வசந்தி கேட்டாள்.
காசு கொழுத்துடுத்தா?
வெர்கீஸ் தாடையைச் சொறிந்து கொண்டு விசாரித்தான்.
மதராஸி லாட்டரி பம்பரா ஏதும் அடிச்சுதா?
மேல்மாடி குடித்தனத்து குர்னாம்சிங் கிண்டினான்.
கொட்டு கொட்டுன்னு ஆகாசத்திலே இருந்து காசு கொட்டுதாக்கும். எனக்கும் கொஞ்சம் கொடுங்க சார். ஒய்ட் லக்கான் கோழி வாங்கி வளர்க்கறேன். ஒவ்வொரு முட்டையிலேயும் உங்க பேர் தான் எழுதி இருக்கும், ஆமா.
ஆபீசில், பகல் சாப்பாடுக்கு முந்திய மதிய தரிசனமாக, உடம்பு வாடையடிக்கும் சிகப்பு ஸ்வெட்டர் களைந்து, பெருந் தனங்களைக் கண்ணைக் குத்துவது போல துருத்தியபடி தில்ஷித் கௌர் சொன்னாள்.
பேஷ், பணக்காரக் குண்டிகள் ஆகியாச்சு.
பிடார் ஜெயம்மா வழக்கமான குரலில் பெரிய பானைகளை அபிநயித்தபடி சிலாகித்தாள்.
தில்லிப் பட்டணமே வழித்துக் கொண்டு சிரிக்க ஒரே காரணம், சின்னச் சங்கரன் ஏரோபிளேனில் யாத்திரை செய்யப் போகிறான். அதுவும் லண்டனுக்கு, பாரீஸுக்கு எல்லாம் இல்லை. ரயிலில் ஏறிப் படுத்தால் ரெண்டே நாளில் பிருஷ்டத்திலும் முகத்திலும் கரி அப்பிக் கொண்டு போய்த் தள்ளும் மதறாஸுக்கு.
யாருக்கும் வயிற்றெரிச்சல், அசூயை என்றெல்லாம் இல்லை. காசைக் கரியாக்குகிற விஷயமில்லையா உள்நாட்டில் பிளேனில் போவது என்ற நல்ல எண்ணத்தில் ஏகோபித்த அபிப்பிராயமாக எழுந்தது அது.
உள்ளதற்கு ஐம்பது சதவிகிதம் கம்மியான கட்டணம். தில்லியில் இருந்து மெட்ராஸ் போய்த் திரும்ப வர வெறும் நூற்றைம்பது ரூபாய் மட்டும் ஒருத்தருக்கான செலவு. ரெண்டு டிக்கட்டுக்கு இப்படி சலுகையோடு கூப்பன் கிடைத்திருக்கிறது. ஒரு மாதத்தில் உபயோகித்துக் கொள்ளாவிட்டால் சலுகை காலாவதி ஆகி விடும்.
சின்னச் சங்கரன் பொறுமையாக ஒவ்வொருத்தருக்கும் விளக்க, போனால் போகிறது என்று பெருந்தன்மையோடு விளக்கத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
ரயில் சத்தம் தலைக்கு நூறோடு போகும்.
வசந்தி விடாப்பிடியாக ஒப்புக்கு ஆட்சேபித்தாள் தான். என்றாலும், விமானக் கனவுகளில் அவள் லயிக்க ஆரம்பித்ததைச் சின்னச் சங்கரன் கவனித்தான்.
என்ன எடுத்து வைக்கறமோ, மொதல்லே மாத்திரை வாங்கிண்டு வந்துடுங்கோ. தடால்னு இது வந்து நிக்கும்.
அவளுடைய கோரிக்கை புரிந்தது. ஆனாலும் கேட்டான்-
வந்தா வந்துட்டுப் போகட்டுமே. அது பாட்டுக்கு அது. இது பாட்டுக்கு இது.
மூஞ்சி. அதுக்காக இங்கேயிருந்தே ஒழுகிண்டு போக முடியுமா?
வசந்தி மென்மையாக உள்ளங்கையை அவன் கன்னத்தில் பதித்தாள். குனிந்து பனியனை உயர்த்தி நாபியில் முத்தமிட்டாள்.
இப்படி ஒரு ரதியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு கவுர்ப் பெண்பிள்ளையின் மாரைப் பார்க்க வெறி பிடித்து அலைகிறேனே.
தன்னையே நொந்து கொண்டது ஒரு மனசு.
கௌர் குனிந்து கொங்கை வருட வயிற்றில் முத்துவது போல் கற்பனை செய்து கள்ளக் களி களித்தது இன்னொன்று.
கவுர் கல்யாணமானவடா மாபாதகா. ரெண்டு குழந்தைக்கு தாயார் வேறே.
பிடார் ஜெயம்மா அடி மனதில் இரைய ஆரம்பித்தாள்.
பரதேவதே, என்னைக் கொஞ்சம் சும்மா இருக்க விடு. சத்தியப் பிரமாணம் செய்யறேன். எந்தத் தப்புத் தண்டாவுக்கும் போக மாட்டேன்.
வாக்குறுதி தந்தபடி வசந்தியை ஆரத் தழுவி மடிக்கு இழுத்தான் சங்கரன்.
எப்படி ஆரம்பமாச்சு?
திரும்ப வசந்தி வெகுளியாகக் கேட்டாள்.
இப்படித்தான்.
போன வாரம் திங்கள்கிழமை காலையில் சூப்ரண்டண்ட் சங்கரன் ஆபீசுக்குப் போனதுமே டெலிபோன் அலறியது.
மந்திரி மகாப் பிரபு.
கொஞ்சம் அவசரமா வரணும் சங்கரன். கார் அனுப்பறேன்.
பின் சீட்டில் நாலு பேர் காலை நீட்டி சாய்ந்து கிடக்க, முன்னால் இரண்டு பேர் அதேபடி ஓய்வாக இருக்க, டிரைவர் சீட் போக, இன்னும் கூட ஆள் அடைக்க இடம் எதேஷ்டமாக இருந்த அம்பாசடர் கார். தேசியக் கொடி முன்னால் அலங்காரமாக அசைகிற, இந்தி பேசக்கூடிய வாகனம். டிரைவர் தவிரக் காலியான கார்.
பழக்க தோஷம், சங்கரன் முன் சீட்டில் டிரைவர் குர்ப்ரீத் சிங் பக்கம் ஒண்டிக் கொண்டு போனான்.
ஒரு நாள் இல்லாத திருநாளாக அமைச்சர் அவனுக்கு நார்த்தங்காய் ஜூஸ் கொடுத்தார். சகிக்க முடியாத பழச் சாறாக அது இருந்தது. அழுக ஆரம்பித்த ஆரஞ்சுப் பழமாக இருக்கும். அல்லது, மினிஸ்டருக்கு அதைத் தயாரித்துக் கொடுத்தவன் உலர்ந்த மீனைப் பொடி செய்து உள்ளே போட்டு விட்டானாக இருக்கும்.
இன்னிக்கு அங்க்ரேஸி வாலா வரான். கூடவே அவ்ரத்தும் வர்றா.
அவருக்கு வெளிநாட்டில் இருந்து வருகிற எல்லாப் பத்திரிகையாளனும் இங்கிலீஷ்காரன் தான். பெண் ஜர்னலிஸ்ட் எல்லோரும் பொண்ணு, அவ்ரத் தான்.
என்ன விஷயம் சார்?
இப்படி ஏதாவது இருக்கும் என்று தெரிந்தாலும் உபசாரத்துக்கு சங்கரன் விசாரித்தான்.
ஊர்லே இருக்கப்பட்ட கண்றாவி, கருமாந்திரம் எல்லாத்தையும் இங்கே தான் எழவு கூட்ட வரான். ஒண்ணும் சரியில்லே. அடுத்த எலக்ஷன்லே கட்சி மாறிடலாமா. என்ன சொல்றீங்க?
சங்கரன் கண்ணாடி முன் பார்த்துப் பழகிய முழு முட்டாள் பார்வையை முகத்தில் இருத்தி, புரியலியே சார் என்றான். அப்படியே இருக்கட்டும் என்று அருளினார் மினிஸ்டர்.
மீட்டிங்லே நீங்களே பேசுங்க. நான் அப்பப்ப ஆமோதிக்கறேன். சரியா. நீங்க பேசறதுலேயே அவங்க மூட்டையைக் கட்டிக்கிட்டுத் திரும்பிடணும். நீங்க சொன்னா நான் சொன்ன மாதிரி. நான் சொல்லாததை நீங்க சொன்னாலும் நான் சொல்ல விட்டதா இருக்கும்னு நம்பிக்கை இருக்கு.
அவர் ஜிலேபி பிழிகிற மாதிரி சுற்றிச் சுற்றிப் பேச சும்மா இருந்தான் சங்கரன்
துரை வந்தாச்சு என்று சப்ராஸி வந்து சொன்னான்.
கொஞ்சம் இரு. ராகுகாலம் போனதும் கிளம்பலாம்.
மினிஸ்டர் சங்கரனின் கையைப் பிடித்திழுக்காத குறையாகத் திரும்ப உட்கார்த்தினார். இன்னொரு நார்த்தங்காய் ஜூஸும் குடித்து வயிறு கடகடத்தது சங்கரனுக்கு, எல்லாம் கடந்து தாமரை இலைத் தண்ணீராக, ஒட்டாமல் ஓடும் வைராக்கியம் மனசில்.
போகலாம்.
மினிஸ்டர் லிஃப்டை அழைத்தார். மேலே, மூன்றாம் மாடியில் துரைகள், துரைச்சானிகள் காத்திருக்கிறார்கள்.
மினிஸ்டர் முன்னால் நடக்க, ஒரு அடி சமூக இடைவெளி விட்டுப் பின்னால் போனான் சங்கரன். அவர் கை காட்ட, ஓரமாக இருக்கையில் உட்கார்ந்தான். திரும்ப அவர் கை அசைக்க, மினிஸ்டர் பக்கமாகவே, தொடுக்கினது போல் நாற்காலியில் அமர்ந்தான் அவன்.
வந்திருக்கிறவர்கள் ரஷ்யர்கள் என்று தோன்றியது சங்கரனுக்கு.
நம் நாடுகள் இடையே நட்புறவு வளர்க்கணும். நீங்கள் இங்கிருந்து நாலு பேரைப் பாட அனுப்புங்கள். நாங்கள் பத்து பேரை இங்கே ஆட அனுப்புகிறோம்.
இப்படித்தான் இந்த மாதிரிச் சந்திப்புகளில் பேச்சு போகும். சாயா குடித்து, பகல் சாப்பாடு வரை கஞ்சிப்பசை போட்டது போல் விரைப்பான கலாச்சாரத் தகவல் பரிமாற்றம் முடிந்து சேர்ந்து சாப்பிடப் போவார்கள். சங்கரனோ இதர அதிகாரிகளோ இந்த மாதிரிச் சந்திப்புகளுக்கு வருவது அபூர்வம். மொழிபெயர்ப்பாளர்கள் வேண்டுமானால் யந்திரம் மாதிரி மொழி பெயர்த்துக் கொண்டு இரு புறமும் துடிப்பாக உட்கார்ந்து கொண்டிருப்பார்கள்.
இன்றைக்கு ஒரு கை குறைகிறதோ என்னமோ மினிஸ்டர் சங்கரனையும் கூப்பிட்டு விட்டார்.
நல்ல ஆங்கிலத்தில் வந்தவர்கள் பேச ஆரம்பித்ததும் தான் சங்கரனுக்கு அர்த்தமானது – இவர்கள் பிரிட்டீஷ்காரர்கள்,
எடுத்ததுமே அந்த வெள்ளைக்காரன் வருத்தம் தெரிவித்தான். எதற்காவது வருத்தம் தெரிவிக்காத வெள்ளைக்காரன் அபூர்வம். மகாராணி பிள்ளை பெற்ற செய்தியாக இருந்தால் கூட இவர்கள் ஒரு தடவை வருத்தம் தெரிவித்து அப்புறம் தான் அறிவிப்பார்கள்.
நாங்கள் பிரிட்டீஷ் வானொலியில் இருந்து வருகிறோம். உங்களைச் சந்திக்கச் சொல்லி இருக்கிறார்கள். இது கலாசார அமைச்சகம் சம்பந்தப் பட்டதா அறியேன்.
அப்படி இல்லை என்று சங்கரன் இடை வெட்டினான். மினிஸ்டர் அவனைப் புன்முறுவலோடு பார்த்தார். இவன் உலக்கையையும் முழுங்கி சுக்குக் கஷாயம் குடித்துச் சமாளித்து கொள்வான் என்ற நம்பிக்கையில் வரும் சிரிப்பு அது.
இது கலாசார அமைச்சகம் தான். என்றாலும், இப்போதைக்கு ஆரோக்கியமும் எங்களுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
அவர்கள் சிரித்து ஆரோக்கியம் எப்போதும் நிலவட்டும் என்று வாழ்த்தி, சூடு போன சாயாவைப் பெயருக்குக் குடிப்பதாகப் பாவனை காட்டி திரும்ப வைத்தார்கள்.
ஆகவே உங்களைச் சந்திப்பதில் அமைச்சர் பெரு மகிழ்ச்சி அடைகிறார்.
நல்ல சிரிப்போடு இருந்த, ஆரோக்கியமும் கலாசாரமும் அழகும் கொழிக்கும் வெள்ளைக்காரியைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர், பார்வையைப் பொதுவாக்கி மகிழ்ச்சியை முகத்தில் கோடிட்டுக் காட்டினார்.
வெள்ளைக்காரன் மீண்டும் தெளிவான குரலில் பேசினான் –
நாங்கள் மதராஸ் கடந்து தெற்கெ போனோம். அங்கே இந்தச் சிற்றூரில் –
அவன் நிறுத்திக் கை அசைக்க, கூட வந்திருந்தவள் குறிப்பறிந்து ஏதோ விசைகளை அழுத்தினாள். கிடக்கையாக வைத்திருந்த பெட்டியில் இருந்து ஒளிக் கற்றை எதிர்ச் சுவரில் பாய, சங்கரன் திறந்த வாய் மூடாமல் பார்த்தான்.
அவன் சற்றும் எதிர்பார்க்காத படி, அரசூர் பஞ்சாபகேச சிரொதிகள் சுவரில் நிழற்படமாகத் திடமான அப்பி, ராமாயணம் சொல்லிக் கொண்டிருந்தார்.
எந்த நிமிடமும் அவர் முன்னால் பார்த்து, ‘என்னடா சங்கரா, விச்சியா இருக்கியா? ஊருக்கு எப்ப வரே?’ என்று கேட்பார் என்று திடமாக நினைத்தான் சங்கரன். அட சே, அது டாக்குமெண்டரி சினிமா ச்ரௌதிகள்.
அவர் பேசுவது கேட்காமல் வாயசைவை மட்டும் பார்த்தபடி இருந்தபோது, பிரிட்டீஷ்காரன் சொன்னான் –
இவர் உலகில் உன்னதமான கதை சொல்லிகளில் ஒருத்தராம்.
சங்கரன் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டான். இத்தனை ஊர் சுற்றி தில்லிப் பட்டணம் வந்து நல்ல உத்தியோகத்திலும் உட்கார்ந்து, வாரக் கடைசி சுகமாக ஓய்வெடுத்துக் கொண்டு ஆபீஸ் வந்தால், சிரௌதிகள் தான் சுவரில் பிரத்யட்சமாகிறார், பாராட்டு வேறே அவருக்கு. மூடரை மூடரே காமுறுவார்.
மினிஸ்டர் திரும்பப் பிரிட்டீஷ் பெண்ணை வெறிக்கத் தொடங்கினார். அவள் மூடரில் ஒருத்தியாக இருக்கக் கூடும் என்று சங்கரனால் நினைக்க முடியவில்லை.
தேசத்திலே நல்ல சக்திகளோட கடாட்சம் ஷீரம் மாதிரி, தான்யம் மாதிரி, தனம் மாதிரி பாஷ்பமா வந்து நிரம்பிண்டு இருக்கு. குருஷேவ், புல்கானின் கட்டால போறவன்களும் காந்தி மார்க்கத்திலே போற சவண்டிக்கார பாஷாண்டிகளும் ஒடுங்கியாச்சு. அரசூர் மகா பட்டணத்திலே சாவே இல்லேன்னா இப்படியான சுபிட்சம் ஒரு காரணம். எங்க ஊர்லே காந்தியும் கிடையாது வேறே கழிசடையும் கிடையாது. நாஸ்திகம் பேசற ஒண்ணு ரெண்டு பேரும் வெளியூரோட போயாச்சு. அங்கே ஏன் கருடான்னு கேக்க ஒரு நாதியில்லேயாம். இதைத்தான் மகரிஷி சொன்னார். சாரித்ரேண ச கோ யுக்த.
வெள்ளைக்காரி சுவிட்சைத் திருப்பிப் போட, சிரௌதிகள் உறைந்தார்.
நிஜமாகவே அந்த ஊர்லே சாவு இல்லாமப் போச்சா?
வெள்ளைக்காரி கேட்டாள். ஆமா என்று சொன்னால் அங்கேயே போய் சிரௌதிகள் காலடியில் உட்கார்ந்து விடுவாள் என்று சங்கரனுக்குத் தோன்றியது.
மினிஸ்டர் சங்கரனைப் பார்த்தார். நீ இந்தப் பந்தைத் தடுத்து ஆடு என்று பார்வையில் கோரினார் அவர்.
சட்டென்று சங்கரன் மருதையன் மாமா ஆனான். என்ன பேசினாலும் அதற்கு ஒரு எதிர்க்கட்சி கட்டி ஆடுகிறாரே என்று அவ்வப்போது மனதில் பட்டாலும், அவர் சொல்வதை எல்லாம் கவனமாகக் கேட்டது உபயோகமாகப் போயிற்று.
அவன் மருதையன் போல் புன்சிரிப்போடு ஒரு தடவை வெள்ளைக் காரர்களையும் சற்றே திரும்பி மினிஸ்டரையும் பார்த்தான். இது மருதையன் காலமெல்லாம் வகுப்பெடுத்து வகுப்பெடுத்து வந்த பழக்கம். காலேஜ் வெளியேயும் எதாவது முக்கியமாக, அடுத்தவர் சொல்வதை மறுத்துப் பேச வேண்டியபோது அவர் தன்னையறியாமல் கடைப்பிடிக்கும் பழக்கம் இப்படிச் சுற்றுப் புறத்தை நிதானமாகப் பார்த்து சுவாசம் நீள உள்வாங்கி விடுவது.
சங்கரன் தெளிவான குரலில் சொன்னான் –
இறப்பு பிறப்பு பற்றிய சாதாரண புள்ளி விவரங்கள் மூலம் இந்தியா பிரிட்டனைப் பிரமிக்க வைக்க முடியும் என்று நீங்கள் சொல்வதில் இருந்து புரிகிறது. அந்த ஊரில் என்று இல்லை. எங்கேயும் இப்படி நாலு மாதம்,ஐந்து மாதம் போல் பிறப்போ இறப்போ நிகழாமல் போக வாய்ப்பு உள்ளது. தகவல் புள்ளிகள் ஒரே திசையில் இருந்தால் பார்க்க வியப்பாக இருக்கும்தான். இது கருப்பு அன்னம் போன்ற விஷயம். அன்னப் பறவையின் நிறம் வெள்ளை என்று உறுதியாகச் சொல்லலாம். உலகில் இதுவரை பார்க்கும், பார்த்த அன்னம் எல்லாம் வெண்மையாகத் தானிருக்கிறது. ஆனால் யாராவது எங்காவது ஒரே ஒரு கருப்பு அன்னத்தைப் பார்த்து விட்டால், அன்னம் வெள்ளை என்ற முடிவு அடிபட்டுப் போகுமே. அது போல தான். பிறப்பையோ இறப்பையோ வென்றதாகக் காட்டும் புள்ளி விவரங்கள் ஒரு தடவை தலைகீழானால், அப்புறம் இந்த பயணமும், படப்பிடிப்பும் அமைச்சரோடு சந்திப்பும் எல்லாம் தேவையில்லாமல் போய்விடும். உண்மை இதுதான்.
மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது. மினிஸ்டர் தன் செல்ல நாய்க் குட்டியைப் பார்ப்பது போல் பரிவும் கனிவுமாகச் சின்னச் சங்கரனைப் பார்த்தார்.
மூட நம்பிக்கைகளை நம்பாமல் இருக்க நாங்கள் பிரிட்டனை எடுத்துக் காட்டுகிறோம். எப்போதும் அப்படியே இருக்க கர்த்தர் அருள் செய்யட்டும்.
மினிஸ்டர் தப்பான திசையில் தோளில் குரிசு வரைந்து சங்கரன் கண்காட்ட உடனடியாக நல்ல சிலுவையை வரைந்தார்.
வெள்ளைக்காரர்கள் மதியச் சாப்பாட்டுக்கு முன்பே விடை பெற்றுப் போனார்கள். அவர்களை லக்னோவில் பூல் புலாயா என்ற அபூர்வமான கட்டிடத்தைப் பார்த்துப் படம் எடுத்துச் செய்தி ஒலிபரப்பச் சொன்னான் சங்கரன்.
நீங்கள் பூல் புலாயா உள்ளே பத்து நிமிடம் நடந்தால் தொலைந்து விடுவீர்கள். அப்புறம் நான் புறப்பட்டு வந்துதான் பத்திரமாகக் கூட்டி வரணும்.
மினிஸ்டர் பெண் நிருபரைப் பார்த்துக் கனிவோடு சொன்னார். அவள் துன்பத்தில் மாட்டிக் கொள்ள உடன் வந்து ரட்சிக்கும் பிம்பம் அவருக்கு ஆசுவாசம் அளித்திருக்கலாம் என்று சங்கரனுக்குப் பட்டது.
சங்கரன் தன் வேலை இடத்துக்குப் புறப்படும் போது மினிஸ்டர் அவனைத் தன் அறைக்குக் கூப்பிட்டார்.
ஏதோ வன்மம் வந்து அவனைக் குறி வைத்தது போல் திரும்ப நார்த்தங்காய் ஜூஸ்.
எனக்கு வேண்டியிருக்காது. நீங்க உபயோகப்படுத்திக்கலாம்.
பெரிய மேஜைக்குள் எதையோ தேடினார் அமைச்சர்.
ஏர்லைன்ஸ் ஐம்பது சதவிகிதத் தள்ளுபடியோடு இரண்டு டிக்கெட்கள் சலுகை கூப்பன் அனுப்பியிருக்காங்க எங்கிருந்தும் எங்கும் இந்தியாவுக்குள் போகலாம். போய்ட்டு வாங்க.
பழுப்பு உறை ஒன்றை எடுத்து சங்கரனிடம் நீட்டினார் அவர்.
அப்படித்தான் நாம் நாளைக்கு மெட்றாஸ் போறது. கொள்ளை மலிவு இல்லையா?
சங்கரன் வசந்தியைக் கேட்டான். அவள் கள்ளச் சிரிப்போடு சொன்னாள் –
ஒரு படை பட்டாளமா ரஷ்யாக்காரன், சீனா, ஜப்பான் நிருபர்கள் எல்லாரும் வந்திருந்தா, இலவசமாகவே பறந்திருக்கலாம்.
அவளைத் திரும்ப அணைக்கச் சங்கரன் கை நீட்ட நழுவினாள். அறை நடுவில் நின்று மேலே லாஃப்டை அண்ணாந்து பார்த்தாள்.
மேலே இருந்து அந்த கேன்வாஸ் பையை எடுங்கோ.
எடுக்க வேண்டிப் போனது.
ஜாதகத்தில் எல்லாக் கட்டமும் மாறி இருந்து, தில்ஷித் கவுரைக் கல்யாணம் செய்திருந்தால் இப்படி ஸ்டூலில் நின்று புழுதியளைந்து கேன்வாஸ் பை எடுக்க வேண்டியிருக்காது. ஆனால் ஒயிட் லெக்கான் கோழி பிடிக்கவும், முட்டை சேகரிக்கவுமாகக் கணிசமாக அலைய வேண்டியிருக்கலாம்.
கவுத்துடாம எடுங்கோ உள்ளே என்னமோ வச்சிருக்கு.
வசந்தியின் பழைய மார்க் கச்சை, அரைத் துணி என்று கேன்வாஸ் பையில் அடைத்து இருந்தது சர்வமும் கீழே வழிந்தது.
என் உடுதுணி எல்லாம் லாலீன்னு எடுத்துப் போட்டாச்சா, பேஷ். வேறே எதாவது மிச்சம் இருக்கா?
உடம்பு வாடையோடு ஒரு சிவப்பு ஸ்வெட்டர்.
அவளுக்குக் கேட்டிருக்காது.
.
(தொடரும்)