New short story : நூல் உறவு இரா.முருகன்

’உக்காருங்க’.

முன்னால் வந்து நின்ற பெண்ணுக்காகக் கைப்பையை எடுத்து மடியில் புத்தகங்களின் மேல் வைத்துக் கொண்டு பக்கத்தில் இடம் ஒழித்துக் கொடுத்தாள் செல்வி. மழைக்கு நடுவே பஸ் வேகமெடுத்திருந்தது.

பக்கவாட்டில் பார்த்தாள். வந்து உட்கார்ந்தவள் ஆறரை அடிக்கு ஆகிருதியானவள். கழுத்தில் சிலுவை கோர்த்த சங்கிலி.

இன்னிக்கு நீ கிறிஸ்துவப் பெண்ணா? மனதுக்குள் அவளைக் கேட்டாள்.

அன்றன்றைக்கான சக பயணியை அன்றன்று கொடுத்தருளும் என்று வேண்டிக் கொண்ட மாதிரி ஒவ்வொரு பயணத்திலும் செல்விக்கு கிட்டத்தட்ட அவள் வயதில் யாராவது பக்கத்தில் வந்து உட்கார்ந்து விடுகிறார்கள். அவள் கற்பனையில் அந்தப் பெண் அக்காவோ தங்கையோ ஆகிவிடுவது வழக்கம். செல்வியால் சாதிக்க முடியாததைக் கூட சாதித்தவளாகி விடுவாள் வந்தவள்.

‘ஜென்னின்னு உன்னைக் கூப்பிடறேன்’.

இதுவும் செல்வி மனசுக்குள் சொல்லிக் கொண்டதுதான். பெயர் வைத்தால் தான் மனம் விட்டுப் பேச முடியும். செல்விக்கு அந்த மௌனமான உரையாடல் அவளுக்குத் தேவையானது. கற்றுத் தருவது.

மடி கனமாக இருந்ததாகப் பட்டது.. கைப்பையை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டாள் செல்வி. ஆனாலும் கனம்தான். . பெரிசு பெரிசாக மூன்று புத்தகங்களைக் கட்டித் தூக்கி எடுத்துப் போகிறாள் அவள்.

’எங்கிட்டே கொடு. தூக்கிட்டு வரேன்’. ஜென்னி சொன்னாள்.

‘அப்பா என்னைத்தான் எடுத்துப் போகச் சொன்னார்’, என்றாள் செல்வி,

சொந்தம் கொண்டாடும் பார்வையோடு அந்தக் காலிகோ பைண்ட் புத்தகங்களைப் பார்த்தபடி, . அவற்றை அணைத்துப் பிடித்துக் கொண்டு மழையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் அவள். அடித்துப் பெய்யாமல் சிணுங்கி அழும் மழை. எந்த நிமிடமும் நின்று விடலாம்.

நூலகம் திறந்திருக்குமா? செல்வியின் மனதில் ஜென்னி கேட்டாள். ’அப்பா பெயரைச் சொன்னேன். கொஞ்சம் லேட்டானாலும் ஓகேன்னு சொல்லிட்டாங்க’. என்று முணுமுணுத்தாள் செல்வி.

‘உனக்கு இன்னும் ஒவ்வொண்ணுக்கும் அப்பா பெயர் நுழைவுச் சீட்டு மாதிரி வேண்டியிருக்கு’. ஜென்னி கிண்டல் செய்தாள்..

‘சரிடீ சரி.. ஆறரை அடி ஆணழகு மட்டுமில்லே. அபூர்வமான பெண்ணழகும் தான். உன்னை மாதிரி ஆகிருதியா இருந்தா எந்த சிபாரிசும் இல்லாம எவ்வளவோ சாதிச்சிருப்பேன்’ என்றாள் செல்வி..

’கண்ணு, சின்னதோ பெரிசோ, உன் சூழல்லே சாதிக்கறது தான் முக்கியம்’, அப்பா சொல்வது நினைவு வந்தது செல்விக்கு..

’பாரு, எங்கப்பா மாதிரியா? இத்தனை உசரமான பொண்ணுக்கு எங்கே போய் மாப்பிள்ளை தேடுவேன்னு எப்பவும் அங்கலாய்ப்பார்.. உங்க அப்பா உன்னை கொண்டாடற வகை போல… என்ன குறைச்சல் உனக்கு.’ ஜென்னி பொறாமைப் படுவ்தும் அழகாக இருந்தது.

’எனக்கா? என்ன குறைச்சல்? அறுநூறு சதுர அடி ப்ளாட். சுமாரான சம்பளத்திலே வீட்டுக்காரர், ரெண்டு குழந்தை, சின்னதா ஒரு உத்தியோகம்னு சின்னச் சின்ன வட்டத்திலேயே சுத்திட்டு இருக்கேன்’..

கண்களை மூடியபடி அவள் ஜென்னியின் உலகை உருவாக்கினாள்.

செல்வி பி.எஸ்ஸி. ஜென்னி பார்ட்டிகிள் பிசிக்ஸில் டாக்டரேட் வாங்கியவள். கூடவே தமிழ், பிரஞ்சு இலக்கியத்தில் எம்.ஃபில். செல்விக்கு வங்கியில் கம்ப்யூட்டர் கீபோர்ட் அழுத்தி வரவு செலவு வைக்கும் வேலை. ஜென்னி தும்பாவில் சாடலைட் சவாரி செய்யும் பிஎஸ்எல்வி லாஞ்ச் வெகிக்கிள் தயாரித்த ஏரோ சயிண்டிஸ்ட். செல்வி குதிகால் எக்கி நின்று ஐந்தடி. ஜென்னி, சொல்லி மாளாது, சகலரையும் அசர வைக்கும் மகா உயரம். காரில் போகாமல் எதுக்கு பஸ்ஸில் வந்தாள்? ஏதானாலும் செல்விக்கு நல்ல பயணத் துணை அவள்.

செல்வி பஸ் ஜன்னலில் அவசரமாகக் கவிந்த தார்ப்பலின் திரையை உயர்த்திப் பார்த்தாள். மழை நின்றிருந்தது.

அப்பா என்னவாக இருந்தார் என்று கேட்டாள் ஜென்னி..

அப்பா சுமாரான வருமானம் வருகிற வக்கீலாகத் தான் இருந்தார். பெரிய கட்சிக்காரன் என்றாலும் சின்ன கேஸ் என்றால் அதற்கான தொகை தான் வாங்குவார். அவர் பெரிய கேஸ் என்று எதுவும் எடுத்து நடத்தியதில்லை என்பது வேறு கதை. ஏழை பாழைக்காக கேஸ் நடத்தினால், கிட்டத்தட்ட காசு வாங்காமல் தான் இருக்கும் அது. சாகுபடி நெல் அளப்பு தாவாவில் ஒரு மூட்டை நெல்லும் ஒரு பூசணிக்காயும், ரெண்டு குட்டைப் புடலும் பீஸாக வந்ததாக அம்மா சொல்லியிருக்கிறாள் செல்விக்கு. அம்மாவின் மஞ்சள்காணி வருமானமும், ரெண்டு வீடு வாடகைக்கு விட்டு வந்ததும் அந்தக் குடும்பத்தை அதிகமாக கஷ்டப்படாமல் காப்பாற்றி விட்டது.

அம்மா மட்டுமில்லை அப்பாவும் கட்டு செட்டாக சிக்கன வாழ்க்கை தான். ஆனால் புத்தகம் வாங்குகிறதில் மட்டும் அவர் செலவாளி. எங்கே தான் போவாரோ, மாதம் பத்து நாள் புதுசு புதுசாக ஏதாவது புத்தகம் வாங்கி வந்து விடுவார். தமிழில், இங்க்லீஷில், பிரஞ்சில் என்று மூன்றில் எதுவாகவும் இருக்கும். பழைய புத்தக ரசிகரும் கூட..

பழைய புத்தகம் யாராவது சப்ஜாடாக விற்கிறதாகத் தகவல் தெரிந்தால், செல்வியைக் கூட்டிக் கொண்டு ரகசியப் பயணம் கிளம்பி விடுவார் அப்பா. தலையில் முண்டாசும், கையில் பள்ளிக்கூட வாத்தியார் மாதிரிப் பிரம்பும், தோளில் நாலைந்து ஜோல்னாப் பையுமாக இந்தப் படையெடுப்பு பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை தான் இருக்கும். எதாவது பெரிய வீட்டை இடித்துப் புதிதாகக் கட்ட உத்தேசித்திருப்பார்கள். அல்லது வீட்டைக் காலி செய்து கொண்டிருப்பார்கள். வீட்டில் கட்டாயம் ஒரு அறை முழுக்க மர அலமாரிகளில் கட்டுக் கட்டாகப் புத்தகங்கள் இருக்கும். எல்லாம் ஒரே மாதிரி பழைய வாசனை வீசுகிறவை. அந்த வாசனை மூக்கில் பட்டாலே அப்பா முகத்தில் அலாதியான ஒரு ஆனந்தம் வரும்.

அவர் குற்றாலத் துண்டை மூக்கைச் சுற்றிக் கட்டிக் கொள்ளும்போதே செல்விக்கு அடுத்து என்ன வரும் என்று தெரியும். அவளை வெளியே இருக்கச் சொல்வார். தூசி, பூச்சி, பொட்டு அண்டுமாம. அண்டட்டுமே.

’நானும் எங்கப்பா பழைய புத்தகம் வாங்க்றபோது போயிருக்கேனே’. ஜென்னி சிரித்தாள். பழக்கமில்லாத வீடுகளின் அலமாரி அடுக்குகள் நிற்கும் அறைகளுக்குள் தன் கூட ஜென்னி நுழைய அவள் அப்பா அனுமதித்து அவளையும் விளையாட்டில் சேர்த்துக் கொள்வாராம்.

’அப்பாவுக்கு புத்தகம்னா குழந்தை மாதிரி. பூ போல. ஓரத்திலே மடிச்சா, நடுவிலே விரிச்சுக் குப்ப்றப் பறத்தி வச்சா உடனடியாகக் கண்டிப்ப்பார். ஆனாலும், அவ்ரோட பழைய புத்தகக் குழந்தைகளை முதல் தடவையாக ஆசையாக அணைச்சு எடுக்கும் முந்தி அதுகளுக்கு ஒரு பிரம்படி தருவது வாடிக்கை. புத்தகத்துக்கு உள்ளேயோ, அலமாரியிலே வச்ச இடத்துக்குப் பின்னாலேயோ பூச்சி பொட்டு ஏதாச்சும் இருந்தால் வெளியே வந்துடுமனு தான் அந்த அடி’, என்றாள் ஜென்னி.

அப்பாவோடு செல்வி புத்தகம் வாங்கப் போன எந்த இடத்திலும் தேளோ பாம்போ புத்தகம் படித்துக் கொண்டிருக்கவில்லை. பாச்சைகளும், வெள்ளையாக மினுக்கும் பூச்சிகளும் சில இடங்களில் கரப்பும் சமயத்தில் வெளியே ஓடி வந்தன. இதில் மகா மோசமான வில்லன் வெள்ளிமீன் பூச்சி என்பார் அப்பா. ’உள்ளே போய் அரிச்சுதுன்னா ஆக்ஸ்போர்ட் இங்க்லீஷ் டிக்‌ஷ்னரி போல ரெண்டாயிரம் பக்கப் புத்தகம் கூடப் பொலப்பொலன்னு கூழாகி உதுந்துடும்’.

’அந்த வெள்ளிமீன் பூச்சி பிரம்மாண்டமா வளர்ந்து துரத்தறதா கனவு அடிக்கடி வரும். இன்னும் பயம் இருக்கு’ என்றாள் செல்வி. ஜென்னி பலமாகச் சிரித்தாள். பூச்சிக்கெல்லாம் எதுக்கு பயம் என்றாள் அவள்.

பஸ் கிட்டத்தட்ட காலியாக இருந்தது. ஜென்னி இன்னும் தன்னோடு பயணம் செய்வது ஆறுதலாக இருந்தது செல்விக்கு. பின்னால் இருந்து ஈரமில்லாத முன் சீட்டுக்கு வந்த கண்டக்டரிடம், எப்போது தான் இறங்க வேண்டிய இடம் வரும் என்று கேட்டாள். ’கடைசி ஸ்டாப் அதான். இன்னும் பத்து நிமிஷமாவது ஆகும்’ என்றார் அவர்.

அப்பா பழைய புத்தகத்தை எப்படி வீட்டுக்குள் கொண்டு வருவார் என்று கேட்டாள் ஜென்னி. ‘அதை ஏன் கேக்கறே’? சிரித்தாள் செல்வி.

வாங்கி வந்ததை அப்பா வீட்டுக்குள் கடத்தும் அழகே அழகு. எத்தனை புத்தகம் இருந்தாலும் அழகாக அட்டைப் பெட்டிகளில் அடுக்கி, சைக்கிள் ரிக்‌ஷாவில் கொண்டு வரும் வேலையை அப்பா அலுப்பில்லாமல் செய்வார். பெட்டியில் வைத்தது போக, அவர் மடியிலும் ஜம்மென்று நாலு புத்தகம் இருக்கும். இப்போது செல்வி மடியில் இருப்பது போல.

’பூங்கா நகர்லே இருந்து ரிக்‌ஷாவிலே புத்தகம் வாங்கி வந்த கதை உனக்குத் தெரியாதில்லே.. கேளு ஜென்னி’ என்றாள் செல்வி.

புத்தகம் வாங்கி பாதி தூரம் வந்த போது செல்விக்கு பசி உக்கிரமாக இருந்தது. திரும்பி வரும்போது பூரி கிழங்கு டிபன் வாங்கித் தருவதாக அப்பா சொல்லி வைத்திருந்த உடுப்பி ஓட்டல் கடந்து போக, அவர் எதையோ பரபரப்பாகப் புத்தகக் குவியலில் தேடிக் கொண்டிருந்தார்.

