கட்டைக் கூத்து – பார்வையாளன் குறிப்புகள்

%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be/kattiyankaaran-2/” rel=”attachment wp-att-2179″>
கூத்து – 1
முந்தாநாள் பார்த்த கட்டைக் கூத்து இன்னும் மனதில் ஆடிக் கொண்டிருக்கிறது.

பெர்டோல்ட் ப்ரெஹ்டின் அந்நியப் படுத்துதல், ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் மெதட் ஆக்டிங் எல்லாம் இருக்கட்டும், நவீன நாடகம் இப்படியும் இருக்கலாம்.

இப்படித் தான் இருக்க வேணுமா என்பது நல்ல விவாதமாகலாம்.

இரண்டு அபூர்வமான கதாபாத்திரங்கள் – கட்டியங்காரர்கள். இவர்கள் நாடகத்தை, பாத்திரங்களை அறிமுகப் படுத்துகிறார்கள். ஒரு வினாடியில் துரியோதனின் காவல்காரர்கள் ஆகிறார்கள். அப்புறம் கண்ணபிரான் வந்து கொண்டிருக்கிறான் என்று பாஞ்சாலியிடம் அறிவிக்கும் தூதுவர்கள், தெய்வத்தின் காலில் விழுந்து வணங்கி எழ விருப்பமின்றிக் கிடக்கும் பக்தர்கள் (என்னப்பா தூங்கிட்டீங்களா என்று கிண்டல் செய்யும் தெய்வம்), பச்சை குத்த வந்த குறமகளிடம் அரட்டை அடிக்கிறவர்கள் என்று இயல்பாக, சில வினாடிகளில் இவர்கள் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள், மேக்கப் மாற்றம் இல்லை. உடல்மொழி மூலம்.

ஒரு கட்டியங்காரன் 10 வயது அஜய். இன்னொருவன் இன்பரசு (7 வயது இருக்குமா?) அதிலும் அந்த இன்பரசு – அவன் பிறவிக் கலைஞன். என்ன பிரமாதமான நடிப்பு!

பச்சை குத்த குறமகளிடம் கையை நீட்டி விட்டு அவள் தொடுவதால் ஏற்படும் விடலைத்தனமான் குறுகுறுப்பு, பச்சை குத்தும் ஊசி கூர்மையாகக் கையில் இறங்க சுரீரென்று வரும் வலி, அரசன் பக்கத்தில் இருக்கும் போது கள்ள மரியாதை, கொஞ்சம் தூரத்தில் நின்று நக்கலாகப் பார்வை – கலக்குகிறான் பொடியன்.

நண்பர் தீபா சொன்னது – கட்டியங்காரன் ஆடிட்டு வர சீன்… அவன் ஆடிக்கிட்டே எக்ஸிட் கொடுக்கணும் .. சீன் முடிஞ்சு அடுத்தது தொடங்கியாச்சு. அவன் ஆட்டத்தை நிறுத்தாம அப்படியே அதே வேகத்தில் வெளியே போனான்.. ஒரு பதற்றம் இல்லை.. நல்ல நடிகனுக்குத் தான் இது சாத்தியம்.

திரையில் ஒரு காட்சி முடிஞ்சு dissolve ஆகி அடுத்த காட்சி வர்ற மாதிரி..

எல்லா நடிகர்களும் (சராசரி வயது 13 முதல் 15) அபாரமாக நடித்தார்கள். கட்டியங்காரர்கள் அற்புதமாக நடித்தார்கள்.
————————–

கூத்து – 2

வசனம் ரொம்ப கூர்மை.

துரியோதனின் மனைவி பானுமதியிடம் குறமகள் குறி சொல்கிறாள் – உன் வம்சமே அழிஞ்சு போயிடும்.

அவள் குறி சொன்னதற்குக் கூலி கேட்கிறாள். பானுமதி தர மறுக்கிறாள்.

‘யாராவது கூலி கொடுத்துத் தாலி அறுத்துப்பாங்களா?’ – இது பானுமதியின் சுரீர் வசனம்.

’கூலி கொடுக்க மாட்டேன் என்கிறாள் உங்க மனைவி’ என்று குறமகள் மன்னன் துரியோதனனிடம் புகார் சொல்கிறாள். பக்கத்தில் நிற்கிற கட்டியங்காரர்கள் அரசுப் பிரமுகர்களாக நின்று கெத்தாகச் சொல்கிறார்கள் ‘ உழைப்புக்கான கூலி தர மாட்டோம். எப்பவுமே தர மாட்டோம்’.

ஒரு வினாடியில் contemporary ஆகி நடப்பைத் தொட்டுக் காட்டி, லாவகமாக கதைக்குள் மறுபடி அமிழ்கிறது கூத்து.

————————–
கூத்து – 3

சந்நதம் வந்து (entering into a trance) குறி சொல்லுதல் மதம் சார்ந்தது என்பதோடு ஒரு சமூக நிகழ்வு என்றும் கூத்தைப் பார்க்கும் போது புரிகிறது.

அத்தினாபுரத்தில் துரியோதனன் அரண்மனைக்குக் குறமகள் போகிறாள். அரசியும் மற்ற கௌரவர்களின் மனைவியரும் இருக்கும் உயர்ந்தோர் அவை. ஏழைக் குறத்தி மனதில் பட்டதைச் சொல்ல வேண்டும். எதிர்ப்பு வராமலும் சொல்ல வேண்டும்.

தெய்வ வழிபாடு நடக்கிறது. குறமகளுக்குச் சந்நதம் வருகிறது. அவள் பேச ஆரம்பிக்கிறாள்.

துரியன் பாண்டவர்களைச் சூதில் வீழ்த்தியதும், பாஞ்சாலியைத் துகில் உரித்ததும் அநீதி. இறுதி வெற்றி அறத்துக்கே. கௌரவர் குலம் அழியப் போகிறது.

எதிர்ப்புக் குரல் அடக்கப்பட்ட சமுதாயத்தில் சமூக விமர்சனத்துக்கு எப்படியாவது ஒரு கதவு திறக்கும். இங்கே அது சந்நதமாக.

———————-

கூத்து – 4
கட்டியங்காரர்களின் கையில் பிடித்திருக்கும் சிறு பிரம்புகள் முக்கியமான அரங்கப் பொருட்கள் ஆகி விடுகின்றன.

போய்ப் பஞ்ச பாண்டவர்களைக் காட்டில் தேடி விட்டு வாங்க என்று வீரர்களிடம் ஆணையிடுகிறான் துரியோதனன்.

கட்டியங்காரர்கள் அடுத்த வினாடி வீரர்களாகிறார்கள். மேடை அவர்கள் பாவனையில் காடாகிறது. பிரம்புகளைப் சற்றே சாய்த்துப் பிடித்தபடி புதர்களைப் பாவனையில் விலக்கிக் குனிந்து தேட ஆரம்பிக்கிறார்கள். கிடைமட்டமாகப் பிரம்பைப் பிடித்து வாயால் டப் என்று ஒலி எழுப்ப, என்ன என்று கேட்கிறான் மன்னன். துப்பாக்கி மன்னா என்கிறான் வீரன்.

காட்டில் வேட்டைக்குப் போகிறவனின் பிம்பம் அப்படித்தான் கிராம வெளியில் மனதில் பதிந்திருக்கிறது.

anachronism -இல்லை. பாசாங்கு இல்லாத மேடை நிகழ்வு.

——————————–

கூத்து – 5

குறமகளின் உச்சந்தலையில் கட்டப்பட்டிருக்கும் ஒரு சிறு மரக் கிண்ணம். அவளுக்குள் தெய்வம் வந்து சந்ந்தம் ஏற்படும் போதெல்ல்லாம் அந்தக் கிண்ணம் சுழல ஆரம்பித்து விடும்.

கிண்ணத்தில் அரை ஆம்பியர், 10 வோல்ட் டிசி மோட்டார் வைத்துச் சுழல வைக்க மெனக்கெடாமல், தேவைப்படும் போது குறமகளே கையை உயர்த்திச் சுழற்றி விட்டுக் கொள்கிறாள்.

அற்புதம் நிகழ்கிறதா நிகழ்த்தப் படுகிறதா என்று கேட்காமல் கேட்கும் உத்தி இது

———————————————–

கருத்துப் பரிமாற்றம் –

Dheepa Ramanujam What I meant was – when he was beaten and was hurt, he was limping and had to exit rubbing his back. By the time he started moving, the next scene had already started. But he never stopped limping as he walked out and he was in the character until the exit.

ஞாநி சங்கரன் //இரண்டு அபூர்வமான கதாபாத்திரங்கள் – கட்டியங்காரர்கள். இவர்கள் நாடகத்தை, பாத்திரங்களை அறிமுகப் படுத்துகிறார்கள். ஒரு வினாடியில் துரியோதனின் காவல்காரர்கள் ஆகிறார்கள். அப்புறம் கண்ணபிரான் வந்து கொண்டிருக்கிறான் என்று பாஞ்சாலியிடம் அறிவிக்கும் தூதுவர்கள், தெய்வத்தின் காலில் விழுந்து வணங்கி எழ விருப்பமின்றிக் கிடக்கும் பக்தர்கள் (என்னப்பா தூங்கிட்டீங்களா என்று கிண்டல் செய்யும் தெய்வம்), பச்சை குத்த வந்த குறமகளிடம் அரட்டை அடிக்கிறவர்கள் என்று இயல்பாக, சில வினாடிகளில் இவர்கள் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள், மேக்கப் மாற்றம் இல்லை. உடல்மொழி மூலம்.// இதெல்லாம் நவீன நாடகத்தில் வந்து முப்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. 1978லேயே வீதி, பரீக்‌ஷா, நிஜ நாடக இயக்கம், அடுத்து 80களில் கூத்துப்பட்டறை, சென்னை கலைக் குழு, பல்கலை அரங்கம், இன்னும் பல குழுகள் எல்லாரும் இந்த உத்திகளை செய்யத்தொடங்கிவிட்டோம். நீங்கள்தான் எங்கள் நாடகங்களைப் பார்க்க வருவதில்லை. 🙁

EraMurukan Ramasami ஞாநி, பரீட்சா நாடகத்தில் இதெல்லாம் வந்திருப்பதில் மகிழ்ச்சி தான். yet, when even the Devil has to be given its due, why not the Angels?
17 mins · Like

ஞாநி சங்கரன் நேற்று மாலை நான் இந்தக் கூத்தைப் பார்த்தேன். சுட்டிப் பொடியன் மட்டுமல்ல, எல்லாருமே உடலிலும் முகத்திலும் சக்தி பொங்க நடித்திருந்தார்கள். சம்பிரதாயமான கூத்தில் காட்சி, அடவுமுடிய்ம்போது இருக்கும் கேஷுவல்நெஸ் இல்லாமல், நவீன நாடக/நடன டைமிங்குடன் ஒவ்வொன்றையும் கத்தரித்தது போல செய்த கோரியோகிராஃபிக்காகவும் சிறுவர்களுக்கு அருமையான பயிற்சி அளித்தமைக்காகவும் ராஜகோபாலையும் இதர ஆசிரியர்களையும் நாம் பாராட்டவேண்டும். இந்த சிறுவர் குழுவினரை பல்வேறு பள்ளிகளில் சென்று இதர சிறுவர்களுக்கு நடித்துக் காட்ட நாம் எல்லாரும் ஏற்பாடு செய்யவேண்டும். நான் தொடங்கிவிட்டேன்.

EraMurukan Ramasami ஞாநி, வரும் 27, 28 தேதிகளில் பெருங்காட்டூரில் கட்டைக் கூத்து குருகுலத்தின் 25-வது ஆண்டு நிறைவு என்று ஹன்னா ராஜகோபால், அவரை back stage-ல் சந்தித்தபோது அழைப்பிதழ் கொடுத்தார். உங்களுக்கும் அழைப்பு இருக்குமே. . கலந்து கொள்கிறீர்களா?
9 mins · Like

ஞாநி சங்கரன் செல்வேன். செல்வோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன