New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 34 இரா.முருகன்

கால்டர்டேலில் இருந்து லீட்ஸ் ஒரு மணி நேரப் பயணம். அங்கே இருந்து லண்டன். அது இன்னொரு மூணு மணி நேரம். ரெண்டும் ரெண்டு கம்பெனி ரயில்களில்.

கால்டர்டேலில் ஏறி உட்காரும் ரயில் ரொம்பப் பழையது. பிரிட்டீஷ் சாம்ராஜ்யம் போன நூற்றாண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி அறுபது வருடம் அங்கே சகலமான பிரஜைகளும் நெருங்கி அடித்து உட்கார்ந்து மரப் பலகை ஆசனங்களைத் தேய்த்து, அப்புறம் திரும்ப இங்கிலாந்துக்கு மறு ஏற்றுமதி ஆன ரயில் கம்பார்ட்மெண்ட்கள் கொண்டது. அப்படித்தான் சொல்கிறார்கள். வேடிக்கையாகவோ, உண்மையோ, தெரியாது. ஒரு மணி நேரம், அரை மணி நேரம் பயணத்தில் யாருக்கும் கழிவறையைப் பயன்படுத்த வேண்டியிருக்காது என்று கருதியோ என்னமோ டாய்லெட் என்ற பகுதி சீராக இல்லாத ரயில் அது.

பிற்பகல் ரெண்டரை மணிக்கு கால்டர்டேலில் இருந்து லீட்ஸ் செல்லும் ரயிலின் மர இருக்கையில் ஏறி உட்கார்ந்ததுமே அமேயர் பாதிரியாருக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற நினைவு மெல்லத் தலை காட்டியது.

வந்திருக்காது தான். பயணத்தில் படிக்க என்று கையில் சுருட்டிப் பிடித்துக் கொண்டு வந்திருந்த தினசரிப் பத்திரிகையில் ஒரு கட்டுரை. அது நாலு பக்க இணைப்பாக வந்திருந்த சிறப்பிதழில் அச்சடித்து வந்த ஒன்று.

வீட்டில் தூசியை உறிஞ்சிக் குப்பையை எடுத்து சுத்தமாக்க ஹூவர், துணி துவைக்க வாஷிங் மெஷின், துவைத்து உலர்த்திய உடுப்பை சுருக்கம் இல்லாமல் நேர்த்தியாக்க எலக்ட்ரிக் அயர்ன் பாக்ஸ், ரொட்டி சுட டோஸ்டர் என்று வாங்கத் தூண்டும் பொருட்கள், அவை சரசமான விலையில் கிடைக்கும் இடங்கள் என்று விளம்பரங்களுக்கே ஆன சிறப்பிதழ் அது. அந்த நூதனமாக கருவிகளில் எதுவும் அமேயர் பாதிரியாருக்குத் தேவை இல்லை.

சிறப்பிதழில் வந்திருக்கும் கட்டுரை தான் அவரைப் படிக்கச் சொல்லித் தூண்டியது. கழிப்பறை கிட்டாமல் அடக்க வேண்டிய நேரங்களில் மூத்திரம் பெய்யாமல் இருப்பதற்கான வழிகள் என்று அந்தரங்கமான தலைப்பில் வந்திருக்கும் கட்டுரை அது. படம் கூடப் போட்டு, ஒன்று, இரண்டு என்று பனிரெண்டு அறிவுரைகள்.

கால் மாற்றி நிற்கவும், உட்காரவும், மறுபடி நிற்கவும். தண்ணீர், அருவி, மழை, பனிக்கட்டி, பனி பெய்த தெரு, ஈரக் குடை பற்றி நினைக்காமல் இருக்கவும். வயிற்றில் வாயு இருந்தால் மெல்ல வெளியேற்றவும். கம்பளியைப் போர்த்திக் கொள்ளவும். உடல் குலுங்காது பார்த்துக்கொள்ளவும். காமம் நிறைந்த கற்பனையில் மனதைச் செலுத்தவும். நகைச்சுவையாக எதைப் பற்றியும் நினைத்துக் கொள்ளாமல், நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்லாமல், சிரிக்காமல் இருக்கவும். தொடர்ந்து மூன்று மணி நேரம், நான்கு, ஐந்து, ஆறு மணி நேரம் வரை சிறுநீர் கழிக்காமல் இருக்கும் நேரத்தை அதிகரித்துப் பழகவும்.

எதுவுமே பாதிரியார்களுக்கு ஆனதில்லை. முக்கியமாக காமம் நிறைந்த கற்பனையில் மனதைச் செலுத்தச் சொல்லும் ஆலோசனை. மனுஷனை திரும்பவும் சகதியில் தள்ளுகிற, அதிலேயே கிடந்து இன்பம் கண்டு, ஆவியை கர்த்தருக்கு ஒப்புக் கொடுக்காமல் போகிற தீச்செயலில் ஈடுபடுத்தும் சாத்தான் அது, நடு நாயகமாக அதற்குப் போட்டிருக்கும் கோட்டு ஓவியமும் பத்திரிகையில் வெளிவரத் தகுந்ததில்லை. அணைத்துக் கொண்டு கையே ஆடையாக ஒருவரை ஒருவர் மறைத்து இருக்கிற ஆணும் பெண்ணும் மனதில் இன்னொரு பெண்ணையும் இன்னொரு ஆணையும் நினைத்தபடி கிடக்கிற வண்ணப் படம் அது. அந்தப் பக்கத்தில் கண் போகாமல் திட சித்தத்தோடு தவிர்த்தபோது டாய்லெட் போகணும் என்று வயிறு முணுமுணுக்க ஆரம்பித்தது.

ரயில் நிற்கிற மாதிரி தோன்றி அது முழுசாக மனதில் பதியும் முன்னால் திரும்ப நகர்ந்து மெல்ல வேகம் கொண்டது.

ஸ்தோத்ரம் அச்சன்.

கொஞ்சம் விதிர்விதிர்த்து அமேயர் பாதிரியார் நிமிர்ந்து பார்க்க, முசாபர் முன்னால் நின்றான்.

அவருக்கு சந்தோஷம் மனசில் நிறைவாச்சு.

இதென்ன ஹதிம் தாய் சினிமா படம் போல, நினைக்கிறதுக்கு முன்னால் வந்து குதிக்கிறாய் முசாபரே.

கேட்டபடி சுற்று முற்றும் பார்த்தார் அவர். ரயில் பெட்டியில் அவரையும், பக்கத்தில் நிற்கிற முசாபரையும் வாசல் பக்கத்து இருக்கையில் குடை, புராடஸ்டண்ட் மதப் பிரசுரங்களோடு இருந்த, கத்தரிப்பூ வர்ணப் பாவாடை அணிந்த சோனியான ஆப்பிரிக்கப் பெண்மணியும் தவிர வேறே யாரும் இல்லை.

ஆப்பிரிக்கப் பெண் இருக்கும் இடத்துக்கு வெகு அருகே, நேர் எதிரில் ஒடுக்கமான டாய்லெட் உண்டு. அங்கே அற்ப சங்கை தீர்க்கப் போனால் அவளுக்கோ தனக்கோ ரெண்டு பேருக்குமோ சங்கோசம் ஏற்படலாம்

வேண்டாம், சிறுநீர் கழிப்பது பற்றிய எந்த விதமான சிந்தனைக்கும் இப்போது இடம் இல்லை. லண்டன் போய்த் தான் அந்த உபாதை தீர்த்து வைக்கப்படும்.

ஹதிம் தாய்னா என்ன அச்சன்?

முசாபர் கேட்டபடியே எதிர் இருக்கையில் உட்கார்ந்து, மேலே போட்டிருந்த ஓவர்கோட்டைக் கழற்றி அடுத்த இருக்கையில் வீசினான்.

சின்ன வயசிலே நான் பார்த்த சினிமா.

இதை மட்டும் சொல்லி விஷயத்தைக் கடந்து போவதில் அவசரம் காட்டினார் அமேயர் பாதிரியார். பேச்சை மாற்றவோ என்னமோ, முசாபர் கால்டர்டேல் தாண்டி இந்த ரயிலில், அதுவும் அவர் இருக்கும் ரயில் பெட்டியில் ஏறி நொடியில் தலை காட்டிய மாய வினோதத்தைப் பற்றி ஆர்வத்தோடு விசாரித்தார் அவர்.

சினிமா போன்ற போதைப் பொருட்களை விலக்கச் சொல்லி அவர் வாரந் தோறும் ஞாயிறன்று காலைப் பிரார்த்தனை நேரத்தில் குரிசுப்பள்ளிக்கு வந்த விசுவாசிகள் கவனமாகக் கேட்டு அதன்படி நடந்து, தீர்க்க காலம் ஆசீர்வதிக்கப்பட பிரசங்கம் செய்தவர். அது போன வாரம் வரை நடந்த விஷயம்.

உங்களை எப்படி தனியா லண்டன் போக விட்டுட்டு நான் வேலையைப் பார்த்துட்டு இருக்கறது அச்சா? இங்கே பிராட்போர்டில் ஒரு சிநேகிதன் தெரிசாவின் மீனும் வறுவலும் விற்கும் கடையை எடுத்து நடத்த விருப்பம்னு சொன்னான். பிராட்போர்ட் காஜியாரை உங்களுக்குத் தெரியுமே. அவரோட இளைய சகோதரன் தான். சச்சரவும் சங்கடமும் தராத பேர்வழி.

முசாபர் மனசுக்குத் திருப்தியான காரியம் செய்த களிப்பில் கண்கள் பளபளக்கச் சொன்னான். அவனைப் பார்க்க அமேயர் பாதிரியாருக்கு ஏனோ அனுதாபமும், பிரியமும் சேர்ந்து எழுந்து வந்தன. நேற்று சாயந்திரம் வழியில் வைத்துப் பார்த்தபோது லண்டன் பயணம் பற்றிச் சொன்னதை நினைவு வைத்து வந்திருக்கிறான் பாவம்.

மந்தையில் இல்லாத ஆட்டுக் குட்டியானால் என்ன, நேசம் வைக்க மனசு மட்டும் போதுமே. நல்ல சிந்தனை கொடுத்த கர்த்தர் வாழ்த்தப்படட்டும்.

பாதிரியார் குரிசு வரைந்தபடி முசாபரைப் பார்த்துச் சிரித்தார்.

ஆமா, நான் என்ன வேலையா அங்கே போறேன், எத்தனை நாள் தங்குவேன் இதெல்லாம் தெரியாமல் நீயும் பயணம் வச்சது என்ன, முசாபரே?

அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை அச்சா. பாருங்க, நான் துணிமணி கூட எடுத்து வரலே. எல்லாம் அங்கே சமாளிச்சுப்பேன். நண்பர்கள் எதுக்கு இருக்காங்க? தெரிசா இல்லாம போறதுதான் ஒரே குறை. அவ லண்டனை எவ்வளவு அணு அணுவா ரசிப்பா தெரியுமா? நீங்கதான் விசா வாங்க நாம் போனபோது பார்த்தீங்களே. தெரிசாவுக்கு உங்களைப் பிடிக்கும். உங்களுக்கு ஒரு உதவின்னா அவள் செய்யணும். இல்லே நான் செய்யணும். செய்யறேனே.

முசாபர் மிக எளிதாக இந்த உறவுச் சமன்பாட்டை விளக்கிவிட்டு ரயில் ஜன்னல் வழியே பராக்குப் பார்க்கத் தொடங்கினான்.

இவன் மட்டும் கத்தோலிக்கனாக இருந்தால் குரிசுப் பள்ளியில் அவனுடைய நல்ல குணங்களை, வயிறு சரியாக இயங்கிய ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று நிகழ்த்தும் பிரசங்கத்தில் எடுத்துச் சொல்லி அவனுக்காகப் பிரார்த்தித்து இருப்பார்.

இப்போதும் அவனுக்காக மன்றாட என்ன தடை? எதுக்கு மன்றாட? அவன் மனைவியைப் பிரிந்து கிடக்கிற வாதனைக்காக. இல்லறத்தில் இருக்கிறவர்களுக்குப் பெரிய துயரமில்லையா அது? அவர் அங்கி உடுத்தி வந்தாலும் அவருக்கும் இதயம் இருக்கிறதே, அந்தத் துக்கம் விளங்காதா என்ன?

நீ இப்படி தெரிசா நினைப்பும் அந்தப் பொண்ணோட காரியங்களைச் செய்யறதுமா எத்தனை நாள் இன்னும் இருக்கப் போறே? ஃபிஷ் யண்ட் சிப் கடையைத் திறக்கறது இருக்கட்டும், உன்னோட மூலைக் கடை, மளிகை சாமானும், தட்டு முட்டுமா நல்ல வித்துட்டிருந்தியே. அதை இந்தியா போறேன்னு அப்படியே விட்டுட்டியே. தப்பு இல்லியா?

அமேயர் பாதிரியார் முசாபரைக் கேட்டார்.

ரயில் பயணத்தில் மனம் லேசாகிறது. குரிசுப் பள்ளியிலோ, கால்டர்டேல் வீதியிலோ வைத்து முசாபரோடு இதைக் கதைக்க அமேயர் பாதிரியார் குறைந்தது நாலு தடவையாவது மனசில் ஒத்திகை பார்க்க வேண்டி வரும். சத்தமிட்டு, மரப் பலகைகள் ஒட்டு மொத்தமாகக் கடகடக்க ஓடிக் கொண்டிருக்கும் ரயிலின் இயக்கமும், ஆளொழிந்த ரயில் பெட்டியும் எல்லா இறுக்கத்தையும் தளர்த்தி விடுகிறது. ரயில் ஓடும் சீரான சக்கரச் சத்தத்தோடு இசைந்து பேசவும், கேட்கவும் சுவாரசியமாகவும் இருப்பதாக அவர் நினைத்தார்.

மளிகைக் கடையைச் சீக்கிரம் திறக்க சந்தர்ப்பம் வந்து கொண்டிருக்கு அச்சன்.

முசாபர் சொன்ன போது கொஞ்சம் போல் அதில் சோகம் தட்டுப் பட்டதை அமேயர் பாதிரியார் கவனிக்கத் தவறவில்லை.

மூன்று தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிட முசாபரின் பாட்டனார் பணம் சேர்த்து வைத்துவிட்டுப் போயிருக்கிறார். யுத்த காலத்தில் இந்தியாவிலிருந்து கிளம்பி வந்த சிறு வியாபாரி அவர் என்பதும் கால்டர்டேலில் நீண்ட காலம் வசிக்கும் குடும்பங்களில் இவர்களும் உண்டு என்பதும் பூசை நேரம் முடிந்த அரட்டைக் கச்சேரிகளின் போது பாதிரியார் காதிலும் விழுந்ததுண்டு.

அதெல்லாம் வராமலேயே, முசாபர் ஓர் ஆட்டுக் குட்டியாக, இந்த பிரஞ்சுக்கார மேய்ப்பனை, மதம் வேறே என்ற கருதலின்றி வரிந்து கொண்டு கூடவே வருகிறான். தெரிசா கோவிலில் பட்ட குடும்பம் என்பது இந்த உறவை இன்னும் உன்னதப்படுத்தி இருக்கிறது. போய் வந்த இந்தியப் பயணம் அதை இன்னும் பலமாக்கி விட்டது.

லீட்ஸ் போய்ச் சேர இன்னும் முப்பது நிமிஷமாவது ஆகும் அச்சா. அதுவரை என் புராணத்தை கேட்க உங்களுக்குப் பொறுமை உண்டா?

அழகான உச்சரிப்பில் பிபிசி செய்தி வாசிக்கிற அல்லது அரசியல்வாதியைக் கழுத்தில் வார்த்தைக் கத்தி வைத்து நேர்காணல் நடத்தும் ஒளிபரப்பாளன் போன்ற வசீகரமான தோரணைகளோடு முசாபர் கேட்க, அமேயர் பாதிரியார் யோசிக்காமல், அவனிடம் சொன்னார் – சொல்லு.

அவருக்கு ஏதாவது பேச வேண்டும். அல்லது கேட்க வேண்டும். அல்லது அந்த புராட்டஸ்டண்ட் கிறிஸ்துவப் பெண்மணி இறங்கிப் போக வேண்டும். அவள் வண்டி ஏறும்போதே அமேயர் பாதிரியாரை இளக்காரத்தோடல்லவா பார்த்தாள்? அவர் வாடிகனுக்கு இறை ஊழியம் செய்யப் புறப்படப் போகிறார் என்று தெரிந்தால் அவளுக்கு மரியாதை வருமோ? போப்பையே மதிக்காத கூட்டம் இல்லையோ அவளுடையது? அவளுக்கு முன்னால் நடந்து போய்க் கதவு திறந்து கழிப்பறையைப் பயன்படுத்துவது போல தரங்கெட்ட ஒரு செயல் இருக்க முடியுமா? வாடிகனில் கழிப்பறைகள் எப்படி இருக்கும்? வேண்டாம் அது.

டிக்கட் பரிசோதகரும், ரயிலின் ஆட்டத்தோடு சேர்ந்து ஆடி, அதிகமாக கொனஷ்டை பண்ணிக் கொண்டு ஒரு இளம் பெண்ணும் ரயில் பெட்டிக்குள் வந்துன்அந்த ஆப்பிரிக்கப் பெண்ணுக்கு எதிரில் நின்றார்கள். டிக்கெட் பரிசோதரோடு வந்த பெண் கழுத்தில் மாட்டியிருந்த திறந்த பெட்டியில் குளிர் பானங்களும், பியர் தகர உருளைகளும் இருந்ததை இங்கே இருந்தே பார்த்த முசாபிர், குளிர வைத்த பெல்ஜியம் பியர் கிடைக்கும் என்றான் உற்சாகமாக.

வேண்டாம், அதை நினைத்தால் அமேயர் பாதிரியாருக்கு இன்னும் சிரமமாகப் போகும். பாழும் வயிறும் சிறுநீரகமும் இப்படியா பழி வாங்கும்?

டிக்கெட் பரிசோதகர் ஏதோ சொல்லித் தலையை அப்படியும் இப்படியுமாக ஆட்டினார். பானங்களைச் சுமந்து வந்த இளம்பெண் சுவாரசியமான காட்சியைக் காணும் ஆர்வத்தோடு பெட்டியில் இருந்து ஒரு சூயிங் கம்மையோ வேறேதோ ஒன்றையோ காகிதம் உரித்துக் கீழே போட்டு, வாயில் இட்டுச் சவைக்க ஆரம்பித்தாள்.

அவளை நோக்கி, பியரைக் கொடுத்துட்டு போ என்று சைகை செய்தான் முசாபர், பெண்டாட்டிக்குத் தங்கை, அக்கா என்று மச்சினியிடம் உரிமை எடுத்துக் கொள்கிற மாதிரி. அவளும், இதோ வரேன் கண்ணா, எனக்காகக் கொஞ்சம் பொறு என்ற தோதில் ஒரு முத்தத்தை முசாபரை நோக்கிப் பறக்க விட, அமேயர் பாதிரியார் எல்லோருக்கும் நல்ல புத்தி வர வேண்டிக் கொண்டிருந்தபோது கடந்து போன பெரிய வாய்க்காலைப் கண்டார்.

வேண்டவே வேண்டாம், இனியும் நேரம் கடத்த முடியாது. புராட்டஸ்டண்ட் கிழவிகள், முத்தம் பறக்க விடும் யுவதிகள் சேரும் அதே நரகத்துக்குப் போகட்டும். அவர்களைச் சங்கடப்படுத்துவது ஒன்றும் பாவ காரியமில்லை.

அவர் பக்கத்தில் தான் ஏசு இருக்கிறார். எல்லாம் ஜெயம் உனக்கு என்கிறார். டிக்கெட் பரிசோதகர் ஒரு தடவை மென்மையாக, மற்ற முறை உரக்க, மறுபடி மென்மையாக என்று மாற்றி மாற்றிச் சொல்லி புராட்டஸ்டண்ட் பெண்மணி பக்கம் அசையாமல் நிற்க அவள் எல்லோரையும் திட்டிக் கொண்டும், திரும்பிப் பார்த்து கத்தோலிக்க அமேயர் பாதிரியாரைத் திடமாகச் சபித்துக் கொண்டும், கீதம் ஒன்றை அபசுவரமும் குரல் பிசிறலுமாகப் பாடிக் கொண்டும் கம்பார்ட்மெண்டை விட்டு இறங்கிப் போனாள்.

உயர்நிலைப் பள்ளியில் எனக்கு நாலு வகுப்பு கீழே படிச்சிட்டிருந்தா தெரிசா. ரொம்ப அழகான ஆட்டுக்குட்டி அவ அப்போ. அப்பவே அவ மேல் நேசமாச்சு.

முசாபர் பழைய சினிமாப் படத்தில் வசனம் சொன்ன பாணியில் பேசிக் கொண்டிருந்தான்., ஹதிம் தாய் அல்லாத பழைய திரைப்படம் அது. பிரஞ்சில் இருப்பதால் அந்த மொழியில் காதலிப்பார்கள். பிரஞ்சில் சிறுநீர் கழிப்பார்கள்.

போதும், இப்போது நடக்கலாம். எழுந்து நின்றார் அமேயர் பாதிரியார்.

அவர் முசாபரிடம் தன்னை மன்னிக்கும்படி இரைஞ்சி, டாய்லெட்டுக்கு நடக்க, டிக்கெட் பரிசோதகர் இவர்கள் இருக்கைகளை நோக்கி வந்தார். கூடவே அந்த பியர் விற்கும் பெண்ணும்.

கிளம்பிய வேகத்தில் இருக்கைக்குத் திரும்பினார் அமேயர் பாதிரியார். டிக்கெட்டைப் பரிசோதித்த பின்னர் தான் மற்றதெல்லாம். சிறுநீர் கழிப்பதை நினைக்கக் கூடாது. வேறே எதை நினைப்பது?

ஏன், நினைத்துச் சலிக்க அந்த டயோசிஸ் கடிதமே போதுமே. அமேயர் பாதிரியார் அவர் மேல் உள்ள குற்றச்சாட்டுகளுக்குத் தக்க விதத்தில் விளக்கம் அளித்துத் தான் குற்றமற்றவர் என்று ஒரு விவரமான கடிதம் எழுதி, அது ஏற்றுக் கொள்ளப் பட்டதும் வாடிகன் போகலாம் என்று அறிவுறுத்தி வந்த கடிதம்.

வேற்று மத வளர்ச்சிக்கு வெளிநாடான இந்தியாவில் உழைத்தது, இறை ஊழியத்தை உள்ளூரில் புறக்கணித்து சுற்றித் திரிந்தது என்று அவர் செய்யாத குற்றம் எல்லாம் பட்டியல் போட்டதோடு, ஆடும் பறவை என்ற சாத்தானின் மயக்கும் உருவப் பாவத்தை இங்கே கொண்டு வந்து ஊரைப் பயமுறுத்தியதும் அவர் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு.

அதற்குத் தகுந்த பதில் எழுத வாடிகனிலேயே இருக்கும் தெக்கே பரம்பில் பாதிரியார் உதவி செய்ய இருக்கிறார். மிகப் பெரிய, நூறு பக்கம் வரை வரும் கடிதத்தை அமேயர் பாதிரியார் டயோசிஸுக்கு சமர்ப்பிப்பார்.

அடுத்த மாதம் அவர் வாடிகனுக்குப் போகும் போது குற்றம் சொன்னவர்களே வந்து மரியாதை செய்து வழியனுப்புவார்கள். வாடிகனில் அவருக்கு, இதோ எதிரில் நிற்கும் பெண் சுமந்து வந்திருப்பவை போன்றா நல்ல குளிர் பானங்கள் தடையின்றிக் கிட்டும். வேண்டாம். இந்தாருங்கள் என் டிக்கட்.

பரிசோதகர் டிக்கட்டைப் பரிசோதிக்காமலே இறங்கி விட்டதில் அவருக்கு மகா ஏமாற்றம். ஒரு குளிர் பானமும் ஒரு தகரக் குவளை லாகர் பியரும் என்று முசாபர் கேட்டு வாங்கிக் கொண்டிருக்க, அமேயர் பாதிரியார் கழிப்பறைக்கு நடந்தார்.

அங்கே தாழ்ப்பாள் போட்டிருக்கக் கூடாது. உள்ளே எப்படி இருந்தாலும் சரிதான். பாதிரியார் உடுப்பு நனையாமல் ஜாக்கிரதையாக நிற்க வேண்டும்.

அவர் வேண்டுதல் எல்லாம் செவிசாய்க்கப்பட, வெளியே வந்தபோது அவரை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்த முசாபர் குளிர் பானத்தை அவரிடம் நீட்டினான்.
th
தெரிசாவின் பாட்டி, இந்தியப் பெயர் வரும், தீப்ஜோத் என்றோ என்னமோ, அந்தக் கிழவி என்னை படி ஏற்றாமல் விரட்டி விட்டாள். அது நான் இவளைப் பெண் கேட்டுப் போனபோது.

அவன் பழைய நினைவுகளில் ஆழ்ந்து பியரை உறிஞ்சிக் கொண்டே பேசினான். குளிர்பானத்தை இப்போது குடித்து அது இன்னும் அரை மணி நேரத்தில் நெளிய வைக்கும் என்று பட, அமேயர் பாதிரியார், அதையும் முசாபர் பக்கத்தில் வைத்தார்.

மெட்காப் இறந்து அவனைப் புதைத்த கல்லறை ஈரம் உலர்வதற்குள் நான் தெரிசாவை மணம் செய்து கொண்டேன்.

அவன் பெருமையோடு சொல்ல, அமேயர் பாதிரியாருக்கு அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. என்னதான் ஆப்ரகாமிய வேரில் வருகிறவன் என்றாலும், அமேயர் பாதிரியாரின் கோவிலில் பூசை வைத்துப் பரலோகம் போன ஒருத்தனின் நினைவுக்கு மரியாதை இல்லை, இந்த முசாபிர் சொன்னது.

அவர் அமைதியாக ரயில் ஜன்னலுக்கு வெளியே தடாகங்களையும், வாய்க்கால்களையும் எதிர்பார்த்து இருக்க, வெறும் தரையும் கட்டிடங்களின் நெரிசலுமாக லீட்ஸ் வந்து விட்டது.

அவருடைய தோல்பையையும் உரிமையோடு எடுத்துத் தோள்பட்டையில் மாட்டிக் கொண்டு முசாபர் கேட்டான் –

அச்சா, நான் உங்க கிட்டே பாவமன்னிப்பு கேட்கலாமா?

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன