ஏதோ ஒரு பக்கம் இரா.முருகன்
பிரபலமானவர்களோடு பிரயாணம் போவதில் கொஞ்சம் கஷ்டம் உண்டு. நிச்சயம் அவர்களால் நமக்குக் கஷ்டம் கிடையாது. நாமும் அவர்களைத் துன்பப் படுத்துவதை மனதில் கூட நினைக்க மாட்டோம். ஆனாலும் ஆயிரம் ஜோடிக் கண்கள் பிரபலத்தின் மேல் நிலைத்திருக்க, கூட நடக்கிற, உட்கார்கிற, ரவா தோசை சாப்பிடுகிற, பேசுகிற, கேட்கிற நமக்கு சடாரென்று ஒரு பயம். இந்தாளு யாரென்று எல்லாரும் நம்மைப் பற்றி யோசித்திருப்பார்கள். அதிலே ஒருத்தராவது வாயைத் திறந்து யோவ் நீ யாருய்யான்னு கேட்டால் என்ன பதில் சொல்ல?
நான் எழுத்தாளன் – தமிழ்லே சொல்லுங்க –ரைட்டர்-சினிமா பத்திரிகை நிருபரா? ஊஹும். நம்ம இலக்கியத் தடம் எல்லாம் இங்கே சுவடில்லாமல் போய்விடும்.
உத்தியோகப் பெருமை பேசிவிடலாமா?
கம்ப்யூட்டர் கம்பெனியிலே அதிகாரி – சரி, இங்கே என்ன பண்றீங்க?
கதை எழுதி, பத்தி எழுதி, நாவல் எழுதி, சினிமா கதை வசனம் எழுதி எல்லாம் பிரயோஜனம் இல்லை. வேறே என்ன வழி? நாமும் கொஞ்சமாவது முகத்தைப் பார்த்து அடையாளம் காணும்படிக்கு பிரபலமாவதுதான்.
யோசித்துக் கொண்டே ஒரு மகா பிரபலத்தோடு கிட்டத்தட்ட முழு நாளையும் கழிக்க அண்மையில் சந்தர்ப்பம் வாய்த்தது.
கோவளம் கடற்கரை ஐந்து நட்சத்திர ஹோட்டல் ரிசப்ஷனில் அவரைச் சந்தித்தபோது சென்னை வீட்டில் சந்தித்தால் உட்காரச் சொல்லி பேசுகிறது போலதான் சகஜமாகப் பேசினார். அதற்குள் எத்தனையோ பேர் நின்று பார்த்துக் கடந்து போய்க் கொண்டே இருந்தார்கள். எனக்கென்னமோ அந்தப் பார்வையில் எல்லாம் பொறாமை கொழுந்து விட்டு எரிகிற மாதிரித் தெரிந்தது.
இவ்வளவு உற்சாகமா இவன் கிட்டே பேசிட்டு இருக்காரே? யாருடா புள்ளிக்காரன்? சினிமாக்காரன் மாதிரியும் இவன் மூஞ்சியிலே களை இல்லையே.
பள்ளிகொண்டபுரம் போய் அனந்தசயனனைத் தொழுது அவன் பெயர் கொண்ட எழுத்துலகச் சிற்பி வீட்டில் இறங்கி ஒரு ஹலோ சொல்லி விட்டு கொஞ்சம் இலக்கிய அரட்டையும் அடித்து விட்டு வரத் தான் திட்டம்.
நெரிசல் மிகுந்த வீதிகளில் கார் ஊர்ந்து கொண்டிருந்தது. உள்ளே அவர் கம்மந்தான் கான்சாகிப் பெருமையை உயர்த்திப் பிடிக்க, செம்மண் பூமிக்காரனான நான் எங்க ஊர்க்காரரும் கான்சாவின் அம்மாவனும் அவனை மாமரத்தில் தொங்கவிட்டுத் தூக்குப் போட்டுக் கொல்லக் காரணமானவருமான தாண்டவராயன் பிள்ளையின் இன்னொரு பக்கத்தை அழுத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட காரசாரமான வாக்குவாதம். வண்டி ஓட்டிக் கொண்டிருந்த நண்பர் ஓரம் கட்டி நிறுத்தி விட்டு என்னை ஒரு கை பார்க்க பலமான சாத்தியக்கூறு. இவ்வளவு பிரபலமானவரோடு யாருடா இவன் சரிக்கு சரி கட்சி கட்டி அழிச்சாட்டியம் பண்ணுகிறான் என்று கோபம் வரலாம். வண்டி நின்றால் தெரு ஓரம் போனவர்கள் நடந்த சங்கதி கேட்டு கொதித்து என்னை சுசீந்திரம் எண்ணெய்க் கொப்பரையில் கை முக்க இழுத்துப் போகலாம்.
அதுக்கு முன்னால் சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்கள் அந்த ம.பி அதாவது மகா பிரபலமானவரோடு மொபைல் தொலைபேசியில் அவசரமான படம் எடுத்துக் கொள்வார்கள். கிடைத்த காகிதத்தை நீட்டி ஆட்டோகிராபும் கோரலாம்.
நல்ல வேளையாக யாருக்கும் எந்த சேதாரமும் இல்லாமல் போக வேண்டிய இடம் போய்ச் சேர்ந்தோம். அடுத்த மூன்று மணி நேரம் நகரின் ஜன சந்தடி மிகுந்த அந்தப் பகுதியில் இந்த ம.பி இருப்பதே தெரியாமல் நகரம் வேலை நாள் மெத்தனத்தோடு இயங்கிக் கொண்டிருக்க, உள்ளே காமிரா, விளக்கு, சட்டைக் காலரில் மைக் இன்ன பிற அம்சங்களோடு பேச்சைத் தொடர்ந்தோம். என்ன, இப்போ, ஒரு கை கூடியிருக்கு. அவ்வளவுதான். பேசப் பேச பேச்சு வளர்ந்தது.
பகல் ஒரு மணிக்கு மின்சாரம் போயே போச்சு. வீட்டுக்குப் பின்னால் பழைய கால பாணி மர வீடு – அவுட் ஹவுஸ் ஒன்றில் பேச்சை உற்சாகமாகத் தொடர்ந்தார் நம் நண்பர். அந்த வீட்டு வாசல் படியில் உட்கார்ந்தபடி அவர் உரையாட, நான் சுற்றிலும் எழுந்து நின்ற அடுக்கு மாடிக் கட்டிடங்களைத் திகிலுடன் பார்த்தேன். யாராவது ஒருத்தர் பார்த்து அடையாளம் கண்டு கொண்டாலும் போதும். அப்புறம் நாங்கள் பார்க்கப் போனவர்களின் வீட்டுக்கு முன்னால் திருச்சூர் பூரம் போல ஜனசமுத்திரம் திரண்டு அலையடித்து எல்லோரையும் கடல் கொண்டு விடும்.
ஒரு ஜன்னல், ஒரு கதவு கூட அந்த ஒரு மணி நேரத்தில் பக்கத்தில் எங்கேயும் திறக்கப்படவில்லை. நகர வாழ்க்கையின் அமானுஷ்யத் தனிமையிலும் ஏக நன்மை!
வாய்க்கு ருசியான நாஞ்சில் நாட்டு சமையல். சென்னையில் சாப்பாட்டு நேரத்தில் இவரைப் பார்த்தால் ஜலதரங்கம் வாசிக்கிற மாதிரி நாலைந்து கிண்ணத்தில் நீர்க்கக் கரைத்த சூப், கொஞ்சூண்டு கறி, ரெண்டு தேக்கரண்டி சோறு, பழம் என்று கொறித்துக் கொண்டிருப்பார். இங்கே பேச்சு சுவாரசியத்திலும் சாப்பாட்டு ருசியிலும் மனம் பறிகொடுத்தோ என்னமோ இலையில் வட்டித்த எதையும் மிச்சம் வைக்காமல் ரசித்துச் சாப்பிட்டார் நண்பர். ‘Phantom pain பத்தி சொல்லிட்டு இருந்தோமே’ என்று எப்போதோ விட்ட இடத்தில் சரியாகப் பேச்சை இழை பிடித்து மீண்டும் தொடர்ந்த போது அவர் மகா பிரபலம் என்ற சுவடே காணோம்.
விருந்து முடிந்து வாசல் திண்ணையில் சகஜமாக ஒரு பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மேல் வீட்டு குஜராத்தி குடும்பத்துக் குழந்தைகளோடு அவர் அரட்டை அடித்தபடி இருக்க, நான் கையில் வைத்திருந்த மலையாளப் பத்திரிகையால் எனக்கு மட்டும் விசிறிக் கொண்டேன். நிலாக் காய்வது போல் அனுபவித்துக் கவிதை சொல்லிக் கொண்டிருந்த அவருக்கு வியர்க்கவே இல்லை.
யோசித்துப் பார்க்கும்போது தெரிகிறது அவருடைய இலக்கிய ஆர்வம் அவரைத் தரையில் எப்போதும் கால் பதித்திருக்க வைத்திருக்கிறது. அவை களிமண் கால்கள் இல்லை. அது எனக்கும் இன்னும் ஒரு பத்து பேருக்கும் தெரியும்.
88888888888888888888888888888888888888888888888888888888888888
ஒரு உதவி செய்யணும்.
சந்தித்த மாத்திரத்திலேயே கேட்டார் இயக்குனர் சரவணன். கம்ப்யூட்டர் தொழிலில் மும்முரமான இளைஞர்.
என்ன செய்யணும்?
நீங்க எழுதிய நெம்பர் 40, ரெட்டைத் தெரு புத்தகத்திலே இருந்து சில அத்தியாயங்களை குறும்படமா எடுக்கற திட்டம். உங்க உதவியும் வேணும்.
ஒரு கம்ப்யூட்டர்காரன் இன்னொரு கம்ப்யூட்டர்காரன் சிரமப்படும்போது ஆறுதல் சொல்ல முடியும். ஆனால் இவர் கையில் கத்தியைக் கொடுத்து என்னைக் குத்து என்கிறார். ஜப்பானிய எழுத்தாளர்கள் பற்றி எழுதினதைப் படித்திருப்பாரோ.
ஒண்ணுமில்லே. நம்ம படத்துலே நீங்க நீங்களாவே நடிக்கணும்.
அட, இத்தனை வருஷமா அதானே செஞ்சிட்டு இருக்கேன்.
இது கேமிரா முன்னால்.
இப்படி ஆரம்பமானது என் நடிப்புப் பயணம். மண்டையைப் பிளக்கும் மதுரை வெய்யிலில் ஒரு புறநகர் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆட்டோவில் வந்து இறங்கினேன். எட்டு முழ வேட்டி. கோவிந்தா மஞ்சள் சட்டை. வலது கையிலே கரும்பு. இடங்கையிலே துணிப்பையில் இருந்து எட்டிப் பார்க்கும் மஞ்சள் கொத்து, மாவிலை. காட்சிப்படி இது சென்னையில் நடக்கிறது.
ஆட்டோ டிரைவர் போட்டுத் தரச் சொல்லித் தகராறு செய்து அரை மனதோடு, கொடுத்த காசை வாங்கிக் கொண்டு போக நான் உள்ளே நடப்பது லாங் ஷாட்டில் சுடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நல்லா வண்டை வண்டையா திட்டுங்க என்னை.
கெஞ்சிக் கேட்டும் மதுரைக்கார ஆட்டோ ஓட்டுனர் முகத்தில் சிரிப்பு தவிர வேறேதும் இல்லை. எதுக்கு சார் உங்களைத் திட்டணும்? பாவமா இருக்கீங்க.
சென்னைத் தமிழ் நல்ல வார்த்தைகளை நான் சாம்பிளுக்கு எடுத்து விட அவர் சிரிப்பு கூடியதே தவிர குறையவில்லை. எப்படியோ தாஜா செய்து அவரைக் கோபப்பட வைத்து ஷாட் ஓகே ஆக, கரும்பும் கையுமாக உள்ளே நடக்கிறேன்.
கட், கட் – இயக்குனர் மெகாபோனில் இரைகிறார்.
ஏன் சார், எத்தனை வாட்டி தான் ஆட்டோவிலே இருந்து இறங்கி கரும்பைத் தூக்கிட்டு பட்டினத்தார் மாதிரி நடக்க வச்சு வாட்டுவீங்க. காலே வீங்கிடுச்சு.
நான் கோபத்தோடு புகார் மனு சமர்ப்பித்ததை அவர் கண்டுக்கவே இல்லை.
ஆட்டோ தோழர், ஏன் திரும்ப ப்ரேமுக்குள்ளே வந்தீங்க?
ஆமாம். கிளம்பிப் போன ஆட்டோவை ஓரமாக நிறுத்தி விட்டு ஆட்டோக்காரர் உள்ளே நுழைந்திருக்கிறார்.
நான் வாற சீனுதான் எடுத்துட்டீகளே. பொறவு என்ன ஆகும்னு பார்க்கலாம்னுதான்.
அவர் வெள்ளந்தியாகச் சொன்னார்.
சரவணனுக்கும் கோபம் வரவில்லை. கொடுத்து வைத்தவர்கள்.