புதிய நாவல்: அச்சுதம் கேசவம் அத்தியாயம் 38 இரா.முருகன்


ஏர்போட்டுக்கு நான் கூட்டிப் போறேன்.

கார் வைத்திருந்த எல்லா நண்பர்களும் சங்கரனை விமான நிலையத்துக்குக் கூட்டிப் போவதில் ஆர்வம் காட்டினார்கள்.

என் டிரைவரை வரச் சொல்றேன் உங்க வீட்டுக்கு. எப்பக் கிளம்பறேன்னு மட்டும் சொல்லு.

பிடார் ஜெயம்மாவுக்கு கார் ஓட்டத் தெரியாவிட்டாலும் சிநேகிதம் பெரிய விஷயம். அதுவும் சங்கரனை விட வசந்திக்கு ரொம்பவே வேண்டப் பட்டவள்.

வசந்தியும் சங்கரனும் விளக்கை எரிய விட்டுக் கொண்டு படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து, எல்லா வாய்ப்பு வசதிகளையும் அலசி ஆராய்ந்து, ஜெயம்மா சொன்னபடி கேட்பது என்று தீர்மானித்தார்கள்.

ஜெயம்மாவின் கார் வெளிநாட்டுக் கார். தூதரக அதிகாரி யாரோ ஸ்காட்லாந்தில் இருந்து கொண்டு வந்த காரை செகண்ட் ஹாண்ட் ஆக வாங்கியிருந்தாள் அவள். ஆகப் பெரிசு. உள்ளே, முன்னும் பின்னுமாக சின்னச் சின்னதாக மூணு ஃபேன் பொருத்தியிருப்பதால், காற்றோட்டமான வண்டி. கூடவே, அனுசரணையான டிரைவர்.

வெர்கீஸ் காரில் போகலாம் தான். ஆனால், பழக்கமான மலையாளி யாரையாவது வழியில் வைத்துப் பார்த்தால் தானே நின்று விடும் அந்தக் கார். ஜெயம்மா கார் அப்படி இல்லை. அவளைப் போல மாண்டியா அய்யங்கார் குடும்பம், சங்கரன் போல தமிழ் பிராமணர்கள் என்று பாதையில் தட்டுப்பட்டாலும் இந்தக் காருக்கு, நிற்கிற வழக்கமில்லை. போன வருஷம் இதே காரில் ஜெயம்மா குடும்பத்தோடு தில்லியில் இருந்து கிளம்பி, மைசூர் கடந்து பிடார் போய் சௌகரியமாகத் திரும்பி வந்திருக்கிறாள் என்பதால் கார் பற்றி நல்ல அபிப்பிராயம் தான் எங்கும்.

சங்கரனின் காலனியில் இருந்து சப்தர்ஜங் ஏர்போர்ட் போக ஞாயிற்றுக்கிழமை காலையில் பதினைந்து நிமிடம் கூடப் பிடிக்காது. ஒன்பதரை மணிக்குத்தான் தில்லி – மதராஸ் விமானம் அங்கிருந்து கிளம்பும்.

ஏழரை மணிக்கு நானே வரேன். டாக்சி அது இதுன்னு ஏற்பாடு பண்ணாதே.

ஜெயம்மா நேற்று ராத்திரி ஒரு தடவை வீட்டுக்கு நேரில் வந்து முன்னறிவிப்பு கொடுத்து விட்டிருந்தாள்.

விடிந்து ஏழு மணிக்கு உத்திரப் பிரதேச பால்கார பய்யா சைக்கிளில் பசும்பால் கொண்டு வந்து மணக்க மணக்க ஊற்றியதும் அந்தப் பரபரப்பான நாள் தொடங்கியது. வசந்தி தானும் சங்கரனும் முதல் டோஸாகக் குடிக்க டபரா செட் வழிய வழிய காப்பி.கலந்தாள். ஜெயம்மா வந்ததும் அவள் கூட உட்கார்ந்து மறுபடியும் காப்பி குடிக்க பாலும், டிகாக்ஷனும் தனித்தனியாக வைக்கப் பட்டது. பிளேனில் ரெண்டு தடவையாவது வீட்டுக் காப்பி குடிக்க ஒரு பெரிய தர்மாஸ் ப்ளாஸ்க் வழிய வழியவும் எடுத்து வைக்கப் பட்டது. மெட்றாஸில் இதை விட நல்ல காப்பி கிடைக்கும் என்பதால் இதற்கு மேல் காப்பிச் சுமை வேண்டாம் என்று முடிவு எடுக்கப் பட்டிருந்தது.

வசந்தி அப்பா மெஸ் சுந்தர வாத்தியார் முழுப் பயணத்துக்குமாக இட்லி கட்டிக் கொடுக்கிறேன் என்று முன் வந்தார். யாராவது மெட்ராஸுக்குக் காணாததைக் கண்ட மாதிரி இட்லியையும் எலிப் புழுக்கையையும் மூட்டை கட்டி எடுத்துப் போவார்களா என்ன? சங்கரன் வேண்டாம் என்று சொல்லி விட்டான். வசந்தி அது பாட்டுக்கு இருக்கட்டும் என்று சொன்னதால், காலை ஐந்து மணிக்கே இட்லிப் பொதி வந்து சேர்ந்திருந்தது.

ஏழரை மணி என்று விவித்பாரதி நேரம் சொல்லி சங்கீத் சரிதா நிகழ்ச்சிக்குக் கடந்தது.

ஜெயம்மா கார் காலனிக்குள் நுழையும்போதே பலமாக ஹார்ன் அடித்தபடி வந்தது. முதல் அபார்ட்மெண்ட் ப்ளாக் பக்கம் காக்கி டிரவுசர் அணிந்து வீர நடை பழகிக் கொண்டிருந்த வழுக்கைத் தலை, தொப்பை வைத்த ரெட்டை நாடி வயசர்கள் ஆச்சரியப்பட்டு ஒரு கணம் நின்று, உடனடியாகத் தேசத்தைச் சீரமைக்கப் புறப்பட்டுப் போனார்கள்.

காப்பியை முகமலர்ச்சியோடு வாங்கிய ஜெயம்மா கேட்டாள் –

மெட்றாஸில் இருந்து எங்கே பிரயாணம் வச்சிருக்கே?

ரயில்லே ஆலப்புழை. பஸ்ஸோ, டாக்சியோ பண்ணிண்டு அங்கே இருந்து பத்து மைல். அம்பலப்புழை. ஒரு நாள் முழுக்க அங்கே கோவில், வேம்ப நாட்டுக் காயல். முகம்மை. அப்புறம் ஹரிப்பாடு, நெடுமுடி, செங்கண்ணூர். முடிஞ்சு நேரே அரசூர். சரியா?

அங்கீகரித்துத் தலையை ஆட்டினாள் ஜெயம்மா. இதில் மதறாஸைத் தவிர வேறே எந்த ஊருக்கும் அவள் போனதில்லை என்றாலும் இந்தப் பெயர்களைக் கேட்ட மாத்திரத்திலேயே சந்தோஷம் மனதில் எழுந்து வந்திருந்தது.

மூன்று கேன்வாஸ் பைகள். ஒரு லெதர் பெட்டி. கன்னாட் ப்ளேசில் விலை அதிகம் சொன்னதால், சங்கரன் ஆபீசில் வேலை செய்கிற வீரேந்தர் பொகாலியா மூலம் வாங்கியது. பொகாலியாவின் குடும்பத் தொழில், பெட்டி செய்வது. கன்னாட் ப்ளேஸ் விலையில் பாதிக்கும் குறைவாக வாங்கிக் கொண்டு வீட்டிலேயே பெட்டியைப் போன வாரம் கொண்டு வந்து கொடுத்திருந்தான் பொகாலியா.

பெட்டி எவ்வளவு ஸ்ட்ராங்க் என்ற வசந்தியின் கேள்விக்குப் பதிலாகப் பெட்டியைக் கவிழ்த்துப் போட்டு அதன் மேல் நின்றும் காட்டினான் அவன். இன்று நடுநாயகமாக அந்தப் பெட்டிதான் துணிமணிகளோடு பறக்கத் தயாராக நடுவீட்டில் காத்திருக்கிறது.

கிளம்பலாமா?

கடைசி வாய்க் காப்பியை செப்பு டம்ளரைக் கவிழ்த்துக் குடித்தபடி பிடார் ஜெயம்மா சங்கரனைக் கிளப்பினாள். இந்த மாதிரிக் காபிக்காக தினசரியே சங்கரனும் வசந்தியும் கிழக்கே மேற்கே சூலம், எமகண்டம், ராகுகாலம் பார்த்துப் பிரயாணம் வைக்கலாம் என்றாள் ஜெயம்மா.

மினிஸ்டர் தான் தள்ளுபடி கூப்பனோடு சங்கரனுக்கு நித்யப்படிக்கு சேவை செய்யக் காத்திருக்கிறாரே.

ஜெயம்மா சிரிக்காமல் சொன்னாள்.

போகிற வழியில் கன்னாட் ப்ளேசில் பெட்ரோல் போட்டுக் கொண்டு போகலாம் என்றான் டிரைவர். கார் ஊர்ந்து வேகம் எடுத்தது.

இதுக்கெல்லாம் என்ன பிரதியுபகாரம் பண்ணப் போறோமோ.

வசந்தி கண்ணை விரித்து நிஜமாகவே மனசில் இருந்து சொல்ல, ஜெயம்மா அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டாள்.

இவன் இருக்கானே உங்காத்துக்காரன், லேசுப் பட்டவன் இல்லேடி வசந்தா. நியூஸ் ப்ரேக்னு என் கிட்டேயும் வர்கீஸ் கிட்டேயும் அவன் பூர்விக ஊர்லே சாவே கிடையாதுன்னு துப்பு கொடுக்கறான். நான் ஜூனியர்மோஸ்ட் ஜர்னலிஸ்டா பாத்து ரெயில்லே அனுப்பறதுக்குள்ளே, பிபிசிக்காரன் கிட்டே அது கட்டுக்கதைன்னு மினிஸ்டரைக் கையெழுத்துப் போட வச்சு ஹேண்ட் அவுட் நீட்டறான். அந்த மினிஸ்டரானா, உலக மகா தர்த்தி. இங்கிலீஷ்லே, நான் முட்டாள்னு அடிச்சு நீட்டினாக் கூட ஏன்னு கேக்காம ஜோராக் கையெழுத்து போட்டுடும்.

வசந்தியும் சேர்ந்து சிரித்தாள். நல்லவேளை ஜெயம்மா சங்கரனின் ஆபீஸ், தில்ஷீத் கவுர் என்றெல்லாம் ஆரம்பிக்கும் முன் வண்டி கன்னாட் ப்ளேஸ் பெட்ரோல் பம்பில் நின்றது.

இருபது லிட்டர் போட்டுக்கறேன்’மா.

டிரைவர் சொல்லியபடி இறங்க, ஜெயம்மா செய் என்று கை காட்டினாள்.

ஐம்பது ரூபாய் ஆகும் என்று சங்கரனுக்குத் தெரியும். டிரைவரோடு அவனும் காசு செலுத்த இறங்க, ஜெயம்மா அதட்டி உள்ளே உட்காரச் சொன்னாள்.

இதெல்லாம் என் செலவு. உனக்கு வேறே மாதிரி, வேறே நேரத்திலே செலவு வைக்கறேன். கவலைப் படதே.

நேரே ஏர்போர்ட் தானே மேடம்?

டிரைவர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே யாரோ பெட்ரோல் பம்ப் ஓரத்திலிருந்து வண்டியை நோக்கி வந்தார்கள்.

ஒட்டுக் கேட்டதுக்கு மன்னிக்கணும். நீங்க ஏர்போர்ட் போறதாக நினைக்கறேன். நானும் வரலாமா? இங்கே இன்னிக்குப் பார்த்து ஒரு டாக்சி கிடைக்கலை.

செயற்கைக் காலை ஊன்றிக் கொண்டு நிற்கிற வயோதிகர் ஒருத்தர் காரின் உள்ளே நிச்சயம் இல்லாமல் பார்த்தார். யார் கார் உடமையாளர் என்ற குழப்பத்தில் வந்த நிச்சயமின்மை அது.

ஆட்டோ கிடைக்குமே.

சங்கரன் கேட்க வாயெடுத்து சட்டென்று நிறுத்தினான். இந்தப் பெரியவர் இல்லையோ ஆபீஸ் வாசலில் சத்தியாக்கிரகம் செய்ய வந்து உட்கார்ந்தது?

அவரே தான். நினைவு துல்லியமாக இருக்கிறது. வேறு துறை மினிஸ்டர் ஒருத்தருக்கு அண்ணாவோ தம்பியோ. மதராஸியும் கூட.

கூட்டிப் போகலாம். அப்புறம் விவரம் சொல்றேன்.

பின் சீட்டில் இருந்த ஜெயம்மாவிடம் ரகசியமாகச் சொன்னான் சங்கரன். அவள் தலையசைக்க, கட்டைக் காலோடு கெந்திக் கெந்தி வந்து பெரியவர் முன் வரிசை ஜன்னல் ஓரமாக நின்றார். சங்கரனுக்கு அடுத்து அமர உத்தேசித்து சங்கரனைப் புன்சிரிப்போடு பார்த்தார். அந்த முகத்துக்குப் பழக்கமில்லாமலோ என்னமோ உடனே உதிர்ந்து போன சிரிப்பு அது..

இப்படி உட்கார்ந்தா சரியா இருக்குமா?

இருக்கும் என்று காலைச் சற்றே ஒடுக்கி இருந்தான் சங்கரன். இவர் எந்த நிமிஷமும் தமிழில் பேசலாம் என்று அவன் எதிர்பார்த்தான். காருக்குள் கனத்த மௌனம் ஒன்று நிலவியது. வந்தவர் தான் அதை உடைத்தார்.

