புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 23 இரா.முருகன்

மூடுபனி காலை முதல் தில்லி முழுவதும் அடர்த்தியாகக் கவிந்திருந்தது. சராசரிக்கும் குறைவான காலை வெளிச்சத்தில் ஆபீஸ் போக பஸ் ஸ்டாப்புக்கு நடக்கிறதும், குழந்தைகளின் பள்ளிக்கூடம் கொண்டு விடும் ரிக்‌ஷாக்கள் மணியடித்துக் கொண்டு போகிறதும், பெரும்பான்மை வீடுகளில் டபுள் ரொட்டி ஆம்லெட் இருப்புச் சட்டியில் வெங்காயத்தோடு வதங்கும் வாடையும் குளிருமாக அபத்தமான காலைப் பொழுது. நாள் முழுக்க உறங்கி, சாயங்காலம் ஊரோடு விழித்தெழுந்து நாளைத் துவக்குகிறது போல் மூடுபனி ஊரை மாற்றியிருந்தது.

தலைநகரத்தில் கலாசார அமைச்சரகம் இன்னமும் செயல்பட ஆரம்பிக்காத காலை பத்து மணி. இருநூற்று முப்பது பேர் வேலை பார்க்கிற மத்திய அரசு ஆபீஸ் அது. விஸ்தாரமான அரசாங்கக் கட்டிடத்தில் மூன்று தளங்களுக்குப் பரந்து விரிந்திருந்த அந்த அலுவலகத்தில் எண்ணி ஐந்து பேர் தவிர வேறே எந்த ஊழியரோ அதிகாரியோ இதுவரைக்கும் வந்து சேர்ந்திருக்கவில்லை.

படி ஏறி வந்த சூப்ரெண்டண்ட் சின்னச் சங்கரன் மூன்றாம் மாடியில் பூட்டிய கதவுக்கு முன்னால் காத்திருக்க வேண்டிப் போனது. நாள் முழுக்க, ராத்திரி பூராவும் ஒரு கதவையோ, ஜன்னலையோ கூடச் சார்த்தி வைக்காத ஆபீஸில் இப்படிப் பூட்டித் திறக்கிற ஏற்பாட்டை உண்டாக்கிப் போனவர் சங்கரனுக்கு முன்னால் சூப்பிரண்டாக இருந்து ரிடையரான அப்பள நாயுடு தான். பாத்ரூம் போய் விட்டு வந்தாலே திரும்ப அங்கே போய் குழாயை மூடினோமா, கதவைச் சாத்தினோமா என்று திரும்பத் திரும்ப ஊர்ஜிதம் செய்து கொள்கிற அவர், ஆபீஸை ராபணா என்று அல்லும் பகலும் திறந்து வைத்திருக்கச் சம்மதிக்கவே இல்லை. காவலுக்கு ஆள் போட்டால் சரிதான். ஆனால் அவர்கள் பூட்டிய கதவுக்கு வெளியே உட்கார்ந்து காவல் காக்கட்டும் என்று நிர்தாட்சண்யமாகச் சொல்லி விட்டார் அப்பள நாயுடு.

என்ன மாதிரிப் பூட்டு உபயோகிக்க வேண்டும், எத்தனை சாவி, யார்யாரிடம் சாவி இருக்க வேண்டும், அவர்கள் லீவில் போனால் சாவி கைமாறுவது எப்படி, எத்தனை மணிக்கு எந்த நிலை ஊழியர் எந்த அதிகாரியிடம் இருந்து சாவியை எப்படிப் பெற்றுக் கதவு திறக்கவும் பூட்டவும் வேண்டும், சாவியோ பூட்டோ தொலைந்து போனால் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், பூட்டு வாங்க அனுமதிக்கப்பட வேண்டிய தொகை இப்படி சகலத்தையும் அலசி ஆராய்ந்து நோட் போட செக்‌ஷன் சூபர்வைசராக இருந்த சின்னச் சங்கரன் ஒரு வாரம் பாடுபட்டான். மூன்று உதவியாளர்கள் கூடமாட ஒத்தாசை செய்தார்கள். அதில் ஒருவர் தட்டச்சு செய்கிறவர். மற்ற இரண்டு பேர் புதுசாக சர்க்கார் வேலைக்கு வந்த கன்னடக் காரர்கள்.

நோட்டு மேலே போனபோது ஒரே ஒரு நிபந்தனையில் அப்ரூவ் ஆனது. முழு ஃபைலும் உள்ளது உள்ளபடிக்கு கமா, புல்ஸ்டாப் மாறாமல் இந்தியில் இருக்க வேண்டும் என்பதே அது. ஆபீஸ் முதல் மாடி பீகாரி பாபுக்கள் ஒரு குழுவாக அதை ஒரு மாதத்தில் நிறைவேற்றிக் கொடுத்தபோது ஆபீஸுக்கு பூட்டு திறப்பு நடைமுறையாகி இருந்தது.

ரிடையர் ஆன அப்பள நாயுடுவுக்குப் பிரிவு உபசாரமாக ஜரிகை மாலை போட்டு உருமால் கட்டி, கையில் ஆப்பிள் பழம் கொடுத்து ரிக்‌ஷாவில் வீட்டுக்குக் கொண்டுபோய் விட்டபோது சின்னச் சங்கரனை ஆக்டிங் சூப்பரிண்டெண்டாக நியமித்த உத்தரவு வந்திருந்தது. அது போன ஹோலிக்கு. இந்த ஹோலி நேரத்தில் சின்னச் சங்கரனை சூப்பரிண்டெண்ட் பதவியில் நிலையாக்கி அறிவிப்பு வந்து அவனும் சாந்தினி சௌக் கண்டேவாலா மிட்டாய்க் கடையில் தூத்பேடா வாங்கி மூ மிட்டா கர்லோ என்று வாயை இனிப்பாக்கிக் கொள்ள ஆபீஸ் முழுவதற்கும் விநியோகித்தான்.

அப்பள நாயுடு ஆந்திராவோடு போய் ஒரு வருஷத்துக்கு மேலாகியும் ஆபீஸில் தினசரி பூட்டு விழுந்து திறந்து கொண்டுதான் இருந்தது. அதை மாற்றி ஊர் உலக சர்க்கார் ஆபீஸ் நியதிப்படி திரும்ப மாற்ற யாருக்கும் கை வரவில்லை. ஆபீஸைத் திறந்து போட்டு ஏதாவது திராபையான பைல் தொலைந்து போனால்? சின்னச் சங்கரன் சூப்பரெண்டான அப்புறம் இதெல்லாம் நடக்கக் கூடாது. வேண்டுமானல் ஒன்றுக்கு ரெண்டாகப் பூட்டி வைக்கவும் அவன் தயார் தான்.

தப்த்ரி சேவகன் பிரிஜேஜ் குமார் சிங் சாவதானமாகப் படியேறி வந்தான். சின்னச் சங்கரனைக் கதவு பக்கம் பார்த்ததும் கடைசி இரண்டு படியை குதித்துக் கடந்து போலியான அவசரத்தோடு சுவரில் முட்டிக் கொண்டு சங்கரனுக்கு சலாம் வைத்தான்.

மன்னிக்க வேணும் மகா அதிகாரியே, பனி நேரத்தில் பஸ் எதுவும் முன்னீர்காவிலிருந்து இங்கே வராததால் மோட்டார் சைக்கிள் ரிக்‌ஷாவில் இடித்துப் பிடித்து உட்கார்ந்து ஊர்ந்து இப்போதுதான் வந்து சேர முடிந்தது என்றான் பிரிஜேஷ்.

பட்படியில் இஞ்சின் அதிர்வுக்கு இசைவாக அவன் உடம்பு இன்னமும் தன்னிச்சையாக அசைந்து கொண்டிருப்பதாகவும் அவன் சிரித்தபடி அறிவித்தான். சங்கரனுக்கும் சிரிப்பு வந்தது. இனிமேல் இவன் மேல் கோபப்பட முடியாது.

மத்தவங்க எங்கே?

இந்த சம்பிரதாயமான கேள்வி சூப்ரெண்ட்டெண்டால் தினசரி கேட்கப் படவேண்டும் என்று விதிமுறை உள்ளதால் சின்னச் சங்கரன் பிரிஜேஷைக் கேட்டான்.

வந்துட்டிருக்காங்க சாப்.

இது மட்டுமே எதிர்பார்க்கப் படும் பதில். அவங்க எல்லோரும் நேத்து ராத்திரி செத்துப் போய்ட்டாங்க, கூட்டமாக எல்லோரும் கனாட் பிளேஸில் நூதன் ஸ்டவ் வாங்கப் போயிருக்காங்க போன்ற பதில்கள் ஆசுவாசம் அளிக்காதவை.

முதலில் கண்ணில் பட்டு முடிக்கப்பட வேண்டிய ஃபைல் சிவப்புத் துண்டு அலங்காரத்தோடு மேஜை மேலேயே இருந்தது.

அமைச்சர் கலாச்சார விழாவில் ஆற்ற வேண்டிய சொற்பொழிவு என்று மேலே இருந்த காகிதம் சொன்னது. இந்த மாதிரி நூறு சொற்பொழிவுகளை மேல்நிலை குமாஸ்தாவாக இருந்தபோது சங்கரன் எழுதித் தள்ளியிருக்கிறான். கலாசார அமைச்சகம் என்பதால் சோவியத் வர்த்தகக் குழுவை வரவேற்று மந்திரி பேச பாலே நடனச் சிறப்பு, எஃகுத் தொழில்நுட்ப மேம்பாடு, ஸ்புட்னிக், ஒடிசி நடனத்தின் தொடக்கம், குருஷேவ், பரத முனிவர், வாலண்டினா தெரஷ்கோவா என்று கலந்து கட்டியாகப் பத்து நிமிடம் பிரசங்கம் செய்ய ஏதுவாக அவன் மூன்றே நாளில் உரை எழுதிப் பாராட்டைப் பெற்றவன். லைபிரரியில் எந்தப் புத்தகத்தை எடுத்து எப்படி தேடிக் குறிப்பெடுக்க வேண்டும் என்பது அவனுக்கு அத்துப்படி என்பதால் சங்கரன் எழுதிய பிரசங்கங்கள் பொதுவாக அமைச்சர்களால் பாராட்டப்படுபவை. முன்பாரம் பின்பாரமாக ஏதாவது அபத்தமாக அவர்கள் தன்னிச்சையாகப் பேசிவிட்டு சட்டைப் பையில் இருந்து சங்கரனின் உரையை லாகவமாக எடுத்துப் பிரித்து வைத்துக் கொண்டு மூக்குக் கண்ணாடியைச் சரி செய்து விட்டு பொறுப்பாகப் பேச ஆரம்பிப்பதை சங்கரன் பெருமையோடு பார்த்திருக்கிறான். அந்தச் சொற்பொழிவுகளின் சுருக்கம் பத்திரிகைகளில் வந்தபோது பெருமைப் பட்டிருக்கிறான். இப்போதெல்லாம் அது அலுத்து விட்டது. எல்லா அமைச்சர்களும் ஒரே மாதிரி. எல்லா உரைகளும் ஒன்று போல. ஒரு பத்திரிகைக்கும் மற்றதுக்கும் வித்தியாசம் இல்லை.

பைலில் வைத்திருந்த அமைச்சர் உரையை நான்கு ஜூனியர் குமாஸ்தாக்கள் சேர்ந்து எழுதியிருந்தனர். ஒரு செக்‌ஷன் சூபர்வைசர் சரி பார்த்திருந்தார். எல்லோரும் பஞ்சாபிகள். அமைச்சர் கேரளத்தில் பேச வேண்டியது. கேரள நாட்டுப்புறக் கலைகளைப் பற்றி பழைய பேச்சுகளில் இருந்து பத்தி பத்தியாக எடுத்து ஒட்ட வைத்திருந்தது. நடுவே ஒரு வரியில் அர்ஜுன் அட்டாம் என்று குறிப்பிட்டிருப்பது அர்ஜுனன் ஆட்டமாக இருக்கலாம் என்று ஊகித்தான். மயில் தோகைகளை உடம் முழுக்க மூடி அணிந்து கொண்டு ஆண்கள் மட்டும் ஆடுகிற ஆட்டம் என்றது குறிப்பு.

