தினமணி தொடர்
அந்த ஊரை நினைத்தாலே மனதில் மிதமான யூதிகோலன் வாசனை அடிக்க ஆரம்பித்து விடும். கூடவே ராத்திரி முழுக்கப் பாடிக் கொண்டிருந்து விட்டு விடியற்காலையில் அமைதியாகக் கரையைத் தொட்டுப் போகும் அலைகளுடன் எழுந்து வருகிற கடல் வாசனையும் கட்டாயம் உள்நாசியை எட்டும். சைக்கிள் மிதித்துப் போகிற மண் தடங்கள் ஊரைக் கடந்த அடுத்த நிமிடம் பார்வையில் படுவது அங்கே மட்டும் தானாக இருக்கும். அங்கங்கே கள்ளுக்கடைகளில் ஈ மொய்த்த முட்டை பொரித்து வைத்து வாசலில் உட்கார்ந்து விற்கும்போது எழும் வாடை சாஸ்வதமாக நிலைத்திருக்கும். எல்லாம் போக, நீக்கமற எங்கேயும் நிறைந்த தென்னங்கள்ளின் புளிப்பு மணமும் உண்டு. ஊர்வாடை அதுதான்,
இந்த வாசனையை முழுக்கப் பிடித்து எழுத்தாக மாற்ற பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் நான் இல்லை இனி இங்கே கதை சொல்லப் போவது. இவன் நாற்பது வருடம் முன்பு மீசை அரும்பத் தொடங்கியிருந்த பையன். முகம் முழுக்கச் சின்னச் சின்னதாகப் பருக்கள் அரும்பி நிற்க தலையைச் சற்றே மேல்தூக்கி வாரி பூப்போட்ட சட்டையும் ட்வீட் கால்சராயுமாக நிற்கிறவன். முழு மட்கார்ட், மில்லர்ஸ் டைனமோ பொருந்திய ராலே சைக்கிளை உடலின் அங்கமாக வரிந்தவன். சந்திரா வளையல் கடையில் வாங்கி ரகசியமாக வைத்திருந்த அசல் கரிசலாங்கண்ணி அல்லிடெக்ஸ் கண்மை கொண்டு, மெலிசாக அரும்பத் தொடங்கி இருந்த மீசையை அவ்வப்போது வளர்த்துக் கொள்கிறவன்.
சந்திரா வளையல் கடை இந்த ஊரில் இல்லை. இந்தப் பதினேழு வயசுக்காரன் பிறந்து வளர்ந்த, கனவில் எப்போதும் வரிசை தவறாது வரும் வீடுகளும், வாய் வார்த்தையும் குரலும் மாறாமல் வரும் மனிதர்களும் நிறைந்த ரெட்டைத் தெரு இருக்கும் ஊரில் தான் சந்திரா வளையல் கடை இருந்தது. அங்கே அவ்வப்போது உறவுக்காரர்கள் வீட்டுக்கு வந்து போன மேகலாவை வெறித்தனமாக மனதுக்குள்ளே நேசித்தவன் இந்த விடலை இளைஞன். அவளைக் கவரத்தான் அல்லிடெக்ஸ் மீசை போட்டுக் கொண்டது. மேகலா சொந்த ஊரான பொள்ளாச்சி போய் எஸ்.எஸ்.எல்.சி தொடர, இவன் ரெட்டைத் தெரு விட்டு வேற்றூர் காலேஜில் பி.எஸ்ஸி படிக்க, தியூப்ளே வீதிக்குக் குடி பெயர்ந்திருக்கிறான் இப்போது.
வருடம் 1970 என்று காலண்டரும் ஞாயிற்றுக்கிழமை என்று தினசரி வந்து விழும் தினமணியும், கூடவே கதிரும், காலை பத்து மணி என்று கடிகாரமும் காட்டுகின்றன. இந்தக் கணக்கு வழக்கெல்லாம் பற்றி யார் கவலைப் பட்டது?
பக்கத்து சந்தைக்கடைக் கோபுரத்தில் பத்து மணி அடித்தபோது நான் வெளியே வந்தேன். வாசலில் பலத்த வாக்குவாதம்.
தியூப்ளே வீதியும் புசே தெருவும் சந்திக்கிற இடத்தில் வீடு. இரண்டு நிலையாக கம்பீரமாக உயர்ந்த பிரஞ்சு பாணி கட்டிடம். சதா வெளிச் சுவர்களில் கடல் காற்று முட்டிக் கொஞ்சம் சத்தமும் நிறையக் குளிர்ச்சியுமாகக் கீழே இறங்கும் கட்டிடத்தின் பெரும் பகுதி, அப்பா மேனேஜராக இருக்கும் வங்கிக் கிளை. கிழக்கு ஓரத்தில் கொடி பற்றிப் படர்ந்த மாதிரி மாடிப் படிக்கட்டு. மேலே பெரிய மர ஜன்னல்களும், அலங்காரமான மரக் கதவுகளுமாக வசிப்பிடம். நூறு வருடம் முன்பு பிரஞ்சுக்காரர்கள் கட்டியபோது அது சொகுசு வாச விடுதியாகவும் மதுக் கடையுமாக இருந்தது என்று சொன்னார்கள். மதுக்கடை இருபது வருடம் முன்பு வரை, அதாவது 1950 வரை தொடர்ந்ததாம். பழைய ஞாபகத்தில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பேங்கில் படியேறி ஒயின் கேட்பதாகவும் கேள்வி.
நான் கீழே வரும்போது எழுந்த சத்தம், மதுக்கடையைத் தேடி வந்தவர்களுடையதாக இருக்கக் கூடும்.
இல்லை. அப்பா என் ராலே சைக்கிளைத் துணிக் கிழிசலால் துடைத்துக் கொண்டிருந்தார். வேட்டியும் மேலே கதர் பனியனுமாகக் குந்தி உட்கார்ந்து சிரத்தையாக அவர் சைக்கிள் முன் சக்கரத்தின் கம்பிகளைத் துணியால் பற்றி இழுத்துத் துடைக்க, பக்கத்தில் இருந்து குரல்.
‘ஐய்ய என்ன இது? நான் தொடைக்கறேன் ஐயா. நீங்க பீரோவிலே போய் உக்காருங்க’.
பேங்க் வாட்ச்மேன் வின்செண்ட் நடராஜன் கை நிறைய வைக்கோலுடன் நின்று அப்பாவிடம் மன்றாடுகிறார். அப்பா கர்மயோகியாக சைக்கிளைப் பரிசுத்தமாக்குவதே ஒரே கடமையாக வேலையில் மூழ்கியிருக்கிறார்.
அவர் மதராஸில் சொல்லி வைத்து வாங்கி நான் எஸ்.எஸ்.எல்.சியின் தேறியதும் பரிசாகக் கொடுத்தது அந்த ராலே சைக்கிள். வீட்டில் முதல் முதலில் வாங்கிய வாகனம், அதுவும் அப்பா வாங்கி பிள்ளைக்குக் கொடுத்தது என்ற முறையில் எல்லோருக்கும் பிரியமானது தான் இந்த ராலே. போன வாரம் நாங்கள் இங்கே குடியேறிய போது, ஊரில் சைக்கிளை தன் முழு மேற்பார்வையில் பத்திரமாகச் சணலும் அட்டையும் வைத்து லாரியில் எடுத்து வரத் தோதாக நிறுத்தியவர் அவரே. நான் ரயிலை விட்டு அவசரமாக இறங்கி முழங்காலில் சிராய்ப்போடு தான் ஊருக்குள் நுழைந்தேன். ஆனால் என் சைக்கிள் சின்ன சிராய்ப்பு கூட இல்லாமல் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டதற்கு அவரே காரணம். இதெல்லாம் தெரிந்ததே.
சைக்கிள் அலுங்காமல் நலியாமல் வந்ததற்காக விநாயகர் கோவிலில் சிதறு தேங்காய் போட அப்பா நேற்று மாலை போனபோது என்னையும் கூட்டிப் போனார்.
‘நல்லா வேண்டிக்கோ. அடுத்த வாரம் காலேஜ் அட்மிஷன், நல்ல படிப்பு, தொழில் எல்லாம் இந்த ஊருக்கு வந்த முகூர்த்தம் அபிவிருத்தியாகி நல்லா அமையணும்’.
பிள்ளையார் ‘மேகலாவோடு கூட முகூர்த்தமா, அதுக்கென்ன அவசரம்? காலம் கனியும் போது பார்த்துக்கறேன்’ என்றார் என்னிடம் அந்தரங்கமாக.
அடுத்து வணங்கி வாழ்க்கை மேம்பட அப்பா கூட்டிப் போன இடம் ஆசிரமம். வங்காளத்தில் இருந்து வந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் நிறுவியதாம். ஆண்கள் எல்லோரும் நீளமாகத் தாடி வைத்திருந்த இடம் அது. அப்பாவை வணக்கம் சொல்லி வரவேற்ற எல்லோரும் பேசும்போது தொலை தூரத்தில் பார்த்தபடி பேசினார்கள். இதில், சங்கு வளையலும் மாலையும், கரை போட்ட வெள்ளைச் சேலையும் அணிந்த ஸ்தூல சரீரப் பெண்களும் அங்கே உண்டு. அம்மா வயசு, அதற்கும் மேலே அவர்கள் எல்லோருக்கும். எல்லா முகத்திலும் அறிவுக் களை.
அப்பாவுக்கு அதற்குள் எப்படி அத்தனை பேர் நண்பர்களானார்கள் என்று கேட்டேன்.
‘நான் கல்கத்தாவில் இருக்கும்போது இவங்கள்லே சிலர் பழக்கம். ரிடையர் ஆகி இங்கே வந்திருக்காங்க அவங்க எல்லாம். குடும்பத்தோடு குடியேறினவங்க’.
பெரியவரின் சமாதியைக் கும்பிடச் சொன்னார் அப்பா. மனதில் பிழை திருத்தி, ஜாக்கிரதையான ஆங்கிலத்தில் எல்லாம் நன்றாக நடக்க அந்த பெங்காலிப் பெரியவரிடம் வேண்டிக் கொண்டேன். மேகலா பற்றி வார்த்தை விடவில்லை.
‘சாயங்கால பிரேயர் நடக்கறது. உட்காரலாம்’ என்றார் அப்பா.
‘நீங்க போய்ட்டு வாங்க, நான் இங்கேயே நிக்கறேன். அங்கேயும் தாடிக்கார கும்பலாக இருக்கும்’.
நான் சலித்துக் கொண்டதற்கு நியாயமே இல்லை. அப்பா வலுக்கட்டாயமாகக் கொண்டு போய் உட்கார்த்திய மண்டபத்தில், கிட்டத்தட்ட முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டு இளம் பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். எல்லோரும் நிஜார் போட்டவர்கள். ஆண்பிள்ளை போல் முழுக்கை சட்டை போட்டு, கையை சீராக மேலே மடித்து விட்டவர்கள்.
எனக்கு முன்னால் நிரம்பி இருந்த கால்களின் சமுத்திரத்தை விடாப்பிடியாகத் தவிர்த்து முன்னால் பார்க்க, சூரியனையும், சந்திரனையும். புளூட்டோ, நெப்ட்யூன் தவிர இதர கிரகங்களையும் சமஸ்கிருதத்திலோ வங்காளியிலோ மந்திரம் சொல்லி அந்தச் சபையே துதித்துக் கொண்டிருந்தது. அது புரியாவிட்டாலும் மறக்க முடியாத காட்சியாக அமைந்து போனது. பார்க்கக் கூடாது என்று நினைத்தபடி நான் திரும்பத் திரும்பப் பார்த்த கால்கள் ராத்திரி தூக்கத்திலும் இதமாக நெருங்கிச் சுற்றிச் சுற்றி வந்தன. போகட்டும், அதெல்லாம் நேற்றைய கணக்கில் வரும்.
இப்போது புரியாத விஷயம் எல்லாம் வின்செண்ட் நடராஜன் கணக்கில் தான் சேரும்.
முதலாவது அவர் ஏன் வின்செண்ட் நடராஜனானார்? இரண்டாவது, எதற்காகக் கை நிறைய வைக்கோலோடு பேங்க் வாசலில் நிற்கிறார்? மிக முக்கியமான மூன்றாவது குழப்பமாக, எதற்காக அப்பாவை பீரோவில் போய் உட்காரச் சொல்கிறார்? வாட்ச்மேன் மேனேஜரை இப்படிப் பேச உரிமை இருந்தாலும் இல்லாவிட்டாலும், அப்பா அதை சட்டை செய்யாமல் சைக்கிள் துடைப்பது ஏன்?
நான் கடைசிப் படியில் இறங்கியபோது தன் முயற்சியில் தளர்ந்த விக்கிரமாதித்யனாக வின்செண்ட் நடராஜன் காலைக் கெந்திக் கெந்தி காம்பவுண்டில் மேற்கு பிரதேசத்துக்குப் போக, நான் அப்பாவை ஒரு வினாடி பார்த்து விட்டு, நடராஜனைப் பின் தொடர்ந்தேன்.
‘பிள்ளை எங்கே கிளம்பியாச்சு? ஊஸ்ட் ஏரியா?’
அவர் என்னமோ புரியாத தகவலை என்னிடம் விசாரித்தபடி வைக்கோலோடு நகர்ந்தது காம்பவுண்ட் சுவரில் அடித்திருந்த முளையில் கட்டி வைத்த காளை மாட்டை நோக்கித்தான் என்று மட்டும் புரிந்தது. பக்கத்தில் குடை சாய்த்து வைத்த மாட்டு வண்டியில் ‘அன்புடன் ஸ்டெல்லா’ என்றெழுதி இரண்டு ரோஜாப் பூவும் ஒரு சிலுவையும் வரைந்த காகிதம் ஒட்டியிருந்தது. புரியாத கணக்கில் இன்னொன்று.
ஆமா, யார் ஸ்டெல்லா?
மெதுவாக உச்சரிக்க அந்தப் பெயரின் இனிமை தானே அடி நாக்கில் தட்டுப்பட்டது.
‘பேரைக் கேட்டே சொக்கிப் போய் எச்சில் வடிக்கிற பொறுக்கிடா நீ. உன்னை’.
முடிக்க விடாமல் பச்சைப் பட்டுப் பாவாடையும் மஞ்சள் தாவணியுமாக மனம் நிறைத்து எழுந்து நின்று தெற்றுப்பல் தெரியச் சிடுசிடுத்த மேகலாவுக்கு உதட்டைக் கவ்வி ஒரு முத்தம் கொடுத்தேன்.
‘என்ன சுவாரசியம் இல்லாம பச்-ங்கறீங்க?’
வின்செண்ட் நடராஜன் என்னைத் தப்பாகப் புரிந்து கொண்டது நல்லதுக்குத்தான்.
‘நீங்க மாட்டு வண்டியிலேயா டியூட்டிக்கு வர்றீங்க?’
நான் கேட்க அவர் பூடகமாகச் சிரித்தார்.
‘வீட்டிலே இருந்து நேரா வந்தா வண்டிதான். என் மகள் வண்டியைச் சுத்தம் பண்ணி, எனக்கு காலைச் சாப்பாடும் குக்கிக்குக் கூளமும் ரெடியாக்கிடுவா’
‘குக்கிக்கு கூளம்னா?’
அவர் படுத்து அசைபோட்டுக் கொண்டிருந்த காளைமாட்டைக் காட்டியபடி கையில் கொண்டு வந்த வைக்கோலை அன்போடு ஈந்தார். சரி, அவருக்கு ஏன் காலைச் சாப்பாடு?
‘பின்னே வேணாமா? திரும்ப முசலியார்பேட்டை கடந்து மூணு மைல் போவணுமே வீட்டுக்கு. ராத்திரி சாப்பிட்டு வந்துடுவேன். கட்டிக் கொடுத்த ரொட்டியோ, ஜாம் தடவின பன்னோ காலையிலே பசியாற. ஸ்டெல்லா கல்யாணம் ஆகிப் போய்ட்டா இதுக்கெல்லாம் யாரும் கிடையாது தம்பி, கேட்டுக்குங்க’.
கல்யாணம் ஆகாத, அப்பா மீது அன்பைப் பொழிகிற ஸ்டெல்லா நிச்சயம் அழகாகத்தான் இருப்பாள். சீக்கிரம் அவளைச் சந்திப்பேன்.
‘வீட்டுலே இருந்து நேரா வந்தா வண்டின்னீங்களே. கோணலா வந்தா?’
அவர் இன்னொரு தடவை சிரித்தார்.
‘சரிதான், நீங்களும் ஏட்டிக்குப் போட்டியா பேசற புள்ளை தானா?’
ஆமா என்றேன்.
‘நேரா வரல்லேன்னா, சிநேகிதங்க கூட்டி போக அவங்களோட இருந்துட்டு டியூட்டிக்கு வர்றதும் உண்டுதான். எல்லோரும் என்னை மாதிரி பழைய சோல்தா’.
அதென்ன சோதா ஆசாமிகளின் கும்பல் என்று அவரைப் பார்க்க, அவர் வெறுங்கையால் துப்பாக்கி சுடுவது போல் காட்டினார்.
‘சோல்தான்னா, ராணுவ வீரன். நாங்க எல்லாம் ரெண்டாம் உலகப் போர்லே சோல்தா. அதான் சோல்ஜர்’.
நான் திரும்பிப் பார்த்தேன். மொறிச்சென்று ராலே சைக்கிள் நிற்க அப்பா எங்கே?
‘பீரோவுக்கு போயிட்டார்’ என்றார் வின்செண்ட் நடராஜன்.
ஆக, இந்த ஊர்ப் பேச்சான பிரஞ்சு மொழியில் பீரோ என்றால் ஆபீஸ். அப்போ ஆபீஸ் என்றால் பீரோவா? யாருக்குத் தெரியும்?
வின்செண்ட்டும் நடராஜனும் ஒன்றானதைப் பற்றி இவரிடம் சாவகாசமாக விசாரித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து நான் சைக்கிள் பக்கம் போனேன். ஒரு ரவுண்ட் ஜிலுஜிலு என்று காற்று அடிக்க, கடற்கரையில் சைக்கிள் விட்டுப் போகணும் என்று மனதில் ஆசை. அங்கே இறுக்கமாகக் கறுப்பு நிஜார் போட்டுக் கொண்டு நேற்றுப் பார்த்த ஆசிரமத்துப் பெண்கள் சைக்கிளில் போய்க் கொண்டிருப்பார்கள். மோதி விடாமல் ஜாக்கிரதையாக வண்டி ஓட்டணும்.
‘நீ ஹோப்லெஸ் வெறும் பயல்டா. இனிமே என் கிட்டே வராதே’.
மேகலா பட்டென்று மனதில் மரக் கதவு அடைத்து மறைந்து போனாள்.
நான் அப்பாவிடம் மௌனமாகக் கைநீட்டி, சைக்கிள் சாவியை வாங்கினேன்.
‘பாத்துப் போடா, இங்கே நோ எண்ட்ரி பல தெருவுலே இருக்கு. நம்ம வீதியே இன்னிக்கு ஞாயித்துக் கிழமைங்கறதாலே மேற்கிலேருந்து நோ எண்ட்ரி தான்’.
‘நோ எண்ட்ரிக்குள்ளே எல்லாம் போகாமல் காப்பாத்து’.
விநாயகர், ‘பார்க்கலாம்’ என்றார்.
(தொடரும்)