அவசரமாக எச்சில் முழுங்கினேன். கண் இதுக்கு மேலே விரிந்தால் உள்ளே இருந்து கண்விழிப் பாப்பா, நரம்பு, பெருமூளை, சிறு மூளை எல்லாம் வெளியே வந்து விழுந்து விடும்.
’என்ன தம்பி, காசு எடுத்தாறலியா? பரவாயில்லே பெறகு கொடு’
நான் நீட்டிய ஜூனியர் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையைத் திரும்ப வாங்கிக் கொள்ளாமல் பெருந்தன்மையாக என்னிடமே தருகிறார் பாரதி வீதி கடைக்காரர்.
பத்திரிகை அட்டை முழுக்க ஈரம் ஜொலிக்கச் சாய்ந்து, ஒய்யாரமாக ரெண்டு துண்டு நீச்சல் உடையில் போஸ் கொடுத்தபடி ஒரு பேரழகி. அவள் மேல் வைத்த கண்ணை என்னால் எடுக்க முடியவில்லை. உள்ளே நடுப் பக்க ப்ளோ அப் படமும் அவள் தான்.
எழுபத்தைந்து பைசா கொடுத்துப் உடனே பத்திரிகையை வாங்கித் தனதாக்கிக் கொள்ள, ஆசை என்றால் அப்படி ஒரு ஆசை. ஆனால் வாங்கினால் சிக்கல்.
அந்தச் சிக்கல், சாவகாசமாக வெற்றிலை போட்டுக் கொண்டு உத்தேசமாகப் பதினைந்து அடி எனக்குப் பின்னால் நிற்கிறது.
ஞாயிற்றுக் கிழமை பிரச்சனைகளோடு விடிந்திருக்கிறது.
அப்பா மேனேஜராக இருக்கும் வங்கியின் கருப்பு கோட்டு அக்கௌண்டண்ட். ஞாயிற்றுக்கிழமை என்றாலும் ஆபீஸ் வந்திருக்கிறார். இந்த ஜன்மத்தில் தீராத ஏதோ ஆபீஸ் வேலையை இன்னும் சற்றே முன்னால் நகர்த்திப் பார்த்து விட்டு, எதிரே தம்பீஸ் கபேயில் கடப்பாவோடு இட்லி சாப்பிட்டிருக்கிறார். அடுத்து காளியப்பன் கடையில் நிதானமாக வெற்றிலை போட்டுக் கொண்டு நிற்கிறார். இப்படி சுதி ஏற்றிக் கொண்டு அவர் திரும்ப பேங்கில் கணக்கு சரிபார்க்க உள்ளே புகலாம். அது அவர் பாடு.
ஜே.எஸ் என்ற ஜூனியர் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகை வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை இந்த ஊருக்கு வரும். என்னயும் சேர்த்த, காலேஜ் படிக்கிற, இந்தியன் கஃபே ஹவுஸில் காப்பியும் அரட்டையுமாகப் பொழுது போக்கும் கூட்டத்தில் எல்லோரும் வாங்குவதால், வந்ததுமே பரபரப்பாக விற்றுப் போகும். ஆவலோடு பாரதி வீதி கடைக்காரரிடம் பத்திரிகை வந்த விவரம் கேட்கும் போது சற்று ஜாக்கிரதையாகக் கேட்க வேண்டும். மியூசியத்தில் படமாகத் தொங்கும் பழைய பிரஞ்சு திவான் ஆனந்தரங்கம் பிள்ளையின் உடம்பு வாகு அவருக்கு. மீசையும் ஆகிருதியும் மாணப் பெரிசு.
‘ஜே எஸ் வரல்லியா’
இப்படிக் கேட்டால் அவருடைய நரைமீசை துடிக்க கண்களை உருட்டி விழித்து முணுமுணுவென்று வாய்க்குள் திட்டுவார். அதில் கடைசியாகக் குரலை உயர்த்திக் கண்டிக்கிற தொனியில் கேட்டவரை ஏசுவார் –
‘ஞாயித்துக் கெளமை. சூரிய தினம். விடிகால நேரம். இல்லியான்னு கேக்கறியே. விளங்குமா? எம்மா பெரிய அவச்சொல்லு..’
ஆனால் இன்றைக்கு அவர் வகையில் பிரச்சனை இல்லை என்பதோடு பேச்சும் அன்பும் ஆதரவுமாக இருக்கிறது.
சரி, அவர் கொடுக்கிறாரே என்று நீச்சல் உடை அழகியோடு போய் அக்கவுண்டண்டிடம் மாட்டிக் கொண்டால் வேறே வினையே வேண்டாம்.
போன வாரம் காலேஜில் என் லாகிர்தம் டேபிள் புத்தகம் காணாமல் போய் விட்டது. ரத்தச் சிவப்பு நிறத்தில் அட்டையும் பக்கத்துக்குப் பக்கம் பத்தி பிரித்துப் போட்ட எண்களும் தவிர வேறு எதுவுமில்லாத அந்தப் புத்தகம் கணக்கு வகுப்பில் மட்டும் உபயோகப்படுகிற ஒன்று. அதைத் திருடிப் போய் என்ன செய்வது? வல்லூரி சார் வகுப்பில் ராக்கெட் விடக்கூட நீளம் பத்தாது.
என்றாலும், போனது போகட்டும் என்று இருக்க முடியாதே. நடு வகுப்பில் எள்ளி நகையாடி இன்று போய் நாளை டேபிள்ஸ் புத்தகத்தோடு வா என்று கணக்கய்யா அனுப்புவார். சுருக் என்று அவர் இங்கிலீஷும் பிரஞ்சுமான மணிப்பிரவாளத்தில் சொல்ல, முதல் வரிசைப் பெண்கள் சிரிப்பார்கள்.
நானும் பார்த்து விட்டேன், முதல் வரிசை தேவதைகளை இம்ப்ரஸ் செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டே எல்லா ஆண்களும், பிரின்சிபாலில் இருந்து, அட்டெண்டர் மாசிலா உட்பட, செயல்படுகிறோம்.
துயூப்ளே தெரு ஸ்டேஷனரி கடையில் தூங்கிக் கொண்டிருந்த பிரஞ்சு இந்திய அம்மாளை எழுப்பி, புரிய வைக்க முடியாமல் நானே கடைக்குள் போய் ஒரு டேபிள்ஸ் எடுத்துக் கொண்டு காசு எண்ணிக் கொடுத்து விட்டு வரும்போது அன்றைக்குக் கருப்புக் கோட்டுக் காரரிடம் மாட்டிக் கொண்டேன்.
’என்ன தம்பி, எண்சுவடி வாய்ப்பாடா’?
’இல்லே சார். காலேஜ்லே எதுக்கு வாய்ப்பாடு? க்ளார்க் டேபிள்’.
’படிக்கறதுதான் படிக்கறே. ஆபீசர் டேபிளாப் பாத்து வாங்கக் கூடாதா’?
’இது ட்ரிக்னாமெட்ரி கிளாஸுக்கு சார். தொகுத்தவன் பேரு க்ளார்க்’.
உடனே சுவாதீனமாகக் கையில் வைத்திருந்த டேபிள்ஸைப் பிடுங்கிக் கொண்டு அது என்ன மாதிரிப் புத்தகம் என்று உறுதிப் படுத்திக் கொள்ளவோ என்னமோ அவசரமாகத் தேடினார். மஞ்சள் பத்திரிகையோடு போகிறபோது கையும் களவுமாகப் பிடிக்க முற்படும் தோரணை அது. கிளார்க் டேபிளில் சிவப்பு அட்டை தவிர வெளியே அல்லது உள்ளே மஞ்சளாக ஒன்றும் இல்லை. ஒன்றுமே இல்லை.
’நான் உன் வயசுலே இருக்கும்போது பிரான்ஸிலே இருந்து கணக்குப் பொஸ்தகம் வரும். வாங்கி ஒரே மாசத்துலே எல்லாக் கணக்கையும் போட்டு முடிச்சுட்டு அடுத்த வருஷம் போற கிளாஸுக்கான புஸ்தகம் வாங்கிடுவேன்’.
நான் அன்றைக்குப் பிய்த்துக் கொண்டு கிளம்பியது இன்று மாட்டிக் கொள்ளத்தான்.
இப்போது கையில் டேபிள்ஸ் இல்லை. நீச்சல் அழகி படம் போட்ட ஜே.எஸ். இப்போதும் வெற்றிலை வாயோடு நிற்கிறார் கருப்புக் கோட்டு, முன் அனுபவ அடிப்படையில் இப்போது என்ன நடக்கும் என்று என்னால் சொல்ல முடியும்.
என்ன புஸ்தகம் தம்பி, நோட்ஸா என்று கேட்பார்.
’இல்லே, பத்திரிகை’ என்று சொல்வேன்.
’ஒரு காலத்திலே மாண்டேஷ் பத்திரிகையை பிசாசு மாதிரி படிச்சிருக்கேன், மாண்டேஷ் தெரியுமா, பிரஞ்சு பத்திரிகை’ என்பார்.
’தெரியாது சார்’ என்பேன்.
‘இதென்ன, பொண்ணு படமா?’
‘ஆமா சார், நீச்சல் போட்டி சாம்பியன்’.
அவர் என்னை மேலும் கீழுமாகப் பார்த்தபடி, தடத்தைச் சற்றே மாற்றுவார்.
‘நான் உன்னைப் போல இருக்கறபோது கொம்யூன் நீச்சல் சாம்பியன். இந்தாண்ட கடலூர், அந்தாண்ட வில்லியனூர், காரைக்கால் வரை அடிச்சுக்க ஆள் கிடையாது’ என்பார் வெற்றிலை எச்சிலை ஓரமாக உமிழ்ந்து, கடந்து போகிற யாருக்காவது போன்ழூர் முசியே சொல்லி.
நான் சும்மா இருக்க, திரும்ப உத்வேகத்தோடு ஆரம்பிப்பார்.
‘பிரான்ஸிலே இருந்து அப்போ ஸ்போர்ட்ஸ் பத்திரிகை எல்லாம் வரவழைப்பேன். பக்காவா உடுத்துக்கிட்டு நீஞ்சற, ஓடற, குதிக்கற படமா இருக்கும் அதிலே. இது மாதிரி இல்லே. தெமி நூ போத்தோ இருந்தா சீன்னு தூக்கிப் போட்டுடுவோம். ப்ளெய்ன் ந்யூன்னா கொளுத்திடுவோம்’.
தெமி நூ போத்தோ, ப்ளெய்ன் ந்யூ இதெல்லாம் என்ன என்று கேட்க மாட்டேன். ஏனென்றால் போன வாரம் என் கையில் இருந்த சினிமா பத்திரிகையில் காபரே ஆட்டக்காரியின் நடுப் பக்கப் படத்தைப் பார்த்துவிட்டு ’சீச்சீ, தெமி நூ போத்தோ’ என்று கிழித்துப் போட்டு விட்டாள் ஜோசபின். ‘இப்படி அரை நிர்வாணமா ஆடறதுக்கு முழுசாவே துணி இல்லாம ப்ளெய்ன் ந்யூவா ஆடலாம். அது ஒண்ணும் அசிங்கமாத் தெரியாது. மறைச்சும் மறைக்காம கள்ளத்தனமா காட்டறது தான் ஆபாசம்’ என்றாள் கோபத்துடன் அப்போது. திசொலெ என்று அவள் ரெண்டு காதிலும் சாரி சொன்னேன்.
வேண்டாம் அதெல்லாம். அக்கவுண்டிடம் நீச்சல் அழகி சிக்கினால், அவர் வழக்கை மேல் மட்டத்துக்கு, நகர்த்தும் அபாயம் உண்டு.
அப்பா வரையிலும் நீச்சல் அழகி போய்க் கஷ்டப்பட வேண்டாம். நாளைக்கு நான் பொழச்சுக் கிடந்து, பத்திரிகையும் விற்றுப் போகாமல் இருந்தால் வாங்கிக் கொள்ள்லாம்.
திரும்பப் பத்திரிகையை ஆனந்தரங்கம்பிள்ளை வாரிசுக் கடைக்காரரிடம் நீட்ட உத்தேசித்த போது, பின்னால் குரல்.
’டேய், உன்னைத் தான் தேடிக்கிட்டு வந்தேன்’.
சத்தம். திரும்பினால், கையில் பிடித்த சின்ன தோல்பையோடு புரு நிற்கிறான்.
’கொஞ்சம் என் கூட வா. அரை மணி நேரத்திலே திரும்பிடலாம்’.
புரு என்ற புருஷோத்தமன். முழுக்கச் சொன்னால் வில்லியனூர் பார்த்தசாரதி புருஷோத்தமன். அவன் எழுதும் பிரஞ்சு ஸ்பெல்லிங்கில் அவன் பெயரை உச்சரித்தால் வினோதமாக நாக்குப் புரண்டு தொண்டைக்குள் போக வைக்கும்.
புரு என் கூடப் படிக்கிறான். ஒரே காலேஜ் கோத்திரம். பிசிக்ஸ் தான். துணைக்கு மேதமெடிக்ஸ் தான். க்ளார்க் டேபிள் தான். காஃபி ஹவுஸ் தான். லாஸ்பேட்டை டெண்ட் கொட்டகையில் கிளாசுக்கு மட்டம் போட்டு விட்டு, காந்தாராவ் நடித்த விட்டலாச்சார்யாவின் மாய மோதிரம் சினிமா தான். கடலை தான். ராலே சைக்கிள் மட்டும் இல்லை.
எந்த சைக்கிளும் ஓட்டியதில்லை புரு. துவிச் சக்கர வண்டியில் கண்டம் என்று ஜோசியன் சொன்னதால், வீட்டில் ரெண்டு சக்கர வாகன வாசனை தவிர்க்கப் பட்டவன். பெரியவனானதும் டிப்பரோடு கூடிய பேபி லாரி வாங்கித் தருவதாக நாயனா வாக்குக் கொடுத்திருக்கிறாராம். செங்கல், மணல் லோடு அடிக்கிற பிசினஸ் அவருக்கு. தொழிலில் புருவுக்கு பிள்ளையார் சுழி போட்டதாக ஆச்சு.
ரொம்ப நல்ல பையன் புரு. மண்ணின் மைந்தன். கொஞ்சம், கொஞ்சம் என்றால் ரவையூண்டு. கிலோ கணக்காக இல்லாமல் நூறு கிராம் ரவையூண்டு வட்டு.
’பய்யன் தலைக்கு இஸ்ஸி வட்டு கேட்டோ’ என்பார் காலேஜ் கேண்டீன் இன் சார்ஜ் சங்கரன் நம்பியார். அப்போது அவர் சுட்டு விரல் நெற்றிப் பொட்டில் சுழன்று கொண்டிருக்கும். மலையாளத்தில் வட்டு என்றால்? வட்டுன்னா வட்டுதான். புரிஞ்சுக்கணும்.
புரு நல்லாத்தான் பழகுவான். பேசுவான். சாப்பிட்டுத் தூங்கிப் படித்து பாசிங்ஷோ சிகரெட் புகைத்து. என்ன, அவன் யாரிடமாவது ஏதாவது சொல்லி மற்றவர் கேட்காவிட்டால் கோபம் வந்து விடும். கண்ணில் கண்டதை எடுத்து வீசி விடுவான். எப்போவாவது இப்படி. எப்பவும் இல்லை. நாலு வருஷம் முந்தி செமினார் பள்ளிக்கூடத்தில் யார் மேலேயோ பாம்பைப் போட்டதாகச் சொல்வார்கள். சாரைப் பாம்பா சைக்கிள் பம்ப்பா, சரியாகத் தெரியலை.
’ஒரு இடத்துக்கு போகணும். சைக்கிள் எடுத்துக்கிட்டு வா’.
புரு கட்டுவிரியன் பாம்போடு நின்று என்னிடம் சொன்னதாக நினைத்தேன்.
எங்கே போகணும் என்று கேட்டேன். போனதும் சொல்றேன் என்றான் புரு, பொறுமை இல்லாமல்.
’சரி வரேன்’.
சமாதானமாக நான் சொல்ல, சகஜமாகி என்ன பத்திரிகை என்று கையிலிருந்து ஜே.எஸ்ஸைப் பிடுங்கிப் பார்த்தபடி நடந்தான். கூடவே நான் பம்மிப் பம்மிப் போக, எதிர்பார்த்தபடி எதிரே அக்கவுண்டண்ட்.
’சிநேகிதப் பிள்ளையா’? என்று வெற்றிலை பாக்கோடு விசாரித்தார்.
ஆமா என்றேன். இதுக்கு மேல் புரு பற்றி இவருக்குச் சொல்ல வேண்டாம்.
புருவிடம் பத்திரிகையை வாங்க அக்கவுண்டண்ட் கை நீட்ட அவன் முறைப்போடு இனிப்புப் பண்டம் பிடுங்கப்படும் குழந்தை மாதிரிக் கையைப் பத்திரிகையோடு முதுகுக்குப் பின்னால் இழுத்துக் கொண்டான். ’புடுங்கினா, உன் கண்ணை நோண்டிடுவேன்’ என்ற விரோதமான தோரணையைப் பார்த்து அக்கவுண்டண்ட் உடனடியாகப் பின் வாங்கினார். எனக்குப் பழகிய அமைப்பில், இன்னும் சற்றே அதிகமாகத் தன் பிரதாபம் சொன்னார் –
’உங்க வயசிலே நானும் சினிமா பத்திரிகை படிச்சிருக்கேன். லெ அவந்த் சென் தொ சினிமா. உள்ளூர் படமில்லே. பிரான்ஸ்லேருந்து வரும். அழகழகான பொண்ணுங்க. போஸ்ட் கார்ட் எல்லாம் கையெழுத்து போட்டு அனுப்பும்’.
இது நிஜமாக இருக்கலாம். அவர் முகத்தில் தெரிந்த உற்சாகம் கலப்படமில்லாதது.
’சினிமா புஸ்தகம் இல்லே. மற்றது’.
புரு திரும்பி ரோஷத்தோடு கூற, அக்கவுண்டண்ட் அவன் கையிலிருந்து அவன் இடுப்புக்கு முன்புறம் கொண்டு வந்த ஜே.எஸ்ஸைப் பிடுங்கினார். இனம் புரியாத திருப்தி அவர் முகத்தில். சட்டென்று அது வடிந்தது. அவர் கோட் பையில் தேடிக் கொண்டிருந்த கையை வெளியே எடுத்தபடி ஏமாற்றத்தோடு சொன்னார் –
’கிரகசாரம், கண்ணாடியை ஆபிசிலேயே விட்டுட்டேன் போல’.
’சார், இது கிரகசாரம் இல்லே. இங்கிலீஷ்லே இங்கிலீஷ்லே..’.
வாய்க்கு வந்த முதல் வார்த்தையான ’கவிதை’ என்றேன்.
‘என்னது?’
‘பொயட்ரி. பொயஸி’.
’பேஷ். நானும் உங்க வயசுலே பிரஞ்சு இலக்கியப் பத்திரிகை எல்லாம் படிச்சவன் தான். லெ தெம் மாதன் கேட்டிருக்கியா? மாடர்ன் டைம்ஸ்னு அர்த்தம். அதை’.
’பிரான்ஸிலேருந்து வரவழைச்சு’ என்று நான் இடைவெட்டினேன். அவர் சற்றே குரோதமாகப் பார்த்து விட்டுத் தொடர்ந்தார்.
’நாலு பைண்ட் வால்யூம் சேர்த்து வச்சிருந்தேன். போன மாசம் வீட்டுலே பெயிண்ட் அடிக்கற நேரத்துலே வீட்டுக்காரி அதெதுக்கு சும்மா பரண்லே தூங்கணும்னு பழைய புத்தகக் கடையிலே போட்டுட்டா’.
அடடா என்றேன் சம்பிரதாயமாக.
’ஏன் கேக்கறே, அம்பலத்தடியார் மடத்துத் தெருக் கடை. அதிராமபட்டணம் பாய் ஒருத்தர் வச்சிருக்கார். வேகமா அங்கே ஓடினா பாய் இல்லே. பெரிய மசூதிலே தொழுதுட்டிருக்கார்னு கேட்டு தேடிட்டு அங்கே போனேன். சின்ன மசூதிலேன்னாங்க. சரிதான்னு, சின்ன மசூதிக்குப் போனேன். தொழுது முடிச்சுட்டு வந்துட்டிருந்தாரு. சலாம் சொன்னேன். பத்திரிகை பைண்ட் புத்தகத்தை திருப்பிக் கொடுங்க பாய், பத்து ரூபா தரேன்னு கேட்டா, யாரோ அஞ்சு ரூபா கொடுத்து அத்த வாங்கிக்கினு போய்ட்டாங்களாம். அஞ்சே ரூபாய்க்கு பொக்கிஷத்தையே கொடுத்துட்டாரு பாய், ஆள் யாருன்னு தெரியாமலேயே’.
அவர் சோகத்தைச் சுமந்தபடி வங்கிக் கணக்குகளை சமாதானமாக்கி விடுமுறையென்றாலும், இன்றைய தேதிக்கு மங்களகரமாக முடித்து ஏறக்கட்டி வீடு போக நடந்தார்.
நான் காம்பவுண்டுக்குப் போய் சைக்கிளோடு வந்தேன்.
சினிமாவில் முன்னால் போகிற வில்லன் காரைப் பின் தொடரும் இன்ஸ்பெக்டரின் ராஜ்தூத் மோட்டார் சைக்கிள் மாதிரி என் ராலே சைக்கிளை நான் சீராக மிதித்துப் போக, ’அடுத்த ரைட் போய் உடனே லெப்ட்’, ’அங்கே நேரே போய் ரெண்டாவது ரைட்’ என்று மிஷின் கன் மாதிரி படபடவென்று ஆணையிட்டபடி என் தோள்பட்டையை அழுத்திக் கொண்டு பின்னால் தோல்பையோடு உட்கார்ந்து வந்தான் புரு. அவன் அடிக்கடி ஏப்பம் விடாமல் இருந்திருந்தால் நான் தலைக்கு வட்டு வராமல் இஸ்ஸி உற்சாகமாகியிருப்பேன்.
‘பசியாறிட்டியா’?
புரு திடீரென்று கருணையோடு விசாரித்தான்.
இல்லையே என்றேன் பரிதாபமாக. அவன் நேற்று வைத்த கருவாட்டுக் குழம்போடு வகை தொகை இல்லாமல் இட்லி ஒரு கட்டுக் கட்டி வந்ததாகச் சொன்னான். ஏப்பம் விட்டால் இனி காரணம் தெரியும்.
மரமும் செடியும் கொடியுமாகப் பச்சைப் பசேலென்று ஏதோ இடத்துக்கு வந்து சேர்ந்திருந்தோம்.
நிறுத்தச் சொன்னான் புரு. குதித்து இறங்கினான்.
அதென்னமோ அந்தப் பிரதேசத்தில் வீட்டுப் பின்புறங்கள் மட்டும் இருந்தன. கோடு போட்டது போல தெரு அமைத்து குறுக்கே செங்குத்தாக இன்னொரு வீதியால் வெட்டி இழைத்த ஊரழகைக் கைவிட்டு, நீண்டு வளைந்து போகிற அநேகம் பின் வாசல்களின் தெரு இது.
’நீ இங்கேயே இரு. நான் போய்ட்டு பத்து நிமிஷத்துலே திரும்பிடறேன்’.
எனக்கு கிழக்கு மேற்கு புரியவில்லை.
இது என்ன இடம் என்று வாய் விட்டே கேட்டு விட்டேன். அங்கேயே பிறந்து வளர்ந்தவனுக்குச் சந்து பொந்தெல்லாம் தெரிந்திருக்கும். புதுசாக வந்து எத்தனையைத் தான் பார்த்து, நினைவு வைத்துக் கொள்வது?
’எல்லாம் நம்ம ஊரு தான்’.
எந்த விதத்திலும் திருப்தி தராத பதில். பிசாசை ரிஜிஸ்தர் கல்யாணம் செய்து கொண்ட சர்க்கார் உத்தியோகஸ்தன் மாதிரி. சும்மா பொறுத்துக் கொள்வதே நல்லது. அது என்ன கதை என்று அப்புறம் ஒருநாள் சொல்கிறேன்.
புரு கையில் பிடித்திருந்த தோல்பையை என் சைக்கிள் கூடைக்குள் வைத்தான். அப்புறம் அதைத் திரும்பத் திறந்து ஒரு வெள்ளைப் பேப்பரை உள்ளே இருந்து எடுத்தான். யூதிகோலோன் வாடை.
இந்த வாடை காற்றில் பரவினால், ஜோசபின் நினைவு எங்கே எங்கே என்று வரும். வந்தது. இன்றைய கணக்கில் இதுவரை ரெண்டு தடவை அவள் வந்திருக்கிறாள்.
சதிகாரி, நேற்று சாயந்திரம் கடற்கரையில் சுங்கச் சாவடிப் பக்கம் வரேன் என்று சொல்லிக் காத்திருக்க வைத்து விட்டாள் அவள். வரவேயில்லை. ஏழு மணிக்கு ஏமாற்றத்தோடு வீட்டுக்கு வந்தால் அப்பா கதவைப் பூட்டிக் கொண்டு ரோட்டரி கிளப் மீட்டிங்குக்குப் போய் விட்டார்.
அம்மா இல்லாத வீடுகளில், சோகத்தோடு வீடு வந்து, தனிமை கனமாகக் கவிய, சாவியில்லாத கதவுக்கு முன் காத்திருப்பது முதன்மையான துக்கம். காத்திருந்தேன்.
அது நேற்று. இன்றைக்கு வேறு மாதிரித் துயரம். புருவுக்கு ரெண்டு சக்கரத் தேரோட்டிப் போக விதிக்கப்பட்டிருக்கிறது.
சைக்கிள் கூடைக்குள் திரும்பத் தேடி ஜே.எஸ் பத்திரிகையை புரு எடுக்க அட்டையில் நீச்சல் அழகி அங்கிருந்தே என்னைப் பார்த்துச் சிரித்தாள். ஜோசபின் நீச்சல் உடையில் வந்ததாகக் கற்பனை செய்தது மனசு. இதமான, சில்லென்று குளிர வைத்த கற்பனை அது.
’து யே ஃபூ’.
அவள் நாக்கைத் துருத்திப் பழித்துக் காட்டி விட்டு, நனைந்த நர்ஸ் உடையில் நடந்து போவதை மானசீகமாக நான் பார்த்து நிற்க, புரு இடைவெட்டினான்.
’இது என்ன தெரியுமா’?
வெள்ளைப் பேப்பரில் பாதிக்கு நிறுத்தி நிதானமாக எழுதப்பட்ட எழுத்துகள். புஷ்டியாக அழகாக இருந்தன அவை எல்லாம். மொழி தான் புரியவில்லை. பிரஞ்சாக இருக்கலாம்.
’லவ் லெட்டர்’.
அவன் பிரஞ்சு புரட்சியைப் பிரகடனம் செய்த தொனியில் நிதானமாகச் சொன்னான்.
வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு லவ் லெட்டரை நேரில் இவ்வளவு பக்கத்தில் பார்க்கிறேன். மேகலாவைத் துரத்தித் துரத்தி ஒரு வருடத்துக்கு மேலாக காதல் என்று சொல்லிச் சொல்லிக் குறுங்கவிதை எழுதிக் கொண்டிருந்த போதிலும் அவளுக்கு இதுவரை ஒரு காதல் கடிதம் எழுதியதில்லை. பொள்ளாச்சிக்கு அவள் பியூசி படிக்கிற காலேஜ் விலாசத்துக்குக் கடிதம் எழுதினபோது கூட சுத்த பத்தமாக அவளுடைய ஹெட்மாஸ்டர் அப்பாவின் இருமல் தொல்லை பற்றிக் கேட்டிருந்தேன். காதல் என்று ஒரு வார்த்தை அதில் குறுக்கோ நெடுக்கோ வந்தது இல்லை. அப்புறம் ஜோசபினுக்கு.
ஜோசபின் ஒயிலாக சைக்கிள் ஓட்டி மறுபடி மனசுக்குள் வந்து கொண்டிருக்க, இன்னொரு முகம் மனதில் படர்ந்து கொண்டிருந்தது. .
’உனக்கு என்ன திமிர் இருந்தா’.
பாதியில் வார்த்தையை முடித்து என் மனதில் மேகலா எழுந்து போன வேகத்தில் ஜோசபின் சைக்கிளைத் திருப்பிக் கொண்டு ஓட்டிப் போய் விட்டாள். மேகலா நீச்சல் உடையில். நாக்கைக் கடித்துக் கொண்டேன். அந்த பயம் இருக்கட்டும் என்று திரும்பிப் பார்த்துச் சொல்லியபடி மறைந்தாள் அவள்.
சரி, மேகலா போகட்டும். கயல்விழி. வேண்டாம். நிலைமை சரியில்லை.
’நீ சும்மா சுபாவமா இரு. பேக்கு பேக்குன்னு முழிச்சிட்டு நின்னா சங்கடமாயிடும்’.
அவசர உத்தரவு ஒன்றைப் புறப்பித்தான் புரு. என்ன சங்கடம், யாரால் என்று தெரியவில்லை.
போகிற போக்கில் அவன் சொன்னான் –
’கயல்விழிக்கு லெட்டர் கொடுக்கப் போயிட்டிருக்கேன்’.
அவசரமாக எச்சில் முழுங்கினேன். கண் இதுக்கு மேலே விரிந்தால் உள்ளே இருந்து கண்விழிப் பாப்பா, நரம்பு, பின்னந்தலைக்குள் சிறு மூளை எல்லாம் வெளியே விழுந்து விடும்.
இதைச் சொல்லித் தானே ஆரம்பிச்சே?
ஜேஎஸ் பத்திரிகை அட்டையில் நீச்சல் அழகி கிண்டலாகச் சிரித்தாள்.
சரி தான், இந்த தினத்தில் மகத்தான அதிர்ச்சி இங்கே காத்திருக்கும் என்று நான் சொப்பனத்திலும் நினைக்கவில்லை. என் கயல்விழி வீட்டுப் பின்புறத்தில் என்னையே அநாதையாக நிற்க வைத்த ஞாயிற்றுக்கிழமைக்காக புருவை என்ன செய்யலாம், தெரியவில்லை.
ஏற்கனவே ஒரு தடவை கயல் அப்பா பார்வேந்தனாரை காலேஜ் விழாவுக்கு அழைக்க இங்கே வந்திருக்கிறேன். ஆனாலும் வந்த இடம் இப்படியா மறந்து போகும்? பாழாய்ப்போன புரு தான் சதி செய்தான். சந்தும் பொந்துமாகப் புகுந்து புறப்பட்டு வந்ததில் பாதை சத்தியமாகத் தெரியவில்லை.
என் கையை வைத்து என் கண்ணையே குத்திக் கொண்டது போல, என் தலையில் நானே அட்சதை போட்டுக் கொண்டது போல என்றெல்லாம் பழமொழியும் பேச்சு மொழியும் மனதில் இருந்து கை நீட்டி ஓங்கி ஓங்கி அறைந்தன கன்னத்தில்.
ஜோசபின் ஒரு பக்கமும் மேகலா இன்னொரு பக்கமும் பிரம்பு நாற்காலி போட்டு உட்காந்து கொண்டு ‘உனக்கும் கயல்விழிக்கும் உள்ள உறவை நான்கு வரிகளில் சுருக்கமாகக் கூறவும்’ என்று கேட்க, தெரியவில்லை என்றேன்.
சண்டை போடாமல் அவர்கள் சேர்ந்து நடந்து போக, கயல்விழி அதே நாற்காலியில் உட்கார்ந்து ‘இவங்க ரெண்டு பேருக்கும் உன்னோடு உள்ள உறவை நாலடி வெண்பாவில் தளை தட்டாமல் சொல்’ என்று ஆணையிட்டாள். ’எதுவும் அறியேன் கயல்’ என்றேன். அதுதான் ஈற்றடி என்றாள் அவள்,
கயல்விழி வீட்டுக் காம்பவுண்டுக்குள் ஏதோ நடமாட்டம்.
பின் கதவைத் திறந்து கொண்டு துவைத்த துணிகளோடு வந்தது, கயல்விழிதான்.
நான் அவளை உற்று நோக்கிய அந்த நொடியில் அவளும் என்னைப் பார்த்தாள். பாவாடை தாவணியும், தோளில் ஈரமான துணிகளும், கண்மை தொடாமல் இன்னும் பெரியதாகத் தோன்றும் விழிகளுமாக நின்றாள் கயல்.
படுத்து எழுந்து இன்னும் குளிக்காத, உறக்கச் சுவடு முற்றும் விடைபெற்றுப் போகாத உடம்பின் வனப்பு கண்ணை அள்ளுகிறது. ஓய்வின் ஒப்பனை கலையாத முகத்திலும் சின்ன இடுப்பிலும் எண்ணெய்ச் சுவடுகள் காலை வெய்யிலில் அழகாக மின்னுகிற அற்புதம்.
தலை முடியை எண்ணெய் புரட்ட வாகாக விரித்து விட்டிருக்கிறதைப் பார்க்கவே இன்று மீதி நேரம் முழுவதையும் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
’ஏய் இங்கே என்ன பண்றே’?
நான் அவளை முந்திக் கொண்டு கேட்க, அப்படியும் இப்படியும் பார்த்தபடி ஓரமாக மதில் சுவருக்கு அந்தப் பக்கம் வந்து நின்றாள். விடர்ந்த உதடுகளை வருடக் கை துறுதுறுக்கிறது.
’எங்க வீட்டுலே நான் இல்லாம வேறே எங்கே போவேன்’?
நான் அவளையே பார்த்தபடி நின்றேன்.
’வீட்டுக்குள்ளே வா. கொல்லையிலே நின்னு பேசினா அப்பா ஏசுவார்’.
’அப்பா’?
’அவரும் அம்மாவும் மெட்றாஸ் போயிருக்காங்க’.
’தனியாவா இருக்கே’? ஆர்வமாகக் கேட்டேன்.
’எதுக்கு தனியாவா, உப்பு, மிளகு, சீரகமா இருக்கணும்? தேன்மொழி அக்காவும் மாமாவும் பிரான்ஸிலே இருந்து வந்திருக்காங்க. உறங்கிட்டிருக்காங்க. ரெண்டு பேரும் யுனிவெர்சிடி தெ லியோன் ப்ரொபசராக்கும். அவங்க அவங்க’.
நான் சும்மா அவள் வாய் பார்த்துக் கொண்டிருந்தேன். அதைவிட வேறே என்ன வேலை இருக்கப் போகிறது.
சற்றே நிறுத்தினாள். அவங்க லவ் மேரேஜ் என்றாள்.
ஒண்ணே முக்கால் அடி வெண்பா மாதிரி வசீகரமாகச் சிரித்தாள் கயல். முழுமையாக்க இருதயம் கிடந்து துடித்தது.
நான் இப்படி அலை பாய்ந்து நிற்க, முதல்லே நீ உள்ளே வா என்றாள்.
‘இந்தச் சுவரை எப்படித் தாண்டறது?’
‘சீய், வாசல் வழியா வா’..
’யாரும் பார்த்தா’?
’சித்தாந்த சாமி கோவில் போற வழியிலே அப்பாவைப் பார்க்க வந்தேன்னு சொல்லிடலாம். பாரதியார் பாடின கோவில்’.
கயல் வீட்டு வாசலில் பயர் இஞ்சின் சத்தம். அழைப்பு மணிதான்.
வாசலில் பொறுமையின்றி காலிங் பெல்லை. ஐயயோ. அது புரு. .
கயல்விழி வேகமாக நகர, நான் ’புரு வாசலில் அழைப்பு மணி அடிக்கிறான்’ என்றேன்.
’அவன் எப்படி இங்கே? உன்னோட வந்தானா’?
’சுத்தானந்த பாரதியார் கோவிலுக்கு வந்தோம்’.
’உளறாதே’.
கண்டித்தபடி அவள் உள்ளே போக, நான் மெல்ல நடந்து வாசலுக்குப் போனேன்.
என்னைக் கயல்விழி காப்பாற்றிவிடுவாள் என்று திடமான நம்பிக்கை கூட வந்தது.
பிரான்ஸில் இருந்து வந்திருக்கும் கயல்விழியின் அக்கா கணவர் எப்படி இருப்பாரோ. அராஜகமாகப் படி ஏறி, விடாது அழைப்பு மணி ஒலிக்கும் புருவை என்ன செய்வாரோ தெரியவில்லை. போதாக்குறைக்கு கையில் காதல் கடிதத்தையும் கொண்டு வந்திருக்கிறான் அவன்.
கயல்விழி வாசல் கதவைத் திறக்கும் போது நான் அங்கே இருந்தேன்.
’நீ எதுக்கு’?
புரு என்னைப் பார்த்து ஆரம்பித்த வாக்கியம் பாதியில் நிற்க நான் முதலில் உள்ளே நுழைந்தேன். சாதுவாக அவன் என் பின்னால் இலவச இணைப்பு போல ஒட்டிக் கொண்டு வந்தான்.
யாராவது கேட்டால், கையில் உடனே கொடுக்க வாகாக ஜேஎஸ் பத்திரிகையை நீட்டியபடி இருந்தான் அவன். நல்ல வேளை, பின் அட்டை மேலே இருந்ததால், நீச்சல் அழகி தரையைப் பார்த்தபடி இருந்தாள்.
ரெண்டு பேரையும் உட்காரச் சொன்னாள் கயல். பிரம்பு நாற்காலிகளில் இருந்தோம். நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. புருவைப் பார்த்தேன். வெய்யிலுக்குப் பனை நொங்கு சாப்பிட்ட நிதானத்தில் இருந்தான் அவன்.
உள்ளே இருந்து திரை விலகியது.
சினிமாவில் ஸ்ரீராம் மாதிரி மகா ஒல்லியும் உயரமுமாக ஒருத்தர் உள்ளே இருந்து கண்ணைத் தேய்த்துக் கொண்டே வந்தார். ஸ்ரீராமை ஒரு பழைய சினிமாவில் ஜெயிலில் போட, கம்பிகளுக்கு இடைவெளியில் புகுந்து வெளியே வந்து விடுவார். அப்படியான உடல்வாகோடு இவர் பிரான்ஸ் காலேஜில் எப்படி கிங்கரர்களை சமாளிக்கிறார்? வல்லூரியைக் கிழங்கு என்று கூவி வரவேற்ற மாதிரி அங்கே எப்படி இவரை வரவேற்றிருப்பார்கள்?
’மாமா, இவன் தான்’ என்று ஆரம்பித்து அவள் என்னை அறிமுகப்படுத்த பக்கத்தில் உட்கார்ந்திருந்த புரு அவசரமாகத் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டான்.
நான் யாரும் விசாரிக்காமலேயே சித்தானந்த சாமி கோவிலுக்கு வந்த வழியில் கயல்விழியின் அப்பாவைப் பார்த்து வர உத்தேசித்து படியேறியதாகப் பொய் சொன்னேன். கயல்விழி பார்த்த பார்வையில் ஆசுவாசம் தெரிந்தது. அவளுக்காக, அண்டார்டிகா போகிற வழியில் இங்கேயும் படி ஏறினேன் என்று கூடக் குளிர்ச்சியான பொய் சொல்லத் தயார்தான்.
அக்கா கணவர் எல்லாவற்றுக்கும் ’ஆணோ’, ’ஆணோ’ என்று தொடர்ந்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்க அவர். பிரான்ஸில் குடியேறும் முன்னால், பூர்வாஸ்ரமத்தில் கேரளா மாஹே பிரதேசத்து மலையாளியாக இருந்திருப்பார் என்று ஊகித்தேன்.
’ஷொகொலா சாப்பிடறீங்களா? மாமா கொண்டு வந்த ப்ரஞ்ச் சாக்லெட்.’.
‘இட்லியும் மீன் குழம்பும் சாப்பிட்ட ஏப்பமே இன்னும் ஸ்டாக் இருக்கு’ என்றேன். அவள் அழகாக என்னைப் பார்த்துச் சிரிக்க, புரு முறைத்தான்.
’கஃபே எடுக்கட்டா எல்லாருக்கும்’?
கயல் கேட்டுக் கொண்டிருந்த போது அழும் குழந்தையைத் தோளில் சார்த்தியபடி கயலின் அக்கா முன்னறைக்கு வந்தாள்.
’பிள்ளை ராப்பூரா உறங்கலே’
அவள் சொல்ல, ‘இடம் மாறினதாலே இருக்கும்’ என்றார் வீட்டுக்காரர்.
குழந்தை வீறிடும் சத்தத்துக்கு மேலே குரல் உயர்த்திப் பேச வேண்டியதாலோ அல்லது சுபாவமாகவே அப்படித்தானோ, தேன்மொழியின் குரல் தேன் மொழியாக இல்லாமல் வால்வ் ரேடியோவில் மீடியம் வேவ் ஒலிபரப்பில் ஷெனாய் வாசிக்கக் கேட்டது போல கரகரவென்று இருந்தது.
மற்றபடி தேன்மொழிக்கு ரொம்ப யோசித்துத் தான் அக்கா என்று அடைமொழி கொடுக்க வேண்டியிருந்தது. இந்த வீட்டில் இன்னொரு சுந்தரி.
’முர்ரா எருமை, கல்யாணம் ஆன பெண்ணைப் பற்றி அப்படி நினைக்காதே’.
மனதில் என்றும் வாழும் என் கலாசாரக் காவலாளி, தெற்றுப்பல் அழகுப் பெண் மேகலா சொன்னாள்.
அழகை அழகு என்று ரசிப்பது அழகான அனுபவம் என்றேன் ஜிலேபி பிழிந்த லாஜிக்கில்.
வீட்டுக்காரர் பக்கத்தில் உட்கார்ந்து குழந்தையை மடியில் கிடத்தித் தூங்கச் செய்து கொண்டிருந்தாள் தேன்மொழி அக்கா.
அமைதியான ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுது. கயல் கஃபே கொடுத்தால் விழுங்கி விட்டுக் கிளம்பி விடலாம். அதுவரை பக்கத்தில் நின்ற கயலின் ஈரமான மெல்லிய விரல்களை மெதுவாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
அவளிடம் அடித்த மெல்லிய சன்லைட் சலவை சோப்பு வாசனை காந்தமாக என்னை ஈர்த்தது. கார்பாலிக் சோப் கூட கயல் கையில் எடுத்தால் சந்தன சோப்பாகி விடும் என்று மனதில் அவசரக் கவிதை செய்தபடி, புருவைப் பார்த்துத் தலையசைத்தேன். பிச்சுக்கலாம் என்று அர்த்தம்.
அவன் விஷயம் புரியாமல், நான் எதிர்பார்க்காதபடி அடுத்த நொடியில் சட்டென்று எழுந்து நின்றான். ஜேஎஸ் பத்திரிகைக்குள் இருந்து வெள்ளைத் தாளை உருவி எடுக்க, தேன்மொழி அக்கா பரபரப்பாகச் சொன்னாள்.
’அந்தப் பத்திரிகையைக் கொஞ்சம் கொடு’
மாட்டிக்கிட்டேன் என்று மனசு அலறியது, முந்திக் கொண்ட புரு, ’இது இவன் வாங்கினது’ என்று என்னிடமிருந்து விட்டு விலகி நின்று சொன்னதோடு மட்டுமில்லாமல் பத்திரிகையைத் தேன்மொழி அக்காவிடம் கொடுத்துத் தொலைத்து விட்டான்.
தேன்மொழி அக்கா ஜேஎஸ் பத்திரிகை அட்டைப் படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
’ஆஹா, நஃபீசா அலி போட்டோவை இப்போ தான் இத்தனை அழகா பத்திரிகையிலே பார்க்கறேன். எக்ஸலெம். பிரமாதம். தேசிய நீச்சல் வீராங்கனை. நான் அவங்க விசிறி. இங்கே படிச்சபோது நான் தான் யூனிவர்சிட்டி ஸ்விம்மிங் சாம்பியன். அவங்க கையால பரிசு வாங்கியிருக்கேன். அறிவு ஜீவி. நல்ல படிப்பு. இலக்கிய ரசனை. கலை ரசனை.
கண்கள் பனிக்க தேன்மொழி அக்கா ஜேஎஸ் பத்திரிகையை நேசமாக ஒரு கையாலும் குழந்தையை மற்றதாலும் பற்றியபடி சொல்ல, நீச்சல் அழகியை இரண்டு பரிமாண பின் அப் படமாகப் பார்க்காமல் நஃபீசா அலியாகப் பார்த்த அந்தக் கணம் சந்தோஷமாக நீண்டு போனது.
தேன்மொழி அக்காவையே புத்தகத்தை வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு நான் கயலைப் பார்க்க, அவளுடைய கண்கள் என்னை வருடி ஒரு வினாடி என் கண்களில் நிலைத்து, பின் வேறெங்கோ பிடிவாதமாகப் பார்வை நிலை கொண்டன.
புரு தன் முயற்சியில் சற்றும் தளராமல் கையில் வைத்திருந்த காகிதத்தோடு கயல்விழியைப் பார்த்து குரலில் மாடுலேஷனே இல்லாமல் சொன்னான் –
நேத்துத்தான் எழுதினேன். போயம் ப்ரான்ஸெ’.
’பிரஞ்சுக் கவித? ஆணோ?’
தேன்மொழி ஜேஎஸ்ஸை ஒரு கையால் புரட்டியபடி மாமாவிடம் விளக்கினாள்.
’ ஒரு ஏழு வருஷம் முந்தி, அப்பா கிட்டே தினம் பிரஞ்சு கவிதை, தமிழ்க் கவிதைன்னு பயில நிறைய இளையவங்க வருவாங்க. நான் கல்யாணம் ஆகிப் போகிறதுக்கு முந்தைய சமாசாரம் அது. இப்போ மறுபடி ஆரம்பிச்சிருக்கு போல. நல்லதுதான்’.
ஏன் வராமல்? ஏழு வருஷம் முன்பு தேன்மொழி இந்தப் பிரதேசத்தில் கிளியோபாட்ராவாக இருந்திருப்பாள், இப்போது கயல் ஆட்சி நடக்கிறது. கவிதையை ரசிக்க அடுத்த கூட்டம் வராமல் என்ன செய்யும்?
எதிர்பாராத விதமாக, அக்கா வீட்டுக்காரர் புரு கையில் இருந்து காகிதத்தை ஆர்வத்தோடு வாங்கிக் கொண்டார். உரக்கப் படிக்கவும் ஆரம்பித்தார்.
ழெ தெய்மெ உ தெலா துது
யெ உ துலா தெ இத்வால
ழெ நெ பெ ப வா
முதல் மூன்று ரெண்டு வரி சொல்லி நிறுத்தினார். கொல்லாம் என்றார். புரு மருண்டான்.
‘கொள்ளாம்’னா மலையாளத்தில் ‘நல்லது’ என்று தேன்மொழி அக்கா சொல்ல அவனுக்குப் போன உயிர் திரும்பி வந்தது.
அந்த வரிகளுக்கு விளக்கம் சொன்னார்.
எல்லாவற்றையும் விட
நான் காணாத நட்சந்திரங்களையும் விட
உன்னை நேசிக்கிறேன்.
புருவைக் கொல்லாம் என்றே தாராளமாகச் சொல்லியிருக்கலாம். காதலுக்காக இல்லாவிட்டாலும் இந்த மாதிரியான கவிதைக்காக.
தேன்மொழி அக்கா ஆவலோடு அந்தக் காகிதத்தை தன் வீட்டுக்காரரிடம் இருந்து பிடுங்கி அடுத்த வரிகளைப் படிக்க ஆரம்பிக்க, காகிதம் நொடி நேர மழையில் சொட்டச் சொட்ட நனைந்து போனது.
குழந்தை தான். அது முதல் தடவையாகச் சிரித்தது.
’அடடா, கவிதையை முழுக்க ஈரமாக்கிட்டானே’.
தேன்மொழி அக்கா சீரியஸாகச் சொல்லிச் சிரிக்க, நானும் கயலும் அடுத்துத் தொடர்ந்தோம். மாமா நாலு மில்லிமீட்டர் புன்னகைத்தார். புரு புரு வென்று பார்த்தான் புரு.
’நேப்பி மாத்திட்டு வந்திடறேன்’.
ஒரு கையில் குழந்தையும் இன்னொரு பக்கம் சிசு மூத்திரம் நனைத்த கவிதையுமாக நன்றி சொல்லி தேன்மொழி வீட்டுக்குள் போனாள்.
’அப்புறம் சாவகாசமா வரேன்’.
புரு கிளம்ப, நானும் கயலை நோக்கியபடி நகர்ந்தேன். ஒரு பிரச்சனையும் இல்லாமல் புருவின் இந்தப் படையெடுப்பு பொடிபொடித்துப் போனதில் எழுந்த மகிழ்ச்சி சொல்லில் அடங்காதது.
’நீ வந்தா புத்தகம் கொடுக்கச் சொல்லியிருக்கார் அப்பா’.
கயல் கண்காட்டி விட்டு உள்ளே போக நான் புரிந்து கொண்டு பின் தொடர்ந்தேன்.
அப்பா பார்வேந்தனார் பாதி வீட்டை நிறைத்துப் புத்தகம் வைத்திருந்தார். அந்த அறையின் கோடியில் அலமாரிப் பக்கம் போக முடிவு செய்தேன்.
சரியான முடிவு என்று சொல்கிறது போல கயலும் அங்கே வந்து நின்றாள். ஒரே நேரத்தில் மனதில் ஏதோ தோன்ற, அணைத்துக் கொண்டோம். இன்னும் குளிக்காத பெண் வசீகரமான வாடை கொண்டிருந்தாள்.
ஷொகொலா என்றேன்.
‘அதான் அன்னிக்கு உதட்டிலே இருந்து தொடச்சு எடுத்துக்கிட்டியே’?
‘அப்போ விரலாலே எடுத்தேன். இப்போ’.
பற்பசை மணத்த அவள் இதழ்களில் மென்மையாக, முத்தமிட்டேன். விலகினாள்,
என் கன்னத்தை அவசரமாக வருடி விட்டு ஏதோ புத்தகத்தை எடுத்துக் கொடுத்து, சத்தமாக, நச்சினார்க்கினியர் உரை என்றாள்.
வாசலுக்கு வந்தபோது காதில் சொன்னாள் –
’இனிமே தனியா வா’.
நான் சைக்கிள் மிதித்தபோது பின்னால் உட்கார்ந்திருந்த புரு சந்தோஷமாகப் பாடிக் கொண்டிருந்தான். என்ன குஷியோ?
’கயல் வீட்டுக்கு முதல் கவிதை போயாச்சு. அடுத்து கொஞ்சம் ஆறப்போட்டு அவள் கைக்கு காதல் சொட்டச் சொட்ட அடுத்தது போகும்.’
உனக்கு அவ்வளவு பிரஞ்சு கவிதை வெறியா என்று கேட்டேன்.
’பின்னே இல்லையா, அம்பலத்தடியார் மடத்து தெரு பழைய புத்தகக் கடையிலே போன வாரம் லாட் ஆக ஒரு பிரஞ்சு இலக்கியப் பத்திரிகை கெடச்சது. எல்லாம் 1940 சமாசாரம். அதுலே ஒண்ணை அப்படியே எழுதினேன். மிச்சம் நாலு வால்யூம் இருக்கு’.
நான் ஒன்றும் சொல்லாமல் சைக்கிள் மிதித்தேன்.
(தொடரும்)