புது BioFiction: தியூப்ளே வீதி அத்தியாயம் 9 இரா.முருகன்


பகல் வெய்யில் பாழாகாமல் கணக்கு புரபசர் கால்குலஸ் வகுப்பில் லெய்பினிஸ் தியரத்தை விளக்கிக் கொண்டிருந்த போது, லெச்சு ஜன்னலுக்கு வெளியே நின்று சைகை காட்டினான். ஏதோ தலை போகிற அவசரம் அவனுக்கு.

மொத்தமே இருபது பேருக்கு நடைபெறும் வகுப்பு என்பதால், பின் வரிசையை ஒட்டி இருக்கும் ஒருக்களித்த கதவைத் திறந்து இஷ்டம் போல வெளியே நழுவ முடியாது. உள்ளே திரும்பி வந்து, கும்பலில் ஒருத்தனாக உட்கார்ந்து, ரஃப் நோட்டில் பால் பாயிண்ட் பேனாவால், முன் வரிசையில் உட்கார்ந்திருக்கும் அம்புஜவல்லியையோ, உமாராணியையோ, புஷ்பகலாவையோ கோட்டுச் சித்திரமாக வரைய முடியாது. லெய்பினிஸ் தியரம் மூலம் சக்ஸஸிவ் டிஃபரன்சிஷேயன் நிறைவேறும் உலக மகா அதிசயத்தை கணக்கு புரபசர் ராமநாதனோடு சேர்ந்து மெச்ச வேண்டும்.

நான் அவசரமாக லெச்சு பக்கம் திரும்பி, வர்றதுக்கு இல்லை என்று தோளைக் குலுக்கினேன். இந்த ஊருக்கு வந்து கப்பென்று பிடித்துக் கொண்ட சைகை வழக்கம்.

லெச்சு ‘என்ன?’ என்று அபிநயித்தான். அவன் நிற்கிற கட்டட இடுக்கிலிருந்து நாட்டியமே ஆடலாம். நான் இருக்கப்பட்ட இடம் அப்படியா?

திரும்பத் தோளைக் குலுக்கினேன்.

‘சுளுக்கிக்கப் போவுது. பார்த்து’.

லெய்பினிஸ் தியரத்துக்கு மொத்தக் குத்தகைக்காரர் தான். நின்ற இடத்தில் இருந்து டிபரன்சியேஷனுக்கு ஓய்வு கொடுத்து என்னைக் கிண்டலடிக்கிறார். அதைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். அம்புஜவல்லியும், உமாராணியும், புஷ்பகலாவும் கெக்கெக்கெக்கென்று சிரித்ததை எப்படிப் பொறுக்க?

‘ஐ யாம் சாரி’.

மிடுக்காகச் சொல்லி வெளியே வர நினைத்தாலும், பதற்றத்தில் பாதி வார்த்தை தொண்டையில் நின்று ஐ ஐ ஐ என்றபோது நல்ல வேளையாக மணி அடித்து முழு வகுப்புமே வெளியேறியது.

மண்டபத்து மறைவிடத்தில் இருந்து பிரத்யட்சம் ஆனான் லெச்சு.

‘முக்கியமான வேலை இருக்குன்னா, வர மாட்டேங்கறியே’ .

அவன் அலுத்துக் கொண்டான்.

‘நீ எலக்ஷனுக்கு வேலை செய்வேன்னு பார்த்தா, நழுவிட்டுப் போறே. உடனொத்தவன் எல்லாம் என்னமா உழைக்கறான். கமலஹாசன் மாதிரி தலைமுடி வச்சுக்கிட்டா மட்டும் பத்தாதுடா. கமல்ஹாசன் மாதிரி உழைப்பு தேவை. புரியுதா?’.

லெச்சு முழங்கினான். எனக்குப் புரிந்தது. ஆனால் லெச்சு மெச்சும் விதத்தில் கமல்ஹாசன் என்ன மாதிரி உழைத்தார் என்பது தான் புரியவில்லை.

‘மாணவன்’ என்று சமீபத்தில் ஒரு வெள்ளிக்கிழமை சாயந்திரம் சினிமா பார்த்தோம். பார்த்தோம் என்றால், எங்கள் கடைசி வரிசை கோஷ்டிதான்.

என்னோடு ரெட்டைத் தெரு பிராயத்தில் இருந்து, ரெட்டைத் தெருவுக்கும் வந்து, கூட நின்று கிரிக்கெட் ஆடாமல் போனவர் கமல்ஹாசன். அவர் தியூப்ளே தெரு வயசுக்கு இப்போது என்னோடு வந்திருந்தார்.

‘மாணவன்’ படத்தில் கமல், குட்டி பத்மினியோடு ஆடிய ‘விசிலடிச்சான் குஞ்சுகளா’ பாடல் லெச்சுவுக்கு விவித்பாரதி போர்ன்விட்டா ஜிங்கிள் போல, எப்போதும் புத்துணர்ச்சி தருவது. மதராஸ் ரேடியோ ஸ்டேஷன் விவித்பாரதிக்கு போஸ்ட் கார்ட் போட்டு தினசரி ஒலிபரப்ப வைத்த கீதமாகிப் போனது அந்தப் பாட்டு. ‘மாணவன்’ படம் மெஜந்தா தியேட்டருக்கு வந்து மூணு வாரம் ஓடிக் காணாமல் போகும் வரை தினசரி சாயந்திரம் காட்சியில் லெச்சு ஆஜர். கமல் ஆடி முடிப்பது மட்டும் பார்த்துத் திருப்தியோடு தினம் வெளியே வந்தவன் அவன்.

‘என்ன டான்ஸ் என்ன டான்ஸ், மச்சான் பிச்சு உதர்றாண்டா’ என்று உடனடியாக கமலஹாசனை உறவாக்கிக் கொள்கிற ஆனந்தத்தை என்னிடமும் எதிர்பார்க்கிறானோ என்னமோ.

‘எலக்ஷனுக்கு நான் ஒண்ணுமே செய்யலேன்னு நெஞ்சைத் தொட்டு சொல்லு பார்ப்போம்’

லெச்சுவிடம் வருத்தத்தோடு தெரிவித்தேன்.

‘பின்னே இல்லியாடா? இன்னும் தட்டி எழுதி முடிக்கலே. நாளையில் இருந்து க்ளாஸ் நடக்கும்போது எந்த கிளாஸானாலும் சரி, லெக்சரர் பெர்மிஷன் வாங்கிட்டு, சரியாக ஐந்து நிமிஷம் தேர்தல் பிரசாரம் பண்ணலாம். அப்போ பேச மேட்டர் முடிவு செய்யணும்’.

லெச்சு அடுக்கிக் கொண்டே போனான்.

நேற்று பிற்பகல் அரங்கேறத் தொடங்கிய ஓரங்க, பல அங்க நாடகம் எலக்ஷன்.

‘எலிக்ஷன் து கூசெய்ல் த காலேஜ்’, ‘எலக்ஷென் ஃபார் தி காலேஜ் கவுன்சில்’, ‘கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தல்’ என்று மூன்று மொழியிலும் ஒரே மாதிரி வளையம் வளையமாகச் சுழித்து பிரின்சிபால் கையெழுத்தோடு நேற்றுப் பகலில் அறிவிப்பு வெளியானதும் எலக்ஷன் சூடு பிடித்தது.

செயலாளர், தலைவர் என்று இரண்டு பெரும் பதவிகள், செயற்குழு உறுப்பினர்கள் நாலு பேர். அதில் ஒருவர் மகளிர். இவர்களை ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

‘செக்ரட்டரி போஸ்டுக்கு நான் நிக்கப் போறேன்’

நேற்று மாலை, நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் கூட்டத்தை கேண்டீனில் கூட்டி, லெச்சு அறிவிப்பு செய்தான்.

ஜோராகக் கை தட்டினோம். என்ன போச்சு?

‘செக்ரத்தேர் என்னாத்துக்கு? பிரசிதொ நிக்குது?’

பி.ஏ பிரஞ்சு மூணாம் வருஷம் சாந்தி ரோஜர் கேட்டாள்.

‘சாந்தி ரோஜர், பிரசிடெண்ட் டம்மி, அதான் செக்ரட்டரிக்கு நிக்கறது’ என்றான் லெச்சு எகத்தாளமாக.

‘நான் சாந்தி ரோஜர் இல்லை, சாந்தி ரொழெ’ என்றாள் சாந்தி அதை விட எகத்தாளமாக. ஆனாலும் லெச்சு மேல் விசுவாசம் வைத்துக் காலேஜ் கேண்டீனில் கூடிய கூட்டத்தில் அவளும் உண்டு.

‘முதல்லே என்ன செய்யணும்?’

லெச்சு கூட்டத்தை கம்பீரமாக இடவலமாகவும் வலம் இடமாகவும் மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் பார்த்து விட்டுக் கேட்டான்.

‘கடவுள் வாழ்த்து பாடணும்’ என்றேன் முந்திரிக் கொட்டையாக.

‘ஜில்ப்பாப் பையா, முதல்லே நன்கொடை வசூலிக்கணும்’.

புல்வார்டிலும், ஆசிரமத்துப் பக்கம் ரூ ரிச்மோ நடைபாதையிலும் டூரிஸ்ட்களைக் குறி வைத்துக் கையில் தொப்பி ஏந்தி நின்று காசு தேற்றச் சொல்வானோ என்று நினைக்கவே நடுக்கமாக இருந்தது. ஜோசபின் பார்த்தால் மானம் போகும்.

‘நான் பார்த்தாலும் தான்’

மனசில் எப்போதுமே உலவிக் கொண்டிருக்கிற தெற்றுப்பல்காரி தாவணியை நேராக்கிக் கொண்டு சிரித்தாள்.

‘நொன்கொத?’

வார்த்தை புரியாமல் திரும்பக் கேட்டாள் சாந்தி ரொழெ. பிரெஞ்சு பேச எனக்கு ஒரு நுட்பம் புலப்பட்ட மாதிரி இருந்தது. வார்த்தைக்கு வலிக்காமல் நாக்குக்கும் சிரமம் இல்லாமல் ட எல்லாம் த, ர எல்லாம் ல என்று மாற்றி, கடைசி எழுத்தை வேணுமென்றே உச்சரிக்காமல் முழுங்கினால் ப்ரெஞ்ச் ரெடி!

‘தொனேஷ’ என்றேன்.

‘என்னது?’ என்றாள் ரொழெ பொண்ணு.

‘டொனேஷன்’ என்றேன் நம்ம மொழியில்.

‘டான்?’

ரொழெ அதிசயத்தை அபிநயித்தாள்.

அதில் என்ன சந்தேகம்? லெச்சு ஒரு பிடி உசரமாகி, பேங்க் வாட்ச்மேன் ஆல்பர்ட் நடராஜன் மாட்டு வண்டி ஓட்டும்போது போட்டுக் கொள்வது போல வைக்கோல் தொப்பியும் வைத்தால் லெச்சுவும் டான் தான்.

‘கொம்பியென் தெ ஃப்ரான்’? என்று விசாரித்தாள் ரொழெ.

‘எத்தனை பிராங்கா? டொனேஷன் வாங்கறதுன்னு வச்சாச்சு. அது எவ்வளவு ஆனா என்ன, பிரெஞ்சு கரன்சி, ரூபா பைசா எல்லாம் பியாவென்யூ’.

ரொழெயோடு வந்திருந்த அமீலி மூக்கால் பேசினாள். கயல்விழியோடு கூட, விலங்கியல் முதல் வருடம். சாவகாசமாக அவளை வர்ணிக்கலாம்.

அமீலி பியாவென்யூ சொன்ன போது ஜோசபினை நினைத்துக் கொண்டேன். கபே ஹவுஸ் அரையிருட்டில் கன்னத்தோடு கன்னம் இழைந்து கொண்டு அவள் தலைமுடியை முகர்ந்தபடி அவளிடம் பிதற்றியதையும்.

ரொழெ கைப்பையைத் திறந்து மூன்று பத்து ரூபாயாக, முழுசாக முப்பது ரூபாய் எடுத்துக் கொடுக்க, கூட்டமே பிரமித்துப் போனது.

‘நம் ஆதரவு பெற்ற பெண் வேட்பாளர்’ என்று லெச்சு உடனே அறிவித்துக் கைதட்டலை அள்ளினான். ஆளாளுக்கு பாக்கெட் மணி துட்டில் இருந்து அவனுக்குக் கிள்ளிக் கொடுக்க, என் சட்டைப் பையில் கை விட்டு சுவாதீனமாக முழுக் காசையும் எடுத்துக் கொண்டது மட்டுமில்லாமல், லெச்சு ஆணையிட்டான் –

‘இன்னும் நாலு நாள் பாக்கெட் மணி எல்லாம் பொதுப் பணம், என்ன?’

நேற்றைய தினம் எலக்ஷன் பற்றிய நம்பிக்கைகளோடு நகர்ந்தது அப்படித்தான்.

இன்றைக்கு வந்ததுமே அவனுக்குக் கப்பம் கட்டி விட்டேன். போதாதென்று வேலை செய்யக் கூப்பிடுகிறான். லெப்யெனிஸ் தியரத்தை அந்தரத்தில் விட்டுவிட்டு எப்படி வர முடியும் என்றால் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறான். அவன் பிரெஞ்சு பி.ஏ மூணாம் வருஷம். கிளாஸ் போகாமலேயே பாஸ் பண்ணலாமாம். எல்லாருக்கும் அப்படியா என்ன?

‘வாடா, கேண்டீன் போகலாம். அங்கே தான் நம்ம எலக்ஷன் ஆபீஸ்’

தள்ளிக் கொண்டு போனான் லெச்சு. சாயா வாங்கிக் கொடுத்து, ‘இவன் கணக்குலே எழுதிக்குங்க. அடுத்த வாரம் கொடுத்துடுவான்’ என்றான் தாராளமாக. நேரம்.

‘உனக்கு நல்லா தமிழ் தெரியுமில்லே?’

லெச்சு கேட்க, சும்மா தலையாட்டினேன்.

லெச்சுவிடம் நான் மேகலாவை பற்றி நூறு குறுங்கவிதை எழுதியதாகச் சொல்லியிருக்கக் கூடாது தான்.

‘என்னை செகரட்டரியா தேர்ந்தெடுக்கச் சொல்லி நாலைஞ்சு வரி எழுதுடா’.

இம்போசிஷன் கொடுத்து விட்டு இன்னொரு சாயாவுக்குக் கட்டளை பிறப்பிக்க, நான் லூயி க்ளமெண்ட்டின் தமிழ் உரைநடை வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டு லெச்சுவின் மெய்க்கீர்த்தியைத் தயாராக்கினேன்.

நான் தமிழில் எழுதியதை அவனே மொழிபெயர்க்க ஒப்புக் கொண்டான். இந்தக் கண்றாவியை பிரெஞ்சிலும் படித்துப் பயப்பட வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தோடு அந்த மொழியை விட்டுவிட்டோம்.

‘அப்புறம் என்ன பண்ணனும்?’

அலாவுதீன் பூதம் மாதிரி அவனுடைய அடுத்த கட்டளைக்காகக் காத்திருந்தேன்.

‘தட்டி எழுதிடலாம் வா உக்காரு. நாளைக்கு ஒரு லுங்கி எடுத்துவந்துடு. தரையிலே, படியிலே, மண்ணுலே மரத்திலே எல்லாம் உக்கார சௌகரியமா இருக்கும்’.

இந்த வேதாளத்துக்கு வாக்கப்பட்டு எந்த மரத்தில் லுங்கியோடு ஏறணுமோ.

‘லச்சு என்ற அரியாங்குப்பம் குப்புசாமி லட்சுமணனை தேர்தலில் வெல்ல செய்யுங்கள்’

கேண்டீன் வாசலில் உட்கார்ந்து இண்டியன் இங்க் தோய்த்து கை கூப்பி நிற்கிற மீசைக்காரன் படம் வரைந்து எழுதிக் கொண்டிருந்தபோது தென்றல் வீசிய இதம். நிமிர்ந்து பார்த்தேன்.

கயல்விழி சிற்றுண்டிக்காகவோ, நொறுக்குத் தீனிக்காகவோ பட்டுப்பூச்சி போல அழகான மூக்குக் கண்ணாடி அணிந்த பிரெஞ்சுத் தோழி அமீலி சகிதம் கேண்டீனுக்கு வந்து கொண்டிருந்தாள். வாசலில் கால் பரப்பி உட்கார்ந்து தட்டி எழுதுகிற என்னைப் பார்த்து என்ன எழுதுகிறேன் என்று பார்க்கக் கொஞ்சம் முன்னால் சாய்ந்து நின்றாள். ஜீவனாம்சம் லட்சுமிக்கு கால் சராயும் வளமான பிரஞ்சு டாப்ஸும் மாட்டியது மாதிரி அட்டகாசமான இருப்பு அது.

எழுந்து அவள் பக்கத்தில் போய் ‘நச்சுனு நாலடி வெண்பா மாதிரி இருக்கே’ என்று ரகசியம் சொன்னேன். முகத்தில் பசலை படர நாணினாள்.

அப்படீன்னா? யாருக்குத் தெரியும்? நேற்று சேர்ந்து கற்போம் தமிழ் வகுப்பில் பேராசிரியர் தமிழன்னை நடத்திய பாடத்தில் அரைகுறையாக கேட்டது.

‘புணர் .. அதாவது, சொற்கள் சேரும்போது கவனமாகக் கையாளணும்’ என்றாள் கயல்விழி. அவள் மறைத்த சொல்லை மனதில் பூர்த்தி செய்து சிரித்தேன்.முறைத்தாள். ஆனாலும் இலவச ஆலோசனையைத் தொடர்ந்தாள் –

‘லெச்சுவைத் தேர்தலில். நடுவிலே த்து வரணும். அப்புறம் வெல்ல செய்யுங்கள்’.

‘இச்சு போடட்டா?’ என்று ஆர்வமாகக் கேட்டேன்.

‘ஏய் சீய்’ என்று மோனையோடு நாணம் காட்டினாள். தினசரி தேர்தலாக இருக்கக் கூடாதா?

சாயந்திரம் காலேஜ் பஸ்ஸில் போகிற லெச்சுவின் நண்பர்களுக்கு எல்லாம் ஆறே முக்கால் மணி மரக்காணம் பஸ்ஸில் டிக்கெட் வாங்கி ஏற்றி விட ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி கொடுத்தான் லெச்சு.

ரெண்டு தட்டி எழுதியானது. அவற்றில் லெச்சுவை வெல்லச் செய்ய ஒன்றுக்கு இரண்டாக ‘ச்’ போட்டுக் கயல்விழியின் இச்சையைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தபோது சந்தேகம் எழுந்தது.

கேண்டீன் உள்ளே நீஸ் தண்ணி என்று இந்த வட்டாரத்தில் அழைக்கப்படும் கழனித் தண்ணி திடத்திலும் பதத்திலும் சுவையிலுமாக, ஆறிப் போன கேண்டீன் சாயா குடித்துக் கொண்டிருந்த லெச்சுவிடம் கேட்டேன் –

‘ஆமா, நமக்கு யாரு எதிரி?’

‘நல்ல வேளை, எலக்ஷன் முடிஞ்சு கேக்காம போனியே’.

எதிர்த்து நிற்கிற கோஷ்டியில் வில்லியனூரிலிருந்து வந்து ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் வைத்தியலிங்கம் என்ற வைத்தி செக்ரட்டரி பதவிக்கு நிற்கிறாராம். ஹாஸ்டல் மாணவர்கள் எல்லோரும் அவருக்குத் தான் ஓட்டுப் போடுவார்கள் என்று தோன்றுகிறதாம்.

அடுத்து வந்த நாட்களில் லெச்சுவின் பிரசாரகனாக நான் வகுப்புகளில் பேச நியமிக்கப் பட்டேன். அந்துவான் ‘நானும் வரேண்டா’ என்று ஒட்டிக் கொண்டபோது ஒன்றும் சொல்ல முடியவில்லை.

அந்துவானுக்கு பேச்சு அவ்வப்போது திக்கும். வார்த்தை வாயில் சிக்கிக் கொள்ளும்போது அவனுடைய குரல் ஏகப்பட்ட டெசிபல் உயர்ந்து விடுவது வாடிக்கை. திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படும் அந்த வார்த்தை மட்டும் வெளியே வந்தால் போதும். அடுத்த ஐந்து நிமிடம் கவலை இல்லை. இப்படி ஒரு கொசுக்கடி பிரச்சனை இருந்தாலும், சட்டை செய்யாது புகுந்து புறப்பட்டு பட்டையைக் கிளப்ப அஞ்ச மாட்டான் அந்துவான்

ரெண்டாம் ஆண்டு மாணவர்களின் சேர்ந்து கற்போம் இங்கிலீஷ் கிளாசில் பங்கஜாட்சன் நாயரிடம் அனுமதி பெற்றுப் பிரச்சாரத்தை ஆரம்பித்தேன்.

‘நீ இரு. நான் பாத்துக்கறேன்’.

அந்துவான் உற்சாகமாக ஆரம்பித்தான் – ‘லெச்சுவுக்கு நீங்க ஓட்டு போடணும். ஏன்னா ஏன்னா ஏன்னா ஏன்னா’.

ஆரம்பத்திலேயே தடங்கல். சரி செய்ய நான் உடனே குறுக்கே வெட்டினேன் –

‘லெச்சு வென்றால் நீங்கள் வென்றது போல. லெச்சு வென்றால் காலேஜ் பஸ் கட்டணம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். லெச்சு வென்றால் கேண்டீனில் விலை குறையும். லெச்சு வென்றால் கேண்டீனில் சூடும் சுவையுமாக சிற்றுண்டி, தேநீர் கிடைக்கும். லெச்சு வென்றால் வகுப்புக்கு மூணு மின்விசிறி பொருத்த ஏற்பாடு செய்யப்படும். லெச்சு வென்றால் பேரவை சார்பில் மாதம் ஒரு நல்ல சினிமா, கல்லூரியில் திரையிடப்படும்’

‘ஏன்னா ஏன்னா மலையாளப் படம் பார்க்க நாம் படற கஷ்டம் நமக்குத்தான் தெரியும்’

அந்துவான் மறுபடி வார்த்தை வசப்பட்டு முடித்து வைக்க ஒரே கைதட்டல்.

‘இந்த இருவர் அணியே இருக்கட்டும்டா, மாத்தவே வேணாம்’

லெச்சு அறிவித்து விட்டான்.

ஒவ்வொரு ஐந்து நிமிடக் கூட்டத்திலும் கடைசி பத்து செகண்ட் கடனே என்று ‘பேரவைப் பெண் உறுப்பினர் பதவிக்கு ரொழெயைத் தேர்ந்தெடுக்கவும்’ என்று முடிக்க வேண்டிப் போனது. ரொழெ கொடுத்த காசு தினசரி சாப்பாடு, நொறுக்குத் தீனி, சிலருடைய சிசர்ஸ் சிகரெட் செலவு இதற்கெல்லாம் ஈடு கொடுத்ததால், ரொழெக்கும் சேர்த்தே ஓட்டு கேட்க வேண்டிய நிர்பந்தம்.

பச்சை, சிகப்பு, மஞ்சள் என்று கலர் கலராக லெச்சுவின் பிரச்சார நோட்டீஸ்களை வகுப்பு வகுப்பாகக் கொடுத்தோம். காலேஜ் பஸ்ஸில் வினியோகித்தோம். கேண்டீனில் கொடுத்தோம். மரக்காணம், மஞ்சக்குப்பம், அரியாங்குப்பம், வில்லியனூர் போகிற ரூட் பஸ்களைக் கூட மிச்சம் வைக்கவில்லை.

‘பொம்பளைப் பிள்ளைக்கு வீட்டுலே சடங்கு சுத்தறீங்க போலே. நல்லா இருங்க. கறி விருந்தா, சேவல் அடிச்சா?’ என்று ஆர்வமாகக் கேட்ட பெரிசுகளுக்கு அப்புறம் விளக்குவதாகச் சொல்லி ஓட ஆரம்பித்த பஸ்சில் இருந்து காயம்படாமல் குதித்தோம்.

மயிலத்தில் இருந்து நையாண்டி மேளம் செட் வரவழைத்தான் அந்துவான். அவர்கள் நீட்டி முழக்கி ஊத, மூன்று வேளை கல்லூரியை இடவலமாகச் சுற்றி ஊர்வலம் போனான் லெச்சு.

‘நீ ஒரு தூது போய்ட்டு வரணுமே’

லெச்சு கூப்பிட்டுக் கையைப் பிடித்துக் கொண்டதுமே விவகாரம் என்று புரிந்து கொண்டேன்.

‘வைஷாலி சொன்னா மற்ற சீனியர் பொண்ணுங்க எல்லாம் ஓட்டுப் போடுவாங்க. உனக்கு ப்ரண்ட் தானே. கொஞ்சம் சொல்லேன்’

அவன் கெஞ்சினான்.

‘எப்படிச் சொல்லணும்? சலாம் மகாராணின்னு தரையில் மண்டி போட்டா?’

நான் கூர்மையாகப் பார்த்தபடி கேட்டேன். பூனைக்கு வந்த காலம் பத்து செகண்ட் நீடித்தாலும் வந்தது வந்ததுதானே.

‘குத்திக் கிளறாதேடா. அதெல்லாம் இன்னொரு நேரம். இன்னொரு இடம். இன்னொரு லெச்சு. இன்னொரு நீ. நான் மன்னிச்சுடறேன். நீ. மறந்துடு’

ஆனால், வைஷாலி மறக்கவில்லை.

‘எத்தனை பேரை இடுப்பிலே வேப்பிலை செருகிக்கிட்டு வெய்யில்லே ஆட வைச்சான் லெச்சு. அவனுக்கு எங்க ஓட்டு வேணும்னா கேண்டீன்லே நாளைக்கு மத்தியானம் நாலு மணிக்கு அவன் வேப்பிலையோட ஆடணும். பியான் ஸ்யூர். கட்டாயம்’

ஆடினான். கேண்டீன் பின் சுவரை ஒட்டி நாலு பெஞ்சுகளை ஒன்றாகப் போட்டு மேடை கூடவே மயிலம் நையாண்டி மேளம் இசைவாக வாசிக்க கல்லூரியே கேண்டீனுக்கு வந்து விட்டது. பத்து அடி இடைவெளி விட்டு நின்று கைதட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களில் வைஷாலியும் உண்டு.

உற்சாக மிகுதியில் தானும் ஆடலாம் என்றோ என்னமோ வல்லூரி சார் பெஞ்சுகளில் தாவி ஏற, பெஞ்சுக்கு ஒன்றும் சேதம் இல்லை. ஆனால், ஒரு மாறுதலுக்காக, கேண்டீன் கூரை உள்வாங்கியது. லெச்சுவுக்குக் காலில் அடி. வல்லூரிக்குக் கையில் சிராய்ப்பு.

நேரு ஹாஸ்பிடலில் வெளி நோயாளியாக வல்லூரியும், உள்ளே ஒரே ஒரு நாள் தங்கி டெட்டால் வாடை அடிக்கும் ரொட்டி சாப்பிடுகிற உள் நோயாளியாக லெச்சுவும் சிகிச்சை பெற்றார்கள். எலக்ஷனில் லெச்சு ஓட்டுப் போடவில்லை.

அனுதாப அலை வீசியதால், தேர்தலில் லெச்சு பெருவாரியாக ஓட்டு வாங்கி வெற்றி பெற்றான். மீதிப் பதவி எல்லாம் ஹாஸ்டல் மாணவர்களுக்குப் போய்ச் சேர்ந்தது.

‘நானு டான்ஸ் போடலே. மபர் த தாம், இன்னா லேடி மெம்பர் கெடக்கலே’

ரொழெ பாதி சீரியஸாகச் சொன்னாள்.

‘ஷொகொலா ஷொகொலா’

சாக்லெட்.

லெச்சு சார்பில் மூணு கிலோ ஷொகொலா வாங்கி வந்து பெருந்தன்மையோடு ஒருத்தர் விடாமல் வினியோகம் செய்தாள் அவள்.

விளக்கு அணைந்த விலங்கியல் லாபரட்டரிக்குள் கதவை ஒட்டி ஓரமாக நின்று நான் கயல்விழிக்கு ஷொகொலா ஊட்டிக் கொண்டிருந்தபோது லாப் வாசலில் சத்தம் –

‘இங்கேயா இருக்கே? உன்னை உன்னை உன்னை உன்னை’

சப்த நாடியும் ஒடுங்கிப் போனது.

‘உன்னை எங்கெல்லாம் தேடறது. தனியா இங்கே என்ன பண்றே? வா போகலாம்’.

குரல் பெருஞ்சத்தமாக முன்னால் நகர்ந்து போனது.

கயல் அவசரமாக மாடிப்படியில் ஏறி ஓடியபடி எனக்குப் பழிப்புக் காட்டினாள்.

ஒரு ஷொகொலாவைப் பிரித்து வாயில் போட்டபடி அந்துவான் பின்னால் நடந்தேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன