புது bio-fiction: தியூப்ளே வீதி – அத்தியாயம் 8 இரா.முருகன்


ஒரு சின்னக் கோணலும் நெளிவும் இல்லாமல் கிழக்கில் இருந்து மேற்கே விரியும் தெரு வரிசை சவரிராயலு தெருவில் ஆரம்பிக்கிறது. அந்தத் தெருவைச் செங்குத்தாக வெட்டி வடக்கே போக, ரூ பெத்தி கனால், ரூ சாந்த் தெரைசா என்று பிரஞ்சு மணக்கும் பெயர்களோடு இணைத் தெருக்கள்.

ரூ என்றால் தெரு.

தொடர்ந்து, நல்ல தமிழாக நீடாராசப்பையர் தெரு, ரங்கப்பிள்ளை தெரு, தியாகு முதலி தெரு என்று அளந்து ரசமட்டம் வைத்து உறுதி செய்து அடுக்கிய அடுத்தடுத்த தெருக்கள்.

சாயந்திர நேரத்துக் கடல் காற்று சீராக வீசும் தெருக்களை சைக்கிளில் விரசாகக் கடந்து நான் ரங்கப்பிள்ளை தெருவில் நுழைய, டிராபிக் போலிஸ்காரர் அவசரமாக விசில் ஊதி நிறுத்தினார்.

வெளுத்து மெலிந்தவர். ஆறடிக்குக் கொஞ்சம் உயரமானவர். இங்கே வந்த பிரஞ்சு வெள்ளைக்காரர் யாரோ குடியும் குடித்தனமுமாக இருந்து விட்டுப் போயிருக்கிறார். அவருடைய அடுத்த தலைமுறை வாரிசாக இங்கேயே பிறந்து வளர்ந்தவர் இவர். அசல் பிரஞ்சும் அவ்வப்போது சுமாரான தமிழும் பேசக் கூடியவர்.

என்ன இருந்து என்ன, படிப்பு போதாமலோ என்னமோ, பஞ்சப்படி, பயணப்படி, யூனிபாரம் அலவன்ஸ் என்று உள்ளூர் உத்தியோகத்தில் தான் இவர் வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது.

காக்கி யூனிபாரத்தை அணி செய்யும் போலீஸ் தொப்பியோடு தெருவுக்குக் குறுக்கே நிற்கிற ஒபிசியே, அதாவது ஆபீசர்.

போலீஸ் தொப்பி என்றால் மற்ற இடத்தில் எல்லாம் அப்போது நிலவிய சிவப்புக் கிரீடம் வைத்தது போன தலையலங்காரம் இல்லை. அவசரமாகத் தட்டையாக அடித்து வளைத்துத் தலையில் இடுக்கியது இந்த பிரஞ்சுத் தொப்பி. கம்பீரமே கொஞ்சமும் இல்லாதது.

தொப்பி எப்படி இருந்தால் என்ன? என்னை நிறுத்தி விட்டார்.

என்ன தவறு செய்தேன் மிசியே?

மில்லர் டைனமோ பின் சக்கர டயரில் இழைந்து முன்னால் விளக்கு எரிய வைக்காமல் வந்தேனா? சூரியன் இன்னும் மறையாத மாலை நேரத்தில், எதற்கு அந்த அலங்காரம் எல்லாம்?

சைக்கிளில் லைசென்ஸ் தகடு பொருத்தாமல் வந்தேனா? லைசன்ஸ் எடுத்து சைக்கிள் ஓட்ட, இதென்ன ரெட்டைத் தெரு நடுநாயகமாக விரியும் செம்மண் பூமியா?

அல்லது, பின் சீட்டில் மேகலா நெருங்கி என் கழுத்தில் மூச்சுக் காற்றைப் பூவாகத் தூவியபடி உட்கார்ந்து வர, சைக்கிள் மிதிக்கிறேனா? வெறும் தனியன்.

எதுவுமே இல்லை என்றால் ஒருவழிப் பாதைக்குள் தவறான திசையில் வந்தேனோ?

வெய்ட், இந்தக் கடைசிக் காரணம் கொஞ்சம் எசகேடானது.

தூக்கம் போதவே போதாமல் படுக்கையில் சும்மா புரண்டு கொண்டிருந்து விட்டு எழுந்த யாரோ, அல்லது பின்னால் இறுகித் தக்கை அடைத்தது போன்ற நிலையில் காலைக் கடன் தீர்க்காமல் போன இன்னொருத்தரோ, அல்லது பல் துலக்கியதும் சூடாக ஒரு கப் கஃபேயோ டீயோ கிடைக்காமல் போன மற்றொருத்தரோ, இல்லை இவர்கள் எல்லோருமோ சேர்ந்து உட்கார்ந்து அவ்வப்போது இந்த ஊரில் முடிவு செய்வார்கள் –

‘இன்றிலிருந்து கொசக்கடை தெரு மேற்கில் இருந்து கிழக்கே ’சான்ஸ் யுனீக்’, அதாவது ஒருவழிப் பாதை என்று ஏற்படுத்தி முரசறைந்து உடனடியாக அமுலாக்கப்படும்’.

முடிவு எடுக்கும் உரிமை படைத்த எல்லோருக்கும் எல்லாமும் சரியாக இருக்கும் சுப தினத்தில், லூயிபிரகாசம் தெருவின் ’ஒன் வே’ தடை தவிடுபொடியாகி, ’த லே தூ சான்ஸ்’ அதாவது ’ரெண்டு பக்கமும் போய்க்கோ’ ஆகக் கூடும்.

ஊர் முழுக்க இன்று ஒன்வே ஆக்கி விட்டார்களோ என்னமோ. போலீஸ்காரர் மறிக்கிறாரே.

நான் கேள்விகளே பார்வையாக நிற்க, அந்த ஒபிசியே கிழக்கு நோக்கி ரங்கப்புள்ளை தெருவில் சுட்டிக் காட்டினார்.

‘து லா ரூ ரங்கப்பூ…’.

அவர் சாத்வீகமாகத் தொடங்கியது கெட்ட வார்த்தையில் முடிந்த மாதிரி ஒலித்தது.

து லா என்றால்?

ஒபிசியே கையசைவை வைத்து அங்கிருந்து ஏதோ வருகிறது என்று ஊகித்தேன்.

‘கெதாவ’ என்றார் அவர்.

என்னடா இது வம்பாப் போச்சு என்று மனக் குடைச்சலோ குமைச்சலோ ரவுண்டு கட்டி அடித்தது. இனிமேற்கொண்டு தெருவில் இறங்கினால் சைக்கிள் இருக்கோ என்னமோ, இங்கிலீஷ் – ப்ரஞ்சு அகராதி, அதுவும் உச்சரிப்போடு இருப்பது கைவசம் இல்லாமல் கிளம்பக் கூடாது.

திரும்ப அவர் ‘கெதாவ’ என்றபடி அபிநயித்துக் காட்ட முயற்சி செய்ய, தெருக் கோடி வீட்டில் இருந்து கிளம்பி வந்து கொண்டிருந்த சவ ஊர்வலம் கண்ணில் பட்டது.

உயிர் போனது யாராக இருந்தாலும் நேரே சொர்க்கம் தான் கிடைக்கணும் என்று வாழ்த்தினேன். இன்னொரு ப்ரஞ்சு வார்த்தை அவர் புண்ணியத்தில் கற்றேன்.

தொண்டு கிழவர் ஒருவரின் கெதாவ காலில்லாக் கட்டிலில் அமர்க்களமாகக் கொண்டு போகப்பட்டது. ஓரமாக நின்று தொப்பியை எடுத்துக் கையில் பிடித்தபடி மௌனமாக அஞ்சலி செலுத்தினார் அந்த பொலீஸ் ஒபிசியே.

அவர் மட்டுமில்லை, தெருவில் போகிறவர்களும் வருகிறவர்களும் கூட அந்த ஊர்வலம் கடந்து போகும்போது அஞ்சலி செலுத்தத் தவறவில்லை. இந்த ஊரில் கற்றுக் கொள்ள என்னவெல்லாம் உண்டு!

போ என்று என்னை நோக்கி சைகை செய்தார் ஒபிசியே.

நான் வண்டியில் ஸ்டைலாக ஏறும் போது பக்கத்து தியாகு முதலி தெருவில் இருந்து ஏதோ சத்தம். வண்டி வருகிறது. அதன் ஹார்ன் சிக்கி தீனமாக நாய்க்குட்டி போல் ஒலித்தது.

ப்ரேக் பிடிக்காத லாரி ஏதாவது அந்தச் சின்னத் தெருவில் இருந்து தடாலடியாக இங்கே நுழைந்தால் நான் அந்த போலீஸ் ஒபிசியேக்காக தொப்பி போட்டு பின் அதைக் கழட்ட வேண்டி வரும். அல்லது அவர் எனக்காக மௌனம் அனுஷ்டிப்பார்.

என்ன சத்தம் என்று ஒபிசியே புருவம் உயர்த்தி விட்டு தெரு ஓரம் போனார். நானும் ஒதுங்க வாகாக வண்டியைத் திருப்பினேன். பந்தயத்தில் இறங்கின மாதிரி மின்னல் வேகத்தில் ஒரு லாம்ப்ரட்டா ஸ்கூட்டர். அது தியாகு முதலி தெருவில் இருந்து வந்தபடிக்கு என் சைக்கிளின் முன் சக்கரத்தில் மோதியது.

சைக்கிள் சரிந்தாலும், அது தரையைத் தொடும் முன்னர், லாகவமாக ஒரு காலால் உயர்த்தித் தூக்கி நிறுத்தி நிலையாக நின்றேன். இத்தனை வருடம் சைக்கிள் ஓட்டி இந்தப் புத்திசாலித்தனம் கூடக் கைவராமல் எப்படிப் போகும்?

வந்த வேகத்தில் ஸ்கூட்டர் குடை சாய்ந்தது சாய்ந்தது தான். அது மட்டுமில்லாமல், ஸ்கூட்டர் ஓட்டி வந்தவரும் அரக்கப் பறக்க தெரு மண்ணில் விழுந்தார். பூத்தாற்போல் விழுந்ததால் அடி எதுவும் இல்லை என்பதைக் கவனித்தேன். வந்த இடைஞ்சல் லாரியாக மோதாமல், ப்ரேக் பிடிக்காத ஸ்கூட்டரான நிம்மதி.

விழுந்த ஸ்கூட்டரின் த்ராட்டில் எகிறி அய்யோ அய்யோ என்று உச்சத்தில் இரைந்தது. எனக்கு முன்னால் தரையில் சிரம் தாழ்த்தி வணங்கிக் கிடந்தவரைச் சபித்தபடி கைதூக்கி விடும்போது ஆள் யாரென்று பார்த்தேன்.

வல்லூரி சார்.

கல்லூரிக்கு நான் எவ்வளவு புதுசோ அதை விட ஒரு வாரம் புதியவர் வல்லூரி. என்ன, நான் போன மாதம் முதல் புதன்கிழமை மாணவனாகச் சேர்ந்திருக்கிறேன். அதற்கு அடுத்த திங்கள்கிழமை வல்லூரி இங்கிலீஷ் லெக்சரராக வந்து நின்றார்.

ஆந்திராக்காரர். நடுத்தர உசரத்தில், நல்ல புஷ்டியான தேகத்தோடு, செக்கச் சிவந்து வழிந்து பரங்கிக்காய் போல் அவர் உருண்டு வந்து நின்றதுமே வகுப்பில் கைதட்டும் சிரிப்பும் பறந்தது. நான் சேர்ந்து நாலு நாளில் பிசுபிசுத்துப் போன கல்லூரி ராகிங்கின் மிச்ச சொச்சமாக வல்லூரி ராகிங் இது.

விபத்தோடு தொடங்கியது அந்த ராகிங்.

பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, கணக்கு, தாவரவியல், விலங்கியல் என்று அவரவருக்கான துறையில் தனித்தனிக் கூட்டமாக வகுப்பெடுத்துக் கடைத்தேற்றப்பட வேண்டியவர்கள் நாங்கள். என்றாலும் எல்லோருக்கும் பெய்யும் மழையான தமிழும் இங்கிலீஷும் மிகச் சிலருக்கு பிரஞ்சும், சேர்ந்தே கற்க வேண்டிய ஏற்பாடு. கம்பைண்ட் க்ளாஸ் என்று பரிபாஷையில் அறியப்படும் சமாசாரம்.

’சேர்ந்து கற்போம்’ தொடங்கிய போது கடைசி வரிசைக் குழுவும் அமைக்கப்பட்டது. வகுப்புகள் தொடங்கிய வாரத்திலேயே கடைசி வரிசைக் குழுவும் தன்னிச்சையாகச் சேர்ந்து விட்டது.

குழுவில் சேர ஒரே தகுதி சராசரிக்குக் கொஞ்சம் பெரிய ஆகிருதி வேண்டும். சிரிக்க வேண்டாத இடத்தில் சிரிப்பது, அவ்வப்போது கூட்டமாக ஹூம்ம்ம் என்று ஒலி எழுப்புவது, வெளியே போகிற யாரிடமோ குசலம் விசாரிப்பது, கண்ணை மூடி அவ்வப்போது தூங்குகிற பாவனையில் ஆடுவது என்று வகுப்பு நடக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில குழு நடவடிக்கைகள் உண்டு.

ஜீவகன், ஜெராமென், அந்துவான், சாதிக், ஃப்ரான்ஸுவா ஆகியோர் அடங்கிய அமைப்பு இது.

கூட்டு வகுப்புகளில் கடைசி வரிசை நாற்காலிகளில் மட்டுமே உட்காருவது என்ற கொள்கைப் பிடிப்பு கொண்டிருந்த இந்த மூத்த சகாக்களோடு, கௌரவ உறுப்பினர் பதவி எனக்கும் அளிக்கப் பட்டிருந்தது.

வைஷாலி, மற்றும் இதர பெண் தேவதைகளிடம் சகஜமாகப் பழகும் ஒரே விடலைப் பையன் என்ற வயற்றெரிச்சல் நிரந்தர உறுப்பினர்களுக்கு. என்றாலும், இவன் எந்த விதத்திலாவது உபயோகப்படுவான் என்று நினைத்து அளிக்கப்பட்ட பதவி.

அவர்கள் இஷ்டப்பட்டு இடமும் இருந்தால் அவ்வப்போது நான் பின் வரிசையில் கம்பீரமாக உட்கார உரிமை கிடைத்திருந்தது.

இந்தக் குழுவுக்கு, காலேஜ் பியூன் மாசிலா நம்பகமான தகவலாகக் கொடுத்திருந்தார் –

‘கேரளத்துப் பொண்ணு. லில்லி தாமஸ்னு பேரு. வாத்தியார் வேலைக்குச் சேர்ந்திருக்கு. முதல் வகுப்பு உங்களுக்குத்தான்’.

லில்லி தாமஸ் என்ற அந்த அழகான பெண் மாசிலாவிடம் தான் பிரின்சிபால் அறைக்கு வழி கேட்டிருக்கிறார். படிக்க வந்த புதுமுகம் என்று நினைத்த மாசிலா அவரை ஆபீசுக்கு ஆற்றுப் படுத்த, லில்லி தன்னிலை விளக்கம் கொடுத்தாராம்.

‘கட்டுமஸ்தா இருக்குதுப்பா. பம்பினோ போலச்சொல்ல அம்சமான புள்ளே’.

கட்டுமஸ்தான என்ற ஆம்பளைத்தனமான சொல்லை மாசிலா மலையாளப் பெண் லெக்சரருக்கு உரித்தாக்கி, கற்பனையைக் கர்லா கட்டை சுழற்ற வைத்தார்.

‘பம்பினோன்னா?’

நான் அவசரக் குடுக்கையாகக் கேட்க, ‘பம்பினோ வேணாமா, சரி, அந்த சினிமா வந்துச்சே, பேரென்ன, செம்மீனு.. அதுலே வர்ற பொம்பளை .. சீலா. அது மாதிரி’.

போதும் என்று நிறுத்தினேன்.

மாசிலாவுக்கு அன்றைக்குக் கிடைத்தது புகையிலைக்கான துட்டு மட்டுமில்லை. கடைசி வரிசைக் குழு உபயமாக கூடுதல் வருமானமும்.

‘தம்பு நாயக்கர் தெருவுக்குளாறே பூந்தா வருமில்லே முசே, அந்த குல்தெ சாக்கிலே, அதாம்பா முடுக்கு சந்து, அங்கே தான் கடை. கதவு மூடறதே இல்லே’பா. நூறு திராம் பிராந்தி, வறுத்த மீன். இது வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன். ரொம்ப ஆசைப்படக் கூடாது. வரட்டா?’

பெருந்தன்மையாகச் சொன்னபடி மாசிலா கிளம்பினதை மறக்க முடியுமா?

செம்மீன் ஷீலாவை ஐம்பது சதவிகிதம் தள்ளுபடி செய்தாலும் நேரில் பார்க்கக் கணிசமாக மிச்சம் இருக்கும் என்பதால், திங்கள் கிழமை காலை வகுப்பில் லில்லியை எதிர்பார்த்து எங்கள் கோஷ்டி முதல் வரிசைக்கு வந்தது. அங்கே வழக்கமாக உட்காரும் பெண்கள் எல்லாரும் முணுமுணுத்தபடி பின்னால் போனார்கள். அவங்க பெயர்? எதுக்கு? அதான் பின்னாலே போயாச்சே.

கதவு திறக்கும் சத்தம். கழுக்கு முழுக்கென்று படு குஷியாக, பத்மினி மன்னவன் வந்தானடி பாடும் போது அங்கீகரித்து நடக்கும் சிவாஜி போல உள்ளே நடந்து வந்தவருக்கும் செம்மீன் ஷீலாவுக்கும் ஸ்னானப் பிராப்தி கூட இருக்க முடியாது.

இவர் மீசை மழித்த சேப்பங்கிழங்கு. தெலுங்கு சினிமாவில் இடைவேளைக்கு முன் கண்டசாலா குரலில் தத்துவப் பாடல் பாடும் அண்ணன் ரக மனிதர். விட்டலாச்சாரியா படத்தில் அசடான இந்த அண்ணாச்சி, ஜோதிலட்சுமி டான்ஸ் பார்த்து முடிக்கிற போது செம்மறியாடு ஆகும் படி சபிக்கப்படுவதும் உண்டு.

‘கட்டு மஸ்துன்னாரே மாசிலா, சரியாத் தான் சொல்லிருக்காரு’

எல்லோருக்கும் ஏக காலத்தில் தோன்றியதை ஜீவகன் சோக கீதமாக இசைக்க, அவர் வந்த படிக்கே கையை வீசி ஆட்டியபடி சத்தமாகச் சொன்னார் –

‘நமஸ்காரமு பிரண்ட்ஸ். ஐ யாம் வல்லூரி. வல்லூரி வீரேசலிங்கம் பந்துலு’.

கை தட்டியபடி முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த கடைசி வரிசை கோஷ்டி இந்த அறிவிப்பால் கவரப்பட்டு உடனடியாக ஏகப்பட்ட குஷியாகி, ஒரே குரலில் ‘கிழங்கு’ என்று கூவியது. நான் சும்மா வாயசைத்தேன்.

மொழி புரியாத வரவேற்பில் பெருமகிழ்ச்சி அடைந்த வல்லூரி சிறிய மரப்படிகளில் ஸ்டைலாக ஏறினார். மேலே சிமெண்ட் மேடையில் நின்று வகுப்பெடுக்க தயாரான சந்தோஷமும் பரபரப்பும் முகத்தில் தெரிந்தது.

மூன்றே மூன்று மரப்படி. அவர் மூன்றாவதில் ஏறும்போது படிக்கட்டு மளுக்கென்று உடையும் சத்தம்.

அடுத்த வினாடி, வல்லூரி வகுப்புத் தரையில் தலை குப்புறக் கிடந்தார். முன் வரிசையான பின் வரிசைக் குழு, ராகிங் பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாமல் பாய்ந்து சென்று அவரைத் தூக்கி நிறுத்தியது.

வல்லூரி தினசரி வகுப்புக்கு வரும்போது இப்படிக் கும்பிட்டு விழுந்து வருவது தான் வாடிக்கை என்பது போல சகஜமாக முகத்தை வைத்துக் கொண்டு சாமுவெல் டெயிலர் கால்ரிட்ஜின் கவிதையைத் தொடங்கினார். குப்ளா கான் என்றார்.

கிழங்கு என்று ஓயாமல் ஓங்கி ஒலித்த ஆரவாரத்துக்கு நடுவே கால்ரிட்ஜ் டெய்லரோ, குப்ளா கானோ அன்றைக்கு வகுப்புக்குள் வர முடியவில்லை.

‘மகா பொறுக்கிடா நீ. உனக்கு வாய்ச்ச சிநேகமும் டிட்டோ’.

மனதில் தெற்றுப்பல் தேவதை ஒன்று திட்டியது. மேகலா தான்.

அடுத்த நாள் லாபரட்டரியில் ஏதோ மின்சார சர்க்யூட்டை வெகு பத்திரமாக ஏற்படுத்தி அமிலக் கரைசலில் தகடு செருகி வெப்பத்தைக் கணித்துக் கொண்டிருந்தபோது எதிரே கெமிஸ்ட்ரி லாபில் தடால் என்று பெருஞ்சத்தம்.

புரபசரோடு நாங்களும் ஓடிப்போய்ப் பார்க்க, வல்லூரி, கிடந்த கோலத்தில்.

சொந்த ஊர்க்காரர் யாரையோ அங்கே கெமிஸ்ட்ரி டெமான்ஸ்ட்ரேட்டராகப் பார்த்த சந்தோஷத்தில் வல்லூரி பாய்ந்து உள்ளே போக, லாப் சிப்பந்தி சவரிராயலு பெரிய கண்ணாடிப் பாத்திரத்தில் என்ன கண்றாவிக்காகவோ கொண்டு வந்த துத்தநாகக் கரைசலைத் தட்டி விட்டு விழுந்தாராம்.

சுக்கு நூறாக உடைந்த கண்ணாடிக் குடுவை, தரையில் நீல வெள்ளமாகப் பெருகிய துத்தநாகக் கரைசல், சவரிராயலுவுக்கு உள்காயம் ஏற்பட்டதாக அவருக்கே சந்தேகம் ஏற்பட்டதால் கல்தேசாக் கடையில் நூறு திராம் திரவத்துக்கான செலவு என்று வல்லூரிக்கு செலவு கணக்காம்.

அடுத்த நாள் மாடிப்படி இறங்கும்போது உலக ஆண் வரலாற்றிலே முதல் முறையாக, பேண்ட் தடுக்கி விழுந்து வல்லூரி காலில் சிராய்ப்பு, மோதிக் கொண்ட பிரஞ்ச் மதாமின் மூக்குக் கண்ணாடி தெறித்து விழுந்து உடைய, பழுது பார்த்தல்.

வெள்ளிக்கிழமை சாயந்திரம் பஸ்ஸில் திரும்பிய வல்லூரி அம்பலத்தடியார் தெருவில் இறங்கும் முன் வண்டி கிளம்ப, தெருவில் பூ விற்றுக் கொண்டிருந்த பெண் மேல் மோதி விழுதல். பூ நாசம். பூவைக்குக் கஷ்டம். நஷ்ட ஈடு.

அடுத்த திங்கள் கேண்டீனீல் இட்லிக்கு பசும்பால் தொட்டுக் கொண்டு சாப்பிடும்போது வல்லூரிக்குப் புரையேறித் தும்ம, தண்ணீர்க் கிளாஸ் தரையில் விழுந்து உடைதல். கேண்டீனுக்குள் எண்ட்ரி கொடுத்த பேராசிரியை தமிழன்னை காலில் கண்ணாடி குத்திய வகையில் புறங்காலில் இருந்து சில்லு எடுக்க, ஊசி போட செலவு பகிர்தல். இதோடு, வல்லூரி இட்லிக்கு பால் தொட்டுக் கொண்டு சாப்பிட்ட அராஜகத்துக்கும் அபராதம் விதித்திருக்க வேண்டும்.

வல்லூரியின் பக்கத்து வீட்டுக் காரனான ஃபெலிக்ஸ் ராஜரட்னம் சொன்னபடிக்கு – பிரம்மசாரி கல்லூரி வாத்தியார்கள், பேங்கு கிளார்க்குகள் சேர்ந்து வசிக்கும் குடித்தனத்தில், எலக்ட்ரிக் இஸ்திரிப் பெட்டியை உபயோகிக்க வல்லூரி சுவிட்சைப் போட்டாராம். பக்கத்துச் சுவரில் சாய்ந்து நின்ற பேங்க் கிளார்க் துள்ளி விழ வைத்த மின்சார அதிர்ச்சி. பிளக்கை பிடுங்குகிறேன் பேர்வழி என்று சுவிட்ச் போர்டையே வல்லூரி பிடுங்கி வைக்க, தெருவோடு கரண்ட் போனதாம்.

அப்புறம்.

வேண்டாம். வல்லூரி விபத்துகளை சீராக நடத்தவே பிறப்பிக்கப் பட்ட அபூர்வப் பிறவி.

அங்கே விழுந்து இங்கே விழுந்து இப்போது என் ராலே இருபது இஞ்ச் சைக்கிளுக்குக் குறுக்கேயும் பாய்ந்த புண்ணியம் கட்டிக் கொண்ட வல்லூரி அசட்டுச் சிரிப்போடு எழுந்தார். எழுந்திரு என்று சொல்கிற மாதிரி ஸ்கூட்டர் பக்கம் கையைக் காட்டினார். அதற்கு மட்டும் உசிர் இருந்தால் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டி விட்டுத் திரும்பப் படுத்திருக்கும்.

இல்லாத பட்சத்தில், டிராபிக் கான்ஸ்டபிள் அந்த லாம்ப்ரட்டாவைத் தூக்கி நிறுத்தி விட்டு வல்லூரியைப் பார்த்துக் கேட்டார் –

‘து யெ ஃபூ’?

வல்லூரி அவசரமாக உய் உய் உய் என்று மூன்று தடவை சொல்ல, அடக்க முடியாமல் சிரித்தபடி தட்டைத் தொப்பியைத் தலையில் இறுக்கிக் கொண்டு போக்குவரத்து பரிபாலனம் செய்யத் திரும்பிப் போனார் ஒபிசியே.

அது என்ன து யெ பூ, அரளிப் பூ, பிச்சிப் பூ மாதிரி ப்ரஞ்சு பூவா? யாருக்குத் தெரியும்?

வல்லூரியைத் திரும்பிப் பார்த்தேன். காரியமே கண்ணாக இருந்தார் அவர்.

இந்தி சினிமாவில் ஷர்மிளாவை ராஜேஷ் கன்னா சாய்த்துப் பிடித்தபடி டூயட் பாட முனைகிற மாதிரி, ஸ்கூட்டரை எசகு பிசகாகப் பிடித்து உதை விட ஆரம்பித்தார் அவர்.

இன்னும் பத்து செகண்ட் அதைத் தொடர்ந்தால் வண்டியைக் காலில் போட்டுக் கொண்டு விடுவார் என்ற பயத்தில் நான் கெத்தாக ‘து யெ ஃபூ’ சொல்லியபடி ஸ்கூட்டரை என் பங்குக்கு ஓங்கி ஓங்கி உதைத்தேன். அது சிவனே என்று சாந்தமாக நின்றது.

வலமும் இடமுமாக நேரமும் காலமும் திசையும் பிரக்ஞை இல்லாமல் ஆடிக் கொண்டு வந்த ஒரு குடிமகன் என் பக்கத்தில் நின்று என்ன நடக்கிறது என்று கண்கள் கிறங்கப் பார்த்தார். அவர் வாயின் முந்திரிப்பழ வாடையில், அந்தத் தெருவிலிருந்து கடல் காற்றே பின்வாங்கியது.

‘புக்… ஹக் … க்ளக்.. யெவ்வ்.. ப்ள.. கெக்’

நாலு தடவை தப்பாகத் தொடங்கி ஒரு வழியாக விஷயத்துக்கு வந்தார் அவர் –

‘பிளக்கை க்ளீன் பண்ணி யக்.. யெவ்வ். ஸ்டார்ட் ஓவ்வ்வ்’.

தெரு முனையில் தள்ளாடியபடி குந்தி உட்கார்ந்த அவரை மரியாதையோடு பார்த்தேன்.

எனக்கு ஸ்கூட்டர் வசப்படாமல் இருந்த அந்தக் கற்காலத்தில், அதீத தொழில்நுட்பமாகத் தெரிந்தது அந்த அறிவுரை.

என்ன பிளக்கோ? எப்படி கிளீன் பண்ண வேண்டுமோ, ஒன்றும் புரியவில்லை.

‘இங்கே மெக்கானிக் ஷாப் பக்கத்துலே இருக்கா?’

வல்லூரி வாத்தியார், ஷேக்ஸ்பியர் ஜூலியஸ் சீசரை விசாரிக்கிறது போல் என்னைக் கேட்க என்ன பதில் சொல்ல? சாய்சில் விட வேண்டிய கேள்வி ஆச்சே.

பக்கத்தில் யூதிகோலனின் இதமான வாடை. அதையும் மீறி நுட்பமான பெண்வாசனை.

நிமிர்ந்து பார்த்தேன்.

ஜோசபின்.

இந்த மாலை நேரம் தேவதைகளால் வாழ்த்தப்பட்டிருக்கிறது. இப்போது முதல்.

கருப்பு கலரில் இறுக்கமான கார்டுராய் கால் சராயும், மேலே குளுமையான மஞ்சளில் சின்னச் சின்ன வயலெட் பூவாகத் தெளித்திருக்கும் எடுப்பான ஜிப்பாவும், தலைகுளித்து, மின்னுகிற கருப்பில் அடர்ந்த கூந்தலுமாக சைக்கிளில் வந்த யட்சி. கன்னத்தில் இழையும் முடிக் கற்றையைத் தள்ளி விடக் கை பரபரக்கிறது.

வால்ட்ஸ் ஆடச் சொல்லிக் கொடுக்க வந்திருக்கிறாள். கல்தேசாக்கு கடைக்குப் போகாமல், கடற்கரையில் கூட அமர்ந்து சிவப்பு ஒயின் ஊட்ட வந்திருக்கிறாள்.

‘யாரு அது, ப்ரண்டா?’

அவள் வல்லூரி பக்கம் ஓரக் கண் பார்வையை எறிந்து என் காதில் கேட்டாள்.

என்ன செய்தாலும் ஒன்ஸ் மோர் கேட்க வைக்கிற அழகு. கேட்டேன்.

‘என்னது?’

ஜோசபின் சொன்னது காதில் விழாதது போல் அவள் பக்கம் சாய்ந்தேன்.

உதடு என் காது மடலில் உரச ஏற்கனவே நான் காதில் வாங்கிய கேள்வியைத் திருப்பினாள்.

‘எங்க காலேஜ் வாத்தியார். தமிழ் தெரியாது’.

வல்லூரி, சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல உய் என்றார் எங்கள் ரெண்டு பேரையும் பொதுவாகப் பார்த்து.

’இங்கே பக்கத்தில் மெக்கானிக் கடை உண்டா’?

கால் முட்டியைக் குனிந்து தடவியபடி தெலுங்கு ஷேக்ஸ்பியர் ஜோசபினைக் கேட்டார். அவர் மேல் எனக்குக் கோபம். கேள்வியை என் மூலமாகக் கேட்க வேண்டியது தானே?

ஜோசப் மரியாதையான குரலும் உடைந்த ஆங்கிலமுமாக விளக்கியது –

‘அடுத்த ரெண்டு தெரு தள்ளி, கேண்டீன் தெருவில் இருக்கு. கொஞ்சம் இருங்க’.

சட்டென்று, சைக்கிளில் எதிர்ப் பக்கம் இருந்து சைக்கிளில் வந்த யாரோ ஒரு சோல்தோ ரக ரெண்டுங்கெட்டான் வயசுப் பெரிசைத் தடுத்து நிறுத்தினாள். அவரிடம் ஒரு நிமிடம் பிரஞ்சில் கூவினாள். அந்த ஆசாமி பரவசமடைந்து வண்டியில் உட்கார்ந்து பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி போனான்.

‘ஒர்க்ஷாப்பிலே சொல்லச் சொல்லியிருக்கேன். ஆள் வரும். ரெண்டு நிமிஷம் தெரு ஓரமா வெயிட் பண்ணுங்க மெத்ரெ’.

நன்றியோடு வல்லூரி பார்த்தபடி இருக்க, நான் ஜோசபினோடு சேர்ந்து சைக்கிள் மிதித்து கபே ஹவுஸை நோக்கி ஓட்டினேன்.

பத்து நிமிடத்தில் வந்து சேர்வதாக ஏன் இந்தக் காபிக் கடை இருக்கிறது? இந்த சாயந்திரமும் அது கடந்து ராத்திரியும் ஊர்ந்து போகட்டும். ஜோசபினும் நானும் கிழக்கு நோக்கி, அங்கே கடல் இரைந்தாலும் இன்னும் இன்னும் போய்க் கொண்டே இருக்க வேணும்.

‘உருப்பட்டாப் போல தான்’

வேறே யார்? கேரியரில் மானசீகமாக உட்கார்ந்த மேகலா தான்.

அவள் குரல் காதில் கேட்காமல் சைக்கிள் மணியைத் தொடர்ந்து அடித்து முன்னால் போனேன்.

‘தெருவிலே யாருமே இல்லே. எதுக்கு இப்படி லொடலொடன்னு மணி அடிக்கறே?’

ஜோசபின் கேட்டாள்.

உய் வேண்டாம். கெதாவ-ரும் சரிப்படாது இந்த அழகான பெண்ணிடம் கொஞ்சலோடு சொல்ல. வேறே என்ன உண்டு, பிரஞ்சில்?

‘மெத்ரெ’ என்றேன்

‘நான் உனக்கு வாத்தியாரா?’ என்றபடி சிரித்தாள் ஜோசபின்.

‘பின்னே இல்லியா?’

‘எதுக்கு வாத்தியாருக்கு முத்தம் கொடுத்துட்டு ஓடினே?’

அவள் ஓரக் கண்ணால் பார்த்தபடி கேட்டாள். சைக்கிள் ரெண்டும் மனம் விட்டுப் பேசியபடி உருண்டு போனது.

’து யெ ஃபூ’ என்றேன் கிசுகிசுப்பான குரலில்.

‘என்னது?’

அவள் சைக்கிள் என் ராலேக்கு முத்தம் கொடுப்பது போல் நெருங்கி வந்தது.

அழுத்தம் திருத்தமாகச் சொன்னேன் –

‘து யெ ஃபூ’.

‘நீ தான் பித்து பிடிச்சவன்’

சைக்கிள் ஓட்டியபடியே ஹாண்டில் பாரில் இருந்து கையை எடுத்து என் முதுகில் அடித்தாள் ஜோசபின். அடித்த வேகத்தில் அவளுடைய சைக்கிள் சரிய, சட்டென்று அவள் இடுப்பில் கை கொடுத்து நிமிர்த்தினேன்.

கண்ணால் சிரித்தபடி ‘து யெ ஃபூ’ என்றாள்.

கபே ஹவுஸ் வந்திருந்தது.

(தொடரும்)

(தினமணி இணையத் தளத்தில் ஜூலை 2, 2015 பிரசுரம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன