(பகவதியின் டயரியில் இருந்து)
விடிகாலையில் குளிக்கறது நல்ல பழக்கம் தான். இங்கே அரசூர்லே, எல்லார் வீட்டுப் பெண்களும் அதேபடிக்குத் தான் செய்யற வழக்கம். முக்கியமா செவ்வாய், வெள்ளிக் கிழமை. அதோடு கூட, மாசாந்திரம் விலகி இருக்கறது கழிஞ்சு. அப்புறம் மார்கழி மாசம் முப்பது நாளும்.
மார்கழி கொண்டாடறது எனக்கு அரசூர் வந்த பின்னாலே தான் சீலமாச்சு.
முதல்லே மார்கழின்னு பேரே புதுசா இருந்தது. மலையாளத்திலே தனு மாசம்னு கேட்டுத் தான் பழக்க. அது இங்கே மார்கழி.
தனு மாசத்துக்கு முந்தி வரும் சிங்க மாசம் இங்கே ஆவணி. கன்னி மாசம் புரட்டாசி. துலாம் மாசம் ஐப்பசி. விருச்சிகமோ கார்த்திகை ஆயிடும். இப்படி மாசம் பந்த்ரெண்டும் இங்கே முழுக்க மாறி வரும்.
மார்கழி மாசம் இருக்கே. அது தனி அனுபவமாக்கும். வெறும் நாளிலே உதயத்துக்கு முந்தி ஒரு அஞ்சு மணிக்கு எழுந்து வாசல் தெளிக்கக் கிளம்பறது வழக்கம் என்னாக்க, மார்கழி மாசத்திலே அலாரம் கடியாரத்தைத் தலைமாட்டுலே வச்சுண்டு மூணு, மூணரைக்கு முழிப்புத் தட்டினதுக்கு அப்புறம் அலாரமும் விடாம அடிக்க எழுந்திருக்கறேன். அலாரம் நான் தான் வைக்கறது. ஒரு தடவை எப்படின்னு செஞ்சு காட்டி விளக்கிச் சொன்னார் அவர். பிடிச்சுண்டுட்டேன். நல்ல விஷயம் புதுசா தெரிஞ்சுக்கற சந்தோஷமாக்கும் அது.
ராத்திரி எடுத்து வச்ச பால் குளிர் காலங்கறதாலே திரியாம, கெட்டுப் போகாமல் அப்படியே திடமா இருக்கும். என்ன, எருமைப் பால் எடுத்து வச்சா அவ்வளவு நிச்சயமாச் சொல்ல முடியாது. ரொம்ப கொழுத்து நாள் முழுக்கா நாக்கிலே சுத்திண்டே இருக்கும். வயத்துலேயும் சமயத்திலே குடுகுடுன்னு ஓடி ரகளைப் படுத்திடும் எருமைப் பால். பசும்பால் தான் சரியானது. பசு மாதிரியே ரொம்ப சாத்வீகம் அது.
பால் இந்தக் கதைன்னா, காப்பிப் பொடி இன்னொரு மாதிரி. அதை சித்த முன்னாடியே திரிச்சு வச்சுக்கணும். அப்போ அப்போ அரைக்க வீட்டுலே கையாலே சுத்தற மிஷின் இருக்கு தான். ஆனாலும் காலம்பற மூணு மணிக்கு கரகரன்னு அதுலே பிடிப்பிடியாப் போட்டு சுத்தி அந்த சத்தத்திலே ஊர் முழுக்க எழுந்து உட்கார வைக்க மனசு இல்லே எனக்கு. இவரானா ரெண்டு நாளைக்கு ஒரு தடவை பீப்ரியும் ரொபஸ்டாவும் ஒரு ரகசியமான விகிதத்துலே கலந்து ஐயங்கார் கடையிலே புதுசா அரைச்ச பொடி வாங்கிண்டு வந்து வச்சுடுவார். சளைக்காமல் காப்பிப் பொடி வாங்குவார் இப்படி சிராங்காய்க்கு ரெண்டு முட்டைக் க்ரண்டி அதிகமா. ரெண்டு நாளைக்கு மேலே அதோட வாசனை போயிடுமாம். சுல்தான் கெட்டார், காப்பி ருசி அப்படி.
