New Novel: வாழ்ந்து போதீரே அத்தியாயம் 26 இரா.முருகன்

உடம்பு சொடுக்கெடுத்து விட்டது போல் இருந்தது. ராஜாவுக்கு நடக்க நடக்கக் கம்பீரம் கூடிக் கொண்டு வந்ததேயல்லாமல் இம்மியும் அது இறங்கவில்லை. மணக்க மணக்க எல்லாத் தைலத்தையும் சுடச் சுடக் கலந்து உடம்பெங்கும் நீவி நாலைந்து ராட்சதர்கள் மரியாதையோடு உடம்பு பிடித்து விட்டு எதிர்பார்க்காத நேரத்தில் அவரைப் புரட்டிப் போட்டு முதுகில் ஏறி நின்று திம்திம்மென்று குதித்துக் கும்மாளமிட்டு இறங்கிப் போக எழுந்து உட்கார்ந்தது முதல் உடம்பில் ஒரு வலி, நோவு, பலகீனம் எதுவுமில்லாமல் போனது.

அபீசீனியாவில் இருந்து வந்த ஒரு உடம்பு பிடிக்காரனும் அவனோடு வந்த பொம்பிளையும் அரண்மனைக்கே வந்து இப்படி மணிக் கணக்காக உடம்பு பிடித்து விட்டார்கள். ராணி தாய்வீடு போயிருந்த நேரம் அது. அபீசீனியாக்காரிப் பொம்பளை மட்டும் ராஜாவோடு இருந்து கள்ளுத் தண்ணி போல போதையேற்றிச் சிரிக்க, ராஜா சமர்த்தாக உறங்கிப் போனார் அன்று.

இங்கே பெண் வாசனையே கிடையாது. ஆவி பறக்க, மலையாளத்தில் பேசியபடி காய்ச்சிய எண்ணெயை அறை வாசலில் வைத்து விட்டு வேஷ்டி கட்டிய இளம்பெண்கள் நகர, மல்லர்கள் தான் எண்ணெய்க் காப்பு உற்சவம் நடத்தியது. ரெண்டு பொற்காசுகளை ராஜா ஆயுர்வேத வைத்தியனுக்கும், பிரித்துக் கொள்ளச் சொல்லி இன்னுமொரு காசை இந்த மல்லர்களுக்கும் தர, அவர்கள் காட்டிய சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை.

ஒரு பெரிய சீனப் போத்தல் நிறைய இன்னும் ஒரு வருஷம் ராஜா பூசிக் கொள்ள மூலிகை எண்ணெய் அன்பளிப்பாகக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். நாசித் துவாரத்திலும் ஆசனத் துவாரத்திலும் தினம் ஒரு துளி தொட்டு வைத்தால் ஒரு சுகக்கேடு அண்டாதாம். அரைக்குக் கீழே முன்னாலும் வைத்துக் கொண்டால் சகல சுகமும் சித்திக்குமாம். என்ன, நாள் முழுக்க அங்கே எரிச்சல் கொஞ்சம் போல் இருக்கலாம். அது எதுக்கு இழவு.

புஸ்தி மீசைக் கிழவன் வைத்தியசாலையைச் சுற்றிப் பறந்தபடி ராஜா இதை சேடிப்பெண்ணுக்கு எங்கெல்லாம் தடவலாம் என ஆலோசனை சொன்னான். போடா வக்காளி என்று ராஜா மிதமாக அவனைக் கடிந்து கொள்ள, என் மத்த இடத்து மசுரே போச்சு என்று சிரித்துக் கிழவன் கோலாகலமாக மிதந்தான்.

வைத்தியசாலை வாசலில் அரண்மனை ஜோசியர் தரையில் பரத்திய மண்ணில் வேப்ப மரக் குச்சி கொண்டு ஷட்கோண யந்திரம் நிறுத்துவதன் நுட்பங்கள் குறித்துப் பேச சுற்றி ஏழெட்டுப் பேர் நின்று சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஜோசியர் அறிவுஜீவியாகக் காட்சி அளிப்பது மனதில் பட, ராஜா மனதில் தேவையில்லாத அசூயை எழுந்தது.

கேணையன் நாமக்கார அய்யன் சோழியை உருட்டிப் போட்டுக் காசு பார்க்கக் கிளம்பிட்டான். நம்ம மீசையான் வேறே ஒய்யாரமா அங்கே இங்கே சாடறான். இவனுகளோட என்ன எழவுக்குடா நான் கூட வரணும்?

அவர் பார்வை பனியன் சகோதரர்களைத் தீய்க்க அவசரமாகத் தேடத் தெரு வளைந்து வலது வசம் திரும்பி மேற்கு திசையில் நீளும் வீதியில், வாசலில் கூரைக் கொட்டகை போட்ட கட்டிட வாசலில் அவர்கள் நின்றிருந்தார்கள்.

மரமேஜை போட்டு அங்கே நாலைந்து பேர் உட்கார்ந்து காகிதங்களைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முன்னால், ஒருத்தன் பிருஷ்டத்தை ஒட்டி அடுத்தவன் என்ற கணக்கில் சர்ப்பமாக வளைந்து மனுஷர்கள் வரிசையாக நின்றார்கள். கும்பினி உத்தியோகஸ்தர்கள் வரி வாங்கவோ புதுச்சேரியில் பிரஞ்சுக் காரர்களோடு யுத்தம் செய்ய ஆள் எடுத்து அனுப்பவோ ஏற்படுத்திய இடம் என்று ராஜாவுக்குத் தோன்றியது. பக்கத்திலே கெந்தி நடந்து வந்த புஸ்தி மீசைக் கிழவன் இல்லையெனத் திடமாக மறுத்தான். நடக்க வேணாம், தரையை ஒட்டிப் பிருஷ்டம் படப் பறந்து செல்லடா கொசுவே என கேட்டுக் கொண்டால் வெகு இஷ்டமாகச் செய்வான்.

இவங்க எல்லாம் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள். வெள்ளைக்காரன் சர்க்கார் இல்லே இப்போ நடக்கிறது. நம்மாளுங்க தான். ஆட்ட பாட்டமா நாலு நாள் வைபோகம் நடத்தி வெள்ளைக்காரனும் அபீசினியக் கருப்பனும் வந்து பார்த்து சந்தோஷப்பட ஏற்பாடு. இங்கே நிக்கறவன் எல்லாம் ஆடவும் பாடவும் வந்தவனுங்க. நேரம் ஒதுக்கச் சொல்லி காகிதத்துலே மனு கொடுக்கறாங்க.

என்ன தான் இளக்காரம் செய்தாலும் புஸ்தி மீசையானுக்கு இருக்கும் கற்பூர புத்தி தனக்கு இல்லை என்பதை ராஜா மனசார அங்கீகரித்தார். அது கிழவன் மேல் நொடி நேர அபிமானமாக மலர்ந்தது. அதுக்குக் காசா பணமா செலவு?

மாமா, எல்லாம் சரிதான். நம்ம களவாணிப் பயலுக அங்கே என்னத்துக்கு நிக்கறாங்க? உங்களையும் என்னையும் சப்ஜாடா ஒரு வெலை பேசி இங்கே சர்க்காருக்கு வித்துட்டுப் போகலாம்னு யோசிக்கறானுங்களோ?

செஞ்சாலும் செய்வானுக மாப்ளே. சூதானமா நடந்துக்கறது நல்லது. உனக்கு உடம்பு வேறே இப்போ சொடுக்கெடுத்து விட்டுட்டான் மலையாளத்தான். இவனுகளோட போனா, மலையாளச்சி மாரைக் காட்டறேன் மத்ததைக் காட்டறேன்னு பெரிசா கருங்குழியிலே உன் தலையை நுழைச்சு விட்டுடுவானுங்க. அவமானம் எல்லாம் உனக்குத்தான் அப்புறம். உஷார்.

தான் கொஞ்சம் தாழ்ந்தாலும் உலகை ரட்சிக்க வந்த அவதாரம் போல உதடு வீங்கி நான்நான் என்று நிற்கிற கிழவனை போடா பருப்பே என்று மனதில் திட்டியபடி ராஜா அந்தக் கொட்டகைக்குள் நுழைந்தார்.

மகாராஜா இங்கே வர உத்தரவாகணும்.

பனியன் சகோதரர்கள் அவசரமாக விளிக்க, அவர்களைப் புறக்கணித்து ஒய்யாரமாக உள்ளே நடந்தார் ராஜா. சந்தோஷமாக கருப்புச் சால்வை போர்த்திக் கொண்டு கிழவனும் போனான். அவசரமாக வேடமணிந்து ஆட வந்த தெருக்கூத்துக் கலைஞர்கள் போல ரெண்டு பேரும் தெரிந்தார்கள்.

நாடகக் காரங்க தானே? அந்த வரிசை.

வாசலில் நின்று கைக்குட்டையில் புதைத்துப் பிடித்து வெள்ளைபீடி புகைத்துக் கொண்டிருந்த மூக்குக் கண்ணாடிக்காரர் ராஜாவை நிறுத்திச் சொன்னார். அவர் பார்வை ராஜா பின்னால் நின்ற கிழவன் மேலும் பட்டுப் படர்ந்தது.

என்ன மொழி?

அவர் கேட்க, கிழவன் உற்சாகமாகத் தமிழ் என்று சொல்ல உத்தேசித்த போது, வாசலில் ஏதோ வண்டி வந்து நின்றது. ராஜா வந்த நூதன வாகனம் போல ஆனால் மேலே கூரை இல்லாமல் பச்சைப் பசேல் என்று இருந்த ஊர்தி அது. அந்த வர்ணம் ராஜாவுக்கு சண்டை சச்சரவு, யுத்தம், ஆள் சேதம் என்று சம்பந்தமே இல்லாமல் கெட்ட நினைப்பை மனசில் விதைத்தது.

பூர்த்தி செஞ்சு கொடுங்க.

உத்தியோகஸ்தன் ராஜா கையில் காகிதத்தைத் திணிக்க, பின்னால் இருந்து யாரோ மரியாதையே இல்லாமல் அவருடைய தோளைப் பிடித்து ஓரமாக இழுத்து நிறுத்தி வேறே யாரோ உள்ளே போக வழியமைத்துக் கொடுத்தார்கள். நூதன வாகனத்தில் வந்து இறங்கியவர்களுக்காக அந்த வழி.

வெள்ளை வேட்டி அணிந்து ஓங்கு தாங்காக ஒருத்தன் கோட்டையூர், செட்டிநாடு, புலியடிதம்மம், சக்கந்தி முகக் களையோடு உள்ளே நடக்க, திருமய்யம் பையன்னு நினைக்கறேன் என்றான் ராஜா காதுக்குள் கிழவன்.

பனியன் சகோதர்கள் அதற்குள் ராஜா பக்கம் நெருங்கியிருந்தார்கள்.

மினிஸ்டர் போறார். ராஜா காதில் கிசுகிசுத்தான் பனியன் குட்டையன். ராஜா புரியாமல் பார்க்க, இன்னொருத்தன் சமாதானமாகச் சொன்னான் – நீங்க வந்திருக்கற இந்தக் காலத்திலே இவங்க தான் ராஜா, சக்கரவர்த்தி எல்லாம்.

யாரு இந்தக் கருத்த பயலா?

ராஜா சத்தமாகக் கேட்க, அவமரியாதை என்றாலும் அவர் வாயைத் தன் நாற்றமடிக்கும் கையால் பொத்தி ஓரமாக அவரைத் தள்ளிப் போனான் நெட்டையன் பனியன்காரன். சமூகம் மன்னிக்கணும் என்று கெஞ்சல் வேறே.

கன்று போலக் கொண்டு செலுத்திய படிக்கு இழுபட்ட ராஜா அவனை எல்லா கெட்ட வார்த்தையும் பிரயோகித்து தாழ்ந்த குரலில் வசைபாட, மினிஸ்டனோடு வந்த ஒரு சின்ன வயசு அய்யன் அங்கே என்ன சத்தம் என்று இந்தியிலும் தொடர்ந்து இங்கிலீஷிலும், கூடவே தமிழிலும் கேட்டான்.

அவனையும் தன்னுடைய வசவு வளையத்தில் சேர்க்கும் முஸ்தீபோடு ராஜா தொண்டையைச் செரும, ரெண்டு பனியன்களும் ஆளுக்கொரு காதாக அவரிடம் அவசரமாகச் சேதி சொன்னார்கள் –

மகாராஜா அவர் பகவதி அம்மா பெயரன். சின்னச் சங்கரன். தில்லியிலே பெரிய அதிகாரி. மினிஸ்டரே அவர் சொல் கேட்டுத்தான் நடந்துப்பார். இதெல்லாம் நீங்க இருக்கப்பட்ட காலத்துக்கு நூறு வருஷம் அப்பாலே.

சட்டென்று ராஜாவின் மனநிலை மாறிப் போனது. இன்னும் இன்னும் என்று மனதில் ஊறி வந்து வாத்சல்யம் பொங்கித் ததும்பியது. உள் வாசல் நிலையைக் கையால் பற்றி நின்று பேசும் பகவதி அம்மாளின் பெயரனுக்குத் தான் இருந்த இடத்தில் இருந்தே ராஜா ஆசிர்வாதங்களைப் பார்வையால் கடத்தினார். கிழவனும் அவன் பங்குக்கு ஏதோ சீன மொழி மாதிரியான பாஷையில் கடகடவென்று வாழ்த்துச் சொன்னான். என்ன எல்லாம் கற்று வைத்திருக்கிறான் வங்காப்பயல் விளங்காமூதி இந்தக் கேடுகெட்ட கிழவன்!

அந்த அதிகாரிப் பையன் வாசலில் மரமேஜை போட்டு உட்கார்ந்திருந்த உத்தியோகஸ்தர்களிடம் ஏதோ சொல்ல, ஒருத்தன் உள்ளே ஓடி ஒரு மாணப் பெரிய உலோக விசிறியைக் கொண்டு வந்து வைத்துக் கருப்புக் கயறு இழுத்து எங்கோ எதையோ செருக, அது பெருஞ்சத்தத்தோடு சுழல ஆரம்பித்ததை ராஜா ஆச்சரியத்தோடும் அபிமானத்தோடும் பார்த்தார்.

பகவதியம்மா பேரனா கொக்கா. என்ன மாதிரியான யந்திரங்கள் சகிதம் வந்திருக்கான். ஜோசியக்கார அய்யரும் இருக்காரே, யந்திரம் ஸ்தாபிக்கணும், கணக்கு போடணும் என்று அலைந்து கொண்டு. அதில் ஒரு யந்திரமாவது இப்படிச் சத்தம் போட்டுச் சுழன்று வெக்கைக் காற்றைப் பரத்தியிருக்கிறதா?

அய்யர் கிடக்கட்டும். அவர் இல்லாவிட்டால் புஸ்தி மீசைக் கிழவ்ன சாவுக்கு சகலமான கிரியைகளும் செய்து அவனை மேலே அனுப்பியிருக்க முடியாதுதான் என்று ராஜாவுக்குப் பட, யார் மேலும் விரோதமில்லை என்ற பாவனையோடு நரை மீசையை நீவியபடி பெருந்தன்மையாகச் சிரித்தார்.

யப்ளிகேஷன் எழுதணுமோ?

யாரோ மூச்சுக் காற்றில் தேங்காயெண்ணெய் மணக்க ராஜாவை நெருங்கி நின்று அவர் கையில் பிடித்திருந்த காகிதத்தைக் காட்டிக் கேட்டார்கள். ராஜா அது இங்கே வந்து தங்க அனுமதி கேட்டு சர்க்காருக்குத் தர வேண்டிய கடுதாசு என்று நினைத்ததோடு அல்லாமல் கேட்டவன் அதியுன்னதமான சர்க்கார் உத்தியோகஸ்தன் என்றும் தீர்மானித்து ஆமாமென்றார். தொடர்ந்து மனுவில் எழுதத் தன் பெயரை எல்லா விருதுகளோடும் சொல்லத் தொடங்க, குறுக்கே விழுந்து நிறுத்திப் போட்டான் குட்டை பனியன்.

அவர் நாடகக் காரர் இல்லே. மகாராஜா என்றான் குட்டையன், யாரை என்று இல்லாமல் முறைத்துக் கொண்டு.

அதெல்லாம் சரி, பரிபாடியிலே இருக்கணும்னா யப்ளிகேஷன் தேவை.

உறுதியாகச் சொன்னான் வந்தவன்.

வேடிக்கை பார்த்துப் போகத்தான் வந்தோம். அதுக்கெதுக்கு அனுமதி எழவு?

ராஜா குரல் உயர்த்திச் சொல்வதைக் கேட்டு உள்ளே போகத் தொடங்கிய பகவதி அம்மாளின் பேரனான அதிகாரி திரும்பினான். ராஜாவைப் பார்த்து அவன் சிரித்த மாதிரி இருந்தது.

பக்கத்திலே வந்து தமிழா என்று அவன் கேட்க, கண் நிறைந்து போன ராஜா, சகல நலனும் பெற்று நல்லா இருப்பா என்று வாய் நிறைய வாழ்த்தினார்.

பகவதி அம்மாளின் பேரன் தன் தில்லி சர்க்கார் அதிகாரி தோரணையை ஒரு வினாடி கழற்றி வைத்து விட்டு ராஜாவின் கரத்தைப் பற்றி மரியாதையோடு பெரியவா எந்த ஊர்லே இருந்து வராப்பலே என்று கேட்டான்.

அரசூர் என்றான் புஸ்தி மீசைக் கிழவன். அதிகாரி ஆச்சரியத்தை முகக் குறிப்பில் காட்டி, நானும் தான் என்று சொல்லி உள்ளே போனார்.

தெரியுமே என்று ராஜா முழங்கியது அவர் காதில் விழுந்திருக்காது தான்.

வெளியே ஏதோ ஆரவாரம். என்ன சங்கதி என்று ராஜா நோக்கினார். ஜோசியக்கார அய்யர் கெத்தாக நடந்து வர, சவரக் கத்தி என்ற ஒன்றே இருப்பது தெரியாத தாடி மண்டிய முகத்தோடு நாலைந்து வெள்ளை வேட்டிக்காரர்கள் அட்டையில் செருகிய காகிதங்கள் சகிதம் அய்யரைச் சுற்றி ஆதரவாக நடந்து வந்தார்கள். அவர்கள் பார்வையில் பரபரப்பு தெரிந்தது.

இந்த அறிஞர் ஷட்கோண மற்றும் அறுகோண யந்திரங்களை அர்ஜுன நிருத்தம் நடக்கும் இடத்தில் நிறுவுவது குறித்துக் கணக்குகள் போட்டு வைத்திருக்கிறார். அந்த யந்திரங்கள் மயில்களை அழைத்து மேகங்களையும் கொண்டு வந்து நிறுத்தி வேண்டிய அளவு மழை பெய்விக்குமாம்.

அய்யர் கூட வந்த இளைஞன் சொல்ல, மரமேஜை உத்தியோகஸ்தன் தலையைக் குலுக்கிக் கொண்டு அபிப்பிராயப்பட்டது இந்தத் தோதில் –

அப்படி எனில் அது எதுவும் இங்கே வேண்டாம். மழை பெய்து நாலு நாள் பரிபாடி அஸ்தமிச்சா, பிரச்சனை ஆகிடும். பணப் பட்டுவாடா முடங்கும்

ரொம்ப மழை எல்லாம் இல்லே. ரெண்டு நிமிஷம் சாஸ்திரத்துக்குப் பெஞ்சுட்டு ஓஞ்சுடும்.

ஜோசியக்கார அய்யர் நைச்சியமாகச் சொன்னார்.

டெல்லி ஆபீசரைக் கேக்கணும். மத்திய சர்க்கார் பரிபாடி. ராஜ்யத்துக்கு இதிலே ஒண்ணும் தால்பர்யமில்லே.

அதிகாரி தீர்மானமாக அறிவிக்க, உள்ளே இருந்து அந்த அரசூர் அதிகாரி திரும்ப வந்தார். எல்லாத் தரத்திலும் மனுஷர்களை இன்று சந்திக்கும் பேறு பெற்ற சந்தோஷத்தோடு சரி வைச்சுக்கலாம், அரை மணி மட்டும் என்று சொல்லி அவர் போகிற போக்கில் ராஜா இன்னொரு ஆசிர்வாதத்தை ஊதிவிட ஏற்று வாங்கிப் போனார்.

அய்யர் ஏதோ காகிதத்தில் கையெழுத்துப் போட அவரிடம் ஒரு சாவி கொடுக்கப் பட்டது.

இந்த முறியிலே நீங்க தங்கி இருந்து சிரம பரிகாரம் செஞ்சு பின்னே பரிபாடிக்கு வந்தா மதி.

ரொம்ப நல்லதாப் போச்சு. அய்யருக்கு ரூம் போட்டாச்சு. சமூகமும் அவிடத்திலேயே குளிச்சு தெளிச்சு பரிபாடி போகலாம்.

குட்டை பனியன் சொல்ல, ராஜா பளிச்சென்று கேட்டார் – அது என்ன பரிபாடி? எல்லோரும் சேர்ந்து பாடற சம்பிரதாயமா?

வைபவம் என்றான் கிழவன். நிகழ்ச்சி என்றான் நெட்டை பனியன். அது பிடித்துப் போனதாக அங்கீகரித்த ராஜா ரூம் போடறது என்ன மாதிரியான விஷயம் என்று கேட்கும் முன்னர் ஸ்ரீ கிருஷ்ணா லோட்ஜ் என்று பலகை மாட்டிய இடத்தின் முன் இருந்தார். பக்கத்தில் தான் அது.

ஆனந்தமாக மேலே இருந்து வென்னீர் பூ மாதிரிப் பொழிய ராஜா சின்னக் குழந்தை போல கூகூவென்று சத்தமிட்டுக் கொண்டு வெகுநேரம் குளித்து வெளியே வந்தபோது உலகமே சந்தோஷ பூர்வமாக அவருக்குத் தோன்றியது.

அவர்கள் பக்கத்து விடுதியில் பசியாறித் திரும்பி வந்தபோது பரிபாடி ஆரம்பமாகப் போகுது என்று ஏகப்பட்ட பேர் அவர்களைப் பந்தலுக்கு அனுப்புவதில் மும்முரமாக இருந்தார்கள்.

மரமேஜைக் காரர்கள் முன் ஆக்ரோஷமாகக் கை சுண்டி, இட்டலி மாத்திரம் தானா ஆட வந்தவங்களுக்கு, புட்டு கடலை எங்கே என்று உயர்த்திய குரலில் விசாரித்துக் கொண்டிருந்த ஒரு கூட்டம் தொடர்ந்து மலையாளத்தில் கோஷம் போட, உள்ளே இருந்து அரசூர் அதிகாரி வந்து சமாதானம் செய்து நாளைக்கு புட்டு கடலையும் கூடவே கோழி முட்டையும் தரப்படும் என்று அறிவித்து அனைவரின் பிரியத்தையும் சம்பாதித்துப் போனதை ராஜா பிரியமும் பெருமையுமாகக் கவனித்தார். நம்ம வீட்டுப் பிள்ளையாச்சே.

அந்தக் கூச்சல் முழுக்க அடங்குவதற்குள் இன்னொரு கூட்டம் அதே படிக்கு மரமேஜைக்கு முன்னால் நின்று காலில் விசை வைத்தது போல குதித்தது –

பயணப்படி மூணு ரூபா பதினேழு பைசாவாக்கும் மத்திய சர்க்கார் விதித்தது. இங்கே மூணு ரூபா மட்டும் கொடுத்து மீதிக் காசைக் கொள்ளை அடிக்க பரிபாடியா? முழுத் தொகை வேணும். இக்களி தீக்களி சர்க்காரே.

அதிகாரி வெளியே வர, மூணு ரூபா பதினேழு பைசா உத்தரவானது கைதட்டோடு வரவேற்கப்பட்டு செண்டை மேளம் பார்க்க அந்தக் கூட்டமும் போயொழிந்தது. நாமும் போகலாம் வினோதம் எல்லாம் கண்டு வர என்று ராஜா பனியன் காரர்களிடம் சொல்லும் போது வேறே ஏதோ இரைச்சல்.

ஆபீசர் சார், எனக்கு நியாயம் சொல்லுங்க.

கட்டிட வாசலில் இருந்து சத்தமாகக் கூப்பிட்டபடி வந்த பெண் கொஞ்சம் பூசினாற்போல் வெகு அழகாக இருந்தாள். அவள் மேல் பார்வையைப் பதித்த பகவதி அம்மாளின் பேரனான அதிகாரியும் அதேதான் நினைத்திருக்க வேண்டும்.

இங்கே எனக்கு அனுமதி மறுக்கிறார்கள். அதிகாரபூர்வமாகக் கொடுக்கப்பட்ட அனுமதியாக என் விசா நடப்பில் உண்டு. நானும் இந்திய வம்சாவளிப் பெண் தான். என்னை வரக்கூடாது என்று விரட்டுவது யார்? ஏன்? அதிகாரி சொல்லாவிட்டால் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன். தெரிசாவுக்கு அனுமதி இல்லை என்று யார் சொல்வது? இங்கே தீர்வு கிட்டாவிட்டால், பிரதம மந்திரி நேருஜியைச் சந்தித்து முறையிடவும் தயார்.

அவள் இங்கிலீஷில் பேசியதைக் கிழவன் கிசுகிசுவென்று ராஜாவுக்கு மொழி பெயர்த்தான். அந்தப் பெண்ணின் பிடிவாதம் ராஜாவுக்கு எரிச்சலை உண்டாக்க, அவளைக் கையைப் பிடித்து ஓரமாக நிறுத்தும் உத்தேசத்தோடு ராஜா முன்னால் சாட, குட்டை பனியன் அவசரமாக அவரைத் தடுத்து நிறுத்திக் காதில் ஓதினான் –

இந்தப் பொண்ணு பகவதியம்மா அண்ணன் ஜான் கிட்டாவய்யனோட கொள்ளுப் பேத்தி. தெரிசா. வெள்ளைக்கார தேசத்தில் இருந்து வந்திருக்கு.

ராஜாவுக்கு ஆச்சரியம் தீரவில்லை. கருக்கடையான பெண். நல்லாயிருக்கட்டும் நாச்சியா. மனதாற வாழ்த்தினார் அவர்.

ரெண்டு பேரும் தகுந்த உறவாச்சே. நல்ல ஜோடி. கல்யாணம் செஞ்சுக்கலாமே?

ராஜா பிரியத்தோடு விசாரிக்க, நெட்டை பனியன் சொன்னான் –

அதிகாரிக்கு அவர் பொண்டாட்டியோட கல்யாணம் ஆச்சு. இந்தப் பொண்ணுக்கு அவளோட புருஷனோட ஆச்சு.

ஆச்சா? ராஜாவுக்கு ஏனோ ஏமாற்றமாகப் போனது.

பந்தல் உள்ளே இருந்து செண்டை மேளம் அமர்க்களமாக ஒலிக்க, ஆடி ஆடிச் சிரித்துப் போன கிழவன் சத்தம் கூட்டினான் –

மாப்ளே, அது பாட்டுக்கு அது. இவங்க நீ நினைக்கறபடி நல்ல ஜோடிதான். இன்னும் ஒரு மாசத்திலே.

அவன் மேலே கூறியது கேட்காமல் மயில்பீலி உடுத்த ஆட்டக்காரர்கள் கூட்டமாக அரங்கு நோக்கிப் போய்க் கொண்டிருக்க, வானம் இருண்டது. ஒன்றன்பின் ஒன்றாகத் தாழப் பறந்து போன மயில்கள் வெளியை நிறைத்தன. திடீரென்று கனமாக மழை பொழியத் தொடங்கியது.

கண்ட இடத்துலே கொத்தி வைக்கப் போவுது மயில் எளவு.

ராஜா சாரலில் நனைந்தபடி கட்டடத்துக்குள் நுழைய, உள்ளே தூணில் சாய்ந்து புகையிலைக் கடைக் குடும்பத்து உறவுக்காரியான சுமங்கலிக் கிழவியம்மாள் பாடிக் கொண்டிருந்தாள் –

தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன