விடியலின் ஈர வாடையும், சுட்ட சாம்பலைப் பொடி செய்து பன்னீரும் வாசனை திரவியமும் கலக்காமல் பூசும் வைராக்கியமான வீபுதி வாசனையும், குத்தாக அள்ளி ஏற்றி வைத்த மட்டிப்பால் ஊதுபத்தி மணமும், யாரிடம் இருந்து என்று குறிப்பிட முடியாதபடி நகர்கிற, நிற்கிற, உறங்கிக் கிடக்கிற ஜனத் திரளில் இருந்து எழுந்து பொதுவாகக் கவிந்த வியர்வை உலர்ந்த நெடியும், பறித்ததும் மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வரும் செழித்த காய்கறிகளின் பச்சை மணமும், காற்றில் அடர்த்தியாகக் கலந்த, இன்னும் தொடுக்கப்படாத ஜவ்வந்திப் பூக்களின் குளிர்ந்த நறுமணமும், ஒற்றைக் கெட்டாகப் பிடித்து உயர்த்திக் குளிர்ந்த தண்ணீர் தெளித்துத் தாழ வைக்கும் கொடிக்கால் வெற்றிலையின் கல்யாண வைபவ மணமும், பூக்கூடைகளில் இருந்து எடுக்கப்படக் காத்திருக்கும் கரும்பச்சை மரிக்கொழுந்து வாசனையும், குதிரை வண்டிகளில் விரித்த துணிக்குக் கீழே சன்னமாகப் பரத்திய காய்ந்த புல்லின் கூர்மையான வாடையும், குதிரைச் சாணம் தெறித்துச் சிதறி உலர்ந்த தெருக்களின் புதுத் தார் வாடையும், புழுதி அடங்கக் குளிரக் குளிர நீர் தெளித்துத் தூசி அடங்கும் வீட்டு வாசல் மண்ணின் நெகிழ வைக்கும் கந்தமுமாகக் காலை நேர மதுரை தெரிசாவையும் முசாபரையும் வரவேற்றது.
காலையில் முதல் பஸ் ஐந்து மணிக்கு தொண்டியில் இருந்து, புதிதாகப் பிடித்த மீன் நிறைத்த கூடைகளோடு புறப்படுகிறது. அரசூர் வழியாக மதுரை போகிற, பயணிகளின் நெருக்கமும் கூச்சலும் இல்லாத அந்த பஸ்ஸில் தியாகராஜ சாஸ்திரிகள் தெரிசாவையும் முசாபரையும் பிரியத்தோடு ஏற்றி வழியனுப்பி வைத்தார்.
ராத்திரி முசாபரி பங்களாவில் அவர் சாட்சிக் கையெழுத்துப் போட்டுத் தங்க இடம் கிடைத்தது. அதற்கு முன்னால் குண்டுராயர் ஓட்டலில் ராத்திரிக்குச் சாப்பாடாக இட்லி தின்னக் கூட்டிப் போனது தியாகராஜன் தான்.
கல்லுக் கல்லா இருந்தாலும் உடம்புக்குக் கெடுதல் எதுவும் வராது. இதை முப்பது வருஷம் தினம் சாப்பிட்டுத்தான் கல்லு மாதிரி இருந்தார் எங்க புரபசர் மருதையன்.
தியாகராஜன் குண்டுராயர் ஓட்டலில் தெரிசாவோடும் முசாபரோடும் இருந்து இட்லி தின்னாவிட்டாலும், அடுத்த மேஜைக்கு முன் வென்னீர் குடித்தபடி உட்கார்ந்து தெரிசா அவருக்குக் கைப்பையில் இருந்து எடுத்துக் கொடுத்த குடும்ப மரப் படங்களை சுவாரசியமாகப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.
அவருக்கு எடுத்த எடுப்பில் இந்தச் செவ்வகங்களையும் இணைப்புக் கோடுகளையும் ஒவ்வொரு செவ்வகத்துக்குள்ளும் எழுதிய பெயர்களையும் ஒருசேரப் பார்த்துப் புரிந்து கொள்ளக் கஷ்டமாக இருந்தது. வரைபடத்தை வைத்து இதுவரை போயிருக்காத ஊருக்கு வழி கண்டு பிடித்துப் போகிறது போல இந்தப் படங்கள் முன்னோர்களிடம் கொண்டு போய் விடுமோ என்று கூட ஒரு முறை நினைத்தார். அதெல்லாம் திவசம் பண்ணி வைக்கிற தன் போன்ற புரோகிதர்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட உத்தியோக வெளி இல்லையோ. இந்த இங்கிலீஷ் காரி அங்கே என்ன செய்கிறாள் என்று சஞ்சலம் உண்டானது அப்போது. இட்லி வரக் காத்திருக்கும் போது தெரிசா அவருக்கு அந்தக் காகித வரைபட மரங்களை எப்படி அணுக வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாள். அம்பலப்புழை குடும்பம் என்று ஆரம்பித்துக் கிட்டாவய்யன் வழியாகத் தெரிசாவில் வம்சம் இப்போது நிற்பதை அவள் எடுத்துக் காட்ட, தியாகராஜனுக்கு அதெல்லாம் மிகச் சுளுவாகப் புரிந்தது.
அந்தப் படத்தில் அம்பலப்புழை வம்சமும் அரசூர் வம்சமும் பகவதி என்ற அம்பலப்புழைப் பெண் சங்கரன் என்ற அரசூர் புகையிலை வியாபாரியைக் கல்யாணம் செய்த வழியாக விரல் நீட்டித் தேய்த்துப் போனார். கீழ்க்கோடியில் நிற்கும் சின்னச் சங்கரன் பெயரில் கை வைத்து தான் அவனுக்கு உற்ற நண்பன் என்று பெருமையோடு அறிவித்தார். தெரிசா இங்கே வந்ததற்குக் கிடைத்த உபயோகமான தகவல் அது.
சாப்பிட்டு விட்டு முசாபரி பங்களாவுக்கு நிலவொளியில் நடக்கும் போது தியாகராஜன் சைக்கிளை உருட்டிக் கொண்டே எங்கோ பூத்துச் சொரிந்த மகிழம்பூ மணத்தைத் தீர்க்கமாக நாசியில் முகர்ந்து கொண்டு வந்தார்.
பௌர்ணமி ராத்திரி மாதிரி இருக்கு. இது அதுக்கு அடுத்த ரெண்டாம் நாள்.
சொல்லியபடி தியாகராஜன் தெருவில் பூட்டிக் கிடந்த ஒரு வீட்டு முகப்பில் நின்றார். சத்தம் எப்போதோ ஓய்ந்து உறங்கிக் கொண்டிருந்த பெரிய இரண்டு கட்டு வீடு அது. அது தெரிசாவை வா வா என்று அழைத்தது. உள்ளே வந்து ஒரு நிமிஷம் இருந்து போகச் சொல்லி அங்கே இருந்த பெண்கள் கூப்பிட்டார்கள். எல்லோரும் புடவை உடுத்தியிருந்த விதம் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் தெரிசாவுக்குப் பட்டது. ஒரு தொண்டு கிழவி வாசல் திண்ணையில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்ததும் அவளுக்குப் பார்க்கக் கிடைத்தது. கனாக் கண்டேன் கனாக் கண்டேன் என்று அந்த முதியவளின் குரல் பாசமும் பரிவுமாக அவளை உள்ளே அழைத்தது.
இந்த வீட்டுக்குள் எப்படிப் போவது?
தெரிசா கேட்க, மௌனமாகத் தலையைக் குலுக்கினார் தியாகராஜன். அப்போது. நிலவொளியில் அந்த மூத்த பெண்ணின் குரலாகத் தன்னை வரவேற்று நிற்கும் வீட்டைக் கடந்து போகவே தெரிசாவுக்கு மனம் இல்லை.
சின்னச் சங்கரன் டெல்லியிலே இருக்கான். பக்கத்துலே ஒக்கூர்லே அவங்க நிலத்திலே சாகுபடி செஞ்ச அம்பலகாரர் குடும்பத்திலே இந்த வீட்டுக்கு ஒரு சாவியும் சங்கரன் கிட்டேயே இன்னொண்ணும் இருக்கு,
ஒரு கார் வாடகைக்கு எடுத்துப் போய் அம்பலகாரரைப் பார்த்து.
தெரிசா முடிக்கும் முன்னால் தியாகராஜன் சொன்னார் –
அம்பலகாரர் மகன் கூப்பிட்டானேன்னு போன வாரம் தான் கோலாலம்பூர் போயிருக்கார்.
முசாபர் நிம்மதியைச் சொல்லும் முகத்தோடு தியாகராஜனைப் பார்த்தான். தெரிசா ஏதோ ஈர்ப்பு செயல்பட அந்த வீட்டுக்கு இன்னும் நெருக்கமாகப் போய் நின்றாள்.
உள்ளே போய் இருந்து அந்த வீட்டை சாவகாசமாகப் பார்த்த்தும் புழங்கியும் அனுபவிக்க வேண்டும். முடிந்தால் அதை விலைக்கு வாங்க வேண்டும் என்று நேற்று இரவு முசாபரி பங்களாவின் பெரிய மரக் கட்டிலில் தெரிசா முசாபருக்குக் காதில் சொன்னாள். அவன் தூங்கத் தொடங்கி இருந்தான் அப்போது. என்றாலும் இன்றைக்கு அதிகாலை நாலு மணிக்கு மதுரைக்குப் போவதற்காக எழுந்ததும் தெரிசாவிடம் அழுத்தமான குரலில் சொன்னான் –
இங்கே நீ எதுக்காக வந்திருக்கேன்னே மறந்துட்டிருக்கே. இங்கிலாந்து பிரஜை நீ. இங்கே வீடு வாங்கறது கஷ்டம். அப்படியே கிடைச்சாலும் வீட்டுச் சொந்தக்காரனை மீனும் வறுவலும் விற்றுச் சேர்த்த உன் பணத்தாலே அடிச்சு வாங்கினதாத்தான் இருக்கும். அவனோட சோகம் உன்னைச் சும்மா விடுமா என்ன. சரி, எல்லாம் சரியா அமைஞ்சாலும், எதுக்கு இங்கே வீடு உனக்கு? ஊருக்குப் போற எண்ணமே இல்லையா? அமேயர் பாதிரியார் இதோட ஒரு முழு மாசம் நம்ம கடையையும் வீட்டையும் ஆள் அம்பு விட்டு நிர்வாகம் செஞ்சுக்கிட்டிருக்கார். அவர் வாதிக்கனுக்குப் போனதும் அதுக்கெல்லாம் ஆள் இருக்காது தெரியுமில்லே. நம்ம விசாவும் முடிஞ்சுட்டிருக்கு. ஊர் பார்த்தது போதும். வா, கிளம்பலாம். மயில் பறக்கட்டும். இறங்கட்டும். நிக்கட்டும். ஆடட்டும்.. அது இங்கே ஆடட்டும். இஷ்டப்பட்டால் கால்டர்டேலுக்குப் பறந்து போய் நம்ம வீட்டு வாசலில் தோகை விரிச்சு ஆடட்டும். அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு ஒரு நிமிஷம் நிற்போம். அப்புறம் மார்க்கெட்டுக்கு மொத்த கொள்முதலாக மீன் வாங்கவும் வறுவல் வாங்கவும் நடப்போம். மயில் ஏன் ஆடினதுன்னு தெக்கே பரம்பில் பாதிரியார் சொல்லற அறிவுத் தேடல் எல்லாம் நமக்கு எதுக்கு? தொடர்புகளை ஏன் இங்கே உன் வம்சத்தோட வரலாற்றிலே தேடிக் காலத்தை வீணாக்கணும்? உன்னோட வேர் அம்பலப்புழையிலேயும் இந்த அரசூரிலும் இருக்கலாம். அதைத் தேடிப் பிடித்து என்ன சாதிக்கப் போறே? அந்தத் தகவல் இல்லாமலேயே நாம் இத்தனை வருஷம் மூச்சு விட்டாச்சு. இனியும் அதுக்குத் தேவை கிடையாது. தேடிட்டுத் தான் இருப்பேன்னா உன் இஷ்டம். நான் குறுக்கே வரமாட்டேன்.
இவ்வளவு பேசியதற்காக சிரம பரிகாரம் செய்து கொள்ளவோ என்னமோ சரியான நேரத்தில் முசாபரி பங்களா சிப்பந்தி இடுப்பில் குறுக்கே டவாலி என்ற அலங்காரப் பட்டை அணிந்து ஒரு சிறிய பித்தளை அண்டாவில் தேநீர் எடுத்து வந்து முசாபரிடம் கொடுத்தான். அவன் கையில் வைத்திருந்த பிரம்மாண்டமான பித்தளைத் தாம்பாளத்தில் இருந்து இன்னொரு கொதிகலன் தேநீரை தெரிசாவுக்கும் நீட்டி விட்டு அவளைப் பணிவோடு கேட்டான் –
கலெக்டர் அம்மா, பசியாற என்ன எடுத்தாரட்டும்?
அவளைக் கலெக்டர் என்று தானும் சொல்லி முசாபர் அப்போது சிரிக்க ஆரம்பித்ததை மதுரை வந்து சேரும் வரை நிறுத்தவில்லை.
ஒன்றும் இரண்டுமாக வாழைத் தாரும் இலையும் வாழைப் பூவும் ஏற்றி வருகிற டெம்போ வேன்களும், கருவாடு ஏற்றிப் போகும் காளைமாட்டு வண்டிகளும் கப்பி ரோடுகளில் தட்டுப்பட ஆரம்பித்த நேரம். பூவந்தி பூவந்தி என்று சொல்லியபடி பஸ் ஏஜண்டுகள் இடுப்பில் அழுந்தச் சொறிந்து கொண்டு சுற்றி வர, கசங்கிய காக்கி உடுப்பு அணிந்த க்ரூ கட் தலைமுடி டிரைவர்கள் டீக்கடைகளில் அரைச் செம்பு தண்ணீரில் வாய் கொப்பளித்து, சூடான டீக்காகக் காத்திருக்கிறார்கள். அம்பாசடர் கார்களில் எர்ஸ்கின் பொது மருத்துவ மனையில் வந்து இறங்கும் டாக்டர்கள் பில்டர் காப்பி வாங்க ஆர்டர்லிகளைத் துரத்தியபடி ஆஸ்பத்திரி மாடிப் படி ஏறுகிறார்கள். அவசரமாகக் கண் விழித்து ஆஸ்பத்திரி மாடி வளைவில் ஓடிக் குதிக்கும் குரங்குக் குட்டியை பாதுகாப்பான இடத்துக்குக் கை சுண்டி விரட்டியபடி பதனீர் வியாபாரிகள் சத்தமிடுகிறார்கள். ரயில்வே ஸ்டேஷனில் இருந்து குதிரை வண்டிகளிலும் சைக்கிள் ரிக்ஷாக்களிலும் வெளிவரும் வடக்கத்திய யாத்திரீகர்கள் உரக்க இந்தி பேசினால் சகலருக்கும் புரியும் என்ற நினைப்பில் கத்திக் கொண்டிருக்கிறார்கள். மாசி வீதிகளில் தங்கும் இடம் தேடி அவர்களைச் சுமந்து போகும் வண்டிகள் நகர்கின்றன. சௌராஷ்டிர பக்த ஜன சபை என்று பதாகை உயர்த்திப் பிடித்து கெச்சலான, சி்வந்த இரண்டு நபர்கள் முன்னால் நடக்க, மிருதங்கத்தை ஓங்கித் தட்டியபடி ஒரு பெண்ணும், கைத்தாளம் போட்டபடி சிவத்த இன்னும் பல ஆண்கள், பெண்களும் வேகமாக நடந்தபடி திருப்புகழ் சந்தம் அலைஅலையாக உயரப் பாடிப் போகிறார்கள்.
அமுதம் ஊறு சொலாகிய தோகையர்
பொருளுளாரை எனாணையுனா ணையென
இந்துஸ்தானி சங்கீதம் போல் இல்லாமல் இங்கிலீஷ் நோட் போல விரசாக வார்த்தைக்கு வார்த்தை ஏறி இறங்கிக் குதித்துப் போகிற சங்கீதம் தெரிசாவின் மனதைக் கௌவி இழுக்கிறது. இது என்ன மொழி? இந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம்? எப்படி இதை இயற்றினார்கள்? எப்படி இந்தப் பாடலைப் பிழையில்லாமல் பாடக் கற்றுக் கொண்டார்கள்?
தெரிசா மெய்மறந்து பார்த்து நிற்க அவர்கள் பதாகையும், குதித்து வரும் தாளமும் கைத்தட்டும் ஓங்கிய குரல்களுமாகக் கடந்து போனார்கள்.
முசாபர் கிழக்கு வாசல் பட்டமார் தெரு முனையில் காப்பிக் கடையில் யோசனையோடு நின்றான். காப்பி குடித்து முடித்து தெரிசாவோடு கோயிலுக்குள் போகலாமா அல்லது இங்கேயே நின்று தெரு வேடிக்கைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாமா என்ற யோசனை அது.
தெரு எங்கும் ஓடிப் போகாது. இவ்வளவு முக்கியமான இடத்துக்கு இனிமேல் திரும்ப வர முடியாது. வா என்று தெரிசா அவனைக் குத்திக் கிளப்புகிறாள். அம்பலப்புழையில் வாங்கிய வெள்ளை வேட்டியும் அரைக்கைச் சட்டையுமாக அவன் குழப்பமான மலையாளியாக அங்கே இருந்து புறப்பட்டான்.
உள்ளே போய் வந்து பிரகாரம் சுற்றும் நேரத்தில் பொலபொலவென்று பொழுது புலர்ந்திருந்தது. மேற்குக் கோபுர வாசலுக்கு அருகே தாம்புக் கயற்றில் கட்டியிருந்த நரியைப் பார்த்துச் சற்றே நின்றார்கள் அவர்கள். ஒரு நரியை இவ்வளவு அருகே பார்த்தது இங்கே தான் என்றாள் தெரிசா. கால்டர்டேலில் திடிரென்று குன்றுப் பிரதேசத்தில் இருந்து கிளம்பி வந்து, கடைத்தெருவில் குறுக்கே ஓடி அங்காடிக்குள் புகுந்து பிக்விக் சாப்பாட்டுக் கடை வாசலோடு வெளியேறும் நரி எங்கே போய் மறையும் என்று யாருக்கும் தெரியாது. அதில் சிரத்தை எடுத்துக் கொள்வதும் இல்லை.
இந்தத் தேடுதலும் நரிப் பாய்ச்சலாகப் போய்விடுமோ? முசாபர் சொல்கிறபடி, எதற்காகத் தேட வேணும்? எதைத் தேட வேணும்? ஏன்?
தெரிசாவுக்குத் தெரியவில்லை. ஆனால் மனதுக்குள் ஏதோ, யாரோ, ஒன்று பலவானவர்களாக ஆணும் பெண்ணுமாக அவ்வப்போது குரலாக, காட்சியாக வெளிப்பட்டு அவளை இங்கே சுற்றிவர வைக்கிற ஒரு சிறு கூட்டமோ, கனவில் பிரம்மாண்டமாக வெளிப்பட்டு ஓலைச் சிலுவைகளை உயர்த்திப் பிடித்தபடி கல்லறைத் திருநாளுக்குப் போகிற ஊர்வலமோ, மேல்தோல் சிவத்த இந்தப் பாட்டுக் குழுவின் உயிரை உருக்கும் சங்கீதமோ ஏதோ ஒன்று அல்லது எல்லாமும் அவளைச் செலுத்திக் கொண்டிருக்கிறது.
நரி முகத்தில் முழிச்சா நாள் நல்லா இருக்கும்.
பக்கத்தில் வந்த வயதான ஒருவர் சுத்தமான இந்தியில் தெரிசாவிடம் சொல்லிக் கடந்து போனார். அப்படியானால் அந்த விலங்கை விலைக்கு வாங்கிப் போக முடியுமா என்று முசாபர் ஆர்வத்தோடு விசாரிக்க, அவர் ஓங்கிச் சிரித்துச் சொன்னார் –
இன்னிக்கு நரியைப் பரியாக்கிய உற்சவம். முடிஞ்சதும் காட்டுலே கொண்டு போய் விட்டுடுவாங்க. இதை வாங்கி வீட்டுலே கட்டறதும், ஓணானைத் தூக்கி அரைக்கட்டுலே விட்டுக்கறதும் ஒண்ணு.
அவர் சொன்னது புரியாவிட்டாலும் சொல்லிச் சிரித்தது தெரிசாவுக்குப் பிடித்திருந்தது. .
குதிரை வண்டியைக் கூப்பிடுங்க. மாரட் தெருவுக்குப் போயிடலாம். வழியிலே பத்து நிமிஷம் நிறுத்தினா காலைச் சாப்பாடும் முடிச்சுக்கலாம்.
தெரிசா விருப்பப்படி, வரிசையாக நின்ற வண்டிகளில் முதலாவது இவர்கள் ஏற நகர்ந்தது.
வண்டிக் கூலியும், பேசிப் பழக மொழியும் இசைந்து வந்ததில் குதிரை வண்டிக்காரனுக்கு சந்தோஷமோ என்னமோ, வண்டியில் பூட்டியிருந்த கருப்புத் தோல் போர்த்த குதிரை துள்ளி ஓடியது.
மேலமாசி வீதியில் சுமாரான சுகாதாரத்தோடு இருந்த ஒரு கடையில் மெத்தென்ற இட்டலிகளும், புதினா அரைத்த சட்டிணியும், காப்பியும் கழித்து விட்டு அவர்கள் வித்துவான் ஆதினமிளகியைச் சந்திக்க மாரட் தெருவுக்கு வந்தார்கள். தியாகராஜ சாஸ்திரிகள் அறிமுகக் கடிதம் கொடுத்து விட்டிருந்தார் ஆதீனமிளகி வித்துவானுக்கு. தங்கள் குடும்பமும் வித்துவான் குடும்பமும் நாலு தலைமுறை சிநேகிதர்கள் என்று தெரிசாவிடம் சொன்னார் தியாகராஜன். எப்படி அது வாய்த்தது என்று குடும்ப மரம் வரைந்து பார்த்தால் புலப்படலாம் என்றார் அவர். உலகில் விடை காண முடியாத சிக்கல்கள் சிலவாவது குடும்ப மரங்கள் மூலம் தீர்ந்து விடும் என்று அவர் நம்பத் தொடங்கி இருந்தார். அவர் கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டிருந்தது –
இந்தக் கடிதம் கொண்டு வரும் தெரிசா அம்மாள் லண்டன் பட்டணத்தில் இருந்து அவருடைய பிதாமகருடைய புஸ்தகத்தை அச்சுப் போட வந்திருக்காள். மலையாள லிபியும் தமிழ் பாஷை பாட்டுமாக இருக்கும் அந்த கிரந்தத்தைப் பரிசோதித்து தேவரீர் கருத்துச் சொல்ல வேணும் என பிரார்த்திக்கிறேன். முடிஞ்சால் அச்சுப் போடவும் உதவி தேவை. பணம் பற்றிக் கவலை வேணாம். இடுப்பில் முடிந்த வராகன், தங்கக் காசோடு தான் வந்திருக்காள் அம்மாளும் புருஷனும். இவாள் டில்லி சர்க்கார் ஆபீஸ் மேலதிகாரி சங்கரய்யர் என்ற, உங்களைப் போல் என் உற்ற சிநேகிதரான அரசூர்க் காரருக்குத் தாயாதியோ பங்காளியோ கூட என்று அறிகிறேன். வேணும் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கிருபை.
அன்போடு வரவேற்ற வித்துவான் பச்சைத் தலைப்பாகையும், காதில் துளசியும் மூலக்கச்ச வேட்டியுமாக இருந்தார். அறுபது வயசென்றார். அறுபதிலும் ஒரு நாள் கூட மீனாட்சி கோவிலுக்குப் போனதில்லை என்றார். பெருமாள் கோவிலைத் தேடிப் போய்த் தொழுதேத்தும் பரம்பரை என்றார். பள்ளிக்கூடத்தில் தமிழாசிரியராக இருந்த போதும் ஓய்வு பெற தற்போதும் எழுதுவதே தன்னை வாழ வைக்கிறதென்று ஆணித் தரமாகச் சொன்னார்.
யாரோ எதையோ பாடமாக எழுதினாலும் அதையெல்லாம் படித்து மாணவர்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். நான் எழுதும் கையேடுகளைப் படித்தாலே போதும் மூலத்தையும் அதன் மூத்த தலைமுறை ஆதிமூலத்தையும் பொருளோடு அறிந்த ஞானம் கிட்டும் என்றார். ஜப்பானிய மொழியில் அதற்கு சடாரி என்று ஒரு சொல் இருப்பதாகக் குறிப்பிட்டார். ஞான அனுபவம் என்றும் அதற்கு மேலும் பொருள் தரும் ஒன்று அந்தச் சொல் என்றார். அவர் வீட்டின் பெரும் வசிப்பிடத்தை அச்சடித்து வந்து கட்டுக் கட்டாக, சிப்பம் சிப்பமாகப் பரத்தியிருந்த விதம் விதமான கையேட்டுப் பிரதிகளை மலைப்போடு முசாபர் பார்த்தான்.
இரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் இருந்து முதுகலை தமிழ் வரை தான் எந்த பேதமும் பார்க்காது கையேடு எழுதி அச்சுப் போட்டு விற்பனைக்கு வெளியிடுவதாக அவர் பெருமையோடு அறிவித்தார்.
சுறுசுறுப்பாக அந்தக் கையேடுகளை வண்டியில் ஏற்றி யார்யாரோ வெளியே எடுத்துப் போக, இன்னொரு திசையில் இருந்து மலேயா கல்லூரிகளுக்கான பட்ட வகுப்பு தமிழ்க் கையேடுகள் குதிரை வண்டிகளில் வந்து இறங்கி வீட்டு முகப்பை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. கூடவே எகிப்தில் குழந்தைகளுக்கு உதவி செய்யும் மூன்றாம் வகுப்பு தமிழ் உரைநடை கையேடுகளும் தலைச்சுமையாக வந்து இறங்கிப் புதுப் புத்தக, அச்சுமை வாடையோடு வெளியை நிறைத்தன. சீக்கிரம் வந்த வேலையை முடித்துக் கொண்டு திரும்பிப் போகாவிட்டால் கையேடுகளின் கோட்டையில் சிறைப்பிடிக்கப் படுவோம் என்று மேலெழுந்த பயத்தைத் தெரிசா அடக்கிக் கொண்டாள்
தன்னைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லி, தன் வேர்களைத் தேடி அம்பலப்புழை வந்ததையும் அங்கே ஒரு வாரம் தங்க முடியாமல் சர்க்கார் இடைஞ்சல் செய்ததால் அரசூர் வந்ததையும் அவள் சொல்ல, ஆதினமிளகி இரு கையும் உயர்த்தி அந்த இரு ஊர்ப் பெயரையும் முணுமுணுப்பாகச் சொல்லிக் கண்கள் மூடி இருந்தார். அவர் கண் திறந்து கனிவோடு தெரிசாவைப் பார்த்தபடி நல்ல தமிழில் சொன்னார் –
என் கொள்ளுத் தாதனார் பசுவை வீதி வீதியாக அழைத்துப் போய்க் கறந்து பால் விற்றாராம். ஒரு காலை நேரத்தில் அந்தணர் ஒருத்தரைச் சந்தித்தாராம். அவர் அம்பலப்புழையில் நடக்கவிருந்த திருமணத்துக்காக அரசூரில் இருந்து பயணப் பட்டவர். அந்த அந்தணர் தன் வீட்டு நவராத்திரி கொலு பொம்மைகளில் அச்சு அசலாக என் கொள்ளுத் தாத்தனார் போல் பச்சை முண்டாசோடு மாடு கறக்கும் ஆணின் சிறு களிமண் சிற்பம் உண்டேன்றாராம். அந்தச் சிலையே நினைவாக அன்று முதல் அவர் பச்சை முண்டாசு கட்டத் தொடங்க, அதே அந்தணர் கனவில் வந்து பசுவைப் போற்றச் சொல்லியும், எள்ளுருண்டை படைத்து வணங்கிப் பகிர்ந்து கொள்ளச் சொல்லியும் உரிமையோடு கட்டளை இட்டார். சகலருக்கும் சகாயம் செய்கிற புத்தகங்கள் எழுதிப் பிழைக்கச் சொல்லியும் அன்போடு சொன்னாராம். அவர் சொன்னபடி வாரம் ஒரு பிடி அருகம்புல் கொடுக்க வீட்டுப் பின்புறத்தில் பசுவும், வாசல் நிலைப்படியில் பதித்த பசுவின் உருவமும், எழுத இப்படியான கையேடுகளும் உண்டு என்றார் வித்துவான் ஆதினமிளகி. எள்ளுருண்டை விடயமோ, அது மங்கலச் செயல் இன்மையால் வீட்டுப் பெண்கள் பலமாக எதிர்க்க, நின்று போய்விட்டது என்றார். வெள்ளை எள்ளை நெய்யும் வெல்லமும் தேங்காய்த் துருவலும் கலந்து பிடித்த சுவையான எள்ளுண்டைகள் தேவதைகளுக்கு உரியவை தான் என்றார் ஏக்கத்தோடு.
மற்றப்படி, இதெல்லாம் மூத்தோர் கொடை.
அவர் ஐயமறச் சொல்லி மறுபடி அம்பலப்புழை, அரசூர் என்று பெயர் விளித்து, பக்கத்தில் கையேட்டுக் குவியலைக் காட்டி வணங்க, தெரிசா ஒரு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்கக் கோரப்பட்ட பாவத்தோடு சாந்தமும் மன்றாடலும் கருணையும் முகத்தில் தெரிய இருந்து, தானும் அத்திசை நோக்கி வணங்கி, மெல்லத் தன் கைப்பையைத் திறந்தாள்.
தெரிசா அவரிடம் அளித்த பழைய காகிதங்களைப் பார்வையிட்டார் வித்துவான். ஜான் கிட்டாவய்யன் எழுதிய தமிழ்க் கீர்த்தனங்கள் ஆங்கில மற்றும் மலையாள எழுத்து வடிவில் இருந்த காகிதங்கள் அவை.
இந்தப் பாடல்களை எழுதிய உங்கள் முன்னோர் மிக நல்லவர். ஆனால் அவருடைய தமிழ்ப் புலமை சங்கடமடைய வைக்கிறது. உதாரணத்துக்கு கிறித்துமசு பாட்டு எழுதும் போது ஏசுவைச் சிசுபாலனே என்று விளிக்கிறார். சிசுபாலன் புராணத்தில் கண்ணனுக்கு எதிரியாக வந்து அவனால் அழிக்கப்படும் அரக்கன். ஏசுவுக்கு இந்தப் பெயர் ஒட்டாதது மட்டுமில்லை அபத்தமானதும் கூட. கல்வாரிக் கற்கள் மகிழக் கர்த்தார் பிறந்தார் என்று எழுதியிருக்கிறார். கல்வாரி என்பது ஏசுவைச் சிலுவையில் அறைந்த இடம். பிறந்த குழந்தையிடம் இந்த மாதிரி இருக்கிறது, நீ சாகப் போகும் இடம் என்று சொல்வது மகா அபத்தம், அதுவும் ஏசுபிரானிடம்.
அவர் நிறுத்தாமல் சொல்லிக் கொண்டு போக முசாபர் தூங்கியிருந்தான்.
(தொடரும்)