ஞாயிற்றுக்கிழமை.
தியூப்ளே வீதி கொஞ்சம் போல் ஓய்வெடுத்துக் கொள்ளும் தினம் அது. ஆனாலும் இயக்கம் நிற்பதில்லை. தெருவின் கிழக்கு முனையில் பரிசுத்தமே செங்கலும் சுண்ணாம்புமாகி கம்பீரமாக உயர்ந்து நிற்கும் போன நூற்றாண்டுக் கட்டிடங்கள். அவை, நெருங்கி வந்து கரையைத் தொட்டு இரையும் கடலோடு சதா வேதாந்தம் பேசிக் கொண்டிருக்கும்.
அந்தக் கட்டிடங்களில் ஏதாவது ஒன்றின் உள்ளறையில் இருந்து எப்போதும் பியானோ இசையின் சில நறுக்குகள் கசிந்து தெருவில் நடக்கிறவர்களை நூறாண்டு முந்திய ஐரோப்பாவுக்கு நாடு கடத்தும். அழகான புகைப்படங்கள் எடுக்கவே ஏற்படுத்தப் பட்டதாகத் தோன்றும், நகரின் அமைதியான பகுதி அது.
தியூப்ளே வீதியின் மேற்கு முனை இந்தத் தூய்மைக்கும் தத்துவ விசாரத்துக்கும் நேர் எதிரானது. கடல் வளைந்து, தொட்டு இரைந்து, அங்கே ஒரு நாளும் சூழப் போவதில்லை. குலைந்த வரிசையில் அரை டஜன் சினிமா அரங்குகள் அந்த முனையில் படர்ந்து, கடைக்கோடியில் வெளியூர் பஸ் ஸ்டாண்டு வரை பரவி இருக்கும். இடைவெளியில் கள்ளும் சாராயமும் விற்கும் ஏழெட்டு மதுக் கடைகள், சீமைச் சரக்கு விற்கும் நாலைந்து பார்கள். கட்டிடங்களை ஒட்டி நகராட்சிச் சாக்கடை, கருத்த நீர்ப்பரப்பாகப் பிடிவாதமாக அடர்ந்து வாடையைக் கிளப்பும்.
தியூப்ளே வீதிக் கடைகளை எந்த வகையாகவும் பிரித்து விட முடியாது. சைக்கிள்களை தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யும் கடையின் ஒரு பகுதி ப்ளைவுட் தடுப்பு முக்கால் ஆள் உயரத்துக்கு அடைத்து தடுப்புக்கு அந்தப் பக்கம், தலைமுடியும் டோப்பாவும் விக்கும் ஏற்றுமதி செய்யும் கம்பெனியாக இருக்கும். பென்சில், கோந்து பாட்டில், ரப்பர் ஸ்டாம்ப் நனைக்க ஸ்டாம்ப் பேட் இதெல்லாம் ரெண்டு கம்பெனிகளுக்கும் பொதுச் சொத்து. நடந்து துடைப்பத்தால் தரையைக் கூட்டிப் பெருக்குகிற பெண்மணியில் இருந்து, உட்கார்ந்து கூட்டிப் பெருக்கிக் கணக்கெழுதும் ஊழியர்கள் வரை சகலமானவர்களும் தேவையை அடிப்படையாக வைத்து அங்கும் இங்கும் பிரித்துக் கொள்ளப் படுவார்கள்.
அப்புறம் மறக்காமல் சொல்ல வேண்டியவை, தியூப்ளே வீதியின் லாட்ஜுகள். புறாக் கூண்டு போல் இத்துணூண்டு வாசஸ்தலங்கள் அவை. சின்ன நடைபாதையில் ஒருக்களித்து நடந்துபோய்த் திரும்பி அதே வாகில் இருபது டிகிரி வலம் சுழன்று கதவைத் திறந்து உள்ளே போனால், ஒருவர் கிடக்கலாம். இருவர் இருக்கலாம் ரகக் குடியிருப்பு. கட்டும்போதே ஒவ்வொரு அறை வாசலிலும் காலி பிராந்தி பாட்டில் வைத்து சிமெண்ட் பூசி விட்டார்கள் என்று தோன்றும் அளவு உள்ளே ஆள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெளியே ஒரு காலி போத்தல் நிச்சயம்.
இவை தவிர, மிக்சியில் ஆரஞ்சுப் பழம் பிழிந்து விளம்பும் ஜூஸ் கடை வாசலில் பரபரப்பாகக் கூட்டம் நிரம்பி வழியும். ‘இதுக்குக் கூட மெஷின் கண்டு பிடிச்சுட்டாண்டா’ என்று ஆரம்பிக்கும் ஆச்சரியம் ராத்திரி நேர அந்தரங்கத்துக்கு மெஷின் வரும் என்று ஆருடம் சொல்வதில் முடிவது வாடிக்கை.
பிள்ளையார் படமோ ஜெயசித்ரா படமோ போட்ட ஒரு கொயர் நோட்டும், சைவப் பிள்ளை நெற்றி போலப் பக்கம் முழுக்க நாலு நாலு வரியாக விரிந்த காப்பி நோட்டும், நான்-டிடெயில் உபபாடப் புத்தகமாக ‘தமிழர் மாண்பு’ம் விற்கிற எழுதுபொருள்-புத்தகங்கள் கடையில் மேற்கத்திய பாணி ஸ்கர்ட் அணிந்த வயதான மிஸ்ஸி ஒருத்தி கால் மேல் கால் போட்டுத் தூங்கிக் கொண்டிருப்பாள்.
தெருவில் அதிகப் பரபரப்பாக, நிறையப் பணம் புரளும் ரெண்டு இடத்தில் ஒன்று, அப்பா மேனேஜராக இருந்த வங்கிக் கிளை. மற்றது கல்யாணம் துணிக்கடையும் ஆயத்த உடுப்பு அங்காடியும். அதற்கு அடுத்த லெவல் பரபரப்பில் தம்பீஸ் ஹோட்டல், சுபாஷ் ஹோட்டல், இந்தியா காப்பி ஹவுஸ், மதராஸ் கபே என்று பத்து மீட்டருக்கு ஒன்றாக இருக்கும் ஹோட்டல்கள். பேங்கும் ஜவுளிக்கடையும் ஞாயிற்றுக்கிழமை அமைதியாகும். மற்றவை கூடுதல் கலகலப்பும் பரபரப்புமாகும்.
இந்தியா காப்பி ஹவுஸ் தவிர்த்த இதர ஓட்டல்களில் இட்லியும், துணைக்கு கடப்பா என்ற அபூர்வ உணவுப் பொருளும் வழங்கப்படுகிற தினம் ஞாயிறு. கிழக்கே கடற்கரை வரைக்கும் காற்று கடப்பாவின் வாசனையைக் கொண்டு சேர்க்கும். ஊர் அந்த உணவுக்கும் வாசனைக்கும் ஆட்பட்டிருந்தது. தேசிய, மாநில உணவாக புரட்டா கலாச்சாரம் உருவாகாத காலத்தில் பெரிய நிலப் பிரதேசத்தையை கட்டிப் போட்டிருந்தது கடப்பா. இரண்டே இட்லியும் அரை லிட்டர் கடப்பாவும் வாங்கிப் போக ஓட்டல் வாசல்களில் தள்ளுமுள்ளு சகஜமான ஞாயிறுகள் அவை. என் போல வந்தேறிகளும் வாழ்த்தியது கடப்பாவை.
ஞாயிறு காலை சரியாக எட்டு மணிக்குக் கடப்பா விஜயம் தொடங்கும். இப்போது மணி ஏழரை.
மேலே வீட்டிலிருந்து இறங்கி வந்தேன்.
‘தந்தையார் வீட்டிலே தானே, தம்பி?’
சொல், பொருள் சுத்தமாக ஒலிக்க எழுந்து வந்த குரல் வாசலில் இருந்து தான்.
பயத்தோடு பார்த்தேன். வா.சி.பார்வேந்தனார். ரிடயர்ட் வருமான வரி அலுவலகத் தலைமை எழுத்தர். அங்கே பெயர் பராங்குசம். மரபுத் தமிழ்க் கவிஞர்.
ஓய்வு பெற்ற, தமிழ்க் கவிஞர் என்ற இந்த இரண்டு அடைமொழிகள் போதும் அப்பாவுக்கு. அபிமானத்தோடு தோழர் ஆக்கிக் கொண்டு விடுவார். கனகாலம் வேலை பார்த்த கல்கத்தாவிலும், மாற்றலில் வந்த இங்கேயும் இதுவே நடப்பு.
‘இவன் தான் என் மகன். தமிழும் படிக்கறான்’ என்று ஒரு அப்பா அவருடைய சிநேகிதரிடம் மகனை அறிமுகப்படுத்தி வைத்தால் என்ன மாதிரி பதிலை எதிர்பார்க்கலாம்?
‘நல்லது தம்பி, நிறையப் படியுங்க’. ‘பிழையில்லாம எழுத முயற்சி செய்யுங்க’
ஆனால் பார்வேந்தனார் என்னிடம் கேட்டது –
‘தம்பி, வியங்கோள் வினைமுற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டு சொல்லுங்க பார்ப்போம்’.
அன்னாருக்குத் தமிழ் இலக்கணம் அச்சு வெல்லம் போல என்று அறிந்து நான் வெலவெலத்துப் போனேன் அப்போது. அது இரண்டு வாரம் முன்னால் நடந்த முன்கதை. சம்பவ தினத்தில், நான் எசகுபிசகாக அவர் பார்வையில் படுவதற்குப் பத்து நிமிடம் முன்பு இருந்து அவரும், இலக்கணத்தோடு எந்த வித சம்பந்தமும் இல்லாத அப்பாவும், வங்கி அக்கவுண்டண்ட் ஓவர்கோட் புருஷோத்தம நாயக்கரும் நன்னூல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்களாம்! என்ன மாதிரி உலகம் இது!
இப்படி முதல் பந்திலேயே கூக்ளி போடக் கூடியவர் அடுத்த பத்தே நிமிடத்தில் அடித்துத் துவைத்து அலசிப் பிழிந்து ஆளே அடையாளம் தெரியாமல் ஆக்கி விடக் கூடும். இந்த பயத்தில், அப்போது பதுங்கியது தான், இப்படி ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் வசமாகத் திரும்ப அவரிடம் மாட்டிக் கொள்ள வேண்டிப் போகும் என்று சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை.
‘அப்பா வந்துவிடுவார். உக்காருங்க’.
பார்வேந்தனாரைப் பிரம்பு அரியணையில் உட்கார்த்தி வைத்தேன். நழுவி விடலாமா என்று அரை மனது நப்பாசை காட்டியது. தேடி வந்தவர் வரும் வரையாவது கூட இருப்பதல்லவா மரியாதை என்றது மனச்சாட்சி. இருந்தேன்.
பார்வேந்தனார் கையில் அட்டை போட்டுக் கட்டி நிறையக் காகிதம் வைத்திருந்தார். அதை அடிக்கடி பார்க்கிறதும் வெற்று வெளியில் விரலைச் சுழற்றி ஏதோ கணக்குப் போடுவதுமாக வேறே இருந்தார். என்ன என்று தெரிந்து கொள்ள ஆவல் தான். ஆனால் அவர் வியங்கோள் வினைமுற்றை திரும்ப எடுத்து விட்டால் பிரச்சனை.
‘கல்லூரி எப்படிப் போறது?’
பார்வேந்தர் என்னிடம் கேட்டார். என்ன சந்தேகம்? பஸ்ஸிலே, சோல்தாக்களும், மீன் வியாபாரிகளும் சக பயணிகளாகக் கூடவே வரத்தானே போயாகிறது?
அவர் அதைக் கேட்கவில்லை என்று புரிந்து, நழுவுகிற பதில் ஏதோ சொன்னேன்.
‘எம் மகளும் அப்படித்தான் சொல்றா. பள்ளி வேறே, கல்லூரி வேறே’.
இது கொஞ்சம் சுவாரசியமானது. அவர் மகள்?
தானே மேலதிகத் தகவல் வந்தது. கயல்விழி. அதுதான் பெயர். உயிரியல் சேர்ந்திருக்கிறாள். அப்படி என்றால்? தெரியவில்லை. விசாரிக்க வேண்டியது தான். பிரஞ்சு, பார்வேந்தனார் சொற்படி, கசடறக் கற்றிருந்தாலும், மிகுந்த தமிழ் ஆர்வம் உள்ளவள். மரபு இசையும் தெரிந்தவள். கடைசி மகள் என்பதால் செல்லம். மகளிர் பண்பாட்டு ஆடையான சிற்றாடை அணிந்து நடமாடுவதே சாலச் சிறந்தது என்ற தந்தை சொல்மீறி பிரஞ்சு மங்கையர் போல் உடுத்து நடக்கிறவள் என்பது தான் வருத்தம். வாரம் ஒரு நாளாவது சிற்றாடை அணியலாமே.
போதும், நாளை, திங்கள்கிழமையாகப் பொழுது விடிந்ததும், உருப்படியான முதல் வேலை கயல்விழியைக் காலேஜில் தேடுவதுதான்.
‘காப்பி சாப்பிடறீங்களா?’
கயல்விழியின் தகப்பனாரைப் பிரியமாக விசாரித்தேன்.
எல்லாத் தரப்புக்கும் எப்போதும் ஏற்ற கேள்வி அது. நிச்சயம் சாப்பிடறேன் என்று பதில் வராது என்று நம்பிக்கை. வந்தாலும் அப்பா பெயரைச் சொல்லி எதிர் ஓட்டலில் வாங்கிக் கொடுத்து விட்டுப் பிய்த்துக் கொண்டு புறப்படலாம்.
பார்வேந்தனார் அதிருப்தியோடு தலையைக் குலுக்கினார். சுவைக் குழம்பி என்று சொல்வதே நல்லது என்றார். இவருக்கு இனி வாழ்க்கையில் காப்பி வாங்கித் தரப் போவதில்லை. கயல்விழி எவ்வளவு அழகான சிற்றாடைச் சிட்டாக வந்தாலும்.
அப்பா கீழே வந்தபோது பார்வேந்தனார் வணக்கம் சொல்லி அறிவித்தார் –
‘பெற்றோர் மன்ற நிகழ்ச்சிக்கான ஆவணமெல்லாம் கொண்டு வந்திருக்கேன் ஐயா. நோட்டீசு என்ற குறும் சுற்றறிவிப்பும் உண்டு. நடுநடுவே புகைப்படம் அச்சடித்து வரும். ஒரே ஒரு விடயம் மட்டும் உங்க தேர்வுக்கு விட்டிருக்கோம்’
அப்பா ‘என்ன’ என்று நிமிர்ந்து பார்த்தார்.
‘அறிவிப்பு தொடக்கத்தில் கட்டளைக் கலித்துறையா, அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமா அல்லது தரவு கொச்சகக் கலிப்பாவா? சொல்லாடல் தொடருது. எழுத நண்பர்கள் முனைப்பாக இருக்காங்க. நான் இங்கே இருந்த நேரத்தில் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக மனதில் செய்த வண்ணம் தான் இருந்தேன்னா பார்த்துக் கொள்ளுங்க’
பகீர் பகீர் என்று வயிற்றில் பனிக் கத்தி இறங்கியது. வகைக்கு ஒன்றாகச் சொல்லச் சொல்லுவாரோ. வியங்கோள் வினைமுற்றே தெரியாதவனை இப்படி எல்லாம் சோதித்தால் மணக்குள விநாயகரே மன்னிக்க மாட்டார் அவரை.
‘தம்பி, உக்காருங்க. உங்க கல்லூரி பற்றித்தான். கேளுங்க’
தம்பீஸ் ஹோட்டலில் கடப்பா தீர்ந்து போய் மண்ணாந்தை சாம்பார் தான் இட்லிக்கு இணையாகக் கிடைக்கும் இனியும் தாமதமாகப் போனால். மனசே இல்லாமல் திரும்ப உட்கார்ந்தேன்.
பார்வேந்தனாரும் அப்பாவும் பேசப் பேச, விஷயம் துண்டு துணுக்காக விளங்கியது.
‘இறுதி செய்யப்பட வேண்டிய விதிமுறைகள் இதெல்லாம்’
பார்வேந்தனார் நீட்டிய நீளக் காகிதத்தில் வரிசையாக எழுதியிருந்தது.
‘கண்ணாடி கொண்டு வரல்லே, படிச்சுடேன்’.
அப்பா நைசாக என்னிடம் தள்ளி விட்டார். நான் ஒரு பெருமூச்சோடு படிக்க ஆரம்பித்தேன். இதெல்லாம் ராகிங் மாதிரி தானே ஆரம்பித்துத் தானே முடியும்.
கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் அமைத்திருக்கும் சங்கமாம் இது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என்று முத்தரப்பிலும் நல்லுறவைப் பேண ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாம் இது. பார்வேந்தனாரே இங்கேயும் வேந்தர். செயலாளர் எங்கள் வீட்டுப் பெரிசு ஆன பேங்க் மேனேஜர். பொருளாளர், கல்யாணம் ஜவுளிக்கடை முதலாளி. ஜூனியர்களைக் காலேஜ் ராகிங்கில் கொப்பும் குழையுமாகக் குதித்து ஆட வைத்த சீனியர் தெய்வமான லச்சு என்ற லச்சுமணனின் அப்பா அவர். இன்னும் சில உறுப்பினர்கள் கமிட்டியில் உண்டு. அதில் ஒருத்தர் சினிமா டிஸ்ட்ரிப்யூட்டர். அவர் இலவசமாகக் படப் பிரதியைத் தர, மன்ற நிதிக்காக திரைப்படம் திரையிடப்படும். ஒரு காட்சி மட்டும் திரையிட இலவசமாகவே கொட்டகையும் கிடைத்திருக்கிறது. புதுசாகக் கட்டிய அரங்கம்.
நிமிர்ந்து உட்கார்ந்தேன். சினிமா காட்சி. இது நம்ம டிபார்ட்மெண்ட்.
‘இதான் திரைப்படம் பற்றிய சிற்றறிவிப்பு’.
அப்பா வழக்கம்போல் ‘கண்ணு மங்கலாக இருக்கு’ என்ற சால்ஜாப்போடு இதையும் படிக்க என்னிடம் தள்ளி விட்டார்.
சினிமா பிட் நோட்டீஸை எல்லாம் படிக்க வேண்டிய தலைவிதி. நோட்டீசா அது?
‘மக்கள் கலைஞர் ஜெயசங்கரனும், நடிப்புச் சுடர் இலக்குமியும் வாழ்ந்து காட்டும் திரை ஓவியம் ஜீவனாம்சம். படம் பார்த்த உள்ளக் களிப்பும் பெற்றோர் மன்றத்துக்குப் பொருளுதவி செய்த மன நிறைவும் ஒரு சேர உங்களுக்கு ஏற்படும் என்பது வெள்ளிடைமலை’.
இப்படிப் போகிற நோட்டீஸ். இதுவரை வேறெந்தத் தமிழ்ப் படத்துக்கும் இப்படி ஒரு சிற்றறிக்கையை நான் பார்த்தது இல்லை. முகப்பில் படத்தின் சிறப்பை விளக்கும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமோ, மற்றதோ பாக்கி உண்டு.
‘ஜெயசங்கர், ஜீவனாம்சம் இதெல்லாம் கூட மாற்றிடலாம்னேன். வேணாம்னுட்டாங்க. போகட்டும். நான் சொன்னபடி இலக்குமியாவது உண்டே’ என்றார் பார்வேந்தனார் வருத்தம் குரலில் தெரிய.
எனக்கே ஆச்சரியம். நோட்டீசில் அடித்து வந்தது எதிர்பாராத விதமாகப் புதுக் கவிதை. ‘ஆர்பரித்து வா அடலேறே’ என்று உலகத்தைத் திருத்தவோ, ஜீவனாம்சம் படம் பார்க்கவோ ஏகப்பட்ட ‘ஓ’ மற்றும் ஆச்சரியக் குறிகளைத் தாளித்துப் போட்டு விடுக்கும் அழைப்பு. ஓசியில் பிலிம் பிரதி கொடுத்த சினிமா டிஸ்ட்ரிப்யூட்டரான பெற்றோர் மன்ற உறுப்பினர் எழுதியது அது.
இந்த நோட்டீசை ஊர் முழுக்க விநியோகித்தார்கள். இதோடு கூட பிரஞ்சிலும் ஜீவனாம்சம் விளம்பரம் புதுக்கவிதை பயமுறுத்தாமல் அச்சடிக்கப்பட்டது. பிரஞ்சுப் பென்ஷன் வாங்குகிற பெரியவர்கள் பெரிய சைஸ் கோலிக்குண்டு ஆடாத, நடனத்துக்குப் போகாத நேரத்தில் படித்து நிதி உதவி அளிக்கவாம் அது.
‘சம்பா கோவில்லே, சர்வீஸ் முடிஞ்சதும் நம்ம பியானோ ஆர்கன் கேட்க கூடியிருந்தாங்க பெரிய கூட்டம். அவங்களுக்கெல்லாம் கொடுத்திருக்கேன்’
சந்தடி சாக்கில் பேங்க் ஊழியர் விக்தோ சார் ஒரு மாலை நேரத்தில் சொல்லி பார்வேந்தரின் அன்பையும் எதிரே தம்பீஸ் உணவு விடுதியில் பரிமாறும் சூடு நிறை சுவைக் குழம்பியையும் பரிசாகப் பெற்றார். வின்செண்ட் நடராஜன் ஒரு கத்தை நோட்டீசை அவர் பேட்டையில் கொடுக்க அள்ளிப் போனார். எனக்கென்னமோ குக்கிக்குக் கூளத்தோடு ஜீவனாம்சத்தையும், ஆச்சரியக் குறிகளையும் கலந்து கொடுத்திருப்பார் என்று தோன்றிக் கொண்டே இருந்தது.
நன்கொடை கொடுத்துப் படம் பார்க்க அடுத்த ஞாயிறு காலையில் சுமாரான கூட்டம் வந்திருந்தது. அதில் பலரும் தம்பீஸ் கபே, சுபாஷ் கபே படியேறி கடப்பாவும் இட்லியும் வெட்டி விட்டுக் குழம்பி அருந்தி வந்தவர்கள். தியேட்டரில் நீக்கமற நிறைந்து எங்கும் கடப்பா வாசனை தூக்கலாக அடித்தது நிஜம்.
நானும் வந்தே ஆகணும் என்று சகலரும் சொன்னதால் போய்ச் சேர்ந்தேன். பத்தே பத்து வினாடி பெற்றோர் மன்றப் பெரியவர்கள் கண்ணில் பட்டு வணக்கம் சொல்லி விட்டு சைக்கிளைப் பூட்டி வைக்க மறந்ததாகப் பொய் சொல்லித் தப்பித்தேன்.
ஒரு சின்ன ரவுண்ட் புலிவார்டில் சைக்கிள் மிதித்து சில்லென்ற கடல் காற்றில் போக, மனம் லேசாக இருந்தது. வந்தபோது இந்தியன் நியூஸ் ரீலில் புல்லாங்குழல் சாஸ்வதமாகப் பொழியும் சோக இசை.
கீழே இருந்தால் ஜீவனாம்சத்தை சொல்லிலக்கணம், எழுத்திலக்கணம் சகிதம் பார்க்க வேண்டி வரும் என்ற பயத்தோடு பால்கனிக்கு விரைந்தேன். கிட்டத்தட்ட காலியாக இருந்தது அது.
‘இங்கே உக்கார அனுமதி இல்லே முசியே’.
காவலர் ஒருத்தர் சிரத்தை இல்லாமல் சொல்லி விட்டு எனக்கென்ன போச்சு, கேட்டாக் கேளு, கேட்காட்டப் போ என்ற முகபாவத்தோடு போய் விட்டார். ஒருத்தர் ரெண்டு பேராக வயசானவர்கள் மின்விசிறிகளுக்குக் கீழ் உட்கார்ந்து கடப்பா உண்ட களைப்பைக் கண்மூடி இறக்கிக் கொண்டிருந்தார்கள் அங்கே.
கிட்டத்தட்ட முழு இருட்டு. நான் நின்ற இடத்துக்கு முன் வரிசை நடுவில் இருந்து கரகரவென்று ஏதோ மிஷின் எதையோ அரைக்கும் சத்தம். பீகாரில் வெள்ளம் வந்து ஹெலிகாப்டரில் இந்திரா காந்தி பார்வையிட, அரங்கில் லேசான வெளிச்சம்.
கறுப்பு தாவணியும், வெள்ளைப் பட்டுப் பாவாடையுமாக ரெட்டைச் சடையும் போட்டு திம்மென்று லட்சணமான இளம் பெண். திரையைப் பார்த்துக் கொண்டு கையை அடுத்த இருக்கைக்கு எடுத்துப் போகிறாள். பக்கத்து சீட்டில் துணிப்பை. அதிலிருந்து எதையோ எடுத்து வாயில் போட்டு அரைக்க ஆரம்பிக்கிறாள்.
இதைத் தான் எதிர்பார்த்தேன்.
நேரே அவளிடம் போனேன்.
‘கயல்விழி தானே?’
அவள் மை தீட்டிய கண்கள் அழகாக விரிய என்னைப் பார்த்தாள். பதில் சொல்லாவிட்டால் என்ன, அவளே தான். இந்தக் கண்ணுக்காக வியங்கோள் வினைமுற்று என்ன என்று கற்றுக் கொண்டு நாள் பூரா எடுத்துக் காட்டலாம்.
‘உயிரியல் தானே?’
அரை இருட்டில் அந்தக் கண்கள் இன்னும் அழகாக இருந்தன.
‘இலக்குமியை உனக்குப் பிடிக்குமா?’
’பேங்குக்கார வீட்டுப் பிள்ளைதானே?’
‘ஆமா, எப்படித் தெரியும்?’
‘அப்பா சொல்லியிருக்கார். அப்பாவின்னு மூஞ்சிலே ஒட்டியிருக்கும்னார்’.
’நான் இங்கே உட்காரலாமா’?
அவள் பையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு சிரித்தாள். கை இரண்டிலும் பூனைமுடி சன்னமாகப் படர்ந்திருந்ததையே பார்த்துக் கொண்டு நின்றேன்.
‘உட்காரலாம்னு சொன்னாத் தான் உட்காரணுமா?’
அடுத்த இருக்கையில் அமர்ந்தேன். டைட்டில்கள் சரம் சரமாக வந்து விழ ஆரம்பித்திருந்தன. நான் அதில் ஒரு கண்ணும் கயல் மேல் மற்றதுமாக இருந்தேன். சீரான கரகர சத்தம், முதலில் இடைஞ்சலாக இருந்தாலும் இந்த ஐந்து நிமிடத்தில் பழகி விட்டது. அது சங்கீதமாகவே இப்போது கேட்டது.
‘முறுக்கு ஒரு விள்ளல் வேணுமா?’
ஜாக்கிரதையாக என் கையில் போட்டாள். உடைத்துக் கொஞ்சம் எடுத்துக் கொண்டு மீதியை அரவை மில்லுக்குச் செலுத்த மறைமுகமான கட்டளை.
நான் ஒடிக்க ஒடிக்க விரலே ஒடிந்து விடும் அபாயம். முறுக்கு என்னமோ முறுக்கிக் கொண்டு நிற்கிறது.
அவள் சட்டென்று முறுக்கைப் பிடுங்கினாள். ஓர வாயில் வைத்து ஒரே கடி.
‘இந்தா’
என் ஜீவனாம்சம் அந்த வினாடியில் ஆரம்பித்தது என்பது வெள்ளிடைமலை.
சம்மன் இல்லாமல் மனதில் ஆஜரான மேகலா, ‘உன்னை அறம் பாடியே கொல்லணும்டா’ என்று இலக்கிய வசவு சொல்லி உடனே காணாமல் போனாள்.
இடைவேளையில் எழுந்து போய்த் திரும்பி வரும்போது புதுசாக ஒரு டஜன் முறுக்கு வாங்கி வந்து கொடுத்தேன். கயல்விழி முகம் மலர்ந்து நன்றி சொன்ன அழகுக்கு மொத்தக் குத்தகைக்கு தியேட்டர் கடையையே எடுத்து விடலாம்.
ஜெய்சங்கரும் லட்சுமியும் போல கயல்விழியோடு டூயட் பாடி ஆடுவதாகக் கற்பனை செய்ய ஆனந்தமாக இருந்தது. பாட்டைப் பாதியில் நிறுத்தி முறுக்கு தின்று விட்டுத் தொடர்ந்தோம். உணவு மயமான இனிய உலகு. கயலுக்குக் கடப்பா பிடிக்குமா என்று கேட்க நினைத்து சாய்ஸில் விட்டேன்.
படம் முடிந்து சுபம் போட்டபோது கயல்விழி சொன்னாள் –
‘படத்துலே பாதி மனசு தான் இருந்தது’
‘எனக்கும் தான்’ என்றேன்.
‘நீ கூட வெண்பா எழுதுவியா?’
என்னது?
இலக்குமிக்கு உண்டோ இணை. இதான் ஈற்றடி. மனசுலேயே தளை தட்டாம நேரிசை வெண்பா எழுதிட்டேன். சொல்லட்டா?
கீழே விளக்குகள் எரிய முற்பட்ட நேரம்.
‘அப்புறம் பார்க்கலாம்’
அந்த நேரிசை வெண்பா, வரிசைகளுக்குக் குறுக்கே ஒயிலாக நடந்து போனது.
( தொடரும்)