விடியும் நேரத்தில் சங்கரன் அரசூருக்கு வந்தான்.
வீடு பூட்டி இருந்தது. மருதையன் மாமா வாக்கிங் போயிருப்பார்.
வசந்தியின் கைப்பையைத் திறக்கச் சொல்லி சாவியை வாங்கிக் கதவைத் திறந்தான் அவன். சதா சுத்தமாக வைத்திருந்து, எப்போது வந்தாலும் உடனே குடித்தனம் நடத்தத் தயாராக வீடு. கூடத்தில் ஊஞ்சல், மாடப்புரையில் அகல் விளக்கு, உள்ளறையில் முகம் பார்க்க உயரமான நிலைக் கண்ணாடி, ரேழியில் கடியாரம் என மனதுக்கு இதமாக நிறையும் இல்லம். மருதையன் மாமாவுக்கு எல்லா நன்றியும் நமஸ்காரமும் உரியதாகட்டும்.
எப்போதோ வந்தபோது சங்கரன் கொண்டு வந்திருந்த நூதன் ஸ்டவ் புதுக்கருக்கு இன்னும் அழியாமல் மண்ணெண்ணெய் நிறைத்து சமையல்கட்டு மேடை மேல் ஆரோகணித்திருந்தது. காப்பி டீகாஷனும் பில்டரில் உண்டு.
பால் மட்டும் வாங்கிட்டு வந்துடுங்கோ. ரெண்டு நிமிஷத்தில் பில்டர் காப்பி ரெடி.
வசந்தி துரத்தினாள். பால் வாங்க, தூக்குப் பாத்திரத்தோடு தெருவில் நடக்க ரம்மியமாக இருந்தது.
வழக்கமான மந்த கதி மாறித் தன் போக்கில் ஊரே உற்சாகமாக இருந்ததைக் கவனித்தான் சங்கரன்.
கடைத்தெருவில் பால் பண்ணை உண்டு. அங்கே பால் வாங்கி வரலாம் என்று திரும்பியபோது கூடப் படித்த தியாகராஜ சாஸ்திரி அகஸ்மாத்தாகக் கண்ணில் பட்டார்.
பேஷ் இப்படித்தான் ஆறு மாசத்துக்கு ஒருக்க வந்துட்டுப் போகணும். ரொம்ப சந்தோஷம்’பா.
தியாகராஜன் சிநேகிதனைத் திரும்பவும் பார்த்த சந்தோஷத்தில் சொன்னது மட்டுமில்லை, தான் சைக்கிளில் வேகுவேகுவென்று போய்க் கொண்டிருந்த காரியத்தைக் கொஞ்சம்போல் ஒத்தி வைத்து சங்கரன் கூடவே நடக்க ஆர்வமாகக் கூடவே வந்தார். ஊர் உற்சாகம் அவருக்கும் தொற்றியிருந்தது.
அவசர வேலையாப் போய்ட்டிருக்கே போலேருக்கே. நான் குறுக்குலே விழுந்து கெடுத்துட்டேன்னு வேணாம்.
மரியாதைக்கு சங்கரன் தடுத்தான்.
அட, தலை போற வேலை இல்லேடா. சமித்து தீந்து போயிண்டிருக்கு. ஃபேமிலி வாத்தியார்னு கணபதி ஹோமத்துக்குப் போய் நிக்கும்போது சமித்தும் பவித்திரமும் மத்ததும் வாத்தியார் பொறுப்பாச்சே. கிரகஸ்தனுக்கு தட்சிணையும், ஒரு டம்ளர் காப்பியும், அரை நாள் ஆபீஸ் லீவு சாங்க்ஷனும் தவிர வேறே என்ன கவலை?
சரிதான் என்று ஆமோதித்தபடி தெருவில் கூடுதல் நடமாட்டத்துக்கான காரணம் கேட்டான் சங்கரன்.
சங்கரா, இன்னிக்கு பூத்திருவிழா.
சாஸ்திரி சொல்லி விட்டு சைக்கிளை ஜாக்கிரதையாகப் பிடித்து கொஞ்சம் உந்தி ஏறினார். விண்கப்பல் ஏறுகிற வாலண்டினா தெரஷ்கோவா கூட இவ்வளவு சீரியஸாக வண்டி ஏற மாட்டாள் என்று சொல்லத் தோன்றியது சங்கரனுக்கு. வேணாம். அந்தப் பெண் சோவியத்காரி. தேசப் பெயரைக் கேட்டதுமே சாஸ்திரி எகிறி வண்டி குடை சாயலாம்.
தூக்குப் பாத்திரத்தில் பசும்பால் வழிய வழிய மேலே வாழையிலை நறுக்கை வைத்து மூடி வாங்கிக் கொண்டு நடக்க, சங்கரன் மனதில் ஒரு சின்ன சந்தோஷம் மின்னி மறைந்தது. இங்கே பிறந்து இங்கேயே குழந்தையாகத் தவழ்ந்தும் புரண்டும் நடந்தும் இருந்து அப்புறம் அயல் பூமிகளைத் தேடிப் போன எல்லோருக்குமே விழாக்களும் பண்டிகைகளும் சக மனிதர்களும் தானே மனசில் கதவு திறக்கும் தாழ்ப்பாள்கள்.
கிழவன் உதடு சிவப்பாக மின்ன ஆரஞ்சு மிட்டாய் சாப்பிடுகிற சந்தோஷம் மாதிரி இது. சிரிக்கவோ எள்ளவோ இதில் என்ன இருக்கு? எல்லாருக்கும் வயோதிகம் வரும். வரும்போது ஆரஞ்சு மிட்டாயும் இருக்கும்.
இன்னிக்கு சிவராத்திரி தான்.
வசந்தி உள்ளூர றெக்கை கட்டிப் பறந்த சந்தோஷத்தை ஜாக்கிரதையாக மறைத்தபடி சீண்டினாள் –
அங்கங்கே போறபோது நீங்க அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர்லே கையெழுத்து போடறது இப்படித்தானா?
ஏய் அதை இல்லே என்று ஆரம்பித்தவன், இல்லை என்பானேன், அது பாட்டுக்கு அது என்று மனதில் பட, அவளிடம் அன்பாகச் சொன்னான் –
இன்னிக்கு ஊரிலேயும் திருவிழா தான். பூத்திருவிழா. ஊர் எல்லையிலே குழந்தைவயல் மாரியம்மன் இருக்கா. அவளுக்கு வருஷம் ஒரு முறை ஜனங்கள் சகல விதமான பூவையும் தட்டுத் தட்டா ரதத்திலே வச்சு எடுத்துப் போய் பூச்சொரிவாங்க.
பூச்சொரியறதுன்னா?
மழை மாதிரி கூடை கூடையா பூவை அம்மன் விக்ரகத்துக்கு மேலே கவிழ்க்கறது. சப்பரம் சப்பரமா சிவன் கோவில்லேயோ பெருமாள் கோவில்லேயோ வாடகைக்கு வாங்கி தட்டி வச்சு அலங்காரம் பண்ணி உள்ளே கூடை, முறம், குடலைன்னு மணக்க மணக்க பூவை நிறச்சு வச்சு ஊர்வலமாப் போவாங்க. நாகசுவரம், மேளம், கச்சேரி, நாடகம், சினிமான்னு ராத்திரி முழுக்க அமர்க்களப்படும். எல்லா ரதமும் குழந்தைவயலுக்குப் போய்ச் சேரும்போது விடிஞ்சிண்டிருக்கும். அப்போ தான் பூச்சொரிதல்.
சங்கரன் பூவாசனை அடிக்கும் பழைய நினைவுகளில் மூழ்கியபடி சொன்னபோதே மனதில் நிச்சயப்படுத்திக் கொண்டான். இந்த ராத்திரி வயசை ஆகக் குறைத்து சின்னப் பையனாக இந்தத் தெருக்களில் மீண்டும் அலைந்து திரிய வேண்டும். ஆரஞ்சு மிட்டாய் சாப்பிடுகிற சந்தோஷம் தடங்கல் இன்றிக் கிடைக்கட்டும்.
கையில் ராமன் வில்லோடு வருகிற மாதிரி இடது கையில் நிமிர்த்திப் பிடித்த ஒரு புடலையும் வலது கரத்தில் தாழத் தொங்கிய துணிப்பையில் இருந்து எட்டிப் பார்க்கும் கீரையுமாக மருதையன் மாமா தெருக் கோடியில் தள்ளாடித் தள்ளாடி வருவதைப் பார்த்தபோதே சங்கரனுக்குக் கண் நிறைந்து போனது.
அப்பாவையும், அம்மாவையும் பகவதிப் பாட்டியையும் ஒரு சேர அவரில் பார்த்தான் சங்கரன்.
மாமா உள்ளே கூடத்திலே உட்கார்ந்தாத் தான் காப்பி. மாடிக்கு எல்லாம் எடுத்து வரமுடியாது.
வசந்தி பிடிவாதமாகச் சொல்லி விட்டாள். மருதையனை வீட்டுக்குள் வரவழைக்க அவளுடைய தந்திரம் அது.
அட என்ன புள்ளே, சின்னப் பையனா நானும் உங்க மாமனார் சாமாவும் வீடு முழுக்க விழுந்தடிச்சு ஓடியிருக்கோம். இன்னொரு தடவை ஓடச் சொல்லாத கிழவனுக்கு மூச்சு முட்டுது.
மீசையை நீவிக் கொண்டு சிரித்தார் அவர்.
மாட்டேன் என்று மருதையன் மாமா விடாப்பிடியாக நின்றாலும் வசந்தியின் பிடிவாதம் தான் கடைசியில் ஜெயித்தது.
தெரிந்திருந்தால், ஒரு அடி எடுத்து வைத்தாலும் கால் வீங்கிப் போகிறது, சமையல்கட்டிலேயே வைத்துத்தான் சாப்பாடு பரிமாற முடியும் என்று சங்கரன் அவளை இன்னும் கூடுதலாக அடம் பிடிக்கச் செய்திருப்பான்.
மாவடு ஊறுகாய் ஜாடியைக் கிளறும் போது எழும் மணத்தை நுகரந்தபடி சமையல்கட்டுத் தரையில் உட்கார்ந்து பழைய சோறு சாப்பிடும் அனுபவம் அவனுக்குள் அழிக்க முடியாதபடி அப்பியிருக்கிறது.
வாசலில் யாரோ வந்து நிற்க நிழலாடுகிறது.
புது வழுக்கை விழ ஆரம்பித்த காப்பிக்கொட்டை நிற முழுக்கைச் சட்டைக்காரர். கழுத்தில் வைத்த கைக்குட்டை மதிப்பைக் குறைக்கிறது என்பதை உணர்ந்தவராகத் தெரியவில்லை. கூட நிற்கிற இரண்டு பேரும் கோர்ட் கீழ்நிலை உத்தியோகஸ்தர்கள்.
வந்தவர் சங்கரன் கையில் ஒரு எலுமிச்சம்பழத்தைக் கொடுக்க எதற்கு என்று தெரியாமல் பார்த்தான் அவன்.
என்னப்பா, சர்பத் போடணுமா?
மருதையன் மாமா காப்பியை ருசித்தபடி கேட்டார்.
உங்களுக்கு இல்லே சார். நாத்தழும்பேறிய நாத்திகர் நீங்க.
வழுக்கைத் தலையர் அழுத்தந் திருத்தமாகச் சொல்லி அவர் சொன்னது அவரையே கவர, மறுபடி அதையே நீட்டி முழக்கினார். ஆஹா ஆஹா என்று அடிப்பொடிகள் ஆர்பரித்துக் கூவினார்கள்.
என்ன வேணும்?
சங்கரன் கண்டிப்போடு கேட்டான். அந்த மத்திய சர்க்கார் அதிகாரி தோரணைக்கு முன்னால் அவர்கள் நாக்கு எழும்பவில்லை.
ஒரு நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து நீட்டினார் வந்தவர். தினசரி ராமாயணம் பிரவசனம் செய்யும் பஞ்சாபகேச சிரௌதிகளுக்கு கதா சாம்ராட் பட்டமும் பணமுடிப்பும் அளிக்கும் விழா. நிதி மிகுந்தவர் நூறும் இருநூறும் தாரீர் என்று போட்ட பிட் நோட்டீஸ்.
சாயங்காலப் புண்ணியம் சேர்க்க வருக அரசூரே.
நோட்டீஸ் கீழே அடித்ததைக் காட்டிச் சங்கரன் என்ன விஷயம் என்று கேட்க, சாயந்திரம் நடக்கிற கதாபிரசங்கம் என்றான் அடிப்பொடி ஒருத்தன்.
அது வருடக் கணக்காக காலையில் நடக்கிற விஷயமில்லையோ?
அப்படித்தான் இருந்ததாம். இப்போது நாலு மாசமாக, ஆபீஸ் போகிறவர்களின் சௌகரியத்தை உத்தேசித்து ராத்திரி ஏழு மணிக்கு தினசரி கதை சொல்கிறாராம். காலத்தோட, ஊரோட நாமும் மாறினா தப்பில்லே தானே.
ஆகவே, சார் இன்னிக்கு சாயந்திரம் எங்களை கவுரவப்படுத்த வேணும்.
இன்னிக்கு பூத்திருவிழா இருக்கேப்பா.
சங்கரன் ஞாபகப் படுத்த, நம்மளவருக்கான கொண்டாட்டம் இல்லையே அது என்றார் வழுக்கைத் தலையர்.
நாஸ்திகன் எனக்கே திருவிழா இருக்கு, உங்கள்லே என்னய்யா நம்மளவர், அயல்காரர்.
மருதையன் சொல்ல, அடிப்பொடிகள் சண்டைக்குத் தயாராக முன்னால் வந்தார்கள். சங்கரனின் முறுக்கிய இருப்பைப் பார்த்து விட்டு அவசரமாகப் பின்வாங்கினார்கள்.
நேரம் சரியில்லே அப்புறம் வரோம் சார்.
அவர்கள் கிளம்ப, மருதையன் சிரித்தார்.
இன்னிக்கு கலெக்ஷன் டைம். போனவாரம் முழுக்க ஒரு தந்தியை ஒவ்வொருத்தராக் காட்டிட்டு திரிஞ்சிட்டிருந்தாங்க.
என்ன டெலகிராம் மாமா அது?
சங்கரன் விசாரித்தான்.
பஞ்சாபகேசன் பத்து நாள் மெட்ராஸ் போயிருந்தார். மழை வர்றதுக்கு யாகமாம். நூறு அந்தணர்கள் பொறுமையா உட்கார்ந்து நெய்யைத் தீயிலே விட்டு வருணனைக் கூப்பிடுவாங்களாம்.
சிரௌதிகளும் அதுலே ஒருத்தரா?
இல்லையாமே. வேறே ஒருத்தருக்கு அசிஸ்டெண்டாம். அவர் போட்மெயில்லே மெட்றாஸ் போய்ச் சேர்ந்ததுமே அரைவ்ட் ஸேஃப்-ன்னு தந்தி அடிச்சுட்டார். அதை ஊரெல்லாம் காட்டிக்கிட்டுத் திரிஞ்சாங்க. அவ அவ, வாலண்டினா தெரஷ்கோவா மாதிரி பொண்ணுங்க உபகிரகத்திலே வாரக் கணக்கா உலகத்தைச் சுத்தறபோது கூட அலட்டிக்கலே. இங்கே இருக்கற மெட்றாஸ் போனதுக்கு என்னய்யா அரைவ்ட் ஸேஃப்னு கேட்டேன் ஓடிட்டானுங்க.
மாமா ரசித்துச் சிரிக்க, சங்கரனும் அதில் கலந்து கொண்டான்.
அது சரி, எதுக்கு தந்தியை தண்டோரா போடணும்?
சங்கரன் புரியாமல் கேட்டான்.
அதுவா, இவங்க அதை ஊர்லே கண்ணுலே படறவன் எல்லார் கிட்டேயும் காட்டி, பெரியவருக்கு மெட்றாஸ்லே சுவர்ண புஷ்பம், வெங்கல புஷ்பம், செப்பு புஷ்பம், நிக்கல் புஷ்பம் எல்லாம் காலடியில் வச்சு மரியாதை பண்றாங்க. ஒரு வாரம் கதை கிடையாது. நல்லபடியா அவர் திரும்பி. வந்து திரும்ப ஆரம்பிக்கற நேரத்திலே இங்கேயும் எல்லா புஷ்பமும் கால்லே கொட்டணும்னு அலைஞ்சாங்க.
இவங்க நோக்கம் காசு தெண்ட வந்திருக்கறது. தெரிஞ்சு தான் உடனடியா திருப்பி அனுப்பி வச்சேன் மாமா என்றான் சங்கரன்.
பாவம், நீ பத்து ரூபாயாவது கொடுத்திருக்கலாம். எதையும் எதிர்பார்க்காம தினசரி கதை சொல்லிட்டிருக்கார். அப்புராணி மனுஷர்.
மருதையன் மாமா சேம் சைட் கோல் போட்டார். அவர் குரலில் வெறுப்போ தணிந்த கோபத்தின் சுவடோ இல்லை என்பதைப் புன்சிரிப்போடு சங்கரன் கவனித்தான்.
வேறே காலத்து மனுஷர்கள். வேறே காலத்து சிந்தனைகள். ஆனாலும் வாலண்டினா தெரஷ்கோவா இங்கேயும் வந்து சேர்ந்திருக்கிறாள்.
ஒரு சிட்டிகை எண்ணெய் கூட விடாமல் இளம் சூட்டில் வதக்கிய புடலை, கீரை மசியல், இஞ்சித் துவையல், தக்காளி ரசம் என்று குழைய வடித்த சாதத்தோடு வசந்தி பரிமாற, மருதையன் மாமா, பகவதியம்மா ஞாபகம் வருது என்று கண் கலங்கினார்.
இவர் மட்டும் வரச் சம்மதித்தால், தில்லியில் கொண்டு போய் வைத்து கண்ணே போல் காத்து சிஷ்ருசை செய்ய சங்கரனும் வசந்தியும் தயார் தான்.
அவரை ஊஞ்சலில் பிடிவாதமாகப் படுக்க வைத்து தலைக்கு உசரக் கட்டைப் பலகை வைத்தான் சங்கரன். மாமாவுக்கு இந்த் ஊஞ்சல் மேல் இருந்த பிடிப்பு அவனுக்குத் தெரியும்.
ஊமை வெய்யிலும் மேற்கிலிருந்து சீரான காற்றுமாகப் பகல் கடந்து போக, சாயந்திரம் ஊர்ந்து வந்த போது தெப்பக்குளக் கரையில் உட்கார்ந்தபடி சங்கரன் தூரத்தில் சிவப்பு தீற்றிக் கொண்டு சூரியன் அஸ்தமிப்பதில் லயித்திருந்தான்.
குளித்து விட்டு பட்டையாகச் சிவப்புக் கரை போட்ட எட்டு முழ வேட்டியும், கதர்ச் சட்டையுமாக வெளியே கிளம்பினான். காலில் செருப்பு நுழைத்துக் கொண்டிருக்கும்போது பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் வசந்தி.
நீயும் வாயேன்.
வசந்தி அவன் காதோடு சொன்னாள் – அலைச்சல்லே கொஞ்சம் அதிகமாயிடுத்து. ஒரேயடியா ஊத்தறது.
சங்கரன் பதறிப் போய் டாக்டர் கிட்டே கூட்டிப் போறேன். எனக்கு வேண்டிய டாக்டர், மூணு தலைமுறையா டாக்டர்கள் வம்சம், நல்ல கவனிப்பு என்றான்.
இதெல்லாம் உங்க டிபார்ட்மெண்ட் இல்லே. கையோட மாத்திரை கொண்டு வந்திருக்கேன். போட்டுண்டு, அசதி தீரக் கொஞ்சம் தூங்கினா சரியாயிடும்.
ராத்திரிக்கு வேணா நானும் மாமாவும் வெளியே சாப்பிட்டுக்கறோம்.
சங்கரனுக்கு உள்ளபடியே வசந்தி அக்கடா என்று பிக்கல் பிடுங்கல் இல்லாமல் உட்காரட்டும் என்று இருந்தது. அதோடு கூட, மனோகரன் சப்பாத்தி ஸ்டால் பெஞ்சில் உட்கார்ந்து விதவிமான சப்பாத்தியாகச் சாப்பிடலாமே என்ற நப்பாசை.
பல் எண்ணிக்கை முன்னே பின்னே தான் இருக்கிறது. என்றாலும், கூடுதலாக அசை போட்டு மென்றாவது, காரமான காய்கறிக் கூட்டோடு ஸ்டாலில் சப்பாத்தி சாப்பிட மருதையன் மாமாவுக்கு இஷ்டம் அதிகம்.
உனக்கும் சுடச்சுட வாங்கிண்டு வரேன். வந்ததுக்கு அப்புறம் சின்னதா ஒரு ரவுண்ட் போகலாம்.
நைச்சியமாகச் சொல்லியபடி சங்கரன் இறங்கும்போது மாடியை நிமிர்ந்து பார்த்தான். இன்னும் ராத்திரி இருட்டு நுழையாவிட்டாலும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மாமா படித்துக் கொண்டிருக்கிறார். கூட வரச் சொல்லிக் கூப்பிட்டலாம் தான். வரமாட்டார். காலையில் போகிற வாக்கிங்கே கொஞ்சம் சிரமத்தோடு தான் போயாகிறது.
சங்கரனின் கால் அவனைக் கடைவீதிக்கு இழுத்துக் கொண்டு போனது. தெருவும் சூழ்நிலையும் முழுக்க மாறி இருக்குமோ என்று சந்தேகம். மாறக் கூடாது என்று மனது கடந்து போன பழசைக் கொண்டாடப் பிடிவாதம் பிடித்தது.
இந்த ஊரை எந்த சம்பவமும், எந்தத் தகவலும், எந்த மனுஷனும் நெம்புகோலாகக் குத்தி அசைத்து இலக்கும் வேகமும் நிர்ணயித்து உருண்டோட வைக்க முடியாது. முன்னூறு வருஷம் முந்திய பழமைக்கு சாட்சி சொல்லியபடி, ராஜாவும், ராணியும், அரண்மனையும், புகையிலைக் கடையும், கடைத் தெருவும் என ஏதேதோ பழைய ஞாபகங்கள். செம்மண் கரைத்து அலையடித்து அசையும் ஊரணித் தண்ணீரும் காற்றும் அவற்றின் சிதறல்களைக் கிரகித்துக் கொண்டிருக்கும். அவை மேலே படிந்து உறைய, அரசூர் கால வெள்ளத்துக்கு முதுகையும் அவ்வப்போது முகத்தையும் காட்டியபடி அசைந்து கொடுத்து நீடிக்கிறது.
எதுவும் மாறவில்லை. அதே வாணியர் கடை, ஜவுளிக் கடை, மருந்துக் கடை, பேப்பர்க் கடை, உரக் கடை. இரண்டு, மூன்று தலைமுறைகள் இங்கே உட்கார்ந்து தேய்த்துப் போன அதே நாற்காலிகளில் இந்தத் தலைமுறையின் பிருஷ்டங்கள் வீற்றிருக்கின்றன.
புகையிலைக் கடை மட்டும் போன தலைமுறையோடு போய் விட்டது. அது இருந்தால் சங்கரன் இதே வேட்டியும் மேலே பாப்ளின் சட்டையும் காதில் காப்பியிங் பென்சிலுமாக கல்லாப் பெட்டியடியில் உட்கார்ந்து வியாபாரம் செய்து கொண்டிருப்பான். வசந்தி? அவள் என்ன பகவதிப் பாட்டியா, தாத்தா கைப் பிடித்த மாத்திரம் அரசூருக்கு ஓடி வர. வசந்தி வசதியாக டில்லியில் வேறொரு மத்திய சர்க்கார் உத்தியோகஸ்தனுக்கு வாழ்க்கைப்பட்டு பிள்ளை குட்டியோடு இருந்து, சப்பாத்தி தட்டிக் கொண்டிருப்பாள். விட்டுத் தள்ளு. அதெதுக்கு?
கோனார் ஜவுளிக்கடைக்கு முன்னால் தெருவை அடைத்துப் போட்ட பந்தலில் ஏகப்பட்ட வாத்தியங்கள் சகிதம் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. ரயில்வே கலைக் குழு என்று படுதா கட்டியிருந்தது. ரயில்காரர்கள் டிக்கட் கொடுத்து, கொடி காட்டி ரயில் ஓட்டிக் கொண்டிருக்க வேண்டியது தானே?
பெண் குரலில் ஒரு தாடிவாலா விசாரித்துக் கொண்டிருந்தான் –
மன்னவா நீ அழலாமா கண்ணீரை விடலாமா?
நான் எங்கே அழுகிறேன். சந்தோஷமாக இல்லையோ இருக்கேன்.
சங்கரன் பந்தலைப் பிரதட்சணமாகச் சுற்றிக் கொண்டு போக சீழ்க்கைச் சத்தம். அதே பெண் குரலான் இன்னும் க்ரீச்சென்று குரலை எல்லோர் காதிலும் ஈஷிக் கொண்டிருந்தான்.
பளிங்கினால் ஒரு மாளிகை. பருவத்தால் மணி மண்டபம். உயரத்தில் ஒரு கோபுரம்.
தில்ஷித் கவுர் உடம்பு பளிங்கு மாளிகை மாதிரி. உசரமும் திடமும் அலாதி. அதென்ன உயரத்தில் ஒரே ஒரு கோபுரம்?
விட்டுத் தள்ளு.
அலங்கரித்து நின்ற சப்பரத்தில் ஜவுளிக்கடை சிப்பந்திகள், பூ நிறைத்த கூடைகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் மல்லிகைப் பூவையும், முல்லைப் பூவையும், ஜவந்தியையும் அவர்கள் கூடை கூடையாக நிறைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு ரோஜா கூடக் காணோம் அந்தப் பூக்கடலில்.
சங்கரன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நாலு கூடை ஜவந்திப் பூவைத் தட்டுகளில் நிரப்பி சப்பரத்தின் உயரமான மேடையில் வைத்தான். மூன்று கூடை மல்லிகைப் பூவை ஒற்றையனாக ஜவுளிக்கடைக்குள் இருந்து சுமந்து கொண்டு வந்து சப்பரத்தில் ஏற்றினான். யாரோ பீடிக்கு நெருப்பு கேட்டார்கள்.
இங்கே ஏன்யா பீடியும் கண்றாவியும்.
இந்த தினத்தில் எத்தனையாவதோ முறையாக, மறுபடியும் தானே வந்து கவிந்த சர்க்கார் அதிகாரி தோரணையில் அவன் எகிற, கேட்டவனைக் காணோம்.
கடைத் தெரு வேலாயுத சாமி கோவில் தெருவைச் சந்திக்கும் இடத்தில் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு பூ ரதங்கள். இரண்டிலும் மல்லிகைப் பூ மட்டும் நிறைந்திருந்தது.
வாடை பிடித்தபடி சங்கரன் நின்றபோது நினைவு வந்தது. இந்தத் தெருவில் போன தடவை நடந்து வந்தபோது தான் மயில்கள் பறந்து வந்தன. அது பகல் நேரம். கூடவே ஊர்வலமாக, தெருத் தூசியைக் கிளப்பிக் கொண்டு யாரோ வில்வண்டியில் இருந்தபடி.
அந்த வில்வண்டியை எதிர்பார்த்து நின்றான் சங்கரன். கொட்டகுடித் தாசி வருகையானது என்று அறிவித்துப் போக, வண்டி உள்ளே உட்கார்ந்து போன பேரழகி. சுபம் சுபம் என்று சொல்லிப் போன அவள் இதோ திரும்பவும் வரப் போகிறாள். இந்த மல்லிகை மணத்துக்கு அவள் இங்கே பக்கத்தில் இருந்தால் இதமாக இருக்கும். தரையில் சிதறிக் கிடந்த மல்லிகை மொட்டுகளைக் குனிந்து எடுத்தான் சங்கரன்.
ஏதோ சத்தம். தலையை நிமிர்த்தினான்.
பாம்பாம் என்று ஹாரன் முழக்கி வந்தது ஒரு பழைய கார். பனியன் தரித்து ஒரு நெட்டையன் செலுத்தி வர, கூடவே உட்கார்ந்திருந்த, கரளையான இன்னொரு பனியன் காரன் கூடவே.
பழுக்காத் தட்டு வேணுமா பிள்ளை?
சங்கரனைக் கேட்டான் அவன்.
கார் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த நரைமீசைப் பெரியவருக்கு மருதைய்யன் மாமாவின் ஜாடை அச்சு அசலாக அப்படியே இருந்தது. அவர் சங்கரனிடம் சொன்னார் –
ஒரு தட்டும் வேணாம் குழந்தே உனக்கு. நல்லபடியா வீட்டுக்காரியோட கூட ஊர் போய்ச் சேரு. மருதைய்யனைப் பார்த்துக்கோ. உன் சித்தப்பன் மாதிரி அவன். உங்கப்பன் இருந்தா நிச்சயம் செய்வான்.
கிழவர் கண்கலங்கியபடி முன்னால் பார்க்க, வண்டி நகர்ந்தது.
வீட்டுத் திசையில் திரும்பியபோது, ட்யூப்லைட்டுகள் வரிசையாக எரியும் மூங்கில்களைத் தூக்கிக் கொண்டு இரண்டு வரிசையில் சின்னப் பையன்கள் மெல்ல நகர்வதைப் பார்த்தான்.
நடுவே உருண்டு வரும் சகடம். அழகாகக் காகிதமும் ஜரிகையும் கொண்டு ஜோடித்த அட்டைக் கோபுரமாக பூத்தேர். உள்ளே ரோஜாப் பூ. ரோஜாப் பூ. ரோஜாப்பூ. ரோஜா மாத்திரம் கூடை கூடையாக அடுக்கி இருந்தது. ரதத்தின் தரையில், தெருவில் எல்லாம் ரோஜா இதழ்கள் சிதறிக் கொண்டிருந்தன.
கடகடத்து வந்த ரதம் புகையிலைக் கடைக்கார வீட்டு வாசலில் நின்றது. சக்கரங்களின் ஆரத்தை அவசரமாகச் சிலபேர் சோதித்துக் கொண்டிருந்தார்கள்.
குழந்தே. ஜெயப்பா.
பகவதிப் பாட்டி குரல்.
உயிரில் கலந்த அந்தக் குரல் சங்கரனுக்கு முணுமுணுவென்று கேட்டது. சகடத்தின் உள்ளே ரோஜா இதழ்களுக்கு நடுவில் இருந்து வரும் சத்தம். சன்னமானது. பிரியமானது.
பரம்பரை வீடு இருந்த இடத்திலே புதுசா பணியிச்சுடுடா கொழந்தே.
சங்கரன் தலை ஆட்டினான். குடைக்கார சாமுவோடு போய்ச் சந்தித்தபோது மேல்சாந்தியின் மனைவியும் அதுதான் சொன்னாள்.
எல்லாத்துக்கும் சக்தி கொடு. எல்லாம் நல்லா நடக்கட்டும்.
வாசல் கடந்து உள்ளே கால் வைத்தபடி சங்கரன் மனதில் கை குவித்தபோது திரும்பவும் குரல் எழுந்தது –
மருதையா சீக்கிரம் வா. எத்தனை நாழி நிக்கறது.
முகத்தில் சந்தோஷம் தாமரை விடர்ந்தது போல முழுமையாக மலர்ந்து தெரிய மருதையன் மாமா மாடிப் படி இறங்கி வந்து கொண்டிருந்தார். சங்கரன் பக்கத்தில் வந்ததும் அவனைக் கனிவாகப் பார்த்தார். ஆதரவாகச் சிரித்தார். ஒரு நாத்திகனுக்குக் கிட்டாத பரவசம் அவர் உடல் அசைவிலும் கண்களின் ஒளியிலும், எக்காளமிடும் சிரிப்பிலும், சிலிர்க்கத் தொடங்கிய கைத்தண்டை ரோமத்திலும் தெரிந்தது.
கையை நீட்டியபடி படி கடக்கத் தொடங்கிய மருதையன் மாமாவின் குரலில் அளவிட முடியாத குதூகலம்.
அம்மா வந்துட்டேன்.
அவர் விடைபெற்ற ராத்திரி அது.
(தொடரும்)