கலாச்சார விழா இன்னும் ஒரு மாதம் கழித்து நடக்கப் போவது. இதற்கு ஏன் அவசரம் என்று போட்டு ஒரு ஃபைல் உயிர் பெற்றிருக்கிறது?

சொற்பொழிவு காகிதத்துக்குக் கீழே இருந்த காகிதங்கள் அர்ஜுன நிருத்தத்தைத் தழைத்தோங்கச் செய்ய ஒரு சங்கம் ஏற்படுத்தப் பட்டுள்ளதாகச் சொன்னது. பம்பாய் நகரிலும் குஜராத்தில் அஹமதாபாத்திலும் இருக்கப்பட்ட கலைஞர்களும் விமர்சகர்களுமாக அமைத்த சங்கம் அது. சர்க்கார் நிதி உதவியாக இருபது லட்ச ரூபாய் தர சிபாரிசு செய்து அமைச்சருக்கு அனுப்ப வேண்டிய குறிப்பு.

கடைசித் தாளோடு குண்டூசி குத்தி வைத்த ஒரு காகிதத் துண்டு மினிஸ்டர் கிருஷ்ணன் நீலகண்டனின் மனைவி சம்பந்தப்பட்ட சங்கம் என்று சொன்னது. ஃபைல் அதிவேகமாக அனுப்பப் படவேண்டியது அதனால் தான் என்று பிடி கிட்டியது சங்கரனுக்கு ஆசுவாசமாக இருந்தது. வந்த படிக்குப் பட்டும் படாமல் பாப்பாத்தியம்மா மாடு வந்திருக்கு, கட்டினா கட்டு, கட்டாட்டப் போ என்றபடி எழுதி மேலே அனுப்பப் போகிறான். மற்றப்படி பெருந்தலைகள் தீர்மானிக்கட்டும்.

ஒவ்வொருவராக வேலைக்கு வந்து கொண்டிருந்தார்கள். வந்து உட்கார்ந்ததும் பலர் முகத்தில் வெற்றிப் புன்னகை. கண்டம் கடந்து காதங்கள் கடந்து வந்து பத்திரமாக சேர்ந்தது பற்றிய சந்தோஷம் அது. உட்கார்ந்த அடுத்த நிமிஷம் கடமையை நிறைவேற்றுகிற அவசரத்தோடு ஆளோடிக்குப் போய் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டார்கள் அவர்களில் பலரும்.

சாய்வாலா வந்தாச்சா என்ற கேள்வி அங்கங்கே எழுந்து சிகரெட் புகை போல் சுழன்று வர, பிரிஜேஷ் குமார் பொது அறிவிப்பாகச் சொன்னது – கிஷோர் நெஹி முதல் மாடியில் சாயா விநியோகித்துக் கொண்டிருக்கான்.

ஆறுதல் தரும் அறிவிப்பாக இது இருந்தது.

சாய்வாலா சங்கரனின் மேஜையில் சாயா குவளையை வைத்துவிட்டு டெலிபோனை அவன் தோளில் போட்டிருந்த துணியால் துடைத்தான். அவன் ஃபோனை வைத்ததும் அது தொடர்ச்சியாக மணியடிக்க ஆச்சரியத்தோடு பார்த்தபடியே நின்றான்.

என்ன நெஹி, பிரமிச்சுப் போய் நிக்கறே? சங்கரன் கேள்வி அவன் காதில் விழவே இல்லை.

மலை ஜாதிக்காரன். பட்டாம்பூச்சியைக் கட்டிப் போட்டுக் கையில் வென்னீரைச் சுமந்து திரிய விதித்தது போல சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான். இன்னும் பையன் தான். நகரம் தரும் ஆச்சரியம் அவனுக்குக் குறைவதே இல்லை. ரயிலும், பஸ்ஸும், அழுக்கும் எண்ணெய்ப் பிசுக்கும், பீடியும், இப்படி ஆபீஸும், கூடி உட்கார்ந்து எல்லோரும் ஏதேதோ எழுதுகிறதும், கூடிக் கூடிப் பேசுகிறதும் அதில் அடக்கம். துடைத்ததும் உடனே அடிக்கும் டெலிபோனும் கூடத்தான்.

ராம்ராம் ஜி

சின்னச் சங்கரனின் தில்லி வணக்கத்துக்கு அந்தப் பக்கம் டெலிபோனில் இருந்து தடுமாறும் தமிழில் வணக்கமும், நல்லாயிருக்கியாடா நாயே-யும் உடனடியாகக் கிடைத்தது. ஜாக்ரன் பத்திரிகை ஆசிரியன் சந்தோஷிலால் குப்தா. ஜர்னலிசம் படித்துவிட்டு மினிஸ்டரியில் குப்பை கொட்ட வந்து, வாடை பிடிக்காமல் பத்திரிகைக்கு ஓடியவன். சங்கரனும அவனும் ஒரே நாளில் வேலைக்குச் சேர்ந்ததால் ஏற்பட்ட நெருக்கம் இன்னும் குறையாமல் தான் இருக்கிறது.

இன்னிக்கு ப்ரஷ் ந்யூஸ் என்ன? சங்கரன் கேட்டான்.

ஆபீஸுக்கு ஏன் இன்னும் யாரும் வரலே மாதிரி சம்பிரதாயமான கேள்வி இது. நீ சொல்லு நான் எழுதிக்கறேன் என்று கிண்டல் அடிப்பான் குப்தா. ஏதாவது ஒருநாள் கலாசார அமைச்சகத்தில் இருந்து, நாடே எழுந்து உட்கார்ந்து நம்பாமல் கண்ணை அழுத்தத் துடைத்துக் கொண்டு படிக்கப் போகும் செய்தியை சங்கரன் கட்டாயம் குப்தாவுக்குத் தருவான். அதை இம்மியும் குறையாமல் பத்திரிகையில் பிரசுரித்து இந்தி மட்டும் பேசுகிற ஒரு மாபெரும் ஜனக்கூட்டம் படித்துக் களி கூர்ந்து குதிக்க வழி செய்வான் அந்த குப்தா. அது நாளை நடக்கும்.

சங்கரன் சிரித்தபடியே பதிலை எதிர்பார்த்து டெலிபோன் ரிசீவரைப் பிடித்திருந்தபோது சட்டென்று ஞாபகம் வர, ஃபைல் முன் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தான். அமைச்சர் பங்கு பெறும் கேரளக் கலை நிகழ்ச்சி எங்கே நடக்கும்?

அது அம்பலப்புழையில் நடக்க உள்ளது.

சங்கரன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

அர்ஜூன் அட்டாம். மயில்பீலி சூடி ஆண்கள் ஆடும் ஆட்டம்.

அமைச்சர் பேசப் போகிறார். ஆட்டம். சோவியத் கூட்டுறவு. யூரல் மலைகள். மேற்குத் தொடர்ச்சி மலை. யூரி ககாரின். கலாமண்டலம் நாணு நாயர். மயில்.

அம்பலப்புழையில் மயில்கள் ஆடும்.

யார் சொன்னது? எங்கே?

அரசூர் மண் வாசனையோடு பகவதிப் பாட்டியின் டயரி நினைவுக்குள் வர, உலக்கையால் முதுகில் அடித்துக் கொண்டு ஓடி வரும் வடக்கத்தி பைராகி.

இங்கே மயில் இறங்கச் சாவு தொலையும். அங்கே மயிலாட சாந்தி வரும்.

பைராகி சொன்னான். அப்படித்தான் பகவதி எழுதியிருக்கிறாள்.

இங்கே அரசூர். அங்கே அம்பலப்புழை. அரசூர்லே சாவு தொலையும். தொலைஞ்சுடுத்தே. அது தலை போகிற நியூஸ் இல்லையோ?

சங்கரன் சுபாவத்துக்கும் மீறிய பரபரப்பானான்.

குப்தா, கிரேட் நியூஸ். சொல்றேன் கேளு.

அந்த முனையில் நிசப்தம்.

தொண்டையைக் கனைத்துக் கொண்டு சங்கரன் தொடர்ந்தான்.

ஊர்லே, அதான் என் சொந்த ஊர் அரசூர். மெட்றாஸ் மாகாணத்துலே இருக்கே, அங்கே என்ன சொல்ல, ஒரு விசித்திரம். ஊர்லே சாவு வந்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆச்சு. ஒரு மனுஷச் சாவு கூட இந்தப் பனிரெண்டு மாசத்துலே நடக்கலே. நம்பலேன்னாலும் நம்பினாலும் யாரையாவது அனுப்பி எழுதச் சொல்லு.

குப்தா சிரித்தான்.

இதை வச்சு என்ன செய்யணும்கிறே? மகாத்மா காந்தி சமாதியிலே பாட்ரிக் லுமும்பா மலர் வளையம் வைத்தார்ங்கிறதை விட பத்து சதவிகிதம் அதிகம் பரபரப்பான செய்தி. அவ்வளவுதான்.

அவ்வளவு தானா? சாவு இல்லாத இடம். எத்தனை இருக்கு சொல்லு. ப்ராபபிள் அப்படின்னாலும் காசை பூவா தலையான்னு சுண்டிப் போட்டு தலை வர என்ன வாய்ப்பு இருக்குன்னு ஊகிக்கற மாதிரி ஆச்சே. இப்படி ஒரு ஊர் இருக்குன்னு தெரிஞ்சா, உலகம் முழுக்க இருந்து அங்கே போகத் தள்ளுமுள்ளு நடக்காதா? வெளிநாட்டுலே இருந்து அவங்க எடுத்து வர்ற பணம் காசு அந்த இடத்தையே ஒரேயடியா மாற்றாதா?

மாறினா சாவு வந்துடுமா அங்கே?

குப்தா சொல்லி விட்டு இன்னும் பலமாகச் சிரித்தான்.

சிரிக்காதேடா. நான் சீரியஸா சொல்றேன். என்னை நம்பலாம்.

சங்கரன் தீர்மானமாகச் சொன்னான்.

சந்நதம் வந்தவன் பேசற மாதிரி இருக்கு சங்கரா. அற்புதமா இருந்தா அது அபத்தம் தான்னு ஜர்னலிஸம் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கு.

இது அபத்தம் இல்லே.ரொம்ப அசாதாரணமானது. காரணம் இருந்தா கட்டாயம் தெரிய வரும். நம்பு. நடப்பு புரியும்.

சங்கரன் ஊருக்காக வாதாட நியமிக்கப் பட்ட வக்கீலாக குப்தாவிடம் முறையிட்டுக் கொண்டிருந்தான்.

சங்கரா, மினிஸ்டருக்கு குண்டூசி வாங்க பட்ஜெட் சாங்க்‌ஷன் கேட்டு நோட்டு போட்டுப் போட்டு உன் தலைக்குள்ளே சரக்கும் அதே சைஸுக்குச் சுருங்கிடுத்து.

போடா கட்டேலே போறவனே எனக்காவது அது இருக்கு. உனக்கு மேலேயும் கீழேயும் சாணிச்சீலையாலே மெழுகி இல்லே அனுப்பிச்சிருக்கான் பகவான்.

குப்தா இன்னும் பலமாக சிரித்தான்.

எல்லா தெய்வம் மூலமும் சுபம். லாபம். சரி தோஸ்த். கார் வந்துடுத்து. ஆப்ரிக்கா பிரமுகரை இண்டர்வியூ செய்யக் கிளம்பறேன்.

சங்கரன் கேபின் வாசலில் நிழலாடியது.

சரிடா, நானும் வேலையைக் கொஞ்சம் பார்க்கறேன். நீ டிம்பக்டூ ஜனாதிபதியை பேட்டி கண்டுட்டு வந்து எழுது. அதான் உனக்கும் கௌரவம். உன்னோட பத்திரிகைக்கும் கவுரவம்.

டிம்பக்டு இல்லே. ஆப்பிரிக்க நாட்டு தூதர். தூதர் இருக்கார். நாடு இல்லை.

என்ன கொடுமைடா?

ஆமா, அங்கே ராணுவ ஆட்சி வந்தாச்சு. இவர் திரும்பினா தலை போயிடும். நாட்டோட பெயரையும் ராணுவத்தான் மாத்தி வச்சுட்டான். தூதர் புறப்பட்ட நாடு இல்லே இப்போ இருக்கறது. பாஸ்போர்ட் செல்லாது. அதோட அடிப்படையிலே இங்கே இருந்து இவரை வெளியேயும் அனுப்ப முடியாது.

சுவாரசியமாத்தான் இருக்கு.

சங்கரன் ஒத்துக் கொண்டான்.

போய்ட்டு வந்து சொல்லுடா.

சங்கரன் போனைத் திரும்ப வைத்தபோது வெளியே இருந்து செக்‌ஷன் சூப்பர்வைசர் தாமோதர் காலே அவசரமாக உள்ளே வந்தார்.

சார் பம்பாயிலே இருந்து ஒரு மதராஸி ஆபீஸ் வாசல்லே டெண்ட் அடிச்சு தர்ணாவுக்கு உக்காந்துட்டார்.

என்னவாம்? சிரத்தையில்லாமல் கேட்டான் சங்கரன்.

ஷாலினி மோரேன்னு ஒரு இருபது வருஷம் முந்தி பிரபலமான லாவணி ஆட்டக்காரி. அவங்க வீட்டுக்காரர் இந்த மதராசி. உதவி பென்ஷன் கொடுத்திட்டு வந்தோம் அந்த அம்மாவுக்கு. அதை நிறுத்திட்டோம்.

ஏன் நிறுத்தணும்?

தேர்தல் பிரச்சாரத்துக்கு வரச் சொல்லி அவங்களுக்கு மினிஸ்டர் பிஏ தகவல் அனுப்பினாராம். வரலே. இங்கே பிஏ போன் வந்தது. லைப் சர்ட்டிபிகேட் தரலேன்னு நிறுத்தியாச்சு. அவங்க மகன் நேர்லே வந்த போது மினிஸ்டர் ஆபீஸ்லே அப்புறம் வரச் சொல்லிட்டாங்க. இங்கேயும் வந்தான் அந்தப் பையன்.

என்ன சொல்லி அனுப்பினீங்க?

நீங்க லீவுலே இருந்தீங்க சார்.

வாசல்லே காவல் இருக்கறவங்க என்ன செய்யறாங்க?

இவர் தெருவிலே அந்தப் பக்கம் உட்கார்ந்திருக்கார் சார். நடைபாதை.

சங்கரன் ஒரு வினாடி யோசித்தான்.

அந்த மதராஸியை மேலே அனுப்பு.

அவராலே நடக்க முடியாது சார். எலக்ட்ரிக் டிரெயின்லே இருந்து விழுந்து விபத்தாம். ரெண்டு காலும் கணுக்காலுக்குக் கீழே கிடையாது.

ஓ ஓவென்று அவசரமாக எழுந்த சத்தம்.

ஆளோடியில் சிக்ரெட் பிடித்தபடி நின்றவர்கள் தலைக்கு வெகு அருகே ஒரு மயில் பறந்து சென்றது. சட்டென்று கவிந்த திகிலும், அது விலகியதில் அசட்டுச் சிரிப்புமாகக் கீழே போட்ட சிகரெட் துண்டுகளைப் பார்த்தபடி அவர்கள் நிற்பது சங்கரன் கேபினில் இருந்து தெரிந்தது. அபத்தமான பகல் என்று யாரோ சொன்னது அவன் காதில் விழுந்தது.

இங்கேயும் வந்தாச்சா?

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன