‘வீடு மாதிரியே சகல வசதியும் கொண்ட‘ என்று விளம்பரப் படுத்தப்படும் சாப்பாட்டு ஹோட்டலையோ, லாட்ஜையோ கண்டால் பலபேர் எப்படி காந்தத்தால் ஈர்க்கப்பட்ட இரும்புத் துண்டாக அங்கே போய் விழுகிறார்கள் என்பது புரியாத சமாசாரம். இப்படியான ‘ஹோம்லி’ அடைமொழியை விளம்பரப் பலகையில் பார்த்ததுமே கங்காருவாக நாலடி அந்தாண்டை தாண்டிக் குதித்து ஓடி ரட்சைப்பட வேண்டாமோ! படாதவன் பட்ட பாடு, அதுவும் பரங்கி தேசத்தில் – ஏன் கேக்கறீங்க, இதோ.
“முழிச்சிக்கோ பாய், இடம் வந்தாச்சு. வீடு கணக்கா சவுகரியமான ஓட்டல்” என்று சொன்னான் மான்செஸ்டர் ஏர்போர்ட்டிலிருந்து என்னை டாக்சியில் வைத்து ஓட்டி வந்த பாகிஸ்தானி இளைஞன்.
ஒரு ஏற்றம், ஒரு இறக்கம் என்று பத்து அடிக்கு ஒரு தடவை பூமியே தண்டால் பஸ்கி எடுக்கிற மாதிரி எழுந்து தாழ்ந்திருந்த பகுதியில் கார் நின்றிருந்தது. இங்கிலாந்துதான். ஆனால் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டு என்று கேஷுவலாக இருநூறு வருடம் பின்னால் போன மாதிரி உணர்வு .
மேற்கு யார்க்ஷையர் பகுதியில் அந்த சின்ன ஊரில் ஆளை அடிக்கிற மாதிரி பிரம்மாண்டமும், அழுக்கும் அடைசலுமாகக் கட்டிடங்கள். “இதுதான் எல்லா சவுகரியமும் இருக்கப்பட்ட விக்டோரியா ஓட்டல். குஷியாத் தங்கு”, டாக்சிக் கட்டணத்தை வாங்கிக் கொண்டு பாகிஸ்தானி போக, கொட்டாவி விட்டுக்கொண்டே ஒரு வெள்ளைக்காரக் கொள்ளுத் தாத்தா வாசல் கதவைத் திறந்து உள்ளே வரச்சொன்னார்.
அந்த ஒடுக்கமான வாசலைக் கடந்து நான், என் சூட்கேஸ்கள், லேப்டாப் கம்ப்யூட்டர் இத்தனையும் பத்திரமாக உள்ளே போக, புலி-ஆடு-புல்லுக்கட்டு புதிர் போல் வாசலுக்கும் உள்ளுமாக ஏகப்பட்ட விசிட். அதில் ஒரு பெட்டி கோபித்துக் கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று உருண்டு, சமவெளி இல்லாதபடியால் தெருக்கோடி தாண்டி ஊர் எல்லைக்கே போய்விட்டிருந்தது.
முதல் மாடியில் அறை. உளுத்துப்போக ஆரம்பித்திருக்கும் மரப்படிக்கட்டில் ஏறி அங்கே போக வேணும். அந்தப் படிக்கட்டு ஏழு தடவை வலமும் இடமும் வளைந்து திரும்ப, அங்கங்கே சின்ன மரக்கதவுகளைத் திறந்து மூடிக் கடந்து போக வேண்டிய கட்டாயம். ஒவ்வொரு கதவைக் கடக்கவும் இன்னொரு தடவை புலி – ஆடு – புல்லுக்கட்டு. எல்லாம் கடந்து போனால், தலையில் நாகரத்தினத்தை வைத்துக் கொண்டு ஒரு பாம்புக் கன்னி தெலுங்கு சினிமாப் பாட்டோடு வளைந்து நெளிந்து நடனமாடி என்னை வரவேற்கப் போகிறாள். அப்படித்தான் என் அந்தராத்மா காலதேச வர்த்தமானமில்லாமல், சுருட்டுக் குடித்துக் கொண்டு சொன்னது.
நாககன்னி இல்லை, கவுன் போட்ட பாட்டியம்மா வரவேற்றாள் அறைவாசலில்.
“கூரையிலே பயர் அலார்ம் இருக்கு. தீப்பிடிச்சா அலறும்” என்று சுருக்கமாக ராணியம்மா மிடுக்கில் சொன்னார் விடுதியின் காப்பாளரான அந்த அம்மையார். விக்டோரியா ராணியின் ரெண்டு விட்ட சித்தப்பா பேத்தியாக இருக்கலாம்.
அறையில் நாலு பீங்கான் கோப்பை, ஒரு மின்சாரக் கெட்டில், சோப்பு, பால்பொடி, சர்க்கரை, டீத்தூள் பொட்டலம் என்று சின்னச் சின்னதாக பிளாஸ்டிக் தட்டில் நிறைத்து வைத்துவிட்டுப் போன போது ‘கதவை மறக்காமல் தாழ்ப்பாள் போட்டுக்கோ” என்று உபதேசமும் அளித்தார் அவர்.
அறைச் சுவரில் விக்டோரியா மகாராணி புகைப்படம் கொஞ்சம் ஆம்பளைத்தனமாக முறைத்து ‘தலை பத்திரம். சிகரெட், சுருட்டு வாடை எல்லாம் எனக்குக் கட்டோடு பிடிக்காது பயலே” என்றது.
கட்டிலில் உட்கார்ந்தபடி மேல் கூரையைப் பார்த்தேன். தொட்டு விடும் தூரம் தான் அந்த மரக் கூரை. புகை விட்டு அங்கே பயர் அலாரத்தை அலற வைக்க வேண்டாம். மேலே அண்ணாந்து பார்த்து வாயைத் திறந்து ‘பயர்’ என்று கொஞ்சம் உரக்கச் சொன்னாலே போதும், அது கூவ ஆரம்பித்துவிடக் கூடும்.
கட்டிலுக்குப் பக்கம் மேஜைக்கு நடுவே இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் கருப்புப் பெட்டி வால்வ் ரேடியோவாக இருக்கலாம் என்று ஊகம். சுவிட்சைப் போட்டு ஐந்து நிமிஷம் சூடான பிறகு செய்தி அறிக்கையில் இரண்டாம் உலக யுத்தம் முடிந்த செய்தி வரும் என்று காத்திருந்தேன். ஒலிக்கு முன்னால் ஒளி வந்து சேர்ந்தது.
டெலிவிஷன் தான். அந்த வார்த்தைக்கு ஸ்பெல்லிங்க் ஏற்படுத்தி எழுதிக் கொண்டிருந்தபோது உருவாக்கினதாக இருக்கலாம். பிரிட்டீஷ் சர்க்கார் சமாச்சாரமான பி.பி.சி சானல் ஓடிக் கொண்டிருந்தது. பி.பி.சி ரேடியோவோ, டிவியோ, நாலு வயசன்மார் வட்ட மேஜையைச் சுற்றி உட்கார்ந்து உலக நடப்பு விவாதித்து, நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றுவது கனஜோராக நடக்கிற நிகழ்ச்சி. இப்போதும் அப்படியான துரைகளும், துரைசானிகளும் ஆஜர்.
பேசுகிற விஷயத்தை சுவாரசியமில்லாமல் கேட்டபடி படுக்கையில் விழுந்தபோதுதான் அவர்கள் எல்லோரும் நீலப்படங்களை சென்சார் செய்கிற பிரிட்டீஷ் சென்சார் போர்ட் உறுப்பினர்கள் என்று தெரிந்தது.
சென்னையிலிருந்து அடித்துப் பிடித்து நீ யார்க்ஷையர் வந்தது இழுத்திப் போர்த்திக் கொண்டு தூங்கவா என்று அவர்கள் கண்டித்த மாதிரி இருக்கவே எழுந்து உட்கார்ந்தேன். அந்த மூத்த தலைமுறை வெள்ளைக்காரர்கள் படும் கஷ்டம் இருக்கிறதே, அந்தோ பரிதாபம். ஒரு மாதத்தில் குறைந்தது பத்து நீலப்படங்களையாவது தணிக்கை செய்ய வேண்டியிருக்கிறது. அதில் எந்தெந்தக் காட்சி ரொம்ப மோசம், எது எல்லாம் சுமார் பாசம் என்று தெளிவான முடிவுக்கு வர, ஒவ்வொரு படத்தையும் குறைந்தது நாலு தடவையாவது முதலிலிருந்து கடைசி வரை பார்த்து குறிப்பு எடுக்க வேண்டும். அப்புறம் விவாதிக்க வேண்டும்.
கவர்மெண்ட் இந்த போர்ட் உறுப்பினர்களுக்கு இதற்கான ஊதியமாக மாதாமாதம் கொடுக்கும் பிசாத்து பீஸ் யிரத்துச் சில்லறை பவுண்ட் (சுமார் எழுபத்தையாயிரம் ரூபாய்) யாருக்கு வேணும்? இந்தத் துன்பத்தை எல்லாம் தாங்க அது ஈடாகுமா என்ன?
பெரிசுகள் அங்கலாய்த்தபோது தூக்கம் போய் எனக்கும் அழுவாச்சி அழுவாச்சியாக வந்தது. ‘விலகிக்கோ பெரிசு, நான் உங்க சார்பிலே நாலு நாள் இந்தக் கஷ்டத்தை எல்லாம் அனுபவிக்கறேன்’ என்று உதவிக்கரம் நீட்ட ஆசை.
‘கம்ப்யூட்டரைப் புளியஞ்சாதம் போல கட்டிக் கொடுத்து வேலை பார்த்துவிட்டு வான்னு அனுப்பினா நீலப்படமா பார்க்கிறே” என்று டெலிபதியில் சென்னைவாழ் வீட்டு, ஆப்பீஸ் தலைமைப் பீடங்கள் முறைக்க, டெலிவிஷனை அமர்த்திப் போட்டுத் தூங்கப் போனேன்.
சுருக் என்று ஏதோ முதுகுக்கு ரெண்டு செண்டிமீட்டர் கீழே கடித்ததாக உணர்ச்சி. பிரமைதான். இங்கிலாந்து குளிருக்கு ஊர்கிற, நகர்கிற, பறக்கிற, கடிக்கிற வர்க்கம் எல்லாம் உறைந்து போய் இருக்குமே. யார் சொன்னது என்று ஆட்சேபித்து, இன்னொரு சுருக் முந்தியதற்கு நாலு மில்லிமீட்டர் வலப்புறமாக.
எழுந்து உட்கார்ந்து விளக்கைப் போட்டால் முதல் காரியமாக பீஸ் ஆகியது அந்த பல்ப். “நூறு வருஷ பல்பை பியூஸ் ஆக்கிட்டியே” என்று இருட்டில் விக்டோரியா பார்வை முதுகைச் சுட்டபோது அடுத்த சுருக்.
டார்ச்சை எடுத்துப் படுக்கையைப் பரிசோதிக்க, நான் காண்பதென்ன? சூரியன் அஸ்தமிக்காத இங்கிலாந்து பெருநாட்டுத் தங்கும் விடுதியில் ஓர் ஒரிஜினல் மூட்டைப் பூச்சி. தொல்லைகள் தொடரட்டும் என்று வாழ்த்தி ஓடி மறைந்தது அது.
(தினமணி கதிர் – ‘சற்றே நகுக’ பகுதி)