New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 33 இரா.முருகன்

அண்மையில் குடியரசாகப் பிரகடனப்படுத்தப் பட்ட ஆப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதியான டாக்டர் நந்தினி, மூன்று நாள் நல்லெண்ண விஜயமாக புதுதில்லி வந்து சேர்ந்தார். பாலம் விமான நிலையத்தில் அவரை வரவேற்ற வெளியுறவுத் துறை ராஜாங்க மந்திரி.

வைத்தாஸ் ரேடியோவை அணைத்தான்.

நந்தினி தொலைபேசியில் சத்தம் கூடுதலாகவே பேசிக் கொண்டிருந்தாள். பெரிய மூன்று தேசங்களுக்கு நடுவே தென்கிழக்காகக் குறுக்கி கிழக்கே நீண்டு வடக்கில் சற்றே விரியும் சுடுமணல் பரந்த நாட்டின் மக்கள் தலைவரிடம், அங்கே ஆட்சிக்கும் ராணுவத்திற்கும் தலைமை வகிக்கும் நிர்வாகத் தலைவர் கடலும், மலையும், பாலைவனங்களும் தாண்டி இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

நந்தினி பொறுமையாகவும், சில வாக்கியங்களை மெல்ல ஒரு முறைக்கு இரு முறையாகச் சொல்லியும் தன் முக்கியத்துவத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய இங்க்லீஷ், மூக்கால் ஒலிக்கும் இந்திய மலையாள உச்சரிப்பை முற்றும் துறந்து ஏற்ற இறக்கத்திலும், சொற்களை வலிமைப்படுத்துவதிலும், மென்மையாக்குவதிலும் ஆப்பிரிக்கச் சாயலை முழுக்கப் பிரதிபலிக்கிறது.

வைத்தாஸின் சொந்த மொழி இந்த ஆப்ரிக்க ஆங்கிலம். அவன் முற்றிலும் பிரிட்டீஷ் இங்கிலீஷுக்கு மாறியிருக்க, நந்தினி அவன் உரித்த மொழிச் சட்டையை அணிந்திருக்கிறாள். அவளுக்குப் பாந்தமான உடை தான் அது.

நந்தினி முன்னால் நின்று டெலிஃபோனைப் பிடுங்குவது போல் பாவனை செய்தான் வைத்தாஸ். அவளுடைய கவனத்தைக் கவர நக்னனாக, அறையில் விரித்த ரத்தினக் கம்பளத்தில் உருண்டு கரணம் அடிக்கக் கூடத் தயார் தான் அவன்.

அரசாங்கத் தூதர் பிம்பத்தை இறக்கி வைத்து நந்தினிக்கு ஒரு முத்தம் கொடுத்துக் கட்டியணைத்துக் கலவி செய்யக் காத்திருக்கிறான் வைத்தாஸ். நந்தினி இன்னும், அண்மையில் குடியரசாகப் பிரகடனப்படுத்தப் பட்ட ஆப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதி என்ற அந்தஸ்தில், மூன்று நாள் நல்லெண்ண விஜயமாக புதுதில்லி வந்து சேர்ந்த டாக்டர் நந்தினியாகவே இருக்கிறாள்.

சின்னக் குழந்தையைப் பேசாதே, நெருப்புப் பக்கம் போகாதே என்று எச்சரிப்பது போல் வாய்க்குக் குறுக்கே விரல் வைத்து அச்சுறுத்தியபடி தொலைபேசியில் தொடர்ந்தாள் நந்தினி.

குழந்தையோடு நேசத்தைச் சொல்லும் குறும்பு மிளிரும் கண் பார்வை இல்லை அவளிடம். குரலும், உறுதியாகச் சுழலும் கையும், அதிகாரத்தோடு அசையும் தலையும் அவள் தலைமை வகிக்கிறவள், அவளோடு இருக்கிறவர்களும் தொலைபேசியில் அழைப்பவர்களும் அந்த அதிகாரத்தை அங்கீகரித்துக் கீழ்ப் படிந்து அடங்கி ஆட்டுவிக்கப் படுகிறவர்கள் என்றும் நந்தினியின் காத்திரமான இருப்பை வலியுறுத்துகிறது. பத்திரிகைப் புகைப்படத்துக்கான, தொலைநோக்கு வாய்ந்த தலைவர்களின் இருப்பு இது. கருணையும், அன்பும், கண்டிப்புமான மக்கள் தலைவர் நந்தினி. கடவுளின் மூத்த சகோதரி.

இன்னும் ஐந்தே நிமிடம்.

அவள் பேசியபடி கையைக் குவித்து விரித்துக் காட்ட, வைத்தாஸ் தன் கரம் உயர்த்திக் குறும்பாக அதே சைகை செய்ய உத்தேசித்ததை ஒத்திப் போட்டான்.

சற்று முன்பு, அவளைப் பின்னால் இருந்து அணைத்து, அவளது கனத்துத் தளர்ந்த மார்பகங்களைப் பற்றிய போது நந்தினி அவசரமாகச் சொன்னது –

விடலைத்தனமாக நடக்காதே. நம்மை உலகம் பார்க்கிறது. வயதும் இன்னும் இருபதில்லை. தெய்வங்களும் தலைவர்களும் முலை பற்றி, குறி தடவி விளையாடுவதில்லை..

என்றால், அவர்கள் கருப்பினத் தீவிரவாதத்தின் போக்குகள் குறித்தோ, மூன்றாம் உலக நாடுகளின் புதிய அதிகாரக் கட்டமைப்புகள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிக்கல்கள் பற்றியோ ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படுத்தும் கருத்துகளைப் பகிர்ந்து விவாதிக்க வேணுமா?

வைத்தாஸ் சிரித்தபடியே நந்தினியின் மார்பில் கையளைந்த படி கேட்டான். அந்தக் கரங்களை அவள் விலக்கவில்லை. ஆனாலும் அடுத்த தொலைபேசி அழைப்பு வந்து கொண்டிருப்பதாகச் சொல்லி நகர்ந்தவள் படுக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறாள்.

எமிலி பேசணுமா? என்ன இருக்கு அந்தக் குட்டிப் பொண்ணுக்கு என்கிட்டே பேச?

கேட்டு விட்டு இந்த நாளில் முதல் தடவையாக நந்தினி சிரிக்கிறாள்.

கையில் டெலிபோன் டைரக்டரியை விரித்து வைத்து பெயர்களைப் பாராயணம் செய்கிற கவனத்தோடு ஒவ்வொன்றாக முணுமுணுத்தபடி இருக்கிறான் வைத்தாஸ். கடவுளின் சகோதரியோடு கடவுளே பேச வந்தாலும் அவனுக்கு விரோதமில்லை. பரபரப்பும் எதிர்பார்ப்பும் கூட இல்லை.

சின்னக் குழந்தைகளோடு டெலிபோன் பேசுகிற, இயல்புக்கு அதிகமான செல்லம் கொஞ்சுதலும், அன்பு நிரம்பியதுமான குரலில் எமிலி என் குட்டிப் பெண்ணே என்று விளித்து நந்தினி தொலைபேச ஆரம்பிக்க, டெலிபோன் டைரக்டரியோடு அறைக்கு வெளியே வந்தான் வைத்தாஸ்.

இன்று நந்தினி வெவ்வேறு பேரோடு தொலைபேசி முடிப்பதற்குள் அந்த டைரக்டரியை முதலில் இருந்து இறுதி வரை படித்து விடுவான் அவன். அவனுடைய நாவல்களை விட அது சுவாரசியமாக இருக்கும் என்று அடுத்த பத்திரிகைப் பத்தியில் அவன் எழுதப் போகிறான்.

