முன்னால் பார்த்தால் டவுண் பஸ். பின்னால் இருந்து பார்த்தால் சுற்று வட்டாரக் கிராமப் பிரதேசத்துக்கு ஷட்டில் அடிக்கும் ரூட் பஸ். ரெண்டு அடையாளமும் தீர்க்கமாகத் தெரிய நிரம்பி வழிந்து கொண்டிருந்த வண்டி. அலுமினிய டப்பாவைத் தலைகீழாகக் கவிழ்த்து நாலு சக்கரம் மாட்டிய அது தான் நான் காலேஜ் போகவும் திரும்பவுமான வாகனம்.
பஸ்ஸின் வாசல்படியில் நின்றபடி ஏகப்பட்ட பேட்டை, குப்பம் பெயர்களைக் கூவிக் கொண்டு இருந்த நீலக் கைலிப் பையன் என்னைப் பார்த்ததும் காலேஜ் என்று கூவலில் கூடச் சேர்த்துக் கொண்டான்.
பஸ் நிற்கவில்லை. நான் அதன் பக்கத்தில் ஓடினேன். பஸ் ஊர்ந்து போக, சம்யுக்தையைக் குதிரைச் சவாரி செய்தபடியே வாரிக்கொண்டு போன பிருதிவிராஜன் போல என்னை லாவகமாக பஸ்ஸில் ஏற்றி விட்டான் நீலக் கைலி.
முதல் இரண்டு வரிசைகள். வரிசைகளா அதெல்லாம்? சீட் இருந்த அடையாளத்தோடு துருப்பிடித்த இரும்புக் கட்டுமானம் மட்டும் அங்கே காணப்பட்டது. நடுவே இருந்த நுரை ரப்பர் ஆசனங்கள் தோண்டிப் பிடுங்கப்பட்டிருந்தன. அந்தச் சதுரவெளிகள் மேலே கூடைகளில் மீனும், இன்னும் கொஞ்சம் மீனும், கூடவே மேலதிகம் மீனுமாக இருந்தது. தரையில் உட்கார்ந்து கூடைகளை ஷிப்ட் முறையில் அணைத்துக் கொண்டு இருந்த வயதானவள் புகையிலைக் கட்டையில் இருந்து ஒரு துண்டைக் கிள்ளிக் கொண்டிருந்தாள்.
பஸ்ஸில் பரவலாக, ஆணும் பெண்ணுமாக மீன் வியாபாரிகளே அதிகம். கைக்குட்டை முனையை மூக்கில் இட்டு உடனடி தும்மல் வரவழைத்து ஜலதோஷத்தை நாடு கடத்தப் பார்க்கிற ஒரு பாதிரியார் விடாமல் தும்மிக் கொண்டிருந்தார். என்னைப் போல பெக்கே என்று முழித்துக் கொண்டு, அங்கே இறுக்கி இங்கே தொளதொளத்து வடிந்த கால் சராயும், வயலெட்டில், பப்பரமூட்டு நிறத்தில், கோவிந்தா மஞ்சளில் சட்டையுமாக நிற்கிற வெகு சில இளைஞர்கள். காலேஜ் போகும் புதுமுகங்கள் என்று முகத்தில் எழுதி ஒட்டியவர்கள் அவர்கள். கூட்டம் எக்கித் தள்ளும் பஸ்ஸின் முன் பக்கத்தில் நின்றபடி பின்னால் பார்த்தேன்.
பின் வரிசைகளில் பாசிங்க்ஷோ சிகரெட் குடித்தபடி, முரட்டு ஆலிவ் நிற கோட் போட்ட ஏழெட்டு கிழவர்கள். கருப்பு நிஜாரும், என்னைப் போல இருபது வயசுக்காரர்கள் அணிய வேண்டிய பளபளா வெளிநாட்டு சட்டைகளுமாக ஏகப்பட்ட இடத்தை அடைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். இந்த ஊருக்கே சிறப்பு அம்சமான சோல்தாக்கள் அவர்கள் என்று புரிந்தது. ஆஸ்பத்திரியில் சீக்காளியைப் பார்க்கப் போகிற மாதிரி சோல்தாக்கள் தோளில் வழிந்த பையில் ஆப்பிள்களும் ஆரஞ்சுகளும் எட்டிப் பார்த்தன. கழுத்தில் தலா ஒரு கருப்பு தெர்மாஸ் ப்ளாஸ்க் ஒய்யாரமாகத் தூக்கு மாட்டித் தொங்கியது.
பெரிய உலோக குண்டுகள் வைத்திருந்த கித்தான் பை ஒன்று சீட்டில் சொகுசாக உட்கார்ந்திருந்தது. அவர்களுடைய கூட்டுச் சொத்தாக இருக்கக்கூடும். அதிலிருந்து அவ்வப்போது ஒன்றிரண்டாக குண்டுகள் விழுந்து உருள, பஸ்ஸில் வந்த யார் யாரையோ மிஸ்ஸே, மதாம் என்று ஏவிப் பொறுக்க வைத்துப் பையில் அடைத்துக் கொண்டார்கள். ஆளாளுக்கு பிளாஸ்கில் இருந்து சாவதானமாக அவ்வப்போது ரெண்டு மடக்கு எதையோ குடித்தபடி கூச்சலும் உற்சாகமுமாக இருந்தார்கள் அவர்கள் எல்லோரும். இந்த வயசிலும் தெம்புக்குக் குறைவில்லை.
பிரான்ஸ் ராணுவப் பென்ஷன் இவர்களுக்கு கணிசமாக வருகிறதாக இதுவரை ஒருத்தருக்கு நாலு பேர் சொன்னார்கள். வால்ட்ஸ் நடனம் ஆடப் போன இடத்தில் வாய்ப்பாடு சொல்லி நான் சிநேகிதியாக்கிக் கொண்ட ஜோசபின் அதில் முதல்.
பேங்க் வாட்ச்மேன் வின்செண்ட் நடராஜன் சோல்தாக்களை ஊரின் சகல கஷ்டங்களுக்கும் காரண கர்த்தாவாகச் சொல்லியிருந்ததும் நேரம் கெட்ட நேரத்தில் நினைவு வந்தது. அவர் பக்கத்து வீட்டுக்காரர் மோசமான சோல்தாவாம்.
‘எம்புட்டு விலை சொன்னாலும் விஸ்கியும் பிராந்தியும் காசை விட்டெறிஞ்சு வாங்கிட்டுப் போயிடறாங்கப்பா. தீ விலை ஒண்ணொண்ணும் இவங்களாலே. ஏழை பாழை குடிக்க, நம்ம குக்கிக்குப் பின்னாலே போய் அவுன்ஸ் கிளாஸிலே பிடிச்ச மாதிரி பியர் தான் கிடைக்குது. அந்த எளவெடுத்த பியரைக் குடிக்கறதுக்கு பதிலா குக்கி தொரதொரன்னு விட்டதையே மளக்குனு குடிச்சுத் தொலைக்கலாம்’.
இதில் வந்த குக்கி அவருடைய ஒற்றை மாட்டு வண்டியில் பூட்டிய பிராணி என்பது நினைவிருக்கலாம். மாட்டு நீரைப் பற்றி அவருக்கு நல்ல அபிப்பிராயம் போல.
குக்கியும் பியரும் இருக்கட்டும். சாவகாசமாக நின்று நின்று போகும் இந்த பஸ் எப்போது காலேஜ் போய்ச் சேரும் என்று அந்த சோல்தாக்கள் சொல்வார்களா?
வாழ்க்கையை அனுபவிக்கும் மேற்படி சோல்தாக்கள் ஐந்து நிமிடத்துக்கொரு முறை வண்டியை நிறுத்த வைத்து, தெருவில் ஊர்ந்து போன ஒண்ணு ரெண்டு இதர சகாக்களையும் கட்டாயப்படுத்தி பஸ்ஸில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.
‘வில்லியனூரோட பந்தயம் இருக்குப்பா. நீ வராம எப்படி நடக்கும் சொல்லு.’
அதில் ஒருத்தர் தோளில் வழிந்து தொங்க மாலை போல் மாட்டியிருந்த கருப்பு ஃபிளாஸ்கைத் திறந்தார். இன்னொருத்தர் ஆளுயர பித்தளைத் தம்ளரில் அதை ஊற்றி அன்போடு சிநேகிதருக்கு நீட்டிவிட்டுத் தானும் ப்ளாஸ்கோடு வாயில் கவிழ்த்துக் கொண்டார். இவ்வளவுக்கும் அவர் சகாவும் ப்ளாஸ்க் மாட்டியவர்தான்.
போன வாரம் டவுண்ஹால் நடனத்தில், ஜோசபினை இடுப்பில் அணைத்து மடியில் உட்கார்த்தி தலையைத் திருப்பி முத்தமிட முயன்ற சோல்தா அவர் என்று தோன்றியது. போதையில் இருப்பதாகத் தோன்ற வைக்கவோ என்னமோ தலையை நிற்காமல் ஆட்டியபடி அவருடைய கைகள் அவள் உடலில் தாறுமாறாக ஊர்ந்தபோது திமிறி விலக்கி விட்டு அறையில் மறுகோடிக்குப் போன நினைவு. ‘இவன் மண்ணுளிப் பாம்பு’ என்றாள் விஸ்கியை ருசித்தபடி ஜோசபின் அப்போது.
ஜோசபின் என்ன செய்து கொண்டிருப்பாள் இந்த வினாடி? குளித்துக் கொண்டு. வேண்டாம். அவள் சமாதானமாக மீன் கழுவி நறுக்கிக் கறி வைத்துக் கொண்டிருக்கட்டும். டிரான்சிஸ்டரில் இலங்கை வானொலி ஒலிபரப்பில், ‘நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே’ பாட்டு கேட்டு கூடவே பாடிக் கொண்டிருக்கட்டும். என் மடியில் அமர்த்திக் கொஞ்ச மேகலா மட்டும்தான்.
பஸ் திரும்பக் கிளம்பி பத்தே பத்து அடிதான் போயிருப்போம். திரும்ப அந்தக் கிழவர்கள் ரகளையாகக் கூக்குரலிட்டு பஸ்ஸை நிறுத்த வைத்தார்கள். ஒருத்தர் தடுமாறி ஓடியும் நடந்தும் போய் மதகு ஓரமாகக் குத்த வைத்தார்.
‘முஸே இந்தப் பெரிசுங்க நீஸ் தண்ணி குடிக்க, கள்ளுத் தண்ணி குடிக்க, ஒண்ணுக்கிருக்கன்னு நின்னு நின்னு போனா நா எப்ப கோட்டக்குப்பம் போய்ச் சேர்ந்து எப்போ யாபாரத்தை பாக்கறது. ஒரு வரமுற வேணாம் கும்மாளத்துக்கு?’
ஒரு மீன்கார அம்மா, சோல்தா அல்லாத சகலருக்குமாகக் குரல் கொடுத்தாள்.
‘போய் மீனு மீனுன்னு கூறு கட்டி விக்க உக்காந்தா, கருவாடா இல்லே போயிருக்கும் குமிச்சு வச்சதெல்லாம்.’
இன்னொரு கிழவி புகையிலைக் கட்டையை கமர்கெட் கடிக்கிறது போல் செல்லமாகக் கடித்து அதக்கியபடி கருத்துத் தெரிவித்தாள்.
‘முதல் நாளுங்க. காலேஜ் போவணும்.’
அப்பாவி முழிப்போடு இருந்த பசங்களோடு சேர்த்து என் எதிர்ப்பையும் பதிவு செய்ய வேண்டிய சூழ்நிலை. என்ன சொல்ல? யாரை விளித்து முழக்க? டிரைவரையா? டிக்கட் கிழிக்கிறதோடு வாசலில் நின்று ஒரு சுற்றிவர எட்டுப்பட்டி, பத்து பேட்டை, இருபது குப்பத்துப் பெயர்களை எல்லா காம்பினெஷனிலும் கூவும் நீலக் கைலியையா? ஐயா, சார், மிஸே. என்ன மாதிரி குறிப்பிடணும்?
நான் வாயைத் திறப்பதற்கு டிரைவர் வண்டி ஓட்டியபடியே சொன்னது காதில் விழுந்தது –
‘மிஸ்ஸே, பின்னுக்கு, நடு சீட்டுலே குந்திக்கிட்டிருக்காரே, மீசை இல்லாத சோல்தா, கண்டுக்கினியா?’
கண்டேன் கண்டேன் என்று தலையசைத்தேன். மீன்காரப் பெண்கள் ‘அட போய்யா’ என்று மீன் கூடைகளைத் திரும்ப ஆரத் தழுவினார்கள்.
கண்ணாடியில் என் உருவத்தைப் பார்த்து டிரைவர் சொன்னார் –
‘அந்தப் பெரிசு தான் பஸ் ஓனர். அவர் நில்லுன்னா நிக்கனும். போன்னா போகணும்.’
சோல்தாக்கள் பானம் பருகிய சுறுசுறுப்போடு எக்கி எக்கிப் பார்த்தபடி வந்தார்கள். திடீரென்று நிஜார் பாக்கெட்டிலிருந்து சின்னப்பிள்ளைகள் தொல்லை கொடுக்க ஊதும் நீளமான பிகிலை எடுத்து ஒரு சோல்தா ஊத, அடித்துப் பிடித்துக் கொண்டு பஸ் நின்றது. தோப்பும் துரவுமாக இருந்த ஏதோ பிரதேசம்.
முன்னால் ஏழெட்டு பெரிசுகள் பெரிய கோலிக் குண்டுகளை மெல்ல உருட்டி, அதை விட மெல்ல நகர்ந்து கொண்டிருந்தார்கள், சுற்றி வேலையற்று நின்ற ஏழெட்டுப் பேர் எதற்கோ உற்சாகமாகக் கை தட்டிக் கொண்டிருந்தார்கள்.
கிழங்கட்டைகள் கோலிக்குண்டு விளையாடிவிட்டு வரும்வரை காலேஜ் நினைப்பே இல்லாமல் காத்திருக்க எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது போல. அங்கே காலேஜில் என்ன பாடம் நடத்துகிறார்களோ? யார் நடத்துகிறார்களோ? சரோஜாதேவி சாயலில் கண்ணாடி போட்டுக் கொண்டு அழகான லெக்சரர் ஆக இருக்குமோ? ஆடி அசைந்து சாவதானமாகப் போனால் என்ன சொல்வார்களோ.
பஸ் இன்னொரு முறை ஒப்புக்கு ஹாரன் அலறி உடனே புறப்பட்டது. மலை ஏறுகிற மாதிரி சாய்வாக நிலப்பரப்பு. ஊ ஊ என்று இஞ்சின் வாதனையோடு தீனமாகக் கதறக் கதற டிரைவர் பிடிவாதமாக ‘இன்னும் கொஞ்ச தூரம் தான்’ என்று சமாதானம் சொல்கிற மாதிரி பேனட்டில் தட்டித் தட்டி, வண்டியை மேலே ஏற்றிக் கொண்டிருந்தார். அங்கங்கே சின்னச் செடிகள் முளை விட்டுக் கிடக்க, சுற்றிச் சுடுமணல் விரிந்து, முற்றும் போடாத கதையாகப் பாதை நீண்டு கிடந்தது.
சைக்கிளில் போயிருக்கலாம். முதல் நாள் நீண்ட நெடும் பயணம் வேணாம் என்று சைக்கிளை விட்டு விட்டு வந்தது தப்போ என்று தோன்றியது.
இன்னும் சரிவரப் பழக்கமாகாத ஊர். அதுகூடப் பரவாயில்லை. கல்லோ முள்ளோ டயரில் குத்தி, பங்க்சர் ஆகி விட்டால் ஒட்டுகிற கடையைத் தேடி அலையணும்.
எனக்குத் தெரிந்து தியூப்ளே வீதிக்குப் பின்னால், அடிக்குச்சி வைத்தோ நூல் பிடித்தோ இணைகோடு மாதிரி மிகச் சரியாக நீண்டு கிடக்கும் ரங்கப்பிள்ளை வீதியில், ஒரு சைக்கிள் சர்வீஸ் கடை இருப்பதைப் பார்த்திருக்கிறேன். புஸே தெருவில் மேற்கே போய், ஏதோ கிளை வீதியாக வெட்டி தொண்ணூறு டிகிரி வளைந்து திரும்பும் இன்னொரு தெருவில் இன்னொரு கடையையும் பார்த்திருக்கிறேன். பிரஞ்சு பேக்கரிக் கடையை ஒட்டி நாலு மூங்கில் கழிகளைத் தொடுக்கி வைத்து, அடையாளத்துக்குப் பழைய சைக்கிள் டயர்கள் சுவரில் வளையமாக மாட்டிய சைக்கிள் ஆஸ்பத்திரி அது.
ஆனால் முதலியார்பேட்டையில் முள் குத்தினால் புஸே தெருவுக்கு நாலைந்து கிலோமீட்டர் வண்டியைத் தள்ளிக் கொண்டு வர முடியாது. ரெட்டைத் தெரு இருக்கும் ஊரா என்ன? அங்கேயும் தான் ஊர் அளவுக்குத் தகுந்த மாதிரி, கோணல் மாணலாக இருந்தாலும், சுத்தமான தெருக்கள். சின்னதாக இருந்தாலும் கம்பீரமாக எழுந்து நிற்கிற கல்லூரி. பத்தே நிமிடத்தில் எதிர்காற்றாக இருந்தாலும், ஓங்கி மிதித்தால் வீட்டில் இருந்து காலேஜ் போய்விடலாம். எங்காவது அசம்பாவிதமாக முள்ளோ, ஆணியோ குத்தி காற்றுப் போனால், ஸ்தலத்துக்கு பத்து மீட்டர் சுற்றளவில் நிச்சயம் நம்ம ஆளென்று ஒரு ஐந்து பேராவது இருப்பார்கள்.
அண்ணே, தம்பி, யக்கோவ், தாத்தா, சித்தப்பு என்று உறவு சொல்லி வீட்டு, கடை வாசலில் சைக்கிளை வைத்து விட்டு, நடந்தோ ஓடியோ காலேஜ் போய்ச் சேர்ந்தால், சாயந்திரம் வரும்போது அனேகமாக சைக்கிள் பங்க்சர் ஒட்டி வீடு திரும்பும் பயணத்துக்காகத் தயாராக நிற்கும். இங்கே யாரைத் தெரியும்?
திரும்ப பஸ் நின்றது. யாருக்கோ குத்த வைக்கவோ, கோலிக் குண்டு விளையாடவோ அவசரம். காலேஜ் எக்கேடு கெட்டால் அவர்களுக்கு என்ன?
‘முஸ்ஸே.’
டிரைவரும் நீலக் கைலியும் சேர்ந்திசையாகக் கூவினார்கள். எந்த சோல்தா எங்கே சரக்கடித்த மப்பில் சாய்ந்து தூங்குகிறாரோ. எழுந்திருய்யா முஸ்ஸே.
நான் சுற்று முற்றும் பார்க்க, திரும்பவும் குரல்.
‘உன்னைத் தாம்பா. காலேஜ் போவணும்னியே.’
‘போக முடியாதா?’
சோகமாகக் கேட்டேன். நீலக் கைலி பூடகமாகச் சிரித்தான்.
‘முன்னே பின்னே காலேஜ் வந்திருந்தா இல்லே தெரியும்? குழந்தைப் புள்ளை மாதிரி கேக்கறே பாரு. இதாம்பா காலேஜ்.’
நான் அவசரமாகப் படி இறங்க, மொத்த பஸ்ஸுமே தந்துனானே என்று ஆசிர்வதித்தபடி உருண்டு போனதாகத் தோன்றியது.
மேட்டு நிலம். நேரே போகிற வழியோடு கூடச் சற்றே இடது பக்கம் திரும்பி நீண்டு நெளிந்து போகிற இன்னொரு பாதையும் இருந்தது. பஸ் இந்தக் கூட்டு ரோட்டிலிருந்து இடது பக்கம் போக, நான் நேராக நடக்க ஆரம்பித்தேன்.
கிட்டத்தட்ட செங்குத்தாக படி ஏதும் இல்லாமல் கப்பி ரோடு வளைந்து மேலே ஏறுகிற பாதையில் இன்னும் ஐந்து நிமிடம் நடந்து சமவெளிக்கு வந்தேன்.
பெரிய கல் கட்டடம். ரெண்டு மாடி இருக்கலாம். அதற்கு மேலும் இருக்கக்கூடும். நின்று அண்ணாந்து கட்டிடத்தைப் பார்வையிட சுயமரியாதை இடம் கொடுக்கவில்லை. புதுசாக இங்கே வருகிறவன் என்று ஒவ்வொரு அசைவிலும் தெரியணுமா என்ன?
ஒன்பது மணிக்குக் கிளம்பி இங்கே வந்து சேர, பத்து மணி பத்து நிமிடமாகி விட்டது. கோட்டை கொத்தளம் போல இருக்கும் இடம். உள்ளே போய் யாரையாவது வழி கேட்க வேண்டி இருக்கும். காட்டிய வழியில், நூறு இருநூறு பேர் கூடியிருக்கும் அறையோ மண்டபமோ. மன்னிப்புக் கேட்டபடி, உள்ளே நுழையக் காத்திருக்கணும். நினைத்தாலே சகலவிதத்திலும் துக்கமாக இருந்தது.
முக்கியமாக அங்கே அழகான பெண்கள் முதல் வரிசையில் இருப்பார்கள். பட்டிக்காட்டுப் பொன்னையாவாக நான் போய் நிற்க நக்கலாகப் பார்ப்பார்கள். ஒருத்தருக்கொருத்தர் பிரஞ்சில் கொஞ்சிக் கொண்டு சிரிப்பார்கள். அவர்கள் சிரித்ததற்காக அனுசரணையோடு பின்னால் உட்கார்ந்து இருக்கக் கூடிய தடியன்களும் காணாததைக் கண்டது போல் ஓவென்று அதே மொழியில் நகைப்பார்கள். கைக்குட்டையால் வியர்வையை ஒத்திக் கொண்டு ஒரு புரபசர் மில்டன் ஷேக்ஸ்பியர் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார்.
‘முசே, பின்னால் போய் உக்காரு.’
இல்லை, பேராசிரியர் அப்படி எல்லாம் பேச மாட்டார்.
‘ஹலோ’
பின்னால் இருந்து யாரோ அவசரமாகத் தோளைத் தொட்டார்கள்.
திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன்.
‘நல்ல பிள்ளையா நேரே அந்த என் சி சி கட்டட வாசலுக்குப் போகணும். வேப்ப மரம் இருக்கே அங்கே தான்.’
சன்னமான பென்சில் மீசை வைத்த, கருநீல பேண்ட் போட்டவன் காட்டிய திசையில் பார்த்தேன்.
சோனியான ரெண்டு பையன்களும் தடியான ஒருத்தனும் இடுப்பைச் சுற்றிக் கொப்பும் குழையுமாக வேப்பிலையைச் செருகிக் கொண்டு சுட்டெரிக்கும் வெய்யிலில் தொம்தொம்மென்று குதித்து நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
(தொடரும்)
(தினமணி.காம் இணையத் தளத்தில் பிரசுரம் ஜூன் 4 2015)