குமுட்டி அடுப்பு பத்த வச்சு வென்னீர் போட்டு, ரெண்டு கரண்டி வழிய வழிய காப்பிப் பொடியை பில்டர்லே போட வேண்டியது. வென்னீரைக் கொதிக்கக் கொதிக்க விட்டு, ராஜாவுக்கு மரியாதைக்குக் குடை பிடிக்கற மாதிரி சில்வர் குடையை மேலே வச்சு அடச்சுட்டு தந்தசுத்தி. நம்பூத்ரி சூரணத்தோட பல் தேய்க்கப் போய்ட்டு வந்தா, கமகமன்னு டீகாஷன் இறங்கி இருக்கும்.
எனக்குத் தானாக்கும் முதல் காப்பி. புகையிலைக் கடைக்காரர் எழுந்திருந்தா அவருக்குத் தான் முதல்லே. தூங்கற மனுஷனை என்னத்துக்கு எழுப்பி காப்பி கலந்து தர்றதாம்? அகத்துக்காரர்னானும் சரிதான். ஊர், உலக நடப்பு இது. காப்பி மரியாதை இது.
வாசல்லே போய் ஒரு மரக்கால் முழுக்க அரிசி மாவும் கோல மாவும் கலந்து எடுத்துப் போனதை வச்சு இருபது புள்ளி இருபது வரிசை கோலம் போட உக்கார்ந்தா, நேரம் போறதே தெரியாது. கோலம் சீரா வந்து எங்கேயும் சிக்காமல் அம்சமா முடிய அஞ்சரை மணி ஆகிடும். . அதுக்குள்ளே அண்டை அயல்லே இருக்கப்பட்ட பெண்டுகளும் அவரவரோட வாசல்லே கோலம் போட வந்து எல்லாருமா கை பேசப் பேச வாயும் கூடவே கலகலன்னு சேர்ந்து பேசறது நடக்கும்.
மார்கழி மாசம்னோ என்னமோ யாரும் வம்பு பேசறதில்லே. ஹரிகதையிலே கேட்டது, வீட்டிலே கர்ண பரம்பரையா வந்த தகவல் இப்படிச் சொல்லிக் கேட்டு கோலம் போடற சிரமமே தெரியாமப் போயிடும். நான் இவர் வாங்கி வந்து கொடுக்கற அறுபத்து மூவர் கதை, பக்த விஜயம் இப்படி புஸ்தகம் படிச்சு அதிலே வர்றதை எல்லாம் சொல்றதாலே என் பக்கம் எல்லோரோட காதும் திரும்பி இருக்கும். கதை சொல்லிண்டே கோலம் தப்பு இல்லாம போட பழக்கம் வேணும். எனக்கு ரெண்டு மார்கழி ஆச்சு அது சித்தியாக. இப்போ கண்ணை மூடிண்டு கூடக் கோலம் போடுவேனாக்கும்.
இன்னிக்குக் காலம்பற இப்படித்தான் தெம்பா காப்பி உபசாரம் எனக்கு நானே நடத்திண்டு, கோலம் போட்டு முடிச்சுட்டு உடனே குளிச்சேன். சரி இவ்வளவு பண்ணியாச்சு, மார்கழி ஆச்சே, கோவிலுக்குப் போகலாம்னு கிளம்பிட்டேன். கோவில் பக்கத்திலே ஊருணியிலே ஜில்லுனு வெள்ளம் கோரியெடுத்து குடத்துலே நிறைச்சு வரலாம்னு கூட பரிபாடி. அதான் திட்டம். சட்டுனு வார்த்தை வர் மாட்டேங்கறது.
நிறைகுடத்தோட கோயிலுக்குள்ளே போகலாம் தான். ஆனா கொண்டு போனதை அபிஷேகத்துக்குத் தந்துடறது தான் மரியாதை. காலிக் கொடம்னா வாசல்லே வச்சுட்டு உள்ளே போகணும். சமயத்திலே காணாமப் போயிடும்.
பரவாயில்லேன்னு காலிக் கொடத்தை வெளியிலே சண்டிகேசுவரர் சந்நிதிக்குப் பின்னாடி வச்சுட்டு நிர்மால்ய தரிசனத்துக்காக உள்ளே போனேன். வக்கீல் குமஸ்தா பெயர் சொல்லாதவர் திருவெம்பாவைன்னு ராகத்தோடு படிச்சுண்டிருந்தது கண்ணுலே பட்டது. பெயர் சொல்லாதவர் ஏன்னு கேட்டா, எங்க அவர், அதான் புகையிலைக் கடைக்காரர் பெயர் தான் குமஸ்தருக்கும்.
அவருக்கு பரிவட்டம் கட்டி ஒவ்வொரு பாட்டாகப் பாடி எம்பாவே எம்பாவேன்னு முடிக்க முடிக்க அடுக்கு தீபாராதனை காட்டினதைக் கொஞ்ச நேரம் கண் குளிரப் பார்த்துட்டு வெளியிலே வந்தேன்.
சின்னக் குருக்கள், புகையிலைக் கடை மாமி, பொங்கல் பிரசாதம் இந்தாங்கோன்னு நீட்டினார். கண்ணிலே ஒத்திண்டு வாங்கிண்டேன்.
நம்ம வகை சேவை என்னிக்குன்னு கேட்டேன். புகையிலைக் கடைக்காரர் மார்கழி பத்துலே இருந்து இருபது வரை சேவை நடத்தறதாச் சொல்ல ஒரே சந்தோஷம். இன்னிக்கானா வக்கீல் ராவ்ஜி திருப்புளி எழுச்சை அதான் திருப்பள்ளி எழுச்சி உபயதாரராம். யார் கொடுத்தா என்ன, கோவில் பொங்கல் ருஜியே தனிதான்.
ஒரு ஆறு மணி இருக்கறச்சே ஊருணியிலே தண்ணி எடுத்துண்டு ஜாக்கிரதையாப் படி ஏறிண்டு இருந்தேனா. இருட்டு இன்னும் விலகலே. படியிலே மசமசன்னு எதுவோ இருக்கற மாதிரி தட்டுப்பட்டது. ஊருணிக்குள்ளே போகற போதும் இருந்ததான்னு கேட்டா எனக்குச் சரியாத் தெரியலே. இருந்திருக்கலாம். நான் பார்த்திருக்க மாட்டேனா இருக்கும். அது ஒரு மிருகமோ பட்சியோ தான். மனுஷர் இல்லே.
ஜிவ்வுனு றெக்கையை விரிச்சு அந்தப் பட்சி தத்தித் தத்தி என் முன்னாலே ஓடினது. நான் அப்படியே நின்னேன். இவ்வளவு பிரம்மாண்டமா றெக்கை வச்சுண்டு என்னவாக்கும் இது. மயில் தானே? அது ஏன் விடிகாலை இருட்டுலே வந்தது? எங்கே இருந்து வந்தது?
சரி அதுக்கும் மார்கழிக் குளிர் வேணும் போல இருக்கு. யாருக்கும் உபத்ரவம் பண்ணாம ஊருணிக் கரையிலே ஆடிட்டு சுப்ரமணிய சுவாமியைத் தொழுதுட்டு பறந்து போகட்டும்னு நான் ஒரு ஓரமாப் படி ஏறினேன்.
ஊருணிக் கரையிலே நடந்துண்டு இருக்கற போது தான் பின்னால் ஏதோ சலசலன்னு சத்தம். என்னவா இருக்கும்னு பார்த்தா, என்னத்தைச் சொல்ல? அந்த மயில் என் பின்னாலேயே தொரத்திண்டு வந்துண்டிருந்தது.
இன்னும் இருட்டு விலகலேன்னாலும் மயிலோட கண்ணு எனக்கு ரொம்ப திவ்யமாத் தெரிஞ்சது. அதுலே விரோதம் இல்லே. ஏதோ சொல்ல வர மாதிரி தோணல். தோணல் மாத்திரம். கேட்கலேன்னா உனக்குக் கஷ்டம்னு சொல்லாமச் சொல்ற கண்ணு அது. மிரட்டல் இல்லே. பிடிவாதம். அலகு வேறே ரொம்ப குரூரமா நீட்டிண்டு பின்னால் றெக்கை எல்லாம் செம்மண்ணுலே புரள அது என் பின்னாலேயே வருது. எனக்கு சப்தநாடியும் ஒடுங்கிப் போனது.
நான் ஒரு நிமிஷம் செய்யறது அறியாம, ஆதித்ய ஹிருதயமும் அப்புறம் ஞாபகம் வந்த வரைக்கும் ஹனுமான் சாலிசாவும் சொன்னபடிக்கு முன்னாடி போக மயிலானா விடாமே திட சித்தத்தோடு பின்னாலேயே வருது.
நான் ஓட ஆரம்பிச்சேன். அதுவும் என் பின்னாலே ஓடி வந்துண்டு இருக்கு. மயில் ஆடினா கண்ணுக்கு நிறைவா இருக்கும். ஓடினா என்னமோ தத்தக்கா புத்தக்கான்னு கோணலா இருக்கு. தோகை பாரம் இல்லாட்ட இன்னும் வேகமா ஓடுமோ என்னமோ. அதுவும் நல்லதுக்குத் தான். என் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாம அது தெருக் கோடியில் நிக்க்றது. சரி அப்படியே போயிடும்னு ஆசுவாசம்.
இது என்ன தெரு? அரசூர் மாதிரி தெரியலியேன்னு கவனிச்சுப் பார்க்கறேன். அட, இதெல்லாம் நம்ம அம்பலப்புழை ஆச்சே. இங்கே எப்படி வந்தது? கனவு ஏதாவது காணறேனா?
நின்னு யோசிக்கற போது ஜிவ்வுனு அந்த மயில் பறந்து வர்றது தெரிஞ்சது. வெலவெலத்துப் போய் எதிர் வசத்திலெ தெரிஞ்ச பாதையிலே ஓடறேன். அது அம்பலக் குளக்கரை. செண்டை மேளம் சத்தம் கேக்கறது. எங்க அம்பலப்புழ கிருஷ்ணன் அம்பலம் தான். இந்த மாரார் குரல் எத்தனையோ காலம் கேட்டுப் பழக்கமானது ஆச்சே.
வந்தே முகுந்த ஹரே ஜெய ஷவ்ரே
அம்பலப்புழை கிருஷ்ணன் அம்பலம் ஆச்சே இது. மனசுக்கு ஆசுவாசமா இருக்கு. குளக்கரையிலே யாரோ உக்கார்ந்திருக்கார்.
அம்மா பசி உசுரு போறது. புண்ணியமாப் போறது. அன்னபூரணி. சாப்பிட ஏதாவது கொடு.
பைராகின்னா அது. நட்ட நடுத் தலையிலே திரிசூலம் மாதிரி சூடு போட்டுண்ட சித்தன். அன்னிக்கு என்னோட பேசி நல்ல வார்த்தை சொன்னவன் ஆச்சே. அவனா பசின்னு ஆகாரம் யாசிக்கறது?
பைராகிகள் பசிச்சாலும் அல்பமான சம்சாரிகள் சமைச்சதைச் சாப்பிடுவாங்களோ? நான் புரியாமல் அவனைப் பார்த்தேன்.
காலம் மாறிவரும் போது நாங்களும் மாறித்தான் போகணும் குஞ்ஞே. வீட்டுக்குப் போய் பழைய சாதம் இருந்தாலும் சரி, ஒரு குத்து தயிர் விட்டு ஒரு விழுது மாங்காய் உப்பிட்டது சேர்த்து எடுத்து வா.
பைராகி பெத்தவா மாதிரி பிரியமான குரல்லே சொல்ல மனசு கரைஞ்சு போனது எனக்கு.
இதோ வந்தாச்சுன்னு சொல்லி, இடுப்பிலே வச்ச குடத்தோடு விர்சா நடக்கிறேன். குப்புசாமி அண்ணா, விசாலம் மன்னி. வந்துட்டேன். பழைய சாதத்தை களைய வேண்டாம். கேட்டேளா. பைராகி கேட்கறார்.
வீடு எங்கே? எந்தத் தெருவிலே இருக்கு? இருட்டு இன்னும் ஏன் விலகலே?
நான் பதைபதைச்சு நடக்கறேன்.
ஏய் பகவதி, எங்கே நீ பாட்டுக்கு போறே?
எங்க அவர், புகையிலைக் கடைக்காரர் குரல். அரசூர் வீட்டு வாசல் இது. நான் போட்டுட்டுப் போன கோலத்தை ரசிச்சபடி நின்னுண்டு கூப்பிடறார்..ஒண்ணும் புரியாம திரும்பறேன்.
ஏன் இந்த வீட்டை, இவரை மறந்து போனேன்? எங்கே போயிட்டிருக்கேன்? அம்பலப்புழை வீட்டு இங்கே எப்படி வந்தது? அம்பலம் எங்கேயிருந்து இடம் பெயர்ந்து வந்தது?
வீட்டுக்குள்ளே வேகமாப் போனேன். அவரும் கதவை அடச்சு உள்ளே வந்தார். கட்டிப் பிடிச்சுண்டேன் ஆமா. கட்டிண்டு கரைஞ்சேன் ஒரு பாட்டம் அழுகை. வேண்டி இருந்தது எல்லாம்.
அவர் காப்பி டம்ப்ளர்லே இக்கிணி இக்கிணியா சீப்பிக் குடிச்சுண்டே சொல்றார் – சமயத்துலே போதம் கெட்டுப் போயிடும் தான். எல்லோருக்குமே அது நடக்கலாம். சரீரத்துலே பித்தம் அதிகமானா இப்படி நேரும்னு வைத்தியன்மார் சொல்றா. அது இருக்கவே இருக்கு. இனிமே நீ இருட்டு விலக முந்தி எங்கேயும் போக வேண்டாம்.
இல்லேன்னா. எங்கேயும் போகலே. அம்பலப்புழை அம்பலம். வீடு. நான் சொல்லத் தெரியாத சொப்பனம் கண்ட சிசு மாதிரி புலம்பறேன்.
உனக்கு அதெல்லாம் ஆத்மாவிலே ஒட்டின் விஷயம்கறாரு இவரானா. ராத்திரி சொப்பனத்துலே பைராகி வந்தான். சொல்றான் –
குழந்தே. பத்திரமா வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தியே அதுவே போதும்கறான்.
அடடா, உனக்கு சாதம் போடறேன்னு சொல்லிட்டு நான் பாட்டுக்கு வந்துட்டேனேன்னு வரு்த்தத்தோட சொல்றேன்.
சாரமில்லே குஞ்ஞே. நான் திரும்பி வருவேன். உன் வீட்டுலே தான் சாப்பிடுவேன். அப்போ மயில் ஆடும். எல்லாரும் செழிப்பா இருக்கட்டும்.
அவன் ஜல்ஜல்னு சதங்கையைக் கையிலே வச்சு சத்தப்படுத்திண்டே போகறான். இது சொப்பனம்னா, பைராகி பசின்னு அன்னம் யாசிச்சது? ஊருணிக் கரையிலே மயில் தொறத்தினது? நான் ஓடினது? பிரமையா?
அதுலே எல்லாம் மனசை ரொம்ப அலைபாய விடக்கூடாதுன்னுட்டார் இவர். பைராகி ஆசிர்வாதம் பண்ணினது தான் இதிலே எடுத்துக்க வேண்டியதுன்னுட்டார்.
திரும்பி வருவானாமே? வரட்டுமே. வந்தா உக்கார வைச்சு பத்து காய்கறி தித்திப்பு, காரம், புளி சேர்த்து அமர்க்களமா ஆக்கிப் போட்டுடுன்னார். நான் இருக்கற்துக்குள்ளே வருவானா?.தெரியலியே.
அது எப்படியோ போகட்டும். அம்பலப்புழையிலே ஒரு வீடு வாங்கச் சொல்லணும் இவரை. சின்னதா ஒரு குச்சுவீடா இருந்தாலும் சரிதான். அங்கே ஒரு வீடு வைக்கணும்.
(தொடரும்)