new bio-fiction: தியூப்ளே வீதி – அத்தியாயம் 32 இரா.முருகன்


தியூப்ளே வீதி – 32 இரா.முருகன்

‘கிறிஸ்துமஸ் வந்து கொண்டிருக்கிறது. மார்கழிக் குளிராக எங்கும் இப்போதே கொண்டாட்டம் நிறைந்திருக்கிறது. கிறிஸ்துமஸ் தினத்தில் இருக்கும் வசீகரம் போலவே அதை எதிர்பார்த்து இருக்கும் தினங்கள் கொண்டு வந்து நிறைக்கும் சந்தோஷமும், கலகலப்பும், சுத்தமான காற்றும், நல்ல சிந்தனைகளும், எல்லோரையும் குழந்தைகளாக்கும் குதூகலமும், அவ்வப்போது சிதறும் ஈரத் தூறலும் அலாதியான விஷயங்கள். ராத்திரியில் கூட்டமாக நடந்து கிறிஸ்துமஸ் கரோல் பாடுவதில் இருக்கிற ஆனந்தமே தனியானது. என்ன, சரிதானே?’.

நீளமாக நல்ல தமிழில் சொல்லி விட்டு, அமேயர் பாதிரியார் புன்சிரிப்போடு என்னைப் பார்த்தார். இப்படி ரசனையும், உற்சாகமும் பிக்சர் போஸ்ட் கார்ட் புகைப்படம் போல மனதுக்கு இதமான இருப்பும் சிரிப்புமாக ஒரு பாதிரியாரை நான் இதுவரை பார்த்ததில்லை.

போகலாமா என்று குரல் உயர்த்திக் கேட்டார் அமேயர் பாதிரியார். அரிக்கேன் விளக்கில் திரி கொளுத்தி இடது கையில் தாழப் பிடித்துக் கொண்டு நான் அவரோடு நடந்தேன்.

எமிலி என் அருகில் சால்வையைப் பாந்தமாகப் போர்த்தியபடி வந்தாள். இடது பக்கத்தில் ஜோசபின். கோலம் கோலமாக அச்சடித்த வங்காளிப் பருத்திப் புடவைத் தலைப்பைத் தலையைச் சுற்றி இட்டிருந்த அவளுடைய வசீகரமும் கிறிஸ்துமஸுக்கானது தான்.

என் பின்னால் எமிலி வீட்டுக்காரன் கிறிஸ்டோபர் மற்றும் முக்காடு போட்டிருந்த இளம் பெண்கள், ஒருத்தி இடுப்பில் குழந்தை, பள்ளிக் கூடத்தில் படிக்கிற துடிப்பான சிறுமிகள், முன்னும் பின்னும் ஓடும் துடுக்கான பையன்கள் என்று இருபது பேர் கொண்ட கோஷ்டி இது.

எல்லோரும் கையைத் தட்டிப் பாடிக் கொண்டு போக, பாட்டுக்கு இசைவாக கிதார் வாசித்தபடி அமேயர் பாதிரியார் வருகிறார். ராத்திரி ஒன்பது அடித்தபோது வைசியாள் தெருவில் இருந்து புறப்பட்டுக், காமாட்சி அம்மன் கோவில் தெரு வழியாக வந்து கொண்டிருக்கிறோம்

கூட்டத்தில் நடுநாயகமாக, நீண்டு புரளும் பஞ்சுப் பொதி போல வெள்ளைத் தாடி ஒட்ட வைத்து, அலங்காரமான சிவப்பு அங்கி அணிந்து கிறிஸ்துமஸ் தாத்தா குதித்து நடந்து வருகிறார். இந்த வீடு இந்த வீடு என்று அவர் குரல் கீச்சிட நாங்கள் நிற்கிறோம்.

சாண்டா க்ளாஸ் விக்தொ அங்கிள் அமேயர் பாதிரியாரைப் பார்க்க எதுவும் சொல்லாமலேயே எந்தப் பாட்டு என்று இருவருக்கும் தட்டுப்படுகிறது. எத்தனை வருடப் பழக்கம் இவர்களுக்குள்!

தோத்திரம் செய்வோமே ரட்சகனை
தோத்திரம் செய்வோமே

அமேயர் பாதிரியார் கம்பீரமான பாரிடோன் குரலில் எடுக்க, ஏற்று வாங்கி ஜோசபின் பாடுகிறாள்.

தோத்திரம் செய்வோமே ரட்சகனை
தோத்திரம் செய்வோமே

ஏற்று வாங்கி நாங்கள் எல்லாரும் பாடப் பனிக் காற்று மேலே தழுவி, லாந்தர் விளக்கின் மெலிந்து உயர்ந்த திரி நாளங்களையும் ஆட வைத்து நகர்கிறது.

நான் பாடிக் கொண்டே எங்கே நிற்கிறேன் என்று பார்க்கிறேன். ஈஸ்வரன் தர்மராஜா கோவில் தெரு. இந்த வீடுதான்.

வண்ணக் காகிதம் ஒட்டிச் செய்து உள்ளே நூறு வாட்ஸ் மின்சார பல்ப் ஒளி விடக் காற்றில் அசைந்த கிறிஸ்துமஸ் நட்சத்திரம் எல்லோரையும் வரவேற்கிறது.

இரண்டு வீடு தள்ளி இருக்கிற பழைய வீடு எனக்குப் பரிச்சயமானது. எல்லோருக்குமே தெரிந்த ஒன்று தான். பாரதியார் இருந்த வீடு அது.

அங்கே போய் எங்கள் கூட்டம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பாடலாம் என்று தோன்றியது. அடைத்த பழைய கதவுகள் விரியத் திறந்து உள்ளே இருந்து பாரதியார் வந்து விடுவார். அநேகமாக கப்பலோட்டிய தமிழன் படத்தில் எஸ்.வி.சுப்பையா மாதிரி அவர் இருப்பார்.

பாரதியாருக்கு தற்போதைய அண்டை வீட்டுக்காரர் வெளியே வந்து எல்லோருக்கும் சின்னச் சின்னதாக நேர்த்தியாகச் செய்த சாண்ட்விச் கொடுத்தார். பேப்பர் கப்பில் டீயும் உண்டு.

எங்கள் பாட்டுக்குழு நகர்ந்து லலி தொலெந்தெல் வீதிக்குள் நுழைய மனம் அதற்கு முன்பே அங்கே போய் நின்று விட்டிருந்தது.

தொலெந்தெல் தெருவில் அமேலி இருந்த வீட்டில் வெளிச்சம் இல்லை. கர்னல் மனைவி போன மாதம் ஏசுவில் உறங்கியிருந்தாள். கர்னல் பிரான்ஸ் போய் விட்டார். ஜோசபின் சொல்லித் தெரிய வந்தது இது.

’அமேலியையும் கூட்டி வந்திருக்கலாமே?’. ஜோசபினிடம் கேட்டேன்.

’அவ ரோசாலியோட நெல்லை போய்ட்டா.’.

’அங்கே என்ன விசேஷம்?’

‘ரோசாலி வீடு அங்கே தானே இருக்கு?’என்றாள் ஜோசபின். அதுனாலே?

’கூட்டுக் குடும்பம். அங்கே கிறிஸ்துமஸ் பிரமாதமா இருக்கும்னு சொன்னா ரோஸ்.. அமேலி நானும் வரேன்னா.. கூட்டிப் போயிருக்கா’.

அடைத்துப் பூட்டியிருந்த அமேலி வீட்டைப் பார்த்தபடி கடந்து போனேன். குறுகுறுப்பும் குற்ற உணர்ச்சியும் சந்தோஷமும் வெட்கமும் என்னுள் அலையடித்துப் போக, அடுத்த பாடலை அமேயர் பாதிரியார் ஆரம்பித்திருந்தார்.

கட்டிடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்து ஏசுவுக்காய்

அமேயர் பாதிரியார் பிரான்ஸில் இருந்து வந்திருக்கிறார். கிறிஸ்துமஸ் காலத்தில் தவறாமல் வந்து விடுவார். அவருடைய பிள்ளைப் பிராயம் இந்த ஊரில் தான் என்பதால் ஊர்ப் பற்று குறையவில்லை. என் ரெட்டைத் தெரு பித்து போல அது. அவருக்கு அறுபது வயது. அவர் வயதில் எனக்கு ரெட்டைத் தெருவோடு தியூப்ளே வீதியும் இந்த ஊரும் அப்படி ஒரு வெறியான ஈடுபாடாகி இருக்க வாய்ப்பு உண்டு.

’ஃபாதர் கால் வலிக்குது’.

பாட்டுப் பாடிக் கொண்டு வந்த ஒரு பிஞ்சு பிரஞ்சில் சொன்னது. ஜோசபின் சிரித்து அதைத் தோளில் சுமந்து கொண்டாள்.

’ஆட்டுக்குட்டியோடு வரும் மரியன்னை மாதிரி இருக்கே என்றேன்.

’வேணாம்டா, அவ்வளவு பரிசுத்தமும் நல்ல இதயமும் எனக்கில்லே. சாதாரண மனுஷி’, என்றாள் அவள் நடந்தபடி. அவள் கையைப் பற்றி நானும் நடந்தேன்.

ரிஷ்மாண்ட் தெருவுக்குள் எல்லோரும் திரும்பினோம். இன்னொரு வீட்டை இனம் காட்டினார் பாதிரியார். பாடியபடி வெளியே நின்றோம்.

ஆவலாய் ஏசுவின் வார்த்தை கேட்போம்
அவரே மூலைக்கல் ஆகிடுவார்

கடைசி அடியைப் பாடி நிறுத்த வீட்டு முற்றத்தில் எல்லோரையும் உட்காரச் சொல்லி லட்டும் டீயும் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

குளிருக்கு இதமாக சாயா. பக்கத்தில் நட்புக்கு இதமாக ஜோசபின்.

உன் குரல் சொப்ரானோ தானே? ஜோசபினை விசாரித்தேன்.

’எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாவது தெரிஞ்சு வச்சிருக்கேடா. உன்னைப் பார்த்தா எனக்கே பொறாமையா இருக்கு’ என் நெற்றியில் திருஷ்டி வழித்துச் சொன்னாள் ஜோசபின்.

‘சொப்ரானோன்னா ஹை பிட்ச்லே நிக்கணுமே.. நீ மேல் ஷட்ஜமத்தை பிடிக்கறே.. ஆனா சட்டுனு கீழே மத்திமத்துக்கு வந்துடறே’ என்றேன்.

’அதெல்லாம் தெரியாதுடா. ஆனா சொப்ரானோ இல்லே.. ஹாஃப் சொப்ரானோவா ஒரு காலத்திலே இருந்தது’

‘அது என்ன ஒரு காலத்திலே?’ என்று கேட்டேன்.

‘பியானோ வாசிச்சு பாடின நேரத்திலே பாதி சொப்ரானோ வாய்ஸ் இருந்துது.. டாடி சொல்வார்.. இப்போ எதுவும் இல்லே.. ரயில் பாடகி..’.

’நீயா ரயில் பாடகி.. என் மானச சில்ப கோபுர காயகி’ அவள் காதில் சொன்னேன்..

’மலையாளத்திலே திட்டறியா.. நல்லா திட்டு..நீ இல்லாம திட்ட யார் உண்டு எனக்கும்?’

’மடச்சி, நீ என் மனசுலே .கோபுரம் எழுப்பி வச்சு உள்ளே இருந்து பாடறேங்கறேன்.. நீயானா..’.

’எப்படிப்பா கோபுரத்துலே உக்கார்ந்து பாடறதாம்’?

ஜோசபின் பாயிண்டைப் பிடிக்க, நான் மலையாளத்தில் எல்லாம் சாத்தியம் என்று பேச்சை மாற்றினேன்.

தூக்கிச் சுமந்து கூட்டி வந்த பிஞ்சு, லட்டை எச்சில் பண்ணிக் கொண்டே பக்கத்தில் வந்து என்னைக் கூர்ந்து பார்த்தது.

’அங்கிள், நீங்க பார்க்க நேடிவிடி டிராமாவிலே த்ரி வைஸ்மென்.. அதுலே ஒருத்தர் மாதிரி இருக்கீங்க’ என்றது அந்தக் குழந்தை.

‘நாளைக்கு நேடிவிடி டிராமா முதல் டிரஸ் ரிகர்சல்’ என்றேன் ஜோசபினிடம்.

அது வீடு வீடாகப் போய்ப் பாடும் குழு மாதிரி இன்னொரு கிறிஸ்துமஸ் ஸ்பெஷல். ஏசு அவதார நாடகம். வருடம் தவறாமல் நடத்துவது. ஒவ்வொரு வருடமும் அமேயர் பாதிரியார் தான் வசனம் எழுதுவார்.

‘பைபிளும் ஏசு அவதார நிகழ்ச்சிகளும் இனிமேல் மாறப் போறதில்லே. எதுக்கு ஃபாதர் வருஷா வருஷம் நேடிவிடி நாடகத்துக்குப் புதுசா வசனம் எழுதணும்?’

அமேயர் பாதிரியாரைக் கேட்டால் அவர் சொல்வார் –

’போன வருஷத்தை விட ஜீசஸ் எனக்கு இன்னும் நெருக்கமாகிட்டு இருக்காரே. பழைய ஸ்க்ரிப்டை எப்படி போடறது’?

இதுதான் அவருடைய வழக்கமான பதிலும் கூட. ஸ்கிரிப்ட் மட்டும் இல்லை, நடிகர்களும் மாறித் தான் வருவார்கள். இந்த வருஷம் சிறுவன் ஏசு என்னிடம் பேசிய பிஞ்சு. எபிபனி என்ற கிறிஸ்துமஸுக்கு பனிரெண்டாம் நாள் இரவில் வந்து ஏசுபிரானைத் தரிசிக்கிற மூன்று சான்றோரில் ஒருவர் நம்ம அந்த்வான்.

போகலாமா?

அமேயர் பாதிரியார் எழுந்து நின்று விசாரித்தபடி விக்தொ அங்கிளுக்குக் கண் காட்ட, அகார்டியனைக் கூடவே வரும் சைக்கிள் ரிக்ஷாவில் வைத்து விட்டு கிதாரோடு வந்தார் விக்தொ.

ரிம் ஜிம் ரிம் ஜிம் என்று கிதாரின் நரம்புகள் உற்சாகமாக அதிர்ந்து குதித்துப் பாயும் நாதத்தைப் பிறப்பிக்க, கதனகுதூகலம் ராகமாக என் காதில் அது சுகமாகப் பாய்ந்தது.

அமேயர் பாதிரியார் பாட ஆரம்பித்தார். கை தட்டியபடி நாங்கள் தொடர்ந்தோம். மரைன் வீதியில் இருந்தோம் நாங்கள்.

இறைமகன் இங்கு வந்தார்
என்றும் என்னை ஆட்கொண்டார்
எந்தன் உள்ளம் பாடுது சந்தோஷம்

ஜோசபின் அடுத்து மந்தார ஸ்தாயிக்கு சுலபமாகக் குரலை நகர்த்தியபடி என்னைச் சற்றே பார்த்துச் சிரித்தாள்.

தேவாதி தேவனே ராஜாதி ராஜனே
எந்தன் உள்ளம் பாடுது சந்தோஷம்

அந்த சந்தோஷத்தை நான் முழுக்க முழுக்க உணர்ந்திருந்தேன்.

நான் பிடித்திருந்த லாந்தர் வெளிச்சத்தில் ஜோசபின் ரெம்ப்ராண்ட் ஓவியத்தில் மகதலேனா மரியம் போல் அழகாகத் தெரிந்தாள். பாடும் ஓவியம்.

கிறிஸ்துமஸ் மெல்ல வரட்டும். பண்டிகையை வரவேற்க என்றென்றும் இவளோடு கூடப் பாடிக் கொண்டு, கையில் பிடித்த ஒற்றை லாந்தரோடு இருளும் குளிரும் அப்பியிருக்கும் தெருக்களின் ஊடே நடந்து கொண்டே மிச்ச வாழ்க்கையைக் கழிக்க வேணும்.

ஜோசபின் முடித்ததும் கூட்டமாக ஆமென் பாட, கவுண்டர் பாயிண்டாக நான் ஐந்து வினாடி தாமதமாகச் சஞ்சரித்து இணைந்து கைகாட்ட அழகாக அலையலையாக நகர்ந்து போன ஆமென் வரிகளே அற்புதம்.

ஆமென் அல்லெலுயா ஆமென் அல்லெலுயா
ஜெயம் ஜெயம் அனந்த ஸ்தோத்திரா

அமேயர் பாதிரியார் கையைத் தட்டிக் கொண்டே லாரிஸ்தொ வீதியில் பிரவேசித்தார். சாண்டா க்ளாஸ் கிதாரை பக்கத்தில் வந்த பையனிடம் கொடுத்து விட்டு தலையில் இட்டிருந்த கம்பளிக் குல்லாயைக் கழற்ற, நான் அவர் பக்கம் நின்று தொடர்ந்தேன் –

அன்றன்று அப்பம் தந்து ஆசிர்வதிப்பீர்
அளவில்லா நலந்தந்து என்னை நிறைப்பீர்

ஜோசபின் ஆமென் அல்லுலுயா பாடும் பொழுது எதிர் வீட்டு காம்பவுண்டில் ஏதோ சத்தம். நான் பார்க்க ஒரு வினாடி அங்கே ஓரமாக நின்று முத்தமிட்டுக் கொண்டிருந்த ஒரு இளம் ஜோடி கண்ணில் பட்டது. ஜோசபின் என்னைப் பார்த்துச் சிரித்தபடியே பாட்டைத் தொடர்ந்தாள்.

என்னடா திடீர்னு சவுண்ட் பாக்ஸ் தகராறா?

அவள் என் விலாவில் விரலால் குத்த, யார் ஜோஸி அது என்று அவளைப் பார்க்காமல் கேட்டேன்.

அவள் சொல்லாவிட்டாலும் அந்த ரெண்டு பேரும் நானும் அமேலியும் தான். அந்த முத்தத்திலும் ஒரு அழகு இருந்தது. அதற்கப்புறம் பிரிந்திருந்தால் அழகு மேலும் கூடியிருக்கும். அவ்வப்போது குற்ற போதம் அப்புறம் எப்போதும் மனதில் ஏறாது.

’அந்தப் பையன் நல்லா கீ போர்ட் வாசிப்பான். அந்தச் சின்னப் பொண்ணு கிடாரிஸ்ட். ரெண்டு கலைஞர்கள் கிறிஸ்துமஸ் நேரத்திலே காணாமப் போயிட்டாங்களே..அடுத்த வருஷமாவது கிறிஸ்துமஸ் கரோல் பாட நம்மோட காயர்லே வராங்களான்னு பார்க்கலாம்’.

அமேயர் பாதிரியார் நாங்கள் பார்த்த திசையில் பார்த்து சிரிக்காமல் சொல்ல ஜோசபின் சிரித்தாள்.

‘ஆனாலும் உங்களுக்கு ரொம்பவே நம்பிக்கை ஃபாதர். அவங்க வந்து வாசிக்காட்டாலும் ஜோசபினும் நானும் வருவோம்’ என்றேன்.

நிமிர்ந்து பார்த்து ஜோசபின் சொன்னாள் – ஃபாதரை விட உனக்கு நம்பிக்கை அதிகம். என் வாழ்த்துகள்’.

நம்புவோம். அடுத்த வருஷம் இங்கே பட்ட மேல் படிப்பு. இதே காலேஜ். கயல். ஜோசபின். இதே மாதா கோவில். இதே கடற்கரை.

ஷாம்பேன் தெருவில் எங்கள் ஊர்வலம் நுழைந்த போது ஜோசபின் அடுத்த பாட்டைத் தொடங்கினாள். ஊர்வலத்தில் பின்னால் நின்ற முதிய பெண்கள் ஆர்வமாக முன் வரிசைக்கு வர சங்கீதம் உயர்ந்தது.

சீர் ஏசுநாதனுக்கு ஜெய மங்களம் அதி
திரியேக நாதனுக்கு சுப மங்களம்

அழிக்கம்பிகள் போட்ட கதவு. என் ரெட்டைத் தெரு வீட்டை நினைவு படுத்தும் வாசல் கதவுகள். அங்கு போல் மூன்றே படிகள்.

இந்த வீடும் நான் சுபாவமாக உள்ளே பிரவேசித்து இருந்து, கலந்து உரையாடி மகிழும் இடம் தான். விக்தொ அங்கிள் வீடு இது.

பாடல் முடிந்த போது நான் விக்தொ அங்கிளிடம் சொன்னேன் -அங்கிள் உறக்கம் வருது நான் நாளைக்கு வரேன்

நான் விடை பெற்றபோது கூடவே ஜோசபினும் புறப்பட்டாள்..

தெ குடிச்சுட்டுப் போங்களேன் ரெண்டு பேரும் என்றார் அங்கிள். நாளைக்கு என்றாள் அவளும்.

‘ஜாக்கிரதையா இந்தப் பொண்ணைக் கொண்டு போய் எல்லையம்மன் கோவில்லே அவங்க வீட்டுலே விட்டுடுங்க மிஸ்ஸே’ என்றார் விக்தொ. அந்தப் பெண்ணைக் கையைப் பிடித்து மெல்ல அழைத்துப் போகும் போது அமேயர் பாதிரியார் புன்னகை பூத்தார். நாளைக்கு கரோல் நிறையப் பாடணும் என்றார் ஜோசபினிடம் அவர்.

தெருக் கோடி வரை எதுவும் பேசாமல் எங்கள் சைக்கிள்கள் இருட்டில் சீராக முன்னேறியபடி இருந்தன.

’காலையிலே ஆறரை ஷிப்ட்.. இப்போவே பனிரெண்டு மணி ஆக இன்னும் பத்து நிமிஷம் இருக்கு’ என்றேன்.

’அஞ்சு மணி நேரம் அசந்து உறங்கினா களைப்பெல்லாம் பஞ்சு பஞ்சாப் போகும்’ என்றாள் ஜோசபின்.

‘கொஞ்சாதே குயிலே’ என்றேன். இடது கையை சைக்கிள் ஹாண்டில் பாரில் இருந்து எடுத்து ஓங்கி என்னை அடிப்பது போல் பாவனை செய்தாள். அந்தக் கரத்தை இறுகப் பிடித்து முத்தமிட்டு விடுவித்தேன்.

மூன்று தெரு சந்திப்பு. இங்கே நாங்கள் பிரிந்து அவரவர் வழி போக வேண்டும். நின்றோம்.

ஸ்வீட் டிரீம்ஸ் என்று வாழ்த்தினாள் ஜோசபின். நீ வந்தாத்தான் என்றேன்.

‘அய்யே நான் எதுக்கு, கயல் இருக்காளே உனக்கு?

நான் சைக்கிள் சரியாமல் கால் ஊன்றியபடி அவளை இழுத்து அணைத்துக் கொள்ள முயற்சி செய்ய, ராஜா இது போதும் என்று என் தலையில் மிக மெல்ல ஒரு முத்தம் பதித்தாள் ஜோசபின் ராஜகுமாரி.

ராஜகுமாரன் தங்கத் தேரில் வந்து தூக்கிப் போகும் கனவு வர வாழ்த்தினேன். அரை மணி நேரத்துலே மறுபடி நம்மில் யார் கனவிலாவது சந்திக்கலாம் என்றபடி கையசைத்து விடை பெற்றாள்.

என் கையைப் பற்றி அழுத்தி விட்டு குளிரை மிச்சம் வைத்து விட்டு அவள் போனாள். மனம் இலக்கில்லாமல் அலை பாய்ந்தது.

கயல், ஜோஸ்ஸியையும் நான் கட்டிக்கறேனே..

ஜோசபின் சம்மதிச்சாளா?

அதை அப்புறம் பார்த்துக்கலாம்.

ரெண்டு பேரைக் கல்யாணம் பண்ணிக்கறது சட்டப்படி குற்றம் உன்னை மாதிரி இந்துவுக்கும் ஜோசபின் மாதிரி கிறிஸ்துவப் பொண்ணுக்கும் அதே சட்டம் தான்.

எனக்கு ஜோசபின் வேணுமே.

உனக்கு ஜோசபின் வேணும்னா நீ அந்த ஸ்த்ரியோடு கூடப் போ என்று திருவசனம் சொல்லுது.

கயல் எப்போ அமேயர் பாதிரியார் மாதிரி ஆகம வசனம் போல அங்கங்கே அன்றாடப் பேச்சில் சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தாள்?

ஒரு வாரமாக கிறிஸ்துமஸ் பாட்டுக் குழுவில் என் வாக்கும் வசனமும் மாறிப் போனதோ?

மனம் சலசலத்து ஓய தியூப்ளே வீதிக்கு வண்டி ஊர்ந்தது. எல்லா சர்ச்களிலும் மணிகள் சேர்ந்து ஒலித்தன. கிறிஸ்துமஸுக்கு முந்தைய சனிக்கிழமை பிறந்திருக்கும் நேரத்தில் நான் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தேன்.

’என்ன, பஜனை கோஷ்டியிலே இருக்கியாமே?’

காலையில் அடித்து எழுப்பிய டெலிபோனில் கயல் கேட்டாள்.

’யார் சொன்னது அன்பே’? ஆவலோடு விசாரித்தேன்.

’தெருத் தெருவா லாந்தர் விளக்கைத் தூக்கிட்டு ஓசன்னா பாடிட்டுப் போறியாமே. என்ன பிரசாதம்? வாத்து முட்டை போட்ட கேக்கா’?

’முட்டை போட்டா வேணாம்னா சொல்லப் போறேன்? இதிலே வாத்தென்ன, வான்கோழியே கிடைச்சாலும் சரி தான்’..

’நீ விதவிதமா கோழி பிடிச்சே ஓஞ்சு போயிடுவேடீ..’ என்றாள் கயல். டீ என்ற அந்த விளியில் தடவிய செல்லம் இனித்து வழிந்தது.

’எத்தனை கோழி பிடிச்சிருக்கேன்’? சாதுவாகக் கேட்டேன்.

’அது உனக்கே தெரியும். கில்லாடிடா நீ/

போயும் போயும் ஒரு கேக்குக்கா இத்தனை பேச்சு? நீ கொடு. திங்கறேன். வெளியிலே யார் கொடுத்தாலும் வேண்டவே வேண்டாம்.

’வேண்டாமா? யாரு கிட்டே ரீல் சுத்தறே? உன்னை முழுக்க எனக்குத் தெரியும்டா’ என்று கிண்டல் அடித்தாள் கயல்.

’என்னை முழுசா எப்போ பார்த்தே’என்று கேட்டேன்.

’சீய்ய் நல்லா பேசிட்டு இருக்கும்போது கழனிப் பானை கேஸாயிடுறே பாரு..’…

’ ஓ.கே கேக்கை எனக்குப் பிடிக்காத லிஸ்ட்லே சேர்த்துடறேன். போதுமா என் கம்பளிப் பூச்சியே’

‘கம்பளிப் பூச்சி அடுத்து வண்ணாத்திப் பூச்சியாகும். நீ மக்காவே இருப்பே எப்பவும். கயல் சபித்தாள். அவளுக்கு இல்லாத உரிமையா?

‘சரி, அப்படியே இருந்துட்டுப் போறேன். அப்பவும் கேக் சாப்பிடப் போறதில்லே’ என்று சூளுரைத்தேன்…

’உலக மகா அழகி கொடுத்தா கேக் என்ன, கேக் அடச்சு வந்த அட்டை டப்பாவைக் கூட தின்னுடுவே நீ .. எஸ் சொல்லுடா .. சொல்லு உய் உய்’.

கயல் குயில் கிண்டல் செய்கிறாள். எழுந்து தலை சீவாமல் ப்ரஷ் கூட பண்ணாமல் சொக்கிப் போய் உட்கார்ந்திருக்கிறேன்.

‘தண்ணி நிக்கறதுக்குள்ளெ குளிச்சுட்டு துணி போடுங்க தம்பி.. அப்புறம் துவைக்கலேன்னு பீரோவிலே போய்ச் சொல்லக் கூடாது’.

வீட்டு வேலை பார்க்கும் தனம்மா பின்னால் வாளியும் கையுமாக நின்று சத்தம் போட, இந்தம்மா தாண்டா லாயக்கு உன்னை துரத்தி அடிக்கறதுக்கு என்று அபிப்பிராயப்பட்டாள் கயல்.

ஃபோனை வைக்கும் முன்னால் நேடிவிட்டி நாடகம் மாலை ஐந்து மணிக்கு என்று நினைவு படுத்தினேன் அவளிடம். கயலோடு போய் கலந்து கொள்வதை விட வேறே என்ன சந்தோஷம் இருக்கப் போகிறது?

பிற்பகல் நாலு மணி. காபி ஹவுஸ் வாசலில் கம்பீரமாக லாம்ப்ரட்டா ஸ்கூட்டர் வந்து நிற்கிற சத்தம். கயல் தான்.

வெள்ளை சுடிதாரில் அமெரிக்கையாக அவள் ஸ்கூட்டரில் இருந்து இறங்கினது மின்னல் வெட்டியது போல் இருந்தது. வல்லூரி மாதிரி ஸ்கூட்டரில் பின்னால் உட்கார்ந்து போக மட்டும் இனி வாழ்க்கை முழுக்க எனக்குக் கொடுத்து வைத்திருக்குமோ அல்லது அதுவும் கிடையாதோ தெரியவில்லை..

ஓர மேஜை அருகே உட்கார்ந்தோம்.

அதென்னடா நேடிவிட்டி டிராமா என்று கேட்டாள் கயல். ஏசு பிறந்த கதை என்றேன் நான்.

அதில் என்ன விசேஷம்?

சில பேர் வருஷா வருஷம் நடிப்பாங்க. அப்படி ஒருத்தர் நம்ம பிரண்ட்.

யாரு?

அந்த்வான்.

அந்த்வானா? ஆச்சரியத்தோடு கேட்டாள் கயல்.

’ஆமா, இருபது வருஷம் முந்தி ஏசுவா வந்தான். குழந்தை ஏசு. அப்புறம் சிங்கம், புலி, காட்டில் மரம், ஆட்டுக்குட்டி இதெல்லாம். இந்த வருஷம் மூணு சான்றோர்லே ஒருத்தர்’, என்றேன்.

’அந்த்வானுக்கு குரல் ஒத்துழைக்காதே’.

‘அவன் சமாளிச்சுடுவான். எப்படின்னு தான் பாக்கப் போறோம்’ என்று கயலைக் கிளப்பினேன்.

’ஏண்டா, ப்ளம் கேக்கு வாங்கித் திங்கலாம்னு ஆசை காட்டி கூட்டி வந்தே. இப்போ உனக்கும் பெப்பேங்கறே திருட்டுத் திம்மாடி’

உட்கார்ந்தபடியே அருகே நெருங்கி வந்தாள். மோகம் மூண்டெழுந்து அரைக் கண் மூடி நான் ரசித்து இருக்க உயிர் போகிறதுபோல் காலில் மிதித்து நக்ர்நதது அந்த இடாகினிப் பேய். கண்ணில் நீர் வர, வலி.

வலித்தபடி, ரசித்தபடி, ‘அது திம்மாடியில்லே.. தெம்மாடி,’ என்று கயல் சொன்னதைத் திருத்தியபடி, வெய்ட்டர் சவரிராயனைத் தேடினேன். இன்னும் ஆர்டர் கொடுக்கவில்லை என்று நினைவு வந்தது. இவ்வளவு நேரம் வராமல் இருக்க மாட்டாரே.

ஐந்து நிமிடம் சென்று கையில் வெறும் தட்டோடு களைத்துத் தளர்ந்து நடந்து வந்தார் சவரிராயன். அவர் இவ்வளவு கசங்கிய யூனிபார்ம் உடுத்தி பரிதாபமாக வந்து பார்த்ததே இல்லை.

யந்திரமாக போன் ஜூர் சொன்னார். யந்திரமாக ஆர்டர் எடுத்தார். ப்ளம் கேக் இல்லை என்றார் யந்திரமாக. அதோ சாப்பிடறாங்களே என்று அடுத்த டேபிளைக் காட்ட, அதுவா, சொல்றேன் தம்பி, ரொம்ப செலவாகுமே என்றார்.

ஒன்றுமே புரியாமல் அவரைப் பார்த்தேன். கனவு கண்டு விழித்த மாதிரி சட்டென்று பிரக்ஞை வந்து திசெலி திசெலி என்று நூறு சாரி சொன்னார். என்ன ஆச்சு ராயன் அண்ணே?

’வீட்டுலே மக பேறுகாலம். நேத்து தான் தொக்தொ சொன்னார் சிக்கலா இருக்கும்னு காசுக்கு என்ன செய்வேன் தெரியலே மிஸ்ஸே’.

அவர் கண் கலங்கியபடி உள்ளே போனார். காபி எடுத்து வந்தபோது கபேயில் கூட்டம் அதிகமாக, வேலையில் மும்முரமாகி இருந்தார்.

அப்புறம் சந்திக்கலாம் என்றாள் கயல் புறப்படும் போது. அவர் அவசரத்தில் தலை ஆட்டியபடி கேக் எடுக்கப் போனார்.

நாங்கள் சான் பால் மாதாகோவிலுக்குப் போனபோது சர்ச் வளாகத்தில் நாலு வாண்டுகள் பெரிய பவானி ஜமக்காளத்தைப் பிடித்துக் கொண்டு நிற்க, ஒவ்வொரு பையன் பின்னாலும் அவன் வயசுக்கு இன்னொருத்தன் ஸ்டூல் போட்டு நின்று அதே ஜமக்காளத்தின் மேல் பகுதியைக் கூடிய மட்டும் உயர்த்திப் பிடித்ததைப் பார்த்தோம்.

அமேயர் பாதிரியார் எல்லோரையும் வணங்கி நாடகத்தின் கதை என்ன என்று சொல்ல ஆரம்பிக்க, கயல் இடைமறித்து, ‘பாதர், அதை பார்க்கத்தானே வந்திருக்கோம். நீங்க கம்முனு இருங்க’ என்று குரல் விட பாதிரியார் ரெண்டு கையும் எடுத்துக் கும்பிட்டு அந்தரத்தில் கதையை விட்டார்.

‘எனக்கு ஸ்கூல்லே எட்டாம் கிளாஸ் சயின்ஸ் எடுத்தார் பாதர். நான் தான் கிளாஸ்லேயே செல்லம்.. அப்புறம் தான் ப்ரான்ஸ் போனார்’ என்றாள் என் காதில். வாயில் ஏதோ மென்று கொண்டிருந்தாள்.

’கிராம்பு எனக்கெங்கேடி செல்லம்’ என்றேன் கிசுகிசுப்பாக.

ஒண்ணு தான் இருக்கு.

வேணும்.

கையில் எடுத்து மறைவாகக் கைமாற்றினாள். நாடகம் தொடர்ந்தது.

அழகாக தேவதை உடை அணிந்த ரெண்டு சிறுமிகள் தோளில் மாட்டிய பூக்குடலைகளோடு வந்தார்கள். பின்னால் நின்ற கோரஸ் பாடியது –

கப்பல் மூணு வந்தது கண்டேன்
கிறிஸ்துமஸ் திருநாள் காலை
கப்பல் ஏறி வந்தவர் யாரோ
கிறிஸ்துமஸ் திருநாள் காலை
குழந்தை ஏசுவும் அன்னை மரியமும்
கிறிஸ்துமஸ் திருநாள் காலை

அட்டையில் மண் போட்டு நட்டு வைத்த குழைகளில் ஒட்டி வைத்த நாலு ரோஜாப்பூவையும் பறித்தாகி விட்டது. ஆனாலும் பாட்டு நிற்கும்படியாக இல்லை. ஒரு தேவதை குடலையில் இருந்து திரும்ப பூவைச் செடிக்குப் பக்கம் கொண்டு போய் ஏசுவுக்கு ஸ்தோத்ரம் சொல்லி அதை ஒட்ட வைத்தது. அற்புதச் செயல் புரிந்த தேவதை போல் அடக்கமாகச் சிரித்தபடி அந்த ரோஜாவைத் திரும்ப குடலையில் இட, நானும் கயலும் இன்னும் நாற்பது பார்வையாளர்களும் ரசித்தோம்.

ஜோசபும் மரியன்னையும் பெத்லஹேம் விடுதியில் இடம் தேடி வருகிற காட்சி. விடுதிக்குள் தயங்கித் தயங்கி ஜோசப் ஆக நடிக்கும் பையன் நுழைய பின்னாலேயே மரியன்னை வேடத்தில் ஒரு குட்டிப் பெண். மரியன்னை அவசரமாக நுழைய, ஜோசப் இடுப்பில் பைஜாமா நிற்காமல் காலில் இறங்கி வழிகிறது. ஷேம் ஷேம் சீக்கிரம் வாடா என்று மரியன்னை அவசரப்படுத்த பலமான கைதட்டு. அதிகம் சத்தமாக ஒலித்தது அமேயர் பாதிரியாரின் கரவொலி தான்.

மூன்று சான்றோர் வந்து கொண்டிருக்கிறார்கள். சான்றோருக்கு ரொம்பவே அதிகமான மேக்கப். கடைசியாக நெட்டைக் கொக்கு மாதிரி அந்த்வான் வந்து நாங்கள் எங்கே அடையாளம் கண்டு கொள்ள கஷ்டப்படுவோமோ என்று கவலையோ, என்னவோ மேடையில் இருந்து எனக்குக் கை காட்டினான்.

குழ்ந்தை ஏசுவைப் பார்க்கப் போறபோது வழியில் எல்லாம் டாட்டா காட்டிட்டுப் போகக் கூடாது என்று சான்றோரைக் கண்டித்தார் அமேயர்.

மூன்றில் இரண்டு சான்றோர் குழந்தை ஏசுவை வாழ்த்தியாயிற்று. அடுத்து அந்த்வான் முறை.

எங்கள் எங்கள் எங்கள் எங்கள்.

எதிர்பார்த்தபடி அதற்கு அப்புறம் அவனுக்கு வார்த்தை வசப்படவில்லை.

அவன் எங்களைப் பார்த்து சிரித்தான். இதெல்லாம் சகஜம் என்று அந்த்வான் முகத்தில் எழுதியிருந்தது.

உள்ளபடிக்கே அவன் அட்டகாசமாகச் சமாளிப்பதை நான் பார்த்தேன்.

அந்த்வான் குழந்தை ஏசுவாகத் தொட்டிலில் இருக்கும் சின்னக் குழந்தைக்கு திருஷ்டி கழித்து சொடக்கு போட்டு பாதத்தில் முத்தம் கொடுத்தான். அந்தக் குழந்தை உடனே அவன் முகத்தை நனைக்க, வாரியெடுத்துத் தோளில் சுமந்து ஆனந்த நடனம் ஆடினான். மாதாகோவிலையே அசைக்கும் அளவு கைதட்டல். அமேயர் பாதிரியாருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. இது போல் இன்னொரு சிறப்பான நடிகனை பார்த்ததே இல்லை என்றார் பெருமிதத்தோடு. நாங்கள் ஆமென் சொன்னோம்.

ஏசு குழந்தை அழ ஆரம்பிக்க, அதன் அம்மா ஓரமாக இருந்து பசியாற்றத் தொடங்கினாள்.

அஞ்சு நிமிஷம் இடைவேளை. ஏசுபிரான் ரெடியாகிட்டு இருக்கார்

அமேயர் அறிவிக்க, சர்ச் உள்ளே அவசரமாக நுழைந்து கொண்டிருந்த சவரிராயனைக் கண்டேன்.

பாதர், தயவு செஞ்சு எனக்காக பிரார்த்தனை பண்ணி இந்த சிலுவையைக் கொடுங்க. மகளுக்கு கட்டணும். ரொம்ப் பயமா இருக்கு

சவரிராயன் கையில் பிடித்திருந்த சிலுவை அவர் கை நடுங்கச் சேர்ந்து நடுங்கியது.

கவலைப்படாதேயும். ரட்சகர் ஏசுவில் நம்பிக்கை வையும். ஆரோக்கிய மாதா உம்மோடு என்றும் உண்டு. உமக்காக மன்றாடுகிறோம்.

அமேய்ர் பாதிரியார் சொல்ல, ஜோசபின் பாட ஆரம்பித்தாள்.. எனக்குப் பிடித்த பாட்டு தான்

இடைவிடா சகாய மாதா
இணை இல்லா தேவமாதா
பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள்
நிதம் துணை சேர்ப்பாயே.

ஜோசபினுடைய் சொப்ரானோ குரல் உருக்கமாக உயர்ந்து சான் பால் தேவாலயத்தை நிரப்பி மாதாவின் புண்ணிய சொரூபத்தை மன்றாடித் துதித்துக் கரைந்தது.

(அடுத்த இதழில் நிறைவு பெறும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன