அச்சுதம் கேசவம் – அத்தியாயம் முப்பத்தி நாலு இரா.முருகன்
தகரத்தை நீளத் தட்டி, முன்னால் அதுக்கி நிறுத்தி நாலு சக்கரமும் பொருத்தி அனுப்பிய மாதிரியான டெம்போக்கள் கட்டாந்தரையில் ஊர்ந்து புழுதி கிளப்பிப் போகிற தெரு. அதை மிகவும் ஒட்டியே அந்தப் பழைய காரைக் கட்டடம் நின்று கொண்டிருந்தது. வாசலில் சூழ்நிலைக்குப் பொருந்தாத அதிகார மிடுக்கோடு, தூதரகம் என்று சொல்லும் பலகை தொங்கிக் கொண்டிருந்தது.
இரண்டே அறைகள். முன்னறையில் படுத்து உறங்க பழைய மரக்கட்டில். பின்னறையில் மேடை போட்டு ஒரு மண்ணெண்ணெய் ஸ்டவ். சாயா போடவும், எப்போதாவது முட்டை வேக வைக்கவும் மட்டும் அது பயன்படும்.
தெருக் கோடியில் பரோட்டாவோ, மதராஸிக் கிழவி பிரம்புக் கூடையில் எடுத்து வந்து விற்கும் இட்லியோ சாப்பிட்டு நாளைத் தொடங்க வேண்டும்.
பின்னறையை ஒட்டி அட்டுப் பிடித்து ஒரு கழிவறை. பகலிலும் கரப்பான் பூச்சிகள் நெட்டோடும் அங்கே ஒரு அழுக்கு பிளாஸ்டிக் வாளி அலங்காரமாக உருண்டிருக்கும். ஸ்டவ் பக்கம் தண்ணீர் கசிந்தபடி இருக்கும் தண்ணீர்க் குழாயிலிருந்து நீர் விழ, பிளாஸ்டிக் வாளியை வைத்துப் பிடித்துத் தூக்கிப் போய்த்தான் அங்கே காரியம் ஆக வேண்டும்.
முன்னறை மேசையில் டேபிள் ஃபேன். அது சுற்றாத போது சுவிட்சைப் பிரித்து உள்ளே ஒயரை திரும்ப முடுக்கி, செருக வேண்டும். ப்யூஸ் போனால், அட்டை மேல் சுற்றிய ப்யூஸ் வயரைக் கொஞ்சம் போல வெட்டி, ப்யூஸ் கட்டையில் புகுத்தி மறுபடி விளக்கெரியச் செய்ய வைக்கணும்.
எல்லாம் வைத்தாஸ் பழகிக் கொண்டான். நந்தினி இல்லாமல் இருப்பது மட்டும் பழகவே மாட்டேன் என்கிறது.
ஒரு வினாடி, ஒரு நிமிடம், மணி நேரம், ஒரு நாள் போகும் தோறும் அவன் மனசில் சுழன்று ஒடித்துப் போட்டுக் கொண்டிருக்கிறது நந்தினி நினைப்பு.
இருந்ததும், கிடந்ததும், பேசியதும் நினைவு வரத் தேம்பித் தேம்பி அழுகிறான். எதிரில் இருந்து வார்த்தை கொண்டிருக்கிறவர்கள் சங்கடப்பட்டு அப்புறம் வருவதாகச் சொல்லி அவனுடைய அந்தரங்கத்தைப் பங்கு வைக்க விரும்பாதவர்களாக நகருகிறார்கள்.
டவுன் பஸ்ஸில் போகும் போது கண்ணீர் பொங்கிப் பார்வையை மறைத்து இறங்க வேண்டிய இடத்தில் இறங்காமல் எங்கோ போய் அலைய வைக்கிறது. அழுது முடித்த தடம் முகத்தில் எப்போதும் சுவடு விலகாமல் நிற்கிறது.
எல்லாம் மறந்து எழுதலாம் என்றால், எழுத என்ன உண்டு? ஏற்படுத்திக் கொண்ட வேலை? அது மட்டும் இருக்கிறது. தானே ஏற்படுத்திக் கொண்ட தூதரக வேலை அது.
பெயருக்குத் தான் இது தூதரகம். வைத்தாஸை இங்கே தூதராக அனுப்பிய அரசு இன்றைக்கு அங்கே பதவியில் இல்லை. அங்கே இருப்பது வேறு அரசு. ஆனால் நந்தினியைக் கூட்டிப் போனவர்கள் இவர்கள் இல்லை. அது வேறே குழுவினர். நாளைக்கு வேறு ஒரு குழு தலைநகரைப் பிடித்து ஆட்சிக்கு வரலாம்.
அடிக்கடி ஆட்சி மாறிக் கொண்டே இருக்கிறது. போன மாதம் வைத்தாஸ் சார்ந்த அரசு மூன்று வாரம் தொடர்ந்து இருந்த போது எப்படியோ தூதரகச் செலவுக்கு, தூதரின் மாதச் சம்பளம் என்று ஒரு தொகையை பிரித்தானிய வங்கி மூலம் அனுப்பி வைத்தது.
வைத்தாஸ் கையில் அது கிடைக்கும் போது ஆட்சி மாறி விட்டது. ஆனாலும் அந்தப் பணம் இன்னும் இரண்டு மாதம் வைத்தாஸ் இங்கே மூச்சு விட்டுக் கொண்டிருக்கப் போதுமானது. அது தீர்வதற்குள் அந்த அரசாங்கம் மறுபடி வர வாய்ப்பு உண்டு.
போன மாதம் ஆச்சரியமளிக்கும் விதமாக, அவன் நாட்டுத் தொலைபேசி கூட வேலை செய்தது. கூப்பிட்டு நலம் விசாரித்த அமைச்சரிடம் நந்தினி இருக்குமிடம் பற்றிக் கேட்டான் வைத்தாஸ்.
வெகு சீக்கிரம் மீட்டு விடுவோம், அவரை எந்த விதமான தொந்தரவும் கொடுக்காமல் பத்திரமாக வைத்திருக்கிறார்கள், அவருடைய உடல் நலம் எந்த விதக் குழப்பமும் இல்லாமல் சீராகவே இருக்கிறது.
வானொலிக்குப் பேட்டி கொடுக்கும் உணர்ச்சி இல்லாத குரலில் அமைச்சர் சொல்லிக் கொண்டே போக, வைத்தாஸ் தானே தொலைபேசி இணைப்பு துண்டிக்கப் பட்டது போல நாலு தடவை உரக்க ஹலோ சொல்லி விட்டு வைத்தான். அந்த அமைச்சர் சொல்வது முழுப் பொய்யாகவும் இருக்கலாம் என்பதை அவன் அறிவான். உண்மையாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.
ஆனாலும், நந்தினிக்கு ஆபத்து ஏதுமில்லை என்று சொல்லவும் கேட்கவும் மனதுக்கு இதமாகத் தான் இருக்கிறது.
டைப் ரைட்டர் விசைகளில் இருந்து கையை எடுத்தான் வைத்தாஸ். மையம் கொள்ளாத கோபத்தோடு, செருகி இருந்த காகிதத்தைப் பற்றிக் கிழித்து எடுத்தான். டைப் ரைட்டரை வீசித் தள்ளி எந்த விதமான பிடிப்பும் இல்லாமல் இப்போதே புறப்பட்டுப் போக வேகம் வந்த நாட்கள் உண்டு. இன்றைக்கில்லை.
டைப் ரைட்டர் இருந்த கோடியை விட்டு நாற்காலியை நகர்த்தினான். வீடு முடிந்து ஆபீஸ் தொடங்குவதாக மனதில் கற்பித்திருந்த எல்லைக்கோடு இது.
சுவரில் மாட்டியிருந்த கடியாரம் ஆறு மணி என்றது. அப்படி என்றால் ஒன்பது. எவ்வளவு பழுது பார்த்தாலும், அந்தக் கடியாரம் மூணு மணி நேரம் தாமதமாகவே மணி காட்டிக் கொண்டிருக்கிறது. ஊரில் இருந்து வரும்போது நந்தினிக்கு அவள் பிரின்சிபாலாக இருந்த பள்ளியில் வழங்கிய பரிசு அது.
நந்தினியை ஆபீஸ் நேரத்தில் நினைக்கக் கூடாது.
வாசலில் அழைப்பு மணி சத்தம்.
வைத்தாஸ் உட்கார்ந்த இடத்தில் இருந்து வாசல் படியின் ஒரு பகுதி மட்டும் கண்ணில் படும். மணி ஒலித்து கதவு திறக்கக் காத்திருக்கிறவரின் வலது பக்க உடல், கழுத்து வரை தெரியும். ஆணா பெண்ணா, ஓரளவுக்கு வயது, மெலிந்தவரா பருத்தவரா இவை அனுமானம் செய்ய முடியும். சற்றே தட்டுப்படும் உடை, கையில் மோதிரம், பிரேஸ்லெட் போன்றவற்றை வைத்து வந்திருப்பவரின் பொருளாதார நிலை, சமூக அந்தஸ்தும் கூடப் புலப்படும்.
வைத்தாஸுக்கு அவை எல்லாம் இப்போது வேண்டாம். வந்திருப்பவர் எம்பஸி ஊழியர் சமன்லாலா என்று மட்டும் தெரிந்தால் போதும்.
இந்த கருப்புக் கோட்டும், மேலே பச்சை நிறத்தில் இறுக்கமான காஷ்மிலான் போலி கம்பளி ஸ்வெட்டரும். அவரே தான்.
சமன்லால் ராம் ராம் ஜி சொல்லியபடி மரியாதையாக உள்ளே வந்து தன் நாற்காலியில் அமர்ந்தார். அட்டண்டென்ஸ் ரிஜிஸ்தரை மேசைக்குள் இருந்து எடுத்து இனிஷியல் போட்டு வைத்தாஸிடம் மன நிறைவு முகத்தில் தெரிய நீட்டினார். இன்றைய தினம் விடிந்ததற்கான அர்த்தம் கிடைத்து விட்ட நிறைவு.
எம்பஸியில் பெயருக்கு ஒரே ஒரு ஊழியரை மட்டும் நியமித்திருக்கிறான் வைத்தாஸ். அனுப்பியிருந்த தொகையில் இதுவும் செலவுக் கணக்கு.
வைத்தாஸின் தேசமும் தூதராக அவனும், இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிற சூழ்நிலையைச் சகல தரப்புக்கும் உணர்த்த சமன்லால் முக்கியமானவரே.
அவர் எம்பஸி சின்னம் அச்சிட்ட காகிதத்தில் பொறுமையாக, எழுத்துப் பிழை ஏதும் வராமல் தட்டச்சு செய்வார்.
நாட்டில் சகஜ நிலைமை திரும்பிக் கொண்டிருக்கிறது. நிலையான அரசு மறுபடி ஏற்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை. மக்களில் சகல தரப்பினரும் நல்லாட்சியை எதிர்பார்க்கிறார்கள். இந்தியப் பெருநாட்டின் அறம் சார்ந்த, பொருளாதார அடிப்படையிலான ஆதரவு அவர்களுக்கு அவசரத் தேவை.
இந்தப் பொருளை உணர்த்தும் இரண்டு அல்லது மூன்று பக்கக் கடிதத்தை வைத்தாஸ் அவன் நாவல் எழுத எடுத்து இரண்டு வரி எழுதி வேண்டாம் என்று கழித்துப் போட்ட காகிதங்களின் மறு பக்கத்தில் பென்சிலால் எழுதி வைத்திருப்பான். அதை சமன்லால் கார்பன் காகிதம் உள்ளீடு செய்து இரண்டிரண்டாக தட்டச்சுப் பிரதி எடுப்பார். வைத்தாஸின் கையெழுத்தோடு அவை இந்திய அரசாங்க அமைச்சரகங்களுக்கும் பத்திரிகை அலுவலகங்களுக்கும் தபாலில் அனுப்பப்படும். அதற்கான, தூதரகக் கடிதம் என்று பொறித்த தனி உறைகளும் உண்டு.
சமன்லாலுக்கு அளிக்கும் மாத சம்பளம் தவிர, காகிதம் மற்றவை வாங்குவதும் வைத்தாஸ் குறித்து வைத்திருக்க வேண்டிய செலவினங்களின் பட்டியலில் சேரும். அந்தப் பட்டியல் என்றாவது தக்கவர்களிடம் சமர்ப்பிக்கப் படும்.
நாவல் எழுதுவதை விட, இப்படியான, செய்தி புனைந்த செய்திக் கடிதம் எழுத வைத்தாஸுக்குப் பிடித்திருந்தது. செய்தியாளனாக உணர்தல் மகத்தானது.
பிரச்சாரங்கள், ஏற்படுத்தப்பட்ட வழிமுறைப்படி செய்ய வேண்டியவை. அவற்றில் என்ன இடம் பெறும், எப்படி இடம் பெறும், தொனி எவ்வாறு அமைய வேண்டும், எடுப்பு, தொடுப்பு, முடிவு, செய்தியின் நீளம் எல்லாம் முன் கூட்டியே முடிவு செய்யப் பட்டவை. எழுதுகிறவருக்கு உற்சாகம் கொடுப்பவை இந்தச் சட்டகங்கள். வாசிப்பவர்களும் இவற்றை எதிர்பார்த்தே வாசிக்கத் தொடங்குகிறார்கள். அசையாத நம்பிக்கையும், வழக்கமான தன்மையிலிருந்து எதையும் இம்மியும் மாற்றாமல் சொல்வதும் எப்போதும் வரவேற்கப் படும்.
ஆனாலும் கசக்கிப் போட்ட காகிதத்தைப் பிரித்தெடுத்து அற்புத மகிழ்வளிக்கும் நற்செய்தி எழுத ஆரம்பிக்கும் முன்னால் பக்கத்தைத் திருபப, மறுபடி சோகம் சூழ்ந்ததும் உண்டு, அங்கே, எழுத முயற்சி செய்த, பூர்த்தியாகாத நாவல் வாக்கியத்தில் நந்தினி ஜன்னல் வழியாகத் தெருவைப் பார்த்தபடி உறைந்து போயிருப்பாள். ராணுவ வண்டி வீட்டு வாசலில் வந்து நிற்கும் தெரு அது.
எப்போ வருவே?
கோடு போட்டு அடித்துச் சிதைத்த எழுத்துக்களில் இருந்து விடுபட்டு எழுந்து நின்று நந்தினி கேட்பாள். யாருடைய கையோ பக்கத்தின் ஓரங்களில் இருந்து ஊர்ந்து அந்தக் கோடுகளைத் திரும்ப நிறுத்தும். அவள் அழ ஆரம்பித்திருப்பாள்.
வேண்டாம், நந்தினி நினைப்பு இப்போது வேண்டாம். சமன்லால் பார்க்க அழ வேண்டிப் போகும். சம்பள தினம் வேறே. துக்கத்தோடு வார்த்தை தெளிவில்லாமல் சொல்லி அழுதபடி கொடுக்கப்படும் ஊதியம் எந்த விதத்திலும் அவர் உடம்பில் ஒட்டாது. குடும்பம் அந்தப் பணத்தால் எந்த வித நன்மையும் அடையாது. அப்படித்தான் போன தடவை சம்பள தினத்தில் வைத்தாஸ் கண் கலங்கிய போது சமன்லால் சொன்னார்.
ஆனாலும், கொடுத்த பணத்தைத் திரும்ப உட்கார்ந்து எண்ணிப் பார்த்துச் சட்டைப் பையில் திணித்துக் கொண்டு போகும்போது, நம்பிக்கை சொல்லிப் போனார் அவர் –
சுக்ரன் வீடு மாறிப் போறான் நாளைக்கு. சனியும் மாறறான். உங்க ஜன்ம நட்சத்திரப்படி எல்லாம் நன்மையாத் தான் வரும் கான்சல் சார். பாத்துட்டே இருங்க. நீங்க எனக்கு கண்டேவாலா கடையிலே ஒரு வீசை பேஸன் லட்டு வாங்கி, அட்டை டப்பாவோடு வாயிலே அடைக்கப் போறீங்க.
இந்த நம்பிக்கை வைத்தாஸுக்குப் பிடித்திருந்தது. எதாவது ஒரு விதத்தில் இதை அவன் எழுதும் செய்திக் கடிதத்தில் புகுத்த முடியுமானால், அது உலகம் நெடுக இனிப்பை விதைத்துப் போகும். அதற்குள் எதிர்பார்த்த படி ஆட்சி மாறி அறிவிப்பு வரலாம். நந்தினியும் திரும்பக் கூடும்.
வேண்டாம், அடுத்த செய்திக் கடிதத்தை ஆரம்பிக்கலாம்.
வைத்தாஸ் குப்பைக் கூடையைக் குடைந்து, கசக்கிப் போட்ட ஒரு வெள்ளைத் தாளை எடுத்தான். காகிதத்தின் ஓரம் கொஞ்சம் காவி நிறம் தீற்றி இருந்தது. கூடையில் நேற்று சமன்லால் வெற்றிலை பாக்கு எச்சிலை உமிழ்ந்திருக்கலாம்.
வேண்டாம், வைத்தாஸ் இதை சமன்லாலிடம் கேட்கப் போவதில்லை. அவருடைய பூரண ஒத்துழைப்பு தேவை. இன்று புது செய்திக் கடிதத்தின் பிரதிகள் தபாலில் அனுப்பத் தயாராக வேண்டும். படிக்காவிட்டால் தலைநகரில், அங்கங்கே வெளியூர்களில் பலரும், எதையோ இழந்தது போல் ஏமாற்றத்தோடு ஊர்ந்து கொண்டிருப்பார்கள்.
வாசலில் திரும்பவும் அழைப்பு மணிச் சத்தம்.
கனவான்களும் சீமாட்டிகளும் வைத்தாஸின் நாட்டைப் பற்றிய மகிழ்ச்சி தரும் புத்தம் புதுத் தகவல்களைப் படித்து அறிந்து கொள்ள இன்னும் ஒரு மணி நேரம் காத்திருக்கட்டும். தாமதத்தை அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்பதை வைத்தாஸ் அறிவான்.
இருக்கையில் இருந்து வாசலைப் பார்க்கும்போது வந்திருப்பது யார் என்று தீர்மானிக்க முடியவில்லை. ஜன்னலின் பார்வை வட்டத்தை விட்டு விலகி நிற்பதால் ஒரு செயற்கைக் காலைத் தவிர மற்றது ஏதும் தெரியவில்லை.
வைத்தாஸ் அவசரமாக வாசலுக்குப் போய்க் கதவைத் திறந்தான். இடது தோளில் துணிப்பை மாட்டிய ஒரு முதியவர் கை கூப்பினார்.
நான் மும்பையில் இருப்பவன். உங்களை ஒரு நிமிடம் சந்தித்துப் பேசிவிட்டுப் போவதில் சிரமம் எதுவும் இல்லையே.
நல்ல ஆங்கிலத்தில் சொன்னார் வந்தவர்.
இல்லை என்று புன்னகை செய்தான் வைத்தாஸ். உள்ளே வரச் சொன்னான்
வைத்தாஸ் ரெட்டே இக்வனோ என்ற பெயர் எழுதி வைத்திருந்த பலகையைப் பார்த்தபடி உட்கார்ந்தார் வந்தவர். அவர் அடுத்துச் சொல்லப் போவதை ஊகித்தான் வைத்தாஸ் –
வைத்தாஸ் என்ற பெயர் எங்கள் பக்கத்துப் பெயர் போல் இருக்கு.
வைத்தாஸ் ஒரு வினாடி யோசித்தான். இங்கே வந்த பிறகு பலரும் பல தடவை இதை குறிப்பிடத் தவறுவதே இல்லை. பெயரில் தெரியும் ஏற்கனவே பரிச்சயமானவன் பிம்பம் அவர்களை மன இறுக்கத்தில் இருந்து சற்றே அகற்றி, மனம் விட்டுப் பேச வைக்கிறதாக நினைத்தான் வைத்தாஸ். பத்திரிகைக் காரர்களும், அமைச்சரக அதிகாரிகளும் குறிப்பாகத் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள், அவனைப் புரிந்து கொண்டதாக நினைக்கிற அற்புத வினாடிக்கு அப்புறம் பரிவாகவும், அவனுடைய சுக துக்கத்தில் பங்கு பெறுவதில் நாட்டமுடையவர்கள் என்பதைக் காட்டும் விதத்திலும் பேச்சை நகர்த்திப் போக முனைகிறார்கள். பலகை எழுதியவன் ரெட்டி என்பதை ரெட்டே என்று தவறாக எழுதாமல் இருந்திருந்தால் இன்னும் கூடுதல் பரிவு கிட்டியிருக்கும்.
வந்தவர் அப்படி ஏதும் சிநேகம் பாராட்டவில்லை. மௌனமாகத் தன் கைக்கடியாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். இது கடியாரம் பழுது பார்க்கும் இடம் என்று தவறுதலாக நினைத்து வந்திருப்பாரோ.
வேண்டாம். எதிர்மறை இல்லாமல் நினைவுகளைச் செலுத்து வைத்தாஸே.
அவன் தனக்குள் நிதானமாகச் சொன்னான்.
நீங்க வைத்தாஸ் இக்வனோ ரெட்டி இல்லையா? சர்வதேச இலக்கியப் பரிசுக்கு ஷார்ட் லிஸ்ட் ஆன ஆங்கில நாவல் எழுத்தாளர்?
ஆமாம்.
உங்க நாவலை அமெரிக்காவிலேருந்து வரவழைச்சுப் படிச்சேன். க்ராண்ட் நேரேஷன் பெருங்கதையாடல் இந்த நாவலோடு விடை பெறுகிறது. அருமையான வழியனுப்புதல் அது.
வைத்தாஸ் தலையைக் குலுக்கிக் கொண்டான். எதிர்மறை இல்லாத நினைப்புகளையே வலுக்கட்டாயமாக எப்போதும் மனதில் கொண்டு வர அவன் எடுக்கும் முயற்சிகள் இப்படிச் சில தடவை மாயம் சிருஷ்டிப்பது உண்டு தான்.
வைத்தாஸ் வந்தவரோடு கை குலுக்கினான்.
பரமேஸ்வரன் நீலகண்டன்.
வயோதிகர் பெயரைச் சொன்னார். சமன் லால் ஒற்றை எழுத்தை அழுத்த, டைப் ரைட்டரின் எல்லா விசைகளும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு வினாடி எழுந்து தாழ்ந்து கும்மாளம் போட்டு நின்றன.
சமன் லால் தனக்குத் தானே சிரித்தார். பழைய டைப் ரைட்டரில் ஸ்ப்ரிங்குகள் அவ்வப்போது இப்படிக் களி துள்ளி நிற்பதை அவர் பார்த்திருக்கிறாரே.
(தொடரும்)