தன்னையே பரிகசித்துக் கொள்ளும் எழுத்துக்காரர்கள், வாசகர்களுக்கு மிக நெருங்கியவர்கள் ஆகிறார்கள். படிக்கிறவர்கள் ஒரு கள்ளச் சிரிப்போடு சொல்லவும் எழுதி வைக்கவும் விரும்புவதை எந்தக் குற்ற உணர்ச்சியும் அவர்கள் கொள்ளாமல் அவர்களுக்கு அனுபவப்படுத்த அவன் தன்னையே கிண்டல் செய்து கொள்வான். எழுத்துக்காரனே விரும்பித் தன்னைக் கோமாளியாக்கிக் கொள்ளும்போது அவர்கள் அதிகமாகச் சிரித்து இன்னும் தீவிரமாகக் களிமண் உருட்டி மேலே எரியும் ஆபத்தில்லாத, உறவு சொல்லி அழைத்துச் சகலரையும் மகிழ்விக்கக் கூடிய சொல் விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். அந்தச் சூழலில், அடுத்த நாவல் இன்னும் நன்றாக விற்கிறது.

உடனே இதை எல்லாம் தட்டச்சு செய்ய வைத்தாஸுக்கு ஆர்வம் மிகுந்து வந்தாலும், உள்ளே நந்தினி பேசிக் கொண்டிருக்கும் போது அதைச் செய்தால் பேச்சுக்கு சிரமமாக இருக்கக் கூடும் என்று அவன் மனதில் பட்டது.

டெலிபோன் டைரக்டரியின் பக்கங்களை இன்னும் கொஞ்சம் வாசித்தால் தட்டச்சு செய்யச் சிந்தனைகள் அதிகமாகக் கிடைக்கலாம். இல்லாவிட்டாலும் இந்தப் பொழுதும் அடுத்து வருவதும் அவன் வேறென்ன செய்ய விதிக்கப்பட்டிருக்கிறது? இதை எழுத மாட்டான் தான் வைத்தாஸ்.

உள்ளே இருந்து ஒரு நாற்காலியை எடுத்து வந்தால் வராந்தாவில் விளக்கடியில் உட்கார்ந்தபடிக்கு ஓய்வாகப் படித்துக் கொண்டிருக்கலாம்.

ஜாக்கிரதையாகக் கதவைத் திறந்து, சிறு இடைவெளியில் உடம்பைக் குறுக்கிக் கொண்டு வைத்தாஸ் நந்தினியின் ஐந்து நட்சத்திர ஓட்டல் அறைக்கு உள்ளே நுழையும்போது தலைமுறை தலைமுறையாக அனுபவித்து மரபணுவில் சேர்ந்திருக்கக் கூடிய அடிமைத்தனம் ஒரு வினாடி பரந்து உருவெடுத்துச் சூழ்ந்தது.

இது வைத்தாஸுக்கு அப்பனான மகாலிங்கய்யனுக்கு அனுபவப்பட்டதல்ல. வைத்தாஸின் தாய்வழிப் பாட்டியும் அவளுக்குப் பாட்டியும் பட்டுணர்ந்தவை.

என் மகள் பூப்படைந்திருக்கிறாள்.

உள்ளே நுழைந்த வைத்தாஸிடம் உரக்கச் சொல்லிச் சிரித்தாள் நந்தினி. அவன் என்ன மாதிரி எதிர்வினை செய்வது என்ற நிச்சயமில்லாமல் நாற்காலியைப் பற்றியபடி நின்றான்.

நந்தினி வைத்தாஸை அருகே வரச் சொன்னாள். அந்தப் பக்கம் பேசும் சிறுமியை நல்வாக்கு கூறச் சொன்னாள். வைத்தாஸும் அவளை வாழ்த்த வேணும். அவன் காது மடலில் பட டெலிபோன் ரிசீவரை வைத்தாள்.

வைத்தாஸ் கவனித்துக் கேட்க, அந்தப் பக்கம் ஒரு சிறுமி மேரியின் ஆட்டுக்குட்டி என்ற குழந்தைகள் பாடலை சிரத்தையாகப் பாடியது கேட்டது.

எமிலி பாடி முடித்ததும், அவள் உடல் நலத்தையும் கல்வியையும் பற்றி வைத்தாஸ் ஆப்ரிகான்ஸ் மொழியில் விசாரிக்க அந்த முனையில் மௌனம்.

இல்லை, அவளுக்கு ஆப்ரிகான்ஸ் தெரியாது. தென் பிராந்தியத்தில் இருந்து வந்தவள். நான் பேசுகிறேன்.

மிகச் சரளமாகத் தென் பிராந்திய மொழியில் நந்தினி தொடர, நாற்காலியோடு வெளியே வந்தான். ஒரு மணி நேரம் கழித்து நந்தினி வாசல் கதவை விரியத் திறந்து வைத்தாஸை நெருங்கி வந்தாள். ஆளரவம் ஓய்ந்த தாழ்வாரம் அது.

பக்கத்தில் அடிக்கடி கதவு திறந்து மூட மேலும் கீழும் போய்வர இயங்கும் லிப்டின் கதவுகள் மூடிய நுழைவு வாசல் இருந்தாலும், எந்த லிப்டும் நந்தினி இருக்கும் தளத்துக்கு வராததால் இங்கே இவர்களைத் தவிர யாரும் இல்லை.

நட்பு நாட்டு அதிபருக்கும் தூதுவருக்கும் இந்த நாட்டரசு அளிக்கும் அதிக பட்ச மரியாதையும் பாதுகாப்பும் அழுத்தமாகத் தெரியும் சூழல். மாடிப் படிகளை ஒட்டி சங்கடம் விளைவிக்காமல் துப்பாக்கிகளை ஓங்கிப் பிடித்தபடி நிற்கும் காவலர்களும், ஒரு சிறு குழுவாக பிரதேச ராணுவ வீரர்களும் சத்தம் எழுப்பாமல் படி வளைந்து இறங்கும் இடத்தில் நின்றதை நந்தினி கவனிக்கத் தவறவில்லை.

எமிலி கிட்டே தானே பேசிக்கிட்டிருந்தேன். ஏன் வெளியிலேயே உட்கார்ந்துட்டே?

அப்போ, வேறே யார் கூடவாவது நீ பேசினா நான் வெளியிலே இருக்கணுமா?

நாக்கு நுனி வரை வந்த கேள்வியை அடக்கியபடி நந்தினியோடு உள்ளே போனான் வைத்தாஸ்.

வேண்டாம், இந்த ராத்திரி விலகி இருக்க, அதற்கு நியாயம் கற்பிக்க இருண்டிருக்கும் பொழுதல்ல. படர்ந்து வரும் கருமை, காமமாக, காதலாக அலையடித்து அமிழ்த்தி பழைய பொழுதுகளை மறுபடி சில்லுச் சில்லாக, உடல் ஸ்பரிசமாக, வாடையாக உருவாக்கிக் கிடந்து சுகிக்கச் சொல்கிறது.

நந்தினி படுக்கையில் கால் நீட்டி, சுவரில் சாய்ந்தபடி, நாற்காலியை சுவரை ஒட்டி இறக்கி வைக்கும வைத்தாஸைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

விழுந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத திரையை யார் கிழித்து வீச வேண்டும் என்று அவளுக்குத் தெரியவில்லை.

திரைக்கு இந்தப் பக்கத்தில் எழும்பி நிற்கும் மதிப்பும் மரியாதையும் கட்டமைத்த அதிகாரமும் அன்பும் சகல வல்லமையும் சேர்ந்த பிம்பமும் பல்லக்குத் தூக்கிகளின் பணிவும், இரைஞ்சுதலும் எல்லாம் அவளுக்கு வேண்டியிருக்கிறது. அது அலுக்கும் போது திரையைக் கடந்து வைத்தாஸிடம் அவள் வருவாள். வரும் நிமிடங்கள் திரையைக் கடக்கும் கணங்களாகலாம்.

நந்தினி அவன் தோளை ஆதரவாகத் தழுவி அவனையும் கட்டிலுக்கு இழுத்தாள். டெலிபோன் டைரக்டரியில் கடைசியாகப் படித்த பெயரை நினைவுக்குக் கொண்டு வர முயன்றபடி வைத்தாஸ் அவளோடு சரிந்தான்.

எமிலி நாலு நாளாக பழைய காலத்தைக் கனவாகக் காண்கின்றாளாம். அவள் இருந்திராத காலம். அவளுக்கு ஏற்பட்டிருக்காத அனுபவங்கள் அதெல்லாம்.

அவன் அணைப்பில் இருந்தபடி நந்தினி சொன்னாள். அணைக்காத ஒற்றை விளக்கில் அவள் கண்கள் வெற்றிடத்தில் நிலை கொண்டிருப்பதை வைத்தாஸ் கண்டான்.

நந்தினி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் குரலும் மொழியும் மாறி விட்டிருந்தது. அது ஆண் குரல். இந்திய மொழிகள் சேர்ந்து நந்தினியின் குரலாக எழுந்து வர, ஒற்றை விளக்கும் அணைந்து, பொதியாக அழுத்தும் இருட்டு.

கரும்புத் தோட்டத்தில் இந்த நாள் காலை நடந்தது இது. கேட்டு கொள்ளணும்.

நான் ஆஜர் பட்டியல் சரி பார்க்க நடந்து போனேனா, என் பக்கத்தில் ஏதோ நொய்நொய் என்று சத்தம். என்னடா என்று திரும்பிப் பார்க்க ஒரு சிசு அழுது கொண்டிருந்தது. ஓரமாக நிழலில் ஒரு சாணிச் சுருணையை விரித்து அதைக் கிடத்தி விட்டு அதைப் பெற்றுப் போட்டவள் பிடுங்கின கரும்பை தோகை வெட்டிக் கொண்டிருந்தாள். கரும்பு யந்திரத்தில் போட வாகாக இதைச் சதா செய்யாவிட்டால் யந்திரம் ஓய்ந்து போய்விடும். மேனேஜர் துரை கத்துவான்.

பிறந்து நாலைந்தே மாசம் ஆன அந்த சவலைக் குழந்தை குரலைக் கேட்டதும் அந்தப் பெண்பிள்ளை கையில் எடுத்த தோகையையும் அரிவாளையும் அந்தப்படிக்கே தரையில் வைத்துவிட்டு நிழலுக்கு ஓடி வந்து குழந்தையை வாரி எடுத்தாள். முலையை எடுத்து அதுக்குக் கொடுக்க ஆரம்பிக்கிற வரைக்கும் பார்த்துக் கொண்டு ஒரு ஓரமாக நின்றேன் நான்.

அப்புறம் ஓங்கி அந்தப் பிரம்பால் அவள் முலை மேலேயே ஓங்கி அடித்தேன்.

திருட்டு முண்டே. வேலை நேரத்தில் என்ன சீராட்டிக் கொண்டு கிடக்கே? வரும்போதே இதையெல்லாம் முடிச்சிருக்கலாமில்லையா வேலைக்கு இடைஞ்சல் இல்லாமல்?

நான் சத்தம் போட அவள் என் காலில் விழுந்து குழந்தையையும் கிடத்தினாள்.

சாமி பால் பத்தாம அழுகிறான் பிள்ளை. பசி நேரம். நொய்க் கஞ்சி கொடுத்தா வாந்தி பேதியாவுது. வேறே வழி இல்லாம லயத்துலே இருக்கப்பட்ட காப்பிரிச்சி கிட்டே எல்லாம் கையேந்தி பால் பிச்சை வாங்கிட்டு இருக்கேன். இன்னிக்கு யாரும் தானம் தரலை. பிள்ளை உசிரு போகுது.

திரும்பக் குழந்தையை வாரியெடுத்த அவளை முடிக்க விடாமல் திரும்ப மார்க் காம்பிலேயே பிரம்பால் அடித்தேன். குழந்தை பிடிவாதமாகப் பிடித்த காம்பை விட்டு விட்டு வீரிடும்படி அதன் உதட்டிலும் அடி விழுந்திருக்க வேண்டும்.

அந்தப் பக்கம் தலையில் கரும்பு சுமந்து போன ஒரு கிழட்டு காப்பிரிச்சியைக் கூப்பிட்டு குழந்தையைப் பறித்து எறியச் சொன்னேன். அவள் நான் சொன்னது புரியாத பாவனையோடு அந்தச் சிசுவை வாரியெடுத்து ஓரமாக வைத்துவிட்டு அங்கே இன்னொரு காப்பிரிச்சிக்குக் கண்காட்டியபடிக்கு திரும்ப வந்தாள்.

தேவிடிச்சி போய் வேலையைப் பாருடி நாயே என்று நான் சத்தமாகச் சொல்லியபடி அடிவாங்கின பொம்பிளையை முறைக்க, அவள் எனக்குப் பின்னால் பார்த்து ரெண்டு கையையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட்டாள். நான் என்ன விஷயம் என்று பின்னால் நோக்கினேன்.

அங்கே இளம் வயசில் இன்னொரு காப்பிரிச்சி அந்தக் குழந்தையை நெஞ்சோடு அணைத்து அதுக்குப் பால் புகட்டிக் கொண்டிருந்ததைப் பார்க்க எனக்கே கண் நிறைந்து போனது.

அந்தக் கரகரப்பான ஆண் குரல் தேய்ந்து மறைய வைத்தாஸ் நந்தினியின் கையை இறுகப் பற்றிக் கொண்டான். உடலெங்கும் நடுங்கியது அவனுக்கு.

மங்கலாக விளக்கு மறுபடி எரிந்தது. மின்சார ஜெனரேட்டர் இயங்கும் ஒலி.

நாலு நாளாக கனவிலே வர்ற கரும்புத் தோட்டத்தைப் பற்றித்தான் பேசிட்டிருந்தா எமிலி. தமிழச்சி குழந்தைக்குப் பாலூட்டிய அந்த ஆப்பிரிக்கப் பெண் அவளுடைய பாட்டி என்று தெரியுமாம். முலையில் அடிச்ச, இதயமே இல்லாத அந்த அரக்கன் தான் யாருன்னு தெரியலையாம். தினசரி கனவில் வந்து தொந்தரவு கொடுக்கும் அவனுடைய தலைமுறையே நசிக்க மந்திரம் போடலாமான்னு கேட்கிறாள்.

வைத்தாஸுக்கு அந்தக் கங்காணியைத் தெரியும். தமிழும் தெலுங்கும் சரளமாகப் பேசிய அந்தக் கொடூரனின் அசுர வித்து அவன்.

வைத்தாஸ் பதில் சொல்ல நினைத்தான். மக்கள் தலைவருக்கு அந்தத் தகவல் தேவைப்படலாம். கடவுளின் சகோதரிக்கு அது நியாயம் வழங்கத் துணை செய்யும் விவரமாக இருக்கலாம். இந்த வினாடி நந்தினிக்கு அது வேண்டாம்.

அவன் தழுவிய வேகத்தில் நந்தினி நிலைகுலைந்தாள். ஆதி மனிதன் அடுத்து வந்த பெண்ணோடு முதல் முறை ஆவேசத்தோடு இணை சேர்ந்த நேரமாக அந்த இரவு ஊர்ந்தது.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன