பகல் ஒரு மணிக்கு இன்னும் ஐந்து நிமிடம் இருக்கிறது.
சின்னச் சங்கரன் பரபரப்பானான். முழு ஆபீஸுமே சாப்பிடத் தொடங்கும் வேளை இது. மூன்றாம் மாடியில் இருந்து முதல் மாடி கேண்டீனுக்குப் போகிற கூட்டம் இங்கே குறைவு. டெஸ்பாட்ச் பிரிவு மேஜையை அவசரமாகச் சுத்தப் படுத்தி, வந்த கடிதாசு, போகிற கடிதம், குண்டூசி, கோந்து பாட்டில், அரக்கு, கெட்டிப் பேப்பரில் சிங்கத் தலை அடித்த, ஸ்டாம்ப் ஒட்ட வேண்டாத சர்க்கார் சாணித்தாள் கவர், ரப்பர் ஸ்டாம்ப் எல்லாம் கீழே இறக்கி வைத்து, முந்தாநாள் தினசரியை விரித்து, சுற்றிலும் பத்து பதினைந்து நாற்காலி சூழ, சாப்பாட்டு மேஜையாக்கப் படும்.
குளிர்காலத்துக்கே உண்டான மெத்தனமும், கூச்சலும், சந்தோஷமுமாக டப்பா டப்பாவாக ரொட்டியும், சப்ஜியும் பிரித்து வைக்கப்படும். வீட்டில் உண்டாக்கி எடுத்து வந்த கேரட் அல்வா நிறைத்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தூக்குகள் வரிசையாகத் திறந்து வினியோகிக்கத் தயாராகும்.
காஜர் கா அல்வா காலியே.
தட்ட முடியாத அழைப்பு இது. ஆபீஸ் கேண்டீன் மின்சார அடுப்பில் பாத்திரத்தோடு சூடாக்கப்படும் காரட் அல்வா, ஆபீஸ் முழுக்க குளிர்கால வாசனையைப் பரப்புவதை யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை.
சூப்பிரண்டண்ட் சக ஊழியர்களோடு உட்கார்ந்து பகல் சாப்பாடு சாப்பிடுவதை முந்திய சூபரெண்டெண்ட் அப்பள நாயுடு, தூக்குதண்டனை வழங்க வேண்டிய கொடிய குற்றமாக்கி வைத்திருந்தார். அது கேள்வி கேட்பாடு இல்லாமல் இன்னும் தொடர்கிறதால் சங்கரன் தன் கேபினில் தான் சாப்பிட வேண்டும் என்றான போது அப்படி வேண்டாம் என்று தீர்மானித்தான் அவன்.
பகல் நேர சந்தோஷமாக நியூஸ் டிரஸ்ட் கேண்டீனில் சாப்பிடுவது சங்கரனுக்குப் பிடித்திருந்தது. சதா செய்தி எதிர்பார்க்கிற, கிடைத்ததை உடனே பகிரத் துடிக்கிற பரபரப்பான பத்திரிகை ஆசிரியர்களும், தலைமை நிருபர்களும் நிறைந்த நியூஸ் டிரஸ்ட் கேண்டீன் மனதுக்கு வேண்டிப் போனது சங்கரனுக்கு.
என்றாலும், ஆபீஸில் பகல் நேரக் கூட்டத்தில் கலந்து கொண்டு சாப்பிட அவனைத் தினமும் அழைப்பது வழக்கம் தான். முக்கியமாக ஆபீஸில் வேலை பார்க்கும் பெண்கள். குளிர் என்று காரணம் சொல்லி ரெண்டு நாளுக்கு ஒரு முறை குளித்து விட்டு வரும் அந்த உருண்ட தோள் அழகிகளின் உடல் வாடை அவனுக்குப் போதை ஏற்றும் ஒன்று.
சங்கரனுக்கு தில்லிக் குளிர் பிடித்துப் போனதற்கு முக்கிய காரணம் அவர்களே. எடுப்பான மஞ்சள், கருப்பு, தீவிரச் சிவப்பு, ஊதா என்று கம்பளி ஸ்வெடட்டரும், அலட்சியமாகப் போர்த்திய கம்பளிப் போர்வையுமாக வலம் வருகிற எல்லாப் பெண்களுமே பேரழகிகளாகத் தெரியும் உன்னதமான மாதங்கள் டிசம்பரில் தொடங்கி, மார்ச் வரை.
முக்கியமாக தில்ஷித் கவுர். அந்தப் பஞ்சாபிப் பெண் தினசரி சாப்பிட உட்காரும் முன் சங்கரனுடைய கேபினுக்கு வெளியே நின்று கம்பளிப் போர்வையைக் களைவாள். சங்கரன் நியூஸ் டிரஸ்ட் கேண்டீன் போகும் போது தவறாமல் தட்டுப்படும் காட்சி அது. அவள் அடுத்து ஸ்வெட்டரைக் களைய, வெகுவாக இறக்கித் தைத்த பட்டு மேல்சட்டைக்குள் இருந்து பகுதி வெளியே தெரிய, வனப்பான மார்பு ரெண்டும் பருத்துத் திரண்டு முன்னெழுந்து நிற்கும்.
சங்கரன் மனசில் பூகம்பத்தை உண்டாக்கி விட்டு எதுவும் நடக்காத மாதிரி போர்வையை அங்கவஸ்திரம் போல தோளைச் சுற்றிப் பாதி மறைத்தப் போட்டுக் கொண்டு மற்றவர்களோடு சாப்பிடப் போய் உட்கார்வாள் தில்ஷித் கவுர்.
அவளுக்குத் தன் வசீகரம் பற்றிய பூரணமான சுயநினைவு காரணமாகவே முன்னேற்பாடாகத் தனியாக வந்து நின்று, சாப்பிட உட்கார்ந்த கூட்டத்துக்கு முதுகைக் காட்டிக் கொண்டு சங்கரன் கேபினைப் பார்த்து இப்படி உடை மாற்றம். சங்கரன் கேபினில் இருந்து கிளம்ப வேண்டிய நேரத்தைக் கணக்குப் போட்டு வைத்திருக்கிறான். தில்ஷித் கவுர் சலங்கை சத்தம் கேட்ட இருபதாவது வினாடி மெல்ல வெளியே வரும்போது அவன் பார்வை வேறு எங்கோ இருக்கும். அவள் பக்கத்தில் போகும்போது தற்செயலானது என்பது போல் பார்வை அவள் மேல் விழும். சரியான வினாடியில் புறப்பட்டு, சரியான வேகத்தில் அவளைக் கடந்தால், அவன் பார்க்கும் போது உன்னித்தெழுந்த தட முலைகளின் அன்றைய தரிசனம் கண்ணுக்கு அருகே, மனதுக்கு நிறைவாகக் கிட்டும்.
சங்கரன் தில்ஷித் கவுரின் சலங்கை சத்தத்துக்குக் காத்திருக்கிறான். பொறுமை கடந்து போய்க் கொண்டிருக்கிறது. வெகுவாகப் படபடப்பாக உணர்கிறான் அவன்.
ஐந்து நிமிஷம் சென்றும் கேட்காத சத்தம் அது. கவுர் லீவு எடுத்துக் கொண்ட தினம். நாசமாகப் போகட்டும் அவளும் எல்லா பனிக்கால சுந்தரிகளும்.
சிடுசிடுப்போடு வெளியே வந்தான் சங்கரன். டெஸ்பாட்ச் மேஜையில் இருந்து அவனைச் சாப்பிட வரச் சொல்லி அழைக்கிற குரல்கள் பலமாக எழுந்தன.
கொட்டிக்குங்க எல்லோரும். அதுக்குத் தானே ஆபீஸ் வந்தது.
தில்ஷித் கவுரின் மதர்ப்பும் வனப்பும் தரிசிக்கக் கிட்டாமல் எழவெடுத்த சாப்பாடு என்ன வேண்டியிருக்கிறது.
ஆபீஸ் வாசலில் வேர்க்கடலை வறுக்கும் வாடை தீர்க்கமாக நிறைந்திருந்தது. குளிர் காலத்தில் நகரம் விரும்பிப் பூசிக் கொள்ளும் இன்னொரு வாடை இது. ஒரு சின்ன பொட்டலம் வாங்கினால் கொறித்துக் கொண்டே போய் முடிக்கும் போது நியூஸ் டிரஸ்ட் செய்தி நிறுவனம் வந்திருக்கும். தெருவில் நடக்கும் போது வாயில் கண்டதையும் இட்டுச் சிறு பிள்ளை போல அரைத்துக் கொண்டு போவது சூப்பரண்டெண்டுக்கு மரியாதை தராதுதான். ஆனால் யார் கவலைப்படுகிறார்கள்?
குளிர் காலம் எல்லா விதமான சுதந்திரங்களையும் கிள்ளி எடுத்து அனுபவிக்கத் தருகிறது. தடை செய்யப் பட்ட சந்தோஷங்களையும். தில்ஷித் கவுர் போல.
ஸ்வெட்டர் போட்ட, வாய் நாறும், இன்றைக்குக் குளிக்காத குளிர்காலப் பெண் தெய்வம் ஏதாவது இருந்தால், இந்த சந்தோஷங்கள் தடங்கலின்றிக் கிட்ட அருள் செய்யட்டும்.
தெரு திரும்பும்போது கவனித்தான். ஜமுக்காளம் விரித்து, சின்னக் கூடாரம் போல் ஷாமியானா கட்டி பிளாஸ்டிக் நாற்காலி போட்டு யாரோ உட்கார்ந்திருந்தார்கள். தர்ணாக்காரர். மதராஸி. என்ன காரணம் சொன்னார்கள்? ஆமா, பென்ஷன்.
கொறிப்பதை நிறுத்தாமல் வழிப்போக்கனாகக் கடந்தபடி பார்க்க, உள்ளே இருந்தவர் ஒரு வினாடி அவனை உற்று நோக்கி விட்டு, கையில் வைத்திருந்த பத்திரிகையில் திரும்பப் பார்வையை மேய விட்டார். இன்றைக்கு எத்தனை தடவை இப்படி அவர் பத்திரிகை படிக்க வேண்டியிருக்கிறதோ?
பக்கத்தில் வைத்திருந்த அட்டையில் எழுதி வைத்தது என்ன என்று சங்கரனுக்குத் தெரியும். என்றாலும் அதில் அலுவலகத்தில் யார் பெயரையும், முக்கியமாக, நலிவடைந்த கலைஞர்களுக்கான பென்ஷனை நீட்டிக்காமல் லீவில் போன தன் பெயரை எழுதி வைத்திருப்பாரோ என்று குறுகுறுப்பாக இருந்தது.
எதுவாக இருந்தாலும் அவரைப் போய்ச் சந்திக்க இது நேரமில்லை. அவரோடு பேச்சு வார்த்தை நடத்த இது தகுந்த சூழ்நிலையும் இல்லை. மதியம் செக்ஷன் சூபர்வைசர்களோடு ஒரு நடை போய்த் திரும்பி வந்து, குறிப்பு எழுதி அமைச்சருக்கு அனுப்பினால் அவர் கவனித்துக் கொள்வார். பாரம்பரியக் கலைகள் நசியக்கூடாது என்பதில் இந்த சர்க்கார் ஆர்வமாக இருக்கிறது.
நியூஸ் டிரஸ்ட் வாசலுக்கு வந்துவிட்டிருந்தான். நாலைந்து வேர்க்கடலைகள் காகிதப் பொட்டலத்துக்குள் உருட்டி விழித்தன. ஒரு நிமிஷம் நின்று நிதானமாகச் சாப்பிட்டு விட்டுப் போவதா, அப்படியே குப்பைத் தொட்டியில் வீசலாமா?
இந்த அளவிலேயே முடிவெடுக்க வேண்டிய சகலமானதும் வாழ்க்கையில் நிகழ்வது மகிழ்ச்சியானதுதான். இன்றைக்குச் சேர்ந்து படுக்கலாமா என்பதையும் வசந்தி முடிவு செய்யாமல் அவனுக்கு விட்டிருந்தால் அது இன்னும் அதிகமாகியிருக்கும். அப்படியே ஆகியிருந்தாலும் தில்ஷித் கவுர் என்னமோ அவன் மனதில் உடை மாற்றாமலிருக்கப் போவதில்லை. நாளைக்காவது வருவாளா?
பூக்கள். பூக்கள். மேலும் பூக்கள். இந்தியா டிரஸ்ட் நியூஸ் ஆபீஸ் வாசல் பூவால் நிறைந்து இருந்தது. மஞ்சளும், சிவப்பும், வெண்மையுமாக வாசலை மூடி வழிந்த பூக்குவியல். பிறந்த நாளா? யாருக்கு? ஏன் இத்தனை பூவையும் மண்ணில் போட வேணும்? வாசனை கிளப்பாமல் வாசலில் கிடக்கிற பூக்கள் இப்போதைக்கு வாடாது. நிறம் மங்கி கொஞ்சம் கொஞ்சமாக அவை இறப்பதைப் பார்க்கக் கிடைக்கக் கூடாது. சங்கரன் பூக்குவியலில் காலில் அணிந்த ஷூ பட்டு மிதித்து விடாமல் ஜாக்கிரதையாக உள்ளே நடந்தான்.
உள்ளே கும்பல் கும்பலாக ஆளுயர மேஜைகளுக்கு முன் நின்று சமாதானமாக ரவை உப்புமா சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களைக் கடந்து, மூன்று உருப்படி சூட் அணிந்து உள்ளே அளவு சிறுத்த ஆசனங்களில் அமர்ந்து உப்புமா சாப்பிட்டுக் கொண்டிருந்த கூட்டம் பக்கமாக நடந்தான் சங்கரன்.
குப்தா போன வேலை முடித்திருந்தால் இங்கே தான் நேரே வருவான். வரவிலலை.
டைம்ஸ் குரியன் ஜோசப் சாப்பிட வருகிற நேரம் இது. வரவில்லை.
தில்ஷித் கவுர் லீவு போட்டு விட்டு, வீட்டில் உடம்பெல்லாம் கடுகு எண்ணெயை வழித்துப் பூசிக் கொண்டு வென்னீரில் குளிக்கப் போகும் முன் சாபம் போட்டுத் தொடங்கி வைத்த ஏமாற்றமான குளிர் காலப் பகல் இது. அந்த எண்ணெய் வாடை மிச்சம் இன்னும் உடம்பில் தங்கி இருக்க, சங்கரனை மேலும் ஏமாற்றாமல் அவள் நாளைக்காவது வர வேண்டும்.
இன்றைக்கு ஊரோடு உப்புமா சாப்பிடத் தலையில் எழுதியிருக்கிறது. காலை நேரம் வசந்தி அதை நேர்த்தியாக பார்சல் செய்து பகல் சாப்பாட்டுக்காகக் கட்டித் தந்தபோது சூப்பரிண்டெண்ட் உண்ணத் தகுந்த மரியாதை கூட்டுகிற உணவு இல்லை அது என்று நிராகரித்து விட்டு வந்ததற்கு தண்டனை இது.
அம்பாரமாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டுக்களையும் டபரா செட்களையும் தம்ளர்களையும் கொட்டிக் கவிழ்த்துக் கழுவிக் கொண்டிருந்தவர்கள் உயர்த்திய உச்ச கட்ட சத்தம் கேண்டீனின் கடைசிப் பகுதிக்கு வந்ததை உணர்த்தியது. இங்கே இருந்து சாப்பிடுவதற்குப் பதில் ரெண்டு கூம்பு வறுத்த கடலை வாங்கிக்கொண்டு அள்ளி அள்ளித் தின்றபடி ஆபீஸுக்குத் திரும்பி விடலாம். சாயாவோடு மத்தியானச் சாப்பாட்டை முடித்துக் கொண்டாலும் பாதகமில்லை.
பின் வரிசையில் இருந்து பாத்திரச் சத்தத்தை மீறி ஷங்கரா ஷங்கரா என்று சத்தம் உயர்ந்ததை கவனமாகக் கேட்டாலே உணர முடியும். நல்லதுக்கு சங்கரனின் காது இந்த நிமிஷம் கூர்மையாக இருந்ததால் அது காதில் பட்டது.
பிடார் ஜெயம்மா குரல் அது. ஆறடி உயரத்துக்கு ஆளை அடிக்கிற ஆகிருதியும் மைசூர் பட்டுப் புடவையுமாக நாற்காலியில் உட்கார்ந்தபடி சங்கரனைக் கூப்பிடுகிறவள் நியூஸ் டிரஸ்ட் தலைமை நிருபரும் கூட.
நாற்பது வயதிலும் நரைக்காத தலைமுடியை வழக்கம் போல் தலை குளித்துத் தழைய வாரி இருந்தாள் ஜெயம்மா. அதிகாரமான குரல். அந்தக் குரலில் பேட்டி எடுக்க ஆரம்பித்தால் பிரதம மந்திரி கூட வெகு வினயமாக, தலைமை ஆசிரியை முன்னால் நிற்கிற பள்ளிக்கூடப் பிள்ளை போல் எழுந்து நின்று பதில் சொல்வார். சில இளைய மந்திரிகள் ஜெயம்மா ஏதாவது கேட்டால் ஒரு தடவை வாய்க்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டு பதற்றம் குரலில் வராமல் இருக்க முயற்சி செய்து தோற்றபடி பதில் சொல்வது உண்டு. பிரதமரின் மகளுக்கு நெருங்கிய சிநேகிதி. பத்திரிகை வட்டாரத்தில் சுவாரசியமான ஆனால் பிரசுரிக்க முடியாத செய்திகளை பத்திரிகைக்காரர்கள் பேசியும் கேட்டும் சந்தோஷப்படும் போது ஜெயம்மா சொன்னதாக ஒரு சொல் சேர்த்தால் அதன் நம்பகத்தன்மை வெகுவாக உறுதிப்பட்டு விடும்.
உலகச் செய்திகளை தினசரி அலசி ஆகாசவாணியில் நல்ல இங்கிலீஷில் நடுநிலைமையான நியூஸ் அனாலிசிஸ் கொடுக்கிற முற்போக்குக்குக் கொஞ்சமும் குறையாத மடி ஆசாரம்.
கன்னடப் பிரதேசத்தில் மலைப் பகுதி நகரமான பிடார் ஊர்க்காரி. எந்தக் காலத்திலேயோ சோழ மகராஜாவிடமிருந்து தப்பித்து ராமானுஜாச்சாரியார் கன்னட நாட்டில் போயிருந்தபோது கூடப்போன தமிழ் அய்யங்கார்களின் வம்சத்தில் வந்தவள் அவள். தமிழா கன்னடமா என்று உறுதி செய்ய முடியாத மொழியில் பேசினாலும் அநேகமாக அபிநயமும் கூடவே சேர்ந்து வருவதால் புரியாமல் போகாது.
யாரைத் தேடிட்டிருக்கே?
சங்கரனைக் கேட்டாள் ஜெயம்மா. அவளைத்தான் என்று சங்கரன் சொன்னதை நம்பாவிட்டாலும் சந்தோஷப்பட்டாள் அவள்.
உட்காரச் சொல்லி எச்சில் கையைக் காட்டினாள்.
வசந்தியை நம்ம மனையிலே வந்து வெத்தலை பாக்கு வாங்கிண்டு போகச் சொல்லேன். நாளை மறுநாள் சத்யநாராயண பூஜை வச்சிருக்கேன்.
சரி என்று தலையாட்டினான் சங்கரன். பானகம், சுண்டல், புதுப்புடவை பார்வையிடுவது, உலக யுத்தத்தில் முடியப் போகிற லோதிரோட் சவுத் இந்தியன் மாதர் சங்கப் பிரச்சனைகள் என்று வந்த பெண்கள் பேசி ஓயாமல் வீணாகப் போகிற பனிக்கால முன்னிரவு ஒன்று விரைவில் சங்கரனுக்கு லபிக்க இருக்கிறது.
வசந்தி ஆத்துலே தானே இருக்கா? ஆமா, போன மாசம் பதினெட்டன்னிக்குத் தானே உக்கார்ந்தா? வரலஷ்மி நோம்புக்கு மறுநாள்? ஞாபகம் இருக்கு. நீ ஒண்ணும் பண்ணி அதை மாத்தலியே? எதாவது பண்றியோ? பண்ணேண்டா.
சங்கரன் அவசரமாகப் பக்கத்திலும் பின்னாலும் பார்த்தான். பாத்திரம் கவிழ்க்கும் பெருஞ்சத்தத்துக்கு நடுவே ஜெயம்மா குரல் அவனுக்கு மட்டும் கேட்டிருக்கும். இடம், பொருள் ஏவல் எதையும் பற்றி லட்சியம் பண்ணக்கூடியவள் இல்லை அவள் என்பதால் எதிரே நின்று பேசுகிறவர்கள் தான் அவற்றைக் கவனித்து அனுசரித்துக் கொள்ள வேண்டும். சங்கரனுக்குப் பழகிய விஷயம் இது.
இந்த சத்தத்துலே எப்படி உக்கார்ந்து சாப்பிடறே?
ஜெயம்மா தட்டில் இருந்து எச்சில் போண்டாவைப் பாதி பிய்த்துச் சாப்பிட்டபடி சங்கரன் கேட்டான்.
பாஷாண்டம். சூப்ரண்ட் ஆனாலும் ஆனே, கொஞ்ச நஞ்சமிருந்த துப்பல் தூவல் எச்சில் பத்து எல்லாம் தலை முழுகிட்டே.
விட்டால் எச்சில் கையால் அவனை அடித்து விடவும் கூடும். இங்கே வந்து வேலைக்கு சேர்ந்து சாயந்திரம் யூனிவர்சிடியில் எம்.ஏ இங்கிலீஷ் லிட்டரேச்சர் படிக்கும் போதிலிருந்து நெருங்கிய சிநேகிதி. மூத்த அக்காவும் கடைக்குட்டி தம்பியும் போல ஆகிருதியில் ரெண்டு பேரும் இருந்தாலும், சங்கரனும் ஜெயம்மாவும் ஒரே வயசு.
சாப்பிடுடா. என்ன சொல்லணும்?
சத்தம் நின்னா சாப்பிடுவேன்.
இவ்வளவுதானா?
ஜெயம்மாள் மேஜிக் ஷோ நடத்த வந்த மகராஜா தலைப்பாகை கட்டிய மந்திரவாதி போல கையை விரித்துச் சிரித்தாள். அடுத்த வினாடி, ஓங்கி ஒரு சத்தம் அவளிடமிருந்து எழ, பின்னால் இருந்து கேண்டீன் நிர்வாகி அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வந்தார். அவரிடம் ஒரு நிமிடம் கன்னடத்தில் மூச்சு விடாமல் இரைந்தாள் ஜெயம்மா. அவள் முடித்தபோது பாத்திரம் எல்லாம் சத்தமே போடாமல் அதனதன் இடத்தில் உட்கார, சாந்தமும் சமாதானமும் எங்கேயும் ஏற்பட்டிருந்தது.
வந்து நின்ற வெயிட்டரிடம் கட்டை விரல் தவிர மற்ற நான்கு விரலையும் நிமிர்த்திக் காட்டினான் சங்கரன்.
அவன் என்ன உன் பொண்டாட்டியா, எதுக்கு அனாசின் கேக்கறே என்று விசாரித்தாள் ஜெயம்மா புதுசாக வந்து சேர்ந்திருந்த ரவாதோசையை பக்கத்தில் நகர்த்தியபடி.
நாலு இட்லி தானே சார், இதோ.
சிரித்தபடி வெயிட்டர் போனான்.
சொல்லுடா என்ன நியூஸ் இருக்கு ஊர்லே நாலு கவுரவமான மனுஷா கிட்டே சொல்றபடியாக?
தோசையை அடைத்த வாயோடு கேட்டாள் ஜெயம்மா.
தட்டின் இந்த ஓரத்தில் இருந்து ஒரு தோசை விள்ளலைப் பிய்த்தபடி சங்கரன் அரசூர் டைம்ஸ் படி ஜெயம்மா என்றான்.
அது என்ன கண்றாவி?
அடுத்த பத்து நிமிடம் அரசூரில் மயில் வந்ததும், போனதும், திரும்பி வந்ததும் பற்றி ஜெயம்மாவிடம் சங்கரன் சொன்னான். சட்டென்று கவனத்தில் பட, சில காலமாக ஊரில் யாருமே இறக்கவில்லை என்பதும் அவன் சொன்னது. மற்றவர் கவனத்தை ஈர்க்காமல் இருக்க பக்கத்து ஊர், வெளியூர்ச் சாவை அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கணக்கில் ஏற்றி எல்லாம் சரியாக உள்ளது என்று கணக்கு சமர்ப்பிப்பதை அவன் அடுத்தபடி சொன்னான். இறப்பு இல்லாத நிலையை புள்ளிவிவரக் கணக்காக மட்டும் நோக்காமல் அதன் விளைவுகளைக் கவனிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் பேசினான். வசந்தி வீட்டுக்கு விலக்கான இரவுகளில் தூக்கம் வராமல் புரண்ட போதும், ஆபீசுக்கு பஸ்ஸில் வரும்போதும் திடீரென்று மனசில் வந்தவை அதெல்லாம். வசந்தியோடு இணை விழைந்து கலக்கும் போது போகம் முந்த விடாமல் இது பற்றியே நினைத்தான். மனதில் தொகுத்து வைத்திருந்த சங்கதி முழுவதும் சரம்சரமாக வெளிவர, சங்கரன் சொல்லி முடித்தான்.
நடுவில் ஜெயம்மா இன்னொரு தடவை நாலு இட்லி சங்கரனுக்காக ஆர்டர் செய்ததும் சாப்பிட்டதும் அவன் கவனத்தில் இல்லை.
கொஞ்சம் இரு, எச்சக்கை வரவரன்னு பிடிச்சு இழுக்கறது. அலம்பிண்டு வந்துடறேன். போயிடாதே.
ஜெயம்மா போய் ரெண்டு தம்ளர் சூடு பறக்கும் காப்பியோடு வந்து சேர்ந்தாள்.
ஜெயம்மாவிடம் மயில் அரசூர்த் தெருவிலும் இங்கே இன்று பகல் ஆபீசிலும், அர்ஜுன நிருத்தமாகவும் கூடவே வருவதை ஜெயம்மாவிடம் சொல்லலாமா என்று யோசித்தான். அப்படியே பகவதிப் பாட்டியின் டயரி பற்றியும்.
வேண்டாம், சூப்பரெண்டெண்ட் அதிபுத்திசாலியும் உலகம் தெரிந்தவளுமான பத்திரிகையாள சிநேகிதியிடம் பகிர்ந்து கொள்கிறதில்லை அதெல்லாம். பெர்சனாலிடியை கம்பீரம் குறைத்து சின்னதாக்கி படிப்பறிவு இல்லாத, தன்னம்பிக்கை இல்லாத தோற்றத்தை ஏற்படுத்தி, பழைய செபியாடோன் புகைப்படங்களில் திகிலூட்டிய மாதிரி விழித்துக் கொண்டு நிற்கும் முன்னோர்கள் போல் ஆக்கி விட்டுவிடும்.
குப்தா என்ன சொல்றான்?
நியூஸ் டிரஸ்ட் தலைமை நிருபர் என்றாலும், லட்சக் கணக்கில் விற்கும் பத்திரிகை ஆசிரியன் மாதிரி வாசகனை உடனடியாக அடையக்கூடியவள் இல்லை ஜெயம்மா. அதைச் சாதித்துக் காட்டும் குப்தா மேல் அவளுக்கு மரியாதை உண்டு.
குப்தா இதெல்லாம் நியூஸ் ஆகாதுன்னுட்டான். அற்புதம்னா பத்திரிகை பாஷையிலே அபத்தம்கிறான்.
சங்கரன் ஹெட்மிஸ்ட்ரஸிடம் பக்கத்து இருக்கைப் பையனைப் பற்றிப் புகார் சொல்லும் பிள்ளையாக உணர்ந்தான். கொஞ்சம் வெட்கம் வேறே. இந்த சங்கடமெல்லாம் எதற்கு, அரசூருமாச்சு வெங்காயமுமாச்சு என்று இன்னொரு கூம்பு வறுகடலை வாங்கி மென்றபடி ஆபீசுக்குப் போவதே சிலாக்கியம் என்றது ஒரு மனசு. இதெல்லாம் நீ தீர்மானிக்கிறதில்லை என்றது இன்னொரு மனசு.
நல்லது. யாரையாவது அனுப்ப முடியுமான்னு பார்க்கறேன். ஊர்லே காண்டாக்ட் யாரெல்லாம் இருக்கலாம்னு விவரம் கொடு.
மருதையன் மாமா தான் முதலில் நினைவு வந்தார் சங்கரனுக்கு.
சுற்றுப்புறச் சூழ்நிலை பாதிக்கப்பட்டதால் இரை தேடிப் புது இடங்களுக்குப் போக வேண்டிய கட்டாயம் உண்டானதை, மயில் வருகைக்கு அவர் காரணமாகச் சொல்கிறவர். புள்ளிவிவரச் சாவு இறந்து போயிருக்கலாம், உயிரியல் சாவுக்கு என்றும் உயிருண்டு என்பது அவர் கட்சி என்பதை ஜெயம்மாவிடம் சொன்னான். அவளுக்கு மருதையன் மாமாவைச் சந்திக்காமலேயே அபிமானம் உண்டானது.
ஹெட்லைனுக்கு லட்டு மாதிரி தலைப்பு. உங்க மாமாவை நானே சந்திக்கறேன்.
போகும்போது அவனைத் திரும்பக் கூப்பிட்டு, நாளைக்கு அமாவாசை, வெங்காயம் போட்ட எதையும் இங்கேயோ வேறே எங்கேயோ சாப்பிட்டுத் தொலைக்காதே என்று அறிவுறுத்த மறக்கவில்லை நியூஸ் டிரஸ்ட் தலைமை நிருபர்.
சங்கரன் வெளியே நடந்த போது, நியூஸ் டிரஸ்ட் வாசலில் கொட்டி வைத்திருந்த அத்தனை பூவையும் அலங்காரமாகத் தொங்க விட்டு, வாசலில் ஒரு மேடை எழுந்திருந்தது. நாலு மணிக்கு கஸல் இசைக் கச்சேரி என்று வாசலில் கரும்பலகை.
இன்றைக்கு மதியம் இங்கே வேலை எதுவும் நடக்காது என்று நினைத்துப் பார்க்கக் கொஞ்சம் பொறாமையாக இருந்தது. சர்க்கார் ஆபீசில் கஸல் கச்சேரி ஏற்பாடு செய்ய முடியாது. நடத்த முடியுமானல், கையில் பூச்செண்டை சுழற்றிக் கொண்டு தில்ஷித் கவுர் பக்கத்தில் உட்கார்ந்து நேற்று பௌர்ணமி என்று கஸல் கேட்பான் சங்கரன். அவளுடைய கம்பளிப் போர்வை சங்கரன் மடியில் விழுந்து கிடக்கும்.
ஆபீஸுக்குள் நுழையத் தெருத் திரும்பியபோது தர்ணா மறுபடி கண்ணில் பட்டது. தர்ணா பந்தலில் உட்கார்ந்திருந்தவர் டிபன் பாக்சில் இருந்து அவல் உப்புமாவை ஸ்பூனால் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவரைச் சுற்றி வழக்கமான வேகத்தில் குளிர்கால உலகம் இயங்கிக் கொண்டிருந்தது.
நல்ல வேளை வெறும் தர்ணா தான். உண்ணாவிரதம் இல்லை. போகிறவன் வருகிறவன் எல்லாம் கவனமாகப் பார்த்துக் கொண்டு நகர, எல்லார் கண்ணையும் ஏமாற்றிய ஏதாவது ஒரு நிமிடத்தில் தட்டிக்குக் கீழே குனிந்து இருந்து அவசரமாகச் சாப்பிட வேண்டிய கஷ்டம் கிடையாது.
சாப்பிட்டு, பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்தபடிக்கு சின்ன உறக்கத்தோடு ஓய்வெடுக்கட்டும். ஒரு நாலு மணிக்கு சாயா முடித்த கையோடு இந்த நபரை சந்திக்கலாம். இப்போது போய்ப் பார்த்து ஒன்றும் ஆகப் போகிறதில்லை.
சார், மினிஸ்டர் போன் செஞ்சிருந்தார். உடனே கூப்பிடச் சொன்னார்.
ஆபீசில் நாலு சூபர்வைசர்களும் ரெண்டு டெபுடிகளும் யுகப் பிரளயம் வந்து கொண்டிருக்கிறதை அறிவிக்கும் பரபரப்போடு சங்கரனின் கேபினுக்குள் குழுமியிருந்தார்கள். ஒருத்தர் தகவல் சொல்ல, இன்னொருத்தர் டெலிபோனில் அமைச்சரக நம்பரைச் சுழற்றி சங்கரனிடம் கொடுத்தார்.
சங்கரன், உங்க ஆபீஸ் வாசல்லே தர்ணா உக்கார்ந்திருக்கறவர் யார் தெரியுமா?
மினிஸ்டர் நீட்டி முழக்கி ஆரம்பிக்க, சுவாரசியமில்லாமல் இடைவெட்டி மதராஸி சார் என்றான் சங்கரன்.
அதில்லே விஷயம். அவர் என் சகா, மினிஸ்டர் மிஸ்டர் நீலகண்டனுக்கு தம்பி.
ஐயய்யோ என்று தமிழில் ஆச்சரியப்பட்டான் சங்கரன்.
ஐயோ அம்மா தான். அண்ணன் தம்பி பேச்சு வார்த்தை இருபது வருஷமா கிடையாதாம். இவருக்கு ஆக்சிடெண்ட்லே கால் போனதுக்குக் கூட நீலகண்டன் போய்ப் பார்க்கலியாம்.
எப்படி சார் இவ்வளவு தகவல் தெரிஞ்சுது?
சங்கரன் கேட்டான். அமைச்சர் தன் திறமை சிலாகிக்கப்பட்டதை அங்கீகரித்துப் பெருமையோடு சிரித்து எல்லாம் சந்தோஷி மாதா கிருபை, கூடவே பெரியவர்கள் ஆசிர்வாதம் என்றார். இன்னொரு தடவை கேட்டால் இந்தி சினிமாவில் ஆரத்தி வழிபாட்டு நேரம் போல் ராகம் இழுத்துப் பாடவும் செய்வார். அவர் குரலில் அவருக்கே சுயமோகம் உண்டென்று சங்கரன் அறிவான்.
சார், நான் அவரை சந்திச்சுட்டு போன் செய்யட்டுமா? என்ன செய்யலாம்னு பார்க்கறேன்.
அதுவும் வேணும். மற்றபடி, நீங்க உங்க ஆபீஸ் வாசல் போலீஸ்காரங்களை அவரை மரியாதையா கவனிச்சுக்க சொல்லுங்க. அடையாள தர்ணா தானாம். இன்னிக்கு மட்டும் இல்லே இன்னும் ரெண்டு நாள். நல்லா கவனிச்சுக்குங்க. இப்போ உடனே போய் நல்லதா நாலு வார்த்தை பேசுங்க. பைல் நகர்த்தி அந்த அம்மாவுக்கு பென்ஷன் தொடர வழி பண்ணிடலாம். இவருக்கு ஏதாவது அகாடமி மெம்பர்ஷிப், ஆலோசனைக் குழு பதவி இப்படி கொடுத்து உக்காத்திடலாம். ஊருக்கு போக ப்ளைட் டிக்கட் வேணும்னாலும் சரி ஏற்பாடு பண்ணிடலாம்.
அமைச்சர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் உறுதிமொழி தருகிற உற்சாகம் குரலில் வழிய, ஏற்ற இறக்கத்தோடு பேசி விடை பெற்றார்.
சங்கரன் வாசலுக்குத் திரும்பி வந்து பார்க்கும்போது எதிரே ஷாமியானா பிரிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. சர்க்கார் சின்னம் வைத்த கருப்பு அம்பாசிடர் கார் ஒன்றில் ஊன்றுகட்டைகளை பின் சீட்டில் எறிந்து விட்டு தர்ணாக்காரர் ஏறிக் கொண்டு இருந்தார்.
சார், ஜாக்ரன் எடிட்டர் ஃபோன்லே கூப்பிடறார்.
செக்ஷன் சூப்ரவைசர் தாமோதர் காலே வாசலுக்கு வந்து கூப்பிட்டார்.
குப்தாவுக்கு மூக்கு வியர்த்திருக்கும். பிடார் ஜெயம்மாவுக்கும்.
உங்க ஆபீஸ் வாசல்லேயே நியூஸை வச்சுக்கிட்டு அரசூர்லே தேடச் சொல்றியே.
(தொடரும்)