’பதிற்றுப் பத்து மூலமும் உரையும் எடுத்து வைச்சேனே கண்ணு.. அதைக் காணோமே.. அந்த வீட்டு அலமாரியிலேயே விட்டுட்டேனா? அடடா கடப்பாறை எல்லாம் எடுத்துட்டு வந்துட்டு இருந்தாங்களே.. புத்தகம் அவங்க கையிலே கால்லே மாட்டினா .. ஐயயோ’.பதறினார்.

தூறல் வலுக்க, செல்வி தலையில் மேல் துண்டையும், ரிக்‌ஷா தட்டில் வைத்த புத்தகங்கள் மேல் பிரித்துப் போட்ட மப்ளரையும் வைத்துப் போர்த்தினார் அப்பா. ’கொஞ்சம் வண்டியை திருப்பு’.

ரிக்‌ஷாக்காரன் முணுமுணுத்துக் கொண்டே திரும்ப ஓட்டிப் போய் நிறுத்த அப்பா இறங்கி ஓடினார். குரல் எழும்பவில்லை. வீட்டுக்காரர் ’என்னங்க, பர்ஸ் விட்டுட்டுப் போயிட்டீங்களா’ என்று கவலையோடு விசாரித்தார். அப்பா கஷ்டப்பட்டு பதிற்றுப் பத்து என்றது அவருக்குப் புரியவில்லை. ’விட்டுட்டுப் போயிட்டேங்க ..இங்கே தான் வச்சேன்’…

இடிக்க ஆரம்பித்திருந்தவர்களை நிறுத்தச் சொல்லி மன்றாடினார் அப்பா. தாற்காலிகமாகப் போர் ஓய்ந்த பூமி போல இருந்த அந்த செங்கலுக்கும் தூசிக்கும் நடுவே ஓடி பாதி இடிந்த சுவரில் பிரித்தெடுத்துக் கொண்டிருந்த ஜன்னல் மாடத்தில் இருந்த புத்தகத்தை வாரி எடுத்து அணைத்துக் கொண்டார். கிழங்கு மாதிரி லெதர் அட்டை மாட்டி சீராகப் பெயர் எழுதிய புத்தகம். திரும்ப வரும்போது ரிக்‌ஷாக்காரன் சலித்துக் கொண்டதால், செல்வி பார்த்துக் கொண்டிருக்க, உடுப்பி ஓட்டல் கடந்து வண்டி நிற்காமல் ஓடி விட்டது.

’நானும் அப்பாவும் ஏரியூருக்குப் புத்தகம் வாங்கப் போனோம். அப்பா ’குட்டி நீ பசியாறு. அதான் முக்கியம்’னுட்டார். நாங்க போய்ச் சேர்ந்தபோது புத்தகத்தை எல்லாம் கிழிச்சு குப்பையிலே போட்டிருந்தாங்க. அப்பா அழுதார் அப்போ’ என்றாள் ஜென்னி. அப்பாவை எல்லாம் அழ விடலாமா? செல்விக்குத் தெரியவில்லை.

ஜென்னி எழுந்து நின்றாள். பஸ்ஸில் மிச்சம் இருந்த நாலு பயணிகளும் கூட நிற்க, ‘கடைசி ஸ்டாப்’ என்றார் கண்டக்டர். செல்வியும் எழுந்து நின்றாள். கையில் புத்தகங்களோடு இறங்க சிரமமாக இருக்கலாம்.

’கொடுங்க, நான் ரெண்டு எடுத்துக்கறேன்’ என்றாள் ஜென்னி.

நிஜமாகவே அப்படிச் சொன்னாள் செல்வியிடம். செல்வி அவளுக்கு மனதுக்குள் கொடுத்திருந்ததை விட அவள் குரல் மென்மையாக இருந்தது. அவள் பெயர் ஜென்னியாக இருக்காதோ.

பத்திரமாகத் தோளோடு சார்த்திய புத்தகங்களோடு அடுத்தடுத்து இறங்கினார்கள் இருவரும்.

நூலகம் எப்படிப் போகணும்?

செல்வி ஜென்னியை நேசமாகப் பார்த்துக் கேட்டதும் நிஜம் தான். ‘நான் அந்தப் பக்கம் தான் போறேன். வாங்க, சேர்ந்து போகலாம்’, ஜென்னி சொன்னாள்..இரண்டு பேரும் அமைதியாக நடந்தார்கள்..

’அப்புறம் என்ன ஆச்சு’? செல்வியின் மனசுக்குள் கேட்டாள் ஜென்னி கையில் புத்தகங்களை அணைத்துப் பிடித்தபடி.

’என்ன ஆச்சு, என் கல்யாணம் ஆச்சு’ என்றாள் செல்வி. காதலா என்று சிறு புன்னகையோடு கேட்டாள் ஜென்னி. பின்னே இல்லையா?

’அப்பா, உங்க கிட்டே கோயில் மாநகர் புத்தகம் இருக்கா’? அப்பாவிடம் கேட்ட மாலைப் பொழுது செல்விக்கு நினைவு வந்தது.

