நீங்க எந்த வாகனங்களை ஓட்டி இருக்கீங்க, ஃபாதர்?
கொலாசியம் மதுக்கடைக் காரனும் மறைந்த மெட்காபின் உற்ற தோழனுமான செபாஸ்தியன், தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அமேயர் பாதிரியாரிடம் விசாரித்தான். ஓவர்கோட்டை மேலே இழுத்து காது மடலை மறைத்தபடி அவர் ஒரு வினாடி யோசித்தார்.
வெறும் நாளில், நடக்கும்போதும், சைக்கிள் ஏறி கால்டர்டேல் பிரதேசத்துக் கல்பாளம் வேய்ந்த குறுகிய பாதைகளில் சுருதி கெடாமல் ரப்பர் டயரால் தட்டித் தட்டி ஓட்டிப் போகும் போதும் தெரியாத குளிரின் ஊடுருவும் தன்மை, லண்டன் போகும் நெடுஞ்சாலையில் விரையும் காரில் முன் வசத்து இருக்கையில் அமர்ந்து போகும் போது மனதில் பலமாக வந்து நிறைகிறது.
சிறுநீர் இந்த வினாடி போயே ஆகணும் என்று நெருக்கவும், கைகால்கள் கொஞ்சம் நீட்டி நிமிர்ந்து படுத்துக் கிடந்து சுகம் கொண்டாடி விட்டுப் போகலாமென ஒரேயடியாக ஓய்ந்து வரவும் குளிர் வாதனைப் படுத்துகிறது.
எனில், பயணம் போகாமல் தீராது. அழைப்பு விடுத்த அரண்மனைக் காரர்கள் அவரையும், மறைந்த மெட்காபின் அதிசயமான மோட்டார் காரையும் சேதன அசேதனப் பொருட்களுக்கான வேற்றுமை குறித்த போதமின்றி ஒரே நேர்கோட்டில் சீராகக் காண்கிறவர்கள். கார் மற்றும் பாதிரியாரை அவர்களுக்கு ஒரு பென்ஸ் யாத்திரைச் செலவில்லாமல் அரண்மனைத் தோட்டத்துக்கு வரச் சொல்லி கூப்பிட்டு விட்டு எதிர்பார்த்திருக்கிறார்கள்.
இந்தக் காரை ஓட்டத் தெரிந்திருந்தால் அமேயர் கூட்டுக்கு ஆள் சேர்த்துக் கொண்டு இப்படிக் கிளம்பியிருக்க மாட்டார் தான். இந்தக் கார் மட்டும் என்ன, வேறு எந்தக் காரையும் அவர் ஓட்டப் படித்ததில்லை இதுவரை. கொலாசியம் மதுக்கடைக் காரன் செபாஸ்தியனும் அவனுடைய நிழல் போல சதா கூட வரும் உதவியாளனும் இன்றைக்குக் கூட்டிப் போகாவிட்டால் அவரால் அரண்மனை விருந்துக்குச் சகல கம்பீரத்தோடும் கிளம்பி இருக்க முடியாது.
அப்பன், நீங்கள் ராணுவத்தில் இருக்கும்போது தண்ணீரிலும் தரையிலும் ஓடியபடிக்குக் கண்ணி வெடி விதைத்துப் போகும் புது மோஸ்தர் ஜீப் ஓட்டியவர் என்று கேள்விப் பட்டேனே. உண்மைதானா அது?
செபாஸ்தியன் தன் கேள்வியைச் சற்றே மாற்றி அவரிடம் கேட்டான். அவனுக்கு இந்தக் கேள்விக்காவது பதில் சொல்லியே ஆக வேண்டும்.
உலக மகா யுத்த காலத்தில் எங்களுக்கு விமானம் ஓட்டப் பயிற்சி கொடுத்தார்கள். நான் தலைகீழாக விமானத்தைத் திருப்பி நிதானம் தவறாமல் ஓட்டுவதில் சிறப்புப் பயிற்சி எடுத்திருந்தேன். அதை நடப்பாக்கிக் காட்டுவதற்குள் போர் ஓய்ந்து விட்டது.
அமேயர் பாதிரியார் தனக்கு வேதாகம கீர்த்தனம் எத்தனை பாடத் தெரியும் என்று யாராவது கேட்டால் சொல்கிற விலகி நிற்கிற, தகவல் மட்டும் அறிவிக்கிற குரலில் போர் விமானம் பற்றிச் சொல்ல, செபாஸ்தியன் அவரைப் புது மரியாதையோடு நோக்கினான்.
அவன் விமானத்தின் இஞ்சின் அறைப் பக்கம் கூட போனதில்லை. வயதான ஒரு பாதிரியார் யுத்த விமான பைலட்டாக, சாகசங்கள் செய்யும் திறமை வாய்க்கப் பெற்றவராக இருந்திருக்கிறார் என்பது அவனை நிலைகுலைய வைத்துப் போட்ட தகவல்.
அமேயர் பாதிரியார், ஏற்கனவே மரித்து விழுந்தவர்களைத் துப்பாக்கி எடுத்துச் சுடவும், ஏன், ராணுவத் தாவளத்தில் பினாயில் கலந்த தண்ணீரை அடித்து அடித்து ஊற்றிக் கழிப்பறை கழுவவும் கூட லாயக்கற்றவர் என்று நினைத்ததற்காகத் தன்னையே சபித்துக் கொண்டான் செபாஸ்தியன்.
அடேயப்பா. என்ன ஆச்சரியம். கர்த்தருக்கு ஸ்தோத்ரம். விமானம் தவிரவும் வேறு நுட்பமான வாகனங்கள் ஓட்டி இருப்பீங்கன்னு நினைக்கறேன் ஃபாதர். மலைப் பாதையில் போகும் ராட்சச ட்ரக், போர்க் களத்தில் டேங்க் இப்படி.
அமேயர் பாதிரியார் சிரித்தார். அதெல்லாம் அவர் பரிசயப் படுத்திக் கொள்ளாதது. கொஞ்சம் யோசித்து மன்னிக்கக் கோரும் குரலில் அவர் தொடர்ந்தார் – மோட்டார் படகு அசுர வேகத்தில் ஆற்றில் ஓட்டிப் போயிருக்கேன். ரெண்டு தடவை படகு கவிழ்ந்து அடிபடாமல் தப்பிச்சேன். சோன் நதியில் ராத்திரி நேரத்தில் படகு ஓட்டினது ஒரு காலம். அது பிரான்ஸில் பெரிய ஆறு. எப்பவும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நதி.
செபாஸ்தியனின் உதவியாளன் ரெண்டு கையையும் வானத்தை நோக்கி உயர்த்தியபடி அமேயர் பாதிரியாருக்கு மங்களம் சொன்னான். பிரான்ஸ் என்ற ஒரு நாடு பக்கத்தில் கடல் கடந்து எங்கோ இருக்கிறது என்பதை மட்டும் தெரிந்த அப்பாவி மனுஷன் அவன். ஆற்றையும் படகையும் கூட அவன் அபூர்வமாகவே பார்த்திருக்கிறான்.
இவ்வளவு சிக்கலான யந்திர அமைப்பு இருக்கிற சமாசாரம் எல்லாம் ஓட்டி ஜெயித்து வந்திருக்கீங்க ஃபாதர். இந்தக் காரை ஓட்டறது சின்னப் பிள்ளை விளையாட்டாகத்தான் இருக்கும் உங்களுக்கு. வாங்களேன் ஒரு ஐந்து நிமிடம் ஸ்டியரிங் பிடியுங்க. நீங்களே ஓட்டிப் போயிடலாம்.
செபாஸ்தியன் ஆர்வத்தோடு அழைக்க, அது மட்டும் வேணாம் என்று அவசரமாக மறுத்தார் அமேயர். ஏற்கனவே பர்மா ஷெல் பீரோ பீரோவாக நிறுத்தி வைத்து ரப்பர் குழாய் மூலம் பெட்ரோல் வழங்கும் இடத்தில் உடனொடுத்த மற்ற கார்கள் போல் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளாமல் தலை திரிந்து ஓடுகிற வண்டி இது. தண்ணீரை ஊற்றி ஓட்டுகிற மோட்டார் கார் என்று உள்ளூர் நிலவரம் தெரியாத யாரிடமாவது, முக்கியமாக, பத்திரிகைக் காரர்களிடம் சொன்னால் வழித்துக் கொண்டு சிரிப்பார்கள். அப்படித்தானா?
அது மட்டுமில்லை, இதைப் பற்றிக் கிண்டலும் கேலியுமாக ஒரு கட்டுரை எழுதிப் பத்திரிகை உலக வழக்கப்படி அடி ஸ்கேலால் அளந்து ஒரு செண்டிமீட்டருக்கு இரண்டு பவுண்ட் விகிதத்தில் சன்மானம் கிடைக்கப் பெறுவார்கள் அவர்கள். காரையும் பக்கத்திலேயே ஓய்வெடுக்கும் ஒட்டகம் போல அமேயர் பாதிரியாரையும் படம் பிடித்துப் போட்டு பத்திரிகை விற்க வழி பார்ப்பார்கள். சினிமா, நாடக நடிகைகள் கிடைத்தால் அவர்களும் பெரிய முலைகளைக் காட்டிக் கொண்டு புகைப்படமாகக் காரோடும் பாதிரியாரோடும் காட்சி தருவார்கள். பாதிரியாரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் அந்த மார்பகங்களுக்கு நேர் கீழே ஒரு இங்கிதமும் இல்லாமல் அச்சாகி இருக்கும். அவருடைய விருப்பத்தை யார் கேட்கிறார்கள்?
வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினான் செபாஸ்தியன். இன்னும் ஒரு மணி நேரம் அவனுடைய உதவியாளன் இந்தக் காரை ஓட்டப் போகிறான். அவனுக்கு இதை ஓட்டிப் பழக்கம் இருக்குமா என்று பாதிரியாருக்குத் தெரியவில்லை. மெட்காப் உயிரோடு இருந்தபோது செபாஸ்தியனோடு இந்தக் காரில் அவன் அங்கும் இங்கும் இலக்கில்லாமல் திரிந்ததையும், சில நேரம் செபாஸ்தியனே இந்தக் குறளிப் பிசாசு யந்திரத்தை ஓட்டிப் போவதையும் அமேயர் பாதிரியார் பார்த்திருக்கிறார்.
இது கூறு கெட்ட மாந்திரீக யந்திரம் ஒன்றும் இல்லை என்று அவர் சொல்ல மறந்ததே இல்லை. மந்தையாடுகளின் பயத்தைப் போக்கவும், குறளி வித்தை போன்ற கீழான விஷயங்களில் அவர்களுக்கு ஈடுபாடு வராமல் இருக்கவும் இந்த மோட்டார் வண்டி பிசாசு பிடித்தது இல்லை என்று அவர் பார்க்கிறவர்கள் எல்லோரிடமும் ஒரு பாட்டம் சொல்லித் தீர்த்திருக்கிறார்.
என்ன சமாதானம் தனக்கும் பிறருக்கும் சொல்லிக் கொண்டாலும், மெட்காபிடம் மெல்ல எடுத்துச் சொல்லி இந்தக் காரை வாங்கின படிக்கே கைக்குக் கிடைத்த விலைக்கு விற்று விடச் சொல்ல வேணும் என்பதில் அவர் முழு முனைப்பாக இருந்த நேரம் அது.
யாரும் எதிர்பார்க்காத விதமாக மெட்காப் யேசுவில் உறங்கப் புறப்பட்டுப் போய்விட, தெரிசா இந்தக் காரை ஒரு ஓரமாக நிறுத்தி வைத்து விட்டு முசாபர் அலியைக் கைப்பிடித்தது அதற்கு அப்புறம் நடந்தது. ஒன்றிரண்டு முறை இந்தக் காரை அவள் ஓட்டிப் போவதைப் பாதிரியார் பார்த்திருக்கிறார் தான். ஆனால் இன்றுவரை அங்கே இங்கே பேச்சு எழுந்ததைத் தவிர, இந்த மோட்டார் வாகனத்தைத் தண்ணீர் நிறைத்து ஓட்டிப் போகவேண்டும் என்பதை நிதர்சனமாக அவர் கண்டதில்லை.
ஆனாலும் இரண்டு தினம் முன்பு, மாதா கோவில் வளாகத்தில் திருப்பலிக்கான பாத்திரங்களும், தூபக்கால் மற்றும் சாமக்கிரியைகளும் பாதுகாப்பாக வைத்துப் பூட்டிய அறைக்கு முன்னால் சாய்வு நாற்காலி போட்டுத் தான் அமர்ந்து இருந்த தருணம் நினைவு வந்தது அமேயருக்கு.
இந்தியாவில் இருக்கும் மந்தையாட்டுக் குட்டியான பிரியமான தெரிசாளுக்கு சுபமங்களம் என்று தொடங்கும் தகவல் பகிரும் கடிதம் எழுதத் தொடங்கும்போது, காம்பவுண்ட் சுவர்ப் பக்கம் இருந்து உள்ளே சின்னச் சின்னதாகப் படிகளைச் சிரமமின்றிக் கடந்து ஏறி வந்து அமேயர் பாதிரியாரின் சாய்வு நாற்காலி பக்கம் அந்த மோட்டார் வண்டி நின்றது அதிசயம் தான்.
அது நடந்து சரியாக ஐந்து நிமிடம் கழித்து வாடிகனில் போப்பரசர் சாம்ராஜ்ஜியத்தில் இருந்து திரு ஊழியம் செய்ய அழைப்பும், பக்கிங்ஹாம் அரண்மனை வளாகத்தில் தேநீர் விருந்தில் பங்கு பெற்றுச் சிறப்பிக்க அரச குடும்பம் விடுத்த அழைப்பும் பாதிரியாருக்கு ஒரு சேரக் கிடைத்த நாள் அது.
ஆனாலும் இந்த வண்டி பிசாசு பிடித்ததில்லை என்று எத்தனையோ நாளாக நீங்க தான் விடாமல் சொல்றீங்க ஃபாதர். இதைக் கேட்க மெட்காப் இல்லாம போனது தான் எனக்கு வருத்தமாக இருக்கு.
செபாஸ்தியன் எதற்கோ வருத்தப்பட்டுப் பாரம் சுமக்க ஆரம்பித்தான். அவன் கார் ஓட்டாமல் இருந்தாலோ மதுக்கடையில் பெரிய கண்ணாடிக் கோப்பைகளில் வழிய வழிய லாகர் பியர் நிறைத்துத் தராமல் இருந்தாலோ தன்னிச்சையாக மனம் நொந்து போகிற நிலைக்குப் போவதாக அமேயர் பாதிரியாருக்குத் தோன்றியது. ஆனாலும் ஒற்றைக் கெட்டில் எத்தனை பொழுது தான் கால்டர்டேலில் இருந்து முன்னூறு கிலோமீட்டர் லண்டனுக்கு அவனும் தான் வண்டி ஓட்டி வர முடியும்?
லீட்ஸிலும் லீஸ்செச்டரிலும் பத்து பத்து நிமிடம் கழிப்பறை போகவும், சாப்பிடவுமாக காரை நிறுத்தினான் செபாஸ்தியன். அவன் மதுக்கடை ஏதாவது எதிர்ப்பட நிறுத்தி உதவிக்காரன் சகிதம், கொஞ்சம் போல தாக சாந்தி செய்து கொள்வான் என்று அமேயர் பாதிரியர் எதிர்பார்த்தார். அதற்காக அவனை, அவனை மட்டும் உடனடியாக மன்னிக்கவும் அவர் ஆயத்தமாக இருந்தார். அதற்கான லத்தீன் வசனத்தை மனதுக்குள் ஒத்திகை பார்த்திருந்தார் அவர். ஆனாலும் அந்தப் பக்கமே போகவில்லை அவனானால்.
கால்டர்டேல் கடந்து இந்தக் கார் மேன்சஸ்டர் நெடுஞ்சாலையை நோக்கி யாரும் ஓட்டாமல் கணிசமான வேகத்தில் நகர்ந்து போய்க் கொண்டிருந்ததை ஒரு தினம் நான் பார்த்தேன். அது சாத்தான் ஏறிய செயல் தானோ?
செபாஸ்தியானின் உதவியாளன் காரை ஒட்டியபடி சொல்ல சட்டென்று தெருவோரம் வளைந்து திரும்பி மோட்டார் கார் சக்கரங்கள் கீச்சிட நகர்ந்தது.
அரசியோ அவருடைய கணவரோ இந்தக் காரை பரிச்சயப்படுத்திக் கொண்டு பரீட்சை செய்ய முனைந்து, இது ஏதும் செய்யாமல் திடமாக நின்றால் ஏமாற்றமாகி விடாதோ.
செபாஸ்தியானின் உதவியாளனுக்கு ஊரில் இல்லாத சந்தேகம் எல்லாம் கிளம்பி வருகிறது என்று பாதிரியார் சஙகடத்தோடு நினைத்தார். அவருக்கும் மனசின் ஒரு ஓரத்தில் இருந்த கவலை தான் அது. சாத்தான் பிடிக்காவிட்டாலும், ஒன்றிரண்டு குறும்பாவது இந்தக் கார் காட்டித் தரவில்லை என்றால், இத்தனை தூரம் லொங்கு லொங்குவென்று ஒருத்தருக்குப் பதில் மூன்று பேர் இதோடு புறப்பட்டு முன்னூறு கிலோ மீட்டர் தூரம் போய் வருவது வியர்த்தமான வேலையாகவே இருக்கும்
அது கூட பரவாயில்லை, தெரிசா வீட்டுக்கு ஃபாதர் காலையில் போன போது சைத்தானின் பறவையை ஆட வைத்து அவருடைய சைக்கிளைத் தள்ளி சேதம் வர உடைத்துப் போட்டதே. அது போல அரண்மனையில் ஏதாவது செய்து வைத்தாலோ அல்லது ராணியம்மாளுக்கு உபத்திரவம் கொடுத்தாலோ
செபாஸ்தியன் இன்னொரு கோணத்தில் இருந்து பிரச்சனை என்னவாக இருக்கக் கூடும் என்று யோசித்ததும் அமேயர் பாதிரியாருக்கு ருசிக்கவில்லை. இந்த ரெண்டு பேருக்கும் அரண்மனை விருந்தில் பங்கெடுத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது என்றால் அதுக்கு ரெண்டே காரணம் – அமேயர் பாதிரியாருக்கு வேண்டப் பட்டவர்கள் இவர்கள். மற்றது, அரசியார் பார்க்க ஆசைப்பட்ட காரோடு மெட்காப் மூலமும் அவன் போன பிற்பாடும் ஏதோ விதத்தில் சம்பந்தப் பட்டவர்கள் இவர்கள். நல்ல வார்த்தை சொல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை. காரைப் பற்றித் தூற்ற வேண்டாம். மாநகரம் வந்து கொண்டிருக்கிறது.
லண்டன் தெருக்களில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் சீராக ஓடிய அந்தக் கார் பிக்கடெலியில் புகுந்து கிரீன் பார்க் பாதாள ரயில் நிலையம் முன்பு வந்தபோது ஒரு நீண்ட தீனமான சத்தம் எழுப்பி நின்று போனது.
செபாஸ்தியனும் அவனுடைய உதவியாளனும் மோட்டார் காரை முன்னால் நகர்த்தச் செய்த முயற்சிகள் வீணாக அவர்கள் செய்வதறியாமல் நின்றார்கள்., அமேயர் பாதிரியார் கார்க் கதவைத் திறந்து மெல்ல இறங்கினார்.
அரண்மனை விருந்துக்கு வந்திருக்கோம். இந்தக் காரைப் பார்க்கணும்னு கூப்பிட்டு விட்டிருக்காங்க. கார் நின்னு போச்சு. இதை மெல்லத் தள்ளிப் போய் அங்கேயே தோட்டத்தில் ஒரு ஓரமாக சமாதானமாக விட்டுடறோம்.
அமேயர் பாதிரியார் போக்குவரத்துக் காவலர்களிடம் விளக்கிச் சொல்ல ஆரம்பித்தபோது அரண்மனை வளாகத்துக்குள் மெட்காபின் கார் நுழைந்து கொண்டிருந்தது.
(தொடரும்)