தொம்பங் கூத்தாடி அநாயாசமாக இரண்டு மூங்கில்களுக்கு நடுவே ஒரு பனை உயரத்தில் கட்டிய தாம்புக் கயிற்றில் நடந்தான். பிடி வழுக்காமல் கம்பம் ஏறி இறங்கினான். ஒரு கழியை விட்டு மற்றதற்கு நொடியில் தாவினான்.
பார்த்துக் கொண்டிருந்த திருடன் தொழில் கணக்கு போட்டான் – இவனைக் கூடச் சேர்த்துக் கொண்டு அரண்மனையில் திருடப் போனால் கை நிறைய, முதுகில் மூட்டை நிறையக் கொண்டு வரலாமே.
ஆளுக்குப் பாதி. ஒப்பந்தம் ஆனது. நடு ராத்திரி. அரண்மனை மதிலுக்கு அந்தப் பக்கம் இருட்டில் நின்றார்கள் ரெண்டு பேரும்.
‘விரசா ஆகட்டும்.. தாவி உள்ளே போ… இந்தச் சாவிக் கொத்து எந்தப் பூட்டையும் திறக்கும்…’
திருடன் சாவிக் கொத்தை நீட்டினான்.
தொம்பங் கூத்தாடி யாரையோ மும்முரமாகத் தேடிக் கொண்டிருந்தான்.
’நம்ப சோக்ராதான். பையன் திம்திம்முனு கொட்டினா நான் சரசரன்னு சுவர் ஏறிடுவேன்’.
டெக்னாலஜி நம்மை எந்த மதிலையும் கடந்து வென்று வரும் தொம்பங் கூத்தாடிகளாக்கி இருக்கிறது. பவர் பாயிண்ட் பிரசெண்டேஷன் ஒரு ஸ்லைடாவது இருந்தால் தான் பேச்சு வருகிறது. Death by power point – நான் அடிக்கடி செய்வது.
நேற்றும் செய்ய ஆயத்தமானேன்.
‘சார், ப்ரஜெக்டர் ஏதோ ப்ராப்ளம்.. மாத்தித் தரேன்’.
போனவர் வரவே இல்லை.
பார்த்தேன். பின்னால் வெள்ளை அக்ரலிக் பலகை. மார்க்கர் பேனாக்கள். முழுக்க ஒயிட் போர்டில் எழுதி விளக்கி, வரைந்து விவரம் தந்து பவர் பாயிண்டே இல்லாமல் வகுப்பு. சேம்பர் மியூசிக் கச்சேரி செய்த மாதிரி மனதுக்கு நிறைவாக இருந்தது.
ஒயிட் போர்டும், மார்க்கர் பேனாவும் தான் எதற்கு? சுற்றுச் சூழலை மாசு படுத்தும் இனங்கள் அல்லவோ இரண்டும்?
எல்லா நிறுவனங்களும் பள்ளி வகுப்பு போல கரும்பலகைக்கும் சாக்பீஸுக்கும் மாறினால் இன்னும் அந்நியோன்யமாக இருக்கும்.
பாடம் நடத்திக் கொண்டே, சாக்பீஸை உயர்த்திப் பிடித்து, கேரம் போர்ட் காயை அடிப்பது போல் சாக்பீஸின் தலையில் சுண்டி அந்தத் துண்டு கடைசி வரிசையில் பேசிக் கொண்டிருந்த சோமசுந்தரம் மேல் சரியாகப் போய் விழ, ‘பாடத்தைக் கவனி’ என்று கண்டித்தபடி க்வாட்ராடிக் ஈக்வேஷனைத் தொடர்ந்த எங்க ப்ரபசர் மாதிரி நானும் ஒரு நிமிடமாவது மாற ஆசைதான்.
பவர்பாய்ண்ட் திரையில் பலகதை பேச்சில்
உவப்பர் உறங்குவோர் ஓர்மை அவைநீங்கிப்
பாக்கள் இயற்றும் பழைய நினைவுவரும்
சாக்பீஸ் அடிகொள் படிப்பு.