அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பத்தொன்பது இரா.முருகன்
வைத்தாஸ் எழுந்து அரை மணி நேரமாகிறது. இப்போது காலை ஆறு மணி. டிசம்பர் மூடுபனியில் குளிரக் குளிர நனைந்து கொண்டிருக்கும் தில்லி மாநகரம்.
ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குள் அந்தப் பனி வராது. வைத்தாஸ் தான் அதைத் தேடிப் போய்ப் பார்க்க வேண்டும்.
அவன் போகக் கிளம்பினான் தான். அதற்குள் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் ஒன்று இரண்டாக அவன் அறைக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அரை மணி நேரம் முன்னால் வந்த பருமனான நபர் கனமான கறுப்புக் கம்பளிக் கோட்டும், வயிற்றை இறுக்கும் கசங்கிய கால் சட்டையும், மஞ்சள் நிறத்தில் கழுத்துப் பட்டியுமாக உள்ளே நுழைந்தார். அமைச்சர் ஏழு மணிக்கு வருகிறார் என்று சாவுச் செய்தியை அறிவிக்கும் நடுங்குகிற குரலில் தெரியப்படுத்தினார்.
வைத்தாஸ் அதைக் கேட்டுத் திகைக்க வேண்டும் என்றோ, மிகப்பெரும் கருணை காட்டுதலுக்குப் பாத்திரமானவனாக நெக்குருகிப் பரவசமும் அனுபூதியும் பார்வையில் புலப்பட நெகிழ்ந்து நிற்க வேண்டுமென்றோ எதிர்பார்த்தவராக, ஒரு நிமிடம் காத்துக் கொண்டிருந்தார். வயிற்றில் வாயு உபத்திரவம் அதிகமானதால் அந்த நேரத்தில் அபானவாயு வெளியேற்ற வேண்டிப் போனது வைத்தாஸுக்கு.
இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவில் ஈசானிய மூலையில் எலிவளையாகச் சுருண்டிருக்கும், மதிப்புக்குரிய நேச நாடு ஒன்றின் பிரதிநிதியாக வந்திருக்கும் வைத்தாஸ் அப்படியெல்லாம் செய்யலாகாது என்று பூடகமாக வலியுறுத்துகிற மாதிரித் தலையை இடவலமாக ஆட்டினார் பொறுப்பு வாய்ந்த அந்த அதிகாரி.
வைத்தாஸ் கடந்த நான்கு நாட்களாகத் தன் நாட்டின் அரசாங்கத் தூதராகப் பணியாற்ற தில்லிக்கு வந்திருக்கிறான். அந்த ஆப்பிரிக்க மண்ணையும், நீரோடைகளையும், மக்களையும், மிருகங்களையும், பறவைகளையும், பூச்சி புழுக்களையும், துணி பொம்மை, மந்திரவாதம், எண்ணெய்ச் செக்கு, மரம், செடி, கொடிகளையும் பிரதிநிதிப் படுத்துகிறவன் அவன். இந்திய மக்கள் நேசிக்கும், இந்தியர்களை நேசிக்கும் சிறிய, தொல்லை தராத, சிநேகிதம் பொங்கி வழியும் தேசம் அது. நட்புறவு பலப்பட்டு தொழில், வர்த்தக ரீதியாக இரு நாடுகளும் கை கோர்த்து முன்னேறும் இனிய தினங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அபான வாயு வெளியேற்றும் நேரமில்லை இது. முனைந்து செயல்படும் தினங்கள். வைத்தாஸுக்கு, அரசாங்கத் தூதுவர் என்ற வகையில் இது குறித்த பிரக்ஞை உண்டு. இனி முறையாக நடந்து கொள்வதாக உறுதி செய்கிற பார்வையோடு அதிகாரியை ஏறிட்டான் வைத்தாஸ். அவன் வயிறு இனி ஒருபோதும் இரையாது.
நல்லது, கழிப்பறையை ஒரு வினாடி பார்த்து விட்டு வருகிறேன் என்று களர் நிலத்தில் எடுத்து வைக்கும் நிச்சயமற்ற பாதங்கள் முன்னேற உள்ளே போனார் அதிகாரி. உள்ளே என்ன சோதிக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் மிகுந்தவனாக வைத்தாஸும் அவர் பின்னாலேயே போனான்.
தண்ணீர் சேகரிக்கப்படும் பீங்கான் கமோடைத் திறந்து கவனமாக உற்று நோக்கினார் அவர். உள்ளே விஷ ஜந்துவோ அல்லது மகா குள்ளமான மனிதனோ பதுங்கியிருக்கக் கூடும் என்று சந்தேகம் எழுந்திருக்கக் கூடும். அது தீர, தண்ணீர்க் குழாயைத் திறந்தார். பீச்சியடிக்கும் குழலில் அந்த நீர் நிரம்பி வேகமாக வருகிறதா என்று பார்த்தார். வெதுவெதுப்பாக இருக்கிறதா எனப் புறங்கையில் அந்த நீர்ப் பொழிவை அடித்து நோக்கினார். அமர்கிற ஆசனம் சௌகரியமானது தானா என்று உட்கார்ந்து பார்த்தார்.
அவர் நீர் பொழியும் குழலைத் தன் முதுகுப் பக்கம் கொண்டு போவதைப் பார்த்ததோடு வைத்தாஸ் திரும்பி வந்தான்.
கழிப்பறை, மர பீரோ, சுவரில் பதித்த, உடுப்பு வைக்கும் அலமாரிகள், படுக்கை மேலே, படுக்கைக்கு அடியில், திரைச்சீலைக்குப் பின்னால், அறையை வெப்பமாக்கும் ஹீட்டருக்குள், மூடிய ஜன்னல்கள் ஊடாக வெளியே மரங்கள் அடர்ந்த தெருவை என்று ஒவ்வொன்றையும் கவனமாக நோக்கி திருப்தி தெரிவித்துப் போனார் அவர்.
சர்க்கார் உத்தியோகஸ்தர்களின் சரிபார்ப்பு அணிவகுப்பு பின்னர் ஆரம்பமானது.
கடைசியாக வந்த அதிகாரியிடம் தன்னைப் பார்க்க வர இருக்கும் அமைச்சர் பற்றி விசாரித்தான் வைத்தாஸ்.
இலாக இல்லாத அமைச்சர். அவர் உட்கார்ந்து கையெழுத்துப் போட கோப்புகள் எதுவும் இல்லையென்பதால் அலுவலகமும் இல்லையாம்.
சிறிய நாடுகளின், கோபித்துக் கொள்ள வேண்டாம், இது ஒரு நாட்டின் ஜனத்தொகை அடிப்படையில் உத்தேசமாக நிர்ணயிக்கப் படுவது. சிறிய நாடுகளின் தூதுவர்களை, கலாசாரப் பரிமாற்ற விழாக்களை சிறப்பிக்க வரும் ராஜப் பிரதிநிதிகளை, வியாபாரத் தூதுக் குழுக்களை வரவேற்று நலம் விசாரிக்கவும், சிறிய அண்டை அயல் தேசங்களில் பதவியில் இருக்கும் யாராவது இறந்து போனால் துக்கம் விசாரிக்கவும் இந்த அமைச்சர் தான் அனுப்பப் படுகிறார்.
வெள்ளப் பெருக்கு நிகழும் போது, ஹெலிகாப்டரில் பயணம் செய்ய முன்னனி அமைச்சர்கள் கலவரப்படுவதால் இவரே ஏற்றி அனுப்பி வைக்கப் படுகிறார்.
அமைச்சருடைய பெயரும் அரசு சின்னமும் துணிப் பரப்பு முழுக்கப் பொறித்த பதினேழு விதமான உடுப்புகள் அரசு செலவில் அவருக்கு வழங்கப் பட்டிருக்கின்றன. அவர் உடுத்திய உடுப்புகள் தலைநகரிலும் மற்ற நகரங்களிலும் ஏலம் விடப்பட்டு தேசிய மொழி வளர்ச்சிக்கான பாடல்கள் இயற்றுகிறவர்களுக்கு மானியமாகத் தரப்படுகிறது. அடுத்த ஏலம் இம்மாதம் எட்டாம் தேதி நடக்கும்.
இன்று வைத்தாஸைச் சந்திக்க வரப் போகும் அமைச்சருக்கு அலுவலகம் என்று ஒன்று இன்னும் இல்லையென்பதாலும், இவரும் இந்த அரசும் பதவியில் இருக்கும் இன்னும் இரண்டு ஆண்டுகளும் மூன்று மாதங்களுமான காலகட்டத்தில், அலுவலகம் இவருக்கு ஒதுக்கப்படும் என்ற நிச்சயம் இல்லாததாலும், தன் வீட்டிலேயே அரசாங்கச் சந்திப்புகளை நடத்துகிறார் அமைச்சர்.
அமைச்சர் வீட்டில் மூட்டைப் பூச்சித் தொல்லை அதிகமானதால் மருந்து அடிக்கிற மும்முரத்தில் இருக்கிறார்கள். கெட்ட வாடை அடிக்கும் அந்தப் பூச்சி மருந்தும், தப்பித்துக் குற்றுயிரும் குலையுயிருமாக மூட்டைப் பூச்சிகள் ஓடும் அறைகளுமாக அவர் வீடு தற்போது இருப்பதால், வைத்தாஸை சந்திக்க அவன் தங்கியிருக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு வந்து கொண்டிருக்கிறார். காலை எட்டு மணிக்கு வருகிறார் அவர்.
பழைய சர்வாதிகாரிகள் காணாமல் போக, புதியதாக ஜனநாயகம் மலர்ந்த நாடு வைத்தாஸின் தேசம். அந்த நாட்டுத் தூதரகத்துக்கு இன்னும் சாணக்யாபுரியில் இடம் ஒதுக்கப்படாததால், லாஜ்பத் நகர் பகுதியில் இருபது வருடம் முன்பு சிந்திக்கார அகதியாக லாஹோரில் இருந்து வந்த ஒரு முனிராஜ் நன்கானி வீட்டு மேல்மாடியில், அதாவது பர்சாதி என்று கூறப்படும் இரண்டு அறைகளில் தூதரகம் இயங்குகிறது. அஸ்பெஸ்டாஸ் ஷீட் கூரையில் சத்தம் கிளப்பியபடிக்குப் பனி விழும் அந்த மாடிப் பிரதேசத்தில் வைத்தாஸ் தங்க முடியாது, கழிப்பறை சௌகரியமும் போதாது என்பதால் அவர்கள் நாட்டு அரசின் செலவில், தினசரி வாடகைக்கு இந்த ஓட்டலில் பெரிய அறையை எடுத்துத் தங்கி இருக்கிறான்.
பணம் படைத்த அரபு நாட்டு ஷேக், அவர் மனைவிகள், பிள்ளை குட்டிகள், நண்பர்கள், விரோதிகள் சகிதம் வந்து எல்லா வசதிகளோடும் தங்கி விட்டுப் போகத் தோதாக மிகப் பெரிய அறை இது. வைத்தாஸ் தனியாக வந்திருக்கிறான்.
கீழே ஓட்டல் விதானத்தில் இருந்தபடி, அமைச்சரோடு ஆப்பிரிக்க நாட்டுத் தூதர் பேச ஏற்பாடு செய்தால், அந்த நிகழ்வு நேரும் போது பாதுகாப்பு பிரச்சனை எழலாம் என்று இந்திய சர்க்காரின் பாதுகாப்புத் துறைக்குப் பட, வைத்தாஸ் இருக்கும் அறைக்கே வருகை புரிய, இதோ நடந்து வர இருக்கிறார் அமைச்சர்.
ஆப்பிரிக்க நல்லுறவை வளர்க்க அவர் ’வாக்கிங் த எக்ஸ்ட்ரா மைல்’ ஆக எடுத்து வைக்கும் கூடுதல் காலடிகள் அவை என்று நாளைய பத்திரிகைகள் க்ளீஷே உதிர்த்துச் சொல்லக் கூடும் என்பது வைத்தாஸுக்குத் தெரியும். அது வெளியாவது அநேகமாக அவசரமாகப் புரட்டப் படுகிற கடைசிக்கும் முந்திய பத்திரிகைப் பக்கமாக இருக்கலாம். கழிப்பறையில் செய்தித்தாள் படிப்பவர்கள் தண்ணீரில் பேப்பர் நனைந்த காரணத்தால் அங்கேயே நொசநொசத்துத் தரையில் பரவ விட்டுவிட்டு வரும், படிக்காததால் தலை போகாத சாதுவான செய்திகள் கொண்ட பழுப்பு நியூஸ்பிரிண்ட் காகிதங்களாக அவை இருக்க வாய்ப்பு உண்டு.
அமைச்சர் வந்து கொண்டிருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார்.
எட்டு மணிக்கு பத்து நிமிடம் கழித்து அமைச்சர் வந்தார். ஐந்து நட்சத்திர ஓட்டல் இருக்கும் தெருவில் குறுக்கே காவலர்கள் துப்பாக்கி ஏந்தி நிற்பது வைத்தாஸ் அறை ஜன்னல் வழியே தெரிந்தது. ஓட்டல் வாசலிலும் அவர்கள் தான்.
மனதைக் கரைக்கும் ஓலமிட்டுக் கொண்டு, மேலே சிவப்பு விளக்கு சுழலும் மோட்டார் வேனும், ஒரு அம்பாசிடர் காரும், தொடர்ந்து இன்னொரு, மற்றுமொரு, வேறொரு அம்பாசிடர் கார்களும் வந்தன. கொடி பறக்க, அமைச்சர் பயணம் செய்யும் வித்தியாசமான கருப்பு நிற அம்பாசிடர் கார் அடுத்து வந்தது.
தொடர்ந்த மோட்டார் சைக்கிள்களும் ஜீப்புகளும் ஊர்வலமாக வந்து ஓட்டல் வளாகத்தில் நுழைந்ததைப் பார்த்த வைத்தாஸ், தன் கம்பளி சூட் கசங்காமல் இருக்கிறதா, கோட்டின் கைப்பகுதி கௌரவமாக மணிக்கட்டுக்குக் கீழே வராமல் இருக்கிறதா, உள்ளேயிருந்து வெள்ளைச் சட்டை சற்றே வெளிப்பட்டுக் கையை மூடி கப்லிங்க்ஸ் போட்டிருப்பது அவசரமான பார்வைக்குத் தெரிகிறதா என்று உறுதிப்படுத்திக் கொண்டான் வைத்தாஸ். உத்தியோக உடையிலிருந்தான் அவன்.
அறை வாசலில் சத்தம். இந்தியில் உரக்கக் கூவிக்கொண்டு துப்பாக்கி சுமந்து வந்த சேவகன் ஓரமாகப் போய் உறைந்தது போல் நிற்க, கனமான பூட்ஸ் அணிந்த காலடிகள் சப்திக்கும் சீரான ஒலி. அமைச்சர் உள்ளே வந்தார்.
நாலரை அடிக்கும் குறைவான உயரமும், பருத்த உடலும், தலையில் முழு வழுக்கையுமாக அமைச்சர். அவருடைய வெள்ளை ஜிப்பா முழங்காலைக் கடந்து வழிந்து மறைக்க, கதர் வேட்டி தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தது. ஐந்து நிமிடம் முன்னால் கிராம்பு சாப்பிட ஆரம்பித்து சுற்றிலும் அதிகாரத்தையும், கண்டிப்பைக் கட்டி நிறுத்தும் கனமான கிராம்பு வாடை அமைச்சரோடு சுழன்று கொண்டிருந்தது. கிராம்பும் மிளகும் டன் டன்னாக கீழை நாடுகளிலிருந்ஹ்டு இறக்குமதி செய்து விற்கும் பிரிட்டீஷ் மண்டிக்காரனின் ஆளுமை அமைச்சருக்குப் படர்ந்திருக்கலாம் என்று வைத்தாஸ் நினைத்தான். நாலரை அடி உயர பிரிட்டானியர்கள் யாரும் சட்டென்று அவனுக்கு நினைவு வரவில்லை.
ஃபைல்களை அடுக்கி எடுத்தபடி ஒரு அதிகாரி அவர் பின்னால் ஜாக்கிரதையான அரையடி இடைவெளி விட்டு வந்தார். அட்டையில் செருகிய காகிதம், பவுண்டன் பேனா சகிதம் இன்னொருவரும் வந்தார். அமைச்சரின் உத்தரவுகளை உடனடியாக எழுத்தாக்க வேண்டிய அவசரம் அவர் நடையின் தெரிந்தது.
வைத்தாஸின் கையைக் குலுக்கி தலையை ஆட்டி மாந்திரிகம் செய்யும் ஊடு மந்திரவாதியின் தொனியில் அமைச்சர் முனகினார். ஏதோ தலைக்குள் இருந்து வர மாட்டேன் என்கிறது போல் நெற்றியில் மடக்கிய விரலால் தட்டியபடி அன்போடு சிரித்தார்.
நினைவு வந்த மகிழ்ச்சியில் இன்னொரு முறை கை குலுக்கினார்.
நல்லா இருக்கியா? சாப்பிட்டியா? வருத்தப்படறேன்.
வரிசையாகச் சொன்னார் அமைச்சர்.
அது தமிழ் என்று வைத்தாஸ் ஊகித்தான். அந்த மொழியை அவருக்குப் பேசத் தெரிந்திருக்காது. எனினும் வைத்தாஸ் இரண்டு தலைமுறை முன்னால் ஆப்பிரிக்காவில் குடியேறிய குடும்பத்தில் பிறந்து, இன்னும் வீட்டில் தமிழ் பேசிக் கொண்டிருக்கிற ஆப்பிரிக்கத் தமிழனாக இருக்கக் கூடும் என்று அமைச்சர் எதிர்பார்த்திருக்கலாம்.
பதிலாக அதே மொழியில் பொருத்தமாக ஏதாவது சொல்ல முடிந்தால் நன்றாக இருக்கும். என்றாலும் அவனுக்குத் தெரியாத மொழி அது என்பதால் ஆங்கிலத்தில் அமைச்சரை நலம் விசாரித்தான் வைத்தாஸ்.
காலை உணவு முடிந்ததா என்று சோபாவில் உட்கார்ந்தபடி கேட்டார் அமைச்சர். அவர் பக்கத்தில் இருந்த அதிகாரி, குழந்தைகளும், பெண்களும் நடனம் ஆடும் புகைப்படங்கள் நிறைந்த ஒரு ஆல்பத்தைப் பிரித்து வைத்தாஸுக்குக் காட்டி ஒவ்வொன்றாக விளக்க ஆரம்பித்தார். எல்லாப் படங்களிலும் கோணலான நீளத் தலைப்பாகையோடு அமைச்சர் நடுவில் ஆடிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது.
காலையில் நீங்கள் இட்டலி தானே சாப்பிடுவீர்கள்?
அமைச்சர் தான் சொல்வது சரியாக இருக்கும் என்ற திட நம்பிக்கையில் வைத்தாஸைக் கேட்டதோடு தானும் இன்று அவனோடு காலைச் சிற்றுண்டியாக அதேதான் உண்ணப் போகிறார் என்ற மகிழ்ச்சிகரமான தகவ்லையும் சொன்னார்.
அந்த ஓட்டலின் தென்னிந்திய உணவு தில்லியிலேயே மிகச் சிறந்தது என்று அவர் சொன்னபோது வைத்தாஸ் திருப்தியை வெளிப்படுத்தும் விதமாகச் சிரிக்க, முன்னால் வந்த அமைச்சரகப் புகைப்படக்காரர் அந்தக் காட்சியைப் படம் எடுத்துக் கொண்டார்,
வைத்தாஸும் அமைச்சரும் ஆசிய ஆப்பிரிக்க ஒற்றுமையைக் கொண்டாடும் விதத்தில் சேர்ந்து உட்கார்ந்து காலை உணவு உண்ணும்போது, அமைச்சர் வைத்தாஸிடம் கேட்டது –
நீங்க எழுத்தாளராமே?
ஆமா
என்ன மாதிரி படைப்புகள்?
நாவல்கள்
அப்புறம்?
நாவல்கள் மட்டும்
அவற்றில் பெண்கள் வருவார்களா?
அவங்க இல்லாமலா?
ஆப்பிரிக்கப் பெண்களா?
ஆமா. மற்றவங்களும் வரலாம்.
அமைச்சர் அதிகாரிகளையும் புகைப்படக் காரரையும் அப்பால் போகச் சொன்னார். அவர்கள் அறை வாசலில் நின்று அசூயையோடு வைத்தாஸைப் பார்த்தார்கள்.
ஆப்பிரிக்கப் பெண்கள் உறவு கொள்ளும்போது உச்சமடைய பதினேழு நிமிடங்கள் எடுத்துக் கொள்வார்களாமே?
அமைச்சரின் இந்தக் கேள்விக்கு வாய் நிறைய இட்லியோடு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை வைத்தாஸுக்கு.
கையில் கடிகாரத்தோடு கலவி செய்ய முடிந்தால் இதற்கான பதில் கிடைக்கும் என்று தோன்றியது.
அவனோடு சுகித்த பெண்களில் யார் யார் எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டார்கள் என்று நினைவில்லை. ஒவ்வொன்றும் ஒரு மாதிரி இருந்தால்? அமைச்சர் அவற்றின் அடிப்படையில் சராசரி எவ்வளவு என்று கோரலாம்.
நந்தினிக்கு எத்தனை நிமிடங்கள்?
அவள் ஆப்பிரிக்கப் பெண் இல்லை.
இன்னொரு இட்லியும் தேங்காய் துவையலும் போட்டுக் கொள்கிறீர்களா? கலாசாரப் பரிமாற்றம் நம் இரு நாடுகள் இடையே நடக்க வேண்டும். உங்க ஊர் சினிமா நட்சத்திரங்கள் இங்கே வருவார்களா? நாட்டியக்காரிகள்? நாடக நடிகைகள்?
வைத்தாஸ் அமைச்சரை சங்கடத்தோடு பார்த்தான். அவன் நாட்டில் சினிமா தயாரிப்பது இல்லை என்று சொல்லி விடலாம் தான். அமைச்சரின் உத்தேசமும் அந்தப் படங்களைப் பார்ப்பது இல்லை என்று தெரியும். சினிமாவில் தோன்றும் ஆப்பிரிக்க நாட்டுப் பெண் ரமிக்கக் கிடைத்து, கையில் நேரம் அளக்க மணல் கடியாரமும் பரிசாகக் கிடைத்தால் அவர் மகிழலாம். அவள் நடிகையாக இல்லாவிட்டாலும் விரோதமில்லை. கிடைத்தது ஸ்டாப் வாட்சாக இருந்தாலும்.
நடிகைகளை இங்கே வரவழைக்க அவசியம் முயற்சி செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தான் வைத்தாஸ்.
ஆங்கிலத் திரைப்படங்களே அவன் நாட்டில் உள்ள சொற்பமான திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன. எனினும் அண்டை அயல் தேசங்களில் கடன் வாங்கி, நல்ல ஆப்பிரிக்க சினிமாவை வைத்தாஸ் அமைச்சருக்கும், நட்பு நாட்டுக்கும் அறிமுகப்படுத்தக் கூடும் தான். அவற்றில் நடித்த நடிகர்கள். அவர்கள் யாருக்கு வேண்டும்? நடிகைகள் வருவதாக இருந்தால் இங்கே அழைத்து வரலாம் தான். அரசுத் தூதரின் சேவைகளில் அதுவும் அடக்கம்.
நாம் அடுத்த முறை சந்திக்கும்போது நட்புறவு தொழில் துறை திட்டங்களும், கலாசாரப் பரிமாற்றமும் நடைமுறையில் இருக்கும். சாணக்யபுரியில் எங்கள் தூதரகத்திலேயே உங்களை வரவேற்க நான் காத்திருப்பேன் என்றான் வைத்தாஸ் அமைச்சர் விடைபெறும்போது.
அதற்குள் நானும் உங்கள் நாட்டுக்கு வந்து போயிருப்பேன் என்றார் அமைச்சர் கண்களில் ஆர்வம் கொப்பளிக்க.
உயரத்தை வைத்துப் பார்த்தால், வைத்தாஸின் சொந்த நாட்டு நடிகைகள் மற்றும் நளினமான ஒப்பனைகளோடு வலம் வரும் அழகிய நடுவயதுப் பெண்களின் இடுப்புக்கு வருவார் அமைச்சர் என்று தோன்றியது வைத்தாஸுக்கு.
அந்தப் பெண்களைப் பற்றி நினைத்தபோதே வீராவாலியின் நினைப்பு கனமாகக் கவிந்தது அவன் மனதில்.
வீராவாலி.
அலையடித்து ஓய்ந்தது போல் அமைச்சரும் பரிவாரமும் கிளம்பிப் போனார்கள்.
வீராவாலி.
மயில் பீலியைத் தோளில் சுமந்து புழுதி புரண்ட உடலோடு தில்லியின் சந்து பொந்துகளில் கழைக்கூத்து ஆடுகிற பெண்.
அந்தக் கண்களை வைத்தாஸ் அறிவான். வியர்வை மணக்கும் அந்த உடம்பையும்.
வீராவாலி.
அவள் பெயரை நேற்றுத்தான் அறிந்தான்.
வீராவாலி.
அவளைப் பார்க்க வேணும்.
நீ என் முதல் நாவலில் இருந்து வந்திருக்கே என்று சொல்ல வேண்டும். கழுத்து நெறிபட்ட மயில்கள் கிடத்தி வைக்கப்பட்ட அறையில் காடா விளக்கு எரிய, அவளை ஆவேசமாக முத்தமிட வேண்டும்.
வீராவாலி.
கோட்டையும், கழுத்துப் பட்டியையும், இடுப்பில் கம்பளி பேண்டையும் களைந்து விட்டு கார்டுராய் கால்சராயும், கனமான கைத்தறி சட்டையும் அணிந்து கொண்டான் வைத்தாஸ்.
தில்லியில் சொற்ப வருமானத்தில் காலம் தள்ள நைஜீரியாவில் இருந்தோ, கானாவிலிருந்தோ வந்திருக்கும் ஆப்பிரிக்கர்கள் அணியும் உடை அது. சராசரி ஆப்பிரிக்கர்கள். எந்த நாட்டுக்கும் தூதர்கள் இல்லை அவர்கள். நடிகைகளை அழைத்து வந்து அமைச்சர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய கடமை இல்லாதவர்கள்.
அறையில் தொலைபேசி அழைத்தது.
அமைச்சர் உங்களுக்கு நேரமிருந்தால் நாளை மாலை விருந்துக்கு வர முடியுமா என்று கேட்டார்.
அமைச்சர் நாசமாகப் போகட்டும். வைத்தாஸுக்கு நேசமான நட்புறவு நாடுகள் பற்றி எந்த விசாரமும் இல்லை.
வீராவாலி அவனுக்காகக் காத்திருக்கிறாள். மயில்களின் சடலம் நாறும் அறைக் கோடியில் நிற்கிறாள். போஜ்பூரியோ, பஞ்சாபியோ, முல்தானியோ. புரியாத மொழியில் கலவிக்கு அழைக்கிறாள்.
அறையின் அழைப்பு மணி ஒலித்தது.
உள்ளே வரலாம்.
தூதரகக் கார் வந்து விட்டது.
வணங்கித் தெரிவித்தபடி நின்றான் ஓட்டல் சிப்பந்தியான இளைஞன். கருந்தாடியும், வெள்ளைத் தலைப்பாகையுமாக வந்தவன் அவன்.
வைத்தாஸ் புன்னகை செய்தான்.
வீராவாலி.
அந்த இளைஞன் நன்றி தெரிவித்து இன்னொரு முறை தலை வணங்கிப் போனான்.
(தொடரும்)