’ஓ இருக்கே. மதுரை கோவில் அறுபத்து நாலாம் வருஷ குடமுழுக்கு விழா மலர். ரொம்ப அபூர்வமான புத்தகம் ஆச்சே. யாருக்கு வேணும்’?

படிச்சுட்டு தரலாமான்னு கேக்கறார் பாரி’.

’பாரின்னா’?

’எங்க பேங்குலே புரபேஷனரி ஆபிசரா வந்திருக்கார். மதுரைக் காரர்’..

அபூர்வமான அந்தப் புத்தகத்தை ரெண்டே நாள் இரவல் கொடுத்தார அப்பா. பாரி படித்து வந்து கிழக்கு கோபுர வாசல் ஓவியத்தில் மகாத்மா காந்தி பற்றி தகவல் கேட்க, இன்னும் ஒரு வாரம் இரவல் நீடிப்பு..

நட்பு காதலாகக் கனிந்த நேரம் அது.

’புத்தகம் மட்டும் போதாது. நீயும் வேணும். இரவல் இல்லே. எப்பவும் எனக்கே சொந்தமாக’, மழை ஓய்ந்த ஒரு மாலை நேரம் சொன்னான்.

கோயில் மாநகர் முடித்து, ப.சிங்காரத்தின் புயலில் ஒரு தோணி முடித்து, அசோகமித்திரனின் பதினெட்டாம் அட்சக் கோடு முடித்து, ஆதவனின் காகித மலர்கள் முடித்து, ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே முடித்து, எம்.வி.வெங்கட்ராமின் வேள்வித் தீ படிக்க அப்பாவிடம் புத்தகம் கேட்டிருந்தான் பாரி அப்போது.

’உன் வேகத்திலே மெல்லப் படிச்சுட்டுக் கொடு’. அப்பா சம்மதித்த போது பாரி முறைப்படி பெண் கேட்டு வந்தான்.

அம்மா போய் முதல் திவசம் கழிந்த பத்தாம் நாள். செல்விக்கு சம்பந்தம் பேச அவனோடு கூட ரெண்டே பேர் வந்தார்கள். அக்காவும் அத்தானும் மட்டும் தான் உறவு என்று சொல்லி இருந்தான் பாரி.

காளிதாசனின் எல்லாக் காவியங்களும் மூலமும் உரையும் தமிழ் மொழிபெயர்ப்புமாக நேர்த்தியாக பழைய புத்தகமாகக் கிடைக்கிறது என்று அப்பா தேடிப் போனது அவர்கள் வந்த தினத்தில் தான்.

’குமார சம்பவம் கடைசி சர்க்கத்தை அசிங்கம்னு மொழி பெயர்க்காம விட்டுட்டாங்க. கவிதையிலே, அதுவும் காளிதாசன்கிற மகாகவி காவியத்திலே எது அசிங்கம்?எப்படி வரும்? இந்தப் பதிப்புலே எதையும் விடலே. அதுதான் இதிலே விசேஷம்’ என்றபடி கிளம்பினார் அப்பா…

அப்பா வந்தபோது பாரியும் அக்காவும் புறப்படத் தயாராக் இருந்தார்கள். ஒரு மணி நேரம் தாமதமாக வந்தார் அவர். ஆனால் வந்ததுமே நிலைமை அவர் வசமானது. பாரியின் அக்காவுக்கும் இலக்கியத்தில் ஈடுபாடு ஆனதால் ஆறிப்போன ரவா கேசரியும் சாயாவும், பிஸ்கட்டும், ஜெயகாந்தனின் ’பாரிசுக்குப் போ’வுமாக அந்தப் பகல் களைகட்டியது.

‘எங்கப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்தது எதுவுமே அமையலே. இந்த உசரத்துக்கு பிள்ளை கிடைக்காது. பொண்ணு பிடிச்சாலும் இன்பீரியாரிடி காம்ப்ளெக்ஸ்.. வேணாமாம். ரெண்டாம் தாரம் போல பார்க்கவான்னு யாரோ கேட்க நான் கல்யாணமே வேண்டாம்னுட்டேன். என்ன போச்சு..’.

ஜென்னி சொல்ல, செல்விக்கு துக்கமானது. அறுநூறு சதுர அடி ஃப்ளாட், சராசரி உயரமும், ரசனையும், நிறைய அன்புமான கணவன், பேங்க் வேலை, ரெண்டு பிள்ளை. உனக்கு.வேணாமா ஜென்னி?

’ரெண்டு மாசமாச்சும்மா அந்த அல்போன்ஸ்ராஜ் எங்கிட்டே இருந்து ஐசக் அசிமோவ் கம்ப்ளீட் வால்யூம் ஃபவுண்டேஷன் சீரிஸ் சயன்ஸ் பிக்‌ஷன் வாங்கிட்டுப் போய். படிக்கக் கூட இல்லே. எங்கேயோ பேசறதுக்கு மேற்கோள் கொடுக்கவாம். அலமாரியில் அந்த இடம் காலியா இருக்கறதை பார்க்கவே சகிக்கலே. இன்னிக்கு போய்ப் பார்த்து. அவன் கிட்டே இருந்து பிடுங்கிட்டு பத்தே நிமிஷத்துலே வந்துடறேன்’.

வாயும் வயிறுமாக செல்வி வந்திருந்த நேரம் ’ஆட்டோவிலே போய்ட்டு உடனே வந்துடறேன்..குடையை எடுத்துப் போறேன். புத்தகம நனைஞ்சுடும்’. அப்பா கிளம்ப மழையும் எட்டிப் பார்த்தது..

அவர் வர ஆறு மணி நேரம் ஆனது. வழியெல்லாம் மழை வெள்ளம் தேங்கி பாதை அமிழ்ந்து போக, வீட்டில் கரெண்ட் போய் விட்டிருந்தது. தனியாக வீட்டில் வயிற்றுப் பிள்ளையோடு இருக்க, அவசரமாகக் கவிந்து இருட்டும் இரவும் செல்வியை அழ வைத்த பொழுது அது.

ஜென்னியைப் பார்த்தாள் செல்வி. ’உன் உயரத்துக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லைங்கறதை மாத்திக்கறேன் ஜென்னி’.. சரி என்றாள் ஜென்னி. அவளுக்கு செயற்கைக் கோள் ஏவும் மையத்தில் சீனியர் ஏரோ சயண்டிஸ்ட் பரத் குமாரோடு காதல் கல்யாணம் நடந்து விட்டது. வாயும் வயறுமாக ஜென்னி அப்பா வீட்டுக்கு வந்திருந்தாள்..

’புத்தகம் இரவல் வாங்கிப் போனவன் திருப்பித் தரலே. ஆட்டோலே போய் வாங்கிட்டு வந்துடறேன் என்று கிளம்பினார் அப்பா.’ ஜென்னி ஒப்பித்தபடி, சரிதானே என்பது போல் செல்வியைப் பார்த்தாள். சரியே.

’போய்ப் பதினைந்தே நிமிடத்தில் திரும்பி விட்டார் அப்பா.வழியெல்லாம் மழை வெள்ளம் தேங்கி பாதை அமிழ்ந்து போக, வீட்டில் கரெண்ட் போயிருந்த நேரம். தனியாக வீட்டில் வயிற்றுப் பிள்ளையோடு இருக்கியே. புத்தகம் முக்கியமா நீயா?’ நெகிழ்ந்து போனேன்’ என்றாள் ஜென்னி. செல்வி அனுதாபத்தோடு சிரித்தாள்.

’எங்கப்பாவுக்கு பிரியம் இல்லாம இல்லே. நான் சமாளிச்சுப்பேன்னு எம் மேலே நம்பிக்கையும் இருந்தது.’. தீர்மானமாகச் சொன்னாள் செல்வி..

‘அப்பா அப்பப்போ எங்க் வீட்டுக்கு வந்து, பேரன் பேத்தியோடு கூட இருந்துட்டு ரெண்டு நாள் கழிச்சுத் தான் போவார். அப்போ புத்தகத்தை எல்லாம் மறந்துடுவார்’ என்றாள் பள்ளம் தவிர்த்து நடந்த ஜென்னி.

ஒரே ஊர் என்றாலும் அப்பா செல்வி வீட்டில் ஒரு நாள் கூட ராத்திரித் தங்க சம்மதித்ததில்லை. வீட்டை அப்ப்படியே போட்டுட்டு வர முடியாது என்று அவசரமாகக் கிளம்பிப் போய் விடுவார். புத்தகங்களைப் பிரிந்து இருப்பது முடியாத காரியம் அவருக்கு.

வீடு முழுக்க புத்தகங்கள் நிறைய அப்பா சொன்னார், ’கூடம் தான் விசாலமாக இருக்கே. அங்கே சுத்தி அலமாரி வைச்சு புத்தகத்தை அடுக்கி வச்சுடலாம்’. அப்பா போட்ட ஸ்கெட்ச் பார்த்துப் பாரி கேட்டான் – இவ்வளவு உசரமா, நாலு நாலு தட்டு வச்சு ஷெல்ப் வேணுமா? மேல் ஷெல்ப்லே எடுக்கறது வைக்கறது கஷ்டமாயிருக்குமே’.

’கஷ்டமே இல்லே பாரி, கொஞ்சம் எம்பினா போதும். எடுத்துடலாம். புத்தகத்துக்காக எவ்வளவு நடந்து இருக்கேன். இப்போ அதுக்காக நுனிக்கால்லே ஒரு நிமிஷம் நிக்கறது கஷ்டமா என்ன? எனக்கு எட்டலேன்னாலும் நம்ம சினா தானா எடுத்துத் தருவான். செட்டிநாட்டு சமையலுக்கு இல்லே, உசரத்துக்குத்தான் இவனை வேலைக்கு வச்சது என்றார் சமையலுக்கு வீட்டில் நின்ற சிதம்பரம் பிள்ளையைக் காட்டி.

’அலமாரி கதவு கிச்சுனு அடைச்சுப் பூட்டற மாதிரி இருக்கணும். திடீர்னு திறந்துடறது.. மேலே பாருங்க’ என்றான் பாரி. ’இருந்துட்டுப் போகட்டும், அப்போ தான் புத்தகங்களுக்கு சுவாசம் முட்டாம காத்து வந்துட்டு இருக்கும் .நான் பாத்து அடச்சுக்கறேன்’ என்றார் அப்பா..

’பார்த்துப் போங்க. நேரே நடந்தா தெரு திரும்பற இடத்திலேதான் நூலகம்’ என்றபடி ஜென்னி நிற்க விளக்குகள் அணைந்து போயின.

’அடடா இங்கெல்லாம் கரண்ட் போனா எப்போ வரும்னு தெரியாதே.’.

அவள் கொஞ்சம் யோசித்தாள். ’வாங்க உங்களை விட்டுட்டு வீட்டுக்கு போறேன்.’ என்றாள் செல்வியிடம். ஒரு தடவை நன்றி சொல்லி, போதாது என்றுபட இன்னொரு தடவையும் சொன்னாள் செல்வி.

’எங்கப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் கிடையாது. ஆனாலும் அவர் போன மாதம் இறக்கற போது கம்பராமாயணத்தைப் படிச்சுட்டிருந்தார்’.

ஜென்னி உண்மையிலேயே சொன்னாள்.

ஆறுதலாக இருந்தது செல்விக்கு. அவளும் ஜென்னியும் ஒரு கோட்டில் வருகிறார்கள். புத்தகம் படிக்கப் பிடித்த, போன மாதம் மறைந்த அப்பா.

போன மாதம் என்ன நடந்தது?செல்வியை ஜென்னி மனதில் கேட்டாள்..

’இன்னிக்கு சரஸ்வதி பூஜை அப்பா. ஒண்ணும் படிக்கக் கூடாது. நாளைக்கு விஜய தசமிக்குத்தான் படிக்கலாம்’.

அப்பாவுக்குப் பிரியமான புத்தகங்களைக் கொலுவாக வைத்து விட்டு, எண்ணெய் குறைத்து சுக்காகக் காய்ந்த ரெண்டே ரெண்டு பருப்பு வடையும், அரைக் கிண்ணம் பாயசமும் கொண்டு போய்க் கொடுத்து விட்டு வந்தாள் செல்வி.

’ரிடையர்ட் ஜட்ஜ் ஜகதீசன், ராமாயணம் பற்றி சங்க இலக்கியத்துலே ரெபரன்ஸ் இருக்கான்னு கேட்டார். நிறைய இருக்குன்னேன். புறநானூறுலேருந்து ஆரம்பிக்கணும்.. புத்தகம் எடுக்கணுமே’.

’ சாரி அப்பா, நாளைக்கு தான், விஜயதசமி. இன்னிக்கு நோ புத்தகம்’..

விஜயதசமி காலையில் செல்வி போனபோது அப்பா த்ரையில் அரைகுறை நினைவோடு கிடந்தார். பக்கத்தில் நாலு என்சைகிளோபீடியா பிரிட்டானிகா தலையணை புத்தகங்களும், கம்பராமாயணம் முழு வால்யூமும், புறநானூறும் சிதறிக் கிடந்தன. சமையல் சீனா தானா சொந்தக்காரர் யாரோ துபாயில் இருந்து வந்திருக்கிறார் என்று பர்ர்த்து வ்ரப் போயிருந்த மழைக்கால இரவு.

அப்பா அடுத்து படுத்த படுக்கையாகிப் போனார். டெஸ்ட் செய்த டாக்டர் சொன்னார் – விழுந்ததில் அடி பட்டு எலும்பு முறிவு மட்டுமில்லை. தலையில் அடி பட்டு பாதிப்பு. உச்சந்த்லையிலும் பிடரியிலும் கூட எப்படி அடி என்று புரியவில்லை. சுவரில் தலை மோதி இருக்கலாம்.

’இதெல்லாம் மேல் வரிசைப் புத்தகம். அப்பா தேடற புறநானூறு கீழ் வரிசையில் இருப்பது. தமிழ் கைக்கு அருகே. கொஞ்சம் எக்கி இங்கிலீஷ், சம்ஸ்கிருதம், பிரஞ்ச். இப்படித் தானே வச்சிருப்பார். கொஞ்சமும் வரிசை குலையாதே’. செல்விக்கு மனதில் பட்டது.

அப்பாவிடம் கேட்டும் விட்டாள். நெடு நேரம் பதில் இல்லை. அப்புறம் மெல்லச் சொன்னார் –

’கண்ணு, அது ஒண்ணும் இல்லே. ராத்திரி பாத்ரூம் போகிற போது அலமாரியிலே மோதிட்டேன்.. கரண்ட் வேறே இல்லியா.. அலமாரியோட மேல் கதவு திறந்து நாலு புத்தகம் .. என்சைக்ளோபீடியா.. குழந்தைகள் மாதிரி.. பாவம் நிலை குலைஞ்சு மேலே விழுந்துதா.. அதுக்கெல்லாம் அடி படாம பார்த்துக்கணும்னு நான் குனிஞ்சேனா, கால் வழுக்கி விழுந்துட்டேன்’.

அழுகையை அடக்கி நிமிர்ந்து பார்த்தாள் செல்வி. நிஜமான அழுகை. நிழமான பயணத் துணையாக, பயணம் முடிந்தும் அவள் அருகே ஜென்னி. ஜென்னியிடம் செல்வி சொன்னாள் – .

’இன்னிக்கு அப்பா இறந்து பதிமூணாம் நாள். காலையில் சம்பிரதாயமான சடங்கு எல்லாம் முடிஞ்சு நான் ஒரு ரெண்டு நிமிஷம் பேசலாமான்னு கேட்டேன். சரின்னாங்க. எழுதி வச்சதை படிச்சேன்..

வாழும் நாள் முழுதும்
வாசித்து வாசித்தே சுவாசித்தாய்
இதயம் போர்த்திய புத்தகமே
இறுதி மூச்சானது உனக்கு

சொல்றபோதே அழுதுட்டேன்.

அப்பா சொன்னபடி இந்த நாலு புத்தகத்தையும் ஜீவானந்தம் லைப்ரரியில் நன்கொடையாகத் தரப் போய்ட்டிருக்கிறேன்’.

கண் கலங்கினாள் செல்வி. கொஞ்சம் திகைத்து அவளைத் தேற்றினாள் ஜென்னி. பாதித்த சோகம் புத்தகங்களாகக் கனக்க இருவரும் நூலகத்தில் நுழைந்தார்கள்.. நூலகரும் புத்தகங்களும் தவிர ஆளரவமின்றி அது செல்விக்காக்க் காத்திருந்தது.

’சாரி, லேட் ஆயிடுத்து என்றாள் செல்வி நூலகரிடம். ஒரு கல்லூரி முதல்வர் போலவோ, அனாதை இல்ல நிர்வாகி போலவோ, மாநில ஆளுநர் போலவோ கம்பீரமான ஆளுமை அந்த அம்மா எனப் பட்டது..

’பரவாயில்லை.. புத்தகங்களை அதுவும் அபூர்வமான புத்தகங்களை நன்கொடையாக் கொடுக்க வரேன்னு சொன்னீங்க. காத்து இருக்காம ஓடிடுவேனா? புத்தகம் மதிப்பு எனக்கும் தெரியுமே’ என்றார் அவர் புத்தகங்களை வாங்கிக் கொண்டு.

வெளியே வந்து திரும்பிப் பார்த்தாள் செல்வி. அந்தம்மா குழந்தை மாதிரி ரெண்டு புத்தகங்களைத் தோளில் அணைத்துப் பிடித்து உள்ளே போய்க் கொண்டிருந்தார்.

அப்பாவுக்கு ரொம்ப மனசு நிறைவா இருக்கும். ’கண்ணு, நல்லா இரும்மா நீ எப்பவும் நல்லா இருன்னு சின்னச் சின்ன செய்லுக்கெல்லாம் ஆசிர்வதிப்பார். செல்விக்கு அழுகை வெடித்தது.

ஜென்னி செல்வி கையை மெல்ல அழுத்தினாள். அழாதீங்க என்றாள். ’எல்லா அப்பாவும் பொண்ணுங்க மேலே பிரியம் நிறைய வைக்கறவங்க. அவங்க இல்லாட்டாலும் அந்தப் பிரியம் நம்மை வாழ வைக்கும். நான் வரேன்… பாத்துப் போங்க’.

ஜென்னி தெரு திரும்பி நடந்து போனாள். அவளிடம் பெயரைக் கேட்டிருக்கலாம் என்று செல்விக்குத் தோன்றியது. எதுக்கு? ஜென்னியாகவே இருக்கட்டும்.

பஸ் வந்து கொண்டிருந்தது.

(இரா.முருகன் – நவம்பர் 2015 – ஜன்னல் டிசம்பர் 15 -31 இதழில் பிரசுரமானது)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன