New : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 22 இரா.முருகன்

வைத்தாஸ் அறைக்குள் நுழைந்தபோது அங்கே சந்தன மணம் தூக்கலாக வந்து கொண்டிருப்பதைக் கவனித்தான். கொத்தாகக் கொளுத்தி ஜன்னல் பக்கம் வைத்த ஊதுபத்திகளின் ஒட்டு மொத்த நறுமணம் அது. கூடவே, மேஜை மேல் வைத்த டேப் ரிக்கார்டரில் இருந்து தரன்னன்னா என்று நிறுத்தி நிதானமாக ஆனால் வார்த்தைகள் தெளிவில்லாமல் பாடும் ஓர் ஆண் குரல் ஒலித்தபடி இருந்தது. சுழலும் ஒலி நாடாவோடு அந்தக் குரலும் சுற்றி வளைத்து உயர்ந்து ஊதுபத்தி வாடையோடு சூழ்ந்து கொண்டிருந்தது. நெற்றியில் பட்டையாக வெண்பொடி தரித்த, தட்டுச் சுற்றாக வேட்டி அணிந்த அமைச்சர் முன், வைத்தாஸ் போல சூட் உடுத்த அதிகாரி ஒருவர் நாற்காலியில் தொடுக்கியது போல் உட்கார்ந்திருந்ததும் வைத்தாஸ் கண்ணில் பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, அறை நல்ல வெளிச்சமாக இருந்தது. இந்திய அமைச்சகங்களில் அமைச்சரின் அறைக்குள் முழுக்க இருள் பரத்திக் கொண்டு மடிப்பு மடிப்பாகத் தொங்கிக் கொண்டிருக்கும் துணித் திரைகள் பலவும் காணாமல் போயிருந்தன.

வைத்தாஸ் இந்த அறைக்குள் வந்திருக்கிறான். அது பதினெட்டு மாதங்களுக்கு முன் நடந்தது.. அதற்கு அப்புறம் தான் இங்கே ஒரே ஒரு முறை அமைச்சர் மாற்றமும், அவனுடைய சொந்த நாட்டில் பதினேழு தடவை அரசாங்க மாற்றமும் நடந்து விட்டிருந்தது. திரும்பவும் அதிகாரபூர்வமான தூதராகப் பதவியேற்று இங்கே இப்போது தான் வருகிறான். மாறித்தான் இருக்கிறது எல்லாம்.

அறையில் சந்தன மணமும் மற்றதும் தவிர, அமைச்சரின் மேஜையும் முன்னால் இருந்த திசைக்கு நேர் எதிரே பார்த்துப் போடப் பட்டிருந்தது. இந்தி எழுத்துக்கள் நிறைந்த கேலண்டரும், சுவரில் ஜவஹர்லால் நேரு படம் போட்டு இந்தியில் எழுதிய வாசகமும் காணோம். தென்னிந்தியக் கோவில் கோபுரம், இறகு விரித்து ஆடும் பறவை, அதை அணைத்துச் சாய்ந்திருக்கும், கையில் வேல் பிடித்த கடவுள் படம் என்று முழுக்க மாற்றம் தெரிந்தது. வட இந்தியாவில் இருந்து தெற்கு திசைக்கு நகர்ந்திருக்கிறது அந்த அறை.

வைத்தாஸ் நுழைந்ததும் அமைச்சர் எழுந்து நின்று கை கூப்பி வரவேற்றார். ஆறு அல்லது ஆறரை அடி உயரம் அவர். வைத்தாஸை விட ஒரு குத்து அதிகமாகவே நெட்டையாக வளர்ந்தவர். அவனை விட இளையவர். நெற்றி நிறையப் பூசி இருந்த வெண்பொடி மேல் அவசரமாக இட்ட கீற்றாகச் சிவந்த சிந்தூரம். அவர் மேஜையில் வாடிய வெற்றிலை நறுக்கில் அதுவே இருந்தது.

வருக, வருக என்று அன்போடு சிரித்தார் அமைச்சர். கூடவே எழுந்து நின்ற அதிகாரியும் வைத்தாஸைப் பார்த்துக் கை குவித்து வணங்கினார்.

வெளிநாட்டு தூதர்களை அமைச்சர்கள் சந்திக்கும்போது மூத்த அதிகாரிகளோடு சேர்ந்து அதை நிகழ்த்துவதை வைத்தாஸ் இங்கே கவனித்திருக்கிறான். அவர்கள் எல்லாருமே தலை நரைத்த அல்லது முழுக்க வழுக்கை விழுந்தவர்கள். ரிடையர் ஆகப் போகிறதை முகத்தின் சுருக்கங்கள் சொல்லும் வட இந்திய முதியவர்கள். கருத்த இந்த அதிகாரி நடுவயதில் அடியெடுத்து வைத்திருப்பான். வட இந்தியச் சாயல் இல்லாத அதிகாரிகள் இங்கே அபூர்வம் என்பதை வைத்தாஸ் அறிவான். நெற்றியில் தாராளமாக வெண்பொடி மூன்று பட்டைகளாகத் தரித்த அமைச்சரும், அதைச் சிறு கீற்றாகப் பூசியிருந்த மூத்த அதிகாரியும் தெற்கிலிருந்து வந்தவர்கள் என்பது வைத்தாஸுக்கு ஆச்சரியகரமான விஷயம். இவர்களுக்கு இந்தி தெரியுமா?

அறிமுகச் சடங்கு முடிந்த பிறகு அந்த அதிகாரி மறுமுறையும் எழுந்து நின்றார். வாடிய இலை நறுக்கை மேஜையில் இருந்து எடுத்து வைத்தாஸ் முன் நீட்டினார். வைத்தாஸ் அதில் இருந்து வெண்பொடியை எடுத்து நெற்றியில் அணிந்து கொள்ள எதிர்பார்ப்பு இருந்ததை உணர்ந்து கொண்டான்.

பழனி கோவில் சந்தனாதி வீபுதி. முருகன் கோவில் அது. உங்க ஊர்லேயும் முருகன் கோவில் இருக்குமே. மொரிஷியஸ்லே இருக்கு. போயிருக்கேன்.

அமைச்சர் ஏற்கனவே அறிந்ததை உறுதிப் படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு சொன்னார். ஒரு வினாடி வைத்தாஸ் தயங்க, முன்னால் நின்ற அந்த அதிகாரி மன்னிப்புக் கேட்கும் தோரணையில் சங்கடமாகச் சிரித்தார். சங்கரன் என்ற பெயருள்ளவர் அந்த அதிகாரி என்றும், அமைச்சகத்தில் சங்கரன் என்ற பெயருள்ள ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருப்பதால் இவர் சின்னச் சங்கரன் என்று அழைக்கப் படுகிறார் என்றும் அறிமுகமாகும் போது தகவல் சொல்லியிருந்தார் அமைச்சர்.

சின்னச் சங்கரனை மேலும் சங்கடமடையச் செய்ய வேண்டாம் என்று நினைத்த வைத்தாஸ் சங்கரன் போல் சிறு கீற்றாக அணிந்து கொண்டான்.

சரியாக வைத்துக் கொண்டிருக்கிறேனா திரு சின்ன சின்ன

அவனுக்கு அதிகாரியின் பெயர் அதற்குள் பாதி மறந்து போயிருந்தது. பெயரைத் தப்பாக உச்சரிக்கும் கெட்ட பழக்கம் வைத்தாஸின் நாட்டில் சபிக்கப்படுவதாகும். ஒவ்வொரு முறை அப்படித் தவறாக உச்சரிக்கப் படும்போதும், ஏற்படுத்தப்பட்ட மொத்த வாழ்நாளில் ஒரு நாள் குறைக்கப்படும் என்ற நம்பிக்கை வலுவாக அமைந்த நாடு அது. கடவுளின் மூத்த சகோதரி, வீட்டு முன்னறையில் ஆடும் பறவை போன்ற சமீபத்திய படிமங்கள் போல் இல்லாமல் வழிவழியாக வருகிற நம்பிக்கை இது. கடவுளின் மூத்த சகோதரி நந்தினியும், கடவுளின் மைத்துனனான வைத்தாஸும் நிகழ்கலையிலும் பாரம்பரிய ஓவிய முறையிலும் அற்புதம் கலந்த பிம்பங்களோடு காலக்கிரமத்தில் நிரந்தரப் படுத்தப்படலாம்.

உங்களை நான் எப்படி அழைக்க?

மரியாதையோடு வைத்தாஸ் கேட்க, சின்னச் சங்கரன் உதவிக்கு உடனே வந்தான்.

சங்கரன் என்றே கூப்பிடலாம்..

இனிஷியல்கள் மட்டும் வைத்துக் குறிப்பிடுவது இங்கே வழக்கம் இல்லையோ?

ஆமாம். இனிஷியல்கள் மட்டும் போதும் என்றால் என்னைக் கழுதை என்று அழைக்கலாம்.

சங்கரன் சொல்லி விட்டுச் சிரிக்க அமைச்சரும் கலந்துகொண்டார்.

வைத்தாஸ் தான் ஏதும் தவறாகப் பேசிவிட்டோமோ என்று உள்ளார்ந்த பயத்தோடு மன்னிப்பு கேட்கும் தோரணையில் மறுபடி சங்கரனை வணங்கினான். இப்படி வணக்கமும் மறு வணக்கமுமாக இந்தச் சந்திப்பு முடிந்து விடும் என்று அவனுக்குத் தோன்றத் தொடங்கியது.

அரசூர் சின்னச் சங்கரன் என்பதை ஏ எஸ் எஸ் என்று சுருக்கி, சூப்ரண்டெண்ட் ஏ எஸ் எஸ் கவனத்துக்கு என்று எனக்கு குறிப்புகள் வரும்.

இன்னொரு அலை சிரிப்பு உயர்ந்து அடங்கி உட்கார்ந்த பிறகு தான் வைத்தாஸுக்கு நினைவு வந்தது. கையில் எடுத்து வந்த சரிகை ஆடையை அமைச்சருக்குப் போர்த்த மறந்து விட்டது. அவன் நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு அருகே பூக்கடையில் தென்னிந்தியப் பாணியில் அடர்த்தியாக ஜவந்திப் பூக்களை வைத்துத் தொடுத்த மலர் மாலைதான் வாங்கி எடுத்து வருவதாக இருந்தான். ஆனால் தூதரக உதவி அதிகாரிகள் தற்போதைய மோஸ்தரில் கதர் நூல் மாலையோ, சரிகைத் துண்டோ தான் கவுரவப் படுத்தத் தேவையெனத் தெரிவித்து சரிகைத் துண்டு வாங்கி வந்திருந்தார்கள்.

பொன்னாடையை அமைச்சருக்குப் போர்த்தி மரியாதை தெரிவித்ததும் சின்னச் சங்கரன் அதைத் திரும்ப வாங்க அமைச்சரிடம் கைநீட்டினான். இருக்கட்டும் என்று தடுத்த அமைச்சர் அதைப் போர்த்திய படிக்கே புன்சிரித்தார். பெண்மைச் சாயலைச் சற்றே பூசிய சரிகைத் துண்டு அது.

தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ் பேசும் மதராஸ் மாகாணத்தில் எங்கே போனாலும் சந்தன வாடைதான், சவ்வாது வாடை தான், உயர்ந்த சங்கீத வாடை தான். வாழ்க்கையில் உன்னத விஷயங்களை நேசிப்பவர்கள் நாங்கள்.

அமைச்சர் பெருமையோடு பொன்னாடையைத் தோள்களுக்கு மேல் இழுத்து விட்டுக் கொண்டு சொல்ல, சின்னச் சங்கரன் ஒரு சிரிப்போடு ஆமோதித்ததைக் கவனித்தான் வைத்தாஸ். அது மறுபடியும் சங்கடத்தோடு கூடிய சிரிப்பாக இருந்ததையும் அவன் கவனிக்கத் தவறவில்லை.

மரியாதை கருதி, இரண்டு கைகளையும் நாடக பாணியில் உயர்த்தி, தமிழ் பேசும் உங்கள் மாநிலம் பற்றி உலகமே அறிந்திருக்க உங்கள் மொழியும் கலாச்சாரமும் உயர்ந்த ரசனையுமன்றோ காரணம் என்று அரைக் கண் மூடிச் சொன்னான் வைத்தாஸ். அமைச்சருக்கு இந்தத் தூதனைப் பிடித்துப் போனது.

உங்கள் அறை இதமான இந்திய வாசம் பூண்டுள்ளது குறித்து வாழ்த்துகள் என்றான் வைத்தாஸ். ஒரு நாளைக்கு இருபத்துநாலு மணி நேரமும் சந்தனம் மணக்க, இந்த சங்கீதத்தைக் கேட்டபடி தான் தென்னிந்தியாவில் காலம் போகிறது என்று அவனுக்கு நம்பக் கடினமாக இருந்தாலும், அதில் ஈடுபட்டு, கொஞ்சம் பொறாமையும் கொண்டவனாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே தற்போது செய்ய வேண்டியது என்று உணர்ந்தான் வைத்தாஸ்.

இது தென்னிந்தியாவுக்கே உரிய பாரம்பரிய இசை தானே?

எங்கே சுட்ட வேண்டும் என்ற இலக்கு இல்லாமல், மேஜையில் தாழ்வான பகுதியில் சுழன்று கொண்டிருந்த ஒலி நாடாவில் இருந்து வரும் இசையைக் குத்துமதிப்பாக அவதானித்துக் கேட்டான் அவன். அது கேட்க நன்றாகத் தான் இருந்தது. ஆனால் ஏதோ பிடிவாதத்தோடு சில வார்த்தைகளையும் சொற்கட்டுகளையும் திரும்பத் திரும்ப உச்சரிப்பதில் அடம் தெரிந்தது. வார்த்தைகள் நிறுத்தாமல் வாதாடுவதை அட்சரம் பிசகாமல், இழுத்துக் கட்டிய தந்திகளின் மேல் சன்னமான அம்பு படர்ந்து சப்தித்துப் போலி செய்து, மேற்கத்திய இசைக் கருவியான வயலின், பாடும் குரலைத் தொடர்ந்து கொண்டிருந்தது. குரல் மேலோங்கிப் போனாலும் ஒரு வினாடி அதை அபிநயித்து விட்டுத் தாழும் வயலின் ஐரோப்பியக் கலாச்சாரத் தன்மையை முழுக்க இழந்து, புருஷனுக்கு சதா கீழ்ப்படிதலுள்ள இந்திய மனைவி போல பதவிசாகக் கூடவே வந்தது வைத்தாஸுக்குப் புதுமையாக இருந்தது. மேலும், ஓங்கி ஒலிக்க வேண்டிய முரசு அதிராது, எல்லா நேரத்திலும் பாடும் குரலுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதும், ஒடுங்கி ஒலிப்பதும் விசித்திரமாக இருந்தது அவனுக்கு. ஒற்றை முரசு தொம்மெனப் புடைத்துத் தொடங்கி வைக்க, கூட்டமாக மற்ற முரசுகள் ஒலிக்க, முரசுகளின் தொகுதி நீட்டி முழங்கி அதிர, அதற்கு இசைந்து குழுவாகச் சத்தம் உயர்த்தி வாய் விட்டுப் பாடும் பாட்டும், கூடவே, அனைவரும் ஒற்றுமையாகக் கலந்து எல்லா இறுக்கமும் உதிர்த்து கால் வீசிக் குதித்தாடும் ஆடும் ஆட்டமும் நிகழும் கலாச்சாரச் சூழலில் இருந்து வந்தவனுக்கு இந்த இசையில் இனிமை புலப்பட்டாலும் அதன் சமூகக் கட்டுமானம் புரியவில்லை.

உங்கள் நாட்டு இசை கொஞ்சம் பலமாக ஒலிக்கும் இல்லையோ?

அமைச்சர் கேட்டார். அவருக்கு நாடு வாரியாக கலையையும் கலாச்சாரத்தையும் ரசிக்கத் தேர்ச்சி இருக்கும் என்று வைத்தாஸ் நம்பவில்லை. ஆனாலும் இந்திய அரசுத் துறை அதிகாரிகள் இருக்கிறார்களே. அபூர்வப் பிறவிகள். அவர்கள் மனது வைத்தால், முழு மூடர்களான நிர்வாகிகளுக்கு ஒரு ராத்திரியில் சிக்கலான ட்ரிக்னாமெட்ரி கணிதமோ, லத்தீன் இலக்கணமோ, எகிப்திய வாத்திய இசையோ கற்பித்து அறிவு செறிந்தவர்களாக ஆக்க முடியும் என்று வைத்தாஸ் படித்திருக்கிறான். அதுவும் தென்னிந்திய அதிகாரிக்கு அவருடைய மொழி பேசும் அதிகாரி செய்யக் கூடிய ஊழியம் இன்னும் கூடுதலாகும் போல்

அது எப்படியோ, அமைச்சரின் இந்தக் கேள்விக்குத் தான் வைத்தாஸ் காத்திருந்தான். அமைச்சரை வைத்தாஸின் நாட்டுக்கு நல்லெண்ண வருகையாக ஒரு வாரம் எழுந்தருள அழைப்பதற்கான தருணம் இது.

உடனே செயல்பட்டான் வைத்தாஸ்.

உங்கள் வருகையால் எங்களுக்கு மிகப் பெரிய பெருமை சேர்வதோடு, வல்லரசுகளின் மதிப்பீட்டில் எம்மைப் பற்றிய கணிப்பு மேன்மையுறும்.

புன்னகையோடு நல்ல ஆங்கிலத்தில் இதமாகக் கூட்டிச் சேர்த்தான் அவன்.

தழையத் தழைய பருத்தித் துணி உடுத்து, சாம்பல் பூசி, சந்தன மணம் கமழ வைத்தாஸின் நாட்டில் இவர் வந்து இறங்கியதும் உலகமே அதை ஆச்சரியத்தோடு கவனிக்கும் என்று நம்ப வைப்பதே தனக்கான பணி என்று தீவிரமாக மிகைப்படுத்திய விழைவுகளைச் சரம் சரமாக வைத்தாஸ் அடுக்க, உள்ளம் குளிர்ந்த அமைச்சரும், அதிகாரியும் கருணை செய்யும் முகமொழியும் உடல் மொழியுமாக அவனைப் பார்வையால் ஆதரித்தார்கள்.

உங்க நாட்டில் இந்தியக் கலாசார விழா நடத்தலாமே?

யோசனை தெரிவித்தார் அமைச்சர். திரைப் படங்களைத் திரையிடுவதோடு, அவற்றில் நடித்த நடிகைகளையும், விமானத்தில் இடம் இருக்கும் பட்சத்தில் நடிகர்கள் ஒன்றிரண்டு பேரையும் தன்னோடு வைத்தாஸின் நாட்டுக்குக் கூட்டிப் போவதில் சிரத்தை காட்டினார் அவர். அவருக்கு முன்னால் இருந்த அமைச்சர் வைத்தாஸின் நாட்டு சினிமா நடிகைகளைக் காணாமலே காமுற்றதை விட இது உசிதமானதென வைத்தாஸ் நினைத்தான்.

நிச்சயம் நடத்தலாம். மேலும் இந்த மாதிரியான பாடகர்களையும் அவர்களுடைய குழுக்களோடு எங்கள் நாட்டுக்கு வருகை புரிய வைக்கலாம்

வைத்தாஸ் கை சுட்டிக் காட்டும் முன் ததரினனா என்ற சத்தம் நின்று போய்த் திரும்ப ஆரம்பத்தில் இருந்து மெல்லிய தம்பூரா மீட்டுதலோடு இசை தொடங்கியது. இந்த இசைக் கலைஞரை, பாரம்பரியமான கரும்புத் தோட்டத்து சாவு வீட்டில் இழவு சொல்லி அழும் குரல்கள் ஒலித்த பிறகு அதே தாளத்தில் பாட வைக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு, அதை வெளிப்படுத்தாமல், உயர்வு நவிற்சியோடு சொன்னான் –

இதயம் தைக்கும் இந்த இசையோடு, எங்கள் நாட்டு முரசு வாசிக்கும் கானகம் சார்ந்த கலைஞர்களைச் சேர்ந்து இசைக்கச் சொல்லி சர்வதேச சங்கீதம் உருவாக்கலாம். உலகம் முழுக்க ஒற்றுமையும், அன்பும், சகோதரத்துவமும், அமைதியும், ஆதிக்க எதிர்ப்பும் நிலவ இம்மாதிரி சார்பு தவிர்த்த உலக இசை உதவி செய்யக் கூடும்.

அவன் பேசியது அவனுக்கே பிடித்துப் போனது. அடுத்த மாதம் தூதரகம் வெளியிடும் மாதப் பத்திரிகையில் முதல் பக்கக் கட்டுரை எழுத இதுவே கருப்பொருள். இந்தப் பேச்சு அமைச்சரையும் அதிகாரி சின்னச் சங்கரனையும் கூடப் பாதித்திருப்பதாக அவன் நம்பினான். அதிகாரி அவன் பேசியதைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வதைக் கவனிக்கத் தவறவில்லை வைத்தாஸ். பாட்டைத் தொடர்ந்து ஒலிப்பதிவு நாடாவிலேயே வைத்தாஸின் குரலை அதிகாரி சின்னச் சங்கரன் அடக்கிக் காட்டியிருந்தால் வைத்தாஸுக்கு அவன் மேல் மேலதிக வாத்சல்யமும் மரியாதையும் ஏற்பட்டிருக்கும். இப்போதும் தாழ்வில்லை. நேச நாட்டு அமைச்சருக்குப் பிரியமான அதிகாரிகள் தூதரகமும் தேசமும் காட்டும் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர்களே.

அமைச்சர் அதிகாரியைப் பார்த்து, சொல்லு என்று கண் காட்ட சின்னச் சங்கரன் வைத்தாஸிடம் சகல மரியாதையோடும் சொன்னது இது –

கலாசார அமைச்சகத்தின் ஆதரவில் அடுத்த மாதம் கேரள மாநிலம் அம்பலப்புழையில் பாரம்பரிய இந்திய இசையும் நடனமும் என்ற கருத்தரங்கு நடக்க இருக்கிறது. ஒரு வல்லரசு நாட்டின் தூதர் கௌரவ விருந்தாளியாக இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள இருந்தார். அவரைப் பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பைத் தொடர்ந்து திருப்பி அவருடைய நாட்டுக்கே அனுப்ப வேண்டிப் போனது. கலை ஈடுபாடு உள்ள அறிஞரான வெளிநாட்டவர் வேறு யாரையும் உடனே தேடிப் போக முடியாத சூழலில், உதவி செய்யும்படி நட்போடும் உரிமையோடும் உங்களிடம் கேட்கலாம் என்று அமைச்சர் யோசனை சொன்னார். நீங்கள் பெரிய எழுத்தாளர் என்றும் நுண்கலைகளின் மகா ரசிகர் என்றும் அவர் தான் எங்களுக்குத் தெரியப் படுத்தினார்..

அனைத்தும் அவனருள் என்று அதிகாரி மெய்மறந்து அமைச்சரைத் துதிக்க, எல்லாப் பெருமையையும் உணவு செரிமானமாகும் மிதமான ஏப்ப ஒலியோடு அமைச்சர் வெளிப்படுத்தி, மேஜை உள்ளே இருந்து வெற்றிலைகள் ஒன்றிரண்டை எடுத்து மடித்து வாயில் திணித்துக் கொண்டார்.

தான் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நாடு திரும்பி ஒரு மாதம் விடுமுறையில் மனைவியோடு வெகு காலம் கழித்துக் கூடி இருக்க உத்தேசித்ததைத் தெரிவிக்கலாமா என்று யோசித்தான் வைத்தாஸ்.

அது வேண்டாம், இந்த அழைப்பை ஏற்பதே இரண்டு நாடுகளுக்கு இடையே நல்லுறவு வலுப்பட உதவக் கூடியது என்று அவனுக்கு நம்பிக்கை வந்தது.

நந்தினியை இங்கே வரச் சொல்லலாம். கடவுளின் மூத்த சகோதரி முதல் பயணமாக ஆடும் பறவைகளின் நட்பு நாட்டுக்கு வருகிறார் என்று உள்நாட்டில் தகவல் பரவட்டும். நல்ல செய்திகளை அனைவரும் வரவேற்கிறார்கள். அவை இல்லாத பட்சத்தில் உருவாக்கப் படுகின்றன.

வைத்தாஸ் அம்பலப்புழை மாநாட்டில் பங்கு பெற ஒத்துக் கொண்டான். அர்ஜுன நிருத்தம் என்ற நடனம் பற்றி அவன் பேச வேண்டும் என்று அழைப்பு. ஆண்கள் மயில் தோகை அணிந்து ஆடும் ஆட்டமாம் அது. அவன் நாட்டிலும் பறவை இறக்கை அணிந்து ஆடும் ஆட்டம் ஒன்று உண்டு. இரண்டையும் ஒப்பிட்டுப் பேச அவனுக்கு முடியும்.

உங்கள் நாட்டில் இருந்து ஒரு நாட்டியக் குழு உடனே வர முடியுமா?

அமைச்சர் ஆவலோடு விசாரித்தார்.

கடந்த இரண்டு ஆண்டு காலமாக அரசியலில் நிச்சயமற்ற நிலை காரணமாக வைத்தாஸின் நாட்டில் இலக்கியமும் கலையும் கலை வெளிப்பாடும் சீர்குலைந்த நிலையில் தற்போது உள்ளதை வருத்தத்தோடு தெரிவித்தான் வைத்தாஸ். அடுத்த ஆண்டு நிலைமை சீரடைந்து விடும். அப்போது சகல கலைஞர்களையும் கூடவே அழைத்து வருவதாக வாக்குத் தத்தம் செய்தான்.

அமைச்சர் தங்கள் நாட்டுக்கு விரைவில் வருவார் என்று நம்பிக்கையும் தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டான் வைத்தாஸ்.

அழைப்புக்கு நன்றி, அவசியம் வருகிறேன்.

அமைச்சர் உற்சாகமாக அறிவித்தார்.

வைத்தாஸுக்குக் கதவு திறந்து விட அவரே அறை வாசல் வரை அதிகாரி சகிதம் வந்தார். ஒரு வினாடி கதவைப் பிடித்துக் கொண்டு நின்று குரல் தாழ்த்தித் தரன்னன்ன இசையோடு இழைந்து சொன்னார் –

உங்கள் நாட்டு மந்திரவாதிகளையும் எங்கள் பக்கத்து மந்திரக்காரர்களையும் கூடிப் பேச விடலாமே. அங்கேயும் வைத்தியர்கள் மந்திரவாதம் செய்வார்களாமே.

அமைச்சர் திடீரென்று கேட்க அதிகாரியும் வைத்தாஸோடு சேர்ந்து ஆச்சரியம் காட்டினான்.

நாள் முழுக்க கலவியில் ஈடுபட மூலிகைகளையும் மந்திர உச்சாடனங்களையும் செய்யக் கூடிய உங்கள் ஊர் மந்திரவாதிகளை நான் அங்கே வரும்போது சந்திக்க ஆசை. அது மட்டுமில்லை. கள்ளக் கலவியில் ஈடுபடும் ஆணை பெண்ணுக்கு உள்ளேயே சிறைப் பிடித்து வைக்க மந்திரம் செய்வார்களாமே உங்கள் நாட்டில். அப்படி ஒரு நிகழ்வையும் பார்க்க ஆசை.

அவர் குரலை திடீரென்று சற்றே உயர்த்தி, விரல்களைக் கத்தரிக்கோல் போல் அசைத்து அபிநயித்துக் கள்ளச் சிரிப்போடு தொடர்ந்தார் –

மந்திரம் போட்டு யாராவது உதிரச் செய்து விடுவார்கள். எதற்கும். உபரியாக இரண்டு குறிகளைக் கைப்பையில் பத்திரமாக வைத்து எடுத்து வர உத்தேசம்.

அமைச்சரின் சிரிப்பு வைத்தாஸ் லிஃப்டில் நுழையும் வரை கேட்டது.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன