(பகவதியின் நாட்குறிப்பில் இருந்து) 2 ஏப்ரல் 1901 – பங்குனி 20 செவ்வாய்க்கிழமை
யாரோடயும் விரோதம் பாராட்டாமல், பிரியத்தோடு எல்லாரையும் அரவணைச்சு இனி இருக்கப் போகிற காலம் எல்லாம் கழியட்டும். பத்து நாளாக நான் டயரி எழுதலே. பேனாவைப் பிடிக்க கை நடுங்கறது. பத்து நாள் கழிச்சு இன்னிக்குத்தான் சாதாரணமா சாப்பிட்டேன். கொஞ்சமா பேசினேன். எழுதறேன்.
தேர்த் திருவிழா நடக்கப் போகிற நேரம் இது. பேசாம, யாருக்கோ எங்கேயோ ஏதோ நடக்கறதுன்னு நான் ஓரமாப் போய் உட்காரலாமா? நான் இங்கே வந்து பார்த்தாகிற இருபத்தஞ்சாவது தேராக்கும் இது. காலம் தான் எப்படி இந்த மேனிக்கு விரசா ஓடறது. புடவை கூட சரியாகக் கட்டத் தெரியாம மரப்பாச்சிக்குத் துணி சுத்தின மாதிரி தத்துப்பித்துன்னு சுத்திண்டு இவர் கையைப் பிடிச்சுண்டு இங்கே வந்து இத்தனை வருஷம் ஓடியே போனது.
லண்டன்லே சக்ரவர்த்தினி விக்தோரியாம்மை இந்த வருஷம் பிறந்ததுமே ஸ்வர்க்கத்துக்குப் புறப்பட்டுப் போயாச்சு. அது ஒரு பெரிய விசனம் என்கிறதாலே இந்த வருஷம் சகல உல்சவமும், பண்டிகையும் அளவோட குதிச்சுக் கூத்தாடிக் கொண்டாடணும்னு எல்லாரும் சொன்னாலும், மகராணி போனது கல்யாணச் சாவு ஆச்சே, அம்பதா அறுபதா, சொளையா தொண்ணூறு வயசு இல்லையோ அவளுக்கு.
என்னிட்டு, எந்தக் கொண்டாட்டத்திலே பாக்கி வச்சாலும் அவளுக்கு அவமரியாதை செய்யறது ஆகும்னு ஒரு கட்சி. இவர் எல்லாம் அந்தப் படியானவர் தான். நானும் தான். சோபானம் சோபானம்னு பாடி பரவசமாகணும். அப்படியான மனுஷி. என்னமா வச்சிண்டிருந்தா ஜனங்களை. இன்னும் கொஞ்சம் நாள் இருந்தா நம்மோட இந்த பாரத தேசத்துக்கும் நல்லது பண்ணியிருப்பாளா இருக்கும்.
ஆக, புறப்பட்டுப் போன விக்டோரியாம்மைக்கு ஸ்வர்க்கம் என்னென்னிக்கும் சித்தியாக மனசோட தொழுது, உல்சவக் கொடி ஏத்தியாச்சு. இங்கேயானா, அதை துவஜஸ்தம்பத்திலே சாமி கொடி பறக்க விடறதுங்கறா. ஒவ்வொரு பிரதேசத்திலேயும் ஒரு பேர்.
எல்லாப் பண்டிகை நேரத்திலேயும், எட்வர்ட் துரை அடுத்த சக்ரவர்த்தியானதையும் சேர்த்துக் கொண்டாடணும்னு சிலபேர் சொன்னாலும், ராணியம்மா பேரும் புகழும் இவருக்கு வர, இன்னும் நாற்பது வருஷமாகலாம். அதுவரை நான் இருப்பேனோ என்னமோ. அப்புறம், தேர் சுப்பிரமணிய சுவாமிக்கா? ஏழாமன் எட்வர்ட் துரைக்கா?
ஏழாமன்னு சொன்னா, ஏழாவது. எட்வர்ட் தானே அவர்? துரை பெயர் தப்பா எழுதிட்டேனோ. போகட்டும், ஒரு வெள்ளைக்காரர். விக்டோரியா அம்மைக்கு புத்ரன். அது போதும். மத்த ஓர்மைப் பிசகெல்லாம் மறந்து போயிடட்டும்.
எழுதணும்னு உக்காந்ததும் கருத்த சாயபுவோட கூத்து தான் அதி முக்கியமா ஓடோடி நினைவிலே வருது. கருத்த சாயபுன்னு கடையிலே ஊழியம் பண்றவா சொல்லிக் கேட்டுக் கேட்டு பெயர் அப்படித்தான் படிஞ்சிருக்கு மனசுலே.
பெயர் எல்லாம் சரியாச் சொல்லணும்னு இவர் சொல்வார். புகையிலைக் கடை பாகஸ்தர் சுலைமான் ராவுத்தர், கருத்தான் ராவுத்தர்னு ரெண்டு பேர், அதிலே கருத்தான் எனப்பட்டவருக்கு அவர் பெயரே சமயத்துலே மனசிலே நிக்காதாம். பெயரை மாற்றி வேறே சொல்லிடுவாராம் சமயத்துலே. அவர் போன வாரம் பெண்டாட்டி நூருஜகன் பீவியைப் பட்டணம் பார்க்க ரயில்லே கூட்டி வந்துட்டு சமுத்திரக் கரையிலே உட்கார வச்சுட்டு கடைக்குப் புறப்பட்டு வந்துட்டாராம். மிட்டாய் வாங்கிண்டு வரேன்னு சொல்லிட்டு கிளம்பியவர். மிட்டாய்க்கடை வாசல்லே யாரோ சிநேகிதனைப் பார்த்து வந்த காரியம் மறந்து பேசிட்டே இருந்துட்டாராம். அவர் கூட அவரோட சாரட்லேயே கடைக்கும் போயாச்சாம் மனுஷர். பாவம் அந்தப் பொம்மனாட்டி இனியும் புருஷனோட கோவிலைக் காணணும் குளத்தைக் காணணும்னு இறங்குவான்னு தோணலை.
கருத்த ராவுத்தர் இதை எல்லாம் ஒண்ணு விடாமல் எழுதி இவருக்குக் கடிதாசு போட்டிருந்தார். இவர் படிச்சுட்டு ஓன்னு சோடா பாட்டில் உடைச்ச மாதிரி சிரிச்சார். ஆமா, அதை ஏன் கேக்கணும், இங்கே போன மாசம் சோடான்னு ஒரு திரவத்தை கண்ணாடி குப்பியிலே அடைச்சு, தக்கை வச்சு மூடி, அதை கடையிலே எல்லாம் விக்க ஆரம்பிச்சு ஏக பிரபலம். புகையிலைக் கடையிலே கூட அந்த பாட்டிலை எல்லாம் நெட்டக்குத்தலா நிறுத்தி வச்சு, ரெண்டு சல்லிக்கு விற்க ஆரம்பிச்சிருக்கு. குடிச்சு முடிச்சு பொறையேறிண்டே குப்பியைத் திருப்பிக் கொடுத்துடணும்.
குண்டு குண்டா ரெண்டு ராயர்கள் வேலாயுதஸ்வாமி கோவில் தெருவிலே ஒரு வீடு பிடிச்சு இதுக்குன்னு யந்திரத்தை பிரதிஷ்டை பண்ணி ராப்பகலா கிணத்துத் தண்ணியை எறச்சு, அதிலே உப்பு, சக்கரை, சாயம்னு ஏதெல்லாமோ போட்டு வாயுவை நிரப்பி ஓஹோன்னு விக்கறா. எனக்கு ஒண்ணு கடை எடுத்து வச்சுட்டு வரும்போது கொண்டு வந்து கொடுத்தார். அதை என்னமோ நறுவுசு வேலை பண்ணி திறந்தும் கொடுத்தார். புறங்கையிலே சாயமும் சக்கரையும் ஒட்ட நானும் கொஞ்சம் பானம் பண்ணினேன். சத்தம் இருக்கற அளவுக்கு சரக்கு நயம் இல்லை.
இவர் சிரிக்கறது அந்த சோடா குப்பி திறந்த மாதிரித் தான் இருக்கும். சண்டை போட்டா என்ன? மனுஷர் நயத்துக்கும் என்ன குறைச்சல். ஆம்படையான், பொண்டாட்டின்னா மனஸ்தாபமும், மனம் விட்டுப் பேசறதும் சகஜமாச்சே. இல்லாமலா, சரி இது எதுக்கு. கருத்தான் ராவுத்தர் கதை இருக்கு பாதியிலே விட்டுட்டேனே.
இவர் சிரிச்சபடிக்கு கருத்தான் ராவுத்தர் போட்ட லெட்டரைக் கொடுத்து என்னையும் படிக்கச் சொன்னார். என்னத்தைப் படிக்க? பெட்டி வண்டி வரிசையாப் போகிற மாதிரி கூட்டெழுத்தா இருக்கு எல்லாம். அதைப் படிச்சுப் புரிஞ்சுக்க கஷ்டப் படறதை விட இவர் கூடச் சேர்ந்து சிரிச்சுட்டுப் போகலாம். அதுவும் பத்து நாள் உம்முனு உத்தரத்தைப் பாத்துண்டு பிரமை பிடிச்ச மாதிரி உக்காந்துட்டு. அர்த்தமே இல்லே. ஆனா தப்பு கிடையாது.
ராவுத்தரை பத்தி என்னத்தைச் சொல்லிச் சிரிக்க. பாவம் அந்தப் பொம்மனாட்டி எப்படி துடிச்சிருப்பான்னு கேட்டேன். இவரானா அதெல்லாம் இல்லைங்கறார். கருத்தான் ராவுத்தரோட பீவி பட்டணத்துப் பொண்ணு தானாம். கல்யாணம் முடிஞ்சுதான் பெங்களூர்லே புக்காத்துக்குப் போனாளாம். ஒரு மணி நேரத்திலே சமுத்ரக் கரையிலே இருந்து தைரியமா, தன்னந்தனியா ஜட்கா பிடிச்சு வந்து சேர்ந்துட்டாளாம். மிடுமிடுக்கியாக்கும் அந்தப் பொண்ணு. பார்க்கணும் அவளை.
சரி, கோவில்லே உல்சவக் கொடி ஏத்தினது எழுதியாச்சு. அதுக்கு முந்தி, போன வாரம் எழுத விட்டுப் போன ஒரு விஷயம் இருக்கு.
இங்கே சிவன் கோவில்லே ஓதுவார் ஒருத்தர், காளையார்கோவில்லே இருந்து வந்தார்னு சொன்னா எல்லோரும். ஊர்ப் பெயரே காளையார்கோவில். அங்கே கோவில். அதை எப்படிப் பிசகு நேராம சொல்றதுன்னு இவரைக் கேட்டேன். காளையார்கோவில் கோவில்லே இருந்த ஓதுவார்னு சொல்லணுமாம். சரி அந்த மாதிரி ஓதுவார். என்னாக்க, தேவாரம் பாடி சுவாமியை பரவசப்படுத்தறவர், இங்கே கோவில்லே இருந்து ஊழியம் பண்ணச் சொல்லி எல்லோரும் கேட்டுண்டு காளையார்கோவிலை விட இன்னும் ரெண்டு ரூபா மாசாமாசம் கூடுதலாகவே தரலாம்னு சொல்லி அவரை இங்கே வரவழைச்சு சேர்த்தானது.
கருத்து மெலிஞ்ச மனுஷர். ஒரு ஜாடைக்கு எங்க கிட்டாவய்யன் அண்ணா மாதிரி இருக்காராக்கும். கிட்டா அண்ணா மாதிரி கணீர்னு குரல். முன்னே எல்லாம் விருச்சிக மாசம் பிறக்கும் போது மூணு அண்ணாவும் சபரிமலைக்கு விரதம் இருக்க மாலை போடறபோது கிட்டா அண்ணா இப்படித் தான் குரலை உச்சாணிக் கொப்புக்கு உசத்தி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பான்னு ராகமா சரணம் விளிப்பார். கேட்டு அப்படியே கரைஞ்சு போய் நிப்போம். நானும் நாணிக் குட்டியும் தான். கிட்டா அண்ணா குரிசைப் பிடிச்சுண்டு கண்ணூர்லே சாப்பாட்டுக் கடை போட்டு வேறே என்னமோ பாடிண்டிருக்கார். நாணி பெருந்தன்கோட்டுக்கு கல்யாணம் கழிச்சுப் போனவள் போனவள் தான்.
கிட்டாண்ணா குரல்லே இந்த காளையார்கோவில் ஓதுவார் தேவாரம் பாடினது மனசுக்கு இதமா இருந்தது. இது சாமி சந்நிதியில் சாயரட்சை தீபாராதனை நேரத்துலே ஒரு அஞ்சு நிமிஷம் பாடறது இல்லே. பிரகாரத்திலே ஓரமா, நந்திக்குப் பக்கம் உட்கார்ந்து கையிலே சின்னதா தாளம் வச்சுத் தட்டியபடிக்கு மனசு விட்டுப் பாடறது.
நேத்து சாயரட்சை தீபாராதனை முடிஞ்சு, துணி விரிச்சு உட்கார்ந்து, கையிலே தாளம் தட்டிண்டு அவர் பாடினார் –
எல்லா பிறப்பும் பிறந்து இளைச்சுப் போனேன் எம்பெருமானே
கேட்டு கண்ணுலே ஜலம் வராம யாராவது இருந்தா அவாவா காது கேட்காமப் போனவான்னு தீர்மானம்.
அடுத்தாப்பலே, அவர் பித்தா, பெருமானே, அத்தான்னு பாடிண்டிருந்த நேரத்திலே சுகுணவல்லி கெக்கென்னு சிரிச்சுட்டா. அதான் அந்தக் கொழும்புக்காரிப் பெண்குட்டி. கறுப்பா, தலை நிறைய தலைமயிரோட என்ன அழகா இருக்கா. இன்னிக்கு இருந்தா பதினைஞ்சு வயசு இருக்குமா?
ஆறு மாசம் முந்தி அவளும் அவ அம்மா அமிர்தவல்லியும் இங்கே வந்து சேர்ந்த கோலாகலத்தை தீபாவளி நேரத்திலே ஒரு நாள் எழுதியாச்சு. அமிர்தவல்லி இங்கே நம்ம மோகனவல்லிக்கு ஒண்ணு விட்ட அக்கா உறவாம். சொந்த அக்கான்னு முந்தி எழுதினது பிசகு. மோகனவல்லி, அதான் ஊரோடு வாஞ்சையா சொல்றாளே, கொட்டகுடித் தாசி. அவளுக்கு மூத்த அக்கா உறவு கொழும்பி. அவளோட அகத்துக்காரர் யார்னு யாரும் கேட்கலே. நானும் தான்.
பகவான் இந்த வல்லிகளுக்கு வஞ்சனை இல்லாம வனப்பைக் குழைச்சு உடம்பிலே பூசி அனுப்பியிருக்கான். ஊர் ஆம்பளைகள் எல்லோரும் கள்ளுக் குடிச்ச குரங்கு மாதிரி ராப்பகலா இதே மோகத்தோட சுத்தியாறது. யார் பேரழகின்னு சர்ச்சை எங்கே பார்த்தாலும் நடக்கறதாம். ஜோஸ்யர் மாமி தான் இப்படியான உருப்படி இல்லாத வம்பெல்லாம் கொண்டு வந்து கொட்டிட்டுப் போவா.
ஆமா, யார் அழகு? உள்ளூர் மோகினி மோகனவல்லி அழகுக்கு என்ன குறைச்சல்? வந்து சேர்ந்த அந்த அமிர்தவல்லி தான் பங்கரையா என்ன? அவ பொண்ணு? கண்ணும் மூக்கும் உதடும் என்ன அழகா அந்த சுகுணவல்லி.
இவா மூணு பேரையும் சேர்த்துப் பார்க்கற போது சரஸ்வதி, லட்சுமி, பார்வதி மாதிரி இருக்கேன்னு நான் சொன்னதுக்கு, ஜோசியர் மாமி கோவிச்சுண்டு போய்ட்டா. எதை எதுக்கு நேர்னு சொல்றதுன்னு விவஸ்தை இல்லையான்னா என் கிட்டே அடுத்த நாள் வாசல்லே கோலம் போடறச்சே சண்டை.
அதை இவர் கிட்டே சொன்னா, நீ சொன்னது ரொம்பவும் பிழையாச்சேன்னு கோவிச்சுண்டார் இவரும். மன்னிச்சுக்கச் சொன்னேன் உடனே. நமக்குத் தெரிஞ்சது அதானே. அவரானா கண்ணையும் சிமிட்டிண்டு காதைப் பிடிச்சுத் திருகிச் சொன்னார் –
அவா மூணு பேரும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி இல்லை. ரம்பா, ஊர்வசி, திலோத்தமையாக்கும்.
புகையிலைக் கடைக்காரரே, வண்டி வண்டியா, தேகம் முழுக்க, கொழுப்பு உமக்குன்னேன்.
கொழும்புக்காரி அழகா இருக்கறதுலே என்ன ஆச்சரியம். கொழும்புத் தேங்காயெண்ணெய் தான் தினம் உடம்பிலே பூசிண்டு குளிக்க. தாளிச்சுக் கொட்ட. கறி பண்ண. அத்தனை தேங்காயெண்ணெயும் என்ன ஆகும்? உடம்புலே தான் கசியும் பாத்துக்கோ. அதுவும் அந்த அம்மாக்காரி அமிர்தவல்லி நிகுநிகுன்னு என்னமா இடுப்பு அவளுக்கு.
அவர் ஆரம்பிச்சார். நான் கோபத்தோட முதுகிலே அடிச்சு குளிக்கப் போகச் சொன்னேன். அது பொய்க் கோபம். அப்புறம் இப்போ வந்தது தான் ரௌத்ரம். வந்து என்னையே முடக்கிப் போட்டுடுத்து அந்தப் பிசாசு. இதுக்கும் வல்லிக் குடும்பம் தான் காரணம்.
அக்கா, தங்கை ஜோடியா பேரழகா, அதி சுந்தர ரூபவதிகளா இருக்கறதை அங்கே எங்க குட்டநாட்டுலே நிறையக் கண்டிருக்கேன். அதுலே சிலது, அம்மா இன்னும் அழகாயிண்டே போவா. பொண்ணுக்கு பொது பொதுன்னு அம்மாக் களை அத்தைக் களை வந்துடும் சீக்கிரமே. உடம்பும் வண்ணம் வச்சுடும். இங்கே சௌந்தர்யம் வர்த்திக்கறதே தவிர இறங்குமுகமே இல்லை. இத்தனைக்கும் அமிர்தவல்லி சீக்குக்காரி.
அமிர்தவல்லிக்கு மாசாந்திர தூரம் வந்தா லேசுலே நிக்காத நோக்காடாம் பாவம். மூணு நாள் கஷ்டமா, ஸ்திரி ஜன்மத்துக்கு விதிச்ச ஏதோ தண்டனையா பல்லைக் கடிச்சுண்டு பொறுத்து, குளிச்சு, தூரத் துணி உலர்த்தி மடிச்சு என்னமோ நாமளும் தான் பண்ணியாறது.
மூணு நாள் ஓரமா உக்காரும் போதே ஏதோ மத்தவாளுக்கு பாரமா, அடுப்புக் காரியம் பார்க்காம, சுத்துவேலை செய்யாம, குடும்பத்தை பராமரிக்காம, சும்மா கொல்லையிலே நேரம் கெட்ட நேரத்துலே வேப்பமர நிழல்லே தூங்கறேனேன்னு மனசு மாஞ்சு போயிடும்.
அவர் ராமலட்சுமி பாட்டியை கொட்டு ரசமும் கீரை மசியலும் போதும்னு பண்ணச் சொல்லி, கீரை மசியல்லே கிழவியோட தலைமுடியோட உப்பு ஜாஸ்தியா, உரப்பு மட்டா, புளி கரையாம இறுகி ஏதோ சாப்பிட்டு ஒப்பேத்தற கஷ்டம் வேறே. போறும்டாப்பா.
அதை விட இந்த கொழும்புக்காரி அமிர்தவல்லியோட பெரும்பாடு ரோகம் இன்னும் சிரமம். இனியும் கஷ்டம்.
இங்கே நம்மூர் நம்ம தெருக்கோடி பரமக்குடி வைத்தியர் பிரக்யாதி கொழும்பு வரைக்கும் பரவியிருக்காமே. எப்போவாவது ஆத்துலே யாருக்காவது ஜுரம் வந்தா, இருமல் ஜலதோஷம் போதும்டா பகவானேன்னு அலுத்து வந்தா, அவருக்கு ரெண்டு நாளா கொல்லைக்குப் போகலேன்னா பரமக்குடி வைத்தியரை வரவழைச்சுடுவார். எங்க அம்பலப்புழையிலே பிஷாரடி வைத்தியர் மாதிரி தங்கமான மனுஷன். ஆனா, பிஷாரடி வைத்தியர் விக்ஞானம், ரசாயனம்னு கோணக் கட்சி பேசிண்டு கிடக்கற மாதிரி இல்லையாக்கும் இவர். பெரிய குடுமியும், பவ்யமும், சதா ஏதோ நாம ஜபமுமா அலைஞ்சுண்டிருப்பார். சுத்துலே ஏழெட்டு பட்டி தொட்டி கிராமத்திலேயும் யாருக்காவது ஏதாவதுன்னா, சர்க்கார் ஆஸ்பத்திரியிலே டிரஸ்ஸரைப் பாக்கப் போறது இந்தப் பக்கம் ரொம்பக் கம்மி. புதன்கிழமை சந்தை கூடுமே, அன்னிக்கு பரமக்குடி வைத்தியர் வீட்டு வாசல்லேயும் ஏகத்துக்கு காத்துண்டிருப்பா கையிலே சீசா வைச்சுண்டு.
அமிர்தவல்லியம்மாளுக்கு அவர் தான் சிஷ்ருஷை பண்ணறார். சொஸ்தமாயிண்டிருக்கோன்னு தெரியலேன்னேன் இவர் கிட்டே ஒரு விசை. இவரோட பாணியிலே சோடா உடைச்ச மாதிரி சிரிக்கறார். இதுலே சிரிக்கறதுக்கு என்ன இருக்கு.
நேத்திக்கு திங்கள் தானே, இல்லே செவ்வாயா, ஞாபகம் இல்லியே. நேத்திக்கு கோவில்லே ஓதுவார் பித்தா பிராந்தான்னு ஏதோ பாடினதுலே ஆரம்பிச்சு அமிர்தவல்லி ரோக விஷயத்துக்கு வந்தாச்சு. இல்லாட்டாலும் அம்மாவும் பொண்ணுமா அவா வந்தப்புறம் எல்லாப் பேச்சும், ஆண் பொண் அடங்கலா இவா பத்தித்தான் போய்ண்டிருக்கு. சொல்லிட்டேன் இல்லே இதை?
சுகுணவல்லி கிட்டே சொன்னேன் – போதும்டீ சிரிப்பு. கல்யாணத்துக்கு அப்புறம் சிரிக்க மிச்சம் வச்சுக்கோடீயம்மா. ஓதுவார் வயசான மனுஷர். களியாக்காதேடீ
நந்தவனத்திலே சுத்தறபோது இதைச் சொன்னேன். கேட்டதும் கன்னம் குழி விழ திரும்பவும் ஒரு புஞ்சிரி. அவள் என் கையை இறுகப் பிடிச்சுண்டு சொல்றா –
ஐயர் வீட்டம்மா, கல்யாணம் எல்லாம் எனக்கு வரப் போறதா என்ன, அதான் இப்பவே எல்லாச் சிரிப்பையும் சிரிச்சு முடிச்சுடறேனே.
அம்மா எப்படியோ, இந்தக் குட்டி மனசிலேயும் நடப்பிலேயும் அவளோட சித்தி, ஒண்ணு விட்ட சித்திதான், அந்த கொட்டகுடித் தாசியைக் கொண்டிருக்கா. மோகனவல்லி சிரிப்பும் இப்படி கல்மிஷம் இல்லாமத் தான் இருக்கும்.
ஏண்டி பொண்ணே, எதுக்கு அவளோட ஈஷிக்கறே. கோவிலுக்குப் போயிட்டு சமையல்கட்டுலே எல்லாம் போகணும் அவளானா. நீ மேலே பட்டா தீட்டாகி, அவ ராத்திரியிலே கிணத்துலே எறைச்சு விட்டுண்டு குளிக்கணுமாக்கும், பாவம்.
இப்படி ஜோசியர் மாமி அந்தச் சின்னப் பொண்ணு கிட்டே சொல்றா. நான் என்ன தெரியுமோ பண்ணினேன். அந்தச் செறிய குட்டியை சேர்த்துக் கட்டிண்டேன். கோவில் நந்தவனம்னா என்ன. பிரியத்தைக் காட்டக் கூடாதா. அவ தலையிலே இதமா வருடி, வாடீன்னு கையைப் பிடிச்சு அழைச்சுண்டு போனேன். எங்கேயா? அதான் ஓதுவார் கதா பிரசங்கம் பண்றாரே, சப்பரம் வச்ச கொட்டகைக்கு வெளியே காத்தோட்டமான இடத்துலே, அங்கே தான்.
யாரோ சுந்தரமூர்த்தி நாயனாராம். அவர் தான் பித்தா, வயசா, பிராந்தான்னு வாயிலே வந்த படிக்கு தேவாரம் எழுதினாராம். அவ்வளவு பிரேமமாம் ஈஸ்வரன் மேலே. சக மனுஷாளை விட பரமசிவனே எல்லாம்னு ஆனவராம். ரெண்டு பொண்டாட்டி வேறே. ரெண்டாவது வேளி கழிக்க ஈஸ்வரனே தரகர் உத்தியோகம் பார்த்தாராம். இதெல்லாம் கேட்க ரசமாத் தான் இருக்கு. அந்த மனுஷர் ரெண்டாம் தாரத்தோட வீட்டிலேயே தங்கிட்டாராம். அந்தப் பொண்ணு இவரை அரைக்கட்டுலே சேர்த்துப் பிடிச்சுண்டவ போல இருக்கு. நீர் இந்த ஊர் எல்லையை விட்டுப் போனீர் பாத்துக்கும்னு மிரட்டி வச்சிருந்தா. என்ன திமிர். இந்த மனுஷன் சொந்த ஊர்லே தேர் திருவிழான்னு கிளம்பிட்டாராம். அவரோட கண்ணு ரெண்டும் தெரியாமப் போனது அந்தப் பொம்மனாட்டி கைவேலயாக்கம். மனுஷன் திருவாரூர்லே போய் ஓய் கண்ணு குடுமய்யான்னு தேவாரம் பாடினாராம். ஈஸ்வரன் ஒத்தைக் கண்ணைக் கொடுத்திட்டு, இன்னொரு கண்ணுக்கு நீ இன்னொரு ஸ்தலத்துலே போய் இன்னொரு தேவாரம் பாடணும்னாராம். இவருக்குக் கோவம் வந்ததே பார்க்கணும். ஓய் ஈஸ்வரன், நீர் மூணு கண்ணோட, உம் பிள்ளை சுப்பிரமணி ஆறு ரெண்டு பனிரெண்டு கண்ணோட, உம்ம ரிஷபம் அதுக்கு ரெண்டு கண், ரெண்டு வீட்டுக்காரிக்கு மொத்தமா நாலு கண் இப்படி எல்லாம் சவுக்கியமா ஜீவியுங்கோ, நான் குன்றத்துலே ஏறி, குழியிலே விழுந்து கண்ணு தெரியாம அவதிப்பட்டுட்டுப் போறேன். நன்னா இருங்கோ. நீங்க நன்னா இருங்கோ. நீங்க எல்லோரும் ரொம்பவே நன்னா இருங்கோன்னாராம் பார்க்கலாம். என்ன தைரியம். இவர் ரெண்டு பொண்டாட்டி வச்சுண்டு கூத்தடிப்பாராம். கண்ணு போனா, மாற்றுக் கண்ணை ஈஸ்வரன் உடனடியா கொண்டு வந்து ஒப்படைச்சுடணுமாம். போக்கடாத்தனம். அவர் ஏழெட்டு பாட்டு வாழ்ந்து போ வாழ்ந்து போன்னு பாடினாராம். இல்லே அந்த தேவாரம் எல்லாம் வாழ்ந்து போவீர்ன்னோ என்னமோ முடியுமாம்.
ஓதுவார் சொன்ன கதையை நானானா சுவாரசியமாக் கேட்டுண்டிருக்கேன். இந்தப் பொண்ணு சுகுணவல்லி என் மடியிலே படுத்து உறங்கியே போய்ட்டா. பாவம் சின்னப் பொண்ணு. அவ அம்மா மேலே விரோதம்னா அவ என்ன பண்ணுவா?
கதை முடிஞ்சு அவளை வீட்டுலே கொண்டு விட்டுட்டு நம்ம வீட்டுக்கு வந்தா, என்னத்தைச் சொல்ல, வாசல் முறியிலே இவர் குரிச்சி போட்டு, குரிச்சி இல்லே சாருகசேர, என்னாக்க அதென்ன சாய்வு நாற்காலி அதுலே உக்காந்துண்டிருக்கார். அந்த அமிர்தவல்லி அவர் காலைப் பிடிச்சு விட்டுண்டிருக்கா.
அவசரமா உள்ளே ஓடிப் போய்ப் பார்த்தா, கண்ணு குறக்களின்னா காட்டினது. அது கடை உத்தியோகஸ்தன் ஐயனாராக்கும். அவன் சொல்றான் –
சாமி கடையிலே இருந்து இறங்கற போது கால் சுளுக்கிடுத்து. பரமக்குடி வைத்தியர் இப்போத்தான் தைலம் காய்ச்சிக் கொடுத்துட்டுப் போனார் அம்மா.
நான் அழுகறதா சிரிக்கறதான்னு தெரியாம நின்னேன். அவனைப் போகச் சொல்லிட்டு நானே தைலத்தைப் பொரட்டி விட்டேன்.
என்னமோ தோணிணது. ரெண்டு நாளா, பகலா, ராத்திரியா மனசிலே வச்சிருந்தது எல்லாம் கொட்டிட்டேன். பட்டுனு விஷயத்துக்கு வந்துட்டேன்.
அமிர்தவல்லி கடைக்கு வந்து போனான்னு எல்லாரும் சொல்றாளே.
அவர் காலை மாத்தி வச்சு தைலத்தைப் பூசறதுக்காகக் காண்பிச்சபடி தரையைப் பார்த்தபடி பதில் சொன்னார் –
வெத்திலை வாங்க, சோடா குடிக்க வந்தா.
கொடுத்தேளாக்கும்?
காசு வாங்கிண்டு கொடுத்தேன்.
அப்புறம்?
நானும் கடை எடுத்து வச்சுட்டு கிளம்பி அவளை வில்வண்டியிலே அவ ஜாகையிலே விட்டுட்டு வந்தேன்.
ஓ அவ அவ்வளவு நெருக்கமான சிநேகிதமா ஐயர்வாளுக்கு?.
அவர் இல்லை என்றார்.
பசு இல்லேன்னா, கன்னுக்குட்டி. சுகுணவல்லி நெருக்கமோ?
சே, அது கொழந்தை. நமக்கு பொண்ணு இருந்தா அப்படித்தான் இருப்பா என்றார்.
ஏதோ இதிலேயாவது கொஞ்சம் போல என்னை மாதிரி நினைக்கறாரேன்னு நினைச்சபடி அடுத்துக் கேட்டேன் –
சுகுணவல்லியை நான் பெத்திருந்தேன்னா அப்படி இருப்பாளா?
நீ பெத்திருந்தா உன்னை மாதிரி இருப்பா.
அப்போ அமிர்தவல்லி உங்களுக்கு பெத்திருந்தா?
இப்போ மாதிரி சுந்தரிப் பெண்குட்டியா இருப்பா. ஆனா, என் பொண்ணா இருந்தா படிக்காம இருக்க மாட்டா.
அவ அழகும் உங்க வாசிப்பும் சேர்ந்திருப்பாளாக்கும் அந்தப் பொண்ணு.
இதுக்கு என்ன பதில் சொல்றது?
அவர் சொல்லியபடிக்கே நாற்காலிச் சட்டத்தைப் பிடிச்சபடி எழுந்து நின்னார். தரையெல்லாம் பரமக்குடி வைத்தியர் கொடுத்து புரட்டச் சொன்ன தைலம். வீடு முழுக்க கொழும்பு தேங்காயெண்ணெய் வாசனை.
அவர் தோளில் கை வைத்துப் பிடிச்சு நான் கேட்டேன் –
நீங்க அமிர்தவல்லியை வச்சிண்டிருக்கேளா?
நான் இல்லே.
அப்போ நாலு நாள் முன்னாடி கோவிலே உற்சவக் கொடி ஏத்தின அப்புறம், ஊர் வெளியிலே இருந்து ரெட்டைக் காளை வண்டியிலே அவளோட போனது யாரு?
நான் தான்.
நான் அழுதபடியே அவர் முகத்தில் அறைந்தேன். அவர் ஒண்ணும் செய்யலே.
அவளை எங்கே கூட்டிப் போனேள்?
மதுரைக்கு.
சிருங்காரமா உல்லாசமா இருந்துட்டு வந்தேளா?
இல்லே, ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டு போனேன்
ஏன், பரமக்குடி வைத்தியர் சிஷுருஷை போறாதா? நீங்க வேறேயா?
ஆமா. நான் வேறே.
என்னெல்லாம் தந்தாப்பலே?
பரமக்குடி வைத்தியர் தராத மத்தொண்ணு
அவர் தீவிரமா முயற்சி செஞ்சிண்டிருக்கார் அமிர்தவல்லியை குணமாக்க. தெருவோட தெரியும். ஊரோட தெரியும்.
அவர் முயற்சியிலே தான் அவ முழுகாம இருக்கா
நம்பணுமாக்கும் – நான் கேலியாச் சிரிச்சபடி கேட்டேன்.
சொந்தம் புகையிலைக் கடைக்காரர் கறாரான தொனியோட கேட்டார் என்னை –
எதை நம்பலே? அவ முழுகாம இருக்கறதையா, பரமக்குடி வைத்தியர் பண்ணிணதையா?
ரெண்டையும் தான். அதை விட முக்கியம் இதிலே நீங்க புதுசா எங்கே வந்தது? இல்லே ரெண்டு பேரும் ரகசியமா ரமிச்சு இப்போ தான் வெளியிலே வர்றதா எல்லாம்?
நான் அவர் முதுகில் அடித்தேன். ஒண்ணுமே சொல்லலே அவர். ஒண்ணும்.
நீ நம்பாட்ட போ. என் மனசு சுத்தம். அவளுக்கு கர்ப்பம் கலைக்க டாக்டர் துரை மாட்டேன்னுட்டார்னு.
அவர் சொல்ல வந்ததை முடிக்க விடாமல் நான் கேட்டேன் –
கடையிலே படியேறி வெத்தலை வாங்க வந்த ஸ்திரி கடைக்காரர் கிட்டே தன் கர்ப்பத்தைப் பத்தி பேசறது என்ன மாதிரி நெருக்கம்?
அவளுக்கு என் மேல் ஒரு நம்பிக்கை.
என்ன, ரகசியமா தப்பு பண்ணுவேள். எசகு பிசகாப் போனாலும் சரியாக்கி விட்டுடுவேள் அதுதானே?
வாய்க்கு வந்ததை பேசாதே. சொல்றதை முழுக்கக் கேளு.
கேட்கத்தானே இங்கே இருக்கேன். சொல்லுங்கோ
உடம்பிலே ரோகம் இருக்கும்போது கர்ப்பம் தாங்கினா உசிருக்கே அபாயமாகலாம்னு அந்த டாக்டர் தான் சொன்னாராம். கேட்டியா?
கேட்டேன்.
மனசே இல்லாம, கர்ப்பம் கலைக்கலாம்னாராம்.
ஆஹா. அவருக்கு, ரோகம் நிவர்த்தி பண்ண வந்த டாக்டருக்கு எதுக்கு மனசும் மத்தொண்ணும்?
அவரைத்தான் கேக்கணும். அவர் கலைச்சு விட தயார் தானாம். ஆனா அதுக்கு பொறுப்பான நபர் கையெழுத்து போடணுமாம். நான் போய்க் கையெழுத்துப் போட்டேன்.
இதுலே எவ்வளவு நம்பலாம்?
நான் குரலை உயர்த்தி அழுதுண்டே கேட்டேன். அடுத்த வீடு எதிர் வீட்டுலே எல்லாம் கேட்டிருக்கலாம். கேட்கட்டுமேன்னு ஒரு வீம்பு. அவர் பதில் சொல்லலே. திரும்பக் கேட்டேன் –
எவ்வளவு நம்பணும்?
அது நீ என் மேலே வச்சிருக்கற நம்பிக்கையைப் பொறுத்தது.
அவர் கெந்திக் கெந்தி நடந்து சுவரைப் பிடிச்சபடி என்னைப் பார்த்தார்.
நம்பித் தான் ஆகணும். கப்பல்லே வெள்ளைக்காரிச்சிகளோட கும்மாளம் அடிச்ச காலத்தை எல்லாம் விட்டு நெறைய நீங்கி வந்திருக்கார். நானும் சித்தாடைப் பொண்ணு இல்லே. வீட்டைப் பொறுப்பா நிர்வகிக்கறவ. ஒரு பிள்ளை வேறே உண்டாகி இருக்கு. இதைக் கலைக்கணுமா? எதுக்குங்கறேன். என்ன மாதிரி நினைப்பெல்லாம் வருது கோபத்திலே இருக்கற போது.
அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். ஞான் ஒண்ணு மனசு பொட்டி கரஞ்சு. கரைஞ்சு போனேன்.
அவரை ஆரத் தழுவி தரையிலே இழுத்து மடியிலே போட்டுண்டு சொன்னேன் –
புகையிலை கடைக்காரா, வேண்டாம்டா, கண்ணு இல்லியோடா நீ. இன்னமே இந்த மாதிரி காரியம் எல்லாம் வேண்டாம். தென்னை மரத்துக்குக் கீழே உட்கார்ந்து பால் குடிக்கற காரியம் இது. சொன்னா கேள்டா. சமத்து இல்லே?
அவர் என்னை இறுக்கி வெறும் தரையிலே பரத்திண்டு சொன்னார் –
சரி , சக்கரவர்த்தினி.
அவருடைய தோளில் கடித்துக் காதில் கேட்டேன் –
அமிர்தவல்லியை நீங்க வச்சுண்டில்லியே
இல்லே
அவ சந்தர்ப்பம் கொடுத்திருந்தா அவளோட படுத்துண்டு இப்படி எல்லாம் செஞ்சிருப்பேள் தானே?
நான் என்ன வைத்தியனா? ரோகிக்கு சிகிச்சை தரணும். கூட சுகிக்கக் கூடாது.
அமிர்தவல்லி இருக்கட்டும்.. உங்க சிநேகிதி மோகனவல்லி, அதான் கொட்டகுடித் தாசி. கூடப் படுக்க வான்னு அவ கூப்பிட்டிருந்தா?
அவர் என்னை தீர்க்கமாகப் பார்த்தார்.
நிச்சயம் போயிருப்பேன்.
நான் ஒண்ணும் பேசாமல் தலையை முடிஞ்ச படி வெளியில் வந்தேன். தீத்தி இருந்த குங்குமத்துக்கு மேலே கோவில் பிரசாதமா வந்த குங்குமத்தை வச்சேன். மதுரை மீனாட்சி மஞ்சள் குங்குமம். இதமா வாசனை அடிக்கற அம்மன் குங்குமம் அது.
பத்து நாளா மனசுலே வச்சுப் புழுங்கி, சரியா பேசாம, சாப்பிடாம இருந்த விரதம் கலைஞ்சு இதோ எழுதிண்டிருக்கேன் எல்லாத்தையும்.
வாழ்ந்து போங்கோ. வாழ்ந்து போங்கோ எல்லோரும். வய்யலே. திட்டலே. மனசுலே பிரியமும் இல்லாம, விரோதமும் இல்லாம, குரோதமும் இல்லாம, குரூரம் இல்லாம, குசும்பும் இல்லாம சொல்றேன். வாழ்ந்து போங்கோ.
(தொடரும்)