நானும் காலையிலே சரியா ஆறு மணியிலே இருந்து நிக்கறேன். ஒரு டாக்சி, கூட இந்தப் பக்கம் வரலே.

அவர் புகார் செய்வது போல, பொதுவாகச் சொல்ல, வண்டியை ஸ்டார்ட் செய்தபடி டிரைவர் கேட்டான் –

சாப், நீங்க பாம்பேவாலே தானே?

எப்படிச் சொல்றே? அவர் ஆச்சரியப்பட்டதாக முகக் குறிப்பு காட்டினார்.

ஏ பாஜு, ஓ பாஜு, பரோபர், அப்பன் இதெல்லாம் இங்கே பேசறதில்லியே சாப்.

அவருடைய பம்பாய் இந்தியைச் சுட்டிக் காட்டிச் சிரித்தபடி வண்டியை முன்னால் செலுத்திப் போகும்போது அவன் மறக்காமல் சொன்னான் –

இன்னிக்கு காலையில் இருந்து திடீர் டாக்சி ஸ்ட்ரைக். லாரிக்காரங்களுக்கும் டாக்சிவாலேக்கும் சாந்தினி சௌக்கிலே ஜகடா.

பெரியவர் முகத்தில் நிம்மதி தெரிந்தது. காசு இல்லாமலோ, சோம்பல் பட்டோ காரில் லிஃப்ட் கேட்கவில்லை அவர் என்று அவர்கள் எல்லோருக்கும் உணர்த்தியாயிற்று.

மெட்றாஸ் ஃப்ளைட் பிடிக்கப் போறீங்களா?

சங்கரன் தமிழில் ஆமா என்றான்.

நான் பம்பாய் போயிண்டிருக்கேன்.

அவரும் தமிழுக்கு ஆசுவாசத்தோடு மாற, வசந்தி ஆச்சரியத்தோடு அவள் வழக்கப்படி கண்கள் விரியக் கேட்டாள் –

ஒரே பிளேனா பம்பாய்க்கும் மெட்ராஸுக்கும் போறது? அலைச்சல் ஆச்சே.

இல்லே கொழந்தே. இது ஹாப்பிங் சர்வீஸ். டெல்லி டூ நாக்பூர் டூ மதராஸ். நான் நாக்பூரிலே இறங்கி, டாக்சி, பஸ் பிடிச்சு பம்பாய் போயிடுவேன்.

அவர் வசந்தியைப் பார்த்துக் கனிவாகச் சிரித்தார். அவளிடம் ஒரு குழந்தைத் தனம் முப்பது வயசிலும் குரலிலும் முகத்திலும் கொஞ்சம் மிச்சம் இருப்பது நிஜம் என்று சங்கரனுக்குத் தோன்றியது. பெருமை தான் அவனுக்கும்.

வந்தாச்சு.

ஜெயம்மா அறிவிக்க, சப்தர்ஜங் விமான நிலையத்தில் கார் புகுந்து நின்றது. ஆள் அரவமே இல்லாத கட்டிடம். எல்லாக் கதவும் விரியத் திறந்து, விளக்கெல்லாம் எரிந்து கொண்டிருந்த அத்துவான வெறுமை அங்கே.

காரை ஓரமாக நிறுத்தி விட்டு எல்லோரும் உள்ளே போனார்கள். ஆளுக்கொரு மூட்டையாக எடுத்துக் கொள்ளச் சொன்னாள் ஜெயம்மா.

நீ அவரோட கித்தான் பையை எடுத்துக்கோ.

ஜெயம்மா டிரைவரிடம் பெரியவரைக் காட்டிச் சொன்னாள்.

வேணாம்மா, நானே வச்சுக்கறேன். ஏற்கனவே நிறைய கஷ்டம் கொடுத்தாச்சு.

வயோதிகரின் தோளில் மாட்டியபடி நடந்த கனத்த கான்வாஸ் பை தவிர அவருக்கு வேறெதுவும் மூட்டை முடிச்சில்லை.

வரிசையாக வலை அடைத்த ஜன்னல்களின் பின்னால் யாரும் இல்லை. காலடிச் சத்தம் கேட்டு உள்ளறையில் இருந்து ஒரு நடுவயதுப் பெண்ணும், கையில் வாரியலோடு இன்னொரு இளம் பெண்ணும் எட்டிப் பார்த்தார்கள்.

சாப் லோக் யாரும் இல்லையா?

டிரைவர் கேட்க, உள்ளே இருந்து வாயில் டபிள் பிரட் சாண்ட்விச்சை அடைத்துக் கொண்டபடி பருமனான ஒருத்தர் கையைக் காட்டினார். நான் உண்டு என்று அபயம் அளிக்கிற கை அது.

அவர்களை அங்கேயே நிற்கச் சொல்லி அடுத்த கையசைவு. கால் சராய் பையில் பிரிமணை மாதிரிச் சுருட்டி இருந்த கசங்கிய நீல டையை உதறி உத்தேசமாகக் கழுத்தைச் சுற்றி முடிச்சுப் போட்டபடி வந்தார்.

யாரெல்லாம் ப்ளைட்டுலே போறீங்க சார்?

ஏன், மேடம் எல்லாம் ப்ளேன்லே போக கவர்மெண்ட் தடையுத்தரவு இருக்கா?

ஜெயம்மா இடுப்பில் ரெண்டு கையையும் ஊன்றியபடி முறைத்துப் பார்த்து அழுத்தம் திருத்தமாகச் சொல்ல, அவளுடைய தோரணையைப் பார்த்து மிரண்டு போனார் ஏர்போர்ட் அதிகாரி.

தில்லியில் இந்த நிமிஷத்தில் மூச்சு விட்டபடி நூற்றுச் சில்லறை மந்திரிகள், உப மந்திரிகள், ராஜாங்க அமைச்சர்கள், அமைச்சர் அந்தஸ்தில் பதவி வகிக்கும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிப் பிரமுகர்கள், லோக்சபா மெம்பர்கள், ராஜ்ய சபா மெம்பர்கள், யாரையாவது எந்த ராஜ்ஜியத்திலாவது கவிழ்க்கக் கலந்தாலோசிக்க தேசத்தின் சகல மூலை, முடுக்கில் இருந்து வந்து குவியும் ஆண், பெண் அரசியல்வாதிகள்.

தூணைத் தட்டினாலும் அரசியல் பேசும் தலைநகரத்தில் இந்தத் தாட்டியான பெண்பிள்ளை யாரென்று தெரியாமல் விரோதம் வளர்த்துக் கொள்ள, அதுவும் உலகமே ஓய்வெடுக்கிற ஞாயிற்றுக்கிழமை காலையில் பசியாறிய பின்னர் அந்த அதிகாரி சற்றும் தயாராக இல்லை.

மேம் சாப், தாராளமாக மகாராணி போல உள்ளே வாங்க. மதராஸ் போகத்தானே?

ஜெயம்மா வசந்தியின் தோளில் தட்டி, நீதான் போறேன்னு சொல்லேன், வாயிலே என்ன கொழக்கட்டையா என்றாள்.

நானும் போறேன்.

சின்னச் சங்கரன் முன்னால் வந்தான். நானும் என்று கால விந்தியபடி வயோதிகரும்.

ஆக, தாட்டியான மேம் சாகிப் ஊருக்குப் போகக் கிளம்பி வந்து சண்டை வளர்க்க அலைகிறவள் இல்லை. தெரிந்திருந்தால் இன்னொரு சாண்ட்விச் சாப்பிட்டு விட்டே வந்திருப்பார் அதிகாரி.

சங்கரனிடமும் பெரியவரிடமும் விமான டிக்கட்டைக் காட்டச் சொல்லி மரியாதையோடு தயங்கி நின்றார்.

டிக்கட்டிலே சங்கரன்னு இருக்கற பேர்?

நான் சங்கரன், இது என் ஒய்ஃப் வசந்தி.

டிக்கட்லே பரமேஸ்வரன் நீலகண்டன்னு இருக்கறது?

நெஞ்சைத் தொட்டுக் காட்டினார் பெரியவர்.

இதிலே எந்த லக்கேஜை ப்ளேனுக்குள்ளே எடுத்துப் போகப் போறீங்க? எது பேகேஜ் ஆக ப்ளேன் கீழ்த் தளத்தில் அடுக்கி எடுத்துப் போகணும்?

இதென்ன கேள்வி, எல்லாம் கையோடு எடுத்துப் போறதுதான்.

வசந்தி தீர்மானமாகச் சொல்லியபடி சாப்பாட்டுப் பொதியைக் கையில் இறுகப் பிடித்துக் தூக்கிக் கொண்டாள்.

லக்கேஜ்லே ஏதாவது கத்தி, துப்பாக்கி, கூர்மையான ஆயுதம் வச்சிருக்கீங்களா?

சங்கரனும் பரமேஸ்வரனும் இல்லவே இல்லை என்றார்கள்.

பட்டாசு, தீப்பெட்டி இப்படி ஏதாவது லக்கேஜ்லே இருக்கா?

இதுக்கும் இல்லைங்கறது தான் பதில்.

சில வினாடிகளில் அந்தச் சடங்கு சகலருக்கும் திருப்திகரமாக முடிவடைந்தது.

அந்த ப்ளேனா?

சங்கரன் முன்னால் கை சுட்டினான்.

உள்ளே பெரிய மைதானத்தின் ஓரத்தில் சாதுவாக நின்று கொண்டிருந்தது சென்னை விமானம். வசந்தி வைத்த விழி வாங்காமல் அதையே பார்த்தாள். அதிகாரி புன்சிரிப்போடு அவளிடம் விளக்கினார் –

மேம்சாப், அது டக்ளஸ் டிசி மூணு விமானம்.

சகல பெருமையோடும் அதிகாரி சொல்லியபடி முன்னால் நடக்க, மற்றவர்கள் அவரைத் தொடர்ந்தார்கள். வயோதிகர் கடைசியாக வந்தபடி, மேலதிகத் தகவல் அளிக்கும் குரலில் கூறினார் –

டகோட்டா என்று நாங்க எங்க வட்டத்திலே சொல்வோம்.

எந்த வட்டம் என்று அவர் சொல்லவில்லை. யாரும் கேட்கவும் இல்லை.

சார், நீங்க ரெண்டு பேரும் இப்படி வாங்க.

எங்கிருந்தோ பிரத்யட்சமான போலீஸ்காரர் சங்கரனையும், பரமேஸ்வரனையும் பக்கத்தில் கூப்பிட்டார்.

சட்டைப் பையையும், கையில் வைத்திருந்த கான்வாஸ் பையையும் கை விட்டு அளைந்து விட்டு இரண்டு பேரையும் விமானத்துக்குப் போகச் சொன்னார் கான்ஸ்டபிள்.

என்னை சோதனை போட மாட்டாங்களா?

வசந்தி கேட்க, சும்மா வரமாட்டே என்றான் சங்கரன் அவசரமாக. இவள் சொன்னதைக் கேட்டுப் புதிதாக யோசனை உண்டாகி, சோதனை போடுகிறேன் பேர்வழி என்று அவள் முந்தானையைப் பிடித்து இழுத்து ரசாபாசமாகிப் போகக் கூடும் என்ற கவலை.

கையில் லக்கேஜோடு அந்தக் கோஷ்டி நடந்து விமானத்தை அடைந்தது.

அவ்வளவுதான். டாட்டா, பை பை.

டிராபிக் கான்ஸ்டபிள் மாதிரி கை விரித்து நின்று சொன்ன ஜெயம்மாவுக்கு பிரியாவிடை கொடுத்து விட்டுப் படியேறி உள்ளே போக இரண்டு வரிசையாக அமைந்த இருக்கைகளுக்கு முன்னால் இருந்தபடி வணக்கம் சொல்லி வரவேற்ற ஏர்ஹோஸ்டஸ் ஒரு வினாடி வசந்தியைக் கூர்ந்து பார்த்தாள்.

ஏய் நீ வசந்தி இல்லே?

வசந்தியின் கண்கள் இதற்கு மேல் இடம் இல்லாமல் முகம் பூராவும் விரிந்து நிற்க ஹோஸ்டஸைப் பார்த்துப் பூவாகச் சிரித்தாள்.

குளோரியா தாமஸ் தானே?

நீ வசந்தியே தான். இந்தக் கண்ணே சொல்லுது.

ஏர் ஹோஸ்டஸ் வசந்தியை இறுக அணைத்துக் கொண்ட அந்த நிமிடம் முதல் மொத்த விமானத்துக்குமே குத்தகை எடுத்தது போல் வசந்தி குரலில் மிடுக்கு வந்து சேர்ந்தது.

லேடி இர்வின் ஸ்கூல்லே நாங்க ஆறாம் கிளாஸ்லே இருந்து க்ளாஸ்மேட்.

வசந்தி பெருமையோடு சங்கரனிடம் சொன்னாள். சங்கரன் அமைச்சரக அதிகாரி என்பதையும் அதே பெருமையோடு குளோரியாவிடம் சொன்னாள் அவள்.

விமானத்தில் எண்ணி நாலு பேரே இருந்தார்கள். இவர்களை இனம் புரியாத ஆசுவாசத்தோடு அவர்கள் பார்த்தார்கள்.
ஏழு பேருக்காக பிளேன் பறக்குமா?

சங்கரன் குளோரியாவிடம் கேட்க, பரமேஸ்வரன் அவசரமாகப் பதில் சொன்னார் –

வடக்கே சூலம்னு யாரும் வரல்லேன்னா கிராண்ட் ட்ரங் எக்ஸ்பிரஸ் ஓடாம போயிடுமா, அது போலத்தான் சார்.

இவர் அக்கப்போரை இனி நாக்பூர் வரை தாங்க வேண்டும் என்று மனசில் பட சங்கரன் அமைதியாகத் தலையாட்டினான்.

ஜன்னல் ஓரம் உக்காரப் போறேன்.

வசந்தி அவசரமாக நகர, சங்கரன் தடுத்து நிறுத்தினான். ஏதாவது வரிசை முறை இருக்கும். நினைத்த இடத்தில் உட்கார்ந்து போக இதென்ன டவுன் பஸ்ஸா?

எங்கே வேணும்னாலும் உக்காரு. அங்கே வேறே யாரும் முன்னாடியே இருந்தா மடியிலே உக்காந்திடாதே. அது போதும்

குளோரியா சிரித்தபடி ஆரஞ்சு ஜூஸ் எல்லோருக்கும் விளம்ப, சங்கரன் முகத்தைச் சுளித்தான். அதென்ன, வசந்தி இன்னொரு தடியன் மடியில் உட்காருவதாவது. அவன் எதற்கு இருக்கான்?

டேக் ஆஃப் ஆகப்போகுது. கொஞ்சம் ஜெர்க் இருக்கும். கவலைப் படாதே.

குளோரியா சொல்லாமல் இருந்திருக்கலாம். வசந்தி ஒரேயடியாகப் பயந்து போனதை முகம் காட்டியது.

குளோரியாவும் இன்னொரு ஹோஸ்டஸும் ஒவ்வொரு பிரயாணிக்கும் சீட் பெல்ட் போட்டுக் கொள்ள உதவினார்கள். வேண்டாம் என்று மறுத்து தானே போட்டுக் கொண்ட ஒரே நபர் கன்னாட் ப்ளேஸ் பெட்ரோல் பம்பில் சங்கரனோடு ஒட்டிக் கொண்ட பெரியவர் பரமேஸ்வரன் நீலகண்டன் தான்.

விமானம் ரன்வேயில் ஓடி மேலே கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து டேக் ஆஃப் ஆனபோது, குளோரியா வசந்தி பக்கத்து இருக்கையில் இருந்து அவளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டாள்.

பரமேஸ்வரன் தன் பக்கத்து இருக்கையில் இருந்த வங்காளி கனவானோடு ஈடுபாட்டோடு பேச ஆரம்பித்தார். அவரும் நாக்பூரில் இறங்கப் போகிறார் என்று தெரிந்தது காரணமாக இருக்கலாம்.

நடுவயதில், கிட்டத்தட்ட ஆறரை அடி உயரமாக, ட்வீட் பேண்டும், கால்சராய் உள்ளே செருகாத நல்ல வெள்ளைச் சட்டையும், ஷெல் ப்ரேம் மூக்குக் கண்ணாடியுமாக அந்த வஙகாளி கனவான் முகத்தில் அறிவுஜீவிதக் களை இருந்ததை பக்கத்துச் சிறகில் இருந்த சங்கரன் கவனித்தான். இது பொதுவாக எலலா வங்காளிகள் முகத்திலும் அபரிமிதமாகத் தட்டுப்படுவது. அர்பிந்தோ, தாகூர், பொங்கிம் சந்த்ரா, ரொபிஷங்கர், பிஜோயா முகர்ஜி, கல்பனா தத் என்று வரிசையாக வங்காளத்து மேதைகளின் பெயர்களை உதிர்த்து அடுக்கி எதையோ எப்போதும் நிறுவப் பார்க்கிற அவசரம் அவர்களிடம் வியாபித்திருக்கும்.

ஆனால் இந்த வங்காளி அளந்துதான் பேசினார். வாயைத் திறக்கும் போது தெரிந்த எனாமல் இல்லாத பற்களும் பெரிய நரை மீசையும், நரைத்த புருவங்களும் அவருக்கு புகைப்பட நெகட்டிவ் களையைக் கொடுத்தன. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி என்று யூகித்தான் சங்கரன். மேஜர் ரொபீந்தர் பாந்தோபாத்யாயா என்று பெரிய எழுத்தில் பெயர் எழுதி, மேலே திறந்த லாஃப்டில் வைத்திருந்த நீளப் பெட்டி அதை ஊர்ஜிதம் செய்தது.

அடிக்கடி கோட் பாக்கெட்டில் இருந்து அவர் எதையோ எடுத்து முகத்தில் அழுந்தத் துடைத்துக் கொண்டதைப் பார்த்த வசந்தி என்னவாக்கும் என்று கேட்டாள் ஏர் ஹோஸ்டஸ் தோழியிடம். ஆரஞ்சு தோல் என்று கிசுகிசுப்பாக, முன்பாரம் பின்பாரம் சிரிப்பு சேர்த்துச் சொன்னாள் அவள். முகம் எண்ணெய் வடியாமல் இருக்க உதவி செய்யுமாம். உனக்கும் கொஞ்சம் வாங்கித் தரட்டா என்று கேட்டு இன்னொரு சிரிப்புச் சரம் உதிர்த்தாள் குளோரியா தாமஸ்.

அவள் மட்டும் வசந்தியின் தோழியாக இல்லாமல் இருந்தால் சங்கரன் ஓரப் பார்வை, நேர்ப் பார்வை, கோணல் பார்வை, தூரப் பார்வை, கிட்டப் பார்வை என்று தோலோடு ஆரஞ்சாக அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கியிருப்பான்.

குளோரியா பிஸ்கட்டும் சாயாவும் எல்லோருக்கும் விளம்பினாள்.

அகோரப் பசிக்கு நாலு பிஸ்கட்டெத் தின்னா சரியாயிடுமா?

வசந்தி கேட்டது சங்கரனுக்குப் பிடித்திருந்தது. ஆமா, இப்படிக் கொள்ளையாகக் கொட்டி வாங்கிக் கொண்டு பிஸ்கோத்தைக் கொடுத்து ஒப்பேத்துகிறது என்ன நியாயத்தில் சேர்த்தி? அவன் சலுகைக் கட்டணத்தில் வந்திருக்கிறான் தான். அதுவே இருநூறு ரூபாய் சொச்சம். இவ்வளவு கொட்டிக் கொடுத்து பசியோடா பறப்பது?

வசந்தி டிபன் மூட்டையை அவிழ்த்தாள், மறக்காமல் குளோரியாவையும் கூப்பிட்டுக் கொண்டாள். இட்லியும், தோசையுமாக காலை உணவு முடியத் தூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது சங்கரனுக்கு. வசந்தி உறங்கி விட்டிருந்தாள்.

பரமேஸ்வரன் வங்காளி ராணுவ மேஜரோடு, நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார்.

லாவணியிலே என் வீட்டுக்காரி இன்னிக்கும் நம்பர் ஒன் ஆர்ட்டிஸ்ட். பென்ஷனை நிறுத்திட்டாங்க. போராடிட்டு இருக்கேன். வெளிநாடு விசா கேட்டிருக்கேன். ஆப்ரிக்காவிலே தான். சீக்கிரம் கிடைக்கப் போகுது. அப்புறம் இந்த பென்ஷனைப் பத்தி கவலையே பட மாட்டேன். யாருக்கு வேணும் பிச்சைக் காசு.

காதில் விழுவதைக் கேட்டபடி, என்ன என்று மனதைச் செலுத்தாமல், சீட் பெல்ட் இடுப்பில் இறுக்கத் தூங்கினான் சங்கரன்.

ஒரு நிமிடம் இடையே விழித்தபோது மேஜர் குரல் தெளிவாகக் கேட்டது.

ஜப்பான்காரன் சிங்கப்பூர்லே எங்களுக்கு தண்ணி சப்ளை நிறுத்திட்டான். கார் பேட்டரிக்கு வச்ச டிஸ்டில்ட் வாட்டர் குடிச்சு, பல் எனாமல் எல்லாம் போயிடுச்சு. மினரல் இல்லே பாருங்க. அதனாலே தான்.

திரும்பத் தூக்கத்தில் அமிழ்ந்து கார் பேட்டரிக் கடைக்குள் சங்கரன் படியேறியபோது
மைக்ரோபோனில் குளோரியா குரல் –

நாக்பூர் விமானத் தளத்தில் இறங்கிக் கொண்டிருக்கிறோம். இங்கே விமானத்துக்கான பெட்ரோல் நிரப்பவும், ஏர் மெயில் கடிதங்களை எடுத்துக் கொள்ளவும் விமானம் இருபது நிமிடம் நிற்கும். மதராஸ் போகும் பயணிகள் விமானத்திலேயே அமர்ந்து இருக்கவும். நாக்பூரில் இறங்கும் பயணிகள் கதவு திறந்ததும் இறங்கலாம். எங்களோடு இந்த விமாத்தில் பறந்ததற்காக நன்றி செலுத்துகிறோம்.

மேஜர் பாந்தோபாத்யாயா குளோரியாவை அருகில் கூப்பிட்டார்.

இங்கே இருந்த மதராஸி பெரியவர் எங்கே?

விமானத்தின் பின் இருக்கைகள், கழிப்பறைகள், விமான ஓட்டிகள் இருக்கும் இடம் என்று ஒரு இடம் விடாமல் தேடினார்கள். விமானம் வேகம் குறைந்து ரன்வேயில் ஓடி நின்றது.

பரமேஸ்வரன் நீலகண்டனைக் காணோம்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன