New bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 24 இரா.முருகன்

ஏமி ஏமி ஏமி ஏமி என்று தெலுங்கு கே.பி.சுந்தராம்பாளாக அந்துவான் கேட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு எதிரே, உலகப் பிரச்சனைகளை எல்லாம் தானே ஒற்றையாகத் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறவராக, பதட்டம் முகத்தில் தெரிய புரபசர் வல்லூரி அமர்ந்து சாயா குடித்துக் கொண்டிருந்தார். கூட்டம் குறைவான, வெள்ளிக்கிழமை சாயந்திர காலேஜ் கேண்டீன்.

‘ஏமி பிராப்ளமு பொபஸே காரு? செப்பண்டி’ அந்துவான் பிரஞ்சு-தெலுங்கு கேள்விக் கணையை ஒருவாறு தொடுத்தான்.

பாவம்டா என்றான் லெச்சு. வல்லூரி எடுத்த வகுப்புக்களுக்கு எல்லாம் அவன் வந்திருக்காவிட்டாலும், அவர் மேல் அவனுக்குப் பூரண அனுதாபம். இத்தனைக்கும், வல்லூரி புதிதாகப் போன வருடம் சேர்ந்தபோது அவரை லெச்சு ரேகிங் செய்தது புரபசர், அசிஸ்டெண்ட் புரபசர், லெக்சரர், டெமோ என்ற டெமான்ஸ்ட்ரேடர், லேப் அசிஸ்டண்ட் இப்படிப் பலதரப்பட்ட கல்லூரி ஊழியர்கள் மத்தியிலும் பிரசித்தமானது.

’அந்த்வான், க்ளாஸ்லே தான் வல்லூரி சாரை நீ விட மாட்டேன்னா கேண்டீன்லே டீ குடிக்க வந்தாலும் நச்சரிக்கறியே’.

வைத்தே கேட்க, வல்லூரி அப்படி இல்லை என்று திடமாகத் தலையசைத்து, அந்த்வானின் தோளில் செல்லமாகத் தட்டினார். அவன் கையில் பிடித்த காபிக் கோப்பை தவறித் தறிகெட்டு ரெண்டு பேர் மேலும் அபிஷேகமாக வழிய, நடந்ததை எல்லாம் வழக்கமான ஆச்சரியத்தோடு பார்த்தார் வல்லூரி. அவருக்கு மட்டும் சதா விபத்தும் விபரீதமுமாக உலகம் விரிந்திருக்கிறது.

ஈரச் சட்டையும் உடம்பெல்லாம் கேண்டீன் சிக்கரிக் காப்பி மணமுமாக அவர்கள் ரெண்டு பேரும் கேண்டீன் மேஜைக்குத் திரும்பி வர அவசர அவசரமாக லெச்சு வல்லூரியோடு பேச்சு வார்த்தையை ஆரம்பித்தான்,

இருக்கற வீட்டை விட்டுட்டு இன்னொரு வீடு பார்க்கணுமா? அதுதான் தன் பிரச்சனை என்றார் வல்லூரி மிச்சம் சில சொட்டு இருந்த சாயாவைக் குடிக்க முயற்சி செய்து கொண்டு. லெச்சு அதை பிடுங்கி வைத்து விட்டுக் கேட்டான்

’ஏன் சார் வீடு பார்க்கணும்? இருக்கற வீட்டை என்ன செய்யப் போறீங்க? கொளுத்திடுவீங்களா இன்னொரு தடவை ப்யூஸை பிடுங்கி?’

அவர் இல்லை என்றார். வீட்டுக்கெல்லாம் ஒரு கேடும் இல்லை. ஊரில் இருந்து பெண்டாட்டியை இங்கே கொண்டு வந்து வைத்துக் கொள்ளச் சொல்லி வெடித்த வற்புறுத்தல் நடப்பாகிறதாம். குடித்தனம் வைக்க இந்த வாரக் கடைசியில் இங்கே புறப்பட்டு வரப் போகிறாராம் மிசஸ் வல்லூரி..

’இதுலே என்ன சார் கஷ்டம், இப்போ உங்க வீட்டுலே கூட இருக்கற ஈப்பன் வெர்கீஸ், அப்துல் ரசாக், கோலப்பன் இந்த மூணு டெமோக்களையும் வேறே இடம் பார்த்துக்கச் சொன்னா போதுமே.. நீங்க இங்கேயே இருக்கலாமே’.

’பாவம் அவங்க எங்கே போவாங்க? சம்பளம் கொறச்சல். வேலை அதிகம் .. அவங்களுக்கு யாரு காலையிலே பிரட் ஆம்லெட் போட்டுக் கொடுப்பாங்க’?

’அதுக்காக, நீங்க ஊர்லே இருந்து வல்லூரி மாமியைக் கொண்டு வந்து குடித்தனம் வைக்கறபோது இவங்களும் கொத்தனார் கொழுந்தனார்னு ஆம்லட் தின்னபடிக்கு அங்கேயே இருப்பாங்களா’? அடாவடியா இருக்கே’.

நியாயமான சந்தேகத்தை லெச்சு எழுப்ப, இன்னும் ரெண்டு மாசத்தில் அந்த டெமான்ஸ்ட்ரேட்டர் கிளிகளுக்கும் றெக்கை முளைச்சுடும். கூட்டை விட்டுப் பறந்து போயிடும் என்றார் அவர். சிவாஜி படம் கௌரவம் பார்த்த பாதிப்பு..

அப்படிப் போகாமல் மாமி சமையல் சுகங் கண்டு அவர்கள் அங்கேயே தொடர்ந்து இருக்கவும் கூடும் என்று இன்னொரு சந்தேகத்தை அந்துவான் முன் வைத்தான்.

’அதுவும் நடக்கலாம் தான்… அதான் சொல்றேன்.. அவங்களுக்கு ஏன் சிரமம், நானே வெளியே போயிடறேன்’ என்றார் வல்லூரி கொஞ்சம் யோசித்து. கண்டசாலா தமிழில் பாடுகிற மாதிரி கனமாக இருந்தது அவர் குரல்.

இப்படியாக, வல்லூரிக்காக வீடு தேடும் படலம் ஆரம்பமானது.

சாயந்திரம் காபி ஹவுஸில் வல்லூரியும் எங்களோடு இருந்தார். உடனே அவருக்கு வீடு அமையாவிட்டால் கஷ்டம் என்று புரிந்ததால் எந்தத் தெருவில் வீடு காலி அட்டை தொங்குகிறது என்று தேடி ஒரு தெரு, சந்து பொந்து சாவடி விடாமல் அலைய முடிவெடுத்த்திருந்தோம்.

’சோன்பப்டிக்காரன் மாதிரி தெருத் தெருவா மணியடிச்சுக்கிட்டுப் போறது சிரமம்டா. ஏழெட்டு சைக்கிள் இப்படி சேர்ந்து வந்தா, டிராபிக் போலீஸ்காரங்க எல்லாம் டென்ஷனாயிடுவாங்க. பூங்காவிலே யாராவது அடுக்கடுக்காகத் தும்மறதை நாலு பேர் நின்னு வேடிக்கை பார்த்தாக்கூட, ஜனக் கூட்டம் கூடுது, வேறே எங்கேயாவது போய்த் தும்முங்கன்னு அனுப்பறவங்க அவங்க.. பத்து சைக்கிள் சேர்ந்து போனால் அது சைக்கிள் ஊர்வலமாயிடும்.’

லெச்சு சொல்லிக் கொண்டிருக்க கையில் குடையோடு அந்த இடத்துக்கு ஒரு விதத்திலும் சம்பந்தமில்லாத ஒரு கெச்சலான நபர் படியேறி வந்தார்.

லெச்சுங்கறது? என்னைக் கேட்டார் அவர். மாறுகண் இல்லாவிட்டால் வல்லூரி சாரை இப்படிக் கேட்டிருப்பார். அல்லது லெச்சுவை.

குடைக்காரரை ஆற்றுப் படுத்தி என் அருகில் உட்காரச் சொன்னேன். அமேலியும், கயலும், ஜோசபினும் உட்கார்ந்து சிறப்பிக்கும் இடம் அது.

தான் ஒரு வீட்டு புரோக்கர் என்றார் மூக்குப்பொடி மணத்தோடு வந்தவர். எந்தப் பகுதியிலும் எந்த வாடகை வரம்பிலும் உடனே வீடு பார்த்து முடித்துக் கொடுத்து விடுவாராம். ஒரு மாச வாடகை அவருக்கு கமிஷன்.. வீட்டுக்குப் போய்ப் பால் காய்ச்சிக் குடிக்கும்போதே கமிஷன் கையில் வரணும் என்று நிபந்தனையும் சொன்னார்.

’எந்தத் தெருவில் வீடு வேணும்’?

ஊரே சொந்தமான தொனியில் கேட்க, நான் தியூப்ளே வீதி என்று நூல் விட்டுப் பார்த்தேன். அவர் காலியாக இருக்கும் வீடுகள் பட்டியலில் முதலில் சொன்ன கதவிலக்கம் நேரு கபே, அடுத்து எங்க வீடு. தவறான தகவல் என்று சுட்டிக் காட்டினேன். அவர் பட்டியல் சரிதானாம். நேரு கபே பின் போர்ஷனிலும் எங்க வீட்டு மொட்டை மாடியிலும் குடியிருக்க இடம் பிடித்துத் தருவதாக படு கேஷுவலாக புரோக்கர் சொல்ல மிரண்டு போய் என்னை நோக்கினார் வல்லூரி சார்.

புரோக்கரை நம்பி வல்லூரியும் கோஷ்டியும் கிளம்பக் கையசைத்து விட்டு நான் புறப்படப் பார்த்தேன். ஜோசபின் வரும் நேரம்.

’இன்னும் ஒரு வாரம் உனக்கு அகப் பத்தியம்’ என்றான் சிற்சபேசன்.

அப்படின்னா?

’எங்க சித்தப்பாவை விதை வீங்கிப் போய், நாட்டு வைத்தியர் கிட்டே கூட்டிப் போனபோது அவர் சொன்னது இந்த அகப் பத்தியம்’. என்றான் ப்ரான்ஸ்வா.

அகப் பத்தியம்னா பொம்பளை சகவாசம் கூடாதுன்னு அர்த்தம் என்று யாரும் கேட்காமலேயே உபரி தகவல் கொடுத்த குடைக்கார புரோக்கர் தொடர்ந்து உங்க சித்தப்பாவுக்கு என்ன வயசு என்று வைத்தேயைப் பார்த்துக் கேட்டார்.

இவர் வயசு தான், நாற்பது சொச்சம் என்று வல்லூரியைக் காட்டிச் சொன்னான் லெச்சு.

நாப்பதா? திருப்தியில்லாதவராகத் தலையாட்டினார் ப்ரோக்கர்.

’அப்போ வீடு கிடைக்காதா?’ வல்லூரி தொடர்ந்து கேட்க, புரோக்கர் குழம்பித்தான் போனார். என்ன மாதிரியான மேதைகள் கிட்டே மாட்டிக்கிட்டோம் என்று பயந்தோ என்னமோ மடியில் இருந்து சின்ன மரச் சிமிழை எடுத்து டொப் என்று அடித்துத் திருகித் திறந்தார். மணி அடித்துக் கொண்டே திறந்த பெட்டியில் இருந்து ஒரு கணிசமான சிட்டிகை மூக்குப் பொடி எடுத்துப் போட்டுக் கொண்டு கையை உதறினார். காபி ஹவுசில் எல்லோர் கண்ணிலும் பறந்து எரிய, வாங்க என்று குடையாடக் கிளம்பினார்.

’இப்போவே போகணுமா? நாளைக்கு சனிக்கிழ்மை தானே’?

வைத்தே கேட்க, அவர் தீர்மானமாகத் தலையாட்டினார். இன்னிக்குத் தான் இந்த சீசன்லே கடைசி நல்ல நாள்.. காலையிலே முகூர்த்தம் ஆச்சு. இன்னும் கொஞ்ச நேரத்திலே ஜாம்ஜாம்னு சாந்தி முகூர்த்தமும் ஆரம்பிச்சுடும்.

வல்லூரி என்ன என்ன என்று விசாரிக்க, லொடலொடக்காமல் சும்மா இருக்கச் சொன்னான் லெச்சு. இது என்ன கிளாஸா சும்மா ஏதாவது அர்த்தமில்லாம புலம்பிட்டிருக்க என்று அவன் சொன்னதை வல்லூரிக்கு மொழிபெயர்க்க நான் முற்பட வைத்தே காலில் ஓங்கி மிதித்து நிறுத்தினான்.

நேர்ந்து விட்ட ஆடு போல மிரண்டு போய் அவர் பின்னாடியே வர எங்கள் ஊர்வலம் மெல்ல ஊர்ந்து போனது. யாருப்பா போய்ச் சேர்ந்தது என்று விசாரித்து விட்டு, யாரும் இன்னும் போகலே என்று அந்துவான் நிறுத்தி நிதனமாகச் சொன்னதைக் காதில் வாங்காமல், நாங்கள் கடந்து போவதற்காக எதிர்த் திசை போக்குவரத்தை சற்றே நிறுத்தினார் போக்குவரத்துக் காவலர்.

ரங்கப்பிள்ளை தெருவில் மங்கலாக டியூப்லைட் வெளிச்சம் போட்டுக் கொண்டிருந்த வெங்காய மண்டி போன்ற வீட்டுத் திண்ணையில் எங்களை கோஷ்டியாக ஏற வைத்தார் தரகர். வீட்டுக்குள் இருந்து ப்ரஞ்சு மழை. அது பெண் குரலில் மட்டும் இருந்தது. நடுநடுவே உய் உய் என்று தாழ்ந்த ஸ்வரத்தில் பின்பாட்டு. அது பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் ஆண் குரலில்.

உள்ளே இருந்து கிட்டத்தட்ட ஆயிரம் பக்கம் இருக்கும் பிரஞ்சு வரலாறு புத்தகம் தொப்பென்று வாசலில் வந்து விழுந்தது. அட்டையில் இருந்த எத்தனையாவதோ பிரஞ்சு லூயி அரசர் தலை திண்ணை மரத்தூணில் மோதி அலற வல்லூரி நடுநடுங்கினார்.. அவ்வளவு தூரம் அதை வீச நிச்சயம் பழக்கமும் வலிமையும் வேண்டும். தூணையும் பறித்து வீசக்கூடிய வலிமை.

உள்ளே இருந்து என்ன வேண்டும் என்று அதிகாரமாகக் கேட்டபடி வந்த நாலரை அடி சோனி அம்மாள் நாற்பத்தைந்து வயதாவது காணுவாள். தொடர்ந்து பதற்றமாகப் பார்த்தபடி வந்த ஆறடி பிரஞ்சு இந்தியர் வல்லூரியையும் தொடர்ந்து லெச்சுவையும் பார்த்து ரொம்ப சந்தோஷப் பட்டார். வல்லூரியிடம் தமிழில் குசலம் விசாரிக்கவும், லெச்சுவிடம் அவன் முழி பிதுங்கி நிற்க ஏதோ தெலுங்கில் சரமாரியாக மாட்லாடவுமாக உணர்ச்சி வசப்பட்டவர் மெல்ல சமநிலைக்கு வந்து ஆளுக்கேற்ற மொழி மாற்றினார்.

லெச்சுவுக்கு ஒன்றோ இரண்டோ விட்ட மாமா உறவு என்று அவன் என்னிடம் சொல்லியதை முடிக்கக் கூட விடாமல் அவனை முடிந்தவரை கட்டிக் கொண்டு குடும்ப நிலவரம், ஊர், உலக நிலவரம் எல்லாம் விசாரிக்கத் தலைப்பட்டார் அவர். இதே யூனியன் பிரதேசமான தெலுங்கு பேசும் ஏனாம் பகுதியில் நிரந்தரமாகத் தங்கி பிரஞ்சுத் தெலுங்கராகவே போய் விட்டார் என்று லெச்சு சொல்ல, அவர் உய் என்றார். தன்னோடு கூட ஏனாம் பக்கத்து கல்லூரியில் படித்தவர் அவர் என்றார் வல்லூரி அவருக்கு மட்டும் உரித்தான சந்தோஷத்தோடு. அதற்கும் இன்னொரு உய் ஆதரவாக வந்து விழுந்தது.

பொறுமையாக நின்ற வீட்டம்மா, வீடு அமைதிப் பூங்காவாகவே இருக்கிறது என்பதை எங்களுக்கு நிரூபிக்க, திண்ணையில் கிட்ந்த வரலாற்றை நிதானமாகக் குனிந்து எடுத்தாள். ’ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு கோபம் ஆகாது; நெபோலியன் பத்தி தப்பா எழுதியிருக்குன்னா நீங்க திருத்தி இன்னொரு புத்தகம் எழுதுங்களேன்.. விட்டெறிவானேன்’ என்று ஏனாம் மாமாவிடம் நைச்சியமாகச் சொன்னாள். அவள் ஒரு ச்ண்டைக்கோழி என்று யார் சொன்னாலும் இனி நான் மட்டுமில்லை எங்கள் குழுவே நம்பாது.

வல்லூரி தெரிந்தவராக இருந்ததாலும் அவரும் மனைவியும் மட்டுமே வீட்டில் இருப்பார்கள் என்பதாலும் ஏனாம் மாமா வீட்டை அவருக்கு வாடகைக்குக் கொடுப்பதில் சிரம்ம் இல்லை. ஏனாம் மாமா வருடம் ரெண்டு தடவை இங்கே வந்து ஒரு வாரம் இருப்பாராம். மேல் மாடியில் வல்லூரி வசிக்க, கீழே பெரும்பாலும் அடைத்து வைத்த வீடாக அது இருக்கும்.

சனிக்கிழமை பிற்பகலுக்கு எங்கள் சைக்கிள்கள் ரங்கப்பிள்ளை தெருவுக்குப் படையெடுக்க, வல்லூரி வந்து சேரவே இல்லை. அந்தி சாயும்போது அவர் வந்தார். முழங்கையில் புதியதாகக் கட்டிய பேண்டேஜோடு காணப்பட்டார்.

’ஸ்கூட்டர்லே பின்னாடி பாத்திரம் பண்டம் எல்லாம் போட்ட பெட்டியை வச்சுக்கிட்டு இங்கே வந்துட்டிருந்தேன்.. வண்டி ப்ரேக் பிடிக்காம ஓடி ஸ்கிட் ஆகிடுத்து. நல்ல வேளை ஆஸ்பத்திரி வாசல்லே விழுந்தேனா, உன் தோஸ்த் நர்ஸா அங்கே இருக்குதே, அந்தப் பொண்ணு உடனே கவனிச்சு ஏடிஎஸ் போட்டு ஏதோ மருந்து கொடுத்து, போதாக்குறைக்கு பேண்டேஜும் வலுவாச் சுத்தி விட்டுச்சு..குட் கேர்ள்’ என்னிடம் பெருமையாக பேண்டேஜை காட்டினார்.

நல்ல பெண்ணு கட்டி விட்ட பேண்டேஜை பார்வையிட்டேன். அதன்மேல் சீக்கிரம் குணமடையவும் என்று ஆரஞ்சு பட்டை பேனாவால் எழுதி இருந்த கையெழுத்து எனக்கு பரிச்சயமானது. மிகச் சிறிய பொடி எழுத்தில் கீழே வேறே ஏதோ எழுதியிருந்தது . கண்ணை இடுக்கிக் கொண்டு படித்தேன்

நாளை மாலை கடற்கரைக்கு வா.

எனக்குத்தான். ஜோசபின் அனுப்பிய சங்கேதச் செய்தி அது.

அடுத்து எப்போது ஆஸ்பத்திரி வரச் சொல்லி இருக்காங்க சார் என்று வல்லூரியை ஆவலோடு விசாரித்தேன்.

ஏன் நாளைக்கு என்றார் அவர். அதற்குள் இந்தச் செய்திக்கு பதில் எழுதி ஆக வேண்டும், இதே இடத்தில்.

வல்லூரி முகம் வாடி இருந்ததைக் கவனித்தோம். வலிக்கிறதோ என்னமோ.

’ஏன் சார் இத்தனை நண்பர்கள் உங்களுக்காக இங்கே வந்து கூடி இருக்கோம். நீங்க என்னடான்னா தெலுங்குப் படத்துலே அப்பா கேரக்டர் மாதிரி சோகமா நிக்கறீங்களே. இதெல்லாம் ஆக்சிடெண்ட்லே சேர்த்தியா? காலேஜ் எலக்‌ஷன் நேரத்திலே பில்டிங்கே சரிய வச்சீங்க, தெருவுக்கே ப்யூஸை பிடுங்கி பத்தி எரிய வச்சீங்க.. காலேஜ் கெமிஸ்ட்ரி லேபில் காப்பர் சல்பேட் ஆறு பாய வைச்சீங்க.. அதை விடவா இதெல்லாம்’.

அனுமனுக்குத் தன் பலம் தெரியாமல் மயக்கம். வல்லூரிக்கு தன் விபத்துச் சரித்திரம் அவ்வப்போது மறந்து போவதால் குழப்பம். எடுத்துச் சொன்னோம்.

வல்லூரி கஷ்டப்பட்டு சிரித்தார்.

’இந்த வீடு நல்ல இடம் தான். நீங்க வந்ததாலே தான் உடனே முடிஞ்சது. ஆனா, வேறே ஒரு நியூஸ் கேட்டேன்.. அதான் கொஞ்சம் பீதியாக இருக்கு’.

என்ன என்று புரியாமல் அவரைப் பார்க்க, அவர் தயங்கியபடி சொன்னார் –

’இந்த வீட்டுலே முனி ஓட்டம் இருக்காம். நடு ராத்திரிக்கு மொட்டை மாடியிலே முனி தடதடன்னு ஓடுறதை கேட்க முடியுமாம்’.

லெச்சுவும் நானும் சிரித்தோம். வேறே யாரும் கூடச் சேராததால் சங்கடத்தோடு அடுத்த நிமிடம் அந்தச் சிரிப்பு நின்றது. ஒரு வேளை முனி ஓடுமோ? ஏன் மொட்டை மாடியில் ஓடணும்? எங்கேயிருந்து எங்கே?

வா போய் பார்த்துட்டு வரலாம் என்று லெச்சு கூப்பிட நான் மட்டும் தான் வாலண்டியர் ஆனேன். வல்லூரி நம்ம வீட்டு விஷயத்துக்கு நாமே இல்லாவிட்டால் எப்படி என்பது போல சகஜ பாவத்தோடு மொட்டை மாடிக்கு எங்களோடு படி ஏறினார்.

ஸ்கூட்டர் ஸ்கிட் ஆகிறபோது அந்த முனி .. அதான்னு நினைக்கறேன் குறுக்கே ஓடின மாதிரி தெரிஞ்சுது. இதுவரை இப்படி அனுபவப் பட்டதில்லே.

வல்லூரி முனிக்கு பகல் நேர ஓட்ட வேலையும் கொடுத்திருந்தார்.

மொட்டை மாடி ரம்மியமாக இருந்தது. தழையத் தழைய தென்னந்தட்டி வேய்ந்த கூரையில் சின்னச் செடிகொடிகளும் புல்லும் படர்ந்து ஏறியிருந்தன. பர்ணசாலை மாதிரி ஒரு தோற்றம். சூழ்நிலைக்காக ரெண்டு மான்களையும் நாலு முயலையும் அப்படி இப்படி அலைய விட்டால் கன கச்சிதமாக பர்ணசாலையே தான். கடல் காற்று வேறு சிண்டைப் பிய்க்கிறது. எங்கள் வீட்டு விஸ்தாரமான மொட்டை மாடி கூட இப்படி வல்லூரி வீடு மாதிரிக் கவிதையாக இல்லை. இருட்டும் காற்றும் இதமாக அணைக்கிற இடம் அது.

ஆஹா, இப்படி எங்க வீட்டுலே இருந்தா நான் ஜூடோ பழகியிருப்பேனே என்றான் பிரான்ஸ்வா. வல்லூரி பறந்து பறந்து உதைத்து முனியோடு ஜூடோ யுத்தம் புரிவதாகக் கற்பனை செய்ய ரசமாக இருந்தது.

வல்லூரி ரொம்ப யோசனையாக நின்றார். கூரை தாழ்வாகச் சரியும் இடத்தில் அவர் நிற்பதை நான் பயத்தோடு கவனிப்பதற்குள் அவர் எக்கி என்ன கண்றாவிக்காகவோ கூரைக்குக் குறுக்கே ஓடிய மூங்கிலைக் கையில் பிடித்தார். சடசட என்று எட்டு ஊருக்குச் சத்தம் போட்டுக் கொண்டு கூரை சரிந்து விழுந்தது. கீழே இருந்து ஏனாம் மாமாவும் மாமியும் ஓடி வந்து விட்டார்கள். வீடே இடிந்து விழுந்து கொண்டிருக்கிறது என்ற பயமாக்கும்.

கூரையை எடுத்து ஓரமாக அடுக்கினோம். மூங்கில் கழிகளை சுவரில் சார்த்தி வைத்து விட்டுக் கீழே இறங்கினோம். போகிற வழியில் வைத்தே கூரை போடுகிற அந்தோணிசாமியை ஏற்பாடு செய்வதாகச் சொல்லிப் பிரச்ச்னையின் உக்கிரத்தைக் குறைத்தான்.

’முனிக்கு நாம வந்தது பிடிக்கலே’ , மெல்லச் சொன்னார் வல்லூரி.

நான் இன்னிக்கு ராத்திரி இங்கே தான் தங்கப் போறேன். முனி கிட்டே பேச வேண்டியிருக்கு. பேசினா உங்க பயம் போயிடும் என்றான் லெச்சு. எதையோ கண்டடைந்த சந்தோஷம் மின்னியது அவன் முகத்தில்.

முனிக்கு அரவம் மாட்லாடத் தெரியுமோ என்னமோ என்ற கேள்வியை வல்லூரி எழுப்ப, அந்த்வானும் ப்ரான்ஸுவாவும், இந்த மலையாளச் சிறுவனும் (நான் தான்) வேறு மொழி எல்லாம் மொழிபெயர்ப்பார்கள் என்று விளக்கம் கொடுத்தான் லெச்சு. அவன் வேறே எதற்கோ அடி போடுகிறான் என்று எனக்குப் புரிந்து போனது. எதற்கு என்று தான் புரியவில்லை.

’முனி கிட்டே வல்லூரி சார் ஏன் எப்பவும் ஆக்சிடெண்ட்லே மாட்டிக்கறார்னு கேக்கணும்’. சிற்சபேசன் சொல்ல, அவர் பலமாக ஆட்சேபித்தார்.

’அடிக்கடி எல்லாம் இல்லே என்னிக்காவது கொஞ்சமா அடி பட்டுடுது’..

அவர் பூசணித் தோட்டத்தையே பிடியரிசிச் சோற்றில் மறைக்க, பக்கத்து மிலிட்டரி ஓட்டலில் பிரியாணி ஆர்டர் செய்யப் போனான் லெச்சு.

’டெமான்ஸ்ட்ரேட்டர்கள் லாஸ்ட் சப்பர் அவங்களோடு சாப்பிடணும்னு வற்புறத்தறாங்க.. நீங்க இருங்க..நான் போறேன்’ என்று கிளம்பினார் வல்லூரி.

கட்டாய பிரம்மச்சாரி வாழ்க்கையின் கடைசி தினமாம். பரொட்டா சாப்பிட்டுக் கொண்டாடப் போகிறார்களாம்.

ராத்திரி அங்கேயே இருந்து விட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு விடிகாலையிலே போய் மனைவியோடு இங்கே வருவதாகச் சொல்லிப் புறப்பட்டார் வல்லூரி. பத்திரமா இருங்க. முனி பேசாட்ட பரவாயில்லே என்று எங்களுக்கு தைரியம் ஊட்டவும் தவறவிலலை அவர்..

லெச்சு கொஞ்சம் தாமதமாகவே வந்தான். வந்தவன் நேரே மொட்டைமாடி ஏற ஆரம்பிக்க நான் இருட்டா இருக்கு, மெழுகுதிரி எடுத்துப் போ என்றேன்.

ஏண்டா என்ன ப்ரேயருக்கா போறேன் என்று நக்கலாகக் கேட்டான் லெச்சு.

அதெல்லாம் நீ செய்வியா என்ன?

புரியாமல் பார்த்தேன். அந்துவான் சொன்னான் – மச்சான் பியர் பியர் பியர்

’தொலைஞ்சது. இவன் ஒருத்தனே போதும் ஊரெல்லாம் ஒலிபரப்ப’.. லெச்சு கித்தான் பையோடு மொட்டை மாடி படியில் கால் வைத்தவ்ன கீழே வந்தான்

’ஒரே ஒரு பியர் சாப்பிட்டு சமத்தா உன் தோழிகளைத் தேடி போயிட்டு நாளைக்கு வா தப்பா நினைக்கலே ஜோசபினை ரொம்ப கேட்டதா சொல்லு’.

வாடா மச்சான் என்று பிரான்ஸ்வா இறங்கி வந்து பின்னால் இருந்து தள்ள, அந்துவான் முதல் படியில் ஏறி நின்று இழுத்தான். நான் இந்தப்படிக்கு நானே எதிர்பார்க்காதபடி மொட்டைமாடிக்குக் கொண்டு செலுத்தப் பட்டேன்.

மொட்டைமாடியில் பார்த்த சூழ்நிலைக்கும் காலேஜ் விட்டு வரும்போது வழியில் கள்ளுக்கடையில் பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை. நாலு பாட்டில் பியரை கித்தான் பையில் இருந்து எடுத்து வைத்தான் லெச்சு.

இன்னொரு சின்னப் பையில் இருந்து கொஞ்சம் சிறியதாக வைத்தே எடுத்து வைத்தது விஸ்கி என்று அவன் சொல்லித் தெரிந்து கொண்டேன்.

சிரிச்சபேசன் மகா பெரிய சணல் பையோடு மாடியேறி வந்து கொடுத்தது கோலி மற்றும் வெறும் சோடா. ஒரு சோடா கலரும் ஆரஞ்சு நிறத்தில் நுரை தப்பிக் கொண்டு அவற்றோடு இருந்தது.

உனக்குத் தாண்டா என்று லெச்சு எனக்குத் தர குழந்தை மாதிரி ஏக்கத்தோடு பார்த்தான் சிற்சபேசன். உனக்கும் ஒரு வாய் தரேண்டா என்று சொல்லி அவன் முகத்தில் சிரிப்பை வரவழைத்தேன்.

ஆப்பிரிக்க ஊடு மந்திரவாதி பேயோட்டுகிற சடங்கு செய்கிற மாதிரி உப்பு, எலுமிச்சை பழத்தை அரிந்த பாதி மூடி, வறுத்த மல்லாக் கொட்டை, பொரித்த அப்பளப்பூ, நீள மூக்கு கோப்பைகள் என்று ஜமுக்காளத்தில் எடுத்து வைத்தான் லெச்சு.

பியர் அடிக்க இம்புட்டு ஆர்ப்பாட்டமா?

அந்துவான் சிரித்தான். உப்பை எல்லாம் விழுங்கி விட்டு இதைக் குடிக்க வேண்டுமா? உலகம் பூரா இந்த நிமிடம் எத்தனை பேர் பியர் சாப்பிடுகிறார்களோ? அதில் ஐக்கியமாக நானும் வரிசைக் கடைசியில் இதோ.

இவனுக்கு கோப்பை இல்லைடா

என்னைக் காட்டி வைத்தே சொல்ல, லெச்சு கீழே போய் ஒரு எவர்சில்வர் டம்ளரை எடுத்து வந்தான். இதில் ஊத்திக் குடிச்சா ப்ளாக் காப்பி சாப்பிட்ட மாதிரி இருக்கும் என்றான். வேணாம் என்று மறுத்து பார்த்தேன்.

’அட அவசரத்துக்கு இதாவது இருக்கே.. நான் என்ன பாட்டிலைத் திறந்து வாயிலே அப்படியே தொரதொரன்னு ஊத்தறேன்னா சொன்னேன்? நாளைக்கே இன்னொரு பியர் மக் கெடச்சதும் உனக்கு அதுலே லேகர் பியர் இல்லாட்டாலும் கிர்ருனு ஜிஞ்சர் பீர் ஊத்தித் தரேன்.. காலையிலே கலகலன்னு வெளியே போய் உடம்பே இறகு மாதிரி லேசாயிடும்.. நம்பு’.

லெச்சு தேர்தல் வாக்குறுதி மாதிரி கொடுத்து விட்டு என்னை உலகக் குடிகாரர்களின் கும்பலில் முறையாகச் சேர்த்து உட்கார வைத்தான். சியர்ஸ் சொன்னதும் குடி என்று சிறப்புக் கட்டளை எனக்காக மட்டும் இடப்பட்டது.

எல்லோரும் வாயில் கவிழ்த்துக் கொள்ள நானும் குடிக்கலானேன். கசந்து வழியும் இந்தக் கண்றாவியையா இப்படி ஊரோடு உலகத்தோடு ராப்பகலாக குடித்துத் தீர்க்கிறார்கள்? இதில் என்ன சுகம்? சிற்சபேசனைக் கேட்டேன்.

ஒவ்வொரு சிநேகிதியும் ஒரு மாதிரி இல்லையா அது மாதிரி தான் பியரும் விஸ்கியும் ரம்மும் ஜின்னும் ஒயினும் ஷாம்பேனும்.. உனக்கு இப்போ புரிஞ்சிருக்கணுமே .. ஆமா, எத்தனை ஜி எப் டா உனக்கு நிஜத்திலே?

அந்த் அசடனுக்கு கோப்பையை முகர்ந்து பார்த்ததுமே வந்தேன் வந்தேன் என்று எல்லா போதையும் சேர்ந்து உள்ளே மூண்டெழுந்து வர, என் தோழிகளை இப்படி வம்புக்கிழுத்த்து எனக்குச் சற்றும் விருப்பமாக இல்லாததால் அவனை விட்டு விலகி ஓரமாக மாடிப் படியில் இருந்தேன்.

அரையிருட்டில் ஏதோ வாயில அவ்வப்போது திரவமாக விழுந்து தீயாக உள்ளே போக, மூளைக்கு உள்ளே ஜிவ்வென்று ஏதோ பற்றி ஏற, இன்னொரு பக்கம் சாவதானமான உலகம் என்னோடு சேர்ந்து உருண்டு கொண்டிருந்தது.

எலுமிச்சை பிழிந்த கடலை, ஊறுகாயில் தொட்ட சின்னச் சின்ன உப்பு பிஸ்கட், வாடை பிடிக்காவிட்டாலும் விடாப்பிடியாகத் தின்று மேலே விஸ்கியை ஊற்றி உள்ளே அனுப்பிய மாமிச பஜ்ஜி என்று தலை சுற்றியது.

வேறு யாரோ குடிகாரன் என் அச்சு அசலான ஜாடையில் ரொம்பவே தைரியசாலியாக, வாயைத் திறந்தால் கெட்ட வார்த்தை பொழிகிறவனாக அந்த ராத்திரியில் சும்மா நேரம் போக்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்,

கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவிலே நல்ல இடைவெளி இருக்கற மாதிரி கையை வச்சுக்க்ங்கடா. கொஞ்சம் டெக்கிலா அடிக்கலாம்’.

லெச்சு சடங்குகளைச் செய்ய நியமிக்கப்பட்ட ஆராதகனாக குழுவுக்கு உத்தரவிட்டான். அவன் அவ்வப்போது ஒரு மடக்கும் இரண்டு மடக்குமாகக் குடித்தது எதுவுமே செய்யவில்லை என்பது மட்டுமில்லை, குரல் கூட சாதாரணமாகத் தான் இருந்தது. நான் அவனிடம் அதைச் சொன்னேன்.

’சத்தம் போடாதேடா பக்கத்துலே எல்லாம் வீடு இருக்கு தெரியலே’.

நான் உச்சக் குரலில் பேசுகிறேன் என்பதே லெச்சு சொல்லித்தான் தெரியும்.

கையை மருதாணி போட்ட மாதிரி அவன் சொன்ன படி நீட்ட கெமிஸ்ட்ரி லாபரேட்டரி அட்டெண்டர் மாதிரி ஒவ்வொருத்தர் கையிலும் கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் கொஞ்சம் உப்பை வைத்தான். நான் உச்ச கட்ட போதையில் அதை உடனே சாப்பிட்டு பியர் கேட்டேன்.

’கிழிஞ்சுது போ. குடிக்கணும்னு ஆசை இருக்கு. எதை எப்படிக் குடிக்கறதுன்னு கத்துக்க பொறுமை இல்லியே’.. லெச்சு கண்டித்தான்.

சாரி சொல்லச் சொன்னான். சொன்னேன். எனக்கு என்ன போச்சு. இன்னொரு குவளை லாகர் பியர் உள்ளே போக மூத்திரம் முட்டிக் கொண்டு வந்தது. கீழே போகலாமா இல்லை இங்கேயே ஓரமாகக் குத்த வைத்து விடலாமா?

யார் கீழே கூட்டிப் போனது, எப்போது என்ன சாப்பிட்டேன், எப்படி படுக்கையில் விழுந்து அடித்துப் போட்டது போல் தூங்கினேன் என்று தெரியாது. லெச்சு உலுக்கி எழுப்பக் கண் விழித்தேன்.

வல்லூரி சாரும் மேடமும் ரயில்வே ஸ்டேஷன்லே இருந்து வந்துட்டு இருக்காங்க. எழுந்திருங்கடா. வீட்டை கொஞ்சம் க்ளீன் பண்ணிடலாம்

நேத்திக்கு சாயந்திரம் தானே அலம்பி விட்டு நீட்டா இருக்கே என்றேன்.

லெச்சு என் தோளை இறுகப் பற்றிக் கேட்டது –

’ஏண்டா நேத்து குடிச்ச பாட்டில் எல்லாம் மொட்டைமாடியில் கொட்டிக் கிடக்கே, அதை எடுக்க வேணாம்’?

போய் கோணிச் சாக்கில் வாரி எடுத்துக் கொண்டிருக்கும்போது பிரான்சுவா என்னிடம் சொன்னான் –

’நேத்து ராத்திரி நீ கீழே போய் தூங்கிட்டியே. அப்புறம் முனி இங்கே ஓடிச்சு’.

அந்துவான் சற்றே கூட்டிச் சேர்த்தான் –

’வல்லூரி சார் கூரையை பிடுங்கிப் போட்டுட்டாரா?ஓட முடியாம முனி கால் தடுக்கி விழுந்துடுச்சு பாவம். அடுத்த வீட்டுல ஒரு முனியம்மா இருக்கு. அதைத் தேடி வருதாம்.. சீக்கிரமே கூட்டிட்டு ஓடிடும்னு நினைக்கறேன் ..’

லெச்சு நக்கலாகச் சிரித்தபடி கோணிச்சாக்கை என் தோளிலும் அவன் தோளிலுமாகச் சுமக்கக் கொடுத்தான்.

’நிஜமாவாடா’? நான் நம்பாமல் கேட்டேன்.

’உனக்குத்தான் எல்லாக் கதையும் நறுக்குனு முடியணுமே .. வேணும்னா எடுத்துக்கோ இல்லைன்னா விடு’.

வல்லூரி மேடம் வந்ததும் ஆச்சரியங்கள் நிறைய ஏற்பட்டன

முதலாவது, அவள் மேடம் இல்லை. சதா சிரித்த முகத்தோடு வந்த அந்தம்மா எங்களை விட பத்து வ்யது பெரியவள் என்பதால் தன்னை லதா தீதி என்று மூத்த சகோதரியாக நினைத்துக் கூப்பிடச் சொன்னாள்.

இரண்டாவது லதா தீதிக்கு பேய் பிசாசு முனி இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. முதல் மாடி வீடு விஸ்தாரமாக இருக்கு, தண்ணி கொட்டு கொட்டுன்னு கொட்டறது குழாயிலே. காத்து சல்ல காலி தென்றல்னா அசல் சமுத்திரத் தென்றல். இதுவே சொர்க்கம் என்று அடித்துச் சொல்லி, வல்லூரிக்கு நம்பிக்கை டானிக் ஊட்டி அங்கேயே தங்க வைத்து விட்டாள்.

மூன்றாவது ஆச்சரியம், அவள் வந்ததற்கு அப்புறம் வல்லூரிக்கு ஒரு தடவை கூட ஸ்கூட்டர் விபத்து, சின்னதோ பெரியதோ எதுவும் ஏற்படவில்லை.

லதா தீதி வந்ததற்கு அடுத்த நாள் கல்லூரிச் சாலைச் சரிவில் நல்ல வேகத்தோடு ஒயிலாக முன்னேறிக் கொண்டிருந்த வல்லூரி சாரின் ஸ்கூட்டரை தீதி தான் ஓட்டிக் கொண்டிருந்தாள்.

பின்னால் பில்லியனில் கௌதம புத்தன் மாதிரி சாந்தமும் அமைதியுமாக வல்லூரி.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன