Bio-fiction புதுத் தொடர் : தியூப்ளே வீதி – அத்தியாயம் 2 இரா.முருகன்


தியூப்ளே வீதி – 2 இரா.முருகன் (Dinamani.com தளத்தில் வியாழக்கிழமை தோறும்)

நான் சைக்கிளோடு காம்பவுண்டுக்கு வெளியே வந்தபோது அவசரமாக ஒரு சைக்கிள் ரிக்‌ஷா என்னை இடித்துக் கொண்டு வந்து நின்றது.

‘பான்ழ்யூர் முஸ்யே’

கீச்சென்று ஒரு குரல் வீறிட்டது. சைக்கிளை இடுப்பில் சாய்த்துப் பிடித்துக் கொண்டு பார்த்தேன். குரலுக்குக் கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாத ஆறரை அடி ஆஜானுபாகு உருவத்தோடு விக்டர் ரிக்‌ஷாவில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தார்.

நேற்றுக் காலையில் ரயில்வே ஸ்டேஷனுக்கு அப்பாவை வரவேற்க அவர் வந்திருந்தார். அப்பா மேனேஜராக இருக்கும் பேங்கில் அவர் கேஷியராக இருக்கிறாராம்.

அப்பாவை சல்யூ என்று சொல்லி வரவேற்ற அப்புறம் என் கையைக் குலுக்கினார் அவர். வாழ்க்கையிலேயே இரண்டாம் தடவையாக அப்போது எனக்கு கை குலுக்கல் அனுபவப்பட்டது. இதைச் சொல்வதற்குக் காரணம், முதல் தடவை எப்போது, எப்படி என்ற கேள்விகளை எதிர்பார்த்துத்தான். வேறே யாராவது கேட்காவிட்டால் நானே கேட்டு விடுவேன்.

போன மாசம் நான் என் பிரியமான ரெட்டைத் தெருவில், அந்தத் தெரு மையமக இருக்கும் ஊரில் இருந்தேன். பியுசி என்ற புகுமுக வகுப்பு பாஸ் ஆனதாக தினமணியில் பத்தி பத்தியாக நம்பர் பார்த்து அறிந்து கொண்ட சந்தோஷத்தில் இருந்த நேரம் அது. எப்படி பரீட்சை எண்ணை வைத்துப் பாஸ் ஆன செய்தியைப் பத்திரிகையில் பார்ப்பது என்று யாராவது துணைக் கேள்வி கேட்டால், அதற்காக நான் ஒரு ஞாயிற்றுக்கிழமை ராகுகாலம் முடிந்து அரைமணி நேரம் கிளாஸ் எடுக்க ரெடி.

பாஸ் ஆனதாகத் தெரிந்ததற்கு அடுத்த நாள் ஜல்ஜல் என்று பழநியின் குதிரைவண்டி சாயந்திரம் ரெட்டைத் தெருவில் நுழைந்தபோது குதிரைக்கும் பிய்த்துக் கொண்டு போனது உற்சாகம் என்று அது குதித்து ஓடி வந்ததில் தெரிந்தது. சேணத்துக்கு மேலே கண்ணை ஓட்டி அந்த பஞ்சகல்யாணி என்னிடம் சொன்னது –

’உங்க ஆள்டா. ஓடி வா ஓடி வா’.

அதே. மேகலா சித்தப்பா வீட்டுக்கு எஸ் எஸ் எல் சி லீவுக்கு வந்திருந்தாள். மூன்று மாதம் முன்னால் பொங்கலுக்கு வந்தபோது அவளுக்கு பாலினாமியல் ஈக்வேஷன் சொல்லித் தரமுடியுமா என்று கேட்டாள். நாலு நாள் ராப்பகலாகப் படித்துக் கரதலப் பாடமாக்கிக் கொண்டு வகுப்பு எடுத்தது ஒரு சனிக்கிழமை சாயங்காலம். சங்கீத சபாவில் திருச்சி வானொலி வித்துவான் கச்சேரி என்று தெருவோடு, வீட்டோடு எல்லாரும் போன நேரம் அது. பாட்டி மட்டும் வீட்டில் எனக்குக் காவல் இருந்தாள். சத்துமா உருட்டிச் சாப்பிட்டு விட்டு ஏழு மணிக்கே தூங்கி விட்டாள் எனக்கு சகல விதத்திலும் சவுகரியமாகப் போக.

யோக்கியமாக மேகலாவுக்கு ரெண்டு மணி நேரம் அல்ஜீப்ரா சொல்லிக் கொடுத்து முடித்து நான் அவளிடம் குரு தட்சிணை கேட்டதையும் அவள் கையில் காசு இல்லை என்றதையும் இங்கே சொல்லப் போவதில்லை.

காசு இல்லாவிட்டால் வேறு இனமாக இவிடம் பெற்றுக் கொள்ளப்படும் என்று சலுகை அறிவிப்பு செய்ததையும் விவரமாக எழுதப் போவதில்லை.

ஒரு வினாடி என்னைக் கூர்ந்து பார்த்து விட்டு தலையைப் பிடித்து முன்னால் இழுத்து உதட்டில் அழுத்த முத்தமிட்டு விட்டு மேகலா என்ற தேவதை ஓடியதையும் நான் விவரிக்கப் போவதில்லை.

அது மனசுக்கு நிறைவாக இல்லை என்று விரட்டிப் பிடித்து அணைத்துக் கொண்டு திருப்பிக் கொடுத்து இன்னொன்று கேட்டதையும் எழுத மாட்டேனாக்கும்.

அதெல்லாம் சரிப்பா, அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கை குலுக்குதல்?

வந்தாச்சு சார், மேடம்.

குதிரை வண்டியில் வந்திறங்கியதற்கு அடுத்த நாளே கம்பராமாயணம் வேண்டுமென்று என்னிடம் கேட்டு வந்து (எதுக்கு?) புத்தக அலமாரிக்குப் பின்னால் கையைப் பற்றிக் குலுக்கி நான் பி.யூ.சி பாஸ் ஆனதற்கு கன்கிராஜுலேஷன் சொன்னதை தாரளமாகச் சொல்வேன். அதில் அந்தரங்கம் கம்மிதான்.

ஆனாலும் என்ன, ரெண்டாம் கைகுலுக்குதல் பற்றித்தான் இப்போது பேச்சு. மேகலா இல்லை. கீச்சுத் தொண்டை விக்டர் அங்கிள் கை குலுக்கியது பற்றியது.

‘இவர் பெயரை எப்படி உச்சரிக்கணும் தெரியுமா?’

நேற்று ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்து காரில் ஏறியதும், அப்பா காரியமாக என்னைக் கேட்டார். அதை உச்சரித்து நான் என்ன பண்ணப் போகிறேன் என்று தெரியாவிட்டாலும் அப்பா சொன்னதற்காக கரிசனமாக வாய் பார்த்துக் கொண்டிருந்தேன்.

விக்டர் முந்திக் கொண்டு தன் முழுப் பெயரையும் எழுத்து எழுத்தாகச் சொன்னார்.

‘VICTOR FRANCOIS BEOUMONT’.

நான் கவனமாக பூத்தொடுக்கிறது போல எழுத்துக்களை மனதில் கோர்த்து முழுச் சரமாகத் திரும்பச் சொன்னேன்.

‘விக்டர் ப்ராங்கோயிஸ் பியூமோண்ட்’.

‘அதான் இல்லை. விக்தோ ப்ரான்ஸ்வா பூமோ. ப்ரான்கோயிஸ்னு எழுதி ப்ரான்ஸ்வான்னு சொல்லணும். ஆர் அப்புறம் டி, என் எல்லாம் சைலண்ட்’.

விக்தோ ப்ரான்ஸ்வா பூமோ உற்சாகமாகச் சொன்னார். உச்சரித்தால் தப்பாக எடுத்துக் கொள்ள வாகாக எதற்காக அங்கங்கே நிறைய எழுத்துக்களைப் பெயரில் சேர்த்துக் கொள்ளணும் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. இவ்வளவு பெரிய பெயர் எதற்கு என்பதும் கேட்க முடியாத, அடுத்த கேள்வி.

எனக்குக் கை கொடுத்தபடி, வெயில் ஏறிக் கொண்டிருக்கும் காலையில் விக்தோ ஃப்ரான்ஸ்வா பூமோ சொன்னார் –

‘பான்ழ்ஜூர்-னா பிரஞ்சில் காலை வணக்கம். நீயும் திரும்ப எனக்கு சொல்லணும், புரியுதா?’

ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு வேலை மெனக்கெட்டு எனக்கு பிரஞ்சு மொழி கற்பித்துக் கடைத்தேற்ற அவர் வந்திருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. இருந்தாலும் மரியாதை நிமித்தம் பான்ழ்ஜூரினேன்.

ரிக்‌ஷாவின் மரத் தரையில் பெரிய மூட்டையாக ஏதோ உட்கார்ந்திருந்தது. மீனோ, புளியோ மார்க்கெட்டில் மொத்தக் கொள்முதல் செய்து வாங்கிப் போகிறாரோ என்று தெரியவில்லை. என் பார்வை அங்கே போனதைப் பார்த்த விக்தோ சந்தோஷமானார்.

’பியானோ அக்கார்டியன். வாசிக்கறியா?’

நான் ஆச்சரியத்தோடு அந்தத் தோல்பை மூட்டையை இன்னொரு தடவை பார்த்தேன். ஏதோ ஒரு கருப்பு வெள்ளை சினிமாவில் எம்.ஜி.ஆர் இந்தப் பெரிய வாத்தியத்தைத் தூக்கி அணைத்து வாசித்தபடிக்கு மெல்ல அசைந்து டான்ஸ் வேறே ஆடுவார். அப்புறம் அதைவிடக் கனமான கதாநாயகியையும் அதே படி சுமந்தபடி சளைக்காமல் பாட்டைத் தொடர்வார். எம்.ஜி.ஆரா அல்லது சிவாஜியா?

நான் சினிமா விஷயத்தைச் சொன்னபோது, விக்தா அவசரமாக அதைப் புறம் தள்ளினார். சர்ச்சில் பிரார்த்தனைக்கு வாசித்து விட்டு வருகிறாராம். ஞாயிற்றுக்கிழமை தோறும் பிரசங்கத்தைக் கேட்பதற்காக வருகிறவர்களை விட, அவர் ஜபப் பாடல்களுக்கு அக்கார்டியன் வாசிப்பதைக் கேட்க வரும் கூட்டம் அதிகம் என்றார்.

‘நான் உனக்கு அக்கார்டியன் சொல்லித் தரேன். முதல்லே செவ்வாய்க்கிழமை பாலுக்கு வா. அப்பா கிட்டே டிக்கெட் கொடுக்கத் தான் சர்ச் சர்வீஸ் முடிஞ்சு போகிற வழியில் இங்கே வந்தேன்’

பாலுக்கு வர்றதுன்னா என்ன என்று புரியாவிட்டாலும், கனமான கதாநாயகி மற்றும் அகார்டியனோடு எம் ஜி ஆர் ஆடுகிறது போன்ற சமாசாரம் என்று ஊகித்தேன்.

அடியோ என்று அவர் கையசைக்க நானும் அதைச் சொல்லி சைக்கிள் மிதித்தேன். அடியோ நுனியோ விட்டால் சரிதான்.
.
கடற்கரை சத்தமே இல்லாமல் கிடந்தது. ஞாயிற்றுக்கிழமை சமுத்திரம் பக்கம் போகக் கூடாது என்று நோ எண்ட்ரி போல இங்கே ஏதாவது தடை இருக்குமோ.

தூரத்தில் ஈசல் பறந்தது போல் ஏதோ முன்னால் நகர்ந்து வந்து கொண்டிருந்தது. நான் கண்ணை இடுக்கிப் பார்க்க, அதெல்லாம் சைக்கிள்கள் என்று புரிந்தது.

கறுப்பு நிஜார் பெண்கள் அணிவகுப்பாக இருக்கலாம் என்று நினைக்கும்போதே மனம் படபடக்க ஆரம்பித்தது.

இன்னும் ரெண்டே நாள். காலேஜில் பணம் கட்டி வகுப்பில் சேரணும். அடுத்த வாரத்தில் இருந்து படிக்க, எழுத, காலேஜ் போக வர என்று நேரம் முழுக்கப் போய்விடும். இனிமேல் எப்போ நேரம் கிடைக்குமோ. இப்போது கிடைத்ததை வீணாக்காமல் ஊரில் ஒரு தெரு, சந்து, தோப்பு விடாமல் புகுந்து புறப்பட்டுப் பார்த்து விட வேணாமோ? சைக்கிள் எதற்கு இருக்கு? காசா பணமா, காற்றிலே சவாரி. அதை எல்லாம் வேணாம் என்று ஒதுக்கி விட்டு காலும் அரையுமாக நிஜார் அணிந்து வருகிற பெண்களைப் பார்க்க நினைப்பது எந்த விதத்தில் சரி?

மனசு இடித்தபோது மேகலா ஏனோ அதற்குள் வரவில்லை. ஸ்டெல்லா விவகாரத்தில் மரக் கதவைச் சார்த்திக் கொண்டு போனவள் போனவள் தான்.

சைக்கிள் மெல்ல உருள ஈசல் கூட்டமாக என்னைக் கடந்து போனவர்கள், அகலமான ஸ்டாண்ட் உள்ள சைக்கிள்களில் மீன் கூடை ஏற்றிய வியாபாரிகள். அதில் ஒருத்தன் பாடிக் கொண்டு போனான். சேர்ந்து ஹூம் ஹூம் என்று எல்லோரும் சொல்லியபடி சைக்கிள் மிதித்துப் போவது ஏதோ சினிமாவில் பார்த்தது போல் இருந்தது. அது மலையாளப் படமா, இந்திப் படமா தெரியவில்லை.

நான் வீட்டுக்குத் திரும்பிய போது ‘விக்டர் வந்திருந்தார்டா’ என்றார் அப்பா.

அவர் விக்தோ ப்ரான்ஸ்வா பூமோ என்று கஷ்டப்பட்டுச் சொல்லாதது ஆறுதலாக இருந்தது.

’நாளை மறுநாள் டவுண்ஹால்லே பார்ட்டியாம். விக்டர் கூப்பிட்டார். எனக்கு அதெல்லாம் சரியா வராதுன்னேன். செவ்வாய் ஒரு பொழுது, விரதம் வேறே. உன்னை அனுப்பச் சொன்னர். உன் வயசுப் பசங்களும் நிறைய வந்திருப்பாங்களாம். காலேஜ்லே இருக்கற சீனியர்கள் வந்திருந்து பழக்கம் செஞ்சுக்கிட்டா நல்லதா இருக்கும் இல்லையா. அஞ்சு ரூபா டிக்கட் ஒண்ணு எடுத்திருக்கேன். போய்ட்டு வந்துடு.’

சரி என்று தலையை ஆட்டினேன்.

விக்தோ எட்சட்ரா எட்சட்ரா பால்-னு ஏதோ கீசினாரே.

கேட்க வாயெடுத்து அடக்கிக் கொண்டேன். தெரியாததாகவே இருக்கட்டும்.

‘அங்கெல்லாம் சாப்பாடு… பார்த்துச் சாப்பிடு’

அப்பா வார்த்தை கிடைக்காமல் தடுமாறினார்.

சாப்பாடு பிடித்தால் சாப்பிடணும். இல்லேன்னா இல்லே. அதுதானே எப்பவும் எங்கேயும். இதிலே என்ன பார்த்து சாப்பிடறதுக்கு?

அப்புறம் அவரே சொன்னார் –

‘இந்த ஊர்லே குடி மும்முரம். பழகினதோ, ஆயுசுக்கும் விடாது’.

நல்லா சொல்லுங்கோ மாமா என்றாள் மேகலா. திரும்பி விட்டிருந்தாள். தலை குளித்து அழகான பூஞ்செடியாக நின்றவள் தலையை நான் வருட, கையை விலக்கி மறுபடியும் மரக் கதவைச் சாத்திக் கொண்டாள்.

பாலுக்கு வர்றியா என்று கேட்டேன். பழிப்புக் காட்டினாள். நான் போகட்டுமா என்றேன். பதில் இல்லை.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன