New novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 41 இரா.முருகன்

சங்கரன் காரைக் கிளப்பும் போதே கிண்டலும் கேலியுமாக காலேஜ் சூழ்நிலை காருக்குள் அடர்த்தியாகக் கவிந்து விட்டது. தெரிசா பச்சைக் குழந்தை போல சத்தம் போட்டுக் கொண்டு முன் சீட்டில் உட்கார்ந்திருந்தாள். மந்தமான வேகத்தில் போய்க் கொண்டிருந்தது கார். அதற்கு மேல் வேகம் கூட்ட சங்கரனுக்கு தைரியமில்லை.

அமைச்சரக் காரியாலயத்தைக் கடந்து ஆளில்லாத குளிர்காலச் சாலையில் வண்டி போய்க் கொண்டிருந்த போது, மஃப்ளரும் கம்பளிக் கோட்டுமாக சைக்கிளில் வந்து குறுக்கே திரும்பிய வயோதிகனைச் சமாளிக்க கொஞ்சம் அவசரமாக ப்ரேக் பிடிக்க வேண்டிப் போனது.

கடவுளே, அந்தக் கிழவர் மேலே இடிச்சிருப்பே. மத்தவங்க மேலே கருணையே இல்லியா? தெரிசா கேட்டாள்.

அதெல்லாம் இடிக்க மாட்டேன். தில்லியிலே கார் ஓடற வீதியிலே தான் எல்லாம் வரும். ஒண்ணொன்ணா நின்னு போனா, நாளைக்குத்தான் போய்ச் சேர முடியும்.

எப்போ கார் ஓட்ட கத்துக்கிட்டே?

ரெண்டு மாசம் முந்தி. நல்லா ஓட்டறேனா?

ஸ்டியரிங்கில் மெல்லத் தாளமிட்டபடி ஆவலோடு கேட்டான் சங்கரன். வெள்ளைக்கார தேசத்தில் பிறந்ததுமே கார் ஓட்ட லைசன்ஸ் வாங்கியிருப்பாள் இந்த சுந்தரிப் பெண்குட்டி. ஆனால் என்ன? இன்றைக்கு பயணி அவள். வழிநடத்தி, ஓட்டிப் போவது சங்கரனுக்கு விதிக்கப் பட்டிருக்கும் காரியம்.

நல்ல ட்ரைவிங்னு சொல்லணுமா? சரி, அப்படியே ஆகட்டும். ஆனா, உன் மற்ற ட்ரைவிங்கை விட இதிலே உன் திறமை கொஞ்சம் கம்மிதான். க்ளட்சை சட்டு சட்டுனு விட்டுடறே. அதான் ஒரு மாதிரி இருக்கு. கியரை மேலே எடுக்கவே மாட்டேங்கறே. ஹேண்ட் ப்ரேக் போட்டே ஓட்டினே, பாத்தேன். தப்பு அதெல்லாம்.

பழகணுமில்லே. ஆமா, அது என்ன மற்ற டிரைவிங்?

நீ கள்ளன்.

இரு கையையும் பின்னால் கொண்டு சென்று தலைமுடியை நெகிழக் கட்டியபடி தெரிசா கள்ளக் குரலில் சொன்னாள். ஒரு வினாடி சுவாசத்தில் படிந்து விலகிய வாசனையை மூச்சு நிறுத்தி அனுபவித்தபடி சங்கரன் இருந்தான்.

இது எத்தனாவது கார் உனக்கு? சங்கரனின் சட்டைப் பைக்குள் ஹேர்பின்னை போட்டபடி விசாரித்தாள் தெரிசா. அவன் அவசரமாக ஸ்டீரிங்கில் இருந்து கை எடுத்து அந்த ஹேர்பின்னை டேஷ்போர்டில் வைத்தான்.

பயமா?

எனக்கென்ன பயம்?

நாளைக்கு மிசிஸ் சங்கரன் துணி துவைக்கும்போது மாட்டிக்குவே இல்லே

அவனுக்கு பதில் வரவில்லை. சமாளித்துக் கொண்டு சொன்னான் –

துணி துவைக்க பீகாரி கிழவி இருக்கா.

தெரிசா வயலெட் நகச்சாயம் பூசிய விரல்களை அழகாக நீட்டி விடர்த்தியபடி சங்கரனின் மனதை இன்னும் கிறுக்காக்கிக் கிறங்க வைத்தாள்.

நான் சந்திக்கணுமே. தெரிசா அடமாகச் சொன்னாள்.

பீகாரிக் கிழவியையா?

அவ தாத்தாவை. ஆளைப் பாரு. மதராஸி அப்சரஸை பார்க்கணும்.

அப்சரஸ் ராஜகுமாரியோட பிறந்த வீடு போயிருக்கா.

அவள் மேலே கேட்காததில் சங்கரனுக்கு ஆசுவாசம். பிறந்த வீடு இங்கே தான் என்று அதிகம் தகவல் சொல்ல வேண்டியதில்லை.

தனியாவா இருக்கே?

தெரிசா அவனிடம் எதிர்பார்த்த பதிலைக் காணோம்.

தனி என்ன? அக்கம் பக்கத்திலே எல்லாம் நம்ம மனுஷங்க தான்.

அவன் வாயைப் பிடுங்குவதில் அவளுக்கு சந்தோஷம். வந்த காரியம் சங்கரன் முயற்சியால் முடியப் போகிற மகிழ்ச்சி அடித்தளமாக அமைத்த உற்சாகம் அது. மதராஸி அப்சரஸுக்கு உரிமையானதை அபகரிக்கும் குற்ற உணர்ச்சி ஒரு வினாடி மேலெழுந்தாலும், அதெல்லாம் நகரும் மேகப் பொதி போல் கடந்து போகும் என்ற மனநிலை. தப்பு தான். வாழ்க்கை பூரா செய்யப் போவதில்லையே. Is there anything called transient sin? அவளுக்குத் தெரியவில்லை.

வருத்தப்பட வேண்டாம். மகிழ்ச்சியாக இருக்க விதிக்கப்பட்ட தினம் இது.

அவள் முகத்தில் சற்றே படிந்த வருத்தம் விலக, மறுபடி மலர்ந்த சிரிப்பு. இந்தக் கார் சவாரி முடியாமல் நீண்டு போகட்டும் என்று தெரிசாவின் மனம் ஆசைப்பட்டது.

உனக்கு ரொம்பவே நல்ல பழக்கம் எல்லோரோடயும். அப்படித்தானே? அண்டை அயல்லே எல்லா மொழி பொண்ணுங்களும் இருக்கும். இந்தி, பஞ்சாபி, காஷ்மீரின்னு எல்லா மொழியிலேயும் பிரியமா இருக்கலாம். சரி தானே?

எல்லார் கிட்டேயும் பழக மாட்டேன்.

யார் கிட்டே பின்னே நெருக்கம்?

அழகா, துருதுருன்னு, கண்ணாலே கடிச்சுத் தின்னுட்டு. இறுக்கமான ஸ்கர்ட், இறுக்கமான சிகப்பு ஸ்வெட்டர். ஏய், காதைக் கடிக்காதே. காரும் வேணும் என் காதும் வேணும்

ஓகே ஓகே சார். அவள் விலகி உட்கார்ந்தாள். அடுத்த வினாடியே நெருங்கினாள்.

சாரா? இன்னொரு தடவை கூப்பிட்டா கொன்னுடுவேன் ராட்சசி.

அவள் மடியில் ஓங்கி அடித்து, கார் கொஞ்சம் அலைபாய, ஸ்டீரிங் பிடித்த கைகள் நேரானதைப் பார்த்த தெரிசா, யூ ஆர் க்ரேஸி என்றாள் கூச்சலாக.

இருந்துட்டுப் போறேன்.

திரும்ப கீழே வந்த கைக்கு இடம் கொடுக்காமல் மறுபடி விலகி உட்கார்ந்து அவனைப் பார்த்தாள்.

ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கே ஷங்க்ஸ் . முப்பத்தஞ்சு இருப்பியா?

முப்பத்தெட்டு. ஷங்க்ஸ் நல்லா இருக்கு

யூ ஆர் க்ரேஸி.

நீ ஒரு இருபத்தைஞ்சு இருப்பியா? சங்கரன் நேரே பார்த்தபடி விசாரித்தான்.

இதானே வேணாம்கறது. நான் போன மாசம் முப்பத்தஞ்சு.

சின்னக் குட்டி மாதிரி இருக்கே. அதுவும் இந்த ஸ்கட்ர்லே. அப்படியே இடுப்பைக் கட்டித் தூக்கி மடியிலே போட்டுக்கிட்டு

ஏய் ஒழுங்கா ஓட்டு திருப்பத்திலே இவ்வளவு வேகமா திரும்பக் கூடாது.

பரவாயில்லே. இங்கே எல்லாம் ட்ராபிக்கே கிடையாது.

எதுக்கு அந்த சைக்கிளுக்குப் பின்னாலே இவ்வளவு நிதானமா போகறே?

உனக்கு தெரியாது, அவர் வாத்தியார். அப்புறம் அவருக்கு முந்தி, பாக்கறே இல்லே, முனிசிபாலிடி குப்பை வண்டி போய்ட்டிருக்கு.

வாத்தியார்னா?

சொல்லிக் கொடுக்கறவர். கிளாசிக் ம்யூசிக். பாட்டு வாத்தியார்.

இங்கே ஸ்கூல் டீச்சர் எல்லாம் இப்படித்தான் இருப்பாங்களா?

வேறே எப்படி இருக்கணும்? சூட் போட்டா?

கால் சராய் கூட இல்லாம, வேஷ்டியை தழையத் தழைய உடுத்துப் போறாரே, சைக்கிள் சக்கரத்துலே சிக்காதா?

எதுக்கு சிக்கறது, ஒழுங்கா ஓட்டினா ஒண்ணும் ஆகாது.

சட்டென்று பாட்டு வாத்தியார் ப்ரேக் அடித்துக் காலை ஊன்றி நின்றார். கீயென்று சத்தமிட்டு சங்கரன் கார் அவருடைய சைக்கிள் மட்கார்டில் இடித்து நிற்க பாட்டு வாத்தியார் திரும்பிப் பார்த்தார். மானமே போன மாதிரி சங்கரனுக்கு.

தெரிசா சிரிக்க் ஆரம்பித்து தலையைக் குனிந்து உட்கார்ந்திருந்தாள். சங்கரனை இந்தக் கோலத்தில் அவளுக்கு இன்னும் பிடித்திருந்தது.

நமஸ்காரம் மினிஸ்ட்ரி மாமா. ஆபீஸ் லீவாக்கம்?

பாட்டு வாத்தியார் காருக்குள் பார்த்து விட்டு சந்தோஷத்தோடு கை கூப்பினார்.

ஹெஸ்ட் வந்திருக்கா போலே ஆத்துக்கு. அதான் லீவா இருக்கும்.

அவரே விளக்கமும் அளித்துக் கொண்டார். விளங்கிய மகிழ்ச்சி முகத்தில் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.

நீ என்னோட கெஸ்ட். சன்னமான குரலில் சங்கரன் விளக்கம் சொன்னான்.

ஹெஸ்ட் தெரசா நட்பாகச் சிரித்தாள். வாத்தியார், கார் ஜன்னல் வழியே அவளுக்கு வணக்கம் என்று கை குவித்தார்.

அப்புறம் என்ன விசேஷம், சொல்லுங்கோ.

சங்கரன் அவரை நலம் விசாரித்தான். ஓட்டிப் போகிற காரை நிறுத்திக் குசலம் விசாரிக்கும் சங்கரனுடைய நல்ல மனசு மனசை நிறைக்க அவனைப் பார்த்து இஸ்லாமிய பாதுஷா பாணியில் சலாம் வைத்தார் வாத்தியார்.

தஞ்சாவூர் தப்ளாம்புதூர் மனுஷனாக ரெண்டு வருஷம் முன்னால் வந்தவரை பாதுஷா அவுரங்சீப் மாதிரி தில்லி விரட்டாமல் ஆதரிக்க சங்கரனும் உதவியிருக்கிறான்.

பாட்டு வாத்தியார் சங்கரனைப் பார்த்துச் சொன்னார் –

அசோசியேஷன்லே எனக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கித் தர ஏற்பாடு பண்ணணுமே மாமா. சங்க ஆபீஸ்லே சாயந்திரம் வீணை கிளாஸ். அதுக்கு முந்தி கல்காஜியிலே ஒரு பாட்டு கிளாஸ், கரோல் பாக்கிலே ரெண்டு சிஸ்டர்ஸ் ஒரே ட்யூஷன். முடிச்சு ஜனக்புரியிலே இன்னொண்ணு. ஆர்கேபுரம் ஆபீஸ்லே நாலு பேருக்கு வீணையும் பத்து மாமிக்கு வாய்ப்பாட்டும். என்ன வாய்ப்பாட்டு சிக்‌ஷை போங்கோ. ஒரு மாமாங்கமா அந்த மாமிகள் எல்லாம் சரளி வரிசைதான் பாடிண்டிருக்கா. முன்னேறவே இல்லே. போறதுன்னு அந்த கிளாஸை முடிச்சு ஏறக்கட்டி, தௌலா க்வான்ல வேறே ஒண்ணுன்னு சைக்கிள் விட்டுண்டு போறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடறது.

தெரிசாவைப் பார்த்துக் கொண்டே கோரிக்கை வைத்தார் அவர்.

அவசியம் சொல்றேன் பாட்டு மாமா. என் கிட்டே சொல்லியாச்சு இல்லையோ. கவலையை விட்டுடலாம். நான் கிளம்பறேன். அவசர ஜோலி இருக்கு. உங்களைப் பார்தது ரொம்ப நாளாச்சேன்னு நிறுத்தினேன். ஆத்திலே எல்லாரும் சௌக்யம் தானே?

அவர் வசந்தியிடம் சொல்ல மாட்டார் எதையும் என்று நம்பிக்கை வந்தது சங்கரனுக்கு.

ஆத்துக்கு வந்து வாய்ப்பாட்டு மட்டும் சொல்லிக் கொடுத்தா போறாது. எங்காத்துக் குழந்தைக்கு வீணையும் கத்துக் கொடுங்கறா ஒருத்தர். வீணையைக் கட்டித் தூக்கிண்டு எப்படி சைக்கிள் விடறது? நாரதர் மாதிரி பூணூலோட தோளுக்குக் குறுக்கா மாட்டிண்டு தான் போயாகணும்

அவர் சிரிக்காமல் சொல்ல, சங்கரன் சிரிப்பை அடக்கிக் கொண்டு கரிசனமான முக பாவத்தைப் புலப்படுத்தினான்.

ஒரு ஸ்கூட்டர் அவருக்கு வாங்கித் தர முடியாமல் என்ன ஆபீஸ் சூபரெண்ட்டண்ட் அவன். செகண்ட் ஹேண்ட் காரே வாங்கித் தரலாம்.

சங்கரன் காரை ஸ்டார்ட் பண்ணும்போது வாத்தியார் அவசரமாகச் சொன்னார் –

எல்லாரும் அவாவா ஆத்துலே பெண்ணை பொண்ணு பார்க்க வரும்போது பாட சரளி வரிசை, ஆதி தாள வர்ணம், லகுவா ஒரு சாஹித்யம், யாராவது என்ன ராகம்னு கேட்டா சொல்ல கொஞ்சம் ராக ஞானம் இது போதும்னு நினைக்கறா. ஷார்ட் கோர்ஸ் மியூசிக் சித்தப்படுத்திட்டேள்னா அசோசியேஷன்லேயே க்ளாஸ் வச்சுடலாம். ஃபீஸ் பத்தி முன்னே பின்னே இருந்தாலும் ஒண்ணுமில்லே.

சங்கரன் சிரித்தபடியே காரை நகர்த்திக் கொண்டு சொன்னான் – மகா மகா உருப்படியான யோசனை ஸ்வாமி. நிச்சயம் நடப்பாக்கிடலாம்

அவரைக் கைகாட்ட விட்டு விட்டு, பேருக்குக் கொஞ்சம் வேகம் எடுத்தது கார். தெரிசா இன்னும் அரை அங்குலம் சங்கரன் பக்கத்தில் நெருங்கி அமர்ந்தாள்.

எந்த ஸ்கூல் வாத்தியார் இவர்?

ஸ்கூல் இல்லே. சௌத் இந்தியன் அசோசியேஷன் வாத்தியார்.

அப்படீன்னா?

மெட்ராஸ் பக்கம் இருந்து என்னை மாதிரி உத்தியோகத்துக்காக டெல்லி வந்தவங்க எல்லாம் சங்கம் வைச்சிருக்காங்க. அங்கே சாயந்திரம் வாய்ப்பாட்டு, வீணை வாசிக்க கத்துக்க வர்ற பசங்களுக்கு இவர் தான் பாடம் எடுப்பார்.

வீணைன்னா?

வீணைன்னா? எப்படிச் சொல்ல? சங்கரன் யோசித்தான்.

வீணைன்னா? மறுபடி கேட்டாள் தெரிசா.

வீணைன்னா முன்னே பின்னே திரண்டு உன்னைப் போல அம்சமா இருக்கும். மடியிலே போட்டுண்டு வாசிக்க ஜோஜோன்னு மனசை அள்ளிண்டு போகும். புரியறதா?

அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள் தெரிசா. அவன் இணக்கமாகத் தலையைச் சாய்த்தபடி முணுமுணுத்தான் –

இந்த ஹேர் ஆயில் வாசனை எனக்கு அம்பலப்புழையிலே பழகினது இல்லியே

கேரளாவிலே வாங்கினது.

எடீ, நீ ஒரு கொச்சு குட்டியாகவே ஆகிட்டு இருக்கே. செல்லமாகச் சொன்னான்.

எடீன்னா?

எல்லாத்துக்கும் அர்த்தம் கேட்கக் கூடாது. எடீன்னா யூ தேர் டியர்.

குட்டின்னா?

இதானே. குட்டின்னா சின்னப் பொண்ணு. அதிலேயும் முக்கியமா மலையாளப் பொண்ணு.

மலையாளப் பொண்ணுன்னா விசேஷமா?

பின்னே இல்லியா? ஒவ்வொரு ஸ்டேட் பொண்ணுக்கும் ஒவ்வொரு அழகு. பெங்கால்னா கண்ணு. பஞ்சாப்னா நிறம். மகாராஷ்ட்ரம்னா உதடு. ஆந்திரான்னா சிரிப்பு. தமிழ்னா தலைமுடி. மலையாளம்னா?

அவன் பார்வை அவள் மேல் படிந்து விலக சிரித்தபடி அவன் கன்னத்தில் தட்டினாள் தெரிசா. கார் ஊர்வலம் போகிற வேகத்தில் நகர்ந்தபடி இருக்க, பின்னால் இருந்து லாம்பரட்டா ஸ்கூட்டரில் ஓவர்டேக் செய்த பைஜாமாக்காரன் வெற்றிப் பார்வை பார்த்தபடி முன்னே போனான். அவன் கண்கள் தெரிசாவை முரட்டுத் தனமாக இறுக்கி மனசே இல்லாமல் விலகிப் போனதைக் கவனித்தாள்

இந்த ஊர்லே எப்பவும் செக்ஸ் பற்றித் தான் நினைச்சுட்டு இருப்பீங்களா?

எடி மனுஷன் என்ன கோழியா எப்பவும் செக்ஸ் நினைப்போட சுத்த? விளையாட்டாக எகிறினான் சங்கரன்.

எப்பல்லாம் நினைக்கறது இல்லே?

இது என்ன கேள்வி. ரமிக்கற நேரத்துலே தான்.

கமான், ஜோக் அடிக்காதே

ஜோக் இல்லே குட்டி. செக்ஸ் நேரத்தில் அதை நினைக்காம இருந்தா.

இருந்தா?

இன்னும் அதிக நேரம் அப்படியே தாக்குப் பிடிச்சு.

கடவுளே. என் கடவுளே. அவள் தலையில் அடித்தபடி சிரித்தாள்.

முறையிடவில்லை. நீ வரவேண்டாம், நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று அனுப்பி வைக்கும் பாவம் அது. சங்கரனுக்குத் தெரியும்.

பாரு, இது மேற்கு டில்லி.

காரை தெரு ஓரமாக பார்க் பண்ணிவிட்டுச் சொன்னான் சங்கரன்.

ஸ்கூட்டர்காரன் மாதிரி கவனிச்சுச் சொல்றியே.

இங்கே எல்லாம் நானே இப்போ தான் முதல் தடவையா வர்றேன்.

யாரைப் பார்க்க போய்ட்டிருக்கோம்?

ஜோதிர்மய் மித்ரா மோஷாய்.

ஆபீசரா?

அதுக்கு மேலே.

மினிஸ்டர்?

அதுக்கும் மேலே.

பிரசிடெண்ட் ஓஃப் இந்தியாவா?

இவர் இவரோட கட்சிக்கு பிரசிடெண்ட். எதிர்க் கட்சித் தலைவர். மந்திரியை விட செல்வாக்கு. பார்லிமெண்ட் மெம்பர். வெரி ஆக்டிவ் ஃபார் ஹிஸ் ஏஜ்.

தேங்க்ஸ் ஷங்க்ஸ். என்லைட்டண்ட்.

அறிவொளி பெற்றேன் என்று தலைக்குப் பின் ஒளிவட்டம் சுழல்வதை ஆள்காட்டி விரல் சுழற்றி அபிநயித்தாள் தெரிசா. அந்தக் கரம் பற்றி இழுத்து உள்ளங்கையில் முத்தமிட்டு வா போகலாம் என்று இறங்கினான் சங்கரன்.

நல்ல உயரமும் மூலக் கச்ச வேஷ்டியும் வாயில் புகையும் உறையூர்ச் சுருட்டுமாக இருந்த ஜோதிர்மய் மித்ரா மோஷாயைப் பார்த்ததுமே தெரிசாவுக்குப் பிடித்து விட்டது.

மோஷாய் அவளையும் சங்கரனையும் அன்போடு வரவேற்றார். அவருடைய கார் டிரைவர் உள்ளே இருந்து ஒரு சூட் கேசும் படுக்கையுமாக வர, அவர் பயணம் கிளம்பிக் கொண்டிருக்கிறார் என்று சங்கரனுக்குப் புரிந்தது.

சாரி மோஷாய். நீங்க பயணம் வச்சிருக்கீங்க போல. நான் போய்ட்டு அப்புறம் வரட்டா?

மரியாதை விலகாமல் கேட்டான் சங்கரன்.

நோ ப்ராப்ளம் ஷொங்கர் பாபு. சொல்லுங்க.

வராந்தாவில் இருந்த பிரம்பு நாற்காலிகளில் தெரிசாவையும் சங்கரனையும் உட்காரச் சொல்லித் தானும் அமர்ந்தார் மோஷாய்.

ரயிலுக்கு நேரமாகலியா? சங்கரன் சங்கடத்தோடு கேட்டான்.

இன்னும் ஒண்ணரை மணி நேரம் இருக்கு. போயிடலாம். சொல்லுங்க பாபு மோஷாய்.

இவங்க தெரிசா முசாபர். என் இங்கிலாந்து சிநேகிதி. உறவும் கூட.

சுருக்கமாக சங்கரன் விளக்க அவர் அரைக்கண் மூடிக் கேட்டுக் கொண்டிருந்தார். பின் தெரிசாவைப் பார்த்துப் புன்னகைத்தார்.

நல்வரவு தோழி. இந்திய வம்சாவளிப் பெண் இந்தியக் குடிமகளாக நினைப்பது வியப்பானதில்லை. இங்கே இருந்தும் நீங்க பிரிட்டீஷராக இருக்கலாம். அங்கே போயும் மனசாலே இந்தியப் பெண்ணாக இருக்கலாம். வசிப்பிடம் நம்ம சௌகரியத்துக்காக ஏற்படுத்திக் கொள்றது தானே?

தெரிசா ஆமாம் என்று தலையசைத்து அவசரமாக அவரிடம் சொன்னாள் –

நான் இங்கே குடியுரிமை பெற்றதும் மதமும் மாற இருக்கேன். என் மூன்று தலைமுறை முந்திய கொள்ளுப் பாட்டனார் ஜான் கிட்டாவய்யர் இந்து மதத்திலிருந்து மாறி கிறிஸ்துவரானார். அது நூறு வருஷம் முந்தி. நான் திரும்பி வரேன்.

சங்கரன் அவளை ஆச்சரியத்தோடு பார்த்தான். அவனுக்கு இது புதிய செய்தி.

அப்படியா? அது உங்க விருப்பம். நான் சொல்ல ஒண்ணுமில்லை. என் அளவிலே ஒரு கூண்டிலேருந்து இன்னொண்ணுக்கு போகிற மாதிரி அது. ஆனா அது உங்க தனிப்பட்ட விஷயம். குடியுரிமை மாற்றத்துக்கும் மத மாற்றத்துக்கும் உங்களுக்கு சொந்தக் காரணங்கள் இருக்கலாம். அவை பற்றி நான் கேட்க மாட்டேன். உங்க தனி வெளியில் மற்றவர்கள் குறுக்கிடக் கூடாதில்லையா?

அவருக்கு தன் மதமாற்றம் பேச வேண்டிய விஷயமாகத் தோன்றாதது தெரிசாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. நாத்திகராக இருப்பாரோ? இருக்கட்டுமே. சிடிசன்ஷிப் கிடைக்க யார் உதவினாலும் தெரிசாவின் நன்றி.

ஷொங்கர் பாபு. உங்களுக்குத் தெரியாதில்லை. நீங்க வெளியுறவு அமைச்சகம் மூலம் உள்துறை அமைச்சகத்துக்கு இந்தப் பெண்மணியோட குடியேற்ற மனுவை அனுப்புங்க. பின்புலச் சோதனை, விசாரணை முடியும் போது எனக்கு நினைவு படுத்துங்க. அது தாமதமானாலும் சொல்லுங்க. நான் பார்த்துக்கறேன். அமெரிக்கா, இங்கிலாந்திலே இருந்து தேன் குடம்னு செல்லமாகச் சொல்லப்படற பெண் ஒற்றர்கள் தில்லியை மையமாக வச்சு செயல்படறாங்கன்னு சொல்லப்படுது. இவர் அப்படி எல்லாம் இருக்க மாட்டார்னு தெரியும்.

தெரிசா இல்லை என்று தலையசைத்து தன் ஃபேம்லி ட்ரீ படத்தை அவருக்கு எடுத்துக் காட்ட, வேணாம் என்று சொல்லி எழுந்தார் மோஷாய்.

நான் பாத்துக்கறேன். கவலைப்பட வேண்டாம்.

நல்ல வார்த்தை சொல்லி விடை கொடுத்தார் ஜோதிர்மய் மித்ரா மோஷாய். சங்கரன் அவருக்கு நன்றி சொல்லித் தெரிசாவோடு புறப்பட்டான்.

நாலடி நடந்து வந்து சட்டென்று திரும்பி நின்றாள் தெரிசா. ஓடிப் போய் மோஷாயின் பாதத்தில் கரம் வைத்துத் தொட்டுத் தன் தலையில் வைத்து வணங்கினாள் அவள்.

ஓ நோ. இதெல்லாம் எதுக்கு. கை கூப்பினா, அல்லது கை கொடுத்தா போதாதா?

அவர் வன்மையாக மறுத்தாலும், அவருக்குள் இருந்த வயதான வங்காளிப் பெரியவர் அவள் தலைதடவி ஆசிர்வதித்தார்.

கூட்ட நெரிசல் மிகுந்த குறுகிய தெருக்களில் சங்கரனின் கார் போய்க் கொண்டிருந்தது. தெரிசா பஷ்மினா சால்வையும், ஜரிகை தைத்த வடக்கத்திய உடுப்புகளும் வாங்க ஆசைப் பட்டதால், தாரியா கஞ்சை ஒட்டிய பழைய தில்லியைத் தேர்ந்தெடுத்திருந்தான் சங்கரன்.

சாந்த்னிசௌக் பராத்தேவாலி கலி வீதியில் நூறு விதமான பரத்தாக்களையும் கூடக் கழிக்க ஆகாரமான பருப்புக் கூட்டு, காய்கறி வதக்கல், இறைச்சி சுட்டது என்று வியஞ்சனங்களையும் ஆவலடங்காமல் தெரிசா கடை கடையாக நின்று பார்த்து வந்தாள். ஆனாலும் அவள் பரத்தாவோ ரூமாலி ரொட்டியோ சாப்பிட ஆசை காட்டவில்லை. பரத்தா சுட்டடுக்கி விற்கும் கடைகளோடு போட்டி போடாமல் ஓரமாக சின்னத் தடுப்புக்கு உள்ளே மதராஸி கானா என்று பலகை வைத்த இடத்தையே அவள் தேர்ந்தெடுத்தாள்.

இங்கேயா? இருபத்துநாலு மணி நேரமும் வடையும், உத்தேசமா செய்த சுத்த இந்திக்கார சாம்பாரும் தானே கிடைக்கும்?

சங்கரன் தடுக்க முயன்றாலும் அவள் உள்ளே போயிருந்தாள்.

சூடான சாம்பாரும் சுடச்சுட வடையும் தான் அவன் சொன்ன படிக்கு இருந்தது. ஆனாலும் குளிரும், அருகருகே அமர்ந்து ஆசையோடு முகம் பார்த்தபடி சாப்பிடுவதும் அதை அமிர்தமாக ஆக்கி விட்டது.

கார் கூட்ட நெரிசலில் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது. டமடம் என்று முரசறைகிற சத்தம். எதிர்த் திசையில் இருந்து ஓர் ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. காரை ஓரமாக நிறுத்தினான் சங்கரன்.

இரண்டு வரிசையாக பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஒரு வரிசையில் நீர் நிரப்பிய குடங்களை இடுப்பில் சுமந்த இளம் பெண்கள். இன்னொன்றில், மத்திய வயசுப் பெண்கள் கையில் தாம்பாளங்களில் தாமரைப் பூவும், இலையும் எடுத்து வரிசை கலையாமல் வந்தார்கள். நடுவே ஆடி அசைந்து ஓர் யானை நடந்து வந்தது.

கேமரா கொண்டு வந்திருக்கலாம்.

தெரிசா அவன் கையை இறுகப் பற்றியபடி சொன்னாள். பரவச நிலையில் பக்கத்தில் நிற்கும் வீட்டுப் பெரியவர்களின் கரம் பிடித்து ஒண்டி நிற்கும் குழந்தை போல இருந்தாள் அவள்.

யானை மேல் மர அம்பாரியில் அமர்ந்து, காவி உடுத்திய வயசர் ஒருத்தர் வந்து கொண்டிருந்தார். கவிழ்ந்து படுத்தது போலவோ, பிரார்த்தனையில் இருப்பது போலவோ குனிந்து, முகபடாத்திலிருந்து வரும் கயிறுகளைப் பிடித்தபடி இருந்தார் அவர்.

யார் என்ன எதற்காக ஊர்வலம் என்று புரியாமல் தெரிசா சங்கரனைப் பார்த்தாள். அவனுக்கும் அவ்வளவாகத் தெரியாத விஷயம் அது.

காரை ஒட்டி நடந்தபடி கண்ணாடியில் காகித விசிறியால் தட்டிய பையனை விரல் சுண்டிக் கண்டித்து, அவனிடம் யானை மேல் யார் என்று சைகையால் விசாரித்தான் சங்கரன். வால்மீகி மகராஜ் என்று ஆடியபடி போனான் பையன்.

ஏதோ இனத்துக்கான குருநாதர்.

சங்கரன் தெரிசாவின் தகவலுக்காகச் சொன்னான்.

யானை அசைந்து அசைந்து பக்கத்தில் வந்து கொண்டிருந்தது.

இனம்னா? அவன் தோளைப் பற்றி இழுத்து விசாரித்தாள் தெரிசா.

ராமாயணம் எழுதினவர் ஜாதியா இருக்கும்.

ராமாயணத்துக்கும் ஜாதிக்கும் என்ன சம்பந்தம்? தெரிசா கேட்டாள்.

தொணதொணக்காதே. அப்புறம் தெருன்னு பார்க்காம முத்தம் கொடுத்துடுவேன்

யானை மேல் இருந்த வால்மீகி குரு அவனைக் கூர்மையாகப் பார்த்து ஓவென்று சிரித்தபடி போனார். தண்ணீர் சுமந்து போன பெண்களும் சிரித்துப் போக, ஓவென்று அடுத்த வரிசைப் பெண்கள் குலவை இட்டார்கள்.

பிடரி முடி சிலிர்த்து அமர்ந்திருந்தாள் தெரிசா. ஆதரவாக அவள் தலையைத் தடவினான் சங்கரன்.

சாப், மயில் தைலம். ராத்திரி முழுக்க சந்தோஷமா இருக்கலாம்.

கார் ஜன்னல் ஓரம் பெரிய இரு கருவிழிகள் சங்கரனைப் பார்த்தன. தோளில் குரங்குக் குட்டியைச் சுமந்திருக்கும் அழகான ஆதிவாசிப் பெண் அவள். தெரிசாவைப் பார்த்து ரொம்ப நாள் பழக்கம் போல் குதூகலமாகக் கையாட்டினாள் அந்தப் பெண்.

மேம்சாப். பாசிமணி மாலை. உங்க கழுத்துக்கு எடுப்பா இருக்கும். வாங்குங்க.

வேணாம் என்றாள் தெரிசா.

மாலை இல்லாமலேயே அங்கே எடுப்பாத்தான் இருக்கு.

சங்கரன் இங்கிலீஷில் சொல்லிக் காரைக் கிளப்பினான்.

சொன்னா கேளுங்க. மயில் தைலம். வாங்குங்க சாப். சந்தோஷமா இருங்க.

குரங்குக் குட்டியும் சேர்ந்து விழிக்க, அந்த அழகிய பெண் தெரிசாவைப் பார்த்தாள்

மேம்சாப், சந்தோஷமா இருங்க.

வீராவாலி, வாங்காட்ட விடேன்

யாரோ அவளைப் பின்னால் இருந்து தள்ளிப் போனார்கள்.

வீராவாலி. வீராவாலி. என்ன ஒரு பெயர். சங்கீதம் போல இனிமையா இருக்கு.

தெரிசா முணுமுணுத்தபடி இருந்தாள்.

வீராவாலி. வீராவாலி.

ஓட்டல் அறையின் ஏர் கண்டிஷன் குளிர்ச்சியில் சங்கரனின் அணைப்புக்குள் ஒடுங்கிப் படுத்திருந்த தெரிசா முனகினாள்.

வீராவாலி. அந்தப் பெயரே உச்சரிக்கக் கிளர்ச்சி தருகிறது. சந்தோஷமாக இருக்கச் சொன்னாள். குளித்து விட்டு சந்தோஷமாக வெளியே போகலாம் என்று சங்கரனை காக்க வைத்தது தெரிசாவின் தவறு தான். குளித்து மணக்க மணக்க, குளிர்ந்து வந்த அவளை அள்ளிக் கொண்டு போய்க் கிடத்திக் கூடவே கிடக்க சங்கரனுக்கு ஒரு ஒற்றை நிமிடம் போதுமாக இருந்தது.

வீராவாலி.

தெரிசாவின் உதடுகளை இறுக்கமாக இதழ் கொண்டு மூடியபடி கிடந்தான் சங்கரன்.

சட்டென்று எழுந்தான். உறை?

தெரிசா புன்னகையோடு அவனைத் தலையணைக்கு இழுத்தாள்.

குளிச்சு இன்னிக்கு ஏழாவது நாள். தேவையில்லை.

அவனுக்குப் புரியவில்லை. ஆனால் சந்தோஷமாக இருந்தது.

வீராவாலி

அவனும் சொன்னான். தெரிசா அவன் உதடுகளை விரல் கொண்டு வருடினாள்.

வீராவாலி.

இவ்வளவு உக்ரமான முத்தத்தை அவன் இதுவரை எதிர்க் கொண்டதில்லை.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன