நல்ல நிகழ்ச்சிகள் பலவும் மயில்கள் கட்டியம் கூற நடந்திருக்கின்றன.
பஸ்ஸில் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த இந்தியர் திடமாகச் சொல்ல, அமேயர் பாதிரியார் இருக்கக் கூடும் என்பது போல தலையசைத்தார்.
மயில்களைப் பற்றி இங்கே நல்லதாக அபிப்பிராயம் வைத்திருக்கும் மிகப்பல பேரில் இந்த இளைஞரும் ஒருவராக இருக்கக் கூடும். டெல்லியில், இந்திய அரசாங்க அதிகாரியாம். கொஞ்ச நேரம் முன்னால் தெரிவித்தார். சங்கரன் என்று தன் பெயர் கூடச் சொல்லிக் கை குலுக்கினார் பாதிரியாருடன்.
ரயிலிலும் பஸ்ஸிலுமான பயணம் அவரவர்கள் இட்டுக் கொண்ட வாய்ப் பூட்டுகளை எளிதில் விலக்கி விடுகிறது. விமானம் போல மேட்டிமை சார்ந்த பாவனைகளும் இறுக்கமும் இங்கே வேண்டியதில்லை. அதுவும் இந்த நாட்டில், சரிசமமாக உட்கார்ந்து பயணம் செய்கிற வெள்ளைக்காரர்களைச் சந்திக்கும் போது.
தில்லி அதிகாரி இளைஞரா, மத்திய வயதுக்குக் கடந்து கொண்டிருக்கிறவரா, தெரியவில்லை. இந்தியர்கள் முகத்தில் லேசில் வயசு தெரிவதில்லை.
வழியில் தாழப் பறந்த நாலைந்து மயில்களைக் கண்டு பாதிரியார் கேமராவை எடுப்பதை அவர் பார்த்திருந்தார்.
அழகான உடம்பிலும் கோரமான குரலிலும் சாத்தானைக் கொண்ட பறவையன்றோ இது. அவர் பாதையில் பிசாசு இந்தப் பட்சியாகக் குறுக்கிடுவது இது முதல் தடவை இல்லையே.
தேவனில் என் விசுவாசம் உறுதியாகட்டும். உன்னை அறிவேன். போ சாத்தானே.
முணுமுணுத்தபடி, வேண்டாம் என்று வைத்து திரும்ப கேமராவைத் தோள்பையில் அமேயர் பாதிரியார் திணித்துக் கொண்ட போது அந்த அதிகாரி தன்னில் லயித்துச் சிரித்தார்.
அமேயர் பாதிரியாரின் சுய கண்டிப்பைக் கேட்டிருப்பாரோ? பாதி மனசுக்குள்ளும் மீதி மெல்லிய முணுமுணுப்புமாகத்தானே சொன்னார் பாதிரியார்?
அதிசயம் கண்டதை அலட்சியம் கலந்து சுவாரசியமான தகவலாக மட்டும் சொல்கிற குரலில் இளம் அதிகாரி தொடர்ந்தார் –
உங்களுக்குத் தெரிந்தால் ஆச்சரியப் படுவீர்கள் ஃபாதர். மயில்கள் திடீரென்று பெருகி வந்த காலத்தில் என் சொந்த ஊரில் சாவு என்பது இல்லாமல் போனது. இது பழைய காலத்தில் இல்லை, ரொம்பவே சமீப காலத்தில் இப்படி ஒரு நம்பிக்கை. எனக்கு இது பற்றி அதே அபிப்பிராயம் இல்லாவிட்டாலும் ஊரோடு நம்பினார்கள். இப்போது மயில்கள் வரவு குறைவுதான். சாவோ அநேகம் உண்டு.
அதிகாரி தெளிவான, பதவியின் காரணமாக ஏற்பட்ட அதிகாரம் புலப்படும், ஆனால் நேசமான குரலில் சொல்ல அமேயர் பாதிரியார் கருணையோடு சிரித்தார்.
சாவுக்கும் மயிலுக்கும் என்ன சம்பந்தம்? வேறு எங்கும் இல்லாதபடி, பக்கத்தில் பயிர் பச்சை ஏதாவது தழைத்து வளர்ந்து, அந்தப் பறவைக் கூட்டம் வந்திருக்கலாம். எனில், அதிகாரி சொன்னால் அப்பீல் ஏது?
முன் இருக்கையில் கொச்சு தெரிசா பக்கத்தில் உட்கார்ந்திருந்த அதிகாரியின் மனைவி திரும்பிப் பார்த்து அவரிடம் ஏதோ கண்டிப்பும் கோரிக்கையுமாகச் சொன்னாள்.
சரி வசந்தி, இன்னமே பேசலை,
அதிகாரி புத்தகத்தைப் பிரித்து எங்கேயோ இருந்து படிக்க ஆரம்பித்தார்.
கால்டர்டெல்லில், எங்க வீட்டில் கூட மயில் வந்து ஆடினது. அதனாலே தான் கிளம்பி வந்தோம்.
ஜன்னலை ஒட்டி உட்கார்ந்திருந்த முசாபர் கூறினான்.
அமேயர் பாதிரியார் அவனைப் பார்த்த பார்வையில் இதை வளர்த்தி எடுத்துக் கொண்டு போகாதே என்ற வேண்டுதல் தெரிந்தது. ஆப்ரஹாமிய மதத்துக்காரன் என்றாலும் இப்படி மனம் போனபடி எப்படிப் பேச முடிகிறது இவனால்?
பறவைக்கும் சாவுக்கும் தொடர்பில்லை என்று அவர் ஆதாரபூர்வமாக, அறிவியல் படி இந்த வினாடி நிரூபிக்க முடியுமானல் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த அதிகாரியிடம் இல்லை என்றால் இங்கே பஸ்ஸில் வருகிற வேறு யாருக்காவது அல்லது எல்லோருக்குமாகச் சேர்த்து. கூட ஒரே ஒரு குரல் எழுந்தால் போதும்.
தனக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க தெரிசாவைப் பார்த்தார் அவர். முன் வரிசையில் அவள் கண்மூடி சின்ன உறக்கத்தில் அப்போது தான் நழுவி இருந்தாள்.
தர்க்கம் எல்லாம் வேணாம். முசாபரின் ஓட்டை வாய் என்ன மாதிரியான இக்கட்டை உண்டாக்கலாம் என்பது அமேயர் பாதிரியாருக்குத் தெரியாவிட்டாலும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது என்று நினைத்தார். அதுவும் முசாபர், டெல்லியில் சர்க்கார் அதிகாரியான இந்த மூத்த இளைஞரிடம் பேசும்போது யோசிக்க வேண்டாமா?
இங்கே வந்ததற்கு மயிலையும் குயிலையும் காரணம் சொல்லிக் கொண்டிருந்தால் சரிப்படாது போகும். ஒற்றர்கள் அல்லவோ இப்படி வாயில் வந்த காரணத்தைச் சொல்லி, நாட்டுக்கு நாடு புகுந்து தந்திரமாக வேவு பார்ப்பார்கள்?
அந்த அதிகாரி விசாவைக் கிழித்தெறிந்து இந்த மூன்று பேரையும் லண்டனுக்குத் திருப்பி அனுப்பிவிடலாம். இவ்வளவு செலவு செய்து வந்து திருப்பி விரட்டப்பட அமேயர் தயாரில்லை. அதுவும் ஒற்றன் பட்டம் குத்தி.
பஸ்ஸை நிறுத்திய டிரைவர் ஏதோ அறிவித்து எழுந்து போனான். அமேயர் பாதிரியார் தகவல் அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடு இந்திய அதிகாரியைப் பார்த்தார்.
சாயா குடிக்க பத்து நிமிஷம் வண்டி நிற்குமாம். பெண்களுக்கும் சௌகரியம் உள்ள இடமாம்.
முசாபர் முன்னால் போய், தெரிசாவைத் தொட்டு எழுப்பும் போது அவன் கை அசம்பாவிதமாக அதிகாரி மனைவி மார்பில் பட்டு விட்டது. முசாபர் நடுநடுங்கி, கையெடுத்து அவளை வணங்கி இங்கிலீஷில் மன்னிப்பு கேட்க அவள் ஆச்சரியத்தில் கண் விரியப் பார்த்தாள். முசாபரின் நடத்தைக்காக இல்லை, அவனுடைய உருவத்துக்கும் லுங்கி அணிந்த வேடத்துக்கும் பொருந்தாத கம்பீரமான பிரிட்டீஷ் வானொலி இங்கிலீஷாக அவன் பேச்சு இருந்ததே காரணம்.
கொஞ்சம் நடக்கலாம். இறங்கு.
அதிகாரி தன் மனைவியிடம் முணுமுணுப்பாகப் பேசியபடி முன்னால் நடக்க வழி விட்டு, சற்றே அசதியோடு கண்ணை மூடி இருந்தார் அமேயர் பாதிரியார்.
அச்சோ, ஒரு கிளாஸ் சாயா குடிச்சு வரலாமே. இன்னும் ஒரு மணி நேரம் போகணுமாம். நாலு பிஸ்கட்டும் கடிக்க ஆசை.
கொச்சு தெரிசா குழந்தையாக விரல் நீட்டிச் சொல்ல, முசாபர் அவள் கையைப் பற்றி இழுத்துப் போனான். பஸ்ஸே காலியாகக் கிடக்க, கடைசியாக அமேயர் பாதிரியார் இறங்கினார்.
கொச்சு தெரிசா எதிர்பார்த்ததை விட சாயாவும், பெயர் பொறிக்காத பிஸ்கட்டும் நன்றாகவே இருந்தன. பிரான்ஸ் ரிவெய்ரா பிரதேசத்தில் வீடுகளில் பிற்பகல் கொறிப்பதற்காகச் செய்கிற பிஸ்க்யீக்களின் வாசனை இதற்கு உண்டு என்றார் அமேயர் பாதிரியார். அவர் நினைவில் தங்கிய மணம் அது. மறப்பதற்கில்லை.
சுற்றுமுற்றும் கவனித்துப் பார்த்தபடி மெல்ல நடந்து வந்த இந்திய அதிகாரி ஏதோ முடிவு செய்தவராக இவர்கள் பக்கத்தில் உட்கார்ந்தார். வெள்ளைக்கார பாதிரியாரும், நல்ல ஆங்கிலம் பேசுகிற இங்கிலாந்து தம்பதியும் உள்ளூர் பிஸ்கட் சாப்பிடுவதால் தனக்கும் நம்பிக்கை வந்தவராக, மனைவியிடம் அனுமதி கேட்டார் அவர் –
வசந்தி, ரெண்டு பிஸ்கட் வாங்கட்டா?
அந்தப் பெண் மிக அழகாக, சித்திரம் எழுதியதுபோல், தெரிசாவைப் பார்த்துச் சிரித்தாள்.
உங்களுக்கு சாப்பிடணும். அதுக்கு ஒரு சாக்கு. வாங்குங்கோ.
அதிகாரி கை நிறைய வாங்கி வந்த பிஸ்கட்களை தெரிசாவிடமும் கொடுத்து எடுத்துக் கொள்ளச் சொன்னாள் அந்தப் பெண்.
தெரிசா அவளிடம் கேட்டாள் –
உங்களுக்கும் மயில் பிடிக்குமா?
ரொம்பவே. டெல்லியில் வீட்டுத் தோட்டத்திலே வந்து ஆடினது சமீபத்திலே. நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது. அப்புறம் தான் இங்கே வர பிரார்த்தனை செஞ்சுக்கிட்டது.
அவள் நாணத்தோடு புன்னகை செய்தாள்.
மனசிலேருந்து வேண்டிக்கிட்டா நடக்காம போகாது.
தெரிசா கண்கள் ஒளிரச் சொன்னாள். அவளுடைய ஈர்ப்பும் லயிப்பும் முசாபருக்குப் புதிதாகத் தெரிந்தன. அமேயர் பாதிரியார் நம்ப முடியாத படிக்கு தெரிசாவைப் பார்த்தார்.
நானும் வேண்டிக்கிட்டு தான் வந்தேன். தில்லியில் கிளம்பும்போது, ப்ளேன்லே வரும்போது எல்லாம் அது தான் மனசுலே முழுசா உட்கார்ந்து இருந்தது. ஆனா, உள்ளே போய்.
அவள் நிறுத்தினாள்.
அபத்தமா இருந்தது அது கொடு இது கொடுன்னு கேட்க. கொட்டி வச்சு என்ன வேணுமோ எடுத்துண்டு போங்கறான் அவனானா.
அவள் கண்கள் விரியச் சொன்னபோது தெரிசாவின் கைகளை இறுகப் பற்றி இருந்தாள். அவள் சொல்லியபடி இருக்க தெரிசா கைகளை விடுவித்துக் கொண்டாள். கண் இரண்டும் மூடிக் கை கூப்பி கிழக்கு நோக்கி வணங்கினாள். அமேயர் பாதிரியார் பாதி குடித்துக் கொண்டிருந்த சாயாவை வைத்து விட்டு அவசரமாக எழுந்தார்.
போகலாம், பஸ் கிளம்பும் நேரம்.
கொஞ்சம் இருக்கச் சொல்லுங்கோ டிரைவர் கிட்டே.
வசந்தி அங்கே கவிக்குயில் சரோஜினி தேவி படம் போட்டு இருந்த ஒடுக்கமான கழிப்பறைக்கு நடக்கும் முன், தெரிசாவையும் பார்வையால் அழைத்தாள். இயல்பாக அவள் தோளில் கை அமர்த்திப் பற்றியபடி தெரிசா நடந்தாள்.
பஸ்ஸில் ஏறினார் அமேயர் பாதிரியார். இந்தத் தெரிசாப் பொண்ணை நினைத்தால் அவருக்குப் பயமாக இருக்கிறது. வழி தவறிப் போக தயாராக இருக்கிற ஆட்டுக்குட்டி. பத்திரமாகப் பட்டியில் திரும்பக் கொண்டு போய்ச் சேர்க்கிற பொறுப்பு அவருக்கல்லவா இருக்கிறது?
கழிப்பறைக்கு இட்டுப் போய் யாரும் அவளை அவிசுவாசியாக்க முடியாதுதான், அதுவும் டெல்லி அதிகாரிக்கு பெண்டாட்டியான இளம் வயது பிராமண ஸ்திரி. ஒரு வார்த்தை ரெண்டு வார்த்தை, கனிவான சிரிப்பு, அப்புறம் பெண்ணுக்குப் பெண் என்று இனம், குலம், காலம், இருப்பு பார்க்காமல் வருகிற பரிவும், குரோதமும். போதுமே ஆளை அடித்துப் புரட்டிப் போட.
அமேயர் பாதிரியாருக்கு இதெல்லாம் பழக்கமானதில்லை. ஆனால், பிரஞ்சிலும் இங்கிலீஷிலுமாக எத்தனை புனைகதையும், பத்திரிகையில் அன்புள்ள ஜெனீலியா அத்தை என்று ஆரம்பிக்கிற ஆலோசனைப் பத்திகளும் அவர் ஏதோ ஒரு காலத்தில் வாசித்திருக்கிறார்.
பஸ்ஸுக்குள் இருந்து அவர் பார்க்க, இரண்டு ஸ்திரிகளும் காலும் முகமும் அங்கே தண்ணீர் சேந்தி அலம்பி விட்டுச் சுவரில் மாட்டி வைத்திருந்த சின்ன நிலைக்கண்ணாடி பார்த்துத் தலைமுடி ஒதுக்கிக் கொண்டிருந்தார்கள். அதிகாரி மனைவி கைப்பையில் இருந்து ஒரு கருப்புச் சிமிழை எடுத்து வட்டமாக நெற்றியில் திலகம் எட்டுக் கொண்டு உள்ளே திரும்ப வைக்கும் போது தெரிசா ஆர்வத்தோடு ஏதோ கேட்பது தெரிந்தது.
அமேயர் பாதிரியார் எதிர்பார்க்காத விதத்தில் அந்தப் பெண் பொட்டுச் சிமிழை தெரிசாவிடம் பிரியத்தோடு தர, தெரிசா நெற்றியில் சிறியதாகத் தொட்டு வைத்த வட்டமான சிகப்புப் பொட்டோடு பஸ் ஏறினாள்.
முசாபர் கண்டிப்பாக இருந்தாலெயொழிய இதெல்லாம் நிற்கப் போவதில்லை. இந்தியா பார்க்க, இருக்கப்பட்ட மாதா கோவில்களில் பிரார்த்தனை நடத்தி புத்ர பாக்கியம் கிடைக்க, கடலையும், மலையையும், பசுமை படர்ந்த நிலங்களையும் ஆசை தீரக் காண, இந்திய நடனமும், பாட்டும் சினிமாவும் ரசிக்க, இப்படித்தானே வந்த பயணம் இது. இதில் பொட்டு வைப்பதும், கன்னத்தில் போட்டுக் கொள்வதும், கிழக்கில் திரும்பிக் கண்மூடி இருகை கூப்பித் தொழுவதும் எங்கே வந்தது?
பஸ் பெருநகரத்தின் எல்லைக்கு வர, இந்திய அதிகாரியும் மனைவியும் விடைபெற்றுக் கொண்டார்கள். தில்லிக்கு வரும்போது அவசியம் வீட்டுக்கு வரச் சொல்லி அதிகாரி மனைவி அழைத்ததோடு, டூரிஸ்ட் கைடு புத்தகத்தின் கடைசிப் பக்கத்தைப் பிய்த்தெடுத்து அதில் விலாசமும் எழுதிக் கொடுத்தாள். அழைப்பு அமேயார் பாதிரியாருக்கும் உண்டா என்பது பற்றி அவருக்கு சந்தேகம் தான்.
கண்டக்டர் பக்கத்தில் வந்தபோது பாதிரிக் குப்பாயத்தில் கை விட்டு ஒரு துண்டு சீட்டை எடுத்தார் அமேயர் பாதிரியார். பல தடவை பிரித்துப் பிரித்துத் திரும்பி மடித்து வைத்ததால் மடிப்புகள் ஆழமாக விழ்ந்த காகிதம் வாய்க்கால் வெட்டிப் பயிர் செய்த வெள்ளையும் கருப்புமான நிலம் போல இருந்தது.
மன்னிக்கவும் என்று பாதிரியார் குரலைச் சரிப்படுத்திக் கொண்டு சொல்வதற்கு முன் அன்போடு கண்டக்டர் அவர் பக்கம் குனிந்தான்.
அச்சோ, புன்னப்புரம் அல்லே. அரைமணி நேரத்தில் அங்கே போவோம். பின்னெ ஒரு கார்யம், அச்சனும், கூட்டரும் இறங்காதெ நான் வண்டி நகர்த்தான் போகுன்னில்ல. அச்சன் கவலையை விடணும் தயவாயிட்டு.
பலாப்பழத்தை மடியில் செல்லமாக இருத்தி இருந்த ஒரு வயசான பெண்மணி நகைத்தாள். அவள் பக்கத்தில் குழந்தையை அதே படிக்கு மடியில் கிடத்தி இருந்த இளம் வயது பெண்ணும் பூவாகச் சிரிக்க, பஸ் உள்ளே மெல்லிய சாரலாக ஒரு தூறல் மழை நனைத்துப் போனது. குளிர்ந்த காற்றும் வெய்யில் சுடாத இதமான நிலப் பரப்பும் அமேயர் பாதிரியார் மனதில் சாந்தியையும் சந்தோஷத்தையும் விதைத்தன. கொச்சு தெரிசா பற்றியோ வேறு யார் பற்றியோ எந்தக் கவலையும் பட வேண்டியவர் இல்லை அவர். அன்பு காட்ட விதிக்கப்பட்டவர். அது தவிர அதிகாரத்தையும் பலத்தையும் யார் மேலும் கொண்டு செலுத்த அவருக்கு தாக்கீது இல்லை.
பஸ்ஸின் பின் புறம் ஏறி இருந்த சாதுக்கள் வழியில் வெள்ளை விரிந்து தோன்றிய கோவில் மண்டபத்தைப் பார்த்து வணங்கினார்கலள். பெரிய கோபுரமும்,, நடையும், சுற்றுச் சுவருமில்லாத அந்த அம்பலம் பற்றி அறிய அமேயர் பாதிரியாருக்கு ஆசை உண்டு.
கண்டக்டர் டிரைவரிடம் பேசி விட்டு உற்சாகமாகத் திரும்பி வந்தவன். பாதிரியார் பார்வை சென்ற திசையை நோக்கி விட்டு, கை குவித்தான். குருதேவன் என்று பரவசத்தோடு பெயர் சொல்லிப் போனான். கேட்டுக் கொண்டிருந்த கொச்சு தெரிசா தன்னிச்சையாக அந்தத் திக்கில் கை கூப்பியதை ஓரக் கண்ணால் பார்த்தார் அமேயர் பாதிரியார். ஆனால் ஏனோ சங்கடப்படவில்லை அவர்.
பின்னால் இருந்த சாதுக்கள் கை கொட்டிப் பாட ஆரம்பித்தார்கள். தமிழ் சந்நியாசிகள் என்று யாரோ சொன்னார்கள். சந்நியாசிக்கேது மொழி? அமேயர் பாதிரியார் புரியாமல் பார்த்தார். ஆனாலும் பாட்டு அவரைச் சுண்டி இழுத்தது. மெல்ல எழுந்து கூட்டமாக உயர்ந்து உச்ச ஸ்தாயியில் நிலைத்து நின்ற பாடல் அது. சட்டென்று ஒலியும் கதியும் தாழ்ந்து கீழே மென்மையாக இறங்கி, அமேயருக்குப் புரியாத மொழியில் இரைஞ்சின. எல்லா வாதனைகளையும் இசையும் பாட்டும் கொண்டு கரைத்து மேலே பயணம் போக யாருக்கோ விடுக்கும் கோரிக்கையும் கூட.
எறிந்ததோர் அம்பும் எழுதிய பாட்டும்
மறைந்து மறந்தது அந்தோ -திரும்ப
மரத்தினில் அம்பும் மறந்த தோழன்
சிரத்தினில் பாட்டும் இருக்கு… *****
பாட்டு முடிந்த கணமே, பலாப்பழத்தை மடியில் வைத்திருந்த மூதாட்டி மெல்ல ஆனால் குறையாத உற்சாகத்தோடு பாட ஆரம்பித்தாள்.
கரண்டிக்கார பிராமணன்
கள்ளிக்கோட்டை போனானாம்.
சாவக்காட்டான் வழிசொல்ல
சாத்திரத்தை மாத்தினானாம்.
கள்ளுச் சொட்டாக் காப்பியும்
காரவடை இட்டலியும்
வேணுமின்னா ஏறுங்கோ
வேதக்காரன் கடையிலே.
முத்தச்சிக்கு எண்பது வயசு. இன்னும் பலாப்பழம், காப்பி எல்லாம் கேக்குது.
கூட வந்த பெண் சிரித்தபடி சொல்ல, காதில் விழாத முதியவள் அவளுக்கு அருகில் இருந்த கொச்சு தெரிசாவிடம், வேதக்காரன் கடையிலே காப்பி குடிச்சிருக்கியா பெண்ணே என்று கேட்டாள்.
வேதத்திலே ஏறின பிராமணன் வச்ச ஓட்டல். ஏதோ பழைய பாண்டிப் பாட்டு. சிரிச்சுடுங்க. இல்லேனா கிழவி விடாம அடுத்த பாட்டுக்குப் போயிடுவா.
யாரோ இங்கிலீஷில் மொழிபெயர்த்து அதற்குக் கூடுதலாகவும் சொன்னார்கள். கொச்சு தெரிசா ஆச்சரியத்தோடு அவரை ஏதோ கேட்க ஆரம்பிக்க, கண்டக்டர் குரல் உச்சத்தில் எழுந்தது.
புன்னப்புரம்.
அவன் ஓட்டமும் நடையுமாக வந்து அமேயர் பாதிரியாரின் கித்தான் பையைச் சுமந்து கொண்டு, இறங்கலாம் அச்சோ என்றான்.
பலாப்பழத்தோடு முதியவளும், குழந்தையோடு இளையவளும் இறங்க விட்டு, கொச்சு தெரிசாவும் முசாபரும் கடைசியாக அமேயர் பாதிரியாரும் இறங்கினார்கள். மூட்டையை வைத்து விட்டு கண்டக்டர் அமேயர் பாதிரியாருக்குக் கை குவித்தான்.
அவருக்கு எல்லா திசையும் பார்த்துத் தொழ வேணும் என்று தோன்றியது.
ஆண்டவன் ஆசிர்வதிக்கட்டும் என்று பிரஞ்சில் கூறினார் அவர்.
தியே வு பெனி தூஸ்.
(தொடரும்)
’எரிந்ததோர் அம்பும்’ பாடல் – நண்பர் கிரேசி மோகன் எழுதியதிலிருந்து எடுத்தாளப்பட்டது. மோகனுக்கு நன்றி