அப்பா ரெண்டு நாளாக முகம் கொடுத்துப் பேசவில்லை. முகத்தில் சிரிப்பில்லை.
நான் தான் அப்படி நினைத்திருக்க வேண்டும். அவருக்கு பேங்கில் வேலை அதிகம் இருந்திருக்கலாம். விக்தோ, ஓவர்கோட் அக்கவுண்டண்ட், வின்செண்ட் நடராஜன் மற்றும் பேங்கில் இருந்த மிச்சம் பதினெட்டு ஊழியர்கள் அவர் சொல் கேட்காமல் போயிருக்கலாம். அல்லது மெட்ராஸ் தலைமை அலுவலகத்திலிருந்து ராத்திரி எட்டு மணிக்கு மேல் ஃபோன் செய்து பெரிய அதிகாரி கடிந்து கொண்டிருக்கலாம்.
சாயந்திரம் வந்தால் இது சரியாகி விடக்கூடும். அதற்கு வெகு முன்னால், இப்போது தான் பொழுது விடிந்திருக்கிறது. இந்தக் காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய காரியம் ஒன்று உண்டு. நானே வலுவில் இழுத்துப் போட்டுக் கொண்டது.
விக்தோ காலை ஏழு மணிக்கு கடற்கரையில் அவரோடு கூட ஓடுவதற்காக என்னைக் கூப்பிட வந்திருக்கிறார். நேற்று சாயந்திரம் நான் காலேஜில் இருந்து வந்தபோது அவர் பீரோவில் இருந்தார். அவ்வளவு பெரிய, ஆஜானுபாகுவான மனிதர் பார்ப்பது டெஸ்பாட்ச் கிளார்க் உத்தியோகம் என்பது மகா அபத்தமானது.
ஒரு ரூபா ஸ்டாம்புகளைக் கவனமாக எண்ணி, பழுப்பு நிற உறைகளையும் அதே போல எத்தனை என்று பார்த்து பக்கத்தில் டெம்பரவரி ஊழியர் சுந்தரத்திடம் விக்தோ கொடுத்துக் கொண்டிருந்த போது நான் போய்ச் சேர்ந்தேன்.
சீக்கிரம் வேலை முடித்துப் போய் வெள்ளை சாக்ஸ் வாங்க வேண்டும் என்று பக்கத்து நாற்காலிக்காரரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் விக்தோ. என்ன விஷயம் என்று, சம்பந்தமே இல்லாமல் மூக்கை நுழைக்கிற தினசரி வழக்கப்படி நான் கேட்டேன். கடற்கரையில் தினம் காலையில் ஓடி விட்டுத்தான் தான் நாளைத் தொடங்குவதாக மகா பெருமிதத்தோடு அறிவித்தார் விக்தோ.
‘ஓடினால் உடம்பு திம்முனு ஆகும். உன் வயசுக்கும் முகத்துக்கும், பொண்ணுங்க கடிச்சுத் தின்னுடுவாங்க’
அவர் என்னிடம் ரகசியம் போல் கீச்சுக் கீச்சென்று இதைச் சொன்னார். தேவையே இல்லாதபடி, நர மாமிசம் சாப்பிடும் ஏதோ இருண்ட காலக் கலாச்சாரத்தை அவர் மேற்கோள் காட்டினாலும், எனக்கும் விடிந்ததும் கடற்கரை நெடுக ஓட ஆசை தான். அவர் கூட வரலாமா என்று கேட்கத் தயக்கம். மெல்லக் கேட்டேன்.
‘வாயேன், காலையிலே பிக் அப் பண்ணிக்கறேன்’
விக்தோ உடனடி நேசக் கரம் நீட்ட, காலை நடைத் துணைக்கு வழி பிறந்தது.
‘ஷார்ட்ஸ் இருந்தா போட்டுக்கிட்டு வா’
‘அப்படீன்னா?’
‘அதாம்பா, நிஜார்’.
நிஜார் அணிந்த, சைக்கிளில் வரிசை வரிசையாகப் போகிற பெண்கள் மீன் வியாபாரிகளிடம் கடன் வாங்கிய பாடலை ஹும்ம்ம் என்று கோரஸாக மனதில் பாடிக் கொண்டு போனார்கள். மகிழம்பூ பூத்த மாதிரி மனசில் ரம்மியம் சூழ்ந்தது. காலை நடைக்கு அந்தப் பெண்களும் வருவார்களோ. போய்த்தான் பார்க்கணும்.
‘கான்வாஸ் ஷூ இருக்கா?’
விக்தோ கேட்க, சந்தோஷமாகத் தலையாட்டினேன். நல்ல வேளையாக, காலேஜ் என்சிசி மாணவர் படையில் இருப்பதால் காலேஜில் வழங்கிய புதிய கான்வாஸ் ஷூ கைவசம் உண்டு. இனிமேல் தான் கால் வசமாக்க வேணும் அதை.
‘எதுக்கும் டாடி கிட்டே ஒரு வார்த்தை கேட்டுடுங்க தம்பி’
விக்தோ யோசனை சொன்னாலும், இதுக்கெல்லாம் வீட்டில் அனுமதி வாங்க நான் என்ன பத்தாம் கிளாஸ் பையனா என்று தோன்ற, வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தேன்.
ஆனாலும், கிளம்பும்போது அப்பாவிடம் சொன்னேன். ஒரு தகவல் அறிவிப்பாக அது இருந்தது.
‘காலேஜுக்கு லேட் ஆயிடாதோ?’
‘ஒன்பதுக்குத் தானே கிளம்பணும்’
‘படிச்சுட்டியோ?’
எதைப் படிக்கச் சொல்கிறார் என்று தெரியவில்லை. ஆச்சு என்று தலையாட்டினேன்.
சட்டென்று மனதில் தோன்றியது. இவர் இரண்டு நாள் மவுனம் அனுஷ்டிப்பதற்கும், விக்தோவோடு நான் டவுண் ஹாலில் ஆடப் போய் ஜோசபினுக்கு வாய்ப்பாடு கற்றுக் கொடுத்ததற்கும் தொடர்பு இருக்கலாமோ. சேதி அவர் காதில் விழுந்திருக்குமோ.
யார் சொல்லியிருக்கக் கூடும்? பார்வேந்தனார், வின்செண்ட் நடராஜன், தம்பீஸ் கபேயில் கடப்பா ஊற்றுகிற சர்வர் வைரவன், ஆபீஸ் கூட்டும் தனம்மாள் என்று சம்பந்தமில்லாத பேர்வழிகள் நினைவுக்கு வர, சாவகாசமாக இதை விசாரித்துக் கொள்ளலாம் என்று ஒத்தி வைத்தேன். கடற்கரையில் காலையில் ஓடி விட்டு வந்தால் மனம் லேசாகும். வெட்டிக் கவலை எல்லாமே காணாமல் போய் விடும்.
‘போய்ட்டு சீக்கரம் வா. விக்தோ கிட்டே பிரெஞ்சு பேசக் கத்துக்கப் பாரு. மத்ததெல்லாம் அப்புறம் கத்துக்கலாம்’
அப்பா சுமுகமானார். அவர் அப்புறம் என்று சொன்னது பியானோ அக்கார்டியனை என்று நம்பினேன்.
விக்தோவோடு வெளியே வந்தால், ஏகப்பட்ட கூட்டம்.
அது எங்கள் கட்டிட வாசலில் இல்லை என்பதில் கொஞ்சம் நிம்மதி வந்தது. கூட்டம் எல்லாம் தியூப்ளே வீதியும் அதை செங்குத்தாக வெட்டிப் போகும் பாரதியார் தெருவும் சந்திக்கும் இடத்தில் தான். அங்கே ஒரு விநாயகர் கோவில் உண்டு. ஊரில் நல்ல விஷயம் என்று சட்டென்று கண்ணில் படுகிறவை இப்படி அங்கங்கே சின்னதும் பெரிசுமாகத் தட்டுப்படுகிற கணபதிகளே. குடி போதை தலைக்கேறி நேரம் காலம் பொருட்படுத்தாது எந்தத் தெருவிலாவது உருண்டு கிடக்கிறவன் கூட விநாயகனைப் பார்த்து விட்டு கொஞ்சம் தள்ளிப் போய் உருளுவது வாடிக்கை.
பக்கத்துக் கோவிலில் தான் இப்போது பரபரப்பு. அங்கே சூழ்ந்து நின்று, தியூப்ளே தெருவிலும் கசிந்திருக்கிறது. கூட்டமாக நின்று, ‘பரே’, ‘பரே’ என்று வாய் விட்டுக் கூப்பிடும் அத்தனை பேரும் வசதி குறைவான வாழ்க்கை அமைந்தவர்கள். நான் என்ன சங்கதி என்று தெரிந்து கொள்ளக் கொஞ்சம் அருகில் போனேன்.
கோவிலை ஒட்டி ஒரு அம்பாசடர் கார் நின்றிருந்தது. காரில் இருந்து இறங்கிக் கொண்டிருந்த முதியவர் நிச்சயம் பிரெஞ்சுக்காரராகத்தான் இருக்க வேண்டும். தலையில் வைக்கோல் தொப்பி. பல் இல்லாத புன்னகை பழுப்புக் கண்கள் இடுங்கி மிளகாய்ப்பழ மூக்கு விடைத்து தீர்க்கமாக முகத்தில் சந்தோஷம் வரைந்திருந்தது. இப்படி முகம் படைத்தவர்கள் சிரிக்காமல் இருக்க முடியாது.
‘மரக்காணம், நல்லா இருக்கியா?’
பரே என்று அழைக்கப்பட்ட பிரெஞ்சு முதியவர் தன் பக்கத்தில் ஆர்வத்தோடு வந்து நின்ற தெருமுனை ரிக்ஷாக்காரர் மரக்காணத்தைத் தோளில் தட்டி அன்போடு விசாரித்தபடி சட்டைப் பையில் இருந்து ஒரு இரண்டு ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்தார். துலுக்காணம், மண்ணாங்கட்டி, சேத்தூரான் என்று அக்கம்பக்கம் இருந்த ரிக்ஷாக்காரர்களும் குடும்பங்களும் அடுத்து அவரால் அன்போடு விசாரிக்கப்பட்டு ரெண்டு ரெண்டு ரூபாயாக வழங்கப்பட்டன.
‘கஃபே குடி. கள்ளு வேணாம். சரியா?’.
பிரெஞ்சுக்காரராக இருக்க மாட்டார் இவர். இருந்தால், இப்படி சரளமாகத் தமிழ் வாயில் வராதே.
‘புள்ளையை ஸ்கூலுக்கு அனுப்பறியா?’
‘போக மாட்டேங்கறான் பரே’
‘உன் ரிக்ஷா எதுக்கு இருக்கு? பொஸ்தவத்தோட அலாக்காத் தூக்கி’
பரே தெருவில் கால் பரப்பி நின்று எப்படி பையனைப் புத்தகக் கட்டோடு தூக்கி ரிக்ஷாவில் போடுவது என்று அபிநயித்துக் காட்ட உற்சாகமாகக் கூட்டம் கைதட்டுகிறது. எம்.ஜி.ஆர் வந்தால் தான் இது போல் இன்னொரு பரபரப்பு வரும்.
‘ஸ்கூல்லே போட்டுடு’.
‘சரி பரே’
மண்ணாங்கட்டிக்குப் பின்னால் நிற்கிற சின்னப் பையனை முன்னால் இழுத்து, முதுகில் நாலைந்து தடவை மெல்லத் தட்டினார் பரே.
‘நீ பள்ளிக்கூடம் போகலே, குச்சி வச்சு உங்கப்பனை அடிப்பேன், ஆமா’
முதுகில் தடவிய பசு போல குழைகிற அந்தப் பையனுக்கும் ரெண்டு ரூபாய்.
நான் கட்டட வாசலுக்குத் திரும்பி வந்து, பரே என்றால் என்ன என்று விக்தோவைக் கேட்டேன்.
‘உடன்பிறப்பு. ஆம்பளை’.
‘அது அண்ணனா தம்பியான்னு எப்படி சொல்றது?’
‘என்னாத்துக்கு’?
’எதுக்காவது ஆகட்டும்னு தான். வல்லின ற போட்டு பறேன்னு சொன்னா அண்ணா, சின்ன ர போட்டு பரேன்னா தம்பி. சரி தானே?’
விக்தோவுக்கு வல்லினம், மெல்லினம் விவகாரமே தெரியாததால் பயந்து போய் கூடுதல் தகவல் கொடுத்து விட்டார்.
’பெரியண்ணாவை Le Grand frere ல க்ராந் ஃப்ரேன்னு சொல்லலாம்’
வேண்டாம், அவர் அண்ணாவாகவே இருந்து விட்டுப் போகட்டும்.
பரே வைக்கோல் தொப்பியைக் கொஞ்சம் போல் தலையைச் சுற்றித் திருகியபடி நிமிரிந்து பார்க்கிறார்,
‘வின்செண்டு, என்னய்யா செய்யறீரு?’
வாயே பல்லாக, குக்கிக்கு அள்ளிய வைக்கோல் சிதற மகிழ்ச்சியோடு கையை உயர்த்தினார் வின்செண்ட் நடராஜன்.
‘போன்ழூர் பரே. உங்க புண்ணியத்துலே ஏதோ ஓடுது’
கூளத்தோடு வேகமாக கார் பக்கம் வந்தார் வின்செண்ட்.
‘அந்த பிரெஞ்சு பஸ்போ.. கன்சல் கிட்டே பரே சொன்னா நடக்கும்’
‘ஆமாய்யா, இந்தா இந்தான்னு பிரெஞ்சுக்காரன் தாம்பாளத்துலே பாஸ்போர்ட்டும் பிஸ்கோத்தும் சொக்லத்தும் வச்சு நீட்டிட்டு இருந்த போது நீர் அந்த .. பேரு என்ன?
அவர் வாக்கியத்தை முடிக்காமல் தலையை ஆட்டிச் சிரித்தபடி, கார் ஓட்டி வந்த இன்னொரு வயோதிகரைப் பார்த்தார்.
‘மயிலத்துப் பொம்மனாட்டி’ என்றார் காரோட்டி வந்த பரேவின் நண்பர். வின்செண்ட், கூளத்தில் இருந்து ஈயோ கொசுவோ மூக்கில் போன மாதிரி மூக்கைப் பரபரவென்று சொரிந்தபடி சிரித்தார். வெட்கப்படுகிறாராம்.
‘பார்க்கலாம். நாளைக்கு என் பீரோவுக்கு வாரும்’
பரே முகத்தில் சட்டென்று ஏதோ அசௌகரியம் தெரிந்தது. கார் நண்பரிடம் காதில் ஏதோ சொன்னார்.
‘போயிடலாமா? என்றார் அவர் அவசரத்தை உணர்ந்து.
பரே வின்செண்ட் நடராஜனைப் பார்த்தார். அவர் பரே பக்கம் நகர்ந்தவர் உடனே வேகவேகமாகத் தலையாட்டினார்.
‘ரொம்ப சுத்தமா, வெள்ளைக்காரங்க போறது மாதிரி வச்சிருக்கு பரே. வாங்க’.
கூட்டம் ஒரு நிமிடத்தில் கலைந்து போக, பரே பேங்க் கிளைக்கு நடந்தார். அவருக்கு ஆதரவாக இரண்டு பக்கமும் தோளில் கை வைத்துத் தாங்கி அவருடைய நண்பரும், வின்செண்டும் வந்தார்கள்.
இன்றைக்கு கடற்கரையில் ஓடப் போன மாதிரித்தான் என்று தோன்றினாலும், அவ்வளவு பெரியவர் ஏதோ சிரமத்தில் இருக்கிறார் என்பது வருத்தம் கொடுத்தது.
‘போன்ழூர் பப்பா’ என்று விக்தோ அவருக்கு வணக்கம் சொன்னார், உள்ளே கடந்து போகும்போது.
‘நல்லா இரு’ என்கிற மாதிரி ஆசீர்வதித்தபடி நடந்தார் பரே.
‘பப்பான்னா அப்பா. அவர் வயசுக்கு எங்கப்பா மாதிரித்தான்.’
பரே நீரிழிவு நோயால் அவதிப்படுவதாகவும், பாத்ரூம் உபயோகிக்க வேண்டிய அவசரம் என்றும் விக்தோ சொன்னார். நானே ஊகித்திருந்தது தான் அது.
‘பரே, அங்கே தான்.’
பப்பா கை உயர்த்தி அவரையும் ஆசிர்வதித்து விட்டு நடந்து, அடுத்த பத்தாவது வினாடி திரும்பினார்.
‘வின்செண்ட், என்னை விட அவசரமா யாரோ வந்துட்டுப் போயிருக்காங்க போல’
வந்த அவசரத்தில் பரே போக, தர்ம சங்கடமான மௌனம் அங்கே. நான் வின்செண்ட் நடராஜனை முந்திக் கொண்டு பின்னறைக்குப் போய் அதே வேகத்தில் திரும்பினேன். பரே துன்பத்தை எல்லாம் பொறுத்துக் கொண்டு திரும்பிப் போனதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்று தோன்றியது.
கழிப்பறை வாசலில் நின்று வாட்ச்மேன் வின்செண்ட் நடராஜன் வழக்கத்தை விட அதிகமான டெசிபல்களில் யாரிடம் என்றில்லாமல் புகார் சொல்லிக் கொண்டிருந்தார்.
‘பாம்பே கக்ஸுலே வெள்ளைக்காரன் ஏறி உக்கார ஒண்ணு, நம்ம மனுசன் குந்த இன்னொண்ணு வச்சது சரிதான். அது என்னத்துக்காக நின்னுக்கிட்டே போறதுக்கு தனியா ஒண்ணை வெளியே வைக்கணும்?’
அப்பா கீழே வந்தபோது இந்தக் களேபரம் எல்லாம் முடிந்து மூக்கு அறுந்து விழும் அளவுக்கு துர்வாடையும், அமைதியுமாக இருந்தது பேங்க் ஹால்.
‘குளிச்சுட்டு வர்றதுக்குள்ளே என்ன கலாட்டா?’
‘ல க்ராந் ஃபரே வந்திருந்தார் சார்’ என்றார் விக்தோ ஒற்றை வாக்கியத்தில்.
அப்பா தலையாட்டி விட்டு, வின்செண்ட் நடராஜனிடம் தன்னிலை விளக்கம் எதிர்பார்க்கிறது போல் அவரைப் பார்த்தார்.
‘யாருக்கோ அவசரம் ஐயா. இங்கே புகுந்துட்டான் போல. நின்னு போற பீங்கானை, உக்காந்து போறதா வேறே நினைச்சுட்டான். எப்படிடா அம்புட்டு உயரம் ஏறி உக்காரன்னு யோசிச்சு, நாற்காலியை போட்டு ஏறியிருக்கான்.’
வின்செண்ட் சொல்ல, விக்தோ சிரிக்க ஆரம்பித்து அது தப்பு என்று படவோ என்னமோ முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டார்.
‘வின்செண்ட், எல்லாம் சரிதான், இங்கே, பேங்குக்குள்ளே எப்படிப் புகுந்தான்?’
வின்செண்ட் புருபுரு என்று விரோதமாக அப்பாவைப் பார்த்தார். குற்றம் சாட்டப்பட்டதாக நினைப்பவர்கள் வைத்துக் கொள்ளும் முகபாவம் அது.
வாசலில் கூட்டமாக நிற்பது என்ன விஷயத்துக்காக என்று பார்க்கப் போன போது பரே தன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதாகவும் அதனால் போக வேண்டிப் போனது என்றும் முணுமுணுத்தார். அந்த நேரத்தில் உள்ளே யாராவது புகுந்தால் தான் ஒன்றும் செய்ய முடியாது என்று அறிவித்து, அடுத்த வினாடி அறிவிப்பைச் சற்றே மாற்றினார்.
தான் வாசல் கதவுக்கு முதுகைக் காட்டியபடி திரும்பி நின்று பரேயைப் பார்க்கும் போது கவனத்தில் படாமல் யாரோ சின்னப் பயல் விளையாட்டாக உள்ளே நுழைந்திருக்க சாத்தியம் உண்டு என்றார் வின்செண்ட். தெருவும், உலகமும், வஞ்சனையில்லாமல் சாப்பிடும், ஜீரண சக்தியில் எவ்விதக் குறைவும் இல்லாத விஷமக்காரச் சின்னப் பயல்களால் ஆனது இல்லையா?
‘ஆமா, இது வெளியே வச்ச பீங்கான் கமோ தானே, உள்ளாற உக்காந்து போக பின்னாடி ரூம் இருக்கே’
விக்தோ தன் பங்குக்கு சந்தேகம் கேட்டார். காலை நேரம் கழிப்பறை விசாரணைகளில் நகர்ந்து கொண்டிருந்தது.
‘நான் அதைப் பூட்டி சாவியை எங்கேயோ கை மறதியா வச்சுட்டேன் முசியே. கூளம் போடப் போனேனா, அப்போ?’
பாதியில் நிறுத்தி வின்செண்ட் நடராஜன் காம்பவுண்ட் சுவர்ப் பக்கம் ஓடினார். குக்கி மென்றது போக மிச்சம் இருந்த சொற்ப வைக்கோலில் கை அளைந்து தேடி, அந்தத் தொலைந்து போன சாவியோடு திரும்பவும் வந்தார்.
என்னால் பரேயின் அவஸ்தையை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
பத்து நிமிஷமாகத் திறந்து விட்டிருந்த தண்ணீர்க் குழாயை நிறுத்தி விட்டு தொப்பமாக நனைந்தபடி வந்தார் வின்செண்ட் நடராஜன். பிரச்சனை தீர்ந்த திருப்தி அவர் முகத்தில். அடுத்து எப்போதாவது திருப்தி அவருக்கு வரும் பட்சத்தில், மெல்ல மயிலம் பொம்மனாட்டி பற்றி விசாரிக்க வேண்டும்.
‘ஏண்டா அவ்வளவு பெரியவர், மிஸ்டர் பரே, அவர் நம்ம பேங்குக்கு வந்திருக்கார். ஒரு ஆத்திரம் அவசரம்னா அவரை மேலே கூட்டி வந்திருக்கக் கூடாதா நீயாவது?’
அப்பா என்னைக் கேட்டார்.
அதானே என்றார் வின்செண்ட் நடராஜன். அதானே என்றார் விக்தோ. அதானே என்றாள் மேகலா.
அதானே! நான் தான் முழு மூடன். அடிக்கடி மூளை லீவு போட்டு விட்டுக் காற்று வாங்கப் போக, அதில்லாமலேயே மூச்சு விடுகிறவன். மற்றவர்கள் அதி புத்திசாலிகள்.
‘மேலேயும் தண்ணி போகாம ஃப்ளஷ் அடச்சிருக்கு, பிளம்பருக்கு ஃபோன் பண்ணனும்’
அப்பா பரே மாதிரி ஒரு தெய்வீகச் சிரிப்போடு டெலிபோன் பக்கம் நடந்தார்.
(தொடரும்)