த இடத்தில் கெட்டியாக அஸ்திவாரம் போட்டு ‘மணவாட்டி கிணறு அரண்மனை’ என்று அதிரடியாக மொழிபெயர்க்கக் கூடிய ப்ரைட்வெல் பேலேஸ் அமைத்தவன் எட்டாம் ஹென்றிதான். இந்தக் கிணற்று அரண்மனை கட்ட முக்கியமான காரணம் பழைய ஒய்ட்ஹால் அரண்மனை தீவிபத்தில் பாதிக்கப்பட்டதால் அங்கேயிருந்த மதகுருவையும் குழுவினரையும் இடம் மாற்றுவதே. அதென்னமோ, லண்டனுக்கும் தீவிபத்துகளுக்கும் அப்படி ஒரு நெருக்கம். இவன் கட்டிய மற்ற அரண்மனைகளில் செயிண்ட் ஜேம்ஸ் அரண்மனை, நான்சச் அரண்மனை ஆகியவையும் அடக்கம். சளைக்காமல் அரண்மனை கட்டினாலும், எட்டாம் ஹென்றிக்கு கிரீன்விச் அரண்மனைமேல்தான் பிரியம் அதிகம். இந்த கிரீன்விச் அரண்மனையை இவன் கட்டவில்லை என்பதற்கு ஒரே ஆதாரம் அங்கே அவன் பிறந்தான் என்பதுதான்.
யார்க் ஆர்ச்பிஷப்புக்கு ஒயிட் ஹால் என்றால், காண்டர்பரி ஆர்ச்பிஷப்புக்கு லாம்பெத் அரண்மனை. இப்படி எட்டாம் ஹென்றி கட்டிடம் கட்டிய நேரம் போகக் கல்யாணம் கட்டுவதில் மும்முரமாக இருந்தவன் என்பதை லண்டன் டவர் வளாகத்தில் பறக்கிற அண்டங்காக்கை கூடச் சொல்லும். இப்பேர்க்கொத்த இந்தப் பேர்வழி, ஆன்பொலின் மகாராணியைப் பரலோகம் அனுப்பிவிட்டு இன்னொரு தடவை மாப்பிள்ளைக் கோலத்தில் உலா வர ஏதுவாக, லாம்பத் அரண்மனையில்தான் ஆன்பொலின் அரசியை விசாரித்து அவளுக்கு எதிராகத் தீர்ப்புச் சொல்லப்பட்டது. அதற்கு நன்றிக்கடன் செலுத்தவோ என்னமோ, எட்டாம் ஹென்றி லாம்பெத் அரண்மனை வளாகத்தில் கேட் ஹவுஸ், கிரேட் ஹால் என்று இன்னும் இரண்டு பெரிய கட்டிடங்களை எழுப்பினான். டியூடர் வம்சத்தின் பெயர் சொல்லிக்கொண்டு இன்னும் இவை ஆன்போலின் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தியபடி நின்றுகொண்டிருக்கின்றன.
எட்டாம் ஹென்றி இப்படி இடித்துக் கட்டியதோடு, புதிதாகவும் அவ்வப்போது நல்ல காரியத்துக்காகக் கட்டிடம் கட்டினான். ஆறு தடவை கண்ணாலம் கட்டிய இவன், ஒவ்வொரு கல்யாணம் முடிந்ததும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும்போது இப்படி நல்ல மனசோடு இயங்கியிருப்பான் என்று நினைக்க இடம் இருக்கிறது. இன்றளவும் பரபரப்பாக இயங்குகிற செயிண்ட் பார்த்தலோமியோ மருத்துவமனை இந்தத் தலைவெட்டித் தாண்டவராயன் எழுப்பியதுதான் என்று நம்பக் கஷ்டமாக இருந்தாலும் உண்மை அதுதான். அவன் எழுப்பிய இடத்திலிருந்து ஆஸ்பத்திரியைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இடமாற்றம் செய்துவிட்டார்கள் என்பது கொசுறான செய்தி. எட்டாம் ஹென்றி செய்த இன்னொரு உருப்படியான காரியம் லண்டன் பிஷப்கேட் பகுதியில் பெட்லாம் மனநல மருத்துவமனை நிறுவியது. பெட்லாம் என்ற வார்த்தை ஆகுபெயராக, குழப்பம் மிகுந்த சூழ்நிலையைக் குறிப்பதாக ஆங்கில அகராதியில் புகுந்தது அதைத் தொடர்ந்து நடந்த ஒன்று. பெட்லாம் மருத்துவமனையின் முதல் நோயாளி எட்டாம் ஹென்றியா என்று தோண்டித் துருவினால் இல்லை என்ற ஏமாற்றமான பதிலே கிடைக்கிறது.
1547-ல், எட்டாம் ஹென்றியின் மகனான ஆறாம் எட்வர்ட் ஆட்சிக்கு வந்தபோது, அரசாங்க அராஜகம் உச்சத்தை அல்லது அதலபாதாளத்தை அடைந்தது. செயிண்ட் பால் சார்னல் ஹவுஸ், கிளர்கென்வெல் ப்ரியரி போன்ற கத்தோலிக்க வழிபாட்டு இடங்களை இடித்துக் கருங்கல்லை அப்புறப்படுத்தி, அழகான மறுமலர்ச்சிகால மாளிகைகள் அமைக்கப்பட்டு, பிரபுக்கள் குடிபுகுந்தார்கள். சமர்செட் ஹவுஸ் என்று பெயர் வைத்து ஒரு பெரிய மாளிகை எழுப்ப எட்வர்ட் முடிவெடுத்தபோது அவனுடைய அரசவைப் பிரதானிகள் லண்டனின் இண்டு இடுக்கு விடாமல் சுற்றி, இன்னும் இடிக்காமல் விட்ட தேவாலயங்களைக் கவனமாகக் கணக்கு எடுத்தார்கள். அவர்களின் அதிர்ஷ்டம், ஸ்ட்ராண்ட் பகுதியில் நேட்டிவிட்டி தேவாலயம், பக்கத்து செஸ்டர், வொர்ஸ்டர் பகுதிகளில் குருமார்கள் குடியிருந்த மடங்கள் கண்ணில் பட, கடப்பாறைக்கு வேலை ஆரம்பமானது. இப்படி அரசனும் பிரபுக்களும் விளையாடியது போகவும் சில தேவாலயங்களும், குருமார்களின் மடாலயங்களும் மிஞ்ச, வர்த்தக நிறுவனங்கள் அவற்றை அரச ஆசியோடு ஆக்கிரமித்துக் கொண்டன.
லண்டன் மடாலயங்கள் இடிக்கப்பட்டு பிரபுக்கள் மாளிகை எழுந்தபோது, நகரின் ஏழைபாழைகள் படும் சிரமம் அதிகரிக்க ஆரம்பித்தது. தேவாலயங்கள் இந்த ஏழைகளுக்கு பசிக்கு உணவும், அவ்வப்போது கொஞ்சம் போலவாவது பொருளாதார உதவியும் செய்து வந்தது கிடைக்காமல் போனதால் ஏற்பட்ட நிலைமை இது
மடாலயங்களின் வீழ்ச்சி லண்டனில் மதகுருமார்கள் மூலம் நடைபெற்ற கல்வியறிவுப் பெருக்கத்தையும் பாதித்தது. தேவாலயங்களை இடித்து எட்டடுக்கு மாளிகை கட்டிக்கொண்டு பிரபுக்கள் குடியேற, படிக்க இடமும் போதிக்க ஆசிரியர்களும் இல்லாமல் சாதாரண மக்களின் குழந்தைகள் கஷ்டப்பட்ட நிலை பரவிய காலம் அது. ஆறாம் எட்வர்ட் மன்னன் பிரைட்வெல் அரண்மனையைப் பள்ளிக்கூடமாக மாற்ற அனுமதி கொடுத்தான். பள்ளிக்கூடம் வைத்தது போக மிஞ்சிய இடத்தில் அரண்மனையிலேயே சிறைச்சாலையையும் வைத்துக்கொள்ளலாம் என்ற அனுமதியும் தொடர்ந்து வந்தது. அரசர்களின் சிந்தனைப் போக்கே வினோதமானது.
வர்த்தகப் பிரமுகர்களும் கொஞ்சம் மனம் மாறி, சார்ட்டர்ஹவுஸ், செயிண்ட் பால், லண்டன் நகர்ப் பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தினார்கள்..டியூடர் வம்ச காலத்துக்கு முன்பே இன்னர் டெம்பிள் பகுதியில் சட்டக் கல்விக்கு ஏற்படுத்தப்பட்ட கலாசாலை எந்தத் தொந்தரவும் இன்றித் தொடர்ந்ததும் லண்டனின் அதிர்ஷ்டத்தின் ஒரு அம்சம்தான். அந்தத் தொடர்ச்சி 1490-ல் தொடங்கி, 2007-லும் தொடர்கிறது. ஷேக்ஸ்பியர் தன் நாடகங்களை அவருடைய பராமரிப்பில் இருந்த தேம்ஸ் நதிக்கரைப் பகுதி குளோப் அரங்கத்தில் நடத்தியதோடு இங்கே சட்டம் பயின்ற மாணவர்களுக்காக அடிக்கடி வந்து அரங்கேறிப் போயிருக்கிறார் என்கிறது சரித்திரம். சட்டக் கல்லூரிக்கும் நாடகம், சினிமா மற்றும் அரசியலுக்கும் எல்லா நாட்டிலும் எல்லாக் காலத்திலும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்துகொண்டுதான் வருகிறது.
டியூடர் கால லண்டன் அரசியல் அமைதியில் பெரும்பாலும் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது கலவரம் எழாமல் இல்லை. ஆறாம் எட்வர்டு 1553-ல் இறந்தபிறகு ராணியாட்சி தொடங்கியது. எட்டாம் ஹென்றிக்கும் அவன் முதல் மனைவியும் ஸ்பானிஷ் ராணியுமான கேதரினுக்கும் பிறந்த மேரி மகாராணி படத்துக்கு வந்தாள். அவள் பட்டத்துக்கு வந்ததற்கு அடுத்த வருடமான 1554-ல் சர் தாமஸ் வயாட் என்ற பிரபு படையெடுத்து வந்தபோது நகர மதில் சுவர்களின் பின்னால் காவலைப் பலமாக்கிக் கதவை அடைக்க, தாமஸ் பிரபு வெற்றிகரமாகப் பின்வாங்கினார்.
மேரி மகாராணி அரியணை ஏற ஒன்பது நாள் காத்திருக்க வேண்டி வந்தது. இந்த இடைப்பட்ட ஒன்பது நாளில் நவராத்திரி நாயகியாக முடிசூட்டிக்கொண்டது ஜேன் கிரே சீமாட்டி. வணக்கத்துக்குரிய லண்டன் மேயர் பங்குபெறாமல் நடந்த இந்தப் பதவியேற்பு ஜேன் சீமாட்டி கொடி அதிக நாள் பறக்காது என்று சொல்லாமல் சொன்னது. அந்தம்மாவும், கிரீடத்தை வைத்தால் தலை அரிக்கிறது என்று அறிவித்து (இப்படிச் சொல்லியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!) முடி துறக்க, மேரி மகாராணி ஜாம்ஜாமென்று சிம்மாசனம் ஏற, மேயர் அரசியை வாழ்த்த, அரசி அவரை வாழ்த்த, இந்தக் கூட்டணி நிலைத்தது.
ஒரே ஒரு சங்கடம், மேரி அரசியார் சுத்த கத்தோலிக்க கிறிஸ்துவர். லண்டன்வாழ் மக்கள் அவள் அப்பா ஹென்றி, அண்ணன் எட்வர்ட் காலத்திலேயே கத்தோலிக்க கிறிஸ்துவத்திலிருந்து மாறி, புராட்டஸ்டண்ட்களாகியிருந்தார்கள். இந்த அப்பாவும் பிள்ளையும் மடாலயங்களிலிருந்து மதகுருக்களை வெளியேற்றியதற்கெல்லாம் ஊரில் எதிர்ப்பில்லாமல் இருந்ததற்கு இதுவும் முக்கிய காரணம்.
திரும்பவும் அவர்களைக் கத்தோலிக்கர்களாகச் சொன்னாள் மேரி மகாராணி. லண்டன்வாசிகள், மேலே குறிப்பிட்ட தாமஸ் வயாட் பிரபுவை லண்டனுக்குள் நுழையவிடாமல் தடுத்து மகாராணி சிம்மாசனம் ஏற ஒத்தாசை புரிந்திருந்தாலும், மதம் மாற மறுத்த அந்த அப்பாவி மக்களில் நானூறு பேரைக் கட்டிவைத்து எரித்து மேரியம்மையார் சுவர்க்கம் போய்ச்சேர வைத்தார். அரசியலுக்கும் நன்றிக் கடனுக்கும் வெகுதூரம்.
மேரி மகாராணி 1558-ல் இறக்க, அவளுக்கு அடுத்து பட்டத்துக்கு வந்ததும் இன்னொரு ராணியம்மாதான். முதலாம் எலிசபெத் என்ற இவளும் எட்டாம் ஹென்றியின் மகள். ஹென்றிக்கும் அவன் சிரம் அறுத்துக் கொன்ற ஆன்போலினுக்கும் பிறந்தவள். இவள் ஆட்சியில் நிலைமை திரும்பத் தலைகீழானது. புராட்டஸ்டண்ட்களின் கை மறுபடி ஓங்க, மேரி காலத்து அரசியலில் கத்தோலிக்க மதகுருமார்கள் அனுபவித்த ஆதிக்கம் திரும்ப விலகியது. தேவாலயங்களிலிருந்தும் மடாலயங்களிலிருந்தும் அவர்கள் துரத்தப்பட்டு, அந்தக் கட்டிடங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன. வெளியேற மறுத்த கார்த்தூசியன் தேவாலய மதகுரு சங்கிலியால் பிணைக்கப்பட்டுத் தெருத்தெருவாக இழுத்துப் போகப்பட்டு டைபர்னில் கொலைக் குற்றவாளி போலத் தூக்கில் இடப்பட்டார். அவருடைய கையைத் துண்டித்து எடுத்து நகர எல்லையில் வாயில் கதவில் ஆணியடித்துத் தொங்கவிட்டு அடிபணியாத இதர அடியார் திருக்கூட்டங்கள் அச்சுறுத்தப்பட்டன. மதகுருமார்களிடமிருந்து பிடுங்கி அரசுடமையான கட்டிடங்கள் அரசியின் ஜால்ராக்கள் சுகவாசம் புரியும் இருப்பிடங்களாக விலாசம் மாற அதிக நாள் பிடிக்கவில்லை.
இந்த முதலாம் எலிசபெத் ஆட்சியின்போது இன்னொரு படையெடுப்பு., 1601-ல் எஸ்ஸெக்ஸ் பிரபு லண்டனைப் பிடிக்கப் படையோடு வந்தபோது நகர எல்லைக்குள் நுழையவே முடியாமல், மேரி மகாராணி ஆட்சியில் தாமஸ் பிரபு போல் பின்வாங்கி ஓடினார். அக்காவோ, தங்கையோ, கத்தோலிக்கரோ, புராட்டஸ்டண்டோ, கட்டிவைத்து எரிப்போ, கையைக் காலை வெட்டித் தூக்கு தண்டனையோ, எட்டாம் ஹென்றியின் பெண்ணரசிகளே ஆளட்டும் என்று லண்டன் மக்கள் அம்மா ஆட்சிக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்தது இப்படியான வெளி ஆக்கிரமிப்பு தோல்வியடைய முக்கியக் காரணம் ஆகும்.
கத்தோலிக்கர்கள் கிட்டத்தட்ட முழுமையாக அடக்கி ஒடுக்கப்பட, எலிசபெத் ஆட்சியில் சங்கடமான அமைதி நிலவியது. மக்களின் கவனத்தைக் கவர வேறு விஷயங்கள் வந்து சேர்ந்தன. ஷேக்ஸ்பியர் போன்ற நாடக மேதைகளின் நாடகங்கள் வெகு பிற்காலத் தமிழகத்தில் ஹரிதாஸ், சந்திரமுகி போல் வருடக்கணக்காக தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக நடந்த காலம் இது என்பதால், மக்கள் குளோப், ஸ்வான், ஹோப் போன்ற நாடகக் கொட்டகைகளுக்குத் தொடர்ந்து படையெடுத்தார்கள். நாடகம் பார்த்த நேரம் போக லண்டன் மக்கள், சேவல் சண்டை, கரடிச் சண்டை போன்ற வீரவிளையாட்டுகளில் பந்தயம் கட்டி வென்றார்கள். தோற்றார்கள். உலகத்தின் ஆதி தொழிலும் அமோகமாக லண்டன் சந்துமுனை இருட்டில் நடந்ததாகவும், இந்தப் பெண்களுக்கு முன்கூட்டியே லைசன்ஸ் வழங்கப்படும் ஏற்பாடு மூலம் கணிசமாக கஜானாவில் பணம் சேர்ந்ததாகவும் சரித்திர ஆசிரியர்கள் கிசுகிசுக்கிறார்கள்.
இப்படி அவரவர் வேலையில் மும்முரமாக லண்டன்காரர்கள் இருந்தபோது, பொழுதுபோகாத ஸ்பானிஷ் நாட்டுக்காரர்கள் (அவர்கள் நாட்டில் கரடிச் சண்டை, சந்துமுனை சிந்து சமாச்சாரங்கள் இல்லையோ என்னமோ) எலிசபெத் ஆட்சி தொடங்கிய 1558-ல் லண்டன் மேல் படையெடுத்து வந்தார்கள். கத்தி கபடாவோடு நுழைந்த இந்த டூரிஸ்டுகள் ஓடஓட விரட்டியடிக்கப்பட்டதோடு, வேறு யாரும் இதுபோல் துர்புத்தியோடு உள்ளே வரக்கூடாது என்பதற்காக, லண்டன் பாதுகாப்பு பலமாக்கப்பட்டது. மற்றபடி, மடாலயங்களிலிருந்து பிடுங்கிய நிலங்களைச் சுற்றி எழுந்த புத்தம்புதுக் கட்டிடங்களும், பாதிரியார்களை வெளியேற்றிவிட்டு இடித்துக் கட்டிய பிரபுக்களின் மாட மாளிகைகளுமாக லண்டன் ஜனத்தொகையின் ஒருபகுதி காசுமேலே காசு வந்து கொட்டுகிற நேரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது. சாமானியர்களான மற்றவர்கள் கோழிச் சண்டை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
(லண்டன் டயரி – இரா.முருகன் – கிழக்கு பதிப்பகம் வெளியீடு)