New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 17 இரா.முருகன்

கொட்டும் மழையில் டாக்சியை விட்டு இறங்கி பாண்டுப் சர்வமங்கள் சால் இருக்கும் குறுகலான தெருவில் அகல்யா நுழைந்தாள்.

தேங்கி இருந்த மழைத் தண்ணீரையும் பின்னால் ஒடுங்கிக் கிடந்த தெருவையும் பார்த்து, உள்ளே வந்தால் திருப்பிப் போக சிரமம் என்று தெரு முனையிலேயே நிறுத்தி விட்டார் டாக்சி டிரைவர்.

ஆனாலும் ரெக்சின் பை, லெதர் பேக், பூ மாலை, செண்டு இதையெல்லாம் இறக்கவும், குடையை விரித்துப் பிடித்து திலீப்பிடம் தரவும் அவர் தவறவில்லை. வண்டியைக் கிளம்பும் முன் அவருடைய வாழ்த்தும் தார்வாட் பகுதி மராத்தியில் வந்ததைத் திலீப் கவனித்தான்.

ரொம்ப தூரம் நடக்கணுமா?

அகல்யா கேட்டாள். மழை சீரான சத்தம் எழுப்பிப் பாதையை நீர்த் திரையிட்டு மறைத்து முன்னால் ஓடியது. அகல்யா குடைக்குள், திலீப்புக்கு இன்னும் அருகில் வந்தாள். அவ்வளவு அருகில் திலீப்பின் வாயில் மட்டிப்பால் ஊதுபத்தி வாசனை எழுந்து வருவதாக அவள் நினைத்தாள். அது தானா அல்லது அவன் பல் கூடத் துலக்க நேரம் கிட்டாமல், அவளை அவசரமாகக் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கோவிலுக்கு ஓடி வந்தானா? எதுவோ, அந்த வாடை அவளுக்கு வேண்டி இருந்தது. ஆம்பிளை வாடை. அவளுடையவன்.

லெதர் பேக் என்கிட்டே கொடு. ஜிப் சரி இல்லே. உள்ளே தண்ணி போயிடும்.

குடையை இன்னும் தாழப் பிடித்தபடி கனமான அந்தப் பைக்காகக் கை நீட்டினான் திலீப். குடைக்கு வெளியே சத்தம் எழுப்பி விழுந்த மழை குடையின் சுற்றுவெளி மேலிருந்து சன்னமான தாரையாக வழிந்தது.

தலை குளித்து ஒரு முழம் கனகாம்பரப் பூ சூடி இருந்த அகல்யாவின் உச்சந்தலையில் இருந்து சீயக்காய்த் தூள் நெடியும், நெற்றியில் கோவில் குங்குமம் எழுப்பும் இனம் தெரியாத பாதுகாப்பான மஞ்சள் வாசனையும், கரைந்து கண்ணைச் சுற்றித் தடமிட்டுப் பூசிய கண்மையில் டிங்சர் அயோடின் கலந்த மெல்லிய வாடையும் சேர்ந்து எழுந்து திலீப்பின் நாசியை நிறைந்தன.

ஈரமும் அண்மையுமாக அவள் உடல் நெடி திலீப்பை பெரிய சாதனை முடித்து விருது வாங்கி வரும் மகிழ்ச்சியை அடைய வைத்திருந்தது. அது மயக்கமடைய வைப்பது. முயங்கிக் களித்துக் கிடக்கக் கட்டியம் கூறுவது.

பேக் இருக்கட்டும். உங்க வேஷ்டியைக் கவனியுங்கோ. விழுந்து வைக்கப் போறது..

ஈரமான பூமாலையில் இருந்து பூக்கள் கலவையாக மழை நீருக்கு மணம் ஏற்றி நெடி தரப் புது வேட்டி முனை ஈரத்தில் புரளாமல் உயர்த்திப் பிடித்தபடி திலீப் நிச்சயமற்று ஒரு வினாடி நின்றான்.

லெதர் பேக்கை தோளில் உள்ளொடுக்கி மாட்டியபடி ரெக்சின் பையை வலம் மாற்றினாள் அகல்யா. இரண்டு சுமைகளின் கனத்தால் பக்கவாட்டில் உடல் வளைய பிடிவாதமாக அடியெடுத்து வைத்து வந்து கொண்டிருந்த அவள் திரும்பிப் பார்த்தாள்.

வேஷ்டி தாறுமாறா அவுந்து வழியறது. விழுந்து வைக்கப் போறது. பிடியுங்கோ.ன்னா கேட்க மாட்டேளா?

நீண்ட அவள் கை மழையில் நனைந்து அவன் இடுப்பில் துணியைப் பிடித்து நிறுத்தியது. அவன் குடையைத் தோளில் சரித்தபடி அந்தக் கையைத் தன் கக்கத்தில் செருகிக் கொண்டு வேஷ்டியைச் சரியாகக் கட்டிக் கொண்டான்.

ஐயோ, கஷ்டம். ஆத்துக்குக் கூட்டிண்டு வர பொண்டாட்டி கையை எடுத்து ரொம்பக் காரியமா யாராவது கஷ்கத்திலே திணிச்சுப்பாளா? எட்டு ஊருக்கு திவ்விய வாசனையா இருக்கு. குளிச்சேளோ இன்னிக்கு?

அவள் சிரித்ததைப் பார்த்து அவனுக்கும் சிரிப்பு குமிழிட்டு வந்தது. திலீப்புக்கு இரண்டு விஷயங்கள் மனசிலானது. முதலாவதாக, இன்று காலை எந்தத் தடங்கலும் இல்லாமல் நடந்த கல்யாணமோ, அது முடிந்த நிச்சயத்தால் அவன் மேல் வந்து சேர்ந்த உரிமையோ அவளை சுபாவமாகச் சிடுசிடுக்கவும் கண்டிக்கவும் வைக்கிறது. ரெண்டாவது, அவள் பேசுகிற தமிழில் டோம்பிவிலி பிராமணக் கொச்சை ஏறியிருக்கிறது. உரிமை இன்னும் கொஞ்சம் நாளில் அவனை இடுப்பில் முடிந்து கொள்கிற சுவாதீனமாக மாறுமோ என்னமோ, அந்தக் கொச்சை அரைகுறை மலையாளம் வண்டலாகப் படிந்த பாலக்காட்டு பாஷையாக அடுத்த வினாயக சதுர்த்திக்குள் முழுசாக மாறிவிடும் என்று திலீப் அறிவான்.

இதானே நம்ம ஆ’ம்?

அகல்யா லெதர் பேக்கை தோளை உயர்த்திப் பின்னால் தள்ளியபடி திலீப்பைக் கூர்ந்து பார்த்துக் கேட்டாள். ஆமா என்று அவள் விரல்களை இறுக்கிய கை சொன்னது.

சர்வ மங்கள் சாலில், பழைய தினசரிப் பத்திரிகைப் பக்கமும், வாழைப் பழத் தோலும், வாழைச் சருகும், முட்டை ஓடும் மிதக்க, மழைத் தண்ணீர் கலங்கிச் சூழ்ந்த இரண்டாவது கட்டிடம். அங்கே முதல் மாடி. பால்கனியில் வைத்த டால்டா டப்பாவில் ஓங்கி உய்ரமாக ஏதோ செடி. அகல்யா அந்தக் குடியிருப்பில் எதிர்பார்த்த மெல்லிய ஆர்மோனியச் சத்தம் தான் கேட்கவில்லை.

படி இங்கே இருக்கு.

தண்ணீர் வழிந்து கொண்டிருந்த குறுகிய படிக்கட்டைக் காட்டினான் திலீப். அங்கே பெரிய நத்தை ஒன்று படிகளுக்கு இடையே ஊர்ந்து கொண்டிருந்தது. கீழே இன்னும் இரு சிறு நத்தைகள் தரையோடு ஒட்டியபடி கிடந்தன. மாடிப் படி ஏறும் வளைவு இருட்டில் இருந்து மராட்டியில் ஒரு குரல் குதூகலமாக வந்தது.

திலீப் மயிலோடு வந்துட்டான்.

அகல்யா திரும்பித் திலீப்பைப் பார்த்தாள். ஆமாம் என்று தலையசைத்தான். அம்மா தான்.

அவன் குடையை மடக்குவதற்குள் குனிந்து உள்ளே புகுந்து அகல்யாவின் கண்ணுக்கு மிக அருகே தன் சோர்ந்த கண்கள் நிலை குத்தி நிற்க, ஷாலினி சத்தமாக அறிவித்தாள் –

இந்த மயில் தான் இத்தனை நேரம் ஆடிட்டு இருந்தது இங்கே. மழை, ஈரம் எதுவும் பொருட்டில்லே இதுக்கு. எனக்காக ஆடறதுக்கே வந்திருக்காம். போய்ட்டு அப்புறம் வா தூங்கணும்னேன். பாரு, கேக்காம உன்னோட வந்துடுத்து.

அவள் ஈர்க்குச்சி போலிருந்த கைகளால் அகல்யாவின் கன்னத்தில் வருடியபடி பாட ஆரம்பித்தாள் –

அப்ஸரா ஆளி இந்த்ரபுரி துன் காலி

அகல்யா ஷாலினியை மெதுவாக அணைத்துக் கொண்டாள். ஷாலினி பாட்டிலேயே மூழ்கி,சட்டென்று விலகி நின்றாள். லாவணி தொடர, ஒரு கால் இழுத்திருக்க மற்றதை மட்டும் ஊன்றி திரும்பத் திரும்ப இந்திரபுரி விட்டு அப்சரஸ் வந்த அதிசயத்தைப் பாடிக் கொண்டிருந்தாள்.

சரி, அப்சரஸுக்கு வழி விடு அம்மா.

திலீப் ஷாலினித்தாய் தோளில் அன்போடு அணைத்தபடி சொல்லி விட்டு அகல்யாவைப் பார்த்தான்.

அகல்யா அவன் கையை இறுகப் பற்றிக் கண் காட்டினாள். இருவரும் மாடிப்படி வளைவு ஈரத்தில் ஷாலினியின் கால் தொட்டு வணங்கினார்கள்.
நமஸ்காரம் பண்ணனும். இங்கே எடம் இல்லே. உள்ளே வரட்டும்.

அகல்யா திலீப்பிடம் சொல்லிக் கொண்டிருக்க, படிகளில் தாய் தாய் என்று யாரோ விளித்தபடி இறங்கி வரும் ஓசை. அகல்யா நிமிர்ந்து பார்த்து உங்க பாட்டித் தள்ளையா என்றாள்.

அம்மாவை கவனிச்சுக்க நான் போட்டு வச்சிருக்கற நர்சிங் ஆர்டர்லி. ரேணுகாம்மா.

ரேணுகா, ஏண்டி ரேணுகா

ஸ்தூல சரீரத்தோடு மத்திய வயசு ஸ்திரி ரேணுகா இறங்கும்போதே அவளை அழைத்தபடி மேலே இருந்து வந்த குரல் யாரென்று அகல்யாவுக்குத் தெரிந்தது. திலீப் அடிக்கடி பெருமையோடும் வருத்தத்தோடும் சொல்கிற கற்பகம் பாட்டியம்மா. பெரிய மனுஷியாக வாழ்க்கை பூரா வாழ்ந்து கற்பூரமாக எரிந்து போனபடி கடைசித் துளியிலும் பிரகாசிக்கும் மகா மனுஷி என்று திலீப் அடிக்கடி சொல்வான்.

நிமிர்ந்து பார்த்தபோதே அவளுடைய கம்பீரமும் இந்த வயதிலும் உடம்பில் பிடிவாதமாகத் தங்கி இருக்கும் சௌந்தர்யமும் மனதை ஈர்க்க, மழைச் சாரல் புகையாகப் படிந்து இறங்கும் ஒடுங்கிய படிகளில் ஊறும் நத்தைகளை ஜாக்கிரதையாக விலக்கி மெல்லப் படி ஏறினாள் அகல்யா. சுமந்து வந்த கான்வாஸ் பையும் லெதர் பேக்கும் அவள் நடைக்குத் தடை சொல்லவில்லை. பின்னாலேயே ஷாலினியைத் தாங்கிப் பிடித்தபடி திலீப் வந்து கொண்டிருக்க, ரேணுகா உரக்கக் கேட்டாள் –

திலீப் தம்பி, கல்யாணம் ஆயிடுச்சா? எப்போ?

தடதடவென்று கட்டிடத்தில் சகல் குடித்தனங்களிலும் மழைக்காகவும், ஞாயிறு விடுமுறைக்குக் கிடந்து உறங்கி ஓய்வெடுக்கவும் அடைத்திருந்த கதவுகள் எல்லாம் திறந்தன. சந்தோஷமாக வரவேற்கிற குரல்கள் முன்னால் வர, ஆணும் பெண்ணுமாக அடுத்து அடுத்து வந்ததைப் பார்க்க அகல்யாவுக்கு மனம் கொள்ளாத மகிழ்ச்சி. அவள் இருப்பிடத்திலும் இப்படி நடந்திருக்குமா என்று தெரியவில்லை அவளுக்கு. அப்பா அவளை நுழைய விட்டிருப்பாரா?

அப்பா காலையில் கோவிலுக்கு வந்திருந்தார். படபடப்பு இல்லாமல் கையில் வைத்திருந்த வாழைப்பழச் சீப்பை அவளிடம் கொடுத்து விட்டுத் தரையில் உட்கார்ந்து கொஞ்சம் அழுதார். அவர் இந்த வருடக் கடைசியில் ரிடையர் ஆவதால், அகல்யா இல்லாமல் வீடு எப்படி இயங்கும் என்று கேட்டார்.

ஆர்ய சமாஜ்னு தப்பாச் சொல்லிட்டா. அங்கே போய் தேடிப் பார்த்துட்டு இங்கே வர நேரமாயிடுச்சு. செம்பூர்லே கோவில் இருக்குன்னே ரொம்பப் பேருக்குத் தெரியாது.

இந்தக் கடைசி வாக்கியத்தை கழுத்தில் மாலையோடு வந்த திலீப்பிடம் ஒரு தகவல் சொல்கிற குரலில் சொன்னார். சட்டையைப் பிடித்து இழுத்துக் கூச்சல் போட்டு சண்டை பிடிக்கும் ஒரு முதியவரைக் கற்பனை செய்து வந்திருந்த திலீப்புக்கு அந்த சாத்வீகமான மனிதர் பெரிய சங்கடத்தை அளித்தார். அவரையும் அகல்யாவின் அம்மாவையும் இரண்டு தம்பிகளையும் அவளுடைய மாதம் ஐநூறு ரூபாய் வருமானத்தில் இருந்து பிரித்து நிர்க்கதியாக நிற்க வைத்ததாகத் தன் மேலேயே கோபம் வந்தது அவனுக்கு.

கல்யாணம் ஆச்சா?

அவர் ஆவலோடு விசாரிக்க இல்லையென்றான் திலீப். குருக்கள் வந்துண்டிருக்கார் என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே காக்கி பேண்டும் டெர்லின் சட்டையுமாகப் பரபரவென்று உள்ளே வந்தார் ஒரு இளம் வயசுக்காரர், திலீப் வயது இருக்கலாம், அல்லது நாலைந்து அதிகமாக இருக்கலாம் அவருக்கு. சுவர் ஓரமாகப் போய் உடுப்பை அவிழ்த்தபடி மேலே வேஷ்டியை அணிந்து கொண்டு தலையைச் சிறு உச்சிக் குடுமியோடு முடித்து முப்பது வினாடி நேரத்தில் குருக்கள் ஆனார் அவர். விழுத்துப் போட்ட துணிகளை சீராக மடித்துக் கொடியில் போட்ட பிறகு நெற்றி நிறைய வீபுதியும் வாயில் அஷ்டோத்திரமுமாக சந்நிதிக்கு வந்தார்.

வரேளா?

திலீப் இதோ என்று சாடை காட்டி, அகல்யா அப்பாவையும் கூட வந்த அவள் சித்தப்பாவையும் அருகே அழைத்தான்.

அகல்யா அப்பாவை விட திலீப் குறைவான நேரத்தில், சொல்லப் போனால் உடனேயே விஷயத்துக்கு வந்து விட்டான். அகல்யா விருப்பம் போல் அவளுடைய சம்பாத்தியத்தைச் செலவு செய்யலாம் என்று சம்மதம் சொன்னான்.

அவ எங்கே இருப்பா?

இது ஒரு கேள்வியா சார். இந்தச் சால் விட்டா அந்தச் சால். அந்தச் சால் விட்டா இது. டால்டா டப்பாவிலே தண்ணியோட காத்திருக்கற டாய்லெட் ரெண்டு இடத்திலேயும் உண்டு.

மாப்பிள்ளே, என்ன கல்யாண நேரத்துலே டாய்லெட் பத்தி எல்லாம்.

அந்தக் கல்யாணம் மழைக்கு நடுவே சிரித்துக் கொண்டே நடந்து முடிந்தது காலையில் தான். குருக்கள் கூட தாலி எடுத்துக் கொடுக்கும் போது சிரித்துக் கொண்டே இருந்தார். மனதில் இறுக்கமாக உணர வைக்கும் மழை நாளில் சிரிக்க ஒரு சந்தர்ப்பத்தைத் தேடியிருந்த அவருக்கு அதற்கான சூழ்நிலை ஏற்பட்டதாக அவர் நினைத்திருக்கலாம். திலீப் மெல்ல விசாரிக்க, அவர் அகல்யாவைத் தவிர்த்துத் திலீப் காதில் மட்டு விழ, ரகசியம் பேசும் குரலில் அவனிடம் சொன்னார் –

குளிச்சுட்டுத் துவட்டின துண்டை இடுப்பிலே கட்டியிருந்தேனா. லோக்கல் டிரெயின் பிடிக்கற அவசரத்துலே அது மேலேயே பேண்ட்டைப் போட்டுண்டு வந்துட்டேன். இங்கே உங்களைக் காக்க வைச்சதுலே டென்ஷன். சட்டுனு ஏண்டா இடுப்பு கனமா இருக்குன்னு கையை வச்சுப் பாத்தா

அவர் இன்னும் சிரிக்க நிறைய இருந்தது. திலீப்பும் கல்யாணத்துக்கு வந்த அவன் சகாக்கள் ரெண்டு பேரும் சிரிக்க, அகல்யா அதற்காக இப்போது சர்வமங்கள் சாலில் சிரித்தாள்.

ரொம்ப தெய்வீகமா சிரிக்கறா இந்த மத்ராஸ் சோக்ரி

அண்டை அயலில் இருந்து பித்தளைத் தாம்பாளத்தில அவசரமாக மஞ்சள், குங்குமத்தைக் கரைத்து ஆரத்தி செய்து எடுத்து வந்த பெண்கள் தம்பதியருக்கு ஆரத்தி சுற்ற அப்ஸரா ஆளி என்று மழையோடு திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டிருந்தாள் ஷாலினி. அந்தப் பெண்களும் நேர்த்தியாக அவளோடு பாட ஆரம்பித்தார்கள். சிக்கல் சிடுக்கு இல்லாத வாழ்க்கை இவர்கள் எல்லோருக்கும் வாய்த்திருக்கும் என்று ஒரு வினாடி சந்தோஷமாக நம்பினாள் அகல்யா. அவளுக்கும் அது லாவணியின் துள்ளி வரும் குதூகலத்தோடு சதா வாய்க்கட்டும். அந்தப் பெண்கள் அதைத்தானே பாடினார்கள்.

ஆரத்தி எடுத்தவர்களுக்கு எல்லாம் சட்டை பாக்கெட்டில் தேடித் தேடி ஐம்பது பைசாவும் ஒரு ரூபாயுமாகத் தட்டில் போட்டான் திலீப்.

கஞ்சூஸ். அண்ணி கிட்டே கேட்டு வாங்கிப் பத்து ரூபா ஆளாளுக்குப் போடு.

பக்கத்துக் குடியிருப்புப் பெண் செல்லமாக மிரட்டி, அகல்யாவின் முகவாயை வருடி ஜவ்வரிசி வடை சாப்பிட்ட வாடையோடு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அப்சரா வந்த ஆரத்திப் பாடல் தொடர, தோளில் மாட்டிய பையில் இருந்து இன்னும் கொஞ்சம் பணம் எடுத்து திலீப்பிடம் கொடுத்தாள் அகல்யா. வாழ்த்துகிற இந்தப் பெண் இன்னும் நிறைய ஜவ்வரிசி வடை உண்டு மங்களம் பொங்கி வழிந்து ததும்ப நூறாண்டு இருக்கட்டும்.

உள்ளே வா. நீயும் வாம்மா. வலது கால். ஆமா அதுதான். முன்னால் அது வரட்டும். விழுந்துடாதே. பையை என்னத்துக்கு தூக்கிண்டு வரே? சுமக்க இனிமேல் தான் நிறைய வரும். இப்போ அக்கடான்னு இரேன். உன் பேரென்னம்மாடி குழந்தே?

கற்பகம் பாட்டி வரிசையாகச் சீனச்சரப் பட்டாசாகக் கேள்வி கேட்டபடி கதவுக்கு அந்தப் பக்கம் நின்றாள்.

அகல்யா அணை உடைந்து பொங்கிய அழுகையை வலுக்கட்டாயமாக அடக்கிக் கொண்டு அவள் காலில் விழுந்து நமஸ்கரித்தாள்.

ஏய் நீலகண்டன் பொண்டாட்டி, ரெண்டு அடி அடிச்சுடு.முதல்லே நல்ல வார்த்தை சாவகாசமாச் சொல்லு. நீ மட்டும் சொல்லலே.. பார்த்துக்கோ.

திலீப்பும் செல்லமாக மிரட்டியபடி கற்பகம் காலில் விழ அவள் ரெண்டு பேரையும் எழுப்பித் தழுவியபடி ஆசி சொன்னாள்.

ஏண்டா திருட்டு படுவா, பலசரக்குக் கடையிலே ஒரு வீசை சக்கரை வாங்கிண்டு வரேன்னு போற மாதிரி திடுதிப்புனு குண்டிவேஷ்டியோடு கிளம்பி ஓடிப் போய் கல்யாணம் பண்ணிண்டு வந்து நிக்கறியே. வெக்கமா இல்லே. நான் இருக்கேன்னு நினைவே இல்லியா? உன் தங்கை ஜனனிக்குச் சொன்னியா? லண்டன் தான் கொல்லைப் பக்கம் ஆயிடுத்தே. ஒரு போஸ்ட் கார்ட் அவளுக்குப் போடலாமில்லே? உங்க பெரியப்பாவுக்கு? சியாமளாவுக்கு? அண்டா முழுங்கி மாதிரி அமுக்கமா இருந்து இவளையும் இழுத்துப் பிடிச்சுக் கூட்டிண்டு வந்துட்டே?

திலீப் எல்லாக் கேள்விக்கும் ஒரே பதில் தான் சிரிப்பில் சொன்னான்.

உங்கிட்டே பேசறதே தண்டம் சோழப் பிரம்மசொருபமே. ஏண்டியம்மா கொழந்தே, இந்தக் கர்த்தபத்தை எப்படி செலக்ட் பண்ணினே?

அகல்யா, பாட்டி கேக்கறது புரியறதா?

கர்த்தபம்னா என்ன கற்பூரமா? அகல்யா திருப்பிக் கேட்க, கெட்டுது குடி என்று இன்னொரு தடவை சிரித்தான் திலீப். கல்யாண வீடு இப்படித்தான் உற்சாகமாக இருக்கும். இவர்கள் எல்லோருக்கும் சொல்லி அழைத்து விட்டு அகல்யாவைக் கைப்பிடித்திருக்கலாமோ என்று தோன்றியது அவனுக்கு.

மழையிலே நடந்து வந்தியாடி பொண்ணே என்றாள் கற்பகம் பாட்டி.

நானா? இவரோடு கூட ஃபியட் கார் டாக்சியிலே வந்தேன் பாட்ட.

அகல்யா அப்பாவியாகப் பதில் சொன்னாள்.

என்ன குசும்புடி கிழவி இந்த வயசிலே. நீ தஞ்சாவூர்க்காரின்னு சொல்லாமலேயே உலகத்துக்குப் புரியும்.

திலீப் இப்போது சிரித்தது மழைச் சத்தத்தோடு போட்டியிட்டு உயர்ந்தது. கற்பகம் பாட்டியும் அவனோடு சேர்ந்து சிரிக்க, சூழ்நிலை லேசாகிப் போனது. அது உணர்ச்சி மேம்பட்டு, கோபமோ, ஒதுக்குதல் பற்றிய ஆத்திரமோ மேலேறி வர இருக்கும் என்று திலீப் நினைத்ததில்லை.

தமிழ்லே ஓடறதுன்னா தெரியுமில்லையோ? வீட்டுலே சொல்லாமக் கொள்ளாம வந்து ரகசியமாக் கல்யாணம் செஞ்சுக்கறது. பாட்டி குசும்பா கேட்கறா நீ சீரியஸா பதில் சொல்றியே.

அவன் கற்பகம் பாட்டி கையைப் பிடித்தபடி சுருக்கமாகச் செம்பூர்க் கல்யாணம் பற்றிச் சொன்னான்.

போறது நன்னா இருங்கோ. எங்க காலத்திலே நாலு நாள் கல்யாணம். இப்போ எலக்ட்ரிக் ட்ரெயின் ஸ்டேஷன்லே நின்னு திரும்பக் கிளம்பற நேரத்துலே கல்யாணம் முடிஞ்சுடும்.

பாட்டி ஆச்சரியப்பட, அகல்யா வேலைக்குப் போகப் புடவையும், மற்ற உடு துணியும் சீவில்லிப்புத்தூர் ஸ்னானப் பவுடரும், சாந்துப் பொட்டு பாட்டிலும் அடைத்து எடுத்து வந்த பைகளைச் சுவர் ஓரமாக வைத்தாள். வெளியே மழை நின்றிருந்தது துல்லியமான வானமாக ஜன்னல் வழியே தெரிந்தது.

உக்காருங்கோ ரெண்டு பேரும். பூஷனிக்காய் சாம்பாரைக் கொஞ்சம் போல் பெருக்கி, ஒரு ஆழாக்கு சாதம் வடிச்சுட்டா எதேஷ்டம்.

கஷ்டப்பட்டுக்காதே சின்னக் குட்டி.

திலீப் பாட்டியைக் கன்னத்தில் தட்டினான். போடா வானரமே என்றபடி அவள் அகல்யாவைப் பார்த்தாள்.

ஒரு பாயசம் வச்சுடறேன் குழந்தே. போன வாரம் தான் தெருக்கோடி கன்னடக்காரா கடையிலே ஏழு ஏழு ஏழு பவுடர் எப்படி இருக்குன்னு பார்க்க வாங்கினேன். இப்படி உடனடியா உபயோகமாகும்னு தெரிஞ்சிருந்தா இன்னொரு பாக்கெட் வாங்கியிருப்பேன். ஒரு அரை மணி நேரம் பசி பொறுத்துப்பியோடீ? ரேணுகா, பக்கத்து கர் ஸே தூத் ஆவ். ஏண்டி சிரிக்கறே. கூறு கெட்டுப் போய் இவ ஒருத்தி. குருடும் செவிடும் கூத்துப் பார்த்த மாதிரி நானும் இவளும் இந்த அப்சரஸை பாத்துக்கறோம்.

தன் முன்னால் ஏக்கத்தோடு கன்றுக்குட்டி போல வந்து நின்ற ஷாலினியைத் தோளில் தட்டியபடி கற்பகம் பாட்டி சொன்னாள்.

நான் பாயசம் பண்றேன் பாட்டி. சுமாரா சமையல் பண்ணுவேன். அம்மா அதுவும் ரெண்டு கீர்த்தனையும் கத்துக் கொடுத்திருக்கா.

அகல்யா பேசியபடி சுவாதீனமாக அறை ஓரத்தில் அடுப்பை நோக்கி நடக்க, கீழ்த் தளத்தில் மர ஜன்னல் கரகரவென்று ஓசையோடு திறந்து, ஒரு பெண் குரல் கூவியது.

திலீப் அண்ணா, உங்களுக்கு மதராஸில் இருந்து ட்ரங்க் கால்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன