மூவர் அணியாகவும் நால்வர் அணியாகவும் தோளோடு தோளாக நடை பயிலும் பூங்காக்களைத் தவிர்த்து நீண்ட நெடிய பயணமாக நிழல் அட்ர்ந்த கோபதி நாராயணா வீதி நடைபாதையில் கண்ணதாசன் சிலையை நோக்கிப் போகும் போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் வண்டி நிறுத்திக் கேட்கிறார்கள் –
சார், மெரினா பீச்சுக்கு எப்படிப் போகணும்
பார்வைக்கே தெரிகிறது – வெளி மாநிலத்து இளைஞர்கள். ஆங்கிலம் இந்தியோ போஜ்பூரியோ அடர்த்தியாகப் பூசிய குரலில் தயக்கத்தோடு வருகிறது.
வழி சொல்லி விட்டுத் தொடர்ந்து நடக்க வேண்டியது தானே. முடியவில்லை.
நான் எங்கே இருக்கிறேன்? தி.நகரில் தானா? அல்லது கனவில் திருவல்லிக்கேணிக்கு வந்திருக்கிறேனா? கிறிஸ்டோஃபர் நோலனின் ‘இன்செப்ஷன்’ திரைப்படம் போல, கனவுக்குள் கனவாக ஆழ்மனம் கடந்து அவர்கள் வந்தார்களா? கண் விழித்தால் நான் எங்கே இருப்பேன்?
சில நொடிகள் இந்தக் குழப்பத்தில் கடந்து போக அவர்கள் மீண்டும் மெரினா பீச் என்கிறார்கள். சுதாரித்துக் கொண்டு வழி சொல்லத் தொடங்குகிறேன். அண்ணா மேம்பாலத்துக்குக் கீழாகப் போய் ராதாகிருஷ்ணன் சாலையில் திரும்பி ..
ஃப்ளை ஓவர் என்ற சொல் மறந்து போகிறது. ஆடோபான் கீழே போய்..எப்போதோ படித்த பிரஞ்ச் autopont எதற்கோ இப்போது நடுவில் வ்ருகிறது.
அவன் திரும்ப மெரினா பீச் என்கிறான். பொறுமையோடு சொல்லி நன்றி வாங்கிக் கொண்டு தோ ரியன் De Rien என்று ஒற்றை வாக்கியம் மறுபடி ப்ரஞ்சில் பதிலும் சொல்லிக் கட்க்கிறேன். கனவோ நனவோ தொடர்கிறது நகர் வெண்பாவாக –
இதுவோ கடலோரம் இங்கிவரோ காந்தி
உதுவோ உழைப்பாளர் வெற்றி – பொதுவினில்
தாம்புலம் வைத்தழைக் காதே மனதிற்குள்
மாம்பலம் வந்த கடல்.